திங்கள், 28 ஜூன், 2021

வாசிப்பனுபவம் - பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - இரா. அரவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று காலை வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவையும் மாலையில் வெளியிட்ட நாற்பதில் நாய் குணம் என்றால் ஐம்பதில் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


GOOD RELATIONS ARE LIKE NEEDLES OF THE CLOCK! THEY ONLY MEET FOR SOMETIMES BUT ALWAYS STAY CONNECTED.


*****
அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நாம் பார்க்கப் போகும் பதிவு ஒரு வாசிப்பனுபவம் பதிவு.  நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் பார்வையில் ஒரு மின்னூல் - மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உபயோகமாக இருக்கும் மின்னூல்! வாருங்கள் மின்னூல் குறித்த நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவத்தினை படிக்கலாம் - வெங்கட் நாகராஜ்.  


*****


மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான கையேடாக 

'பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?' 

நூல் அறிமுகம்.

இன்றைய தொற்றுநோய்ச் சூழலில், இருக்கும் வேலையைத் தக்கவைப்பதே பலருக்குச் சவாலாக இருக்க, வரும் காலங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளை அறிந்து மாணவர்களை வழிகாட்டுவது மிகவும் சவாலானதே. 


அதிலும் பன்னிரண்டாம் வகுப்பு உட்பட பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்படவே, நுழைவுத் தேர்வு குறித்தும், கலந்தாய்வு குறித்துமான பல குழப்பங்கள் தற்போது நிலவுகின்றன. 


இந்நிலையில், பிரபலமான பொறியியல் துறை குறித்தும், அதன் பல பிரிவுகளில்  உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், எளிய தமிழில் ஒரு மணி நேரத்திலேயே விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு வழிகாட்டி நம்மிடம் உள்ளது. 


அதுவே, சென்ற ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட, எழுத்தாளர்கள் திருமதி திருக்குறள் அரசி மற்றும் திரு பாலசுந்தர் அவர்களின் 'பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?' என்ற நூல். 


'இயற்கையால் இந்த உலகம் உருவானது. பொறியியலாளர்களே இந்த உலகத்தை வடிவமைத்தனர்' என்னும் இந்நூலின் தொடக்க வாசகமே, பொறியியலை பாமரர்களுக்கும் எளிமையாக அறிமுகம் செய்கிறது. 


வானுயர்ந்த கட்டிடங்கள், அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள், வாகனங்கள், பாலங்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள், விமானங்கள், கப்பல்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றிற்கான தேவைகள் குறையும் என்றால் நம்ப மாட்டோம். 


ஆனால், இச்சாதனங்களின் அடிப்படையான பொறியியல் படித்தால் குறைந்த வேலைவாய்ப்புகளே இருப்பதாகச் சொல்வதை நம்புகிறோம். 


ஒவ்வொரு ஆண்டும் இந்தியா உருவாக்கும் ஏறக்குறைய ஒரு கோடி பட்டதாரிகளில், பதினைந்து விழுக்காடு பொறியியல் பட்டதாரிகள்தான், கிட்டத்தட்ட நாற்பத்தொன்பது சதவிகித வேலை வாய்ப்புகளைப் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன! 


இதற்கும் மேல், IAS தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் 70 சதவிகிதத்தினரும், மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களில் 90 சதவிகிதத்தினரும் பொறியாளர்களே!


பல துறைகளிலும், பல நாடுகளிலும் நம் நாட்டுப் பொறியாளர்கள் கோலோச்சினாலும், பொறியியல் படிப்பிற்குத் தொடர்பில்லாத வேலைகளில் சேர்பவர்கள் அதிகம் இருப்பதே இத்துறையின் வாய்ப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. 


அக்கேள்விகளுக்கான ஆச்சரியமூட்டும் விடைகளும் விளக்கங்களும் இந்நூலில் நிறைந்துள்ளன. 


பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் முன், இந்நூல் குறிப்பிடும் மாணவர்கள் தங்களையே கேட்கவேண்டிய கேள்விகள், நம்மை நாமே புரிந்துகொள்ள உதவும் அளவுகோல்கள். 


மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வேலை பெறும் விகிதம் என்னும் இரண்டையே, கல்லூரியின் தர அளவுகோல்களாகக் கொள்ளும் மக்களுக்கு, சிறந்த கல்லூரியை அடையாளம் காணும் பல அளவுகோல்களும் வழிமுறைகளும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 


மாணவர்களின் ஆர்வத்தையும், அதைப் பூர்த்தி செய்யும் கல்லூரிகளின் அளவுகோல்களையும் அறிந்தபின், பிரகாசமான எதிர்காலம் கொண்ட பல நவீன பொறியியல் பிரிவுகள் குறித்த எளிய அறிமுகங்களும், அதை பல படிநிலைகளில் வழங்கும் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்த பயனுள்ள விவரங்களும், மேலான ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதிகள் குறித்த இடங்களின் விவரங்களும் நூலில் நிறைந்துள்ளன. 


அப்படிப்புகளில் நிபுணத்துவம் பெற்றபின், வெளியில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்தும், அவ்வேலைகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்தும் உள்ள தகவல்கள், இந்நூலை மாணவர்களின் அடுத்த முப்பது ஆண்டுகள் வழி நடத்தும் கையேடாகத் திகழும் தகுதி பெற்றதாக மாற்றுகிறது. 


மேற்குறிப்பிட்ட பல பயனுள்ள தகவல்களோடு, உடனடி தேவையான கலந்தாய்வை எதிர்கொள்வதற்கான பயனுள்ள யோசனைகளும், பாடப்பிரிவுகளின் குறியீடுகளும்  நூலின் இறுதிப் பகுதியில் தரப்பட்டுள்ளன. 


இவ்வனைத்தையும் ஒருங்கே கொண்ட இந்நூலை, பொறியியலில் சேர விரும்பும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் அறிமுகம் செய்வோம். 


வளர்ந்துவரும் நம் நாட்டின் தேவைக்கேற்ப, விவசாயத்தையும் தொழில் வளர்ச்சியையும் சரியான விகிதத்தில் மேம்படுத்தும் தகுதியும், சுயசிந்தனையும், ஆளுமைத்திறனும் கொண்ட பொறியாளர்களாக நம் மாணவர்கள் உருவாக ஊக்குவிப்போம். 


நூலை கீழ்காணும் சுட்டியில் வாங்கிப் படிக்கலாம். 


பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? (Tamil Edition) eBook: திருக்குறள் அரசி, பாலசுந்தர்நட்புடன்,


இரா. அரவிந்த்


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


12 கருத்துகள்:

 1. இன்றைய மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் தகவல் விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய சூழலுக்கு தேவையான பதிவுதான் சார்.
   தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 2. நல்லதொரு பயனுள்ள நால் அறிமுகத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

   நீக்கு
 3. மிகவும் பயனளிக்கும் தகவல்கள் கொண்டதாக இன்றைய பதிவு வந்திருக்கிறது! நல்லதொரு நூல் அறிமுகம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மேடம், பயனுள்ள தகவல்கள் தான். பொருமையான வாசிப்பிற்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி மனோ சாமினாதன் மேடம்.

   நீக்கு
 4. மிகவும் பயனுள்ள நூலாய் இருக்கும்.  ஆனால் எல்லோரும் பொறியியல் துறையையே நாடினால் வருங்காலத்தில் வேலைவாய்ப்புகள்தான் எப்படி உருவாகும்?  மாற்று வேலைகளைதான் செய்வது யார்!  இது அடிக்கடி எனக்குத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக சார். மாற்றுத்துறைகளுக்கும் ஆட்கள் தேவை.
   அணைத்து துறைகளும் இன்னும் சிறப்பாக ஒருங்கினைந்து செயல்படும் நாளும் அதை தெளிவாக புரியவைக்கும் கல்விமுறையும் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
   தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 5. பயனுள்ள பதிவு.
  நல்ல நூல் விமர்சனம்

  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....