புதன், 18 நவம்பர், 2015

சாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்கா

படம்: www.biharandjharkhand.com தளத்திலிருந்து

பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா கொண்டாடப்படும் சமயம் இது.  தீபாவளி முடிந்த ஆறாம் நாள் இப்பூஜா கொண்டாடப்படுகிறது. சூரியனையும் சூரியனின் சகோதரியையும் இந்த சமயத்தில் பூஜிக்கிறார்கள்.  ச்சட் பூஜா பற்றிய விவரங்களையும் அது பற்றிய கதைகளையும் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்தப் பூஜா பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தவர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பீஹார் மாநிலத்தவர்கள் வசிக்க ஆரம்பித்து விட்டதால் எல்லா இடங்களிலும் கொண்டாட்டங்கள் உண்டு!

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது இந்தச் சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா.  குறிப்பாக குளிர் நாட்களில் இவ்வுணவை தயாரித்து சாப்பிடுவது வழக்கம்.  இதைச் செய்வதற்கு சற்றே அதிக நேரம் எடுக்கும் என்றாலும், சத்தான உணவு வகை. தேவையான பொருட்கள் என்ன என்பதைப் பார்த்து விடுவோம்....

லிட்டி செய்ய:

கோதுமை, ஓமம், நெய், தயிர், சோடா உப்பு மற்றும் உப்பு. இது தவிர லிட்டியின் உள்ளே வைக்கும் பித்தி எனும் பூரணம் செய்ய, சத்து [கடலைப் பருப்பில் செய்யப்படுவது], இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, ஜீரகம், ஓமம், கடுகு எண்ணை, மாங்காய் ஊறுகாய் விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு!

[ch]சோக்கா செய்வதற்கு:

பெரிய கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், தனியா, இஞ்சி, உப்பு, கடுகு எண்ணை

எப்படிச் செய்யணும் மாமு:

படம்: http://www.myspicykitchen.net/ தளத்திலிருந்து...

லிட்டி செய்ய:

கோதுமை மாவு, சோடா உப்பு, நெய், மற்றும் ஓமத்தினை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல பிசைந்து மூடி வைத்து விட வேண்டும்.

பித்தி எனும் பூரணம் செய்ய:
இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் தனியா ஆகியவற்றை சுத்தம் செய்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சத்து [கடலைப் பருப்பினை வறுத்து பொடி செய்வது] எடுத்துக் கொண்டு அதில் பொடி செய்த இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, எலுமிச்சை சாறு, உப்பு, ஜீரகம், ஓமம், கடுகு எண்ணை, மாங்காய் ஊறுகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.  இரண்டு மூன்று ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.  

இதற்குள் மாவு நன்கு ஊறி இருக்கும்.  அதை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து கொழுக்கட்டைக்குச் செய்வது போல கையால் செய்து ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் பித்தி எனும் பூரணத்தினை சேர்க்கவும். அதை சத்து வெளியே வராமல் மூடி உருண்டையாக்கி பின் கொஞ்சம் அழுத்தி எடுத்து வைக்கவும். எல்லா உருண்டைகளையும் இப்படிச் செய்த பிறகு, இதை நெய்யில் பொரித்து எடுக்கலாம். அல்லது Microwave Oven அல்லது Electric Oven கொண்டு bake செய்யலாம்.  

[ch]சோக்கா செய்ய:

பெரிய கத்திர்க்காய் எடுத்து அடுப்பில் மிதமான தீயில் நேராக வைத்துச் சுடவும். அவ்வப்போது திருப்பி விட்டுக் கொண்டிருந்தால் சில நிமிடங்களில் நன்றாக வெந்து விடும்.  அதை எடுத்து தனியே ஆற விடவும். அதே போல தக்காளியையும் தணலில் வாட்ட வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.

கத்திரிக்காய் [ch]சோக்கா:  சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காயை எடுத்து மேலே கருகியிருக்கும் தோலை நீக்கி, கத்திரிக்காயை மட்டும் நன்றாக மசித்து விடுங்கள். அதிலே நறுக்கி வைத்த தனியா, பச்சை மிளகாய், உப்பு மற்றும் எண்ணை சேர்த்து கலக்கி வைத்தால் [ch]சோக்கா தயார்.

உருளைக்கிழங்கு [ch]சோக்கா: வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மிளகாய்ப் பொடி, உப்பு, பொடித்து வைத்த இஞ்சி, தனியா, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொண்டால் இதுவும் தயார்.

சுட்டு வைத்திருக்கும் தக்காளியையும் நன்கு மசித்து கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

லிட்டியை எடுத்து இரண்டாக பிளந்து நெய்யில் முக்கி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும், ஒரு சிறிய கிண்ணத்தில், கொஞ்சம் உருளைக்கிழங்கு [ch]சோக்கா போட்டு, அதன் மேல் கத்திரிக்காய் [ch]சோக்கா போடவும். அதன் மேலே கொஞ்சம் மசித்து வைத்த தக்காளியையும் சேர்த்து, பிறகு பொடிப்பொடியாக நறுக்கிய தனியாவை தூவிக்கொள்ளவும்.  லிட்டியைக் கொஞ்சமாக எடுத்து இந்தக் கலவையைத் தொட்டுகொண்டு சாப்பிட வேண்டியது தான்!

அம்மாடி ஒரு வழியா முடிஞ்சது! இவ்வளவு வேலையும் செய்ய சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். நான் இங்கே எழுதி இருப்பதை காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் லிட்டி [ch]சோக்கா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்!

இவ்வளவு வேலையா இதுக்கு செய்யணும்னு நினைச்சா, யாராவது பீஹார் மாநில நண்பர் இருந்தால், அவரை அழைத்து இதோ உங்க வீட்டுக்கு லிட்டி [ch]சோக்கா சாப்பிட வந்துட்டே இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிடுங்க! தராமலா இருந்துடுவாங்க!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

34 கருத்துகள்:

 1. ஐயோ.... பிஹாரி நண்பர்களைத்தான் தேடப்போறேன்.

  அப்புறம்.... // சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காயை எடுத்து மேலே கருகியிருக்கும் தோலை எடுத்து அதை நன்றாக மசித்து விடுங்கள். // தோலை எடுத்து விட்டுன்னு இருக்கணும் போல! இப்படி 'விட்டு' விட்டுப்போச்சே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்குத் தான் டீச்சர் வரணும்னு சொல்லறது! :) தவறினைச் சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி. மாற்றி விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஷோக்கா தான் இருக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. ஆஹா! சூப்பர் டிஷ்! ஆனால் கேரளத்தில் எங்கள் வீடுகளில் இப்படி எல்லாம் செய்வது இல்லை....கேரளத்து உணவு மட்டுமே.ம்ம்ம் பகிர்வுக்கு நன்றி தெரிந்து கொள்ளவாவது முடிந்ததே என்று...

  கீதா: நிறைய வடஇந்திய உணவுவகைகள் வீட்டில் அவ்வப்போது செய்வது உண்டு என்றாலும் இது இப்போதுதான் உங்களிடம் இருந்து தெரிந்து கொள்கின்றேன். குறிப்புகளைக் குறித்தும் கொண்டுவிட்டேன். இந்த வார இறுதியில் இதுதான் செய்து பார்த்துவிட வேண்டியதுதான். பேக்கிங்க்தான். நோ பொரித்தல் இங்கு... தனியா என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது தனியா விரையா இல்லை இலையா...ஏனென்றால் பொடித்து என்றும் நறுக்கி என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால்தான்...பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகின்றது...

  மிக்க நன்றி வெங்கட்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியா இலைகள் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி....

   நீக்கு
 4. படிச்சு முடிக்கவே கண்ணக் கட்டுதே!! இங்கே பிஹாரிகள் யாரும் இல்லை..கண்ணாலயே சாப்ட்டுட்டு நடையக் கட்ட வேண்டியதுதான்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்...

   நீக்கு
 6. சாப்பிட வாங்கனு கூப்பிட்டதும் உடனே வந்துட்டேன். இது நானும் கேட்டதில்லை. செய்துட வேண்டியது தான்! :) இல்லைனா பிஹாரி நண்பர்களைத் தேடணும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. //கத்திரிக்காய் [ch]சோக்கா: சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காயை எடுத்து மேலே கருகியிருக்கும் தோலை நீக்கி, கத்திரிக்காயை மட்டும் நன்றாக மசித்து விடுங்கள். அதிலே நறுக்கி வைத்த தனியா, பச்சை மிளகாய், உப்பு மற்றும் எண்ணை சேர்த்து கலக்கி வைத்தால் [ch]சோக்கா தயார்.//

  இது நான் சின்னப்பயலா இருக்கும்போது என் பாட்டி செஞ்சு கொடுப்பாங்க. அது எப்படி பீகாருக்குப் போச்சு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி சில உணவு வகைகள் பொதுவாக இருந்துவிடுகிறது போலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 9. படிக்கும்போது சுவையாத்தான் இருக்கு! செய்ய ஆகும் நேரமும் வேலையையும் பார்க்கும் போது பயமா இருக்கு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 10. செம டேஸ்டா இருக்கும் போலயே? அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லாவே இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா...

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா

  பார்த்தவுடன் பசி வந்து விட்டது.. செய்முறை விளக்கத்துடன் அசத்தல் நன்று... வாழ்த்துக்கள் ஐயா த.ம 6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 12. எனக்கு கட்டாயம் அவசியமானது தான் எங்கள் ஹோட்டல் மெனுவில் அடுத்து வருவது??/ லிட்டி [ch]சோக்கா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா ஜி!

   நீக்கு
  2. நிஷாஜி என் பெயர் இல்லை நிஷா மட்டும் தான் என் பெயஎ. நிஷா என்றே அழைக்கலாம்

   நீக்கு
  3. மரியாதை நிமித்தமாக நிஷா ஜி! என அழைத்திருந்தேன். இனி தவிர்க்கிறேன்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா!

   நீக்கு
 13. நாம் பண்ணுவதற்கு ரொம்பவும் மெனக்கெடனும் போலிருக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் அதிக வேலை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 14. அட... அட... அடா....

  இப்படியெல்லாம் படம் போட்டா எங்க போயி யாரைச் செய்து தரச் சொல்றது...

  அதுசரி நாமளும் செய்யமுடியாது போலவே... அதிக மெனக்கெடல் இருக்கும் போல...

  பீகாருக்குத்தான் போகணும் போலவே அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 15. வேலைஅதிகமாய் இருக்கிறது. படித்து திருப்த்தி பட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   நீக்கு
 16. லிட்டி [ch]சோக்கா ஷோக்கா இருக்கும் போலிருக்கு. மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷோக்கா தான் இருக்கும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....