எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 19, 2015

நாத்துவாரா மேலும் சில இடங்கள் – பிச்ச்வாய் ஓவியங்கள் - புதினா போட்ட தேநீர்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 23

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22

எங்களுடைய இப்பயணத்தில் பஞ்ச் துவாரகா மட்டுமே தரிசிக்கும் எண்ணத்துடன் சென்றதால் பக்கத்தில் உள்ள மற்ற இடங்களுக்குச் செல்ல நேரம் ஒதுக்க முடியவில்லை. பொதுவாகவே பஞ்ச் துவாரகா பயணம் செய்பவர்கள் எட்டு அல்லது ஒன்பது நாட்கள் வரை அங்கே இருந்து பஞ்ச் துவாரகா என அழைக்கப்படும் கோவில்கள் மட்டுமல்லாது, பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்களுக்கும் செல்வது வழக்கம்.  ஆனால் எங்களுக்கு கிடைத்ததோ நான்கு நாட்கள் மட்டுமே என்பதால் பஞ்ச் துவாரகா கோவில்களும், இரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் மட்டுமே. 

ஏக்லிங்க்ஜி! - படம் இணையத்திலிருந்து....

நாத்துவாராவின் அருகிலேயே சில பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. நாத்துவாராவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஏக்லிங்க்ஜி மஹாதேவ் கோவில் இருக்கிறது.  மேவார் பிரதேசத்தினை ஆண்ட மஹாராணா ராஜாக்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ஐந்து முகங்களைக் கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மேற்கில் பிரம்மா, வடக்கில் விஷ்ணு, கிழக்கில் சூர்யன், தெற்கில் ருத்ரன், மேற்புறம் லிங்க ஸ்வரூபம் என ஐந்து முகங்களைக் கொண்ட சிவலிங்கம்.  இக்கோவிலின் கட்டிடக் கலை மிகவும் சிறப்பாக இருக்கும். சிற்பக்கலைகளை ரசிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.

கங்க்ரோலி துவாரகாதீஷ் கோவில் - படம் இணையத்திலிருந்து....

கங்க்ரோலி துவாரகாதீஷ் கோவில்: உதைப்பூர் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் ராஜ்சமுண்ட் நதிக்கரையில் அமைந்திருப்பது கங்க்ரோலி கிருஷ்ணர் கோவில். நாத்துவாரா கோவில் போலவே இக்கோவிலும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கே கோவர்த்தனில் இருந்து கிருஷ்ணர் சிலை கொண்டுவரப்பட்டது என்றால் இங்கே உள்ள சிலை மதுராவிலிருந்து!

மஹாராணா பிரதாப் மான்சிங் உடன் போரிடும் காட்சி - படம் இணையத்திலிருந்து....

ஹல்தி[dhi]கா[g]ட்டி: நாத்துவாராவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இவ்விடம் மேவார் மஹாராஜா மஹாராணா பிரதாப் மற்றும் முகலாய மன்னர் அக்பரின் படைத்தளபதியான மான்சிங் உடன் போரிட்ட இடம்.  இப்போரில் வெற்றி தோல்வி இல்லை என்றாலும் வரலாற்றில் முக்கிய இடத்தினைப் பெற்ற இடம். ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள இவ்விடமும் பார்க்க வேண்டிய இடம்.

லால் பாக் - படம் இணையத்திலிருந்து....

லால்[b]பாக்[g]: நாத்துவாரா கோவிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள அழகிய தோட்டம் லால்[b]பாக்[g]. அழகிய நீருற்றுகளும், நீர் நிலைகளும் இங்கே உண்டு. இந்த நீருற்றுகளை மாலை நேரத்தில் விளக்குகளின் ஒளியில் பார்க்கவே மிகச்சிறப்பாக இருக்கும்.  இங்கே ஒரு அருங்காட்சியகமும் உண்டு.

நாங்கள் பார்க்காத இவ்விடங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்வது நீங்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான். ராஜஸ்தானிலும் நிறைய இடங்கள் பார்க்க இருக்கிறது.  இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தையும் பார்க்க எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? இந்த ஒரு பிறவி நிச்சயமாக போதாது!

பிச்ச்வாய் ஓவியம் - படம் இணையத்திலிருந்து...

இப்படி சில இடங்களை விட்டு, நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜியை தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டோம். கோவிலின் வெளியே நிறைய கடைகள். ஒவ்வொன்றிலும் பல்வேறு விதமான ஸ்ரீநாத்ஜி படங்கள், அவருக்கான அலங்காரப் பொருட்கள் என விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.  இங்கே ஒரு அழிந்து வரும் ஓவியக்கலை பற்றியும் சொல்ல வேண்டும். நாத்துவாரா கோவில் இருக்கும் இடத்தில் பழங்காலத்திலிருந்தே ஒரு ஓவியக்கலை இருந்தது. அந்த ஓவியங்களுக்கு பிச்ச்வாய் ஓவியங்கள் என்று பெயர்.


பிச்ச்வாய் ஓவியம் - படம் இணையத்திலிருந்து... 

துணியில் இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரையப்படும் இந்த ஓவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. இந்த ஓவியங்களில் பெரும்பாலும் வரைபொருள் கிருஷ்ணர் மற்றும் அவரது லீலைகள், பராக்கிரமங்கள் ஆகியவை மட்டுமே.  இயற்கை வண்ணங்களைக் குழைத்து துணிகளில் வரைந்து கொடுக்கிறார்கள். நாத்துவாரா கடைகளில் இம்மாதிரி ஓவியங்கள் கிடைத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஓவியக் கலை அழிந்து வருகிறது என்பது வருத்தம் தரும் விஷயம்.

இக்கடைகளில் சில ஓவியங்களையும் வேறு சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தங்குமிடம் நோக்கி நடந்தோம். இவ்விடத்தில் கிடைக்கும் தேநீர் மிகவும் பிரபலமான ஒன்று. அதைப் பற்றியும் சொல்லாவிட்டால் எப்படி! தேநீரின் சுவை அபாரமாக இருந்தால் ஒன்று மட்டும் போதுமா என்ன! இரண்டு கப் [மிகச் சிறிய அளவு!] தேநீர் அருந்தினோம்.  ஒரு கப் தேநீர் பத்து ரூபாய் மட்டுமே.  அந்த தேநீரில் அப்படி என்ன விசேஷம் என்பதையும் சொல்லாமல் விடக்கூடாதே!

புதினா, இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றை கல்லில் தட்டிப் போட்டு, தேநீர் தயார்!  வாங்க!

சாதாரணமாக நாம் தேநீர் தயாரிக்கும்போது, பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவை மட்டுமே போடுவோம். சில சமயங்களில் ஒரு சிறு துண்டு இஞ்சியும், ஏலக்காயும் தட்டிப் போடுவதுண்டு.  இங்கே இஞ்சி, ஏலக்காய் தவிர, புதினா இலைகள், மிளகு மற்றும் கற்பூரப் புல் [Lemon Grass] ஆகியவையும் தட்டிப் போட்டு தேநீர் தயாரிக்கிறார்கள். அப்படி ஒரு சுவை அந்த தேநீரில். கண்டிப்பாக ஒரு கப் தேநீரோடு நிறுத்த முடியாது!

தங்குமிடத்தில் இருந்த சிலை....

இரண்டு கப் தேநீரை உள்ளே தள்ளியபிறகு தங்குமிடத்திற்குத் திரும்பினோம்.  தங்குமிடத்தில் கொடுக்க வேண்டிய கட்டணம் கொடுத்து அஹமதாபாத் நோக்கிய பயணத்தினைத் தொடங்கினோம்.  மாலைக்குள் அஹமதாபாத் சென்று விடுவதாகத் திட்டம். வழியில் இன்னும் இரு கோவில்கள் பார்க்கவும் வேண்டும்.  நாத்துவாராவிலிருந்து நாங்கள் புறப்பட்ட போது காலை ஒன்பது மணி.  வரும்போது இரவு நேரத்தில் வந்த இடங்கள் பகலில் பார்க்கும் போது அத்தனை அழகாய் இருந்தது. பயணித்தபடியே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். 

ஓட்டுனர் [ch]சிராக்[g] இளைஞர் என்பதால் வண்டி அசுர வேகத்தில் தான் பயணித்தது! வண்டியும் அவர் சொல் பேச்சு கேட்டு அவர் வளைத்த வளைவுக்கும், இழுத்த இழுப்புக்கும் வந்தது! தொடர்ந்து பயணித்த நாங்கள் அடுத்ததாய் என்ன செய்தோம், என்ன இடத்தில் நிறுத்தினோம், அங்கே என்ன பார்த்தோம் என்பதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்லட்டா!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 comments:

 1. படங்களுடன் பதிவை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அன்புள்ள வெங்கட்
  நாத்துவாரா மற்றும் பிச்ச்வாய் ஓவியங்கள் - புதினா போட்ட தேநீர் பகிர்வு அருமை. வாழ்த்துக்கள் . தங்களுடைய மற்ற பகிர்வுகளையும் படித்து விட்டு கருத்துகளை எழுதுகிறேன்.
  விஜய் டெல்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 3. செல்ல முடியாவிட்டாலும், உங்களால் தான் பல இடங்களைப் பற்றிய தகவல்கள், சிறப்புகள் அறிய முடிகிறது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அழகிய படங்கள்..
  புதினா தேநீருடன் - அருமையான சுற்றுலா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. படங்கள் அனைத்தும் அருமை சகோ, நானும் பயணித்தது போன்ற உணர்வு,, மனம் நிறை வாழ்த்துக்கள் சகோ,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 6. அருமையான ஆலயங்களை அறிமுகம் செய்த பதிவு! படங்களை ரசித்தேன்! ஓவியங்கள் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 7. துவாரகாதீஷ் கோவில் பிரம்மாண்டமாய் ஒரு அழகிய அரண்மணை போல இருக்கிறது! பிச்ச்வாய் ஓவியங்கள், சுவை மிகுந்த தேநீர் பற்றிய விபரங்கள் மிக அருமை! வட இந்திய சுற்றுலா செல்பவர்களுக்கு உங்கள் பயணக்கட்டுரைகள் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 9. படங்கள் வித்தியாசமாக இருக்கிறதே ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. ஓவியங்கள் அழகோ அழகு ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. வணக்கம்
  ஐயா
  படங்களும் விளக்கமும் வெகு சிறப்பு ஐயா... த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் ஜி!

   Delete
 12. படங்களுடன் பதவி அருமை...
  தேநீர்... வாவ்...
  நான் வர டீ (சுலைமானி)யில் புதினா இலை போட்டுக் குடிப்பேன்... புத்துணர்வாய் இருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 13. டீ குடிப்பதற்காகவேனும் அங்கேயெல்லாம் போகவேண்டும் (அடுத்த ஜன்மத்தில்தான்).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 14. படங்கள், செய்திகள் வழக்கம்போல அருமை. உங்களது பதிவுகள் மூலமாக பல புதிய கோயில்களைப் பற்றி அறிய முடிகிறது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. படங்களுடன் உங்கள் பயணத் தகவல்களும் அருமை. டீ மணக்கின்றது இங்குவரை. இதையே ட்ரை செய்து விட வேண்டும்...தொடர்கின்றோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 17. //புதினா, இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றை கல்லில் தட்டிப் போட்டு, தேநீர் தயார்! வாங்க!//

  ஆஹா இதோ புறப்பட்டுட்டேன் .... எங்கே வரணும் ? :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....