மனச் சுரங்கத்திலிருந்து.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனச் சுரங்கத்திலிருந்து.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 அக்டோபர், 2020

அமேசான் தளத்தில் எனது 25-ஆவது மின்னூல் – என் இனிய நெய்வேலி

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

உங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். 

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஏழாங்கல் – விளையாட்டுப் பாடல்கள் - நினைவுகள்....

மனச் சுரங்கத்திலிருந்து.....

பாட்டு – நம்ம ஊர்ல எல்லாத்துக்கும் ஒரு பாட்டு இருக்கு. நிலத்தில் வேலை செய்பவர்கள், கடுமையான உழைப்பாளிகள் என பலரும் தங்களது வேலையின் கடுமையை மறக்க, உற்சாகமாக வேலை செய்ய எதையாவது பாடிக் கொண்டே இருப்பார்கள். வேலைக்கு வேலையும் நடக்கும், மனதும் சந்தோஷமாக இருக்கும்.  பணிச்சுமை தெரியாம இருக்கும். இன்றைக்கும் நமது ஊர்களில் பலர் இட்டுக்கட்டி பாட்டுகள் பாடுவதைக் கேட்கவே சுகமாக இருக்கும். 

அம்மாவுக்கு ஒரு பழக்கம் – வீட்டில் வேலை செய்தபடியே ஏதாவது சினிமா பாடலை - பழைய பாடல் முதல் புதிய பாடல் வரை எதையாவது முணுமுணுத்தபடியே இருப்பார். அவருடைய சின்ன வயதில் இப்படி சினிமா பாட்டு பாடி அப்பா/சித்தியிடம் அடி வாங்கிய அனுபவங்கள் அவருக்கு உண்டு என்று அடிக்கடி சொல்வார்.  எங்களுக்கு நினைவு தெரிந்து, அவர் வேலை செய்யும் போது நிறைய பாடுவதைக் கேட்டு இருக்கிறோம்.  இப்போது பாடுவது குறைந்து விட்டது என்றாலும் எப்போதாவது ஒன்றிரண்டு வரிகள் பாடுவதுண்டு.

எங்களுடைய விடுமுறை நாட்களில் பல்லாங்குழி, தாயம் [5 காய்], 12 காய் வைத்து விளையாடும் ஏரோப்ளேன் தாயம், ஐந்தாங்கல், ஏழாங்கல் என நிறைய விளையாட்டு அம்மா தான் சொல்லிக் கொடுத்தார்கள். இதில் பெரும்பாலனானவை பெண்கள் விளையாடும் விளையாட்டு என்றாலும் வீட்டில் நானும் விளையாடி இருக்கிறேன். ஐந்தாங்கல், ஏழாங்கல் விளையாட்டுகளுக்குத் தகுந்த பாடல்களையும் அம்மா பாடுவார்.  நானும்! சில பாடல்கள் மட்டும் எனக்கு நினைவில் இருக்கிறது.



படம்: இணையத்திலிருந்து...


சிறுவயதில் இந்த ஏழாங்கல் விளையாடுவதற்கென்றே கூழாங்கற்களை பொறுக்கி எடுத்து வைத்திருப்போம். அம்மா, நாங்க மூணு பேர், பக்கத்து வீட்டு ட்ரைவரூட்டம்மா, ஸ்ரீமதி என நிறைய பேர் இந்த விளையாட்டுகளை விளையாடுவோம். விளையாடும் முறை பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஏழு கல்களையும் கீழே போட்டு, அதில் இருந்து ஒன்றை எடுத்து, மேலே போட்டு அது கீழே வருவதற்குள், கீழே இருக்கும் கற்களை ஒன்றை எடுத்து, மேலிருந்து வருவதைப் பிடிக்க வேண்டும். மீண்டும் கல்லை மேலே போட்டு, இன்னுமொரு கல்லை எடுத்து, மேலிருந்து வருவதைப் பிடிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக ஆறு கற்களையும் எடுத்து மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும்.

பிறகு திரும்பவும் ஏழு கற்களையும் கீழே போட்டு, ஒரு கல்லை மேலே போட்டு, கீழே இருக்கும் ஆறு கற்களை, இரண்டிரண்டாக, மூன்று, மூன்றாக, நான்கு-இரண்டாக, ஐந்து-ஒன்று, ஆறு என எடுக்க வேண்டும். இந்த விளையாட்டுக்கு பாட்டும் உண்டு. மேலே போடும் கல் கீழே விழுந்தாலோ, கீழிருக்கும் கற்களை முறைப்படி எடுக்கவில்லை என்றாலோ அவுட். அடுத்தவர்கள் விளையாடுவார்கள்.  இப்படி நேரம் போவது தெரியாமல், நாள் முழுவதும் விளையாடுவார்கள்!

இந்த முறை திருவரங்கம் சென்றபோது, அம்மாவினை அந்தப் பாடல்கள் நினைவில் இருக்கிறதா எனக் கேட்க, நினைவில் இருந்தவரை சொன்னார்.  அதை மொபைலில் சேமித்து வைத்தேன்!

ஒவ்வொன்றாய் கற்கள் எடுக்கும்போது,

“அல்லல்ல, அரசல்ல, நீரோடு, நெத்திக்கொண்டு, பழம் பழுக்க, பலாச்சுளை! என்றும்,

இரண்டு இரண்டு கற்களாக எடுக்கும்போது,

“ஈரிருச்சுக்கோ, பூவைப் பறிச்சுக்கோ, பொட்டிக்குள்ள வச்சுக்கோ!  என்றும்,

மூன்று மூன்றாக எடுக்கும்போது,

“முக்கோட்டு சிக்கோட்டு பாவக்காய், முள்ளில்லாத ஏலக்காய் என்றும்,

நான்கு-இரண்டாக எடுக்கும்போது,

நாங்குத்தி [நான்கு திக்?] ராஜா மலைமேலே, நானும் தோழியும் மெத்தை மேலே என்றும்,

ஐந்து-ஒன்று என எடுக்கும்போது,

ஐவர் அரைக்கும் மஞ்சள், தெய்வம் குளிக்கும் மஞ்சள் என்றும், வரிசையாக பாடல்கள்..... 

அம்மாவைச் சொல்லச் சொல்லி அதை சேமித்து வைத்தேன். ஒலி வடிவில் கேட்கலாமா....




இப்போதெல்லாம் இந்த விளையாட்டுகளை கிராமங்களில் கூட விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. பல்லாங்குழி, தாயம், ஏழாங்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை அனைவருமே மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.  இந்த முறை அம்மாவும், எனது மகளும் சேர்ந்து பல்லாங்குழி விளையாடினார்கள். எனக்கும் பார்க்கும்போது கொஞ்சம் ஆசை வந்தது!

இன்றைக்கு குழந்தைகள், வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடுவதை விடுங்கள் வீட்டில் கூட விளையாடுவதில்லை – விளையாடினாலும் கணினியிலோ, அலைபேசியிலோ, கண்களில் கண்ணாடி அணியும் அளவுக்கு விளையாடுகிறார்கள் – Temple Run, Pokemon Go என்று விதம் விதமாய் ஆட்டம்..... பழமையான விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன என்றே சொல்ல வேண்டும்.

அம்மா காலத்து விளையாட்டும், அதற்கான பாடல்களும், அதன் நினைவுகளையும் “மனச் சுரங்கத்திலிருந்துஎன்ற பகுதியில் சேமித்து வைக்கவும், உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் நினைத்ததால் இங்கேயும் வெளியிட்டேன்....

பதிவு பற்றிய உங்கள் கருத்துகளையும், உங்களுக்கும் இப்படி பாடல்கள் தெரிந்தால் அவற்றையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

புதன், 25 நவம்பர், 2015

பெய்யென பெய்யும் மழை....

மனச்சுரங்கத்திலிருந்து....



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையும் அதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்களும் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. நெய்வேலி நகர் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதால் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. எத்தனை மழை பெய்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் அத்தனை தண்ணீரும் வடிந்து விடும்.  ஒவ்வொரு சாலையின் ஓரங்களிலும் வாய்க்கால்கள், அவை சென்று சேரும் சற்றே பெரிய வாய்க்கால், அந்த வாய்க்கால் சென்று செரும் அதைவிட பெரிய வாய்க்கால் என மழைத்தண்ணீர் முழுவதும் வடிந்து ஊரின் ஓரத்தில் இருந்த பெரிய நீர்நிலைக்குச் [சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சேமிக்கும் இடத்திற்கு] சென்று சேர்ந்து விடும்.



நான் அங்கே இருந்த 20 வருடங்களில் எத்தனையோ முறை கனத்த மழையும், புயலுடன் கூடிய மழையும் பெய்திருக்கிறது.  என்றாலும் ஒரு முறை கூட வீட்டிற்குள் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. வாய்க்கால்களில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் சற்றே அதிகமாக இருந்தாலும், வீட்டினுள் தண்ணீர் வந்ததில்லை. ஆனால் இந்த முறை சற்று அதிகமாகவே மழை பெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டதாக அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னதன் மூலமும், அவர்கள் அனுப்பிய படங்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்.



மழை நின்ற உடனேயே எங்கள் வேலையே ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது தான். வீட்டு வாசலில் நின்று கொண்டு காய்வாலில் சுழித்து ஓடும் தண்ணீரைப் பார்ப்பது பிடித்தமான விஷயம்.  கூடவே நோட்டுப் புத்தகங்களிலிருந்தோ, அல்லது வேண்டாத காகிதங்களிலோ காகிதக் கப்பல் செய்து அத்தண்ணீரில் விட்டு மிதப்பதைப் பார்த்து ரசிப்பதோ எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று. சுழன்று செல்லும் தண்ணீரில் சில நிமிடங்களுக்குள் அந்தக்கப்பல் கவிழ்ந்து விடும் என்றாலும் தொடர்ந்து கப்பல்கள் விட்டுக்கொண்டே இருப்போம்.

எங்களுக்கெல்லாம் காகிதக் கப்பல் செய்து தராத அப்பா, இன்றைக்கு தனது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் காகிதக் கப்பல் செய்து தருகிறார் – மழை இல்லாத போது கூட!

மழையில் நனைவதற்காகவே வெளியே சென்று வந்ததும் உண்டு. பள்ளியிலிருந்து வீடு வரும் போது, மழையில் நனைந்தபடியே வருவேன் – மழையில் நனைவது பிடிக்கும் என்பதால்! மழையில் நனைஞ்சு வந்திருக்கியே, கொஞ்சம் நேரம் நின்னு மழை விட்டதும் வரக்கூடாதாடா, கடங்காராஎன்று பாசத்தோடு திட்டியபடியே தனது புடவைத் தலைப்பால் தலை துவட்டி விடுவார் அம்மா....  அம்மாக்கள் இப்படித்தான்....  படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது!

நானும் மழையும்
அம்மாவும் நானும்

மழை வரும்போல
குடை எடுத்துட்டு போடா
இது அம்மாவின் குரல்...

ஒவ்வொரு முறையும்
வீட்டை விட்டு வெளியேறும் போதும்
அம்மாவின் குரல்
உள்ளிருந்து ஒலிக்கும்

மழையில் நனையத்தான்
வெளியே செல்கிறேன் என்பதனை
அம்மா அறிவாள் இருந்தும்
அவள் குரல்தான்
அன்பு

நனைந்து பின்
வீடு சேரும்போது

நான்தான் அப்பவே
சொன்னேனே
இந்த வார்த்தைகளோடு
புடவை தலைப்பில்
தலை துவட்டிவிடும்போது
இன்னும் அதிகமாகிறது
வாழ்வதற்கான ஆசைகள்

மழையில் நனைந்தபடி சைக்கிளில் பல இடங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஒரு கையில் குடை பிடித்தபடி, மற்றொரு கையில் மட்டும் பிடித்துக் கொண்டோ, அல்லது அதையும் விட்டு, கொட்டும் மழையில் சைக்கிள் செலுத்தி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் நடந்ததில்லை. ஒரு முறை தவிர! அப்பாவுக்கு கடிதம் எழுதுவது ரொம்பவும் பிடித்த விஷயம். யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார்.  தினமும் ஒரு கடிதமாவது எழுதாவிட்டால் அவருக்கு அந்த நாள் முடியாது.  அதுமட்டுமல்ல, எழுதிய உடனேயே அதை தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு தான் மறு வேலை!



அவரே சென்று தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வருவார் என்றாலும், அந்த மழை நாளில் எனை அழைத்து தபால் பெட்டியில் சேர்த்து வரச் சொன்னார். கனமழை பெய்து கொண்டிருந்தது.  வீட்டின் வெகு அருகிலே இருக்கும் சேலம் ஸ்டோர் பக்கத்தில் தான் தபால் பெட்டி. நடந்தால் இரண்டு மூன்று நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றாலும் சைக்கிளில் தான் செல்வேன். ஒரு கையில் குடை பிடித்து சென்று கொண்டிருந்தபோது அடித்த காற்றில் குடை அலைக்கழித்து கண்களை மறைக்க, எதிரே வந்த ஏதோவொரு வண்டியில் முட்டிக் கொண்டேன்! தவறு அவருடையதோ, என்னுடையதோ தெரியாத நிலை.

குடைக் கம்பி உடைந்து போனது மட்டுமல்லாது, எனது வலது மோதிரவிரலில் நன்கு கிழித்தும் விட்டது போலும்..... கட்டியிருந்த நாலு முழ வேட்டி முழுவதும் ரத்தம். மழையில் நனைந்து கொண்டிருந்தாலும், ரத்தம் நிற்காது கொட்டிக் கொண்டிருக்க, அப்படியே வீட்டுக்கு வந்தேன். ரத்தம் நிற்கவில்லை என்பதால் நெய்வேலியின் மருத்துவமனைக்குச் சென்றால், ஆழமாக வெட்டுப்பட்டிருப்பதால் தையல் போட வேண்டும் என்று சொல்லி Local Anesthesia  மட்டும் கொடுத்து நான்கு தையல் போட்டார்கள்.... ஒவ்வொரு முறை தையல் போடும் போதும் வலித்தது! இன்றைக்கும் அந்த விரலில் தையலின் அடையாளம் உண்டு!

மழையில் நனைவது பிடிக்கும், மழை பற்றிய கவிதைகள் படிப்பது பிடிக்கும், என மழை பற்றிய நினைவுகள் இருந்தாலும், சமீபத்திய மழையில் மக்கள் படும் அவதிகளை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இயற்கை நமக்கு நன்மைகள் செய்தாலும், ஏரிகளையும், குளங்களையும், அதற்கு மழை நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து வீடுகளையும், அலுவலங்களையும் கட்டி, ஊர் முழுவதும் குப்பையாக்கி, இப்போது தொடர்ந்து பெய்யும் மழையை வெறுக்கிறோம். 
மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் நம் கிராமங்களில். அப்படி கல்யாணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.....  மழை பெய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதால் அக்கழுதைகளைத் தேடிக் கண்டுபிடித்து விவாகரத்து செய்து வைக்க வேண்டுமென்று! [முகப்புத்தகத்தில் வேடிக்கையாக இப்படி எழுதி இருந்தார் மூவார் முத்து [ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி].

இனிமேலாவது விளைநிலங்களையும் ஆற்றுப்படுகைகளையும் வீடுகளாகக் கட்டுவதைத் தவிர்ப்போமா..... தவிர்த்தால் நல்லது. தவறெல்லாம் நம் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கையில், மழையையும், இயற்கையையும் பழித்து என்ன பயன்!

மழையினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் பிரச்சனைகள் விலகட்டும்....

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: படங்கள் நெய்வேலியிலிருந்து....  பகிர்ந்து கொண்ட கல்லூரித் தோழிக்கு நன்றி.


புதன், 19 ஆகஸ்ட், 2015

காக்கா முட்டை....


மனச்சுரங்கத்திலிருந்து....


படம்: இணையத்திலிருந்து....

நெய்வேலி நகரத்தில் இருந்த போது கிடைத்த அனுபவங்களை “மனச்சுரங்கத்திலிருந்துஎன்ற தலைப்பில் பகிர்ந்து கொள்வது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். இன்றைக்கு அந்த வரிசையில் ஒரு பகிர்வு காக்கா முட்டை!  சமீபத்தில் வெளி வந்த காக்கா முட்டை படமும் [சனிக்கிழமை சுதந்திர தினத்தினை முன்னிட்டு விஜய் டிவியில் காண்பிக்கும்போது கூட பாதி திரைப்படம் தான் பார்க்க முடிந்தது! நடுவில் மழை பெய்ததால் TATASKY காலை வாரிவிட்டது! தில்லி வந்த பிறகு திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதே அரிதாகிவிட்டது!] நண்பர் துளசிதரன்/கீதா ஜி! அவர்களின் தளத்தில் எழுதிய காக்கா முட்டை பதிவும் இப்பதிவிற்கு வித்திட்டன!

வீட்டைச் சுற்றி பல மரங்கள் என்பதால் பறவைகளின் கூடுகளும் இங்கே அதிகம்.  சிகப்பு எறும்பு [கட்டை எறும்பு அளவிற்கு இருக்கும்] – பொதுவாக மாமரத்தின் கிளைகளில் இருக்கும் சில இலைகளைச் சேர்த்து கூடாகக் கட்டும்.  தப்பித்தவறி அந்த கூடு இருக்கும் கிளைகளில் தெரியாமல் சென்றுவிட்டால் கால்களை குதறி விடும். கடிக்க ஆரம்பித்தால் அவை நம் தோலை விட்டு விலகாது – பிய்த்து தான் எடுக்க வேண்டியிருக்கும்! அப்படி இருக்கிற கூடுகளை, அவற்றை கட்டிய சிகப்பு எறும்புகளிடமிருந்து தப்பித்து சற்றே அருகில் சென்று பார்த்ததுண்டு.  மாங்காய் பறிக்கும் போது இந்த வேலையும் நடக்கும்!


படம்: இணையத்திலிருந்து....

கொஞ்சம் தப்பினாலும் எறும்புகள் கூட்டமாக உடலில் கதகளி ஆடிவிடும் என்று தெரிந்தாலும் இப்படி அருகில் சென்று பார்ப்பதில் எந்த தயக்கமும் பயமுமோ அப்போது இருந்ததில்லை! இப்போது நினைத்தாலே மனதுக்குள் நடுக்கம்.  சில சமயங்களில் கொத்தாக சிகப்பு எறும்புகள் கைகளில்/கால்களின் ஒட்டிக்கொள்ள நான் கதகளி ஆடியதும் நடந்திருக்கிறது!

அதே போல, புளிய மரத்தில் வருடா வருடம் புளி காய்க்கும் நாட்களில் மரத்திலேறி கிளைகளை உலுக்குவது என்னுடைய வேலை தான். அது தான் பெரிய வேலை என அதிகம் அலட்டிக்கொண்டதுண்டு! அதன் பிறகு இருக்கும் நச்சு வேலைகள் அனைத்தையும் [காய வைத்து, ஓடுடைத்து, அதிலிருந்து விதைகளையும்,  நார்களையும் நீக்கி மீண்டும் காய வைத்து] செய்யும் அம்மாவும் நான் செய்யும் வேலை தான் அதிக கஷ்டமானது, உடம்பு சூடாயிடும் பாவம் என்று சொல்லி அங்கலாய்ப்பார்.  புளி உலுக்க மட்டுமே நான் மரம் ஏறுவதில்லை. இன்னும் சில ஆசைகளும் அதற்குக் காரணம்!

வருடா வரும் புளிய மரத்தில் ஏதேனும் ஒரு கிளையில் தேன்கூடு கட்டிவிடும். அந்த கிளைப்பக்கம் செல்வது ஆபத்து என்றாலும், தேன்கூட்டை அருகிலிருந்து பார்க்கும் ஆசையினால் அந்த கிளை நோக்கிச் செல்லும் போது அம்மா கீழிருந்து சத்தம் போடுவார். சில சமயங்களில் தேன் எடுக்க முயற்சித்ததும் உண்டு!  அதிலிருக்கும் ஆபத்துகள் தெரியாத வயது அது! ஒரே ஒரு முறை கொட்டும் வாங்கியதுண்டு! அதை விட அதிகம் நினைவிலிருப்பது தென்னை மரத்திலிருக்கும் வண்டால் பட்ட அவஸ்தை!

பள்ளிக்கு குறுக்கு வழிகளில் – பலரின் வீட்டுத் தோட்டங்கள் வழியே செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தென்னை மரத்தின் வழியே செல்ல, அங்கே கூடு கட்டிக்கொண்டிருந்த பெரிய வண்டு ஒன்று பறந்து, போகிற போக்கில் என் உதட்டில் ஒரு உம்மா கொடுத்து விட்டுப் போனது.  கொடுத்தது தெரியாத அளவிற்கு கொடுத்த உம்மா, சற்று நேரத்தில் அதன் வேலையைக் காண்பிக்க, என் உதடு கழுத்து வரை வீங்கிப் போனது! நாலு நாளுக்கு பள்ளிக்கு போகவில்லை [ஹையா ஜாலி!] என்பது தேவையில்லாத செய்தி!


படம்: இணையத்திலிருந்து....

சரி தலைப்புக்கு வருவோம்!  புளிய மரத்தின் கிளைகளில் காக்காய்களும் கூடு கட்டி வைத்திருக்கும்.  மரத்தில் ஏறியவுடனேயே அங்கும் இங்கும் பறந்து சத்தமிட்டபடியே இருக்கும். அதற்கு அதன் பயம்...  எங்கே கூட்டைக் கலைத்து விடுவோமோ, அதன் முட்டைகளை அழித்து விடுவோமோ என பயந்து கூச்சல் போட்டபடி இருக்க, நானோ, அந்தக் கிளையில் முன்னேறிக் கொண்டிருப்பேன்.  சில நாட்கள் உணவு தேடி காகங்கள் போயிருக்க, நான் கூட்டின் வெகு அருகில் சென்று அதில் இருந்த காக்காய் முட்டைகளை கையில் எடுத்துப் பார்த்து, மீண்டும் வைத்ததுண்டு! ஒரு சமயம் அப்படி வைக்கும்போது கை தவறி கீழே விழுந்து உடைந்ததும் உண்டு!

இரண்டொரு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் அரச மரத்தில் காக்காய் கூடு கட்டி இருக்கும் போல! அதைக் கட்டிய காகம் நான் அவ்விடத்தைக் கடக்கும் போது, தலையில் தட்டும் அளவு கிட்டே வர முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக குனிந்து கொண்டேன். நல்ல வேளை தலையில் அதன் அலகால் கொத்தாமல் போயிற்றே!

ஒரு வேளை முன் ஜென்ம பகை இருக்குமோ அதற்கு! என்னைப் பத்தி பழைய காக்கா போட்டுக் கொடுத்திருக்குமோ! இல்லை இது அதே காக்கவோட அடுத்த ஜன்மமோ! என என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரத்தின் அருகே இருக்கும் வீட்டில் வசிக்கும் நண்பர் சொன்னார் – இரண்டு மூணு நாளா யாரும் இந்தப் பக்கம் வர முடியல! எல்லார் தலையிலையும் இறக்கைகளாலோ, அல்லது கால்களாலோ தட்டி விடுகிறது!”.

நல்ல வேளை அன்று அதனிடமிருந்து தப்பிய நான் அதற்கடுத்த நாள்களில் அலுவலகம் செல்லும் போது வேறு பாதையை பயன்படுத்தினேன்! எதுக்கு அந்த காக்கா கிட்ட மாட்டிக்கணும் அப்படிங்கற எண்ணம் தான்!

மனச்சுரங்கத்திலிருந்து வேறு சில நினைவுகளோடு பிறிதொரு சமயத்தில் சந்திக்கும் வரை....

நட்புடன்



திங்கள், 20 ஜூலை, 2015

கதவைத் தட்டிய பேய்....



மனச் சுரங்கத்திலிருந்து...

பேய்க்கதைகள் கேட்பது ரொம்பவே ஸ்வாரஸ்யமான விஷயம் தான். நெய்வேலியில் இருந்த வரை இப்படி நிறைய பேய்க்கதைகள் கேட்டதுண்டு. அதில் ஒன்று எனது பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறேன். படிக்காதவர்களின் வசதிக்காக இங்கேயும் அதன் சுட்டி!


சரி.. சரி... ஊஞ்சலாடிய பேய் கதையை படிச்சீங்களா? இன்றைய கதைக்கு போகலாம் வாங்க!

கதைக்கு போறதுக்கு முன்னாடி நெய்வேலி வீடு பற்றி கொஞ்சம் சொல்லிடறேன். கதை சொல்லும்போது அது உதவும். திருச்சி சாலை [இப்போதைய சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் சாலை]யில் தான் எங்கள் வீடு. வாசலில் ஒரு பக்கம் கல்யாணமுருங்கை மரம், மற்றொரு பக்கத்தில் புளியமரம். 20-30 அடி நடந்தால் படிக்கட்டு. மூன்று படிக்கட்டுகள் ஏறினால், ஒரு சின்ன தாழ்வாரம் – அதில் பக்கவாட்டில் ஒரு திண்ணை. திறந்தே இருக்கும் கதவுகள் வழியே நுழைந்தால் வரவேற்பறை/ஹால். இடது பக்கத்தில் ஒரு படுக்கையறை. 

வரவேற்பறை/ஹால் தாண்டியதும், அடுப்பறை. அடுப்பறை/ஹால் வழியே வெளியே செல்ல இரண்டு கதவுகள். அவற்றின் வழி சென்றால் முற்றம், குளியலறை/கழிப்பறை. முற்றத்தில் ஒரு கதவு – அதன் வழியே தோட்டத்திற்குச் செல்ல முடியும்.  ஆக வீட்டிற்கு இரண்டு கதவுகள் – முன் வாயில் ஒன்று, தோட்ட வாயில் ஒன்று! ஒவ்வொரு அறையிலும் ஜன்னல்கள். பேய் கதைக்கு வரும்போது இந்த விளக்கத்திற்கான அவசியம் தெரியும்.

பெரும்பாலான இரவுகளில் வீட்டினுள் தான் படுக்கை. விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும் நாட்களில் நாங்கள் வெளியே திண்ணையிலும்/தாழ்வாரத்திலும் படுத்துக் கொள்வதுண்டு.  அப்படி ஒரு நாள், வெளியே படுத்துக் கொண்டிருந்தபோது நடந்த கதை தான் இப்போது கேட்கப் போறோம். இந்தக் கதை நடந்த போது எனக்கு ரொம்ப சின்ன வயசு! அதுனால இது நடந்தது எல்லாம் எனக்கு நினைவில்லை என்றாலும் அவ்வப்போது அம்மா/பெரியம்மா ஆகியோர் சொன்னது நினைவில் இருக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல வீட்டு வாசலில் இருந்த புளியமரத்திலிருந்தோ, வேறு மரத்திலிருந்தோ ஒரு பேய் இறங்கி வந்திருக்கிறது. நானோ நல்ல தூக்கத்தில். பக்கத்தில் பெரியம்மா படுத்திருக்க, அவர்களுக்கு ஏதோ சலசலப்பு கேட்டு இருக்கிறது. பார்த்தால் மங்கலாக ஒரு உருவம் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் நின்று கொண்டிருப்பது போல தெரிந்திருக்கிறது.  கூடவே ஒரு சத்தமும்.....

 படம்: இணையத்திலிருந்து.....

“டக்...டக்...டக்......  கதவைத் தட்டும் ஓசை......

உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.  அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்திருப்பார்கள் போலும்!

மீண்டும்  “டக்...டக்...டக்...... 

கூடவே ஒரு குரலும்..... “மல்லிகாம்மா.. கதவைத் திற.....   மல்லிகாம்மா.... கதவைத் திற.....  உள்ளே இருக்கும் அம்மாவிற்குக் குரல் கேட்டு “யாரது எனக் கேட்க, இங்கே நிசப்தம்...

மீண்டும் சிறிது நேரம் கழித்து “மல்லிகாம்மா.. கதவைத் திற.....   மல்லிகாம்மா.... கதவைத் திற.....  என்ற குரல் கேட்க, பெரியம்மா சத்தமாக அம்மாவிடம் கதவைத் திறக்காதே என்று சொன்னதோடு, தாழ்வாரத்தில் கிடந்த ஒரு துடப்பம் எடுத்து தரையில் அடி அடி என அடிக்க, குரலும் உருவமும் நகர்ந்து விட்டதாம்.

வாசல் கதவை விட்டு அகன்ற பேய் அடுத்ததாக ஜன்னல் வழியாக வந்துவிடுமோ என அவசரம் அவசரமாக எல்லா ஜன்னல் கதவுகளையும் மூடிவிட [பொதுவாகவே நெய்வேலியில் எல்லா ஜன்னல்களும் காற்றோட்டத்திற்காக, திறந்தே தான் இருக்கும்], ஜன்னல்களிலும் “டக்....டக்....டக்....  ஓசை. அதற்கும் உள்ளே இருந்து பதில் வராது போக, தோட்டக்கதவிற்கு தாவியது கதவைத் தட்டிய பேய்.

தோட்டக் கதவில் தட்டியும் மீண்டும் மீண்டும் குரல் கேட்டுக்கொண்டே இருக்க, வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து விட்டார்களாம். தொடர்ந்து ஒரு குரல் மட்டும் வந்து கொண்டு இருக்க, உள்ளே இருந்து பேயோடு பேச்சு வார்த்தை நடத்த முயற்சி நடந்திருக்கிறது! இவர்கள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை! சற்றே நிசப்தமாக இருந்தால், மீண்டும் கதவைத் தட்டும் ஓசையும், “மல்லிகாம்மா.... கதவைத் திற.....குரலும் கேட்க, அனைவரும் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.... இப்போது படிக்கும் போது சிரிப்பாக இருந்தாலும், அந்த நேரத்தில் நிச்சயம் பயமாக இருந்திருக்கும்! வீட்டில் உள்ள எல்லா விளக்குகளையும் போட்டு விட்டாலும், கதவை மட்டும் திறக்கவே இல்லையாம்.

அதற்குள் வாசலில் இருந்த பெரியம்மாவிற்கு அப்படி ஒரு வேகம் வந்து வாயில் கதவுக்கருகில் வந்து நின்றுகொண்டு “இனிமே இங்கே வருவியா, வருவியா.... ஓடிப்போயிடு... இல்லைன்னா நடக்கறதே வேற....என்று மிரட்டியபடி துடப்பத்தினால் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். பேயை அவர் தான் அடித்து விரட்டிவிட்டதாகச் சொல்வார்கள். இத்தனை களேபரங்களில் நானும் எழுந்து விட, கண்ணில் கண்டது பெரியம்மா துடப்பத்தினால் அடித்துக் கொண்டிருந்ததை போலும்!

பயத்தில் நான் உளர ஆரம்பிக்க, வீட்டில் ஒரே களேபரமும் குழப்பமும்.  எங்கள் வீட்டில் கேட்ட சப்தங்களினால் அடுத்த வீட்டில் இருந்த ட்ரைவரூட்டம்மா குடும்பத்தினரும் எழுந்து விட அன்று இரவு முழுவதும் விளக்குகளை போட்டுக்கொண்டே தூங்காமல் கழித்திருக்கிறார்கள்.  கதவைத் தட்டிய பேயை பெரியம்மா ஓட்டி விட்டார்கள் என்று சொன்னாலும், எனக்கு தான் அந்த வயதில் அதிர்ச்சி விலகவில்லை போலும். அடுத்த நாள் காலையில் எனக்கு பயங்கர ஜூரம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் ஜுரம் இறங்கவே இல்லை.

பூஜாரிகளிடம் மந்திரித்துப் பார்த்தும் ஜுரம் அவ்வப்போது வந்துகொண்டே இருக்க, பெரியம்மாவும், பெரியப்பாவும் அவர்கள் ஊரான விஜயவாடா செல்லும்போது என்னையும் அழைத்துக் கொண்டு போனார்களாம். அங்கே என்னை ஒரு தர்காவிற்கு அழைத்துச் சென்று மந்திரித்து தாயத்து கூட வாங்கிக் கட்டி விட்டிருக்கிறார்கள். சில நாட்கள் விஜயவாடாவில் தங்கியிருந்து பிறகுதான் நெய்வேலி அழைத்து வந்தார்களாம்.

நான் வளர்ந்த பிறகும், எனக்கு என்னமோ ஒவ்வொரு முறை பெரியம்மா/பெரியப்பா, அல்லது அம்மா அன்றைக்கு நடந்ததைச் சொல்லும் போதும் அந்தப் பேய் மீண்டும் வந்து கதவைத் தட்டுமோ என்று தோன்றும்! எனக்கு நினைவு தெரிந்து அந்தப் பேய் கதவைத் தட்டியதில்லை.  “அடப் போங்கய்யா.... எவ்வளவு தட்டினாலும், மல்லிகாம்மாவுக்கு காது கேட்கல போல...என்று அந்தப் பேய் அங்கிருந்து டேராவை கிளப்பி விட்டது என நினைக்கிறேன்.

இந்தப் புளிய மரம் இல்லாட்டி வேற ஒரு புளியமரம்என்று புறப்பட்டு விட்டதோ என்னமோ....  பேய்க்கே வெளிச்சம்!

எதுக்கும் இன்னிக்கு ராத்திரி தூங்கும்போது கதவை நல்லா மூடிட்டு தூங்கணும்!நு நான் முடிவு பண்ணிட்டேன்.... நீங்க!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 19 நவம்பர், 2014

கதையல்ல நிஜம்




தானம்



வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில இருக்கைகளையும் போட்டு இருந்தனர்.  ஊரில் உள்ள பல பேர் வருவதும் போவதுமாக இருந்தனர்.  தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வந்தவர்க்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு. 

சிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்.  வாங்கிக்கொண்டு சென்ற அனைவரும் அவரை வாயார வாழ்த்திக்கொண்டு இருந்தார்.  ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்னது மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது. 

அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள்.  ஒரு மாதமாகவே படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம்.  கடந்த இரு நாட்களாக பேச்சு இல்லை, உடம்பில் அசைவும் இல்லை.  உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.  மனது மட்டும் முழித்துக்கொண்டு இருக்கிறது. 

பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது.  எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ தெரியல?  வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல.

இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு.  காரியமெல்லாம் தடபுடலா செய்யணும். கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும்.  என்ன பண்றதுன்னு தெரியல.  ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்! என்று சொல்லிக்கொண்டு இருப்பது காதில் விழுந்து தொல்லைப்படுத்தியது. 

கிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து போயிற்று.  கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய பொறுப்பில் அமர்த்தி நல்ல நிலையில் வைக்க, தான் இழந்தது எத்தனை எத்தனை. 

வேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம் செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம் செய்ய வேலையாளை அனுப்புகிறான்.  வேணு, நான் செத்த பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன? அவை என்னுடைய தியாகங்களுக்கு ஈடாகுமா என்று கடைசியாக சொல்லிவிட்டு தலைசாய்த்தாள்.

கன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர்இந்த தானங்களை விட நீ உனது தாயார் முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம் என்று சொல்ல துக்கம் பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.


டிஸ்கி:  நெய்வேலி நகரில் இருந்தபோது நேரில் கண்ட ஒரு நிகழ்வு.  கதை என்ற பெயரில் எப்போதோ எழுதி வைத்தது.  இது கதை மாதிரி இல்லாததால் வெளியிடாமல் விட்டுவிட்டேன்! 

மீண்டும் சந்திப்போம்..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

இன்று வலைச்சரத்தில்: [DH]தண்டவத் பரிக்ரமா – படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!