சனி, 28 நவம்பர், 2015

நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்!சாலைக்காட்சிகள் என்ற தலைப்புடன் சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்! இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே! எனும் பதிவு தான். இந்த இடைவெளியில் எத்தனையோ காட்சிகளைப் பார்த்திருந்தாலும், பகிர நினைத்தாலும் எழுதும் சந்தர்ப்பம் அமையவில்லை.  இப்போது சில காட்சிகளைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொளும் வாய்ப்பு!

காட்சி-1:

நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது மணி 08.30. உள்ளே நுழைந்து முதல் வேலையாக சமையல் – சிம்லா மிர்ச் சாதம் தான் மெனு! செய்து, சுடச்சுட சாப்பிட்டு ஒரு நடை நடக்க, கீழே இறங்கினேன். வீட்டின் அருகே ஒரு கல்யாணம் – [B]பராத் எனும் மாப்பிள்ளை ஊர்வலம் அப்போது தான் புறப்பட்டு போயிருந்தது. பின்னால் சிலர் வாகனங்களில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே ஒரு விஷயமும் சொல்லி ஆக வேண்டும் – தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. கடும் குளிராக இருந்தாலும், திருமணத்திற்கு வரும் அனைத்து பெண்களும் ஜிகு ஜிகு ஜிகினா உடைகள் அணிந்து சால்வையை பெயருக்கு தொங்க விட்டுக் கொண்டு வருவார்கள் – ஆண்கள் கோட்-சூட்-பூட் என இருக்க, இப்பெண்களுக்கு குளிரே தெரியாது போலும். கூடவே ஆண் பெண் வித்தியாசம் இல்லாது நாத்த மருந்தை [Scent] நன்றாக அடித்துக் கொண்டிருப்பார்கள் – 10 மீட்டர் தொலைவு வரை அந்த வாசம் வரும்!  ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான்! எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத்! போனா, வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணி ஆகலாம்.... போகணுமா வேண்டாமான்னு யோசனை!

படம்: இணையத்திலிருந்து.....

அந்தக் குடும்பத்தினருக்கு வருவோம்! – கும்மிருட்டான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். வாகனத்திற்கு அருகில், மாறி மாறி நிற்க, ஒருவர் மட்டும் விதம் விதமாய் அவருடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சமே இல்லாது, Flash-உம் இல்லாது புகைப்படம் எடுக்க, அந்தப் புகைப்படம் எப்படி வந்திருக்கும் என்பது அவருக்கே வெளிச்சம்! புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்பு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான்! கும்மிருட்டில் கூலிங் கிளாஸ்!

காட்சி-2:

தில்லியின் ஒரு முக்கியமான சாலைச் சந்திப்பு. அதன் அருகே மூன்று காவலர்கள் – ஒருவர் அதிகாரி. அதிகாரி காவலாளிகளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த நான் கேட்க நேர்ந்தது.

ஏதோ ஒரு கொலை, இரண்டு கொலை நடந்தா உடனேயே அதை பெரிய விஷயமா எல்லா டிவிலயும், பேப்பர்லயும் போட்டு நம்மளை கிழி கிழின்னு கிழிச்சுடறானுங்க! வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க!  ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி....  இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம்! இதைப் போய் பெரிசா பேசறாங்க!  அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது?...  நாறப் பொழப்பா இருக்கு!

அவர் சொல்றதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு! காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்! :(

காட்சி-3:இப்போதெல்லாம் சாலைகளில் நிறைய பேர் தனியாக பேசிக்கொண்டு வருவதைப் பார்க்க முடியும்.  கொஞ்சம் நெருங்கி வரும்போது காதில் ஒரு ஒயர் மாட்டி இருக்கும் – பாக்கெட்டில் அலைபேசி இருக்கும் – அலைபேசி அழைப்பில் இருக்கும் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார்கள்!  ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல் [Blue Tooth] மாட்டி இருக்கும்! தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னுநினைக்கத் தோணும்...... 

இரண்டு நாள் முன்னாடி, சாலையில் நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு பெரியவர் – ஃப்ரென்ச் தாடி, கோட்-சூட்-பூட் என டிப்-டாப்-ஆக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.  சற்று தொலைவில் பார்க்கும்போதே பேசிக்கொண்டு வருவது தெரிந்தது. கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதைப் பார்த்தபோது சரி அலைபேசியில் தான் பேசுகிறார் போல என நினைத்தேன்.  அருகில் வந்தபோது தான் தெரிந்தது காதில் ஒயரோ, நீலப்பல்லோ இல்லை!  பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார்!  என்ன பிரச்சனையோ!

நேற்று மீண்டும் அந்த பெரியவரைப் பார்த்தேன்.  இன்றைக்கும் தனியே பேசிக்கொண்டு நடக்கிறார்!  வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும்! இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ!  அவருக்கே வெளிச்சம்!

என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா?  சாலைக்காட்சிகள் அவ்வப்போது தொடரும்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

34 கருத்துகள்:

 1. கும்மிருட்டில் கூலிங் கிளாஸ் சூப்பர்...!

  பெரியவர் பாவம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரியவர் பாவம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. நாத்த மருந்து! உண்மைதான். சில பேர் பக்கத்தில் வந்தால் எனக்கும் தலைவலியே வரும்!

  பெரியவர் பேச ஆள் கிடைக்காதவர் போலும். பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. தலைப்பைப் பார்த்து எப்படியும் போட்டோவும் இருக்கும்
  என நினைத்திருந்தேன்.விவரிப்பும் சில தமிழ் சொற்களின்
  பிரயோகமும் மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 4. அன்றாட நிகழ்வுகளை அனாயசமாக பகிர்ந்தவிதம் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 5. நாத்த மருந்து என்று சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நாற்றம் என்றால் நறுமணம் என்ற பொருள் உண்டே. தங்களின் நகர் வலத்தை இரசித்தேன். நகர்வலம் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 6. எங்க வீட்டு பெருசு அந்த நாத்த மருந்துலதான் குளிக்குமோ என்னமோ! இருபதடி முன்னால இருக்கும்போதே மணத்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 7. நாத்த மருந்து
  நீலப் பல்
  எல்லாமே ரசிக்க வைத்தது அண்ணா....
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 8. அநேகமாக அனைவரும் காதில் வயரோ நீலப்பல்லோஅணிந்து கொண்டு பேசி வருவதைப் பார்க்கும் போது உண்மையில் பிராந்து பிடித்தவர்களையும் அடையாளம் தெரியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு

 9. நடுநிசிக் காட்சி ஏகாதசியன்று பார்த்திருக்கிறேன்.
  இப்போது நடுத் தெருக் காட்சி (நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்! )
  குளிர் சற்றும் குறையவில்லை
  கூலிங் கிளாஸ் வெரி கூல்
  பரிமாற்றம் பிளாஷ் அடிக்கிறது
  சிம்லா மிர் சாதம் டிப்ஸ் ப்ளீஸ்!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிம்லா மிர்ச் சாதம் - டிப்ஸ் - அந்த வார்த்தைகளிலேயே சுட்டி தந்திருக்கிறேன் - எனது மனைவியின் வலைப்பூவில் உள்ளது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 12. தலைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டேன். ஆனாலும் பதிவை ரசித்தேன்.
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா ஏமாற்றம் தந்த தலைப்பு! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 13. முன்பெல்லாம் செவிட்டு மெஷினை ( ஹியரிங் எய்டை அப்படித்தான் அப்போது சொல்வார்கள்) மாட்டியவர்களை வைத்து, ஆள் செவிடு என்று அடையாளம் கண்டு கொள்வார்கள் . செல்போன் புண்ணியம், யார் உண்மையிலேயே செவிடு என்று இப்போது எதுவும் கண்டு கொள்ள முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 15. சாலைக்காட்சிகள் அருமை. இந்தப்பெரியவரைப் பத்திப் படிச்சதும் சுந்தர்ஜி முகநூலில் பகிர்ந்த கவிதை நினைவில் வந்தது. பெரியவர் இயற்கையோடு பேசிக் கொண்டு போகிறார் போலும்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 16. கும்மிருட்டில் கூலிங் கிளாஸ்!ஹஹஹஹ் செம...

  சாலைக்காட்சிகளை ரசித்தோம் உங்கள் விவரணத்தின் மூலம். பாவம் பெரியவர். ஒருவேளை இனி வயோதிகர்கள் இப்படித்தான் ஆகிவிடுவார்களோ!!? பேசுவதற்கு யாரும் இல்லாமல்..

  கீதா" அட நாத்த மருந்து நானும் மகனும் அப்படித்தான் சொல்லுவோம். மாட்டுக்கொட்டகை என்றும் சொல்லுவோம்...அதற்கு ஒரு கதை உண்டு அதனால் மாட்டுக் கொட்டகை என்று...


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 17. //தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னு” நினைக்கத் தோணும்...... //

  :)

  நகர் வலச் செய்திகள் யாவும் அருமை. பாராட்டுகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....