வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

பொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா?திடீரென்று ஒரு ஞாபகம். க்ரே கலர் ஃபைலில் போட்டு பீரோவுக்குள் வெச்சிருந்ததாக நினைவு.
 
அது இப்பவும் இருக்குமா!! சரி! கேட்டுப் பார்ப்போம். உடனே வாட்ஸப்பில் ஒரு மெஸேஜை தட்டி விட்டேன்!

இந்த மாதிரி ஏதாவது கேட்டால்... அது எங்கே இருக்கோ! தெரியாதும்மா! அதெல்லாம் இப்ப எடுக்க முடியாது!! என்ற பதில்கள் வரும் என எதிர்பார்த்தால்...!

அடுத்த நொடி அங்கிருந்து ஒரு மெசேஜ்.

ம்ம்ம். இருக்கு!! என்று!!

"இதில் என்னென்னவோ வெச்சிருக்கியே!!!"

நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவுடைய ட்ரீட்மெண்ட்டுக்காக உடனிருந்து அம்மாவை பார்த்துக்கச் சொல்லி அடிக்கடி அனுப்பி விட்டீங்களே!!

அந்த நேரத்தில் ஆளுக்கொரு பக்கமா இருந்தோமே!! அப்ப நம்ம ரெண்டு பேரும் எழுதிக் கொண்ட லெட்டர்கள் எல்லாம் இருக்கும் :))

"வேற என்னென்ன இருக்கு?? எனக்கு நினைவில்லையே?!"

நாம முதன்முதலில் சேர்ந்து பார்த்த சினிமா டிக்கெட்!ஆமா!! ரன் படம்!! பால்கனி டிக்கெட் நம்ம ரெண்டு பேரும் தான்!! அது ஸ்பெஷல் இல்லையா! அதான் வெச்சிருக்கேன்!!

ஒரு கீ செயின்! இருக்கு! Laughing Buddha!

ஓ!! அது நீங்க வாங்கிக் கொடுத்தது தான். ஆனா எங்கே வாங்கினது என்று தெரியல :))

அப்புறம் ஒரு டெய்லி ஷீட் கூட கிழிச்சு வெச்சிருக்கியே!!

ஆமா!! அது ரொம்ப ஸ்பெஷல்!!

என்ன ஸ்பெஷல்???

அதுல என்ன தேதி போட்டிருக்கு??

04_08_2004.

யோசிச்சுப் பாருங்க!!

என்ன??

நான் கன்சீவ் ஆனதை டாக்டர் உறுதி செய்த நாள்!!!

ஆமாம்ல!

வேற என்னென்ன இருக்கு??

லெட்டர் தான் நிறைய இருக்கு!! அதிலயும் நாந்தான் நிறைய லெட்டர் எழுதியிருக்கேன் போல... லூஸு மாதிரி!!

நான் கூடத் தான் நிறைய எழுதியிருப்பேன் :)

அதெல்லாம் இல்ல..நாந்தான் உருகி உருகி எழுதியிருக்கேன் :) நீ உன் அம்மா கூட ஜாலியா இருந்திருப்பே!!

ம்ஹூம்ம்! நானும் தான் உங்களை நினைச்சு அழுதிருக்கேனே!!!

அப்புறம்!! நம்ம குட்டிப்பாப்பாவோடு சென்ற இடங்களின் நுழைவுசீட்டெல்லாமும் வெச்சிருக்கே!!

சரி! சரி! இப்பவே எடுத்து என் பெட்டிக்குள் போட்டு வெச்சிட்டேன். அடுத்த முறை ஊருக்கு வரும் போது எடுத்துட்டு வரேன்.

"ம்ம்ம்ம்ம்...நானும் அதெல்லாம் பார்க்க ஆசையாயிருக்கேன்."

சரி!! எனக்காக இன்னொண்ணு தேட முடியுமா??!

அது என்ன!!!!?????

நம்ம ரெண்டு பேரும் கன்னியாகுமரி போனோமே!!

ஆமா!!

அங்கே ஒரு பெரிய சோழில நம்ம பேரை எழுதி வாங்கிக்கிட்டோமே!!

அது வேணும்?????

(தேடுதல் வேட்டை தொடங்குமா???)

என்ன தான் அலைபேசியில் உரையாடினாலும், கடிதங்கள் எழுதுவதில் இருக்கும் சுகமும், சுவாரஸ்யமும் சிறப்பு தான். காத்திருந்து கிடைப்பதில் தான் மகிழ்ச்சி கூடுதலாகும் அல்லவா!! அப்படித் தான் இருந்தன அலைபேசியில்லா நாட்கள். மீண்டும் வாராதா அந்த இனிமையான நாட்கள்!!!

"""எழுதுவோமா மீண்டும் கடிதம்!!
என்ன எழுதலாம் என சிந்தித்து
அதை வார்த்தைகளில் வடித்து
பக்கம் பக்கமாய் கிறுக்கி!!

பத்திரமாய் பெட்டியில் சேர்த்து
எங்கு சென்று கொண்டிருக்கிறதோ!!
என ஏங்கி, காத்திருந்து
கைகளில் கிடைத்ததும்.

அவரின் முகத்தில் தெரியும்
உணர்வுகளை, மாற்றங்களை
எப்படிக் காண்பேனோ!!
எவர் சொல்வாரோ!!

இதை தெரிந்து கொள்ள
வரவேண்டும்! அங்கிருந்து
ஆயிரம் விஷயங்களுடன்
ஒரு பதில் கடிதம்!!"""

_____ ஆதி வெங்கட்.

பதினேழு வருடங்களுக்குப் பின் இப்படி கடந்த காலங்களைப் பற்றி நினைத்துப் பார்த்ததில் இருவருக்கும் ஒரு புத்துணர்வு கிடைத்தது என்றே சொல்லணும்!!!

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்...

என்றென்றும் அன்புடன்

ஆதி வெங்கட்

முகநூலில் பகிர்ந்தபோது கிடைத்த சில கருத்துகள் இங்கே பதிவின் ஒரு பகுதியாக…..

Ranjani Narayanan: நானும் இது போன்று நான் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷங்களைப் பற்றி காதலர் தினத்தன்று மத்யமரில் ஒரு பதிவு போட்டேன். இந்தப் பொக்கிஷங்கள் நம்மை அந்தக் காலத்திற்கே கொண்டு சென்று விடும். மலரும் நினைவுகள்.

Kamya Dinesh: Awesomeeeeeee. Nice write up akka But coincidentally I got my pregnancy confirmed on 4.8.2014. Exact 10 yrs later.

S MalarVizhi Amudhan: உடனே கிடைக்கும் பதிலில் அவ்வளவு சுவாரஸ்யம் இருப்பதில்லை தான். காத்திருப்பில் உள்ள….

28 கருத்துகள்:

 1. குட்மார்னிங். முக நூலிலும் படித்தேன். கடிதம் எழுதிய காலங்கள் சுகமானவை, சுவாரஸ்யமானவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்....

   கடிதம் எழுதிய காலங்கள்..... எப்போதும் நீங்கா இடத்தில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. நானும் காதலித்த காலங்களில் பாஸ் எனக்கு எழுதிய கடிதங்களை பெருமளவு பத்திரமாக வைத்திருக்கிறேன்.பாஸ்தான் என் கடிதங்களை உடனுக்குடன் கிழித்து விட்டாராம்.... பயம், பாதுகாப்பு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... உங்கள் பாஸ் நீங்கள் எழுதிய கடிதங்களை கிழித்து விட்டாரா.... அப்போதைய சூழல் அப்படி இருக்க என்ன செய்ய முடியும். ஆனால் இப்போது நினைத்தால் அது ஒரு இழப்பு தான் இல்லையா....

   உங்களுடையது காதல் திருமணம் என்று இப்போது தான் தெரிந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளின் மீள்நினைவு எப்போதுமே சுகம், சுவாரஸ்யம். என் மகன்கள் பிறந்த தினத்தின் டெய்லி ஷீட் பக்கத்தை என் அப்பா எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பதை இப்போதும் நன்றியுடனும், கலங்கிய விழிகளுடனும் பார்க்கிறேன். பின்னால்மகன்கள் பிறந்த நேரம், மற்றும் சில குறிப்புகள் எழுதி வைத்திருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டிலும் அப்பாவிடம் சில பொக்கிஷங்கள் உண்டு. இப்போது வரைக்கும் எங்களைத் தொட விடுவதில்லை! :) அவர் வீட்டில் இல்லாதபோது பார்த்ததுண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. எழுதப்பட்டிருக்கும் கடிதக் கவிதையை ரசித்தேன். இதன் தொடர்ச்சி கூட இருக்கிறது முகநூலில், இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலில் இரண்டு பகுதியாக வந்தது.... இங்கே ஒன்றாக!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. நீண்டநாட்கள் கழித்து இப்படி துணைக்கு எழுதும் கடிதத்தை வைத்து ஒரு கதை எழுதத் தொடங்கி பாதியிலேயே நிற்கிறது ஒன்றரை வருடங்களாய்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... விரைவில் முடித்து வெளியிடுங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 6. அற்புதமான அன்பு அலைகள் கொண்ட கடிதங்களும்
  நிகழ்வுகளும். புத்தகமாகவே போட்டு விடலாம் போலிருக்கிறது ஆதி.

  இவர் கூட 007 என்று ஃப்ரம் அட்ரஸ் போட்டு எனக்கு எழுதிய கடிதங்கள்
  நிறைய,.

  அப்பா சிரித்துக் கொண்டே கடிதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது இன்னும் நினைவில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 007 என்று ஃப்ரம் அட்ரஸ்.... :))) ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 7. பொக்கிஷபகிர்வுதான்.
  கடிதங்களில் பேசிக் கொண்டதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சிதான்.
  அருமையான காலங்கள். கடிதம் வரவை எதிர்பார்த்து விரிவான கடிதமாக இருக்காது இருந்தாலும் மீண்டும் மீண்டும் படித்து விரிவுரையாளரே!விரிவாக எழுத கூடாதா ? என்று கேட்ட காலங்களை நினைத்துப் பார்க்க வைத்த பொக்கிஷபதிவு.
  வாழ்த்துக்கள் ஆதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவுரையாளரே... விரிவாக எழுதக் கூடாதா? ஹாஹா... நல்ல கேள்வி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 8. பதில் கடிதம் வரத் தாமதமானால் எழும் எண்ணங்கள் தபால் பெட்டியில் ஒட்டிக் கொண்டு விட்டதோ தபால்காரர் சேகரிக்கும்போதுஎங்கோ தவற விட்டாரோ எழுதிய கடிதம் ஏதோ கோபம்விளைவித்து விட்டதோ இத்தியாதி இத்தியாதி என் தந்தை எனக்கு எழுதிய கடிதங்கள் பல என்னிடம் உள்ளது ஒவ்வொன்று ஒவ்வொரு நினைவலையை மீட்டும்காதலர்களாக நாங்கள் எழுதிக் க்லொண்ட கடிதங்களை திருமணத்துக்குப் பின் ஏனோ கிழித்து எறிந்து விட்டோம் இப்போதுஅது தவறான பைத்தியக்காரத் தனமாக தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... நீங்களும் கிழித்து எறிந்து விட்டீர்களா..... சில சமயங்கள் இப்படி முடிவு எடுத்த பிறகு அது பற்றி கவலை படுகிறோம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா...

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....

   நீக்கு
 10. இப்படியும் பதிவு தேத்த முடியும?! இருங்க நானும் தேடி பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேடுங்கள்..... தேடுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி...

   நீக்கு
 11. நானும் இப்படி ஒரு ஃபைல் வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல, சிறு பிழைகளோடு அம்மா எழுதிய கடிதங்கள், கொச்சையாக என் அக்காக்களின் (அப்போதைய) குழந்தைகள் எழுதிய கடிதங்கள் எல்லாமே இருக்கின்றன. சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒரே சமயத்தில் வரவழைக்கும் கடிதங்கள் அவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரே சமயத்தில் வரவழைக்கும் கடிதங்கள்.... உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா....

   நீக்கு
 12. வணக்கம் சகோதரி

  அருமையான நினைவலைகள். தங்களின் கடிதக் கவிதை மிகவும் நன்றாக உள்ளது
  அன்பிற்கினியவர்களுடன் கடித தொடர்பில் இருக்கும் போது காத்திருக்கும் ஒவ்வொரு நாளுமே பரபரப்பு கலந்த சுவாரஸ்யந்தான். என் அம்மா எழுதிய கடிதங்களில் ஒன்றிரண்டுக்கும் மேலாக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். இப்போதும் அதை படிக்கும் நேரத்தில், அம்மாவின் அன்பு பன்மடங்காக தோன்றி மனதை வருத்தும். என்னவரின் கடிதங்களும் (பிரிந்திருக்கும் நேரங்களில்) பத்திரமாக வைத்துள்ளேன். உண்மையில் தங்கள் சொல்படி பொக்கிஷங்கள்தான். அலைபேசியாக இருந்திருந்தால் மணிக்கணக்கில் பேசினாலும் மனதில் கோர்வையாக நிற்காது. தங்களின் பொக்கிஷ பகிர்வு அருமை.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசியாக இருந்திருந்தால் மணிக்கணக்கில் பேசினாலும் மனதில் கோர்வையாக நிற்காது.... உண்மை. என்னதான் பேசினாலும், எழுதுவது போல வருவதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 13. பொக்கிஷங்கள் என்றைக்கும் பொக்கிஷங்கள் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். பொக்கிஷங்களே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி!

   நீக்கு
 14. பொக்கிஷங்கள் தான்! மிகவும் ரசித்தேன் ஆதி! பதிவு செம...

  என்னிடம் உள்ள பொக்கிஷங்கள் என் மகனுடையது...

  என் மகன் சிறு வயதில் கலெக்ட் செய்தது...அப்புறம் என் சமையல் குறிப்பு நோட்புக்கில் அவன் கரெக்ட் செய்து டிக் அடித்து..."கீதா உன் கையெழுத்து ரொம்ப மோசம். வாசிக்க கூட முடியலை! இனி தெளிவா எழுதனும். இல்லைனா இம்பொசிஷன் தருவேன் " என்று போட்டு அதற்கு 10 ற்கு ஒன்று இரண்டு அல்லது பூஜ்ஜியம் மதிப்பெண் எல்லாம் கொடுத்திருந்தான்..

  அப்புறம் அதே நோட் புக்கில்..."கீதா உன் கிச்சன் ரெக்கார்டில் கிச்சன் பரிசோதனைக்கான குறிப்புகள் ப்ரொசீஜர் எல்லாம் எழுதிவைச்சுருக்க. ஆனால் கிச்சன் லேப்ல ஒரு பரிசோதனையும் செய்யலை செஞ்சதுக்கான ரெக்கார்டும் சப்மிட் செய்யலை...அதாவது என் தட்டுக்கு வரலை. இன்னும் ஒரு வாரத்துல எல்லாம் செஞ்சு முடிக்கனும். என்னிடம் வந்து டிஸ்கஸ் செய்யனும். இல்லைனா உன் அப்பாவை எங்கிட்ட பேச சொல்லு" என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை இப்ப பார்த்தாலும் சிரித்துவிடுவேன்...7 ஆம் வகுப்பு படித்த சமயத்தில்...

  இப்படி நிறைய நினைவுஅள்...இப்ப இங்க பொக்கிஷங்கள் என்பதைப் பார்த்ததும் அட! நாம கூட ஒரு பதிவு தேத்திடலாம் போல என்று நினைத்தேன் ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... உங்கள் பொக்கிஷங்கள் பற்றிய நினைவுகளும் சிறப்பு. உங்கள் பொக்கிஷங்களை நீங்களும் எழுதலாமே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....