நெய்வேலியில்
பல முறை நிலாச் சோறு சாப்பிட்டிருக்கிறோம். அம்மாவோ அல்லது அத்தைப் பாட்டியோ [அம்மாவின்
அத்தை – இவர்கள் பற்றி எழுத வேண்டும்… என்னவொரு மனுஷி!] குழம்பு சாதம், ரசம் சாதம்,
தயிர் சாதம் என தனித்தனியாகப் பிசைந்து எங்கள் எல்லோரையும் சுற்றி அமர வைத்து கையில்
உருண்டை உருண்டையாக உருட்டிப் போடுவார்கள்.
”எங்கள்” என்பதில் எங்கள் மூவரைத் தவிர பக்கத்து வீட்டு நண்பர்கள், வீட்டுக்கு
வந்திருந்த சித்தப்பாக்களின் குழந்தைகள் என பலரும் அடக்கம். அது ஒரு கனாக்காலம்…
சாதாரணமாகச்
சாப்பிடுவதை விட அப்படி கைகளில் பிசைந்து போடும்போது கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவோம். பாசத்தோடு பிசைந்து கொடுக்கும் போது அதிகமான அளவு
சாப்பிடுவது கூடத் தெரிவதில்லையே. ஒரு சின்ன வாழை இலைக் கீற்றில் தொட்டுக்கொள்ள பொரியல்,
ஊறுகாய் என வைத்துக் கொண்டு, கையில் போட்ட உருண்டைகளோடு உணவு உண்ண அமிர்தம்! அதுவும்
தயிர் சாதம் சாப்பிடும்போது கட்டை விரலால் ஒரு குழி ஏற்படுத்த ஒரு சிறு கரண்டியால்
அக்குழியில் ஒரு சொட்டு வற்றல் குழம்பு விடுவார் அத்தைப் பாட்டி!
இப்படி
எல்லாம் இருந்தது வெறும் நினைவாக மட்டுமே இருக்கிறது. இன்றைய காலகட்டங்களில் இப்படி
கைகளில் போட்டுக் கொடுக்க, கொடுத்ததைச் சாப்பிடுவதை விடுங்கள், கீழே அமர்ந்து சாப்பிடும்
பழக்கமே போய்விட்டது! நிறைய வீடுகளில் ஹோட்டல்கள் போல டைனிங் டேபிள் சாப்பாடு தான்!
இல்லை என்றால் கைகளில் தட்டை ஏந்திக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி
பார்த்தபடியே தான் சாப்பிடுகிறார்கள் – தட்டில் என்ன இருக்கிறது, என்ன சாப்பிடுகிறோம்
என்பது கூடத் தெரியாமல் சாப்பிடும் காலம் இது!
அத்தைப்
பாட்டி, அம்மா போல இப்போது யாரும் சாதம் பிசைந்து கைகளில் போட மாட்டார்களா என்று பல
முறை நினைத்ததுண்டு. அதுவும் தலைநகர் தில்லியில் தனியாக வாசம் என்பதால் தனி ஒருவனுக்கு
சமைத்து தனியாகவே உண்பது வழக்கமாக இருக்கையில், இங்கே யார் வந்து கைகளில் போட்டுச்
சாப்பிடச் சொல்லப் போகிறார்கள்! இந்தக் குறை என் போன்றே, இங்கே இருக்கும் சில குடும்பத்தினருக்கும்
உண்டு! அவ்வப்போது இந்த வழக்கம் பற்றியும், நிலாச்சோறு சாப்பிடும் ஆசை பற்றியும் பேசும்போது
திடீரென முடிவெடுத்து சில மாதங்கள் முன்னர் நண்பர் வீட்டில் இப்படிச் சாப்பிட்டோம்.
நேற்று
காலையிலேயே அலுவலகத்திற்குச் சென்று மாலையில் வீடு திரும்பும்போது ஒரு அழைப்பு! இன்று
இரவு நிலாச்சோறு – அதன் பிறகு புத்தாண்டை வரவேற்க ஒரு சிறு நிகழ்வு – இரவு ஒன்பது மணிக்கு
வந்து விட வேண்டும் எனச் சொல்ல, ஆஹா புத்தாண்டை இப்படி வரவேற்க ஒரு வாய்ப்பு என, சரி
எனச் சொல்லிவிட்டேன். சிறுவர்கள், பெரியவர்கள்
என மொத்தம் 20 பேர் – அனைவருக்கும் உணவு சமைப்பது கடினமான வேலை. இருந்தும் மிகச் சிறப்பாக
செய்து வைத்திருந்தார்கள். முள்ளங்கி, உருளைக்கிழங்கு சாம்பார், மாதுளை போட்ட தயிர்
சாதம், தொட்டுக்கொள்ள மிளகாய் பஜ்ஜி, வெங்காய பகோடா என simple but delicious மெனு!
நிலாச்
சோறு என்று சொன்னாலும், தில்லியில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையில் வெட்ட வெளியில்
அமர்ந்து சாப்பிடுவது முடியாத ஒன்று! வீட்டுக்குள்ளேயே நண்பரின் திருமதியைச் சுற்றி
அமர்ந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் உருண்டை உருண்டையாக சாதம் கொடுத்தார் அவர். முதலில்
குழந்தைகளுக்கு, அதன் பிறகு ஆண்களுக்கு, பின்னர் அனைத்து பெண்களும் அமர்ந்து கொண்டு
என அனைவரும் பழைய நினைவுகளோடும் குதூகலத்தோடும், ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்தபடி சாப்பிட்டோம். இப்படி அடிக்கடிச் சாப்பிட வாய்ப்பு கிடைக்க வேண்டும்
என்பது தான் அனைவருடைய விருப்பமும்!
அதன்
பிறகு புத்தாண்டை வரவேற்க, தலைநகரின் Hotel Ashoka-விலிருந்து Cake தருவித்திருந்தார்
நண்பர். இருப்பதிலேயே சிறியவர் ஒருவர்
Cake வெட்ட, புத்தாண்டு நல்ல விதமாக பிறந்தது.
நள்ளிரவில் ஒரு சிறு துண்டு Cake-உம், சில துண்டுகள் Chips-உம் சாப்பிட்டு அனைவரும்
புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். நண்பர்கள் அனைவருக்கு வாழ்த்துச் சொல்லி
அங்கிருந்து புறப்பட்டபோது இரவு 12-30 மணி!
வீட்டிற்கு
நடந்து வந்து கொண்டிருந்தேன்! வழியில் இருக்கும் CNG Pump அருகே Gas fill செய்ய வாகன
வரிசை…. அதில் ஒரு வாகனத்தின் எல்லா கதவுகளும்,
பின்புற Boot-உம் திறந்திருக்க, அதிலிருந்து பஞ்சாபி பாட்டு அதிரடியாக ஒலித்துக் கொண்டிருந்தது.
ஐந்தாறு சீக்கிய இளைஞர்கள் எந்த வித கவலையுமின்றி உற்சாகமாக பாடியபடியும், பங்க்ரா
நடனம் ஆடியபடியும் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்….. சில நிமிடங்கள்
அவர்களின் நடனத்தைப் பார்த்து ரசித்த பிறகு வீடு திரும்பினேன்!
புத்தாண்டு
நல்லவிதமாய் தொடங்கி இருக்கிறது. நல்ல விதமாகவே
தொடரட்டும். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு
தின நல்வாழ்த்துகள்…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.