செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சினிமாவுக்கு போன சீதாராமன்


முன் குறிப்பு: இந்தப் பதிவினை தட்டச்சு செய்து அனுப்பியதை நான் பார்த்த போது இரவு 11 மணிக்கு மேல்...  அப்படி ஒரு சிரிப்பு சிரித்தபடியே படித்தேன். அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டிருந்தால், என்ன ஆச்சுப்பா இந்த ஆளுக்கு, நல்லாத்தானே இருந்தாரு என்று யோசித்திருக்கக் கூடும்! படித்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் – வெங்கட்.

இதோ பத்மநாபன் அவர்களின் எழுத்தில் சினிமாவுக்கு போன சீதாராமன்....


அது ஒரு கோடை விடுமுறை காலம். கல்லூரியில் ஏதோ ஒரு ஸெமஸ்டர் பரீட்சை முடிந்து பத்து பதினைந்து நாட்கள் விடுமுறை! ஒரு ரெண்டு மூணு நாள் அப்படி இப்படின்னு நேரம் போயிற்று. அப்புறம் என்னடா வாழ்க்கை, நாரோலுக்கு போனோமா, ஒரு சினிமாவைப் பார்த்தோமா, அப்படியே குளத்து பஸ் ஸ்டாண்ட்டுக்குள்ள ஒரு ரவுண்டு அடிச்சு வாய் பார்த்து வந்தோமான்னு இல்லாம ரொம்பத்தான் போரடிச்சுது.


அப்படியே வீட்டைவிட்டு வெளியே வந்து நண்பர்களைத் தேடினேன். பார்த்தால் எல்லாம் நம்ம கேஸூதான். சரி ஒரு ப்ளானப் போடுவோம். நம்ம லட்சுமித் தியேட்டரில் சிவாஜி கணேசன் நடிச்ச சொர்க்கம் படம் ஓடுது. நைட்டு செகன்ட் ஷோ பார்ப்போம்னு திட்டம் போட்டு ஆள் சேர்த்தா  என்னையும் சேர்த்து ஒரு அஞ்சு பேரு கூட்டணி சேர்ந்து விட்டது. எங்க ஊருல இருந்து நாகர்கோவில், அதான் நாரோலு ஒரு பத்து கிலோமீட்டர். பஸ்ஸில போலாம்னா படம் முடிஞ்சு ராத்திரி ஒரு மணிக்கு பஸ் விட நேசமணி போக்குவரத்துக் கழகம் என்ன எங்க தாத்தா வீட்டுச் சொத்தா! பஸ் வேண்டாம், சைக்கிள்தான் பெஸ்டுன்னு முடிவு பண்ணியாச்சு. எங்கிட்ட சைக்கிள் கிடையாது. தேவைப்பட்டால் வாடகை சைக்கிள்தான். சைக்கிள் வாடகைக்கு எடுத்து  யாரையாவது டபுள்ஸ் அடிக்கணுன்னாதான் முக்குவேன். ஆனால் பின்னால் அமர்ந்து போக எந்த வருத்தமும் கிடையாது. ஆனாலும் பத்து கிலோமீட்டர் பின்னால் கேரியரில் உட்கார்ந்து போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. வச்சு மிதிக்கிறானே அவனும் ஒருவழி ஆயிருவான். என்னை பின்னாடி வச்சு ஓட்டறவன் பாக்கியசாலி. ஏன்னா நம்ம வெயிட்டு அப்படி. மூணு பேர் வீட்டில சொந்த சைக்கிள் இருந்தது. ஒரு வழியா அந்த மூணு சைக்கிளில் அஞ்சு பேரும் போலாம்னு முடிவாகி ஒரு ஒன்பது மணி போல கிளம்பினோம். நான் எப்பவும் போல மாதவன் பின்னால்.


ராத்திரியில் சைக்கிள் ஓட்டுவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் இந்த டைனமோவை வேற பின் டயரில் பட வச்சு ஓட்டுனாத்தான் லைட்டு எரியும். டைனமோவைப் போட்டு ஒத்த ஆளு ஓட்டுனாலே டங்குவார்(?) அந்துரும். இதுல நாங்க டபுள்ஸ் வேற போகணும். லைட்டு இல்லேன்னா எதிரே வர சைக்கிள்காரன், இல்லை, மாம்பட்டை (ஒரு போதை வஸ்து) அடிச்சுக்கிட்டு மப்புல போறவன்னு எவனாவது குறுக்கே வர வாய்ப்பு அதிகம். அதனால் கையில ஒரு டார்ச்லைட் வச்சுகிட்டு பின்னால் இருந்து கொஞ்சம் அடிச்சு கொஞ்சம் அணைச்சுன்னு போறது வழக்கம். பின்னே ஒரேயடியாக டார்ச்லைட்டை அடிச்சுக்கிட்டே இருந்தா டார்ச்லைட் டார்ச்சர் ஆயிராதா, இல்ல பேட்டரி போட்டுத்தான் கட்டுப்படி ஆகுமா. பின்னால் இருப்பவர் சைக்கிள் இறக்கத்தில் இறங்கும்போது டைனமோவ தட்டி விடணும். இறக்கம் முடிஞ்சதும் அதை லூஸ் பண்ணிவிடணும். சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வது எவ்வளவு கடினம் தெரியுமா! இப்படி நான் சொன்னதை வச்சு மிதிக்கிறானே அவனிடம் சொல்லிடாதீங்கடே. எங்கேயாவது குழிக்குள்ள வண்டியை  விட்டு பழிவாங்கிருவான்.


முதலில் இந்த பிள்ளையார்விளை ஏற்றம் வந்தது. ஏற்றம் ஆரம்பிச்சதும்  பின்னால இருக்கவன் இறங்கிடனும். அப்படியே சைக்கிளில் கையை வச்சு தள்ளிக்கிட்டே ஓடணும். ஏற்றம் முடிஞ்சதும் ஒரு  ஜம்ப் பண்ணி பின்னால் உட்காரணும். அதான்  சொன்னேன்ல பின்னால் டபுள்ஸ்  இருந்து போறது எவ்வளவு கஷ்டமான காரியம்ன்னு. சரி ஒரு ஏற்றம் முடிஞ்சாச்சு. அப்படியே காரவிளை, பருத்திவிளை, எள்ளுவிளை தாண்டி கோணம் பாலிடெக்னிக்குக்கு முன்னாலும் ஒரு ஏற்றம். அப்புறம் குருசடி தாண்டி ராமன்புதூர் வந்தா இறக்கம்தான். ஆனாலும் பின்னால் இருந்த எனக்கு பின்புறம் நல்ல கோடு கோடா வலி எடுக்குது. அஞ்சாங்கிளாஸ்ல என்னையே கம்பு முறிச்சிக்கிட்டு வரச்சொல்லி நிக்கரோட சேர்த்து பட்டறையில பட்டை பட்டையா போட்ட தமிழ்வாத்தியார் நல்லையாக்கண்ணு வாத்தியாரும் கூடவே அவர் பொண்ணு அழகுடை நங்கையும் ஞாபகத்துக்கு வந்து போனார்கள்.


ஒருவழியாக செட்டிகுளம் தாண்டி வேப்பமூடும் தாண்டி லட்சுமித் தியேட்டர் வந்து சேர்ந்தாச்சு. மணி ராத்திரி பத்து தாண்டியாச்சு. பத்தரைக்கு படம் ஆரம்பிக்கும். அப்போல்லாம் சைக்கிளில் போகிறவர்களுக்கு தியேட்டரில் வரிசையில் நின்று டிக்கட் எடுக்க வேண்டாம். சைக்கிள்களை  ஸ்டாண்ட்டில் விட்டு டோக்கன் வாங்கி சட்டைப் பாக்கெட்டில் போட்டு விட்டு சைக்கிள்காரர்களுக்கு டிக்கட் கொடுக்கும் பகுதிக்கு வந்து பார்த்தால் கூட்டமான கூட்டம். ஒரு அம்பது அறுபது பேராவது இருப்பார்கள். இங்கே வரிசை கிரிசை ஒண்ணும் கிடையாது. ஜோ ஜீத்தா ஹை, வோ சிக்கந்தர். அடடா! டிக்கட் மட்டும் கிடைக்கல்லேன்னா மண்டை காய்ஞ்சு போகுமேடே! என்ன செய்யலாம். டிக்கட் கவுண்டர் முன்னால கும்பல் அம்முது. சீதாராமன் உடுத்தியிருந்த வேட்டியை மடிச்சுக் கட்டினான். "ஏய் மணிகண்டா! நான் கும்பலுக்கு உள்ள போறேன். நீ என்ன நெரிச்சு உள்ளே தள்ளி விடு. உள்ளே புகுந்து விட்டேன்னா டிக்கட்டோடதான் வருவேன்"னு சூளுரைத்தான். பத்ம வியூகத்தை உடைக்கச் சென்ற அபிமன்யு கூட இவ்வளவு பில்ட் அப் கொடுத்திருப்பானான்னு தெரியவில்லை.

மணிகண்டனும் ஐயப்பனும் சேர்ந்து ஆளுக்கொரு கையை வைத்து சீதாராமனை கூட்டத்தினுள் நுழைத்து ஒரு தள்ளு தள்ளி விட்டு விட்டு கையை பொசுக்கென்று எடுத்து விட்டுப் பார்த்தால் சீதாராமனின் வேஷ்டி மணிகண்டனின் கையில் இருந்தது. அதாவது கையை எடுத்த வேகத்தில் வேஷ்டி கையில் சிக்கி கையோடு வந்து விட்டது. கூட்டத்துக்குள் போன சீதாராமனுக்கு அது தெரியவில்லை.  இதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்புடன் ஒரு சந்தேகமும் சேர்ந்து வந்தது. ஆமா, அதே சந்தேகம்தான்.


அவன் சிறிது நேரப் போராட்டத்திற்குப் பின் வெற்றியோடு கையில் டிக்கட்டுடன் முகம் நிறைய சிரிப்புடன் வெளிவந்தான். நல்லவேளையாக ஓட்டையில்லாத உள்ளாடை அவன் மானத்தைக் காத்தது.  அவனுக்கு கூட்டத்தை விட்டு வெளியே வந்த பின்பும் வேட்டி பறிபோன உணர்வில்லை. அவன் டிக்கட் கிடைத்த வெற்றிக் களிப்பை கொண்டாடிக் கொண்டே ஓடி வந்தான்.  ஊரே அவனைப் பாக்குது. அப்பவும் ஐயா அசராம கையில உள்ள டிக்கட்டை தூக்கி காட்டி ஆட்டிக்கிட்டே வர்ராரு.  இந்தப்பய மணிகண்டன் வேற வேட்டியை பின்பக்கமாக மறைத்து வைத்து சிரிக்கான். ஒரு வழியாக சீதாராமனுக்கு இந்த இகபர நினைவு வந்து வேட்டியை இறுக்கி கட்ட இடுப்பில கையை வச்சா... இருந்தாந்தானே. பய ஒரு நிமிஷம் அரண்டு போய் திரும்ப கூட்டத்துக்குள்ள ஓடுகான் வேட்டியைத் தேடி. அவனைப் புடிச்சு நிறுத்தி வேட்டியை கொடுத்து சாந்தப்படுத்தி தியேட்டருக்கு உள்ள போனோம்.


இத்தனை வருடங்கள் கழித்து எனக்கு பார்த்த சினிமா காட்சிகள் மறந்து போச்சு. ஆனால் சீதாராமன்  வேட்டியில்லாமல் ஆர்ப்பரிப்புடன் துள்ளி வந்த காட்சி கண் முன்னே நின்று களியாடுகிறது.


இப்போல்லாம் சைக்கிளுக்கு பதிலா பைக். பைக் இல்லையின்னா இருக்கவே இருக்கு ஓலா, கூடவே ஒரு ஷீலா. அப்படியே ஆன்லைன் டிக்கட்  வாங்கி ஆஃப் ஸைடுல ஜோடியா உட்கார்ந்து சினிமா பார்க்கான். என்ன உலகமடா!  

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்...

என்றென்றும் அன்புடன்

பத்மநாபன்
புது தில்லி.44 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி! ஓ இன்று அண்ணாச்சியின் பதிவா...காலை வணக்கம் அண்ணாச்சிக்கும்!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. குட்மார்னிங்.

  இளமைக்கால சினிமா நினைவுகள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. 'எங்களி'ன் 'தியேட்டர் நினைவுகளி'ல் இதேபோல ஒரு சந்தர்ப்பத்தை எழுதியிருந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   உங்கள் பதிவு போலவே எனது சினிமா அனுபவம் எழுதியது நினைவில்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. ஆஹா லட்சுமி தியேட்டர்...பஸ்டாண்டு சைட் முடுக்குல...நேசமணி போக்குவரத்துக் கழகம்...பல நினைவுகள்!! இந்த நேசமணியின் மருமகள் ஒருவர் எங்களுக்குப் பாடம் எடுத்த டீச்சர்....

  அஞ்சாங்கிளாஸ்ல என்னையே கம்பு முறிச்சிக்கிட்டு வரச்சொல்லி நிக்கரோட சேர்த்து பட்டறையில
  பட்டை பட்டையா போட்ட தமிழ்வாத்தியார் //

  ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. நானும் வேஷ்டி இழந்திருக்கிறேன். அது தஞ்சையில்... தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகக் கூட்டத்தில்... மறக்க முடியாத அனுபவம் அது! கூட்டத்திலிருந்து விலகி நீண்ட தூரம் அப்படியே தப்பிவந்த பிறகு என் சகோதரரும் அப்பாவும் ஒரு ரிக் ஷா பிடித்து அதில் அடை காத்து வீடு வந்தோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மைப் போல வேஷ்டியை இழந்த யாருக்கோதான் இன்றைய 'ஒட்டிக்கொ, கட்டிக்கோ' ஐடியா வந்து இருக்க வேண்டும்.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஸ்ரீராம்.. என்னால முடியல்ல சிரிச்சு:)..

   நீக்கு
  3. சகோதரரும் அப்பாவும் அடை காக்க வீடு வந்து சேர்ந்தீர்களா... ஹாஹா... நினைத்தாலே சிரிப்பு வருகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. ஒட்டிக்கோ கட்டிக்கோ உருவாகக் காரணம் உங்களைப் போல ஒருவர் தானா! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
  5. சிரிச்சு முடியல! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 5. சொர்க்கம் படத்துக்கு இரண்டாவது காட்சிக்கு கூட இவ்வளவு கூட்டம் அப்போது இருந்தது என்பது மறைபொருளாய் அறியும் சேதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறைபொருளாய் அறியும் சேதி! இதுவும் நல்லதற்கு தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. ஒரு சந்தேகமும் சேர்ந்து வந்தது. ஆமா, அதே சந்தேகம்தான்.//

  ஹா ஹா ஹா ஹா இதை நினைச்சு சிரிச்சுட வாசிக்கும் போதே அடுத்து சீதாராமன் ஓடி வருவது டிக்கெட்டுடன்...ஹையோ சிரிச்சு முடில...இப்படி நண்பர்களுடன் சினிமா, நகைச்சுவை ரொம்பவே களித்த தருணங்களா இருந்திருக்கும் உங்களுக்கு இப்ப நினைவுகளாக!

  கோணம், குருசடி (ஆஹா என் காலேஜ் நினைவுக்கு வந்துருச்சு!!) ராமன்புதூர், செட்டிகுளம் (மீண்டும் அடுத்த காலேஜ்!!!) வேப்பமூடு என்று வேப்பமூடு, செட்டிகுளம் எல்லாம் தினமு நடந்த நினைவுகள் இந்துக்கல்லூரிக்கு...

  ரசித்தேன்..அண்ணாச்சி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணாச்சியின் இப்பகிர்வு உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. ஒரு சந்தேகமும் சேர்ந்து வந்தது. ஆமா, அதே சந்தேகம்தான்.//hahhahahaahh.அங்கே ஹாரர். இங்க காமெடியா வெங்கட். சூப்பர்ப்.
  இனிய காலை வணக்கம். பதிவு முழுவதும் சிரிப்பு.
  திரு பத்மனாபன் ஜிக்கு வாழ்த்துகள்.
  எத்தனை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார்.
  இது போல வேட்டி இல்லாத கதைகள் எத்தனை இளைஞர்களிடம் இருக்கோ.

  அட ஸ்ரீராம் கூடவா. ஓஹோ. மிக மிக நன்றி .இது போலச் சிரித்து நாட்களாகிறது.
  நிறைய எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போல வேட்டி இல்லாத கதைகள் எத்தனை இளைஞர்களிடம் இருக்கோ? ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 8. மறக்க இயலா அனுபவம்தான்
  இன்று என்னதாக் வசதிகள் வந்தாலும். அன்றுபோல் படம் பார்த்த ஒரு நிறைவு ஏற்படுவதில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்று போல இன்று படம் பார்த்த நிறைவு ஏற்படுவதில்லை. உண்மை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. ஹாஹாஹா, நல்லா இருக்கு. சினிமாவை விட இதான் சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. பத்மநாபன் சுவாரசியமா எழுதி இருக்கார். ப்டிக்கும்போது சிரிக்காம இருக்க முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 11. ரொம்ப நல்லா எழுதியிருக்காரு (எப்போதும்போல்). சைக்கிளில் டபிள்ஸ் போனவனும், ரொம்பத் தூரம் போய் சினிமா பார்த்தவனும் ரொம்ப நல்லா எழுத்தை அனுபவிக்க முடியும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. சினிமா டிக்கெட் வாங்க மற்றவர் தலைகளின் மேல் ஏறி நடப்பதையும் பார்த்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 14. சினிமா பார்த்த அனுபவம் நல்லா இருக்கு.
  ரசிக்கும்படி எழுதி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 15. பருத்திவிளை, எள்ளுவிளை, கோணம், ராமன்புதூர், செட்டிகுளம், இப்படி சைக்கிளில் டபுள்ஸ் சென்ற உணர்வு வந்தது. ஒரு வித்யாசம். நான் பிரண்டில் பாரில் தான். உண்மையில் படிக்கும் காலம் ஒரு கனாக்காலம் தான்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 16. ஹாஹாஹா! பெண்களுக்கு இந்த அனுபவங்களெல்லாம் கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மா...

   நீக்கு
 17. மிக மிக சிரித்து ரசித்தேன். பத்மனாபன் அண்ணாச்சி அவர்களின் பதிவு ரசனைதான். நண்பர்களுடன் சுற்றிய தங்கமான தருணங்கள் இல்லையா?!!!!

  நாகர்கோவில் முழுவதையும் சுற்றிக் காட்டிவிட்டாரே! வேப்பமூடு ஜங்க்ஷன், செட்டிகுளம் எல்லாம் நான் அங்கு இந்துக்கல்லூரியில் படிக்கும் போது சுற்றியவை. லக்ஷ்மி தியேட்டரில் எத்தனையோ படங்கள் பார்த்திருக்கிறேன். நாகர்கோவிலில் இருக்கும் அனைத்து தியேட்டர்களுக்கும்..அருமையான நினைவுகளையும் கூடவே எழுப்பி விட்டீர்கள்.

  கோணம் சென்றிருக்கிறோம். வானொலியில் நிகழ்ச்சி வழங்க என்றும் அங்குதானே பாலிடெக்னிக் கல்லூரியும் இருந்தது...

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது இந்துக் கல்லூரி வாழ்க்கை ஒரு வருடம் மட்டுமே. PUC (கடைசி பேட்ச்) படித்த பொது மட்டுமே. பட்டப்படிப்பு PKC.
   இந்துக் கல்லூரியில் CCTV (அதுதான் எனது மாமா R.S. பிரபாகரன் (Physics Professor)) கண்காணிப்பு இருந்ததால் நானும் சந்தோஷமாக PKC- க்கு மாறிவிட்டேன்.

   நீக்கு
  2. நண்பர்களுடன் சுற்றிய தங்கமான தருணங்கள்... உண்மை. அந்த நினைவுகள் இனிமையானவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
  3. ஓ நிங்க கடைசி பேட்ச் பி.யு.சி. ஆ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 18. பத்மநாதன் அவர்களின் எழுத்து நடை மிக அருமை.. சுவாரஷ்யமாக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 19. மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....