எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 5, 2015

மிக்சட் ஜெய்ப்பூரி சப்ஜி


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 19

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18

ருக்மிணி தேவி கோவிலில் தரிசனத்திற்குப் பிறகு, அங்கிருந்து அஹமதாபாத் நோக்கி பயணித்தோம். அடுத்த நாள் காலையில் வேறு இடத்திற்குச் செல்ல திட்டம் இருக்கிறது. அதனால் இரவில் பயணத்தினை முடித்து விட முடிவு செய்தோம். நாங்கள் [B]பேட்[t] த்வாரகாவிற்கு படகில் சென்று திரும்பும் வரை ஓட்டுனர் வசந்த் [B]பாயும் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டதால் இரவில் பயணிக்க அவரும் தயார். த்வாரகாவிலிருந்து ஜாம்நகர் வழியாக அஹமதாபாத் வரை பயணிக்க வேண்டும். கிட்ட்த்தட்ட 440 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும்.  எட்டு முதல் ஒன்பது மணி நேரத்தில் கடந்து விடலாம் என ஓட்டுனரும் சொல்ல த்வாரகாவிலிருந்து புறப்பட்டோம்.

இரவு உணவு ஜாம்நகரில் உள்ள ஏதாவது உணவகத்தில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.  துவாரகாவிலிருந்து ஜாம்நகர் சுமார் 130 கிலோமீட்டர். இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜாம் நகர் தாண்டியவுடன் இருந்த விஷ்ராம் உணவகத்தில் வண்டி நிறுத்தினோம். விஸ்தாரமாகவும், சுத்தமாகவும் இருந்தது அந்த உணவகம். இரவு நேரத்திலும் மக்கள் வந்தபடியே இருந்தார்கள்.  உள்ளே வந்து உணவுப் பட்டியலைப் பார்த்து கொஞ்சம் லைட்டாக சாப்பிடலாம் என பார்த்தால் ரொட்டி மற்றும் சப்ஜி தான் இருந்தது. நிறைய குஜராத்தி உணவு வகைகளும் இருந்தாலும், ரொட்டி சப்ஜி சாப்பிட முடிவு செய்தோம்.

படம்: இணையத்திலிருந்து....

Mixed Jaipuri Subji, தால், ரொட்டி மற்றும் தயிர் கூடவே சலாட்! இது தான் எங்களது தேர்வு. சொல்லி முடித்து சில நிமிடங்கள் காத்திருந்தபின்னர் உணவினை ஒரு சிப்பந்தி எடுத்து வந்தார்.  மிக்சட் ஜெய்ப்பூரி சப்ஜி பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றியது. சில உணவு வகைகளை பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றும். சிலவற்றை பார்க்கும்போதே சாப்பிடப் பிடிக்காது! பீன்ஸ், சிம்லா மிர்ச் [குடை மிளகாய்], காரட் போன்ற காய்கறிகளைக் கலந்து சேர்த்த ஒரு சப்ஜி.  மேலே துருவிய பனீர்....  நன்றாகவே இருந்தது.  எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஒரு பதிவாகவே வெளியிடுகிறேன்.

உணவு நன்றாகவே இருக்க, எப்போதும் சாப்பிடுவதை விட இரண்டு ரொட்டி அதிகமாகவே உள்ளே போயிற்று. நாங்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் ஜாம்நகரிலிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து ராஜ்கோட் வழியாக அஹமதாபாத் வரை செல்லவேண்டும்.  எப்படியும் காலை ஆறு மணிக்குள் நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிடலாம். வழியெங்கும் இருக்கும் ஊர்களில் இரவு வேளை என்றாலும் கூட மக்கள் நடமாட்டம் இருந்தது.

படம்: இணையத்திலிருந்து....

நடுவில் ஒரு ஊரைக் கடக்கும் போது நள்ளிரவு. அந்த நேரத்திலும் முக்கிய சந்திப்புகளில் மக்களின் கூட்டம் இருந்தது. ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.  நவராத்திரி சமயம் என்பதால் ஆங்காங்கே கொண்டாட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. நவராத்திரி என்றாலே குஜராத் பகுதிகளில் டாண்டியா நடனம் உண்டே. சில இடங்களில் பந்தல்கள் அமைத்து டாண்டியாவிற்கான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, கர்ப்பா” [Garba] எனப்படும் டாண்டியா நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

நடுவில் கொஞ்சம் நிறுத்தி அந்த நடனத்தினைப் பார்க்கலாம் என நினைத்தாலும், நேரம் ஆகிவிடுமே என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயணித்தோம்.  அந்தப் பகுதியில் நான் கண்ட காட்சி வேறு எந்த ஊரிலும் பார்த்திராதது!  சரியாக பன்னிரெண்டு மணி. பெரும்பாலான கடைகள் மூடியிருக்க, ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்தது. கர்ம சிரத்தையாக திறந்திருந்த கடை - முடிவெட்டும் சலூன்! அந்த நேரத்திலும் ஒரு வாடிக்கையாளர் அவரிடம் முடிதிருத்தம் செய்து கொண்டிருந்தார்!

தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். பின் இருக்கைகளில் மற்ற இருவரும் உறங்கிக் கொண்டிருக்க, மாவா மசாலாவினை வாயில் அடக்கியபடி வசந்த் [B]பாய் வாகனத்தினை ஓட்டிக் கொண்டிருந்தார். நான் கண் விழித்தபடியே அவரிடம் நடுநடுவே பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  பின்னிரவில் மூன்று மணிக்கு தேநீர் அருந்தலாம் என நெடுஞ்சாலையில் இருந்த ஒரு உணவகத்தில் வண்டியை நிறுத்தினோம்.  இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு தேநீர் அருந்தினோம்.

வசந்த் [B]பாய் எனக்கு கண்களைச் சொக்கிக் கொண்டு வருகிறது கொஞ்சம் இங்கேயே ஓய்வு எடுத்துக் கொண்டு தொடரலாம் எனச் சொன்னார்.  ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த உணவகத்தின் வாசலிலேயே வண்டியில் ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்து, அவர் உறங்க, பின் இருக்கைகளில் நண்பர்களும் உறங்க, நான் மட்டும் தூங்காமல் அமர்ந்து கொண்டிருந்தேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வசந்த் [B]பாய் கண்விழித்து, சற்றே புத்துணர்வுடன் இருந்தார். கொஞ்சம் தூக்கமும் அவசியம் ஆயிற்றே.  இப்படிச் சொல்லாமல் வண்டியை ஓட்டியிருந்து தூங்கியிருந்தால் விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறதே. நல்ல வேளையாகச் சொன்னாரே என்று நினைத்துக் கொண்டேன்.  மீண்டும் ஒரு தேநீர் அருந்தியபின்னர் அந்த உணவகத்திலிருந்து புறப்பட்டோம். சாலைகளில் வாகனங்கள் பயணித்தபடியே இருந்தன.   அந்த வாகன வெள்ளத்தில் நாங்களும் கலந்தோம்.

தொடர்ந்து பயணித்து விடிகாலையில் அஹமதாபாத் நகருக்குள் நுழைந்துவிட்டோம்.  வழியிலேயே ஒரு கடையில் பால் மற்றும் காய்கறிகள் வாங்கிக் கொண்டு நண்பரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.  நண்பர் அலுவலக விஷயமாக பயணத்தில் இருந்ததால், ஏற்கனவே எங்களிடம் வீட்டிற்கான ஒரு சாவியைக் கொடுத்திருந்தார். வீட்டைத் திறந்து கொடுத்து, ஒரு காப்பியும் குடித்து வசந்த் [B]பாய் எங்களிடமிருந்து விடை பெற்றார்.  சற்றே ஓய்வெடுத்தபிறகு அன்றைய நாள் செல்ல வேண்டிய இடத்திற்குத் தயாராக வேண்டும்...

அன்றைய பயணத்திற்கு வேறு ஒரு வாகனம் சொல்லி இருந்தோம். அந்த வாகனத்தினை ஓட்டப் போவது யார், அவருடன் பயணித்த அனுபவம் என்ன, பயணித்தது எந்த இடத்திற்கு போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் பார்க்கலாமா! இரவு முழுவதும் தூங்கவில்லையே!  கண்களில் ஒரு அசதி! கொஞ்சமாக நான் ஓய்வெடுத்துக் கொள்கிறேன்!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 comments:

 1. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஐயா
  உறக்கம் கலைந்த பின் பயணத்தைத் தொடர்வோம்
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. தலைப்பே வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து வருகிறோம். நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. விவரித்துப் போனவிதம்
  நேரடியாகப் பார்ப்பது போல இருந்தாலும்
  படங்கள் இருந்திருந்தால் இன்னும்
  சிறப்பாக இருந்திருக்கும்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இரவு நேரப் பயணத்தில் படங்கள் அவ்வளவாக எடுக்க வில்லை என்பதால் இங்கே பகிர்ந்து கொள்ள வில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. ஊர் ஊருக்கு போய் அங்கே ஸ்பெஷல் ஐட்டங்களை ருசிபார்துவிட்டு பதிவாய்ப் போட்டு எங்கள் காதில் புகை வரவழைப்பதே பொழப்பா போச்சு....
  ஹும் ... அடுத்த பயணம் எப்போ ?பதிவு தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... விரைவில் எப்படிச் செய்வது என்று குறிப்பு தருகிறேன். மைதிலி செய்து தர ருசியுங்களேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 5. வசந்த் போய் எந்த பசந்த் வரப் போகிறாரோ :)

  ReplyDelete
  Replies
  1. வசந்த் போய் பசந்த்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 6. எளிமையான நடையில் பயணம் பற்றி சொல்லி செல்லும் உங்கள் பாங்கு மிக அருமை... இப்படி பதிவுகள் எழுதும் போது நீங்கள் எடுத்த ஒரிஜனல் படங்களை பதிந்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அது நீங்கள் விவரிக்கும் சூழ்நிலையை ஒவியமாக நம் கண்முன் எடுத்துகாட்டும்...பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. இரவு நேரப் பயணத்தின் போது படங்கள் எடுக்கவில்லை மதுரைத் தமிழா. எடுத்திருந்தால் அவற்றையே பகிர்ந்து கொண்டிருப்பேன். வரும் பதிவுகளில் நான் எடுத்த படங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. ஓய்வெடுத்து எழுதுங்கள்...நாங்கள் காத்திருக்கிறோம்...அருமையான மெல்லிய நீரோட்டமாய் ஒரு நடை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ”நான் ஒன்று சொல்வேன்”....

   Delete
 8. இரவு முழுவதும் தூங்காத நீங்கள் எப்போதுதான் தூங்குவீர்கள் என்று கேட்க நினைத்தேன். இன்னொரு சந்தேகமும்!! லீவு விஷயங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

  சப்ஜி செய்முறைக்குக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... சில பயணங்களில் தூங்காமலே இருந்ததுண்டு.... இப்போதெல்லாம் இல்லை! முன்பு! விடுமுறை - சனி, ஞாயிறு ஒட்டி வரும் விடுமுறை என கிடைத்த சமயத்தில் பயணித்தது. விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. சில சமயங்களில் விடுப்பு எடுத்து பயணிப்பதும் உண்டு! வடகிழக்கு மாநிலப் பயணம் - இரண்டு வாரம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. பயண அனுபவங்களின் பதிவு தொடரட்டும். செய்முறையும் இந்தப் பதிவில் இருக்குமென நினைத்தேன்:).பகிரக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. செய்முறை விரைவில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. உணவை பார்க்கையிலேயே ருசி பார்க்க தூண்டுவது உண்மைதான்! இரவுப்பயணமெனில் ஓட்டுனருக்கு கொஞ்சம் ஓய்வு அவசியம்தான். வசந்த்பாய் ஓய்வை கேட்டு எடுத்து பயணித்தது சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. இந்தக் கலவைக் காய்கள் சேர்த்துச் செய்யும் கூட்டு/கறி உண்மையிலேயே சுவையாகவே இருக்கும். :) பயண அனுபவங்கள் சுவாரசியம். மற்றவற்றை இனிமேல் தான் படிக்கணும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 12. நாளை மீண்டும் சந்திப்போம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் அண்ணா...
  தீபாவளி, பொங்கல் போன்ற நேரங்களில் நம்ம ஊரில் இரவு நேரத்தில் சலூன் இருக்கும்... அப்படி நவராத்திரி என்பதால் இருந்திருக்குமோ...?

  அருமையான பயணப் பகிர்வு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 14. சிறப்பான பகிர்வு!
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 15. இரவில் பயணிப்பதை தவிர்க்கவும். பகல் மற்றும் இரவில் தொடர்ந்து வாகனத்தை ஓட்டுவது வாகன ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கும் நல்லதல்ல. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இரவுப் பயணம் சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. முடிந்த வரை தவிர்க்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. ஓய்வு கட்டாயம் வேணும்தான். நோ ஒர்ரீஸ்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....