எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 25, 2015

பெய்யென பெய்யும் மழை....

மனச்சுரங்கத்திலிருந்து....தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையும் அதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்களும் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. நெய்வேலி நகர் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதால் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. எத்தனை மழை பெய்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் அத்தனை தண்ணீரும் வடிந்து விடும்.  ஒவ்வொரு சாலையின் ஓரங்களிலும் வாய்க்கால்கள், அவை சென்று சேரும் சற்றே பெரிய வாய்க்கால், அந்த வாய்க்கால் சென்று செரும் அதைவிட பெரிய வாய்க்கால் என மழைத்தண்ணீர் முழுவதும் வடிந்து ஊரின் ஓரத்தில் இருந்த பெரிய நீர்நிலைக்குச் [சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சேமிக்கும் இடத்திற்கு] சென்று சேர்ந்து விடும்.நான் அங்கே இருந்த 20 வருடங்களில் எத்தனையோ முறை கனத்த மழையும், புயலுடன் கூடிய மழையும் பெய்திருக்கிறது.  என்றாலும் ஒரு முறை கூட வீட்டிற்குள் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. வாய்க்கால்களில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் சற்றே அதிகமாக இருந்தாலும், வீட்டினுள் தண்ணீர் வந்ததில்லை. ஆனால் இந்த முறை சற்று அதிகமாகவே மழை பெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டதாக அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னதன் மூலமும், அவர்கள் அனுப்பிய படங்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்.மழை நின்ற உடனேயே எங்கள் வேலையே ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது தான். வீட்டு வாசலில் நின்று கொண்டு காய்வாலில் சுழித்து ஓடும் தண்ணீரைப் பார்ப்பது பிடித்தமான விஷயம்.  கூடவே நோட்டுப் புத்தகங்களிலிருந்தோ, அல்லது வேண்டாத காகிதங்களிலோ காகிதக் கப்பல் செய்து அத்தண்ணீரில் விட்டு மிதப்பதைப் பார்த்து ரசிப்பதோ எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று. சுழன்று செல்லும் தண்ணீரில் சில நிமிடங்களுக்குள் அந்தக்கப்பல் கவிழ்ந்து விடும் என்றாலும் தொடர்ந்து கப்பல்கள் விட்டுக்கொண்டே இருப்போம்.

எங்களுக்கெல்லாம் காகிதக் கப்பல் செய்து தராத அப்பா, இன்றைக்கு தனது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் காகிதக் கப்பல் செய்து தருகிறார் – மழை இல்லாத போது கூட!

மழையில் நனைவதற்காகவே வெளியே சென்று வந்ததும் உண்டு. பள்ளியிலிருந்து வீடு வரும் போது, மழையில் நனைந்தபடியே வருவேன் – மழையில் நனைவது பிடிக்கும் என்பதால்! மழையில் நனைஞ்சு வந்திருக்கியே, கொஞ்சம் நேரம் நின்னு மழை விட்டதும் வரக்கூடாதாடா, கடங்காராஎன்று பாசத்தோடு திட்டியபடியே தனது புடவைத் தலைப்பால் தலை துவட்டி விடுவார் அம்மா....  அம்மாக்கள் இப்படித்தான்....  படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது!

நானும் மழையும்
அம்மாவும் நானும்

மழை வரும்போல
குடை எடுத்துட்டு போடா
இது அம்மாவின் குரல்...

ஒவ்வொரு முறையும்
வீட்டை விட்டு வெளியேறும் போதும்
அம்மாவின் குரல்
உள்ளிருந்து ஒலிக்கும்

மழையில் நனையத்தான்
வெளியே செல்கிறேன் என்பதனை
அம்மா அறிவாள் இருந்தும்
அவள் குரல்தான்
அன்பு

நனைந்து பின்
வீடு சேரும்போது

நான்தான் அப்பவே
சொன்னேனே
இந்த வார்த்தைகளோடு
புடவை தலைப்பில்
தலை துவட்டிவிடும்போது
இன்னும் அதிகமாகிறது
வாழ்வதற்கான ஆசைகள்

மழையில் நனைந்தபடி சைக்கிளில் பல இடங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஒரு கையில் குடை பிடித்தபடி, மற்றொரு கையில் மட்டும் பிடித்துக் கொண்டோ, அல்லது அதையும் விட்டு, கொட்டும் மழையில் சைக்கிள் செலுத்தி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் நடந்ததில்லை. ஒரு முறை தவிர! அப்பாவுக்கு கடிதம் எழுதுவது ரொம்பவும் பிடித்த விஷயம். யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார்.  தினமும் ஒரு கடிதமாவது எழுதாவிட்டால் அவருக்கு அந்த நாள் முடியாது.  அதுமட்டுமல்ல, எழுதிய உடனேயே அதை தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு தான் மறு வேலை!அவரே சென்று தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வருவார் என்றாலும், அந்த மழை நாளில் எனை அழைத்து தபால் பெட்டியில் சேர்த்து வரச் சொன்னார். கனமழை பெய்து கொண்டிருந்தது.  வீட்டின் வெகு அருகிலே இருக்கும் சேலம் ஸ்டோர் பக்கத்தில் தான் தபால் பெட்டி. நடந்தால் இரண்டு மூன்று நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றாலும் சைக்கிளில் தான் செல்வேன். ஒரு கையில் குடை பிடித்து சென்று கொண்டிருந்தபோது அடித்த காற்றில் குடை அலைக்கழித்து கண்களை மறைக்க, எதிரே வந்த ஏதோவொரு வண்டியில் முட்டிக் கொண்டேன்! தவறு அவருடையதோ, என்னுடையதோ தெரியாத நிலை.

குடைக் கம்பி உடைந்து போனது மட்டுமல்லாது, எனது வலது மோதிரவிரலில் நன்கு கிழித்தும் விட்டது போலும்..... கட்டியிருந்த நாலு முழ வேட்டி முழுவதும் ரத்தம். மழையில் நனைந்து கொண்டிருந்தாலும், ரத்தம் நிற்காது கொட்டிக் கொண்டிருக்க, அப்படியே வீட்டுக்கு வந்தேன். ரத்தம் நிற்கவில்லை என்பதால் நெய்வேலியின் மருத்துவமனைக்குச் சென்றால், ஆழமாக வெட்டுப்பட்டிருப்பதால் தையல் போட வேண்டும் என்று சொல்லி Local Anesthesia  மட்டும் கொடுத்து நான்கு தையல் போட்டார்கள்.... ஒவ்வொரு முறை தையல் போடும் போதும் வலித்தது! இன்றைக்கும் அந்த விரலில் தையலின் அடையாளம் உண்டு!

மழையில் நனைவது பிடிக்கும், மழை பற்றிய கவிதைகள் படிப்பது பிடிக்கும், என மழை பற்றிய நினைவுகள் இருந்தாலும், சமீபத்திய மழையில் மக்கள் படும் அவதிகளை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இயற்கை நமக்கு நன்மைகள் செய்தாலும், ஏரிகளையும், குளங்களையும், அதற்கு மழை நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து வீடுகளையும், அலுவலங்களையும் கட்டி, ஊர் முழுவதும் குப்பையாக்கி, இப்போது தொடர்ந்து பெய்யும் மழையை வெறுக்கிறோம். 
மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் நம் கிராமங்களில். அப்படி கல்யாணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.....  மழை பெய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதால் அக்கழுதைகளைத் தேடிக் கண்டுபிடித்து விவாகரத்து செய்து வைக்க வேண்டுமென்று! [முகப்புத்தகத்தில் வேடிக்கையாக இப்படி எழுதி இருந்தார் மூவார் முத்து [ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி].

இனிமேலாவது விளைநிலங்களையும் ஆற்றுப்படுகைகளையும் வீடுகளாகக் கட்டுவதைத் தவிர்ப்போமா..... தவிர்த்தால் நல்லது. தவறெல்லாம் நம் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கையில், மழையையும், இயற்கையையும் பழித்து என்ன பயன்!

மழையினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் பிரச்சனைகள் விலகட்டும்....

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: படங்கள் நெய்வேலியிலிருந்து....  பகிர்ந்து கொண்ட கல்லூரித் தோழிக்கு நன்றி.


56 comments:

 1. இந்த அளவுக்கு கடுமையான மழையை எதிர்பார்காததன் விளைவு இது அரசுகளின் கடமைகளையும் பொறுப்புகளையும் மட்டும் குறைகூறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் . நமது பொறுப்பின்மையும் இதற்கு முக்கியக் காரணம் .அரசுகளும் ஓட்டுக்காக விதிமுறைகளை கட்டாயப் படுத்துவதில்லை . நெய்வேலி எனக்கு பிடித்த மான நகர் , சமீபத்தில் நெய்வேலி சென்றிந்தபோது முந்தைய அழகு குறைந்து விட்டதாக தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நெய்வேலியின் அழகு.... குறைந்து இருக்கலாம்... நான் சென்று நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் மற்ற இடங்களை விட மேல் தான். விரைவில் சரி செய்து விடுவார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 2. >>> தவறெல்லாம் நம் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கையில், மழையையும், இயற்கையையும் பழித்து என்ன பயன்!..<<<

  உண்மை.. மக்கள் உணரவேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....

   Delete
 3. நானும் கழுதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. இயற்கை அதன் வேலையை எப்போதும் போல் செய்துக் கொண்டிருக்கிறது, நாம் தான் அதை கெடுத்து அவதி பட்டு பழியை இயற்கையின் மேல் போட்டு விடுகிறோம்.

  மழை பற்றிய நினைவு பகிர்வு ! நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா ராஜ்.

   Delete
 5. மழை அனுபவங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 6. மழை பற்றிய அனுபவங்களும் அம்மா பற்றிய கவிதையும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 7. இந்த மழை நிறைய எழுத வைத்திருக்கிறது..அதிலும் உங்கள் நினைவுகளை அதிகமாகவே...நீங்கள் நினைத்த கவிதையும் அருமை....இன்னும் தோண்டுங்கள் மனச்சுரங்கத்தை......எதிர்பார்க்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. மனச்சுரங்கத்திலிருந்து எனும் தலைப்பில் இது 27-வத் பதிவு செல்வா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 8. டிவிக்களில் மைக் பிடித்து, தனது குறைகளைப் பட்டியலிடும் பொதுஜனம், தன்னுடைய குறைதீர உடனடியாக அங்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள் முதல் அடிப்படை அரசு ஊழியர் வரை வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

  உங்கள் அப்பா போலத்தான் என் அப்பாவும். தினசரி கடித மன்னன்.

  நானும் மழையில் நனைந்து சைக்கிள் விடுவதில் விருப்பமுள்ளவன்! ஆனால் வேஷ்டி எல்லாம் கட்ட மாட்டேன். சரிவராது!! ஒன்லி லுங்கி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அப்பாவும் கடித மன்னன்..... :) இப்போது தான் கடிதம் எழுதுவதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார். அவ்வப்போது தான் கடிதம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. இயற்கையை நொந்து என்ன செய்வது சகோ,,,,,
  தங்கள் பகிர்வு அருமை,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 10. சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

  இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. மழையின் சுகம் தங்கள் பதிவிலும்
  மிக மிக அற்புதமாக இரசித்து எழுதி இருக்கிறீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. சுவாரஸ்யமான என்றும் மலரும் நினைவுகள்! வழியில் கிடக்கும் கல்லில், காலை நாமே இடித்துவிட்டு, கல் மோதிவிட்டது என்று, அதன்மேல் பழி போடுகின்றோம். அதைப் போலத்தான், மழை மீது நாம் பழி போடுவதும். மழை பெய்யட்டும். மாமழை போற்றுதும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete

 13. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது இது தான் போலும். குளங்களையும் ஏரிகளையும் சுயநலத்திற்காக தூர்த்து வீடு கட்டியதின் ‘பலனை’ இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அடுத்த ஒரு பெரு மழைக்கு சென்னை தாங்காது. சென்னையை கடவுள் காப்பாற்றுவாராக!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. கழுதை திருமணம் விவாக ரத்து பற்றி நானும் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தேன் திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி லைக் போட்டிருக்கிறார். இது ஒரு தகவலுக்கு மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....

   நீங்கள் எழுதியதைத் தான் நான் தவறாக குறிப்பிட்டு விட்டேன் போலும்....

   Delete
 15. அரசை குறை சொல்வதைவிட அந்த அரசை நிர்வகித்த மக்களே குற்றவாளி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. அருமையான பதிவு வெங்கட்ஜி!!! மிகவும் ரசித்தோம்..இப்போது நீங்கள் சொல்லி இருப்பது போல தமிழ்நாட்டில் மழை பெய்தால் கஷ்டம்தான்...இங்கு கேரளாவில் அந்த அளவிற்கு ஆக்ரமிப்பும், குப்பையும் இல்லாததால் பாதிப்புகள் மிகவும் குறைவு...

  கீதா: மழை பிடிக்குமே...அதுவும் அதில் நனையவும் பிடிக்குமே உங்களைப் போல நனைந்து திரிந்த நாட்கள் பல. அதுவும் நாகர்கோவில் இரு பருவ மழைகளுக்கும் உள்ளாகும் ஊர் என்பதால் எங்கள் ஊர் ஆறுகள்ம் வாய்க்கால்கள் வயல்கள் சூழந்த ஊர் என்பதால் மிகமிக ரசித்து அனுபவித்தது உண்டு. இப்போது சென்னையில் மழையை ரசித்தாலும் சாலையில் இறங்கப் பிடிப்பதில்லை. மழை இயற்கை..நாம்தான் தவறுகள் பல இழைத்து அதைப் பழிக்கின்றோம்....நீங்கள் சொல்லியிருப்பது போல் மழை நீர் சேமிப்பு இல்லாததால் சென்னை போன்ற நகரங்களுக்கு மழை வேஸ்ட்தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 17. வெங்கட் ஜி! நெய்வேலியில் எனது கசின்ஸ் லிக்னைட் கார்ப்பரேஷன் காலனியில் தான் இருந்தார்கள். பல வருடங்களுக்கு முன். அங்குதான் பள்ளிப்படிப்பு எல்லாம் ...அப்போது இருந்த நெய்வேலி அழகு. சமீபத்தில் பார்த்த போது நிறைய மாற்றங்கள்....நொந்துவிட்டேன்...காலனிக்குள் இன்னும் கொஞ்சம் மரங்கள் சூழ்ந்து இருக்கின்றன...ஆறுதல்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சில வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் அத்தனை மரங்கள் இல்லை. இன்றும் பழைய வீடுகளின் தோட்டங்களில் மரங்கள் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் அடித்த தானே புயலில் பல மரங்கள் வீழ்ந்து விட்டன என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 18. நீங்கள் இந்த இடுகையைப் போட்டாலும் போட்டீர்கள், மருத்துவர் ஐயா, கடலூரில் வெள்ளம் சூழ்ந்ததற்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஒரு காரணம் அதனால் 500 கோடி கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே....

  இயற்கைச் சீற்றத்தை அரசியலாக்குவது தமிழகத்தில்தான் சாத்தியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 19. மழைக்கால அனுபவங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தாலும் எதுவும் அளவுக்கு மீறினால் தொல்லை எனவும் உணர வைக்கின்றது.

  நியாயமான ஆதங்கங்களோடு அரசு மட்டுமல்ல மக்கலும் உணர வேண்டும் என்பது நிஜமான கருத்து.

  மழையில் அம்மா கவிதைஅருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 20. இனிமேலாவது விளைநிலங்களையும் ஆற்றுப்படுகைகளையும் வீடுகளாகக் கட்டுவதைத் தவிர்ப்போமா.....
  பார்ப்போம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 21. அம்மா- அப்பா பாச மழையை நனைக்க (நினைக்க) வைத்து விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 22. இயற்கையோடு இயந்த வாழ்க்கையை நாம் வாழாததே இதற்கு காரணம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 23. நான் வளர்ந்தது திருச்சி பொன்மலையில் வாய்க்கால் வசதிகளுடன் திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஊர் என்பதாலும் மேட்டுப்பகுதி என்பதாலும் அங்கிருந்தவரை வெள்ளம் என்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை. சென்னையில் வசித்தபோது சில வருடங்களுக்கு முன் மழைநீர் உயர்ந்துவர, வெள்ளம் குறித்த முதல் பயம் மனத்தில் எழுந்தது. ஆனால் இப்போதைய சென்னையைப் பார்க்கையில் மனம் பதைத்துதான் போகிறது. மழை குறித்த உங்கள் அனுபவங்கள் சுகமும் சோகமுமாக அருமை. மழைக்கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. என் அம்மா கூட சின்ன வயதில் சில வருடங்கள் பொன்மலையில் தான் வசித்திருக்கிறார்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 24. நல்ல பதிவு. சமுதாய சிந்தனை, இளமைகால நினைவுகள், அனபு கவிதை என்று பதிவு அருமை.
  இனி தவறுகளை திருத்திக் கொள்வோம் இயற்கையை திட்டாமல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 25. ,மழை நினைவுகள்,மழையில் நனைவது போல் சுகமாக இருக்கின்றன!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 26. தவறு நம் மீதும் அரசின் மீதும்தான்...
  எல்லா நகரங்களிலும் கால்வாய் பாசன பராமரிப்பு இல்லை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 27. பள்ளி நாட்களில் மழையில் நனைஞ்சிருக்கேன். அதுவும் தீபாவளி விடுமுறை முடிஞ்சு பள்ளிக்குச் செல்லும் முதல்நாள் தீபாவளிப் புது உடையை அணிந்து செல்வேன். அம்மா, அப்பா, மழை வரும் உடை வீணாகிடும்னு தடுத்தாலும் கேட்காமல் போட்டுக் கொண்டு போயிருக்கேன். இப்போல்லாம் வீட்டில் ஈரப்பதம் இருந்தாலே ஒத்துக்கறதில்லை! :) அப்போவும் ஜுரம் வந்து படுத்துக் கொண்டும், படுத்திக் கொண்டும் இருந்திருக்கேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 28. //கொஞ்சம் நேரம் நின்னு மழை விட்டதும் வரக்கூடாதாடா, கடங்காரா” என்று பாசத்தோடு திட்டியபடியே தனது புடவைத் தலைப்பால் தலை துவட்டி விடுவார் அம்மா....//

  அம்மா என்றால் அம்மாதான். அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  நீங்கள் விபத்துக்குள்ளானது ஒருபுறம் இருக்கட்டும். கொட்டும் மழையில், அப்பா எழுதின அந்தக் கடிதத்தை தபால் பெட்டிக்குள் சேர்த்தீர்களா இல்லையா எனச் சொல்லவே இல்லையே.:)

  ReplyDelete
  Replies
  1. கடிதத்தினை தபால் பெட்டியில் சேர்த்து விட்டதாக நினைவு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....