புதன், 27 பிப்ரவரி, 2019

சிறையிலிருந்து ஒரு கடிதம்


நண்பர் ”எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களுக்கும், “தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ்” கீதா அவர்களுக்கும் என் மீது, என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை!  என்னாலும் கதை எழுத முடியும் என்று சொல்லிக் கொண்டே இருக்க, நான் செய்த ஒரு முயற்சி தான் “சிறையிலிருந்து ஒரு கடிதம்”. இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்தக் கதையை [அப்படிச் சொல்வது சரியா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!]/பகிர்வினை தட்டச்சு செய்து ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஒன்றிரண்டு முறை படித்த பிறகு தான் அனுப்பி வைத்தேன் – ஆனாலும் பதிவு “எங்கள் பிளாக்” தளத்தில் வெளியான பிறகு தான் அதில் உள்ள தவறுகள் – சுனில்/அனில் பெயர் குழப்பங்கள் – தெரிந்தன. சில சமயங்கள் பதிவு வெளியாகும் முன்னர் படித்துப் பார்த்தாலும், நமது தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவர்கள் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  இங்கே அந்தப் பெயர் குழப்பங்கள் இல்லாமல் வெளியிடுகிறேன்.

இந்தப் பதிவு வெளியானதற்கு அடுத்த வாரம் நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களும் இந்தப் பதிவுக்கு/கதைக்கு வேறு கோணம் ஒன்றைச் சொல்லி எழுதி அனுப்ப, அந்தக் கதை – வினை விதைத்தவன் - நேற்று எங்கள் பிளாக்-ல் வெளியானது. நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நெல்லைத் தமிழன் பகிர்வுக்கு வந்திருக்கிறது. இன்று காலை தான் அந்தக் கருத்துப் பரிமாற்றங்களை படிக்க முடிந்தது. இன்னும் சில கோணத்தில் யோசிக்கலாம் என்ற கருத்துகளையும் எழுதி இருக்கிறார்கள்.  உண்மை. இதற்கு வேறு சில கோணங்களும் இருக்கலாம். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதை கடைசியில் சொல்கிறேன். இப்போது நான் எழுதி அனுப்பிய “சிறையிலிருந்து ஒரு கடிதம்” பதிவினை இங்கேயும் ஒரு சேமிப்பாக வெளியிடுகிறேன்.

சிறையிலிருந்து ஒரு கடிதம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் பத்திரிகை ஆசிரியருக்கு,

தூங்கா நகரம் தில்லி இரவின் மடியில் சாயலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். சாலைப் போக்குவரத்து அந்த நேரத்திலும் இருந்தது. பல வீடுகளில் முன்னறையில் தொலைக்காட்சியிலிருந்து வரும் ஒளி மட்டும். அப்படி ஒரு இரவில் தான், கதவு தட்டும் ஓசை. இந்த நேரத்தில் யார் கதவு தட்டுவது?

அடுக்களையில் வேலையிலிருந்த நான், வீட்டில் அவரோ, இரண்டு மகன்களில் ஒருவரோ கதவு திறப்பார்கள் என நினைத்தேன். மகன்கள் அவர்கள் அறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். வங்கியில் பணிபுரிந்து வீடு திரும்பிய கணவர் டி.வி.யில் மூழ்கி விட்டார் போலும். அதான் கால்பந்து உலகக் கோப்பை நடந்து கொண்டிருக்கிறதே. உங்களுக்குத் தெரியும்தானே, பெங்காலிகளுக்கு கால்பந்து விளையாட்டில் ரொம்பவே ஈடுபாடு. விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்து விட்டால் தங்களையே மறந்து விடுகிறார்கள். என்னவரும் தன்னை மறந்து கால்பந்து விளையாட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தார் போலும். வேறு வழியில்லை. நான் தான் சென்று கதவைத் திறக்க வேண்டும் போல இருக்கிறது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தபடி நடக்கையில் மீண்டும் பலமாக கதவு தட்டும் ஓசை. மரக்கதவு திறந்தால் வெளியே தள்ளாடியபடி ஒரு உருவம். அந்த உருவம்….

கணவர் வங்கியில் பணிபுரிகிறார் – யூனியனில் இருப்பதால் நல்ல செல்வாக்கு. சம்பளம் வாங்குவதிலேயே நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் காசு காசு என்று எல்லோரும் அலைவதைப் போல, இவருக்கும் காசு மேல் ஆசை அதிகம். வங்கியில் பணி புரிவது தவிர யூனியன் மூலமாகவும் சில வருமானங்கள். அதுவும் போதாது என வீடிருக்கும் பகுதியில் சில ரியல் எஸ்டேட் விஷயங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் வழியாகவும் காசு சம்பாதித்தார். இந்த ரியல் எஸ்டேட் மட்டும் தனியாகச் செய்யாமல் உள்ளூர் முன்னாள் எம்.எல்.ஏ.-வின் தம்பியான சுனில் உடன் சேர்ந்து தான் செய்தார். அவருடைய கட்டிடம் ஒன்றில் தான் மகன் ஜிம் நடத்தினார். அதிலிருந்தும் வருமானம் வந்தது.

அந்த சுனில் தான் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எதற்கு வந்திருக்கிறார் என்று யோசித்தபடி “ஏ ஜி… சுன்தே ஹோ?” என்று குரல் கொடுத்து, சுனில் வந்திருப்பதை கணவரிடம் சொல்ல, அவரும் வெளியே வந்தார். கதவைத் திறந்து சுனிலை உள்ளே அழைக்க, சுனில் தள்ளாடியபடியே உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார். நான் தேநீர் போட சமையலறைக்குச் செல்ல, சுனிலும், கணவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். வீடு விற்பனை செய்ததில் ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை போலும். பேசிக் கொண்டிருந்தபோதே குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. தேநீர் இருந்த அடுப்பை நிறுத்தி வெளியே வந்தால் பார்த்த காட்சி என்னை அதிரச் செய்தது. சுனில் கையில் இருந்த துப்பாக்கி என்னவரைக் குறி வைத்திருந்தது. குடித்திருந்ததால் கைகள் ஒரு நிலையாக இல்லை.

பேசிக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி எடுத்து மிரட்ட ஆரம்பித்த சுனில் தன்னிலையில் வேறு இல்லை. என்னவர் சுனில் கையில் இருந்த துப்பாக்கியை பாய்ந்து இழுக்க, சுனிலோ அதை இயக்க முயற்சிக்க, க்ளிக் சப்தம் மட்டும் கேட்கிறதே தவிர, துப்பாக்கியிலிருந்து குண்டு வெளி வரவில்லை – நல்ல வேளையாக. 'என்ன ஆச்சு என்ன ஆச்சு' என நான் அலறிக் கொண்டிருப்பதைப் பார்த்த இரண்டு மகன்களும் அவர்களது அறையிலிருந்து வெளியே வந்து விட்டார்கள். அங்கே சுனில் மட்டும். நாங்களோ நான்கு பேர். கூச்சலும் குழப்பமும் நிலவியது. வெளிக்கதவு சாத்தியிருந்ததால் வெளியாட்கள் யாரும் வரவில்லை. மீண்டும் சுனில் சோஃபாவில் அமர்ந்து கொள்ள கணவர் அவரிடம் சமரசம் பேசிக் கொண்டிருந்தார்.

சற்றே நகர்ந்து உள்ளே செல்லலாம் என யோசித்தபோது சுனிலின் கையில் இன்னுமொரு துப்பாக்கி முளைத்திருந்தது! அட! என்ன இது ஏதாவது விபரீதம் நடந்து விடப் போகிறதே என நான் ஓட, மகன்களும் பாய, நான்கு பேருமாகச் சேர்ந்து சுனிலிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயற்சிக்க – குண்டு பாயும் சப்தம். ஒரு நிமிடம் நான் அலறிவிட்டேன் – யாருக்கு அடிபட்டதோ என பார்த்துக் கொண்டிருக்கையில் சரிந்து விழுந்தது சுனில். எங்கள் மேல் எல்லாம் ரத்தத்தின் துளிகள். என்ன நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது. சில நிமிடங்கள் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை. அதற்குள் மீண்டும் கதவு தட்டும் ஓசை. துப்பாக்கி குண்டு பாய்ந்த ஓசை வெளியிலும் கேட்டிருக்க வேண்டும்.

வெளியே கும்பலாக மனிதர்கள். வீட்டில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. வீட்டுக்குள்ளேயே ஒரு கொலை. அதன் பின் நடந்தது எதுவும் எங்கள் கைகளில் இல்லை. போலீஸ் வந்தது. கூடவே கொலையுண்ட சுனிலின் அண்ணனான முன்னாள் எம்.எல்.ஏ – அடியாட்களுடன். ஆம்புலன்ஸில் சுனிலின் உடல் போக, எங்கள் நால்வரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றார்கள். அடியாட்கள் எங்கள் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். போலீஸ் இருந்ததால் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கள் காரும், என்ஃபீல்ட் புல்லட்டும் எரிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் எங்கள் நான்கு பேர் மீதும் குற்றப் பத்திரிக்கை தயார் ஆனது. நிறைய பேரங்கள்.

துப்பாக்கியை யார் இயக்கினார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை எங்களிடம் – தெரிந்தால் தானே சொல்ல. வேறு வழியில்லை. எங்கள் இருவரை மட்டுமல்லாது வளர வேண்டிய இரண்டு பிள்ளைகளையும் பிடித்து வைத்திருந்தார்கள் – யாராவது ஒருத்தர் ஒத்துக்கிட்டா, மத்தவங்களை விட்டுடலாம் என்று யோசனை சொன்னார்கள். நானே கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள, நான்கு நாட்களுக்குப் பிறகு மகன்களை மட்டும் விட்டு விட்டார்கள். கொலையுண்டவரின் அண்ணனோ எங்கள் குடும்பத்தினை பூண்டோடு அழிப்பதாகச் சபதம் விட்டிருக்கிறாராம். கணவரின் சகோதரி வந்து மகன்களை கொல்கத்தா அழைத்துச் சென்றுவிட, நானும் என்னவரும் திஹார் சிறையில் தனித் தனி சிறைகளில்.

நல்ல வருமானம், அளவான குடும்பம், இருக்க வீடு, வசதி என எல்லாம் இருக்கையில் காசுக்கு ஆசைப்பட்டு செய்த தொழில் இன்றைக்கு எங்களை கொலையாளி ஆக்கியிருக்கிறது. நான் தான் கொலை செய்தேன் என்று சொல்லிவிட்டால் அவரை விடுவார்கள் என நினைத்து பழியை நான் ஏற்றுக்கொண்ட பிறகும் அவரையும் விடவில்லை. நானும் சிறையில் தான். இந்தச் சம்பவம் நடந்தே ஒரு வருடம் ஆகப் போகிறது. இன்னும் எங்களுக்கு விடிவுகாலம் வரவில்லை. கோர்ட் கேஸ் எப்போது முடியும் என்பதும் சொல்ல முடியாத விஷயம் – இது என்ன அரசியல்வாதி சம்பந்தப்பட்ட விஷயமா – இரவோடு இரவாக தீர்ப்பு சொல்ல! அதுவும் எங்களுக்கு எதிரே இருப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பதால் காவல்துறை நிச்சயம் அவர்கள் பக்கம் தான் இருப்பார்கள்.

பேராசை பெருநஷ்டம் என்பார்கள் – அது எங்கள் விஷயத்தில் நடந்து விட்டது. எங்கள் வாழ்க்கை உங்கள் வாசகர்கள் பலருக்கும் பாடமாக இருக்கட்டும் என்பதால் தான் இந்தக் கடிதத்தினை உங்கள் பத்திரிகைக்கு எழுதி அனுப்புகிறேன். முடிந்தால் பிரசுரிக்க வேண்டுகிறேன்.

கொலை செய்யாவிட்டாலும் கொலைப் பழி ஏற்றுக்கொண்ட ஒரு பெண் – பெயர் எதற்கு வேண்டாமே….

ஏற்கனவே “எங்கள் பிளாக்”-ல் படிக்காதவர்கள் இங்கே படித்து இருப்பீர்கள்.  அவர்களுக்கு நன்றி. இப்போது இந்தப் பதிவு பற்றி சில விஷயங்கள். பதிவில் குறிப்பிட்ட நபர் சுனில் – இரண்டு வருடங்களுக்கும் மேலாக தினம் தினம் நான் சந்தித்த நபர் – அலுவலக வேலையாக அவரை சந்தித்தது தான். தொடர்ந்து ஒருவரைச் சந்திக்கும்போது அவரைப் பற்றிய ஒரு கருத்தினை உங்களால் மனதில் உருவாக்கிக் கொள்ள முடியும் – அவர் நல்லவரா, கெட்டவரா என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அப்படி அவருடன் பழகிய நாட்களில் பின்னாளில் இப்படி இவர் கொலை வழக்கில் சிக்குவார் என்றோ, அவரது வாழ்க்கை மட்டுமன்றி, குடும்பத்தினர் அனைவருடைய வாழ்க்கையும் பாதிக்கும் என்றோ எண்ணிப் பார்க்க வாய்ப்பில்லை. நன்றாகத் தான் இருந்தார். பிறகு ஏன் இப்படி என்ற எண்ணம் அவரைப் பற்றிய பேச்சு வரும்போது எல்லாம் தோன்றும்.

அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினை தான் “சிறையிலிருந்து ஒரு கடிதம்” என்ற பதிவாக ஸ்ரீராம் அவர்களுக்கு எழுதி அனுப்பினேன். இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. நான் எழுதி அனுப்பியது இரண்டு மாதம் முன்பு! அப்போது கூட அந்த நபர் சிறையில் தான் இருந்தார். சென்ற வாரம் செவ்வாய்க் கிழமை “எங்கள் பிளாக்” பக்கத்தில் பதிவு வெளி வந்தது. புதன் கிழமை அலுவலகத்தில் இருக்கும்போது அலுவலக தொலைபேசியில் ஒரு அழைப்பு. நான் எடுத்து ஹலோ சொல்ல, எதிர் பக்கத்திலிருந்து தீனமான ஒரு குரல் – “வெங்கட்ஜி, எப்படி இருக்கீங்க?” என்ற ஒரு தீனமான குரல்! பேசியது யாரென்று எனக்குப் புரிபடவில்லை. “நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்று எதிர்முனை ஆளைத் தெரிந்த மாதிரியே தொடர்ந்தேன் – யாராக இருக்கும் என்ற எண்ணங்களை மனதில் ஓட்டியபடியே. பிறகு அவராகவே தனது பெயரைச் சொல்ல – எனக்குள் ஒரு சின்ன அதிர்ச்சி.

முதல் நாள் அவரைப் பற்றிய பதிவு வெளிவந்திருக்கிறது – அடுத்த நாள் அந்த கதை மாந்தரிடமிருந்து அழைப்பு! அதுவும் உடல்நிலை சரியில்லாத ஒரு ஏழைத் தொழிலாளிக்கு உதவி செய்யக் கேட்டு. அந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டே தனது நிலையையும் சொன்னார் – வாழ்க்கையே மாறிப் போய்விட்டது – மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து தான் என் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் – மகன்களால் எனக்கு இந்த நிலை என்று சொன்னார். “மகன்களால் எனக்கு இந்த நிலை” இது தான் இப்பதிவின் ஆரம்பத்தில் நான் சொன்ன இன்னுமொரு கோணம்! இந்தக் கோணத்திலும் இக்கதையைக் கொண்டு செல்லலாம்! நான் முயற்சிக்கப் போவதில்லை! முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற வாக்கியம் எனக்குள் வந்து போகிறது! யார் யார் எழுதப் போகிறீர்கள்? நீங்கள் இந்தக் கோணத்தில் சிந்தித்து கதை எழுதினால், நண்பர் ஸ்ரீராம் “எங்கள் பிளாக்” பக்கத்தில் நிச்சயமாக வெளியிடுவார் என்று நம்புகிறேன்! வரப் போகும் இன்னுமொரு கதைக்கான காத்திருப்பில் நானும்!

நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

 1. அருமை ஜி மகன்களை இணைத்து இதுவும் ஒரு மாறுபட்ட கோணமே...

  தொடர்ந்து வரட்டும் பல்வகை கோணங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்வகை கோணங்கள்! வந்திருந்தால்/வந்தால் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. வெங்கட்ஜி இனிய காலை வணக்கம்...

  அட நான் லேட்டா வந்தாக் கூட ரெண்டாவதா வந்துட்டேனே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ஜி!

   சில நாட்களில் பதிவு வெளியிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கூட ஒன்றோ இரண்டோ கருத்துகள் மட்டுமே வந்திருக்கும் இங்கே! :) உடனுக்குடன் வருவது பலருக்கும் சாத்தியமில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. காலைல 5.30க்கு வந்து பார்த்தேன்..6 மணிக்குள் எபியில் கமென்ட் போடும் முன்னர் வரை பார்த்தேன் இன்று அங்கும் 5.30க்கு வந்துவிடுமே!!! கௌ அண்ணாவின் டே!!!! இங்கு காணவில்லை என்றதும்..கிச்சன் அப்புறம் வேலை வாக்கிங்க்..இந்தோ வந்தாச்ச..

  வெங்கட்ஜி முதல் வரியை மீண்டும் நான் உறுதி செய்கிறேன் இங்கு...உங்களுக்குக் கதை எழுதும் திறமை இருக்கிறது என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை...இங்கே நீங்கள் உங்கள் அனுபவமாக கதை மாந்தர்கள் பற்றி சில பதிவுகளே கூட கதை போலத்தான் இருந்தது. உங்கள் லேபிள் பார்த்துதான் அது உங்கள் அனுபவம் என்று தெரிகிறது..ஒரு பதிவு கூட தொடர்கதையோ என்றும் கூட எண்ண வைத்தது.!! அதற்கே பாராட்டுகள்! சொல்லலாம்!!

  எனவே ஜி இன்னும் மேலும் மேலும் முயற்சி செய்யுங்கள்...உங்கள் அனுபவங்களுக்கு நிறைய கதைகள் வரும்...எனவே நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் ஜி!! வாழ்த்துகள்!! சரி இனி பதிவுக்குப் போறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை மாந்தர்கள் வரிசையில் நிறைய பேரின் கதைகள் உண்டு. அவற்றை சாதாரண பதிவுகளாக வெளியிடலாம்! கதையாக முயற்சிக்க விருப்பமில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. இது ஒரு அசாத்தியமான க்ரைம், த்ரில்லர் நாவல் எழுதுவதற்கான ப்ளாட். சினிமாவே கூட எடுக்கலாம்...(ஆனா டூயட் அது இதுனு பாட்டு இல்லாம இருக்கனும்!!!)

  நீங்கள் ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க ஜி.

  எனக்கு க்ரைம், த்ரில்லர் கதைகள் மிக மிக மிகப் பிடிக்கும் என்பதால் உங்கள் கதையை வாசித்த போது இந்த அனில் சுனில் எதுவும் கண்ணில் படலை..நீங்க எழுதியிருந்த விதமும் அப்படி...கதையில் ஆழ்ந்து போனதால் கதையைப் புரிந்து கொள்ளவும் முடிந்ததால் இந்தப் பெயர்க் குழப்பம் எதுவும் எனக்குப் படவில்லை என்பதால் கருத்திலும் சொல்லலை!!!!!!!!!!

  அப்புறம் அங்கு கருத்துகள் சிலது வந்தப்பதான் தெரிஞ்சுது...

  எனக்கும் உங்கள் கதையிலிருந்து வேறு ஒரு கோணத்தில் சஸ்பென்ஸ் கதை ஒன்று மனதில் எழுந்தது. அதுகொஞ்சம் பெரிதாக.... ஆனால் எனக்கு எழுதுவதற்கு மிக மிக மிக நேரம் எடுக்கும்...அதான் பிரச்சனையே. டக் டக்கென்று எழுதிவிட முடிவதில்லை..

  பாருங்க நீங்க எழுதிய கதையிலிருந்து எத்தனைக் கதைகள் வருதுனு....நெல்லையும் அசத்திவிட்டார்...

  ஆமாம் ஜி நிறைய கோணங்கள் எழுதலாம்...

  ஜி உங்கள் கதை எழுதும் திறமையை விட்டுவிடாதீர்கள். தொடர்ந்து மேலும் மேலும் நீங்க நிறைய எழுதனும்...நாங்களும் எதிர்பார்க்கிறோம்...ஜி!! பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு நிறைய கோணங்கள் இருக்கலாம். மற்ற நண்பர்கள் - நெல்லைத் தமிழன் போல இன்னும் மற்றவர்களும் இதை வேறு கோணங்களில் எழுதலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

   நீங்களும் இந்தப் பதிவின் வேறு கோணம் ஒன்றில் கதை எழுதலாமே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற வாக்கியம் எனக்குள் வந்து போகிறது!//

  என்ன ஜி!!! எங்கே முதல் கோணல்?!! உங்கள் கதை நன்றாகத் தெளிவாகத்தானே இருக்கிறது....அதெல்லாம் ஒரு கோணலும் இல்லை..!

  நீங்கள் சந்தித்த நபர் சுனில் சிறைக்குச் சென்றவர்...கதையில் பெயர் மாற்றம் இல்லையா அதாவது இறப்பவர் சுனில்! நீங்கள் சந்தித்தவர் சிறையில்...

  என்ன கோஇன்சிடென்ஸ்....பதிவு வெளியான அடுத்த நாள் அவரிடமிருந்து கால். அப்ப அவர் வெளியில் வந்துவிட்டாரோ? அவர் சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது மகன்கள்..

  ஆம் இது ஒரு கோணம்...பார்ப்போம் யார் எழுதுகிறார்கள் என்று...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நீங்கள் சந்தித்த நபர் சுனில் சிறைக்குச் சென்றவர்...கதையில் பெயர் மாற்றம் இல்லையா அதாவது இறப்பவர் சுனில்! நீங்கள் சந்தித்தவர் சிறையில்...// ஆமாம்,தி/கீதா, எனக்கும் இந்தப் பெயர்க்குழப்பம்! இறந்தவர் சுனிலாக இருக்க இங்கே சந்தித்தவர்/சிறையில் இருந்தவரும் சுனிலே என்னும்போது கொஞ்சம் குழம்பிப் பின்னர் உங்களைப்போல் தெளிந்தேன்.ஹிஹிஹி, நாமல்லாம் யாரு? க.வி.எ. ஊத்திக்க மாட்டோமா! :))))))

   நீக்கு
  2. இன்னும் ஒருவரும் இந்த கதையைத் தொடரவில்லை. இவ்வளவு நாட்கள் கழித்து தான் நானும் இங்கே கருத்துரைத்தவர்களுக்கு பதில் எழுத முடிந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 6. வெங்கட் - பின்குறிப்பைப் படித்தேன். காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை.

  'என்னவர்' என்று உபயோகப்படுத்துவது உங்கள் மனைவியின் வழக்கமல்லவா? அதனால்தான் அந்தக் கதை, ஆதி வெங்கட் அவர்கள் எழுத்தில் வெளியானது என்று நினைத்தேன். அங்க நீங்க பதில் சொல்ல நேரமில்லாமல் போய்விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. நானும் காத்திருக்கிறேன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!

   நீக்கு
 8. “மகன்களால் எனக்கு இந்த நிலை” இது தான் இப்பதிவின் ஆரம்பத்தில் நான் சொன்ன இன்னுமொரு கோணம்! இந்தக் கோணத்திலும் இக்கதையைக் கொண்டு செல்லலாம்! நான் முயற்சிக்கப் போவதில்லை! முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற வாக்கியம் எனக்குள் வந்து போகிறது!//  நீங்கள் முதலில் எழுதிய கதையும் அருமை. இரண்டு இடத்தில் பெயர் மாறி விட்டது அவ்வளவு தான் இதில் கோணல் எல்லாம் இல்லை.


  மகன்கள் கைபட்டோ, மனைவி கைப்ட்டோ குண்டு வெடித்து விட்டது.
  அவர் மகன்களால் இந்த நிலை என்றால் அவர் அவர்களை படிக்க வைக்க , அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர இது போன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டாரோ?
  மகன் ஜிம் நடத்தினார் என்று இருக்கே! அதில் ஏதாவது பிரச்சனையோ!
  பார்ப்போம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. மகன்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்காக சுனிலை(அதாவது கதைப்படி இறந்த சுனிலை)த்தவறாகப்பயன்படுத்தி இருக்கலாம். அது தெரிந்து சுனில் சண்டை போட்டிருக்கலாம். பின்னர் மகன்களில் யாரேனும் அந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சுனிலைக் கொலை செய்திருக்கலாம். மகன்கள் என்றதும் நான் வயதில் சின்னவர்களோ என எண்ணினேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயதில் சிறியவர்கள் அல்ல....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. எத்தனை கோணங்களில் எழுதினாலும் வெளியிடத் தயார். பதிவு வெளியான நேரம் சம்பந்தப் பட்டவரிடமிருந்து தொலைபேசி என்பது ஆச்சர்யம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரிடமிருந்து அழைப்பு வந்த போது அதிர்ச்சியாகத் தான் இருந்தது எனக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 11. காலை வந்து பார்த்தபோது பதிவு வெளியாகி இருக்கவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷெட்யூல் செய்து வைக்கவில்லை என்பதால் பதிவு வெளியாவதில் தாமதம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. சில விசயங்கள் அலசி முடியாது.. இன்னும் இன்னும் தொடர்ந்து பேச வரும்.. அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசப் பேச நிறைய பேசலாம்... முடிவில்லாத பேச்சுக்கு உத்தரவாதம் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  தாங்கள் எழுதிய கதையை எ.பியிலும் படித்தேன் இங்கும் படித்தேன். நல்ல நடையில் மிக அழகாக எழுதியுள்ளீர்கள். தங்களுக்கு பாராட்டுக்கள். இது உண்மை கதை என்பதை இங்கு படித்த பின்தான் அறிந்து கொண்டேன். சகோதரர் நெல்லைத் தமிழன் அவர்கள் இதற்கேற்ற மாதிரி வேறு கோணத்தில் எழுதியதையும், படித்து ரசித்தேன். இங்கு நீங்கள் தந்துள்ள தகவல்கள் வேறு மாதிரியிருப்பதால், உண்மை என்னவோ என மனம் பரிதாபம் கொள்கிறது. நல்லவைகள் என்றும் நலமுடன் நடக்க பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 15. //முதல் நாள் அவரைப் பற்றிய பதிவு வெளிவந்திருக்கிறது – அடுத்த நாள் அந்த கதை மாந்தரிடமிருந்து அழைப்பு//

  இது இன்னிக்கு என் பதிவில் நான் பிறரின் அனுபவங்களை கேட்டது :) பாருங்க உங்களுக்கும் சேம் அனுபவம் நீங்கள் நினைக்க அடுத்த நாள் அழைப்பு அவரிடமிருந்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 16. சில நேரங்களில் உண்மை சம்பவங்களை எழுதும்போது எதிர்பாராம உண்மைப்பெயர் ஒரே ரைமிங் இல் வரும்போது வந்திடும் அதான் அனில் /சுனில் இல் நடந்திருக்கு அன்றே விளங்கியது .இன்னொரு கோணத்திலும் படிக்க ஆவல் யார் எழுதிகிறார்கள்னு ஆவல் .. .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு யாரும் எழுதுவார்களா என நானும் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 17. கதை அருமை வெங்கட்ஜி. எபியிலும் வாசித்து ரசித்தேன். இங்கும். இதற்குத் தொடர்பாக இதிலிருந்து வேறொரு கோணத்தில் நெல்லைத் தமிழனும் நன்றாக எழுதியிருந்தார்.

  இப்போது மேலும் கோணங்கள் பின் குறிப்பில் கொடுத்திருக்கின்றீர்கள். ஆர்வம் உள்ளவர்கள் எழுதலாம் தான்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்வம் உள்ளவர்கள் எழுதலாம்... நானும் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 18. கதை அருமை. எங்கள் பிளாக்கிலும் படித்திருக்கிறேன்
  அடுத்த கதைக்காக நானும் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....