பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 20
விடிகாலை
அஹ்மதாபாத் நண்பர் வீட்டிற்கு வந்து, நண்பர்கள் தயாராகும் வரை சற்றே
ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கத் துவங்கினோம். அடுத்ததாக நாங்கள் செல்ல இருப்பது சித்தாபூர்
என்று அழைக்கப்படும் இடத்திற்கு.
அஹமதாபாத் நகரிலிருந்து சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சித்தாபூருக்கு
குஜராத் மாநில நெடுஞ்சாலை 41 வழியாகச் சென்றால் சுமார் இரண்டு மணி
நேரமாகலாம். மிகவும் சிறப்பு வாய்ந்த
இவ்விடத்திற்கு நாம் செல்லப்போவது காந்திநகர், மெஹ்சானா வழியாகத்தான்.
மெஹ்சானா
மாவட்டத்தினை பாற்கடல் என்றே சொல்லலாம்! அத்தனை பால் தொழிற்சாலைகள் இவ்விடத்தில்
உண்டு. எல்லா வீடுகளிலும் மாடுகள்,
மாடுகள் – மாவட்டம் முழுக்க எண்ணிலடங்கா மாடுகள். பால் உற்பத்தி தான் முக்கியமான
தொழில். பாலுக்கும், பால் கொடுக்கும் கறவைகளுக்கும் மிகவும் முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள். மாடுகளுக்கு தொடர்ந்து மருத்துவ உதவி – அரசாங்கமே கொடுக்கிறது.
போலவே காப்பீடும் செய்து கொள்ள வேண்டியது கட்டாயப் படுத்தப்பட்ட ஒன்று. கறவை
மாடுகள் இறந்து விட்டால் நஷ்ட ஈடு கிடைக்கிறது.
பாலுக்கும்
கறவை மாடுகளுக்கும் முக்கியத்துவம் என்பதால், நகரின் பல முக்கியமான சாலை
சந்திப்புகளில் சிலை வைத்திருக்கிறார்கள் – அரசியல்வாதிகளுக்கோ தலைவர்களுக்கோ அல்ல!
இங்கே சிலை வைத்திருப்பது பால் Can, கறவை மாடுகள்,
வணக்கம் சொல்லும் கைகள் என நிறைய இடங்களில் பார்க்க முடிந்தது. சாலையில்
பயணித்தபடியே எடுக்க முடிந்தது ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே – வணக்கம் சொல்லும்
கைகள் சிலை மட்டும்.... சில இடங்களில்
தலைவர்கள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் நாங்கள் பார்த்த பல இடங்களில்
இருந்தது மேலே சொன்ன மாதிரி சிலைகள் தான்.
இப்படி
வழியே வரும்போது நிறைய ஒட்டக வண்டிகளையும் பார்க்கமுடிந்தது. நம்ம ஊர் மாட்டு
வண்டியைப் போல இங்கே ஒட்டக வண்டி! அம்மாடி எத்தனை உயரம் இந்த ஒட்டகம். மாடு மேய்ப்பது
போலவே இங்கே ஒட்டகங்களை மேய்க்கிறார்கள்!
வழியில்
வரும்போதே இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே எங்களது இலக்கான சித்தாபூர் வந்தடைந்தோம்.
சித்தாபூர் எனும் இடத்திற்கு ”மாத்ரு கயா” என்ற பெயரும் உண்டு. வாரணாசிக்கு அருகே
இருக்கும் கயாவை பித்ரு கயா என்றும் சித்தாபூரை மாத்ரு கயா என்றும் சொல்கிறார்கள்.
மாத்ரு கயாவில் தனது அன்னைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக நண்பர்
வந்திருந்தார். இங்கே கன்னடர்களின் மடமான
உத்திராதி மட் இருக்கிறது. அங்கே முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
நண்பரும் அவரது மனைவியும் அந்த கார்யங்களில் ஈடுபட, நானும் ஓட்டுனரும் காலை உணவினை
எடுத்துக்கொள்ள உணவகத்திற்கு விரைந்தோம்.
வழியில் பார்த்த ஒரு கோவில்....
முக்கியச் சாலையில் தான் உணவகங்கள்
இருக்குமென்று சொல்ல, அங்கு விரைந்தோம். பார்த்த முதல் உணவகமே பிடித்துப் போனது –
சரி என உள்ளே நுழைந்தோம். மெனு கார்டு பார்த்து ஓட்டுனர் இட்லி சாம்பார் சொல்ல,
நானும் யோசிக்காது அதையே சொல்லி விட்டேன் – அது தவறென்று உணவு வந்தபின்னர் புரிந்தது!
ஒழுங்காக போஹா சொல்லி இருக்கலாம்! போஹா என்பது அவல்.... அவல் பயன்படுத்தி உப்புமா மாதிரி செய்து
கொடுப்பார்கள். அதை விட்டு இட்லி சொன்னது பிசகு!
”இட்லியும் வந்தது கூடவே சாம்பாரும் வந்தது...... வாயில் கொஞ்சம் போனது! அதன் சாயம் வெளுத்தது!” மூன்றாம் பிறை படத்தில் கமல் பாடிய நரிக்கதை
மாதிரி இட்லி-சாம்பாரின் சாயம் வெளுத்தது!
இட்லி ரொம்பவே ஸ்ட்ராங்க்! யாரையாவது அடிக்க வேண்டுமெனில் விட்டு எறிந்தால்
கபாலம் காலியாகிவிடுவது உறுதி! சாம்பாரில் முக்கியாவது சாப்பிடுவோம் என அதைச்
செய்ய, புளி போட்ட பாயசம் சாப்பிட்ட உணர்வு! சாம்பாரில் அத்தனை வெல்லம் போட்டு
இருந்தது! ஒரு வழியாக இட்லிகளை உள்ளே
தள்ளி அவற்றை வயிறு வரை அனுப்ப மேலே ஒரு தேநீரையும் உள்ளே தள்ளினேன்!
மீண்டும் உத்தராதி மடம் – நண்பர் தனது தாய்க்கு
செய்ய வேண்டிய சில கடன்களை செய்து கொண்டிருந்தார். அதற்குள் நாம் மாத்ரு கயா
பற்றிய சில கதைகளைப் பார்க்கலாம். சித்தாபூர், மாத்ரு கயா என்று அழைக்கப்படும்
இவ்விடத்திற்கு ஸ்ரீ-ஸ்தல் அதாவது புண்ணிய பூமி என்ற பெயரும் உண்டு. கங்கையும்
சரஸ்வதி நதியும் இணையும் இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இவ்விடத்தில் கண்டர்ம
மகரிஷியும் அவரது மனைவி தேவஹூதியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஏழு
மகள்கள். அவர்களை சப்த ரிஷி என அழைக்கப்படும் வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர்,
காஸ்யபர், விஸ்வாமித்திரர் மற்றும் அத்ரி ஆகிய ரிஷிகளுக்கு மணம் முடித்து வைத்ததாகவும்
கதை. தனக்கு ஒரு மகன் வேண்டும் என ரிஷியும் அவரது மனைவியும் பல ஆண்டுகள் தவம்
இருக்க, விஷ்ணுவே அவர்களுக்கு மகனாக பிறப்பதாக வரம் அளித்தாராம்.
அப்படி பிறந்தவர் தான் கபிலர். பல
நற்காரியங்களை உலகத்திற்கு போதித்த கபிலர் அதைத் தொடர்ந்து பல இடங்களுக்குச்
சென்று போதனை செய்ய புறப்பட்டார். புறப்படும்
முன்னர் தனது தாய் மோக்ஷம் தர வேண்டிக்கொள்ள அவருக்கு மோக்ஷத்திற்கான வழியைச்
சொல்லி புறப்பட்டார். இங்கே இருக்கும்
பிந்து சாகர் என அழைக்கப்படும் நீர்நிலையில் மோக்ஷம் அடைந்தார். கபிலரின் தாயார் மோக்ஷம் அடைந்த இந்த இடம் அதன்
பிறகு மாத்ரு கயா என்று அழைக்கப்பட்டது. இங்கு தாயாருக்கு சிரார்த்தம் செய்வது
சிறப்பானது என்றும் ஒரு நம்பிக்கை.
இங்கே ஒரு சிவன் கோவிலும் சில பழமையான
கோவில்களும் உண்டு. மிகவும் பழமையான கோவில் என்றாலும் நாங்கள் அங்கே செல்ல
வில்லை. நண்பர் அவரது வேலைகளை
முடிப்பதற்குள் கோவில் மூடிவிட்டது. பிறிதொரு சமயத்தில் இங்கே வரும்போது
பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து, மதிய உணவினை மடத்திலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து
புறப்பட்டோம்.
அடுத்ததாய் நாம் செல்லப்போகும் இடம் பஞ்ச
த்வாரகாவில் இன்னுமொரு இடம்..... அது என்ன
இடம், எங்கே இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமா!
நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும்
வரை....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
இட்லி அனுபவம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குதொடர் பயணத்தில் நானும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்..பயணம் மிக அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குவணக்கம் சொல்லம் கைகள்
பதிலளிநீக்குவித்தியாசமான சிலைதான் ஐயா
நன்றி
தம 1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபயணங்கள் இனிமையானவை...சற்று பொறாமைகூட வருது சார்...அடுத்த பதிவிற்கு காத்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குபொறாமை... :))) பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வீர். பொறாமை நல்லதல்ல! தவிர்த்து விடுங்கள்! அறிவுரை கூறுமளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் இல்லை. இருந்தாலும் சொல்லி விட்டேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ஹை!! இன்னொரு பயணத்தொடர்!!! தொடருங்கள் பயணத்தை!!
பதிலளிநீக்குஇந்த பயணத் தொடர் ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு! இது 20-வது பகுதி! :) இன்னும் சில பதிவுகள் இதிலேயே வரும். அதற்குப் பிறகு தான் அடுத்த தொடர்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.
நான் வட நாட்டில் பணி செய்து கொண்டிருந்தபோது உணவகம் சென்றால் பூரி தான் சாப்பிடுவது வழக்கம். அவர்களுக்கு தென்னிந்திய உணவுகள் செய்ய வராது என்பது என் கருத்து. தொடர்கிறேன் அடுத்த இடம் பற்றி அறிய.
பதிலளிநீக்குபல இடங்களில் காலை வேளைகளில் பூரி-சப்ஜி, பராட்டா போன்றவை கிடைக்கின்றன. அதைத் தான் சாப்பிடுவது வழக்கம். அன்று ஏதோ ஒரு எண்ணத்தில் இட்லி சொல்லிவிட்டேன்! (
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
இந்த கை இவ்வளவு தத்ரூபமா இருக்கே ,போட்டோதானா :)
பதிலளிநீக்குசிலையே தான். அதை எடுத்த ஃபோட்டோவே தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
தங்களுடைய பயணத்தில் - நிறைய செதிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது..
பதிலளிநீக்குபுளி பாயசம் - அருமை..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குசிலைகளைப் பற்றிய தகவல் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஒட்டக சவாரி போக ஆசையாய் இருக்கு சகோ!
பதிலளிநீக்குஒட்டக சவாரி போக ஆசை - நல்ல ஆசை உங்களுக்கு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
புளிப் பாயாசம்!! கர்நாடகா பக்கங்களில் கூட சாம்பார் இனிப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குகர்நாடக சாம்பாரை விட இனிப்பு அதிகமாக இருந்தது.... ஒரு கப் சாம்பாரிலேயே 100 கிராம் வெல்லம் இருந்தால் போல இருந்தது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இனிய பயணக் கட்டுரை. நானும் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குத ம 7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.
நீக்குஅனுபவம் அருமை...
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2015/11/Mind-Stain-Flaws.html
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகூப்பிய கைகள் சிலையா? நீங்கள் செய்த போட்டோஷாப் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குஇங்கு தானே அமுல் பால் தொழிற்சாலை இருக்கிறது? வெள்ளைப் புரட்சி செய்த இடம் அல்லவோ?
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள், உங்களுக்கும், ஆதி, ரோஷ்ணிக்கும்!
சிலையே தானம்மா.....
நீக்குஎன்னிடம் ஃபோட்டாஷாப் இல்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
புளி பாயாசம் என்பதைப் பார்த்த உடனேயே குஜராத் சாம்பார் என்பது புரிந்து போனது.. .கர்நாடக சாம்பார், ரசம் விட அதிக இனிப்பு..
பதிலளிநீக்குகதைகளுடன் தகவல்கள் சிறப்ப்பு. அந்த ஒட்டகம் அழகு. வணக்கம் கை ரொம்ப அழகாக வித்தியாசமாக இருக்கின்றது.
தொடர்கின்றோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குகூப்பிய கையை சிலை என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. தமிழ்னாட்டிலும் இப்படி ஒவ்வொரு மாவட்டத்தையும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்களை ஊக்குவித்தால் எப்படி இருக்கும்...ம்.ம்.ம்.. அப்போ அப்போ வெளியில் சாப்பிடுவதால் வீட்டுச் சாப்பாட்டு அருமை தெரிந்தால் சரி. ... (தென்னிந்திய உணவு)
பதிலளிநீக்குதொழில்களை ஊக்குவித்தால்.... நல்ல ஆசை தான். நடக்கணுமே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
டெல்லியிலே சர்தார்ஜிக்கள் கூட இட்லி , தோசை நன்றாகச் செய்கிறார்கள். ராஜஸ்தானில் நாங்க இந்தச் சோதனையை மேற்கொண்டதில்லை.
பதிலளிநீக்குஇங்கே சமையல் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் ஒருவரிடம் நேபாளி இளைஞர் ஒருவர் வேலைக்கு இருக்கிறார். அவர் இப்போது அனைத்து தென்னிந்திய உணவுகளையும் மிகவும் ருசியாகச் சமைக்கிறார். ஜாங்கிரி பிழிவதிலிருந்து, பால் பாயசம் வைப்பதிலிருந்து, அனைத்துமே செய்கிறார்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..