இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஒருவர் வீட்டில் சிறுமிக்கு பிறந்த நாள். மகளின் பிறந்த நாளுக்காக அம்மா கேசரி செய்து தந்தாராம். அதை எங்களுக்கும் கொடுத்தார்.
சிறிய பாத்திரத்தில் ஒரு மூடி போட்டு கேசரி என்று சொல்லிக் கொடுத்தார்.
பாத்திரத்தின் மூடியை விலக்கிப் பார்த்தேன்.
கேசரி இப்படித்தான் இருந்தது!
அடடா, இது என்ன பச்சை நிறத்தில் இருக்கிறதே? என்று யோசித்தேன். கேசரி என்று சொன்னார்களே, ஒரு வேளை பிஸ்தா பருப்புகளை அரைத்துச் சேர்த்து செய்திருப்பார்களோ, அதான் பச்சை வண்ணமோ என்று நினைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லை கீரை ஏதாவது சேர்த்திருப்பார்களோ?
ஏற்கனவே இந்த மாதிரி கேசரி உண்டு பழக்கப்பட்ட எனது மனைவி, சாப்பிட்டு பாருங்க “நல்லாவே” இருக்கும், என அந்த நல்லாவை கொஞ்சம் அழுத்தியே சொன்னார். சரி என்று கொஞ்சம் பச்சை கேசரியை எடுத்து வாயில் போட்டேன். பச்சைக் கலரில் ரவா உப்புமா சாப்பிட்ட ஒரு உணர்வு! என்ன இது? என்று குழப்பத்துடன் மனைவியைப் பார்க்க அவர் சொன்னார் – “ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று சிரித்தபடியே கேட்டு, ஒரு கதையும் சொன்னார்.
அச்சிறுமியின் தாய்க்கு நெய் அறவே பிடிக்காதாம். அதனால் நெய் வீட்டில் வாங்கவே மாட்டாராம். அவருக்குப் பிடிக்காது என்பதால், வீட்டில் உள்ளவர் எவருக்கும் பிடிக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு இட்டு விட்டார் போல! அதனால் கேசரி கூட நெய் சேர்க்காது ரிஃபைண்ட் எண்ணை தான் உபயோகிப்பாராம் – முந்திரியை வறுக்கவும் எண்ணை தான்!
போலவே கேசரிக்கு சாதாரணமாக பயன்படுத்தும் கேசரி பவுடர் தாய்க்குப் பிடிக்காது. அதனால் அவருக்கு மிகவும் பிடித்த பச்சை வண்ணத்தில்
Food color சேர்த்து தான் கேசரி செய்வாராம். இப்படி கேசரியின் எந்த குணங்களும் இல்லாது இருக்கும் பச்சை கேசரியைத் தான் செய்வாராம். தனக்குப் பிடிக்காது என்று இப்படி ஒரு கேசரி செய்து, அது தான் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்றும் சொல்கிறார்.
முந்திரி போடாமல், சிறிது கடுகு தாளித்து, கருவேப்பிலை சேர்த்திருந்தால் நிச்சயம் உப்புமாவாகத் தான் இருந்திருக்கும்.
இப்படி ஒரு கேசரி சாப்பிட்டு ஓடாத குறையாக மீதி இருந்த பச்சை கேசரியிடமிருந்து தப்பினேன். இல்லையெனில் நான் தான் சாப்பிட்டு தீர்க்க வேண்டுமாம்! எதற்கு இந்த வீண் வம்பு!
இப்படி இந்த பெண்மணியிடம் நிறைய சரக்கு இருக்கிறது! தேங்காய் பர்ஃபி, நெய் விடாது தேங்காய் எண்ணை விட்டு செய்வார்களாம். சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவினை நெய்யில் வறுக்காது, சேமியாவை அப்படியே தண்ணீரில் போட்டு வேக வைத்து, சர்க்கரை, பால் சேர்த்தால் பாயசம். மைசூர் பாகு நெய் விடாது செய்ய முடியுமா என்று இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். டால்டாவும் பிடிக்காது!
அதனால் செய்யும் சில இனிப்புகளும் எண்ணை விட்டு தான் செய்வார்கள். இது போலவே ஒரு சில காய்கறிகள் தனக்குப் பிடிக்காது என்பதால் அந்த காய்கறிகளை வாங்குவதும் இல்லை, சமைப்பதும் இல்லை!
பச்சை கேசரி கொடுத்து விட்டு இப்படி ஒரு யோசனையும் சொல்வார்களாம் – அந்த யோசனை – “வேணும்னா நீங்க மேலே கொஞ்சம் நெய் விட்டு சாப்பிடுங்க!” அடடா என்னவொரு யோசனை!
அது சரி, கேசரி சுவையாகச் செய்வது எப்படி என எனக்குத் தெரியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் விதமாய் இங்கே குறிப்பு தருகிறேன்!
கேசரி செய்வதற்கு முக்கியமான தேவை ரவை, சர்க்கரை, கேசரி கலர், ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் நெய். சரி தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டாயிற்று. அப்படியே எடுத்து வைத்துவிட்டால் கேசரி தானாக வந்து விடுமா? கொஞ்சம் உழைக்கத் தான் வேண்டும்!
ஒரு சின்ன வாணலியில் [இப்போது ஹிந்தி தெரியாத மறத்தமிழர்கள் கூட கடாய் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!]
2 தேக்கரண்டி நெய் விட்டு, உலர் திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை பொன் [அதாங்க தங்கம்!] நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியாக எடுத்து கைக்கு எட்டாத தூரத்தில்கொஞ்சம் தள்ளி வைத்த பின் [இல்லை என்றால் நம் கை சும்மா இருக்காது! கேசரில போட்டு தான் சாப்பிட வேண்டும் என எதுவும் ஆணை இருக்கா என்ன? சும்மாவே சாப்பிட்டு விடுவோமே!], வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு கப் ரவையைப் போட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். ரவை நன்கு வெந்ததும் ஒண்ணே முக்கால் கப் சர்க்கரை, சிறிதளவு கேசரி கலர் ஆகியவற்றை சேர்த்துக் கிளற வேண்டும். ஒட்டாமல் சேர்ந்து வரும் வரை இடையிடையே சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலியோடு இருக்கும் கேசரியை கொஞ்சம் நெய் சேர்த்து, ஏலப்பொடி தூவி இறக்கி வைத்து வறுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை, முந்திரியைக் கலந்தால் கமகமக்கும் சுவையான கேசரி ரெடி!
ரவையைச் பொன்னிறமாக
வறுப்பதிலும் நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான்
சூட்சமம் உள்ளது. போலவே, மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும் கேசரி
நிறமூட்டியை சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும்.
என்ன நண்பர்களே இன்றைக்கு உங்கள் வீட்டில் கேசரி உண்டா? இல்லை நீங்களும் பச்சை கேசரி செய்து பார்க்கப் போகிறீர்களா?
மீண்டும் சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து……