சனி, 12 ஜூன், 2021

காஃபி வித் கிட்டு-114 - புதிய தொடர் - அம்மா - ZOO - பேச ஆள் தேவை - மழை - மினப்ப ரொட்டி - லாக்டவுன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LIFE IS LIKE RIDING A BICYCLE. TO KEEP YOUR BALANCE, YOU MUST KEEP MOVING - ALBERT EINSTEIN.


******
இந்த வாரத்தின் அறிவிப்பு - கடந்து வந்த பாதை - புதிய தொடர்

மேகங்களின் ஆலயம் மேகாலயா பயணக் கட்டுரைகளை இங்கே எழுதி வந்த நண்பர் சுப்ரமணியன் அவர்களின் சொல்லோவியத்தில், ஒரு புதிய தொடர் இங்கே ஆரம்பிக்கப் போகிறது விரைவில் என்ற அறிவிப்பை இங்கே தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.  அந்தத் தொடரிலிருந்து ஒரு சில வரிகள் இங்கே…


கையில் நோட்/புத்தகம்/ பேனா/பென்சில் என எதுவுமே இல்லாமல் நிராயுதபாணியாக வகுப்பின் உள்ளே அனுப்பப்பட, வகுப்பு முழுவதும் “ஜட்டியுடன் பையன்” எனக் கத்த, ஒரு நொடி மானம், தன்மானம் என இன்ன பிறவற்றையும் தொலைத்தேன்.  இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்து அமர்ந்தவுடன் அடுத்த பேரிடி - விரிவுரையாளர் ஆங்கிலத்தில் விரைவு இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். சத்தியமாய் இம்மி அளவு கூட புரியவில்லை.   


******


இந்த வாரத்தின் விளம்பரம் - Nothing can replace the taste of love: 


இந்த வாரத்தின் விளம்பரமாக, ஒரு தாய்லாந்து விளம்பரம்.  அம்மாவின் பாசம் கலந்த உணவின் சுவையை வேறு எதாலும் சமன் செய்ய முடியுமா என்ன?  மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.  பாருங்களேன்.


விளம்பரம் மேலே உள்ள காணொளி வழி பார்க்க முடியவில்லை எனில் யூட்யூப் தளத்தில் நேரடியாக இங்கே பார்க்கலாம்!


******


ராஜா காது கழுதை காது - Zoo-வுக்கு அனுப்பிடுவேன்:


சென்ற வார ராஜா காது ஒரு குடும்பத்தலைவரின் வருத்தம் சொன்னது என்றால், இந்த வாரம் அதற்கு நேர் எதிர்!  அப்படி என்ன சொன்னார்?


எங்க வீட்டுல இருக்கறவங்க எல்லாம் மிருகங்க மாதிரி கத்திட்டே இருக்காங்க!  அதெல்லாம் கேட்டுட்டே இருக்கேன்.  ஆனா, தொடர்ந்து இப்படியே இருந்தா, நான் சும்மா இருக்க மாட்டேன்! அத்தனை பேரையும் Zoo-வுக்கு அனுப்பிடுவேன்! என்னன்னு நினைச்சாங்க என்னை! 


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - பேச ஆள் தேவை:


முதியவர்கள் - அதிலும் குறிப்பாக உடல் தளர்ந்து வேலைகள் செய்ய முடியாமல் இருக்கும் போது எவ்வளவு நேரம் தான் தொலைக்காட்சி பார்க்க முடியும், எவ்வளவு நேரம் தான் தூங்க முடியும்?  அதுவும் பகலில் அதிக நேரம் தூங்கி விட்டால், இரவில் உறக்கம் வருவதில்லை! தனது வாழ்வில் சந்தித்த மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள் என ஏதோ சில விஷயங்களை மட்டும் மீண்டும் மீண்டும் யாரிடமாவது சொல்லி, அது குறித்து பேச வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருக்கிறது.  பெரியம்மா இப்போதெல்லாம் இப்படித்தான் அவர்கள் சிறு வயதில் செய்த வேலைகள், அப்பா, சித்தி, அத்தைகள் போன்றவர்களிடம் பெற்ற அனுபவங்கள், நாள் முழுக்க செய்து கொண்டே இருந்த வேலைகள் என சில விஷயங்களை தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  சில விஷயங்களை நானே இது வரை இருபது, இருபத்தி ஐந்து முறை கேட்டு விட்டேன் - குறிப்பாக சோகமான விஷயங்கள் - ஆனாலும் அவர் சொன்னது நினைவில் இருந்தாலும் மீண்டும் சொல்வார்! நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  அம்மா, பெரியம்மா, அப்பா என மூவரும் சேர்ந்து பேசும்போது ஒரே ரகளை தான்.  எனக்கே வயதாகி விட்டது போன்ற உணர்வு.  ஆனாலும் அவர்களும் என்னதான் செய்வார்கள்? எதையாவது பேசி தானே நேரத்தினைப் போக்க வேண்டும்? பேசுவதற்கென்றே சில ஆட்கள் மட்டுமே அவர்களது இப்போதைய தேவை! வேறொன்றும் பெரிதாக தேவைகள் இல்லை! 


******


இந்த வாரத்தின் நிழற்படம் - மழை வருமா வராதா: 

இந்த வாரம் அலைபேசியில் எடுத்த நிழற்படம் ஒன்று உங்கள் பார்வைக்கு!  கரு மேகங்கள் சூழ மழை வரும் என ஆவலில் நாங்கள்...... வர விட்டேனா பார் என விரட்டி அடிக்கும் காற்று..... ஆனால் கடைசியில் மழை தான் ஜெயித்தது! கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை தான்!   


******


இந்த வாரத்தின் உணவு - மினப்ப ரொட்டி/திப்ப ரொட்டி:சென்ற வாரத்தில் ரஞ்சனிம்மா காஃபி வித் கிட்டு பதிவில், அவர்களது மாமியார் செய்யும் மினப்ப ரொட்டி குறித்து சொல்லி இருந்தார்.  பெரியம்மாவிடம் கேட்ட போது, மினப்ப பப்பு என்றால் உளுந்து என்று சொன்னதோடு, அதை பயன்படுத்தி (dh)தி(b)ப்ப ரொட்டி அல்லது மினப்ப ரொட்டி செய்வார்கள் என்று சொன்னார்.  இணையத்தில் தேடிய போது சில செய்முறைகள் கிடைத்தன. இந்த வாரத்தின் உணவாக மினப்ப ரொட்டி - உங்கள் பார்வைக்கு!  விரும்பினால் இந்தக் காணொளி வழி நீங்களும் செய்முறையைப் பார்க்கலாம்!


******


இந்த வாரத்தின் ஹிந்தி பாடல் - அரே Bபாய் நிகல் கே ஆ Gகர் சே:


இரண்டு நாட்களாக சில வாட்ஸப் குழுக்களில் (தலைநகரைச் சேர்ந்த நண்பர்கள்/சக அலுவலர்கள் கொண்ட குழு) கீழே உள்ள பாட்டு அதிகம் உலவுகிறது!  லாக்டவுன் முடிந்ததும், இப்படித்தான் பாடி ஆடுவார்கள் என்று! வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தவர்கள் வெளியே வந்து பாடுவார்களாம் இப்படிதான் ! கிஷோர் குமார் மற்றும் வைஜெயந்தி மாலா நடித்த படம். இதுவரை கேட்டதில்லை!  கேட்டு ரசிக்கலாமே!


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


28 கருத்துகள்:

 1. இந்தவார காபி வித் கிட்டு பகுதிகள் நன்று.

  நண்பர் சுப்ரமணியன் அவர்களின் புதிய தொடரை வரவேற்கிறேன். முனைந்து தமிழில் புதிய வார்த்தைகளோடு எழுதும் தமிழ்க்காதலர், தலைப்பை ஆங்கிலத்தில் வைத்துவிட்டாரே

  வயதானவர்களின் ரிபீட்ட் பேச்சுகள்... இதுதான் ரியாலிட்டி. அவர்களுக்கு பேசுவதற்கு புதிய விஷயங்கள் இல்லாமல் போய்விடுகிறது. ஆனாலும் பெரும்பாலோர் அந்த காலகட்டத்தை நோக்கித்தான் செல்கிறோம்.

  மிளப்ப ரொட்டி.. அட.. புது உணவாக இருக்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   நண்பரின் புதிய தொடர் - இங்கே வெளியிட்டு இருக்கும் படம் மட்டுமே ஆங்கிலத்தில்! தொடரின் தலைப்பு தமிழில் தான். நாளை முதல் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் வெளிவரலாம்!

   வயதானவர்களின் ரிபீடட் பேச்சுகள் - நீங்கள் சொல்வது சரி தான். பல முறை கேட்டால் அலுப்பு வரலாம்!

   மிளப்ப அல்ல! மினப்ப!!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. வயதானவர்களுக்கு கம்பெனி வேணும், பழைய விஷயங்களை அசைபோட.

  தாய்வானில் புத்த கோவில் அருகே அவர்களுக்கு என்று இடங்களை (நீண்ட மண்டபம், உட்கார்ந்து எழுந்துகொள்ள நல்ல ரெயிலிங்கோடு, பக்கத்தில் சிறிது நடக்க வசதி என). வயதானவர்கள் அங்கு வந்து தன் வயதை ஒத்தவர,களுடன் பேசிக்கொண்டோ, சீட்டு விளையாடிக்கொண்டோ, அங்கு அவ்வப்போது யாரேனும் இசைப்பதைக் கேட்டுக்கொண்டோ பொழுது போக்கலாம். நம்மூரில் கோவில்கள் அதனைச் செய்தன.

  பலர், போனில் நண்பர்களை அழைத்து நெடுநேரம் பேசுகின்றனர். ஆனால் நாம் சிறிதுநேரம் பேசலாம் என்றால், சொன்ன விஷயங்களே மீண்டும் மீண்டும் வருகிறது.

  ரிபீட் பண்ண ஆரம்பித்துவிட்டாலே அந்த காலகட்டத்தை (வயதான) நோக்கிப் பயணிக்கிறோம் போலிருக்கு. யோசிக்க வைக்கிறது உங்கள் எழுத்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய விஷயங்களை அசை போட கம்பெனி வேண்டும் என்பது சரி தான் நெல்லைத் தமிழன். இப்போது பேசுவதற்கு ஆட்கள் குறைவு. முன்பெல்லாம் வீட்டு வாசலில் திண்ணை உண்டு. யாரேனும் வந்து அமர்ந்து பேசி விட்டுச் செல்வார்கள்! இப்போது அப்படியல்ல! அடுக்குமாடி குடியிருப்புகளில் பேச ஆள் கிடைப்பது இன்னும் கடினம்.

   ரிப்பீட் பண்ண ஆரம்பித்து விட்டாலே அந்த காலகட்டத்தை நோக்கிப் பயணிக்கிறோம் போல - உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 3. நண்பர் சுப்ரமணியத்தின் தொடருக்காய்க் காத்திருக்கிறேன்.

  பேச ஆள் தேவை விஷயம் என் வீட்டிலும் நடக்கிறது.  நான் கூட அதுஅற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  முன்னதாக நாலுவரியில் ஒரு கவிதை முயற்சி மட்டும் செய்து வைத்தேன்.  ஆனால் மறுபடி மறுபடி கேட்கும் பொறுமைதான் எனக்கில்லை!

  பாடலைக் கேட்டு ரசித்தேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் சுப்ரமணியத்தின் தொடர் நாளை முதல் தொடரும்! ஒவ்வொரு ஞாயிறும் புதனும் வெளிவரலாம்!

   பேச ஆள் தேவை - நீங்களும் எழுதுங்கள் ஸ்ரீராம்.

   பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 4. டேச ஆள் தேவை

  இதுவொரு சோகமான விசயம் ஜி நாளை நாமும் இதனுள் இருப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேச ஆள் தேவை எனும் கட்டத்தில் நாமும் நாளை வருவோம்! உண்மை தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 6. அனைத்தும் அருமை.
  விளம்பர காணொளி பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

  //பேசுவதற்கென்றே சில ஆட்கள் மட்டுமே அவர்களது இப்போதைய தேவை! வேறொன்றும் பெரிதாக தேவைகள் இல்லை! //

  ஆமாம், அது போதும் அவர்களுக்கு.

  கிஷோர் குமார் பாட்டு நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நண்பர் சுப்ரமணியன் அவர்களின் தொடர் ட்ரெய்லரே செமையா இருக்கு சிரித்துவிட்டேன். எதிர்பார்ப்பு கூடுகிறது!..ஆவலுடன்..

  ஆமாம் ஜி பெரியவர்களுக்குப் பேச்சுத் துணை அவசியம். ஆனால் நமக்கோ வேலைகள் மறுபுறம். முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்ததால் யாரேனும் ஒருவர் அதுவும் கிராமத்தில் என்றால் திண்ணை ஒன்றே போதும்.

  அதன் பின் நகரத்திற்கு வந்த பிறகு, அதுவும் தனிக் குடித்தனம் மூன்று பேர் அல்லது மிஞ்சி போனால் நான்கு பேர் உள்ள குடும்பம். அபார்ட்மென்ட்...அவர்களுக்கும் கஷ்டம்தான். என் பாட்டி 92வயது வரை இருந்தார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் சுப்ரமணியன் அவர்களின் தொடர் - நாளை முதல்! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என நம்புகிறேன் கீதா ஜி!

   பெரியவர்களுக்கு பேச்சு துணை அவசியம் தான். இப்போதைய அடுக்கு மாடி குடியிருப்பில் இப்படியான வயதானவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. மின்னப்பு என்றால் உளுந்து (நீங்களும்சொல்லியிருக்கீங்க) இந்தப் பதார்த்தம் செய்வதுண்டு. மகனின் நண்பர் ஆந்திராவைச் சேர்ந்தவர் கடைசி 6 மாதங்கள் இன்டெர்ன்ஷிப் சமயம் எங்களுடன் தான் தங்கியிருந்தார். அப்போது அவர் அம்மாவிடம் தெரிந்து கொண்டு அவருக்குச் செய்து கொடுத்தேன் மகனுக்கும் பிடித்துப் போக அவ்வப்போது செய்கிறேன். அது போல எர்ரா காரம் தோசை/எர்ரா காரம் மசாலா தோசை அதுவும் தெரிந்து கொண்டது அப்போதுதான். வீட்டில் செய்வதுண்டு.

  மின்னப்பு ரொட்டி கிட்டத்தட்ட நம்ம அழகர் கோயில் தோசை, ஸ்ரீரங்கத்து சம்பார தோசை போலதான்.

  விளம்பரம் அருமை. அம்மா கையால் சாப்பிடுவது என்பது அது தனி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் செய்வீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி கீதாஜி.

   ஸ்ரீரங்கத்து சம்பார தோசை போல! - எனக்கு அதுவும் அவ்வளவாக பிடிக்காது!

   விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. எப்பவும் போல காஃபி வித் கிட்டு சூப்பர்ப்.
  குறும்படம் மிக அருமை.
  பெரியம்மா ஸ்டேஜுக்கு நான் நகர்ந்து கொண்டு
  இருக்கிறேன்.
  இப்ப எல்லாம் மகன் கிட்ட, இதை முதல்லிலேயே
  சொல்லிட்டேனான்னு கேட்கிறேன்.
  திரு.சுப்ரமணியம் அவர்களின் எழுத்தை
  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. மின்னப்ப ரொட்டி நன்றாக இருக்கும்னு தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரியம்மா நன்றாக இருக்கும் என்று சொன்னார் - அவர் ஆந்திராவில் (விஜயவாடாவில் 30 வருடங்களுக்கும் மேல் இருந்தவர் என்பதால்) சுவைத்திருக்கிறார் வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இன்றைய காஃபி வித் கிட்டு பகுதிகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

  உங்கள் நண்பர் எழுதும் தொடரை படிக்க ஆவலாக இருக்கிறோம். கருத்துரை பதில்களில் நாளையே என்பதை காணும் போது மகிழ்ச்சியடைந்தேன்.

  பெரியவர்களுக்கு தான் பேசுவதை சுவாரஸ்யமாக கேட்க ஒரு ஆள் வேண்டும். உண்மைதான். எங்கள் அம்மா, மற்றும் மாமியாரும் அப்படித்தான். அவர்கள் பேசுவதை கேட்கவில்லையென்றால் வருத்தம் வரும். இப்போது அந்த லிஸ்டில் நானும் இருக்கிறேன் என வீட்டில் எப்போதும் கிண்டல்தான்...

  குறும் படம் நன்றாக உள்ளது.
  ராஜா காதுவில்,மக்கள் பல விதங்களிலும் இருக்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது.

  மினப்ப ரொட்டி நன்றாக இருக்குமென தோன்றுகிறது. செய்து விடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

  காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. மின்னப்ப ரொட்டி பெயரே கேட்டதில்லை. புதுசா இருக்கு. செய்முறையைத் தெரிந்து கொண்டு செய்து பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மினப்ப ரொட்டி - பெயர் கேட்டதில்லையா... ஆஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 15. மினப்ப ரொட்டியைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். என் மாமியார் கிராமத்தில் புழுங்கலரிசி ரவையாக (சன்னமான ரவை) உடைத்துக் கொண்டு அதில் உளுந்தை அரைத்துப் போட்டு இட்லி வார்ப்பார். அதில் மறுநாள் இந்த மாதிரி குண்டு குண்டான தோசைகள் பண்ணுவது உண்டு. மிளகாய்ப் பொடியோடு நன்றாக இருக்கும். கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கு இதுவும். துஸ்கா கொஞ்சம் கொஞ்சம் நம்ம அடை போலத் தான். ஆனால் பொரித்து எடுக்கணும். பார்க்கலாம் ஒரு நாள் பண்ணிப் பார்க்க ஆசை. போணி ஆகணும். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாணலியில் தோசை - :)

   மாமியார் கைப்பக்குவம் குறித்த தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....