எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 30, 2015

ஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு உண[ர்]வு

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 25

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

படம்: இணையத்திலிருந்து.....

ஷாம்லாஜியிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாக நிறுத்திய இடம் நெடுஞ்சாலையில் இருந்த [G]கிரிராஜ் உணவகத்தில் தான். நல்ல பசி என்பதால் உள்ளே நுழைந்து கேட்ட முதல் கேள்வியே உடனடியாக சாப்பிட என்ன கிடைக்கும் என்பது தான். அதற்கு கிடைத்த பதில் – எல்லாமே கிடைக்கும் – ஆனால் பதினைந்து இருபது நிமிடம் ஆகும்! நல்ல பதில்! வேறு வழியில்லை காத்திருக்கத் தான் வேண்டும்.....உணவகத்தினை நிர்வகிப்பது ஒரு கணவன் – மனைவி. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உணவகத்தினை அழகு படுத்தியிருக்கிறார்கள். சுவர் எங்கும் துவாரகாநாதனின் படங்கள், இயற்கைக் காட்சிகள் என பல ஓவியங்கள் அழகழகாய் மாட்டி வைத்திருந்தார்கள். அவர்களிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தபடியே ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  எங்களைப் போலவே வேறு ஒரு குடும்பத்தினரும் அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு இளைஞர், அவர் மனைவி, சிறு குழந்தை மற்றும் இளைஞரின் அப்பா-அம்மா ஆகியோர் தான்.  அவர்கள் எங்களுக்கு முன்னரே வந்துவிட்ட படியால் அவர்கள் கேட்டிருந்த உணவு சுடச்சுட வந்து சேர்ந்தது. பெரியவர் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு அதற்கான கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தார். பிடிக்காத சிலவற்றை ஒதுக்கி, பிடித்தவற்றை சாப்பிட்டு அதுவும் மீதமாக, உணவகம் வைத்திருந்த பெண்மணியை அழைத்து அதை வீட்டுக்கு எடுத்துப் போக தனியாக கட்டிக் கொடுக்கவும் சொன்னார். பெரியவரின் மனைவி, “அதெல்லாம் வேண்டாங்க! என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா! நீ கட்டிக் கொண்டாம்மா!என்று அடுத்த உணவை ருசிக்க ஆரம்பித்தார். அதற்குள் எங்களுக்கான உணவும் வந்து சேர்ந்தது. நாங்கள் கேட்டிருந்த சப்பாத்தி, பராந்தா, ஆலு-சிம்லா மிர்ச் சப்ஜி, சற்றே இனிப்பான [dh]தால், ராய்த்தா, குஜராத்தி பாப்பட்[d] [அப்பளம்], ஊறுகாய் என அனைத்தும் மிகவும் ருசியாக இருந்தது.  வீட்டு உணவு சாப்பிடும் உணர்வு தான் எங்களுக்கு! ஓட்டல் நடத்தும் தம்பதியே முன்னின்று சமையல் வேலைகளைப் பார்வையிட்டு தயாரிக்கிறார்கள் என்பதால் தரத்திலும் குறைவில்லை. இருந்த பசிக்கு, ருசியும் கைகொடுக்கவே கிடுகிடுவென சப்பாத்திகள், பராந்தாக்களும் உள்ளே விரைவாக இறங்கிக் கொண்டிருந்தன.   நாங்கள் இங்கே வாய்க்கும் கைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, பெரியவர் அங்கே தனது விளையாட்டுகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டே ஆக வேண்டும் என குழந்தை போல அவர் அடம் பிடிக்க, பயணத்தின் போது வேண்டாம், ஒத்துக்காதுஎன அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் எடுத்துச் சொல்ல, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – உடம்புக்கு ஒத்துக்காது என எல்லாத்தையும் தள்ளிக் கொண்டே இருந்து என்ன செய்யப் போகிறேன்! நீங்க என்ன சொல்றீங்க?என உணவகத்தின் உரிமையாளரையும் தனது கட்சிக்கு இழுத்துக் கொண்டிருந்தார்.  ஜெயித்தது பெரியவர் தான்!உணவினை ரசித்து ருசித்து நாங்கள் சாப்பிட்ட பிறகு, எங்களுக்கான உணவிற்கு ரசீது கொண்டு வந்தார் அந்தப் பெண்மணி. “சாப்பாடு பிடித்திருந்ததா? ஏதேனும் குறை உண்டா?என்று அன்பான விசாரிப்பு அவரிடமிருந்து. வீட்டில் சாப்பிட்ட உணர்வு எங்களுக்கு என்று அவரைப் பாராட்டினோம்.  கணவன் – மனைவி இருவருமே தங்கள் வேலைகளை விட்டு, இப்படி உணவகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.  அவர்கள் மேலும் சிறந்த நிலைக்கு வர வாழ்த்தினோம்.  அப்படியே ஓவியங்களையும் படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன் [பதிவுக்கு புகைப்படம் தேவையாயிற்றே! வலைப்பதிவர் காரியத்தில் கண்ணா இருக்கணும்!]நானகு பேர் சாப்பிட்டதற்கான செலவும் அதிகமில்லை.  ஆளுக்கு நூறு ரூபாய்க்குள் தான்! பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது.  ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ தானோ என்று தானே இருக்கும்! இந்த உணவகத்தில் வீட்டில் சாப்பிட்ட உணர்வு – கூடவே அவ்வப்போது நம்மிடம் வந்து இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று பாசத்தோடு கேட்கக் கூடியவரும் இருந்துவிட்டால் நன்றாகத் தானே இருக்கும்!

நண்பர் வீட்டில் இருந்த கார்வண்ணன்....

நாங்களும் சாப்பிட்டு ஓட்டுனர் [ch]சிராக்-உம் சாப்பிட்டு முடித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. சாலைகள் நன்றாக இருந்தால் பயணம் இனிக்கும் என்றாலும், பயணம் இலக்கை அடையத்தானே வேண்டும். அஹமதாபாத் நகருக்கு வந்து சேர்ந்து நேராக நண்பரின் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம்.  நண்பர் அலுவகத்திலிருந்து வந்து சேர்ந்த பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அவருடன் நகர் வலம் செல்ல வேண்டும்.  நகரில் என்ன பார்த்தோம், வேறு என்ன செய்தோம் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்லட்டா!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

46 comments:

 1. //எல்லாமே கிடைக்கும் – ஆனால் பதினைந்து இருபது நிமிடம் ஆகும்!//

  "வெயிட் எ நிமிட் ஃபார் ஃபைவ் நிமிட்ஸ்" போல!! :)))

  வயிறு நிறைந்தால் மனமும் நிறையும் என்பத உண்மை!

  இன்று என்னவோ தம 'சட் சட்'டென வேகமாக வாக்களிக்க முடிந்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

   Delete
 2. தொழிலை நேசிக்கும் தம்பதிகளின் ஈடுபாடு வியக்க வைக்கின்றது...தொடரட்டும் பயணம் சார்...[கொஞ்சம் இல்ல அதிகமாகவே பொறாமைப்படுகின்றேன்..பயணங்களால் நிறைந்த உங்கள் வாழ்க்கையை எண்ணி]

  ReplyDelete
  Replies
  1. பயணங்கள் எனக்குப் பிடித்தவை - ஆனாலும் வருடம் முழுவதும் பயணிக்க முடிவதில்லை! கடைசியாக இப்படி பயணம் சென்றது ஐந்து மாதங்களுக்கு முன்னர்! அடுத்த பயணம் செல்லும் வாய்ப்பு அமையவில்லை.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. உங்கள் தளத்தின் பேனர் என்னை மிகவும் கவர்ந்தது. குட்

  ReplyDelete
  Replies
  1. பேனரில் உள்ள படம் - அருணாச்சலப் பிரதேசத்தில் நான் எடுத்த புகைப்படம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. வழக்கம் போல பதிவும் படங்களும் மனதை கவர்ந்தன பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. எப்படி இப்படி சோர்வு இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பயணம் செல்லுகிறீர்கள்.. என்னைப் பொருத்த வரையில் அதிசய மனிதர் அய்யா நீங்கள்

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பயணம் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது! நான்கு நாட்கள் பயணம் தான்.... :) பயணம் செல்வதே சோர்வைப் போக்குவதற்குத் தான்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 6. >>> வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – உடம்புக்கு ஒத்துக்காது என எல்லாத்தையும் தள்ளிக் கொண்டே இருந்து என்ன செய்யப் போகின்றோம்!.. <<<

  விருப்பமான உணவுகளை அளவுடன் நிதானமாக உண்பது சாலச்சிறந்தது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. இது போல் அம்பேரிக்காவில் ஹோட்டல்கள் நிறையப் பார்க்கலாம். ஓடி ஓடி கவனிப்பார்கள். :) பொதுவாக குஜராத் நல்ல சுவையான உணவுக்குப் பெயர் போன மாநிலம். :)

  ReplyDelete
  Replies
  1. அம்பேரிக்காவுக்கு நம்மள யாரும் இதுவரை கூப்பிடல! கூட்டிட்டும் போகல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 8. காரியத்தில் கண்ணா இருப்பதால் தான் எங்களுக்கு அழகிய படங்களும், சுவாரஸ்யமான தகவல்களும் கிடைக்கிறது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. ஐஸ்கிரீம் கேட்ட பெரியவர்...குளிர்ச்சியாய் இன்னும் நிற்கிறார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 10. வணக்கம் சகோ,

  அழகிய படங்களுடன், அருமையான பகிர்வு,
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 11. பயணங்கள் இனியவை.
  என்னைப் போன்று வீட்டைக் கட்டி அழுபவரையும் உங்களோடு கூட்டிச் செல்கிறீர்கள்.
  புகைப்படங்களும் அருமை.

  தொடர்கிறேன்.
  த ம +
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக் கனவுகள்.....

   Delete
 12. பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதியில் தங்களின் புதிய பகிர்வான ஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு உண[ர்]வு - எங்களை குஜராத்துக்கே அழைத்து சென்று விட்டது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
  அன்புடன்
  தில்லி விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 13. விடயங்கள் நன்று ஜி நானும் தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. படங்கள் அருமை;நீங்கள் சாப்பாடு பற்றி எழுதியதைப் படித்தது எனக்கும் சாப்பிட்ட திருப்தி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 15. அவ்வப்போது நம்மிடம் வந்து இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று பாசத்தோடு கேட்கக் கூடியவரும் இருந்துவிட்டால் நன்றாகத் தானே இருக்கும்!

  நிஜம் தான். . பயணக்கட்டுரை பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 16. படத்தில் மட்டுமல்ல ,சமையலிலும் அவர்கள் கைவண்ணம் அருமைதான் போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 17. படங்களும் பதிவும் அருமை!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 18. குஜராத் காரர்களின் உபசாரம் அனுபவித்திருக்கிறேன். உங்கள் வர்ணனை மிக அழகு.
  அந்தப் பெரியவருக்கு ஐஸ்க்ரீம் ஒன்றும் செய்யாது. கண்ணன் ஊராச்சு. அந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 19. பயண அனுபவங்கள் என்றுமே சுவாரஸ்யம் மிகுந்தவை தான்! அதுவும் ருசியான வீட்டு சாப்பாடு போல கிடைத்தால் பயணத்தின் இனிமை நிச்சயம் கூடி விடும்!!
  புகைப்படங்கள் எல்லாமே அழகு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 20. அடம் பிடித்த பெரியவர் வாழ்க்கையை அனுபவிக்கிறார்...
  படங்கள் அழகு...
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 21. முதலில் உள்ளப் புகைப்படத்தைப் பார்த்ததும் நாவில் நீர்!!!!! அருமையான விவரணம். பெரியவர்கள் ஆனால் குழந்தைகள் போல் என்பார்கள் இல்லையா அது போல வோ அந்தப் பெரியவர்!!! படங்கள் அனைத்தும் அருமை. இப்படிப்பாசமாக கவனித்தால் உணவு உள்ளே நன்றாகவே செல்லும் மனதும் இனிக்கும்....

  கீதா:குஜராத் உணவு வகைகள் நன்றாகவே இருக்கும் குஜராத், ராஜஸ்தானி உணவகங்களும். இங்குச் சென்னையில் டி நகரில் இருக்கின்றது அந்த ஊர்க்காரர்கள்தான் நடத்துகின்றார்கள். நன்றாக இருக்கும். சரவணபவனில் கூட பாண்டிபஜாரில் இருக்கின்றது ஆனால் விலை மிகவும் அதிகம். எனக்கும் நீங்கள் சாப்பிட்டப் பதார்த்தங்களின் பெயரை வாசித்ததும் நாவில் நீர் சுரந்தது!!!

  நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி!

   Delete
 22. உணவு வகைகளை வாசிக்க வாசிக்கப் பசித்தது... குஜராத் மக்கள் ரசித்து ரசித்துச் சமைப்பார்கள், சுவையாகவும் இருக்கும். என் தோழி எதற்காவது செய்முறை சொன்னாலே உடன் சாப்பிட வேண்டும் போல் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 23. அழகான புகைப்படங்களுடன், ஐஸ் கிரீம் போன்ற குளுமையான செய்திகளுடன், இனிய பயணப் பகிர்வு. பாராட்டுகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....