திங்கள், 28 ஏப்ரல், 2014

நைனிதால் – ஒன்பது முனை ஏரிஏரிகள் நகரம் – பகுதி 10

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09

ஏரிகள் நகரம் தொடரின் பகுதி ஒன்பதினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

பீம்தாலினை அடுத்து நாங்கள் பார்த்த இடம் என்ன? அந்த இடமும் ஒரு ஏரி தான். நைனிதால் என்றாலே ஏரிகள் நகரம் தானே...  சுற்றிச்சுற்றி ஏரிகளும் மலைப்பகுதிகளும் எல்லா திசைகளிலும். நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்!

 ரம்மியமான சூழல் பார்க்கும்போதே
இங்கே செல்ல ஆசை வருகிறது அல்லவா.....

நோக்குச்சியா தால் – ஹிந்தியில் நோ [ஆங்கில No அல்ல! :)] என்றால் ஒன்பது எனும் எண் - ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே, சாத், ஆட், நோ....  வரிசையில் வரும் நோ! இந்த பெயரில் நோ என்பது இருப்பதால் இது எதோ ஒன்பதாம் எண்ணைக் குறிப்பதாக நினைத்தால் அது தான் சரியான எண்ணம்.  குச்சியா... என்பது முனைகளைக் குறிக்கும் ஒரு சொல்.  அதாவது இந்த ஏரிக்கு ஒன்பது முனைகள் – அதனால் நோகுச்சியா தால்! 

 படகுப் பயணம் செல்ல நீங்கள் தயாரா? கேட்காமல் கேட்கிறதோ இப்படகு?

நைனிதால் நகரிலும், அருகிலுள்ள இடங்களிலும் இருப்பதிலேயே ஆழமான ஏரி இந்த ஒன்பது முனை ஏரி. சுமார் ஒரு மீட்டர் நீளமும் நாற்பது அடி ஆழமும் உள்ள ஏரியாக இதைச் சொல்கிறார்கள். ரொம்பவும் பழமையான ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று.  பழமையான இடம் என்றாலே அதைச் சுற்றி நிறைய கதைகளும் இருக்கும் அல்லவா – இந்த ஒன்பது முனை ஏரி பற்றியும் நிறைய கதைகள் உண்டு – அவை கட்டுக்கதைகளோ உண்மையோ என்பதை இங்கே ஆராயப் போவதில்லை!

 இக்கட்டிடத்தில் ஒரு இடம் கிடைத்தால் தங்கிவிட உத்தேசம்...  மலையும் ஏரியும் இருந்துவிட்டால் போதுமா? வேலை வேண்டுமே!

இந்த ஏரியின் அருகே தரையில் நின்றபடியே ஒருவரால் ஏரியின் ஒன்பது முனைகளையும் பார்க்க முடிந்தால் அப்படியே காற்றில் கரைந்து பரமனின் பாதங்களை அடையலாம் என்று சொல்கிறார்கள்.  இத்தனை பெரிய ஏரியின் ஒன்பது முனைகளையும் நின்ற இடத்தில் இருந்தே பார்ப்பது கடினம் என்பதை இப்படி முடியாத ஒன்றை சமன்படுத்திச் சொல்லி இருக்கிறார்கள் போல!

 மலையோரம் வீசும் காற்று.....
படகிலிருந்து எடுத்த படம்....

மிக அழகான ஏரி. சென்ற பகுதியில் பார்த்த பீம்தால் போலவே,  இங்கேயும் நிறைய வாத்துகள் சுற்றிக் கொண்டிருந்தன.  மாலை நேரம் என்பதால் எங்கெங்கும் ஒரு வித அமைதி – மனதைக் கொள்ளைக் கொண்டது. படகுகள் காத்திருக்க, ஒரு பயணம் செய்ய நினைத்தோம். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் என்பதால் சூரியன் மறைய மறைய குளிர் தனது விகார முகத்தினைக் காட்டத் துவங்கி இருந்தது.

 இன்னுமொரு படம் - படகிலிருந்தபடியே எடுத்தது

கைகளுக்கு கை உறைகள், தலையும் காதும் மூடுவது போன்ற குல்லாய்கள், காலிற்கு காலுறைகள், காலணிகள், குளிருக்கான உடை என்று தயாராக இருந்தாலும் அத்தனையையும் தாண்டி நரம்புகளையும் எலும்புகளையும் தனது வலிமையைக் காட்டித் தாக்கத் துவங்கியது குளிர்.  ஆனாலும் அது ஒரு அற்புத அனுபவமாகத்தான் இருந்தது. அரை மணி நேரம் அந்த சூழலில் ஏரியில் ஒரு இனிமையான படகுப் பயணம் செய்து வந்தோம். 

 நான் தான் பஹாடி நிம்பு..... 

ஏரியில் பயணிக்கும் போது சுற்றிச் சுற்றி அடிக்கும் குளிர் காற்றில் காமிராவில் கிளிக் செய்வதே – அதுவும் கையுறைகள் அணிந்து புகைப்படங்கள் க்ளிக் செய்வது கடினமாக இருந்தது! பயணம் முடித்து கரைக்கு வந்தால் சுடச்சுட தேநீர் குடித்தே ஆகவேண்டிய நிலை! ஏரியோரம் அமைந்திருந்த ஒரு சிறிய கடையில் தேநீர் தயாரிக்கும்படிச் சொல்லி சுற்று வட்டாரத்தினை நோக்கினோம்!

 யாருப்பா அது! இயற்கையை படம் பிடிக்காது மனிதனைப் படம் பிடிப்பது?

 என்னமோ போங்க! இந்த சக்ரீன் டச்ல படம் எடுக்கவே தெரியல! - குளிர் அவஸ்தையில் படம் எடுப்பதை படம் எடுத்தது நண்பர்...
ஒரு குழந்தையும் அவரது தந்தையும் அங்கே இருந்த பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள் – அவர்களும் சுற்றுலாப் பயணிகள் தான். ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் – அவரையும், அவரது குழந்தையையும் தனது சக்ரீன் டச்அலைபேசியில் படம் எடுத்துத் தரச் சொன்னார் – கையுறைகள் அணிந்த கைகளுடன் படம் பிடிக்க ரொம்பவே கஷ்டமாக இருக்க, ஆனது ஆகட்டும் என ஒரு கையில் மட்டும் கையுறைகளை கழற்றி அவர்களைப் படமெடுத்தேன்! [நான் திண்டாடுவதைப் படமெடுத்த நண்பர் பிரமோத் வாழ்க!]

 ஓடம் நதியினிலே.......

தேநீர் கடையில் சில பழங்களும் அடுக்கி வைத்திருந்தது – என்ன பழம் என்று கேட்டால் “பஹாடி நிம்புஎன்றார் கடைக்காரர். அதாவது மலை எலுமிச்சை....  பார்க்க நமது கிடாரங்காய்/நார்த்தங்காய் மாதிரியே இருக்கிறது. நம் வீட்டில் உள்ள பெண்மணிகளை அழைத்துச் சென்றிருந்தால் வாங்கி ஊறுகாய் போட்டிருப்பார்கள்! நாமும் ருசித்து சாப்பிட்டு இருக்கலாம்! :)  நானே வாங்கி வந்து ஊறுகாய் போட நினைத்தேன் – பார்க்கும்போதே நன்றாகவும் அழகாகவும் இருந்ததால்! 

 ”எலே..... கூட்டமா நின்னு என்னலே பண்ணுறீங்க!”
குளிர்காயும் மக்கள்!

அங்கே சுடச்சுட தேநீர் குடித்து உடம்பிற்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொண்டபின் எங்கள் பயணம் தொடர்ந்தது. செல்லும் போதே வழியில் ஒரு பெரிய ஹனுமன் சிலையைப் பார்த்திருந்ததால் அங்கே சென்று ஹனுமனுக்கு ஒரு வணக்கம் சொல்ல அங்கே விரைந்தோம். 

ச்ச்சீ.... எனக்கு வெக்கமா இருக்கு.... நான் முகம் காட்ட மாட்டேன்” சொல்லும் பூனையார்.

பிரதான சாலையிலேயே 52 உயரத்தில் அசால்டாக நிற்கிறார் அனுமந்தலு. ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவில் போலவே இங்கே செயற்கையாக குகை அமைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறார்கள்.  பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும். இங்கேயும் அப்படியே! வெளியே நின்றபடியே அனுமனுக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு பயணத்தினைத் தொடர்ந்தோம்.

அடுத்து நாங்கள் சென்ற இடத்திற்கும் குளிருக்கு இதமாய் நாங்கள் அருந்திய தேநீருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன அடுத்த பதிவில் பார்க்கலாமா!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஒரு செய்தி:  அலுவலத்தில் பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகம்.  அதுவும் மே மாதம் முழுவதும் தென்னிந்தியா வருவதாக எண்ணம். அதனால் விடுமுறைக்கு முன் வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயம். அதனால் எனது பக்கத்தில் பதிவுகள் தொடர்ந்து வெளிவராது.  முடிகிற நேரத்தில் பதிவுகள் வெளியிடுகிறேன். மற்றவர்களின் பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.  இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் உங்களுக்கு மட்டுமே! :)

புதன், 23 ஏப்ரல், 2014

[G]காஜர் பராட்டா....
பதிவர் ஆசியா உமர் அவர்கள் தனது சமைத்து அசத்தலாம்பக்கத்தில் ஒரு முறை விருந்தினர் சமையலுக்கு சமையல் குறிப்பு அனுப்புங்களேன் என்று கேட்டிருந்தார். அப்போது எழுதி வைத்த பதிவு இது – ஆனா அவங்களுக்கு அனுப்பல! அது இன்றைய பதிவாக.....

ஹிந்தியில் [G]காஜர் என்றால் கேரட். நம் ஊரில் கிடைக்கும் காரட் போல ச்சப்புன்னு இல்லாம இங்கே வடக்கில் கிடைக்கும் கேரட் மிகவும் சுவையாக இருக்கும். குளிர் காலங்களில் நிறையவே கிடைக்கும். அந்த சமயத்தில் ஒரு கிலோ கேரட் பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விற்கும். இரண்டு மூன்று கிலோ வாங்கி வந்து பச்சையாகவோ, கேரட் ஹல்வா, பராட்டா எனவோ செய்து சாப்பிடுவது வழக்கம். இன்றைக்கு [G]காஜர் பராட்டா செய்வது எப்படி எனப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் – மூன்று கப்.
பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – அரை கப்
பச்சை மிளகாய் – மூன்று [காம்பினை அகற்றி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்]
துருவிய இஞ்சி – அரை ஸ்பூன்.
மல்லி மற்றும் ஜீரகம் பொடி செய்தது – இரண்டு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன். 
ஓமம் - அரை ஸ்பூன்
உப்பு – உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு!
கோதுமை மாவு – ஆறு கப்.
எண்ணை தேவையான அளவு.
இதையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன என்று பார்க்கலாம்!

ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் – கண்ணாடி கிண்ணம் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது – கீழே போட்டு விடுவேன் என நினைத்தால் – வாய் அகன்ற வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேற்கண்ட அனைத்தையும் [எண்ணை தவிர] போட்டு நல்லா ஒரு கலக்கு கலக்குங்க! கொஞ்சமா தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து கொள்ளுங்கள்.  சாதாரணமாக தேவைப்படும் தண்ணீரை விட குறைவாக இருப்பது நல்லது. நன்கு சேர்ந்து வந்ததும் கொஞ்ச நேரம் அங்கிருந்து நகர்ந்து வந்து பதிவுலகம் எப்படி இருக்குன்னு எட்டிப் பார்த்துடுங்க! எதாவது பதிவு போட்டிருந்தால், அதற்கு கருத்து ஏதும் வந்திருக்கிறதா எனப் பார்த்து அதை பப்ளிஷ் பண்ணுங்க! ஒண்ணுமே comment வரலையே, என்ன பண்றது?என்று கேட்காமல் மத்தவங்களோட ஒரு பதிவு பார்த்து கமெண்ட், ஓட்டு எல்லாம் போட்டுட்டு திரும்பவும் கிச்சனுக்கு வாங்க!
பிசைந்து வைத்த மாவினை ஒரு சப்பாத்திக்கு எடுத்துக் கொள்ளும் மாவினை விட கொஞ்சம் அதிகம் எடுத்து உருண்டைகளாக உருட்டி வைச்சுக்கோங்க! அப்புறம் பூரிக்கட்டை, சப்பாத்திக்கல் இரண்டையும் எடுங்க! சப்பாத்தி மாதிரியே இடுங்க! கொஞ்சம் தடிமனா இருக்கட்டும்.  அதை தவாவில் போட்டு எண்ணையோ அல்லது நெய்யோ விட்டு நல்லா சுட்டு எடுங்க! கொழுப்பு அதிகம்னு நினைச்சா நெய் வேண்டாம்.  கொழுப்பில்லா எண்ணை பயன்படுத்தலாம்! இரண்டு பக்கமும் நல்லா பொன்னிறமா வெந்த பிறகு ஒரு ப்ளேட்ல எடுத்து போட்டுடுங்க! இப்படியே இருக்கிற எல்லா உருண்டைகளையும் பராட்டாவா போட்டு எடுத்துடுங்க!சுடச்சுட தட்டுல போட்டு வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் கொடுங்க! என்னது சைட் டிஷ் என்னவா? இதுக்கு சைட் டிஷ் ஒண்ணுமே வேண்டாம் – கொஞ்சம் ஊறுகாய், ஒரு கப் தயிர்! இது போதும். சுவையான டேஸ்டியான [G]காஜர் பராட்டா ரெடி. 

உஷார் குறிப்பு:  சின்னச் சின்னதாய் பச்சை மிளகாய் வெட்டி போட்டு இருக்குங்கறத நினைவுல வைச்சுக்கோங்க! குழந்தைகளுக்கு கொடுக்கும்போது முடிஞ்சா அந்த மிளகாய்களை பராட்டாவிலிருந்து எடுத்துடுங்க!

இன்னிக்கு உங்க வீட்டுல [G]காஜர் பராட்டா தானே....  தோ வந்துட்டே இருக்கேன். நான் சொன்னமாதிரி சரியா செஞ்சு இருக்கீங்களான்னு பார்க்க வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

அழுமூஞ்சி சுப்பன்
 படம்: இணையத்திலிருந்து.....

என்னப்பா இது தலைப்பே இப்படி இருக்கே?அப்படின்னு யோசிக்காதீங்க! பொதுவா பெண்களைத் தான் இப்படி அழுமூஞ்சி சுப்பின்னு கிண்டல் பண்ணுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக அழுமூஞ்சி சுப்பன்அப்படின்னு எதுக்கு தலைப்பு?

ஒரு சிலரைப் பார்த்து இருக்கீங்களா? எப்போதும் எதுக்காகவாது புலம்பிக்கிட்டே இருப்பாங்க! என்னவோ உலகத்துல இருக்கற எல்லாக் கஷ்டங்களும் அவங்களுக்கு மட்டும் தான் இருக்கற மாதிரி எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்கும். எதையுமே நேர்மறையா யோசிக்க மாட்டாங்க. கடையில போய் சாப்பிடும்போது, சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தாலும், இவ்வளவு நல்லா இருக்கே, ஏதாவது கலந்து இருக்குமோ?அப்படின்னு தான் யோசிப்பாங்க.

இந்த மாதிரி ஒரு ஆளைத்தான் இன்னிக்கு பார்க்கப் போறோம். என்னுடைய அலுவலகத்தில் ஒரு நபர் – அவர் தான் இந்த அழுமூஞ்சி சுப்பன். காலையில அலுவலகத்துக்கு வரும்போதே ஏதோ ஒரு விஷயத்துக்கு அழுதுட்டே தான் வருவார். நேற்றைக்கும் அப்படித்தான் – வீட்டிலிருந்து அவர் புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு அவர் வருவதற்கும் அலுவலகத்திற்குச் செல்லும் பேருந்து புறப்பட்டுச் செல்வதற்கும் சரியாக இருந்திருக்கிறது. அதன் பிறகு வந்த பேருந்தில் கும்பல் அதிகமாக இருக்க, ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்தேன். எனக்கு மட்டும் தான் இப்படி நேர்கிறது என்றார்.

எப்போதும் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுத் தான் பேசுவார் – “உனக்கு என்னப்பா, நல்ல சம்பளம் வருது, நிறைய காசு இருக்கு. எனக்கு ரொம்பவும் கஷ்டம் என்பார். இத்தனைக்கும் அவரைப் போலவே அவர் மனைவியும் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். அவர்கள் இருவரது சம்பளமும் சேர்த்தால் மாதத்திற்கு ஒரு லகரத்தினைத் தொடும். ஒரு நாள் சம்பளம் பற்றி பேசுவார் என்றால் அடுத்த நாள் வேறு ஒரு விஷயம் பேசுவார்.

அந்த விஷயம் – அவருக்கு மூன்று குழந்தைகள் – அதுவும் மூன்றும் பெண் குழந்தைகள் என்பதில் அவருக்கு அதிகமாகவே அழுகை. மற்றவர்களுக்கு ஒரு குழந்தை, அதுவும் ஆண் குழந்தையாக இருந்துவிட்டால் அவ்வளவு தான் – அவர்களிடம் “உனக்கென்னப்பா, ஒரு குழந்தை, அதுவும் ஆண் குழந்தை, ஒரு செலவும் கிடையாது, என்ன மாதிரியா, மூணு பெண் குழந்தை. ஏகப்பட்ட செலவுஎன்பார். என்னவோ ஒரு ஆண் குழந்தை பெற்றவர் தான் இவரை மூன்று பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்ளச் சொன்னது மாதிரி பேசுவார்.

எப்போதும் எதாவது ஒரு விஷயத்தில் அலுவலகத்தில் இருக்கும் சக பணியாளர்களிடம் இப்படி புலம்புவது அவர் வழக்கமாகி விட்டது. எல்லோருக்கும் வேலை இருக்கத்தான் செய்கிறது. தனக்கு மட்டும் தான் அதிக வேலை, அதுவும் தனக்கு பிடிக்காத வேலைஎன்று சொல்லி மற்றவர்களிடம் வம்பு வளர்ப்பார். நாள் முழுவதும் ஏதாவது புலம்பி, அவரது வேலைகளை செய்யாது விட்டு, மாலை நேரத்தில் உட்கார்ந்து புலம்பியபடி வேலையை செய்து கொண்டிருப்பார். அப்போது வேலை முடித்த மற்றவர்களிடம் தனக்கு உதவும்படிச் சொல்வார்.

அப்படி அவர் கேட்டு உதவி செய்யாவிடில் ஆரம்பித்து விடும் புலம்பல் – “என்னை நீ உன் நண்பனாக நினைக்கவில்லை. அதனால் தான் நீ எனக்கு உதவி செய்ய மாட்டேன் என்கிறார். உன்னை நான் நண்பனாக நினைத்தது என் தவறுஎன்றெல்லாம் ஆரம்பித்து விடுவார். பல நேரங்களில் இவரது எதிர்மறை எண்ணங்களால் மற்றவர்களுக்கும் எதிர்மறை எண்ணங்கள் மனதில் வந்து விடும்படி நடந்து கொள்வார்.

பல நாட்களில் காலையில் அலுவலகம் செல்லும்போதே “இன்றைக்கு இந்த வேலைகளை முடிக்க வேண்டும்என்ற எண்ணத்தோடு சென்று, இவரிடம் மாட்டிக் கொண்டால், அந்த வேலைகளை முடிக்க விடமாட்டார். எதையாவது பேசிக்கொண்டே வேலை செய்ய விடமாட்டார். நாம் அவரை கவனிக்காது வேலை செய்ய ஆரம்பித்தால், புலம்பல் ஆரம்பித்து விடும்.

எத்தனையோ முறை அவரை கடிந்து கொண்டாயிற்று. பலமுறை ஏன் இந்த எதிர்மறை எண்ணங்கள், அது உங்களையே அழித்து விடும் என்று சொல்லிப் பார்த்தாயிற்று! எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். உங்களை விட கஷ்டப்படுபவர்கள் உலகில் உண்டு. அவர்களோடு ஒப்பீடு செய்யும்போது நீங்கள் நல்ல நிலையில் இருப்பது புரியும்என்று சொன்னால், “முடியாது....  Bill Gates அளவு என்னிடம் பணம் இல்லையேஎன்று புலம்பினால் என்ன செய்ய முடியும்!

அவர் மாறுவதாக இல்லை! அதனால் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது! என்ன சொன்னாலும் புலம்புவது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருப்பவரிடம் என்ன சொல்லி புரியவைப்பது.

பல சமயங்களில் இவரைப் பார்த்தாலே எனக்கு பயம் வந்து விடுகிறது! இன்றைக்கு எந்த எதிர்மறை எண்ணத்தோடு நம்மை தொந்தரவு செய்ய வருவாரோ என்று ஒவ்வொரு நாளும் பயப்பட வேண்டியிருக்கிறது! இவரை என்ன செய்யலாம் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.