வியாழன், 3 ஜூன், 2021

கதை மாந்தர்கள் - ஹாய் டியர் - சரிதா காலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக் கொள்! ஏனெனில் அதற்கு இன்று ஒரு நாளைக் கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.


*****
கதை மாந்தர்கள் வரிசையில் சில பதிவுகளை எழுதி வந்தாலும் கடந்த சில வாரங்களாக இந்தப் பதிவுகள் எழுதுகையில் மனதில் ஒரு வலி. எழுத வேண்டாம் என நினைத்தாலும், நெருங்கிய அந்த கதை மாந்தர்களுடன் எனக்கிருந்த நட்பை அவர்கள் சென்ற பிறகும் எழுதாமல் இருக்க மனது ஒப்புக் கொள்ளவில்லை.  இந்த வாரம் இன்னும் ஒரு கதை மாந்தர் குறித்து பார்க்கலாம்.  வாருங்கள். 
சரிதா காலா - உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சரிதா…  நான் பணிக்குச் சேர்ந்த சில நாட்களுக்கு முன்னர் எங்கள் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.  பணிபுரிய ஆரம்பித்த நாட்களிலிருந்தே அவரை பார்த்திருந்தாலும், பேசிப் பழகியதில்லை.  ஹலோ சொல்லிக் கொள்வதோடு சரி.  சில வருடங்களுக்குப் பிறகு அவருடனான நட்பு தொடங்கியது.  பழகுவதற்கு இதமானவர்.  எத்தனையோ பிரச்சனைகள் அவரது வாழ்க்கையில் இருந்தாலும், சிரித்த முகத்துடன் பார்க்கும் அனைவருடனும் நட்பாக பேசியவர்.  சில சமயங்களில் நானும் அவரும் ஒன்றாக பணி புரிய நேர்ந்திருக்கிறது.  நான் Establishment பிரிவில் இருக்க, அவர் Cash பிரிவில் இருந்தார்.  அதனால் நான் அனுப்பும் பல அலுவலக ஆணைகள் குறித்து அவ்வப்போது பேசிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல்.  தினம் தினம் பேசிக் கொள்வோம்.  எங்கள் நட்பும் வளர்ந்தது.  பார்க்கும் போதெல்லாம் “ஹாய் டியர்” என்ற அழைப்பு!  நட்புடன் பேசுவது, எனது செயல்கள் குறித்த அவரது பார்வை என எப்போதும் சொல்வதுண்டு.  


நான் வலைப்பூவில் எழுதுவது குறித்தும், நான் செய்யும் பயணங்கள் குறித்தும் கூட அவ்வப்போது சொல்வார்.  நான் எடுத்த படங்கள் பார்த்து விட்டு, டியர், நீ ஏன் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை.  தமிழில் எழுதினால் நான் எப்படி புரிந்து கொள்வது என்றெல்லாம் சொல்லுவார். அவ்வப்போது அவர் வரைந்த ஓவியங்களைக் காண்பித்து என் கருத்தினைக் கேட்பார். மகள் ரோஷ்ணி வரையும் ஓவியங்கள், மகளின் கைவேலைகள் என அனைத்தையும் பார்த்து ரசித்து, பாராட்டுவார்.  சில மாதங்கள் முன்னர் கூட மகளது மண்டலா ஆர்ட் பார்த்து விட்டு, தானும் மண்டலா ஆர்ட் வரைய முயற்சி செய்யப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  தான் வரைவதோடு, அவரது அண்ணன் மகளிடமும் வரையச் சொல்லி உற்சாகப் படுத்துவார்.  தொடர்ந்து அத்தனை பேரிடமும் அன்புடன் இருக்கும் அவருக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு.  


அவரது குடும்பம் குறித்து நான் எப்போதும் பேசுவதில்லை.  அவர் தனது அண்ணன் வீட்டினருடன் தான் இருந்தார் என்பதால் அது குறித்து பேசி அவரது மனதை நோகடிக்க வேண்டாம் என்று எப்போதும் அவரது குடும்பம், வாழ்க்கை போன்ற எதையும் குறித்து பேச மாட்டேன்.  என்னிடம் சில முறை சொல்வார் - “டியர் நீ ஒருத்தன் தான் எனது குடும்ப வாழ்க்கை குறித்து எப்போதுமே கேட்டதில்லை” என! 


தேர்தல் பணிக்கு நானும் அவரும் தேர்ந்தெடுக்கப்பட, பல நாட்கள் அவரும் நானும் ஒன்றாக வெளியே சுற்ற வேண்டியிருந்தது.  வீடு வீடாக ஏறி இறங்கி வாக்காளர் அட்டைகள் தருவது, புதிய விண்ணப்பங்கள் பெறுவது என சுற்றி இருக்கிறோம். வாக்காளர் அட்டை வழங்கும் பணி கொஞ்சம் சிக்கலானது.  பல வீடுகளில் இப்படி வருபவர்களை மனிதர்களாக மதிப்பதே இல்லை!  வெளியே நிறுத்தி வைத்து பல கேள்விகளைக் கேட்டு நோகடிப்பார்கள், திட்டுவார்கள். அவற்றை எல்லாம் கேட்டு கோபமும் காட்ட முடியாது.  சில இக்கட்டான சூழல்களில் அவரை நானும், என்னை அவரும் காப்பாற்றிக் கொள்ள உதவியிருக்கிறோம். இந்தத் தேர்தல் பணிகள் குறித்து சில பதிவுகள் என் பக்கத்தில் 2011-இல் எழுதி இருக்கிறேன். என்றைக்கும் அந்த நாட்கள் எனக்கு மறக்காது.  சென்ற வருடத்தில் கூட தீநுண்மி நாட்களில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய சூழலில் அது குறித்து பேசியிருக்கிறோம், ஒரே வாகனத்தில் வீடு திரும்பியிருக்கிறோம்.  


சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.  மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.  தீநுண்மி தான் - வேறென்ன!  Ventilator Support-இல் தான் இருந்தார்.  கொஞ்சம் பரவாயில்லை என்று Ventilator Support-இலிருந்து மருத்துவர்கள் அவரை மாற்ற நினைத்தபோது, “வேண்டாம், எனக்கு பயமாக இருக்கிறது… அதை நீக்கினால் நான் இறந்து விடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.  தீநுண்மியின் தாக்கம் அதிகம் தான் கூடவே அது குறித்த பயமும் அதிகமாக அவரை பாதித்திருந்தது.  சில நாட்களுக்குள் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வந்தது.  நட்பில் இருந்த ஒருவராலும் அவர் உயிரிழந்தார் என்ற செய்தியை நம்பவே முடியவில்லை.  நல்லதொரு நட்பினை இழந்த சோகத்தில் எங்கள் அலுவலகத்தில் இருக்கும் பலரும் இருந்தோம்… இருக்கிறோம்…. 


“ஹாய் டியர்…” என்ற அவரது குரல் இனிமேல் கேட்கவே கேட்காது....


*****


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்
வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


24 கருத்துகள்:

 1. மிகவும் கஷ்டமாக இருக்கிறது.  வென்டிலேட்டரில் வைக்கப்பட்டவர்கள் மீள்வது வெகு அபூர்வம் என்றாலும், இந்தத் தீநுண்மி விஷயத்தில் பெரும்பாலும் பயம்தான் பாதிப் பேர்களைக் கொல்கிறது என்று எனக்குத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயம் - பலரையும் பரிதவிக்க வைத்து விடுகிறது ஸ்ரீராம். இன்னமும் கூட அவரது பயம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் - அவரது நண்பர்களாகிய நானும் இன்னும் சிலரும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. பெருந்துயரம் தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வெங்கட்ஜி சத்தியமாக அழுதுவிட்டேன். ஏன் இப்படி அன்பானவர்கள் மறைகிறார்கள்...மனம் என்னவோ செய்கிறது வெங்கட்ஜி..

  இந்த மாயாவி பலரையும் பயமுறுத்தி வைத்திருப்பதால் தொற்றிக்கொண்டால் பலரும் பயந்து மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் தான் பாதிப்பு கூடுவதாகத் தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாயாவியின் பாதிப்பு குறைவேனா என்கிறது. அன்பானவர்களின் மறைவு இன்னமும் மனதை அதிகம் வேதனை கொள்ள வைக்கிறது கீதாஜி. எத்தனை எத்தனை இழப்புகள். பலருடைய கதைகளை எழுத மனமே வரவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. மிகவும் கஶ்டமாக உள்ளது சார்.
  தீநுண்மியிலிருந்து மீண்டாலும், கரும்பூஞ்சையினாலும் பலர் தமிழகத்திலும் இறக்கிறார்கள்.
  பல நெறுங்கிய நன்பர்களையும் உறவுகளையும் இழந்துவருகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஷ்டமான நாட்கள் தான் அரவிந்த். பலருடைய வேதனைகள், தினம் தினம் வரும் அழைப்புகள் என நாட்கள் நகர்கின்றன. நேற்று கூட தில்லியிலிருந்து வந்த செய்தி வேதனையான ஒன்று தான். இதற்கிடையில் அலுவலகத்திலிருந்து வரும் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. மனம் கனமாகி விட்டது ஜி
  பலருக்கும் தற்போது தங்களது சூழல்தான் எல்லாவற்றையும் கடக்க இறையே துணை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலருக்கும் இந்த மாதிரி சூழல் தான் என்பது உண்மையே கில்லர்ஜி. தொடர்ந்து வரும் இழப்புச் செய்திகள், மருத்துவமனைகள் அடிக்கும் கொள்ளை குறித்த தகவல்களும் வேதனையை அதிகரிக்கச் செய்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. உடன் பயணித்தவர்களை இழப்பது நம் உடலில் ஓர் உறுப்பை இழப்பதற்கு ஒப்பானதே...அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடலில் ஓர் உறுப்பை இழப்பதற்கு ஒப்பானது - உண்மையான வார்த்தைகள் ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. மனம் கனக்கச் செய்யும் விஷயம் தன் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. தொடர்ந்து அன்புக்குரியவர்களை இழந்து கொண்டே இருக்கிறோம். இந்தத் தொற்று எப்போது மறையும் என்று இருக்கிறது. மனதே வேதனையில் ஆழ்ந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொற்று எப்போது மறையும் என்பதே எல்லோருடைய கேள்வியும் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. உடன் படித்தவர்கள், உறவினர்கள், நண்பரகள், உடன் பணிபுரிந்தவர்கள் என பலபேர்களை இழந்துவரும் இந்த சூழலில் நெருக்கமான -ஏறக்குறைய உங்களின் தோழியாகவே விளங்கியவரின் பிரிவுசோகம் அளவிடமுடியாதது. அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுகிறேன், உங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனையான நிகழ்வுகள் தான் கோயில்பிள்ளை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மிகவும் துயரமான நிகழ்வு. சேர்ந்து வேலை செய்பவர்களின் பிரிவு மேலும் அவர்களுடன் பழகிய நாட்கள் நம் நினைவை விட்டு என்றுமே நீங்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துயரமான நிகழ்வு தான் இராமசாமி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. தீநுண்மி, வெண்டிலேட்டர் - இவைகளைக் கேள்விப்பட்டாலே கதக் என்று இருக்கிறது. பாவம் அந்தப் பெண்மணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதக் என்று இருக்கிறது - பல சம்பவங்கள் இப்படித்தான் பதைபதைக்க வைக்கிறது நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. தோழியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். எதிர்பாரா நிகழ்வுகள் பல. நாம் தீநுண்மியால் பல சொந்தங்களையும் , நட்புகளையும் இன்று இழந்து நிற்கின்றோம். இந்த மாயாவி தொற்று முழுதும் நீங்கி இவ்வையகம் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாயாவி தொற்று நீங்கி இவ்வையகம் நலம் பெற வேண்டும் என்பதே நம் அனைவருடைய பிரார்த்தனையும், ஆசையும் வானம்பாடி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....