சனி, 5 ஜூன், 2021

காஃபி வித் கிட்டு-113 - வேதனை - Tagging - சுருள்வில் - நேசிப்போம் - நினைவிலிருந்து - (Dh)தூஸ்கா - தாங்கல!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உங்கள் வாழ்வானது, உங்கள் எண்ணப்படியே அமையும். அதனால் உங்கள் எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருங்கள். 


******இந்த வாரத்தின் எண்ணங்கள் - அலைபேசி வழி வரும் வேதனை


சென்ற வாரம் எழுதிய கதை மாந்தர்கள் (ப்ரதீப் குமார் Bபாலி) போன்று எத்தனை எத்தனை இழப்பு - சமீபத்தில் அவரது மகன் சொன்ன விஷயம் இன்னும் என் மனதில் வேதனையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Bபாலிஜி இறந்தது தெரியாமல் சிலர் அவரது அலைபேசிக்கு அழைப்பு விடுத்து, அவரது மனைவியோ, மகனோ எடுத்தால், Bபாலிஜியிடம் பேச வேண்டும் என்று கேட்க, ஒவ்வொரு முறையும் அவர்கள் படும் வேதனை குறித்து பேசினார்.  ஸ்விட்ச் ஆஃப் செய்து விடலாம் என்றாலும், அவரது அலுவலகத்திலிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து அழைப்புகள் வந்த வண்ணம் இருப்பதால் அப்படிச் செய்ய இயலாத சூழல்.  கணவன்/தந்தை இறந்து விட்டார் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவர்களுக்கு எத்தனை வேதனை.  வாட்ஸ் அப் நிலைத்தகவலகாக, அவரது மகன், தனது தந்தை மறைந்த செய்தியை, தந்தையின் அலைபேசி மூலமே வைக்க அப்படியான அழைப்புகள் கொஞ்சம் குறைந்திருக்கிறது.  ஆனாலும், வாட்ஸ் அப் வழி தொடர்பில் இல்லாதவர்கள் இன்னமும் அழைத்த வண்ணமே இருக்கிறார்களாம்.  வேதனை தரும் நிகழ்வுகள்…  கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இந்தச் சூழலைக் கடந்து வர வேண்டும் அவர்கள் - வேறு வழியில்லை!  


******


இந்த வாரத்தின் தொல்லை - Tagging In Facebook: 


முகநூலில் இருக்கும் ஒரு வசதி Tagging.  மார்க் தம்பி என அழைக்கப்படும் முகநூல் நிறுவனர் என்ன காரணத்திற்காக இந்த வசதியைச் சேர்த்தாரோ தெரியாது!  ஆனால் முகநூலில் உலவும் சிலர் இதனை தவறாகவே பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.  பொதுவாக நான் யாரையும், எனது பதிவுகளில் தேவையில்லாமல் Tag செய்வதில்லை.  சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையான தகவல் அளிக்க வேண்டி வந்தால் மட்டுமே அப்படிச் செய்வது வழக்கம்.  சில மாதங்களாக வாசிப்பு குறித்த சில குழுமங்களில் இணைந்திருக்கிறேன்.  புதிய மின்னூல்கள்/நூல்கள் குறித்த அறிமுகங்கள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக.  ஆனால் அதில் இருக்கும் சிலர் தங்களது பதிவுகள் ஒவ்வொன்றிற்கும் குழுவில் இருக்கும் அனைவரையும் Tag செய்து ஒரே தொந்தரவு.  எத்தனை பேரை தான் தடை செய்வது?  உங்கள் பதிவு வெளியிட்டதும் படிக்க முடிந்தால் படித்து விடுவார்கள்.   Tag செய்து தான் படிக்க வைக்க வேண்டுமா என்ன?  புரிந்து கொள்வதே இல்லை!  அப்படியான சிலரை நட்புப் பட்டியலிலிருந்தே நீக்கி விட்டேன் - வேறு வழி தெரியவில்லை. 


******


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது - போகன் சங்கர் - சுருள்வில்:


சமீபத்தில் தான் முகநூல் வழி தோழி ஒருவர் போகன் சங்கர் எழுதிய கதைகள் சிலவற்றின் சுட்டியை பகிர்ந்து கொண்டிருந்தார்.  அது வரை நான் அவரின் எழுத்தைப் படித்ததில்லை.  முகநூலில் நிறைய எழுதுகிறார்.  வலைப்பூவும் இருப்பதாக அவரது முகநூல் பக்கம் சொல்கிறது.  சுருள்வில் என்றொரு கதை - அவரது முகநூல் பக்கத்தில் படித்தேன்.  முகநூலில் நீங்கள் இருந்தால் அவர் பக்கத்தில் சென்று படித்துப் பாருங்களேன்!  த்ரில்லர் கதை - நன்றாகவே இருக்கிறது.  வேறு சில கதைகளும், இற்றைகளும் படித்தேன்.  ஸ்வாரஸ்யமாகவே எழுதுகிறார்.  எங்கள் பிளாக் ஸ்ரீராம், கேஜிஜி போன்ற சிலர் அவரை ஏற்கனவே தொடர்பவர்கள் பட்டியலில் பார்த்தேன்.  இது மற்றவர்கள் தகவலுக்காக!


******


இந்த வாரத்தின் விளம்பரம் - நம்மை நேசிப்பவரை நேசிப்போம்:


மனதைத் தொடும் ஒரு விளம்பரம். நம்மை சிலர் நேசிப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருப்போம் - தவறுதலாக!  ஆனால் அவர்கள் நம்மை நேசிப்பது தெரிந்த பிறகு தான் நம் தவறை உணர்ந்து கொள்வோம்.  அதனைச் சொல்லும் ஒரு விளம்பரம் -  பாருங்களேன்.

******


பெரியம்மாவின் நினைவுகள் - மனப்பாடச் செய்யுள்கள்: 


பெரியம்மா தனது பள்ளி நாட்களில் படித்த, அவர் அப்பாவிடம் கற்றுக் கொண்ட செய்யுள்கள், பாடல்கள் என அவரது சிறு வயது நினைவுகளை இன்றைக்கும் மறக்காமல் இருக்கிறார்.  அவ்வப்போது அந்தச் செய்யுள்களை/பாடல்களை/வாக்கியங்களைச் சொல்லிக் காண்பிப்பார்.  மூப்பு காரணமாக சில வார்த்தைகள் அப்படி இப்படி இருந்தாலும் அவை எனக்குப் புதியவை என்பதால் இணையத்தில் தேடிப் பார்ப்பேன்.  சென்ற வாரத்திலும் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார்.  அப்படி ஒரு பாடல் இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படும் சிவஸ்தலங்கள் உண்டு.  அவை எவை என்பதை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள ஒரு பாடல் உண்டு.  அந்தப் பாடலை பெரியம்மாவின் நினைவில் இருந்து சொன்னார்கள்.  அந்தப் பாடல் கீழே!


”பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை

மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்

காமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில்

தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே”


(கண்டி - திருக்கண்டியூர், கோவல் - திருக்கோவிலூர், அதிகை - திருவதிகை, பறியல் - திருப்பறியலூர், விற்குடி - திருவிற்குடி, வழுவூர் - திருவழுவூர், குறுக்கை - திருக்குறுக்கை மற்றும் கடவூர் - திருக்கடவூர்).


இந்த தீநுண்மி முடிந்த பிறகு ஒவ்வொரு இடமாகச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. பார்க்கலாம் - எல்லாம் அவன் செயல்!


******


இந்த வாரத்தின் உணவு - (Dh)தூஸ்கா (Dhuska from Jharkhand):

ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் மாநிலத்தில் காலை உணவாகச் செய்யப்படும் ஒரு உணவு இந்த (Dh)தூஸ்கா.  அரிசி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் சில பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு!  நல்லா இருக்குமான்னு சாப்பிட்டுப் பார்த்து தான் சொல்லணும்!  இப்ப தான் இந்த உணவு பத்தி அம்மணி கிட்ட சொல்லி இருக்கேன் - அவங்க மனசு வைச்சு செஞ்சு தந்தா சாப்பிட்டுப் பார்த்துட்டு சொல்றேன்!  இல்லைன்னா தில்லிக்குப் போய், தனிக்காட்டு ராஜாவா இருக்கும் போது தான் செய்து பார்க்கணும்! இணையத்தில் இந்த பதார்த்தத்தினைச் செய்யும் முறைகள் உண்டு - நீங்களும் செய்து பார்த்தால் சொல்லுங்களேன்! 


******


ராஜா காது கழுதைக் காது - ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்கறது:


காலை நேரம் மாத்திரை வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு வீட்டு வாசலில் வீட்டின் தலைவர், வந்திருந்த பெரியவரிடம்…  


“நானும் எவ்வளவு தான் பொறுத்துப் பொறுத்துப் போறது சொல்லுங்க!  இந்த தீநுண்மி நாட்கள்ல கஷ்டப்பட்டு தான் வேலைக்குப் போய், அன்னன்னிக்குக் கிடைக்கிற ஏதோ வேலையைப் பார்த்துண்டு இருக்கேன். வர காச, கொண்டு வந்து அவ கிட்ட கொடுத்துடறேன்! ஆனாலும் எதையாவது சொல்லி சொல்லி என்னை ரொம்பவே டார்ச்சர் பண்றா!  தாங்கல எனக்கு! ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்கறது சொல்லுங்க!”


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

 


42 கருத்துகள்:

 1. எப்போதும்போல் இன்றைய பதிவை மிகவும் ரசித்தேன். (வி படம் எப்போதும்போல் பார்க்கலை)

  பெரியம்மாவின் நினைவு... எழுத்தில் கொண்டுவந்தது சிறப்பு. அவர் நினைவுகளையும் பகிரலாம். காலம் எத்தனையோ விஷயங்களை காணாமல்போகச்்செய்துவிடுகிறது. இப்போல்லாம் அப்பா பேர் என்ன என்று கேட்டால் கூகுள்ல பார்க்கிறேன் என்று சொல்லும் அளவு மனப்பாடத்தைவிட தேடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

   பெரியம்மாவின் நினைவுகள் - அவ்வப்போது சேமித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றாக வெளியிடலாம்!

   அப்பா பேர் கேட்டால் கூகுள்ல பார்க்கிறேன் - ஹாஹா... இப்படியும் ஒரு நிலை வரலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. மரணச்செய்திகளை மறுபடி மறுபடி டெலிபோனில் ஒலிபரப்பவேண்டிய அவஸ்தை -  அலுவலகத்தில் மாற்று எண்ணைத் தந்து அதற்கு அழைக்கச் சொல்லலாம்.

  tagging - அப்படி வருபவற்றை நான் லட்சியம் செய்வதில்லை!

  போகன் சங்கர் ஆழமான எழுத்தாளர்.  அவர் கவிதைகளும் எழுதுவார்.  முன்னர் அவர் வலைத்தளத்துக்கு அடிக்கடி செண்டதுண்டு.  சமீபத்தில் கண்ணில் படவில்லை.  அப்பாதுரை போகனுக்கு விசிறி/நண்பர்.

  விளம்பரம் - நெகிழ்ச்சி.  அவர் தாடி எனக்குப் பிடிக்கவில்லை!!!!   இதேபோல தந்தையைப் புரிந்து கொள்ளாத ஒரு மகன் பற்றிய விளம்பரமும் முன்னர் பகிர்ந்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்று எண் தரலாம் - தந்திருக்கிறார்கள். ஆனாலும் பழைய எண்ணுக்கான தேவை இருக்கும்போது ஸ்விட்ச் ஆன் செய்து கொள்கிறார்கள் ஸ்ரீராம்.

   Tagging - லட்சியம் செய்யாமல் இருப்பதே நல்லது!

   போகன் சங்கர் குறித்து முன்னர் அறிந்ததில்லை ஸ்ரீராம்.

   விளம்பரம் உங்களுக்குப் பிடித்தாலும், அவரது தாடி பிடிக்கவில்லை - ஹாஹா... தாடி நிறைய பேருக்கு சூட் ஆவதில்லை! தந்தையைப் புரிந்து கொள்ளாத மகன் விளம்பரங்கள் - பகிர்ந்திருக்கிறேன். இப்படி சில விளம்பரங்கள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. மரணம் என்று சொல்லும்போது, துக்கம் கேட்கும் ஒவ்வொருவரிடமும் கதையை ரிபீட் பண்ணுவது கஷ்டம், பலரும் எப்படிப் போனார் என்பதையே கேட்பது அதற்குப் பதில் சொல்வது என்பது அவஸ்தைதான்.

  உணவு படம் நன்றாக இருக்கு, மைதா மாவுல (மஞ்சள் சேர்த்து) பண்ணின காய்கறி போண்டா மாதிரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொருவரிடமும் கதையை ரிப்பீட் செய்வது கடினம் தான் நெல்லைத் தமிழன்.

   காய்கறி போண்டா - ஹாஹா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. மரணச் செய்தியை அறியாமல் தொடர்பு கொள்பவர்களுக்கு சொல்லாது இருக்க முடியாது...கேட்பவர்களும்விவரம் கேட்காது அப்படீயா எனக் கடந்து செல்லும் விசயமும் இல்லை இது...தர்மசங்கடமான நிலைமைதான்...இதுவரை tag ஆப்ஸனைப் பயன்படுத்தியதே இல்லை..போகன் சங்கர் இதுவரைப் படித்ததில்லை..அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரணச் செய்தியை சொல்வது - மீண்டும் மீண்டும் சொல்வது கடினம் தான்.

   Tag Option இதுவரை பயன்படுத்தியதே இல்லையா... மகிழ்ச்சி.

   போகன் சங்கர் - உங்களுக்குப் புதியவர் ஒருவரை அறிமுகம் செய்திருப்பது அறிந்து மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. காணொளி அருமை...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. மறைந்தவர் வீட்டில், அதனை அறியாமல் வரும் அலைபேசி அழைப்புகள் பெரும் வேதனைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதி குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. விளம்பரம், செய்யுள் அருமை...

  அலைபேசி அழைப்பு மேலும் துயரம்

  முகநூலில் நம்மை tag செய்யப்படுவதையும் tag settings மூலம் மாற்றலாம்... பிடிக்கவில்லை என்றால், hide செய்து விட்டு - உங்களுக்கு தான் தெரியாது, மற்ற அனைவருக்கும் தெரியும் என்பதால், Remove tag சொடுக்க வேண்டும்... Tag வேண்டுமென்றால் Add to timeline சொடுக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரம் மற்றும் செய்யுள் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   அலைபேசி அழைப்பு துயரம் தான்.

   Tag Settings மாற்றி இருக்கிறேன். குழுக்களில் இந்த மாற்றங்கள் செயல்படுவதில்லை தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 9. பெரியம்மாவின் நினைவுத்திறன் வியக்க வைக்கிறது. அவர் மூலம் கிடைத்த பாடல் சிறப்பு.

  அலைபேசி அழைப்பு ரொம்ப வருத்தம் ஜி பாவம் அவர்கள். அது போல துக்கம் கேட்பது என்று ஒரு ஃபார்மல் இருப்பதும் பல சமயங்களில் ஒவ்வொருவருக்கும் திரும்ப திரும்ப அதைச் சொல்வது கஷ்டம்

  உணவு போண்டா மாதிரி இருக்கு பார்க்க. பொருட்களும் கிட்டத்தட்ட அப்படித்தான் சொல்கிறது...கண்டிப்பா முயற்சி செய்துவிடுகிறேன் ஜி.

  போகன் சங்கர் அப்பாதுரைஜி மூலம் தெரிந்து கொண்டேன். அவர் நண்பர்...அப்பாதுரைஜி சொல்லியிருக்கிறார் "உங்க ஊர்க்காரர்" என்றும் சொன்னார். நல்ல எழுத்தாளர் அமானுஷ்யக் கதைகள் எழுதுவதில் கில்லாடி என்றும் சொல்லியிருக்கிறார். கவிதைகள் எழுதுவதிலும் அவர் கில்லாடி என்று ஸ்ரீராம் அப்போது சொல்லியிருந்த நினைவு. அவர் எழுதிய ஒரு அமானுஷ்ய கவிதை பற்றி ஜெமோ தன் தளத்தில் எழுதியிருந்தார்.

  போகன் சங்கர் அவர்களின் எழுத்தை வாசிக்க நினைத்து தேடிய போது கிடைத்தது இது ஆனால் அவர் எழுத்து எதுவும் கிடைக்கவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் கதை த்ரில்லர் என்றால் வாசிக்கும் ஆர்வம் மேலிடுகிறது ஜி. ஆனால் நான் முகநூலில் இல்லையே...

  அனைத்தும் ரசித்தேன் ஜி

  கீதா

  விளம்பரம் படம் சூப்பர் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. அலைபேசி வழி வேதனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்னும் எங்களை. சாரின் மறைவு இன்னும் நிறைய பேரை சென்று அடையவில்லை.

  //தனது தந்தை மறைந்த செய்தியை, தந்தையின் அலைபேசி மூலமே வைக்க அப்படியான அழைப்புகள் கொஞ்சம் குறைந்திருக்கிறது. //

  நானும் அப்படி சாரின் போனில் செய்தி வைத்து இருக்கிறேன். அதை பார்த்தும் விசாரிப்பு தொடர்கிறது. சில ஆறுதல் சில என்ன இனி உங்கள் நிலை என்று விசாரிப்புக்கள் வேதனை படுத்ததான் செய்கிறது. என்ன செய்வது !

  குறுபபடம் மிக அருமை. உண்மையான நேசிப்பை சொல்கிறது.

  பெரியம்மாவின் மனப்பாட செய்யுள் அருமை.
  அவர்களிடம் நிறைய கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கும் சொல்லுங்கள்

  (Dh)தூஸ்கா (Dhuska from Jharkhand): நம்மூர் காரவடைதான் போலும் மஞ்சள் பொடியும் சீரகமும் போட்டு இருக்கிறார்கள் போலூம். காரவடை ஆதி அருமையாக செய்வார்களே!

  கடைசி செய்தி மனதை வேதனை படுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  நலமா? முதல் செய்தி மனவேதனை தருகிறது.
  புதிய எழுத்தாளரை அறிமுகம் செய்திருப்பது நன்று.

  உங்கள் பெரியம்மாவின் பாடல் நன்றாக உள்ளது. அந்தக் கால பெரியவர்களின் நினைவுகள் சொற்கள் எல்லாமே ஒரு பொக்கிஷம். அத்தனை கோவிலையும் சேர்த்தால் போல அவர் பாடியுள்ள பாடலை ரசித்தேன்.

  இந்த வாரத்தின் உணவும் நன்றாக உள்ளது. போண்டா மாதிரியான அமைப்புடன் சுவையாக இருக்குமென தோன்றுகிறது.

  அந்தப் பெரியவரிடம் பேசும் போது அவர் (அந்த வீட்டின் தலைவர்) எவ்வளவு மன வேதனை அடைந்திருக்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. நானும் குடும்பத்தினரும் நலம். நீங்களும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்.

   காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டேன். பெரியம்மாவின் நினைவிலிருந்து பகிர்ந்த பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   வீட்டின் தலைவர் மன வேதனையுடன் சொன்னது இப்போதும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. அன்பின் வெங்கட் ,
  இனிய காலை வணக்கம்.
  அனைத்துப் பகுதிகளும் அருமை.
  ராக க கா பதிவு வருத்தப் படவைக்கிறது. தினசரி வேலைக்குச் செல்ல வேண்டிய
  அவசியத்தில் இருப்பவருக்கு
  கஷ்டம் கொடுக்காமல் இருக்க மனைவி பழக வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா.

   ரா கா க கா பதிவு - வருத்தம் தொனிக்க அவர் பேசியது இன்னமும் காதில் ஒலிக்கிறது. நல்லதே நடக்கட்டும். புரிதல் இருந்தால் பிரச்சனையே இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பெரியம்மா பகிர்ந்த பாடல் மிக அருமை.
  ஒலி நாடாவில் அவர் பேச்சைப் பதிவு செய்யுங்கள்.

  அவருக்கு நல்ல சக்தி இருக்கும்போது சொல்லும் நல்ல வார்த்தைகள்
  கேட்கும்போது நினைவிருக்கும் நாம் மறந்து போயிருக்கிறேன்.
  இப்போது தந்தை குரலைப் பதியவில்லையே '
  என்று தோன்றுகிறது.
  பெரியம்மா நல்ல சுகமாக ஆரோக்கியத்துடன்
  இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரியம்மாவின் பேச்சை அலைபேசி வழி பதிவு செய்து வைத்திருக்கிறேன் வல்லிம்மா - அம்மாவின் குரலையும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. தாய் குறும்படம் சிந்திக்க வைத்தது.நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாய் குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. Tag செய்யப் பிடிக்காது. அது யார் செய்தாலும் பார்ப்பதில்லை.
  சங்கடம்:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக நானும் Tag செய்வதில்லை வல்லிம்மா. சிலர் தொடர்ந்து ஒவ்வொரு பதிவிலும் செய்கிறார்கள் - அது மிகவும் தொல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. போகன் சங்கர் முன்பு படித்திருக்கிறேன்.வாரப்
  பத்திரிக்கைகளிலும் பார்த்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போகன் சங்கர் நீங்கள் முன்னரே அறிந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி வல்லிம்மா. வாரப் பத்திரிகைகளில் நான் படித்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. அலைபேசியில் அழைப்பு வருத்தமே.
  திடீர் என்று நிகழ்ந்ததால் இது நடக்கிறது.
  பாவம் பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசி அழைப்பு - வருத்தமான விஷயம் தான் அம்மா. இதுவும் கடந்து போகும்... போக வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 18. நண்பரின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் அலைபேசி அழைப்புகள் வேதனை அளிக்கிறது.

  தங்கள் பெரியம்மாவுக்கு நல்ல நினைவாற்றல்.

  சிவஸ்தலங்களுக்குச் செல்லும் ஆசை நிறைவேறட்டுமாக.

  தூஸ்கா போண்டா போலுள்ளது.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. குறும்படங்களை நானும் தேடித்தேடிப் பார்ப்பேன். இந்தப் படத்தில் சப் டைட்டில்ஸ் மிகவும் சிறியதாக இருக்கிறது. இணைப்பு கொடுங்கள் ப்ளீஸ்.
  என் அம்மா தனக்குத் தெரிந்த செய்யுள் தனிப்பாடல்கள் இவைகளை ஏதாவது ஒரு டயரியில் எழுதி வைத்துக் கொள்ளுவாள். படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நிறைய டயரிகள் இப்படி அம்மாவிடம் இருக்கின்றன.
  இவைகள் நிஜமான பொக்கிஷங்கள். என் மாமியார் மெனுப்பு ரொட்டி என்று ஒரு டிபன் செய்வார். அதன் செய்முறையை எழுதி வைத்துக் கொள்ளாமல் போய்விட்டேன். இன்றுவரை வருத்தம் தான்.
  காபி வித் கிட்டு படிப்பதற்கு இரண்டு மூன்று கப் காபி குடிக்க வேண்டும் போலிருக்கு. அத்தனை விஷயங்கள்.
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படங்கள் தேடிப்பார்க்கும் வழக்கம் உங்களுக்கும் உண்டா? மகிழ்ச்சி ரஞ்சனிம்மா.

   டயரியில் எழுதி வைத்த தனிப்பாடல்கள்... ஆஹா... பொக்கிஷங்கள் தான்.

   மெனுப்பு ரொட்டி - ஆந்திராவில் உளுத்தம்பருப்பு ரொட்டி செய்வார்கள் என்று பெரியம்மா சொன்னார்கள் - தெலுங்கில் உளுந்துக்கு மெனுப்ப என்று பெயர் உண்டு என்றும் சொன்னார்கள். செய்முறை தெரிந்தால் கேட்டு சொல்கிறேன்.

   காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஹாஹாஹா, அதானே பார்த்தேன். ரஞ்சனி சொல்லி இருக்காங்க, மெனுப்பு/மின்னப்ப ரொட்டி பத்தி. இந்த வாரத்துப் பதிவில் நீங்க பானுமதினு சொல்லவும் என்னடாப்பானு யோசிச்சுத் தேடிக் கொண்டு வந்து கண்டு பிடிச்சேன். :))))))

   நீக்கு
  3. ஹாஹா... மாற்றி எழுதி இருப்பதை நீங்கள் மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள்! கீதாம்மா.

   பதிவிலும் மாற்றி விடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 20. விளம்பரப் படம் அது. குறும்படம் என்று எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரவாயில்லை ரஞ்சனிம்மா. இப்போது பல விளம்பரங்கள் குறும்படங்கள் போலவே இயக்குகிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....