ஞாயிறு, 13 ஜூன், 2021

கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LIVING IS VERY SIMPLE; LOVING IS ALSO SIMPLE; LAUGHING IS TOO SIMPLE; WINNING IS ALSO SIMPLE!  THEN WHAT IS DIFFICULT? BEING SIMPLE IS VERY DIFFICULT!


******




தில்லி நண்பர் சுப்ரமணியன் எனும் மணி, நீங்கள் ஏற்கனவே அறிந்தவர் தான். இந்த வலைப்பூவில், மேகங்களின் ஆலயம் மேகாலயா பயணத் தொடரை எழுதி வந்தார்.  வேறு சில பதிவுகளும் அவர் கைவண்ணத்தில் இங்கே வெளியிட்டதுண்டு.  அவரிடம் இந்த வலைப்பூவிற்காக மேலும் சில பதிவுகளை எழுதித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.  அதனை கருத்தில் கொண்டு, நண்பர் “கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் அவரது அனுபவங்களை எழுதித் தர இசைந்துள்ளார் என்பதை நேற்றே காஃபி வித் கிட்டு பதிவின் மூலம் சொல்லி இருந்தேன்.  இதோ, இந்த நாளில் அவரது எழுத்தில் தொடரின் முதல் பகுதி!  வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையைக் குறித்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்





அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!


நண்பர் வெங்கட்டின் யோசனையை ஏற்று, அவரது வலைப்பூவில், எனது வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை, சொல்லோட்டமாய் சொல்ல முற்படுகிறேன். எந்த ஒரு குறையாயினும் பொருத்தருள்க! 


தமிழ்நாட்டின் அன்றைய தென்னாற்காடு மாவட்டம் விருத்தாசலம் தாலுக்காவின் முகாசாபரூர் கிராமத்தில் அரிச்சுவடியைத் துவக்கி (அட நம்ம வெங்கட்டுக்கும் விருத்தாசலம் பக்கம் நெய்வேலி தானுங்கோ!), 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கடலூர் புனித சூசையப்பர் பள்ளி (மஞ்சக்குப்பம்); 9 மற்றும் 10-ஆம் வகுப்புகள் ராணிப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி (1975). 11-ஆம் வகுப்பு தருமபுரி அதியமான் அரசு உயர்நிலைப்பள்ளி வந்தடைந்தேன் (1976). தந்தை தமிழக அரசு செயலகப் பணியில் இருந்ததால் அவரது அலுவலக மாற்றத்திற்கேற்ப, நானும் மாறிக் கொண்டே இருந்தேன்.  மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை என்பதை எனது இந்த மாற்றங்கள் உணர்த்துகிறது தானே! 


நான் படித்த நாட்களில் 11 + 1 + 3 முறை கல்வி தான். 11-ஆம் வகுப்பு வரை பள்ளி. ஒரு வருடம் PRE UNIVERSITY COURSE எனப்படும் PUC. அதன் பின் இளநிலை கல்லூரி.  


11-ஆம் வகுப்பில் கண்களில் காவிரி பெருக்கெடுக்க ஆரம்பித்தது - அது தாங்க SQUINT EYE PROBLEM! ஒரு வழியாக படிப்பை ஒப்பேற்றினேன். ”கம்மியாய் மார்க் எடுத்தேன்”னு சொன்னா போதாதோ என நீங்கள் கேட்பது நிதர்சனமான உண்மை.  


ஒரு நாள் இரவு, கிராமத்திலிருந்த என்னை, அப்பா, “உடனடியாகக் கிளம்பு” எனக் கட்டளையிட (அந்த நாட்களில் அப்பாக்கள் கட்டளையிடுவது மட்டுமே வழக்கம். பிள்ளைகளின் எதிர்ப்பு சொல்/செயல் வடிவில் கனவிலும் எண்ண முடியாது!), இரவு 07.30 மணிக்கு, சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் இரவு உணவு உண்டு, இரண்டு கிலோ மீட்டர் நடையில் இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.  அங்கிருந்து 09.40 கடைசி இரயிலில் விருத்தாசலம் சென்று, இரவு ஒரு மணி இரயில் பிடித்து, காலை 05.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பு! நகரப் பேருந்து பிடித்து காலை 7 மணி அளவில் திருவெறும்பூரில் உள்ள உறவினர் வீடு சென்றடைந்தோம்.  


குளித்து முடித்து, நகரப் பேருந்தில் பயணித்து, இன்றைய தேசிய தொழில்நுட்ப கழகம் (National Institute of Technology), அன்றைய பிராந்திய பொறியியல் கல்லூரி (Regional Engineering College)  சென்று சேர்ந்தோம்.  என்னடா PUC என்று சொல்லிவிட்டு Engineering College என்கிறானே எனதானே எண்ணுகிறீர்கள்.  அன்றைய நாளில் நானும் அப்படித்தான் மலைத்தேன்! ஆனால் அதே வளாகத்தில் தான் நாவலர் அரசு கலைக்கல்லூரி இயங்கியது (சில மாதங்கள் கழித்து அந்த கல்லூரி கைலாசபுரம் அருகே சொந்தக் கட்டிடத்தில் இயங்கத் துவங்கியது).  அங்கே தான் என்னை PUC-இல் திணிக்க அழைத்துச் சென்றார் எனது தந்தை! (1977) 


எந்த வித முன்னறிவிப்பும் இன்றி கிளம்பியதால் பள்ளியில் அணியும் அரைக்கால் சட்டைகள் மற்றும் அரைக்கைச் சட்டைகள் மட்டுமே எடுத்துச் சென்றிருந்தேன். அரைக்கால் சட்டையுடன் சென்று PUC சேர்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, முடிந்த பிறகு ஒரு அறைக்குள் கொண்டு சேர்த்தார்கள்.  இங்கே சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.  


  1. அதுவரை மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளிகளில் தான் படித்தேன். 

  2. தமிழ் வழி பயிற்று மொழியில் தான் படித்தேன்.  

  3. 4-ஆம் வகுப்பில் ஆசிரியர் ஒரு சிறு அட்டையில் A என எழுதியிருக்க, அதைக் காண்பித்து, ”இது A” என ஆசிரியர் சொல்ல, நாங்களும் ”இது A” என்று சொல்ல, ஆசிரியர் கடுங்கோபம் கொண்டு, “உங்களுக்குச் சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது” என்று வசைபாடினார்.  இப்படித்தான் நான் ஆங்கிலம் பயின்றேன். 


மேற்சொன்ன மூன்று தயக்கங்களுடன், கையில் நோட்/புத்தகம்/ பேனா/பென்சில் என எதுவுமே இல்லாமல் நிராயுதபாணியாக வகுப்பின் உள்ளே அனுப்பப்பட, வகுப்பு முழுவதும் “ஜட்டியுடன் பையன்” எனக் கத்த, ஒரு நொடி மானம், தன்மானம் என இன்ன பிறவற்றையும் தொலைத்தேன்.  இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்து அமர்ந்தவுடன் அடுத்த பேரிடி - விரிவுரையாளர் ஆங்கிலத்தில் விரைவு இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். சத்தியமாய் இம்மி அளவு கூட புரியவில்லை. ஒரு வழியாக அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டு திருவெறும்பூர் கடைத்தெருவிற்குச் சென்று கருநீலம், பழுப்பு (காக்கி), நமது கிராம வீடுகளில் தாழ்வாரத்திற்குப் பூசுவார்களே RED OXIDE  அந்தக் கலர்களில் மூன்று முழுக்கால்சராய்கள், இரவோடு இரவாகத் தைத்து, வாழ்க்கையில் முதல் முறையாய் முழுக்கால் சராயில் உயர்ந்த மனிதனாய் கல்லூரி செல்லத் துவங்கினேன். 


அன்று மூன்று சபதங்கள் எடுத்தேன்.  அந்த மூன்று சபதங்கள் என்ன? அடுத்த பகுதியில் சொல்கிறேனே! 


தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


26 கருத்துகள்:

  1. சில அனுபவங்கள் பொதுவானவை!  எனக்கும் உண்டு.  சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது தொடர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில அனுபவங்கள் பொதுவானவை - உண்மை. தொடர் சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது - மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. 2 1/2 மணி நேரத்துக்குள் படம் எடுக்கவேண்டிய கட்டாயம் என்பதுபோல் முதல் எபிசோடில் பியுசி படிக்க கல்லூரிக்கு வந்துவிட்டாலும், தமிழ்வழிப்்படிப்பு, ஆங்கில வழிப் படிப்பு என்ற மலை மடு வித்தியாசத்தின் கஷ்டமும், கிராமத்திலிருந்து நகரத்துக்கு, அதிலும் தலைநகருக்கு மாறிய சூழலின் வித்தியாசமும் புரிகிறது.

    +2வில் முதல் முதலாக ஒரு யூனிஃபார்ம் பேன்ட் எனக்கு வாங்கிக் கொடுத்ததும், ஹாஸ்டலில் காலை 7 1/2க்கு டெரிகார்ட் வெள்ளைச் சட்டையைத் துவைத்து உடனே வெயிலில் காயப்போட்டு அணிந்துகொண்டு சென்றதும் நிழலாடுகின்றன.

    கல்லூரி படிக்கும்போது ஒரு நண்பன் வேட்டி அணிந்துகொண்டு அனேகமாக வந்ததும், முஸ்லீம் நண்பன் (மூட்டிய, அதாவது இருபுறமும் தைத்த..கைலி போன்று) வேட்டி அணிந்துவந்ததும் நினைவுக்கு வருது.

    எபிசோட் ஆரம்பிப்பதறகுள் சஸ்பென்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் எபிசோடிலேயே பியுசி! ஹாஹா. சில நினைவுகள் அதிகமாகவும், சில நினைவுகள் குறைவாகவும் - இன்னும் நினைவுகள் வர இருக்கிறது நெல்லைத் தமிழன்.

      உங்களுக்கு உங்கள் இளமைக்காலம் நினைவுக்குக் கொண்டு வர உதவியிருக்கிறது இந்தத் தொடரின் முதல் பகுதி! தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

      எபிசோட் ஆரம்பிப்பதற்குள் சஸ்பென்ஸா? ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது சு.ப. அவர்களின் நினைவலைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுப்ரமணியன் அவர்களின் நினைவலைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசிக்க காத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அனுபவத் தொடர் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சபதங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் படிக்கக் காத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இந்த அனுபவங்கள் பெரும்பாலும் நிறைய பேருக்கு நடந்திருக்கிறது என்றாலும் அதை சுவை பட சொன்ன விதம் அருமை! தலைப்பு வாசகம் மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் பலருக்கும் நடந்த விஷயங்கள் என்றாலும், நண்பர் சொன்ன விதம் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி மனோம்மா. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தங்கள் நண்பர் சுப்பிரமணியன் அவர்களின் எழுத்தாற்றலுடன் வந்த பதிவு ஆரம்பமே சுவாரஸ்யமாக செல்கிறது.அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      நண்பர் சுப்ரமணியன் அவர்களின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நண்பர் சுப்ரமணியனின் எழுத்தும் சம்பவங்களும் படிக்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் எழுத்தில் பதிவு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்பின் வெங்கட்,
    பதிவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
    திரு சுப்ரமணியத்தின் எழுத்து நடை எளிமை சுவாரஸ்யம்.

    அழகாக வயதைச் சொல்லி விட்டாரே:)

    திருச்சி ஆர் ஈ சியும் என் ஐ டி யும் ஒன்றா?

    நிறைய பசங்களின் நினைவு வருகிறது. மத்ய தரக் குடும்பங்களுக்கே உண்டான
    விசாரங்கள். அடுத்த பதிவு எப்போது வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சி ஆர்.ஈ.சி தான் தற்போது NIT என அழைக்கப்படுகிறது வல்லிம்மா.

      கடந்து வந்த பாதை - பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் இந்தத் தொடர் வெளியாகும் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. மிக அருமையாக தான் கடந்து வந்த பாதை அனுபவங்களை சொல்கிறார்.
    அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்து வந்த பாதை - அனுபவப் பகிர்வு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      அடுத்த பகுதி - புதன் (நாளை) வெளிவரும் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. சுவைபட அணுபவங்களை பகிர்கிறார் சுப்பிரமணியன் ஐய்யா.
    PUC அணுபவங்கள் எனது லொயோலா கல்லூரி அணுபவங்களை நினைவுபடுத்துகின்றன.
    எனக்கும் அவர்கள் ஆங்கிலத்தோடு ஒன்ற இரண்டு ஆண்டுகள் பிடித்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களை நினைவு கூர வைத்த பதிவு என்பது அறிந்து மகிழ்ச்சி அரவிந்த்.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. அநேகமாக அந்தக் கால கட்டங்களின் மாணவர்கள் அனைவருக்கும் இத்தகையதொரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்து வந்த பாதை தொடரின் அடுத்த பகுதிகள் - ஒவ்வொரு புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளி வரும் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....