எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 23, 2015

கேசரியா ஜி! மற்றும் ஷாம்லா ஜி!


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 24

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23

பயணத்தின் போது வழியில் மலை மேல் தெரிந்த கோட்டை.....

நாத்துவாராவிலிருந்து புறப்பட்டு, தொடர்ந்து அஹமதாபாத் நகரை நோக்கி பயணித்தோம். அந்த வழியில் இருப்பது ஷாம்லாஜி என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு கோவில். ஷாம்லாஜியில் கோவில் கொண்டிருக்கும் சதுர்புஜ விஷ்ணுவின் தரிசனம் பார்த்த பிறகு அஹமதாபாத் செல்வதாகத் திட்டம். வழியிலேயே கேசரியா ஜி என்ற கோவிலும் உண்டு. கேசரியா ஜி கோவில் பற்றி முதலில் பார்க்கலாம்....

கேசரியாஜி கோவில் - படம் இணையத்திலிருந்து...

உதைப்பூர் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கேசரியாஜி ஒரு ஜெயின் வழிபாட்டுத் தலம். ரிஷப்தியோ என அழைக்கப்படும் தீர்த்தங்கரரின் மிகப்பெரிய சிலை இங்கே இருக்கிறது. முதலாம் தீர்த்தங்கருக்கு அமைக்கப்பட்ட கோவில் எனவும் சொல்கிறார்கள். இங்குள்ள மக்கள் நிறைய கேசர், அதாவது குங்குமப்பூ கொண்டு வந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். அதனை ரிஷப்தியோ சிலையில் பூசிப் பூசி சிவப்பு வண்ணம் வர, இங்குள்ள சிலைக்கும், ஊருக்கும், கேசரியாஜி என்ற பெயரே வந்துவிட்டது!

கேசரியாஜி - படம் இணையத்திலிருந்து...

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும் உண்டு.  கோவிலில் இருக்கும் முக்கியச் சிலையான ரிஷப்தியோ [ரிஷப் தேவ்] சுமார் 3 ½ அடி உயரம்.  பத்மாசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இருக்கும் இச்சிலை கருப்புக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.  அழகிய வேலைப்பாடுகள் பலவும் கொண்ட இவ்விடத்திற்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்பதால் இங்கே குறிப்புகள் தந்திருக்கிறேன்.  நாங்கள் நேராக ஷாம்லிஜி சென்று விட்டோம்.

ஷாம்லாஜி கோவில்

ஷாம்லிஜி கோவில்: பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மேஷ்வோ நதிக்கருகில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில். கோவிலின் அருகில் பல இடிபாடுகள், அங்கே பழங்காலத்தின் இன்னும் பல சுற்றுக் கோவில்களும் இருந்திருப்பதைக் காண்பிக்கிறது.  சுற்றுக் கோவில்கள் பலவும் அழிந்து விட்டாலும், ஷாம்லிஜி கோவில் மட்டும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது பராமரிப்பும் செய்து வருகிறார்கள் என்பதால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

ஷாம்லாஜி கோவில் - மற்றுமொரு கோணத்தில்...

கோவிலின் வெளியே இருக்கும் அலங்கார நுழைவு வாயில், கோவில், என எல்லா இடங்களிலும் இருக்கும் சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன.  கோவிலின் சுவர்களில் நிறைய இடங்களில் யானைகளின்சிற்பங்கள் உண்டு. அதைத் தவிர மற்ற சிற்பங்களும், கற்களில் செதுக்கப்பட்ட தோரணங்களும் பூக்களும் உண்டு.  ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து ரசிக்கலாம். கோவிலின் பின்னே ஷ்யாம் சரோவர் என்ற ஏரியும், மலைகளும் இருப்பதால் இயற்கை அழகையும் நீங்கள் ரசிக்க முடியும்.


 ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

கோவிலில் குடி கொண்டிருப்பது விஷ்ணுவின் த்ரிவிக்ரம ரூபம். நாங்கள் கோவிலின் உள்ளே நுழைந்த சமயம் மதிய வேளை நடக்கும் உச்சிகால பூஜை முடிந்து கோவில் மூடப்படும் சமயம். உள்ளே நுழையும் போதே கோவில் மூடப்போகிறது, விரைந்து உள்ளே வர வேண்டும் என அழைப்பு. விரைந்து உள்ளே சென்று ஷாம்லாஜியின் முன்னே வசதியாக நின்று எப்போதும் போல ஒரு ஹாய்சொல்லி, எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டுதல்.  சிறிது நேரம் வரை அங்கே நின்றபடியே மனதை ஒருநிலைப்படுத்தி தியானம்.  சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தோம்.


ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

கோவிலின் சுற்றுச் சுவர்களில் எத்தனை சிற்பங்கள், யானைகள் பதித்த தோரணங்கள், என ஒவ்வொன்றும் பழங்கால சிற்பக்கலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன. ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்கள் போலும்! அவர்களது கைவண்ணம் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் பொலிவுடன் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியும், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமே என்ற கவலையும் ஒரு சேர வருகிறது.

ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

சில சிற்பங்களை படம் எடுத்துக் கொண்டு எங்கள் வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  காலையில் நாத்துவாராவில் வாங்கி வைத்திருந்த குடிநீர் அனைத்தும் தீர்ந்திருக்க, கோவில் வாசலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் கொண்டோம்.  வழியில் வேண்டியிருக்குமே!  மதியம் ஆகிவிட்டாலும் பசி இல்லை...  மேலும் ஷாம்லாஜி கோவில் அருகே நல்ல உணவகங்களும் இல்லை என்பதால் நெடுஞ்சாலையில் எங்காவது நிறுத்தி உணவு சாப்பிடலாம் என முடிவு செய்தோம். 

ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்

ஷாம்லாஜி கோவில் சிற்பங்களை மனதில் நினைத்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் காட்சிகளைப் பார்த்தபடியே முன் இருக்கையில் அமர்ந்து வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று.  சாலைகளில் வாகனங்களுக்குள் நடக்கும் போட்டி – ஓட்டுனர்கள் நடத்தும் போட்டி நடந்தபடியே இருக்கிறது. எங்கள் ஓட்டுனர் [ch]சிராக்-உம் வாகனத்தினை நல்ல வேகத்தில் செலுத்திக் கொண்டு வந்தார். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களின் பின்னே எழுதி இருக்கும் வாசகங்களையும் கடந்து செல்லும் ஊர்களின் பெயர்களையும் படித்துக் கொண்டே வருவது நேரம் கடத்த உதவியாக இருக்கும்! அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர் அட போட்றா! வித்தியாசமான பெயர் தான்!

வாகனங்களுக்குள் போட்டி....

சற்று தூரம்/நேரம் பயணித்த பிறகு வயிறு “தினமும் என்னைக் கவனிஎன்று லாரிகளின் பேட்டரியில் எழுதி இருப்பதைப் போல, தன்னைக் கவனிக்கச் சொல்லி கூப்பாடு போட, ஓட்டுனர் [ch]சிராக்-இடம் நல்ல உணவகமாகப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொன்னோம்.  அவர் நிறுத்திய உணவகம் எது?, அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே பார்த்த காட்சிகள் என அனைத்தும் அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! சரியா!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

26 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. எனக்கு உங்களை நினைத்தாலேயே ஆச்சரியமாகி இருக்கிறது. எத்தனை இடங்கள் எத்தனை வித மனிதர்கள் கூடவே எத்தனைவிதக் கடவுள்கள் கொடுத்து வைத்தவர் நீர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சென்னைப் பயணம் முடித்து பெங்களூர் திரும்பி விட்டீர்கள் போல!

   கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில பயணங்கள் மேற்கொள்கிறேன். இப்பயணம் சென்று வந்து சில மாதங்களாகி விட்டன. இதற்கடுத்து ஒரு பயணம் சென்று வந்தேன். அதற்குப் பிறகு சுற்றுலா பயணங்கள் எதுவும் இல்லை - கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 3. சிற்பங்கள் ரசிக்க வைத்தன! அருமையான பயணத்தொடர்! வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.....

   Delete
 4. ஷாம்லா ஜி! கோவிலின் கட்டமைப்பு ஹளேபெடு பேலூர் கோவில்களின் கட்டமைப்பிற்கு ஓரளவிற்கு ஒத்துப்போகிறது. உங்களின் கருத்து என்ன?

  அடுத்து சென்ற உணவகம் பற்றி அறிய தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பேலூர் கோவில் இது வரை பார்த்ததில்லை. அதனால் படங்களில் பார்த்து தான் சொல்ல முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. வணக்கம்
  ஐயா
  அழகிய புகைப்படங்களுடன் அற்புதவிளக்கம் தந்தமைக்கு நன்றி.... தாங்கள் சொல்லியதை விட புகைப்படம் எடுத்த விதம் சிறப்பு ஐயா த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. பொறுமையாக,நிதானமாக ஒரு புத்தகம் தயாராகி வருவதை என்னால் உணர முடிகிறது.. அருமை!

  ReplyDelete
  Replies
  1. புத்தகம் தயாராகி வருவதை.... இப்போது தான் ஒரு மின்புத்தகம் வெளியிட்டு இருக்கிறேன். இரண்டாவது தயாராகி வருகிறது. இதுவும் பின்னொரு சமயத்தில் மின்புத்தகமாக வெளியிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 7. கடந்த இரண்டாண்டுகளாக தேவாரப்பாடல் பெற்ற தலங்களுக்கு கோயில் உலா சென்று வருகிறோம். இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கோயில்களுக்குச் சென்றுள்ளோம். அதே காலகட்டத்தில் உங்களது பதிவுகளின்மூலமாக வட இந்தியாவில் முற்றிலும் மாறுபட்ட கலை நுட்பங்களோடு அமைந்துள்ள கோயில்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கின்றது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தமிழகத்தில் இருக்கும் கோவில்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றை பார்க்க எனக்கு குறைவான வாய்ப்பு தான் கிடைக்கிறது. இங்கே நான் பார்த்த சில இடங்களை மட்டும் எனது பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள் மனதை கவர்ந்தன... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. ஹப்பா ஷாம்லாஜி கோயில் அழகு! சிற்பங்கள் என்ன ஒரு நுணுக்கமான வேலைப்பாட்டுடன்.....மனதை ஈர்க்கின்றது...அருமை ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. ஷாம்லிஜி கோவில் கலைநயத்தோடு கட்டப்பட்டு இருக்கிறது. பயணம் மிக அருமையாக செல்கிறது.
  தொடர்கிறேன். .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. படங்களும் பதிவும் அருமை. கேசரியாஜி பெயர் விசித்திரமாக உள்ளது.

  ஸ்வீட் ‘கேசரியா (வெங்கட்)ஜி?’ன்னு கேட்கணும் போல உள்ளது. :)

  ReplyDelete
  Replies
  1. ”கேசரியா [வெங்கட்] ஜி?” ஹா.ஹா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. மிகவும் அழகிய சிற்பங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 13. சிற்பக்கலை கண்ணைக் கவர்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....