செவ்வாய், 1 ஏப்ரல், 2014

என் மனதை கொள்ளையடித்தவள்....மனச் சுரங்கத்திலிருந்து....


படம்: இணையத்திலிருந்து....


கம்பரின் ஒரே மகன் அம்பிகாவதி. மூன்றாம் குலோத்துங்க சோழன் மகளான அமராவதி மீது வைத்திருந்த காதலும் அவளைப் பார்த்ததும் காதல் ரசம் சொட்டும் பாடல்களை அருவி மாதிரி பொழிந்ததும் உங்களனைவருக்கும் தெரிந்த விஷயம். சிற்றின்பச் சாயல் இல்லாது நூறு பாடல்கள் பாடினால் தனது மகளை மணம் முடித்துத் தருவதாகச் சொல்லி போட்டி வைக்க, 99 பாடல்கள் பாடி முடித்தாலும் ஒரே ஒரு பாடல் தவறாக அவள் மீது காதலுடன் பாடி தனது காதலியை இழந்தார் அம்பிகாவதி.

இந்த அம்பிகாவதியின் மனதைக் கொள்ளை கொண்ட அமராவதி போலவே என் மனதையும் கொள்ளையடித்தாள் ஒரு அமராவதி! அமராவதிக்கு என் மேல் காதல் இருந்ததோ இல்லையோ எனக்கு அமராவதி மேல் ரொம்பவே காதல். ஒருதலைக் காதல் என்று கூட சொல்லலாம். யார் அந்த அமராவதி? அதைச் சொல்லத்தானே இந்த பதிவு! மனச்சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்தல்லவா இங்கே சொல்ல வந்திருக்கிறேன்!

என் மனதைக் கொள்ளையடித்த அமராவதியும் நான் இருந்த அதே நெய்வேலி தான்! நான் அடிக்கடி பார்த்ததுண்டு. ஏனோ எனக்கு அமராவதி மேல் ரொம்பவே காதல்....... 

அட.....  கொஞ்சம் இருங்கப்பா...  எல்லாரும் கற்பனைக் குதிரையை ரொம்பவே தட்டி விட்டுடாதீங்க!  சும்மா தமாசு...  இன்னிக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி. அதுனால கொஞ்சம் ஏமாத்தலாம்னு தான் இப்படி ஆரம்பித்தேன்! அமராவதி என்பது நெய்வேலி நகரில் பல வருடங்களாக இருந்த ஒரே திரையரங்கம்! ஒரு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ படங்களை மாற்றி காண்பிப்பது வழக்கம்.

ஒவ்வொரு படம் மாற்றும் போதும் மாட்டு வண்டியில் அந்தப் படத்தின் போஸ்டரை கட்டிக்கொண்டு ஒலிபெருக்கி மூலம் நகரெங்கும் செய்தியைச் சொல்வார்கள். சின்னச் சின்னதாய் வண்ண வண்ண காகிதங்களில் அந்த படத்தின் நாயகன் – நாயகி படங்களும், மேலும் சில தகவல்களும் அச்சடித்து வீதியெங்கும் இறைத்தபடியே செல்வார்கள். அதை எடுக்க பலத்த போட்டியே நடக்கும். அந்த காகிதத்தை எடுத்து விட்டால் ஏதோ இமயத்தின் உச்சியையே அடைந்து விட்ட ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வந்த பிறகு ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்ய ஆரம்பித்தார்கள். என்ன படம் என்று தெரிந்தவுடன் வீட்டில் எல்லோரும் இந்தப் படம் போகலாம் என முடிவு செய்து அப்பாவிடம் மனு போடுவோம்! அவர் சரி என்று சொல்லி விட்டால் அடுத்த நாள் காலை நானும் அக்காவும் சைக்கிளில் அமராவதி திரையரங்கிற்குச் சென்று மாலைக் காட்சிக்கு முன்பதிவு செய்து வருவோம். நல்ல படம் என்று தெரிந்தால் தான் படத்திற்குப் போகவேண்டும் – அதுவும் தனியாகவோ, நண்பர்களுடனோ செல்ல முடியாது.

எல்லா படமும் அப்பா, அம்மா, நாங்கள் மூவர் என அனைவருமே செல்வோம். பல படங்கள் அங்கே தான் பார்த்தது. இடைவேளை சமயத்தில் வெளியே தின்பண்டங்கள் வாங்குவது என்பதெல்லாம் கிடையாது. தண்ணீர் முதல், தின்பண்டம் வரை எதுவாக இருந்தாலும் வீட்டிலிருந்தே எடுத்துச் செல்வது தான். ஒவ்வொரு படமும் பார்த்து விட்டு அங்கிருந்து சைக்கிளில் வீடு திரும்புவோம். வரும் வழியெல்லாம் சினிமாவின் கதையைப் பற்றி பேச முடியாது! என்ன பேச்சு....  அமைதியா வாங்க!என்ற அதட்டல் வருமே!

இன்றைய திரை அரங்குகள் போல மாடியெல்லாம் கிடையாது. [பால்கனி என்றும் இருந்தது - அதற்கு 2 ரூபாய் 90 பைசா! நினைவூட்டியதற்கு நன்றி ஸ்ரீமதி] கீழே மூன்று பிரிவுகளாகப் பிரித்து இருப்பார்கள் – ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் இரண்டரை ரூபாய் என மூன்று பிரிவுகள்.  இரண்டரை ரூபாய் என்றால் கடைசியில் இருக்கும், ஒரு ரூபாய் சீட்டு என்றால் ரொம்பவே அருகில் நடிக நடிகையர்கள் எல்லாம் பூதாகாரமாக தெரிவார்கள். பெரும்பாலும் இரண்டு ரூபாய் சீட்டு தான் வாங்குவோம். 
இங்கே பார்த்த பல படங்கள் என் மனதினை விட்டு அகலாது. ஒரு முறை பூவிழி வாசலிலே படம் பார்க்க வழக்கம்போல அனைவரும் சென்றிருந்தோம். அதில் ஒரு காட்சியில் வெள்ளை அங்கிகள் அணிந்து சுற்றிச் சுற்றி வருவார்கள் – ஓம் ஓம் ஹரி ஓம் என்று ஏதோ சொல்லிக் கொண்டே சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்து பயந்து போன என் தங்கைக்கு நான்கு நாட்கள் கடுமையான ஜுரமே வந்தது! :)

ஒரு சமயம் அமராவதி திரையரங்கில் ஒரு பழைய படம் திரையிட்டார்கள். நல்ல படம் என அப்பாவும் நானும் சொல்ல, மற்ற எல்லோரும் அரதப் பழசான படம் நாங்க வரலைஎன்று சொல்லிவிட நானும் என் அப்பாவும் மட்டுமே சென்றோம். அது என்ன படம்னு தானே கேட்கறீங்க? காதறுந்த ஊசியும் வாராது காண்பட்டினத்தார்! இப்ப நினைச்சா எப்படி அவ்வளவு பொறுமையா அந்த படத்தைப் பார்த்தோம்னு தோணும்!

இப்படி குடும்பத்துடன் படங்கள் பார்ப்பது ஒரு நாள் முடிவுக்கு வந்தது. எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிந்து தானே ஆக வேண்டும். நல்ல படம் [என்ன படம் என்பது நினைவில் இல்லை] என எல்லோரும் ஒரு மனதாக முடிவெடுத்து நானும் அக்காவும் சைக்கிளில் சென்று காலை எட்டு மணிக்கு வரிசையில் நின்று முன்பதிவு செய்து வந்தோம். வழக்கம்போல அப்பா அலுவலகத்திலிருந்து சைக்கிளில் நேராக அமராவதிக்கு வந்துவிட நானும் அக்காவும் ஆளுக்கு ஒரு சைக்கிளில் அம்மா மற்றும் தங்கையை பின்னால் உட்கார வைத்து மாலைக் காட்சிக்கு வந்து சேர்ந்தோம்.

முன்பதிவு சீட்டைக் கொடுத்து மாலைக்காட்சிக்கான நுழைவுச் சீட்டை வாங்க உள்ளே சென்றால், எங்களை ஒரு மாதிரி ஏளனமாக பார்த்து “மாட்னி ஷோவுக்கு முன்பதிவு பண்ணிட்டு ஈவ்னிங் ஷோ பார்க்க வரீங்களே, இது செல்லாதுஎன்று சொல்ல, “நாங்க ஈவ்னிங் ஷோவுக்கு தானே முன்பதிவு கேட்டோம்என்று சொல்ல காலையிலேயே பார்த்து இருக்கணும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது, திரும்பிப் போயிட்டு நாளைக்கு வாங்கஎன்று சொல்லி விட்டார். பத்து ரூபாய் மற்றும் இரு வேளை அலைந்ததும் வீணாகப் போனது.

அமராவதி தியேட்டர்காரனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் நல்ல திட்டு கிடைத்தது! “அறிவு ஜீவிகளா, ஒழுங்கா பார்த்து வாங்கத் தெரியாதா?”  அந்த நிகழ்விற்குப் பிறகு நாங்கள் அமராவதியில் எந்த சினிமாவும் பார்க்கவில்லை. இப்போது அந்த திரையரங்கும் எல்லா ஊர்களைப் போல திருமண மண்டபமாக மாறி விட்டது. படம்: இணையத்திலிருந்து....

எத்தனையோ திரையரங்குகளைப் பார்த்து விட்டாலும் ஏனோ என் மனதைக் கொள்ளை கொண்ட அமராவதி போல வராது என்று தான் சொல்லுவேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.                                                 

68 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. என் சகோதரர் நெய்வேலியில் இருப்பதால் அவ்வப்போது நெய்வேலிக்கு போவதுண்டு. அமர்வதியில் சில படங்களை நானும் பார்த்திருக்கிறேன். நெய்வேலி எனக்கு பிடித்தமான ஊர். லைப்ரரிரொம்ப ரொம்ப பிடிக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் நெய்வேலியில் இருக்கிறாரா? கொடுத்து வைத்தவர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 3. சமீபத்தில் நெய்வேலி வழியாக வந்தபோது உங்கள் நினைவு வந்தது வெங்கட். எனக்கும் இது போல ஓரிரு தியேட்டர் நினைவுகள் உண்டு. சென்ற வாரம் நான் தஞ்சை சென்று நான் படித்த பள்ளி, வசித்த இடங்கள் பார்த்து வந்தது ஒரு அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய சமீபத்திய தமிழகப் பயணத்தில் நானும் ஒரு நாள் நெய்வேலி சென்று வந்தேன். ஆனாலும் அங்கே இருந்த குறைவான நேரத்தில் எல்லா இடங்களுக்கும் செல்ல இயலவில்லை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. மீள் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. இப்படி எங்களுக்கும் ஒரு அனுபவம் இருந்தது. அக்னிநட்சத்திரம் படம் பார்க்க ரிசர்வ் செய்தபோது உள்ளே சென்று உட்கார்ந்தே விட்டோம். அப்புறம் அதே இருக்கை எண்களுக்கு வேறு ஆட்கள் வந்துவிட நாங்கள் சரியாய்ப் பார்க்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டோம்! அப்போது கடுப்பில் அருகில் இருந்த தியேட்டரில் பார்த்து கடுப்பான படம் குரு சிஷ்யன்.

   நீக்கு
  4. நாங்க எங்க அனுபவத்தில் முன் பதிவு செய்து கொண்டு போய்ப் பார்த்த ஒரே "மை டியர் குட்டிச் சாத்தான்" ஆனால் அதுவும் படம் வெளி வந்து சில மாதங்கள் ஆகி இருந்தது.

   நீக்கு
  5. @ஸ்ரீராம், அப்புறமா அக்னி நக்ஷத்திரம் பார்த்தீங்களா இல்லையா? நாங்க தொலைக்காட்சியில் தான் பார்த்தோம். நல்லா நினைவில் இருக்கு! :)

   நீக்கு
  6. தியேட்டரில் பார்க்கவில்லை! இதைப் பற்றி எங்கள் தளத்தில் எழுதிய நினைவாய் இருக்கிறது... தியேட்டர் நினைவுகள்?

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   நீக்கு
 6. தங்கள் பதிவைப் படித்ததும், அந்த அமராவதி திரை அரங்கில் 1973 இல் ‘சூரிய காந்தி’ திரைப்படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1973-ல் பார்த்தீர்களா? அப்படியே உங்களை அந்த திரையரங்கில் என்னைப் பார்த்திருந்தாலும் உங்களுக்குத் தெரிந்திருக்காது! ஏனெனில் அப்போது எனக்கு இரண்டு வயசு தான்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல தியேட்டர் பேர்தான் மாறுதே தவிர அனுபவங்கள் ஏறக்குறைய ஒன்றுதான். நான சின்ன வயசிலருந்தே நண்பர்களோடதான் பெரும்பாலும் படம் பாக்கறது. சினிமா டிக்கெட்டை மாத்தி எடுத்த அனுபவம் லேது. (அதுலல்லாம உஸாரா இருப்பம்ல...) பஸ் டிக்கெட்டை தான் மாலை ஆறு மணிக்கு புக் பண்ணச்சொன்னா... காலை ஆறு மணிக்கு புக் பண்ணிட்டு வந்து பஸ்ஸைக் கோட்டை விட்டு ரெட்டிப்புச் செலவா ஆனதால வீட்ல திட்டு வாங்கி அசடு வழிஞ்ச அனுபவமுண்டு. அது ஒரு அழகிய அப்பாவி வாழ்ந்த காலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒரு அழகிய அப்பாவி வாழ்ந்த காலம்! :))

   கொஞ்சம் வயதான பிறகு தான் எல்லாருமே மாறி விடுகிறோம் போல! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   நீக்கு
 8. மனதைக் கொள்ளை கொண்ட அமராவதிஅரங்கின்
  மலரும் நினைவுகள் அருமை..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 9. நான் முன்பு ஒருமுறை நெய்வேலிக்கு வந்து இருந்த போது பத்து பைசா என்று நினைக்கிறேன் டவுன்சிப் பஸ்ஸில் பயணித்ததை இன்னும் மறக்க முடிய வில்லை !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வருடங்கள் பத்து பைசா, பதினைந்து, இருபத்தி ஐந்து, ஐம்பது பைசா என தான் கட்டணம்..... அது ஒரு கனாக் காலம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 10. ஒரே ஒரு முறை நெய்வேலிக்கு வந்திருக்கேன். அப்போ நீங்க பிறந்திருப்பீங்கனு நினைக்கிறேன். :))))சுத்தி எல்லாம் பார்த்தது இல்லை. ஒரு கல்யாணம், அதிலே கலந்துண்டு அப்புறம் மறுநாளே திரும்பியாச்சு! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி கீதாம்மா......

   தமிழகத்தில் இருந்தவர்களில் பலர் நெய்வேலி வந்திருக்கக் கூடும்.

   நீக்கு
 11. நெய்வேலி வழியா நிறையத் தரம் போயிருக்கோம். :))) மதுரையிலே இருந்தப்போவும் இம்மாதிரித் தியேட்டர் அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் ஒரே ஒரு தியேட்டர் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை - கும்பகோணம், சென்னை-தஞ்சாவூர் போன்ற பல பேருந்துகள் நெய்வேலி வழியாகத் தான் செல்லும். அதில் சில பேருந்துகள் நெய்வேலி நகரத்திற்குள்ளும் வந்து செல்லும்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 12. ஆனாலும் நெய்வேலிக்காரங்களுக்கு அவங்க ஊரைப்பற்றி ரொம்பத்தான் பெருமை. அந்த அமராவதி திரையரங்கில் ‘ராஜபார்வை’ பார்த்தது நினைவுண்டு. அந்த திரையரங்கில் தூண்களே கிடையாது, எந்த இருக்கையில் இருந்து பார்த்தாலும் மறைக்காது என்று எனது சித்தப்பா பெருமையடித்துக் கொள்வார்.

  (என்ன ஆனாலும் தரை டிக்கெட் இல்லாத சினிமா தியேட்டர் எல்லாம் ஒரு தியேட்டரா! இப்போதெல்லாம் திரையரங்குள் கூட்டமில்லாமல் இருக்க காரணமே, தரை டிக்கெட் இல்லாததுதான். என்ன நான் சொல்றது.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அண்ணாச்சி. நெய்வேலி பெருமை சொல்லாம இருக்க முடியாதுல்லா!

   ஆஹா நீங்களும் அங்கே ராஜ பார்வை பார்த்து இருக்கீங்களா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 13. இனிமையான மலரும் நினைவுகள் அவை என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்
  சகோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 14. இதே அனுபவத்தில் நாங்கள் பார்த்த ஏராளமான படங்களும் நினைவுக்கு வருகின்றன‌. மறக்கமுடியாத நினைவுகள்.

  முக்கியமா படம் முடியுமுன்னே மின்விசிறிகளை நிறுத்தி எல்லோரையும் வியர்வையில் நனைய வைத்து ......... இப்போது நினைத்தால் 'எப்படி இப்படியெல்லாம்' என்றுதான் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 15. மலரும் நினைவுகளை அருமையாக பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி இன்றையவானம்.

   நீக்கு
 16. மலரும் நினைவுகளுக்கு மதிப்பு எப்பவுமே அதிகம்தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 18. //நல்ல படம் [என்ன படம் என்பது நினைவில் இல்லை] //

  கோழி கூவுது.... விஜி மற்றும் சுரேஷ் நடித்தது..:))

  என்னிடம் சொன்ன நினைவு உள்ளது....:)

  அமராவதி மீது காதல்....:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... இதுக்குதான் எல்லா விஷயங்களையும் சரி பாதிகிட்ட சொல்லிடணும்னு பெரியவங்க சொல்றாங்க!

   நன்றி!

   நீக்கு
  2. எல்லா விஷயங்களையும் சொன்னீங்க சரி, ஆனா இந்த அமராவதி விஷயத்தை மட்டும் கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்கீங்க போல!!!

   நீக்கு
  3. போட்டுக் கொடுக்காதீங்க சொக்கன். அவங்களுக்குத் தெரிஞ்சா நான் என்ன ஆவறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 19. எங்க ஊர்ல கூட ஒரு தியேட்டர் இருந்தது. இப்போது அது விவசாய நிலமாக மாறிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   நீக்கு
 20. பரவாயில்லையே.....உங்கள் மனதைக் கொள்ளையடித்த அமராவதியைப் பற்றி உங்கள் திருமதிக்கும் தெரிந்திருக்கிறதே.

  உங்கள் பதிவு என்னையும் பல தியேட்டர்களுக்கு என்னை அழைத்து சென்று விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 21. nostalgic நினைவுகள் எல்லோருக்கும் வருகிறது. என் ஐந்து வயது முதல் ஒன்பது வயது வரை அரக்கோந்த்தில் இருந்தோம். அரக்கோணம் நினைவுகள் என்று ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் டெண்ட் கொட்டகையில் படம் பார்த அனுபவங்கள் மீண்டும் நிழலாடுகிறது. என் மைத்துனன் bhel-ல் இருந்தபோது நெய்வேலி வந்திருக்கிறேன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி GMB சார்.

   டெண்ட் கொட்டகையில் நான் சினிமா பார்த்ததில்லை.... இனிமேல் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை.

   நீக்கு
 22. ஆஹாஅ அந்த நாள் நினைவுகள். சின்னஞ்சிறுவயதின் எளிய நினைவுகள் மகாஇன்பம் தந்தவை. அந்தநாட்கள் எங்கயோ போய்விட்டன. நாலணா பென்ச் டிக்கட்டில் நானும் இரண்டு படம் பார்த்திருக்கிறேன். வீட்டில் உதவி செய்யும் தோமாலை என்னும் வயதான பாட்டியுடன். அதுதிண்டுக்கல்லில். .பகிர்வுக்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாலணா பெஞ்ச் டிக்கட்.... ... அட சூப்பர்....

   உங்களுடைய நினைவுகளையும் இப்பதிவு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   நீக்கு
 23. அமராவதி ஆறு பற்றிய பதிவோ என்று நினைத்தேன்! திரையரங்க காதல் பற்றிய நினைவுகள் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமராவதி ஆறு பற்றிய பதிவுன்னு நினைத்து விட்டீர்களா? :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 24. வழி நெடுக பலவிதமான மரங்களுடன் சோலை என -
  அப்போதே - மிக சுத்தமாக விளங்கும் நெய்வேலி!..
  பலமுறை வந்திருக்கின்றேன்.. ஆனால்,
  அமராவதியை எல்லாம் பார்த்ததில்லை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 25. உங்களது மலரும் நினைவுகள் எங்களது அந்தக் கால சினிமா கொட்டகைல சினிமா பார்த்த அனுபவங்களைக் கிளறி விட்டது! நல்லதொரு இனிமையான அனுபவம்தான்! இப்போது எத்தனைதான் ஹைடெக்காக அந்தக் கொட்டகை மாறினாலும் . Old is Gold!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி துளசிதரன்....

   இப்பதிவு பலரது திரையரங்கு நினைவுகளை கிளறிவிட்டது போலும்...

   நீக்கு
 26. ஏப்ரல் ஒன்றுக்காக கதையை ஆரம்பித்த விதம் அருமை:)! அமராவதி, அவரவருக்குப் பல திரையரங்கு நினைவுகளைத் தரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 27. வெங்கட்!இளமைக்கால சினிமா அனுபவமே தனிதான்.கோவில்பட்டியில் டெண்ட் கொட்டாயில் எவ்வளவு படம் பார்த்திருப்பேன்!அந்த சுகம் சத்தியத்தில் வருமா!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில்பட்டி டெண்ட் கொட்டாய் நினைவுகள்.. நிச்சயம் திரும்பி கிடைக்காத சுகங்கள் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 28. நானும் தான் அதே தியேட்டரில் பட்ம் பார்த்திருக்கிறேன்.
  கோழிக்கூவுது... அப்புறம்... பட்டினத்தார்...
  இன்னும் என்னென்னவோ படங்கள்...
  நான் குழந்தையாக எங்க அம்மா மடியில் உட்பார்ந்து கொண்டு
  படம் பார்க்கும் பொழுது நீங்கள் படம் பார்க்காமல்
  என் கையில் இருந்த கிலுகிலுப்பையைப் பார்த்துக் கொண்டு இருந்தீர்களே...
  என்ன ஞாபகம் வரலையா...?
  யோசனைப் பண்ணி பாருங்கள்..... எனக்கு இன்னம் ஞாபகம் இருக்கிறது
  அன்றும் ஏப்ரல் ஒன்று தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்க மட்டுமா செய்தேன். ஓடி வந்து கிலுகிலுப்பையை பிடுங்கிக் கொண்டேன். உங்க அம்மா என்னை ஒரு முறை முறைத்தார்கள். எனக்கு நல்ல நினைவு இருக்கு! :)))) இன்னிக்கு மட்டுமல்ல, நீங்க சொன்ன மாதிரியே அன்னிக்கும் ஏப்ரல் 1 தான்! :)

   ரசித்தமைக்கு நன்றி அருணா செல்வம்!

   நீக்கு
 29. அந்த புகைப்படம் கொள்ளை அழகு.
  நான் கூட அந்த புகைப்படத்தில் இருப்பவர் தான், உங்களுடைய மனதை கொள்ளை கொண்டவரோ என்று எண்ணி, வேக வேகமா பதிவை படித்தேன்.

  கடைசில இப்படி ஏமாத்திட்டீங்களே!!! இது உங்களுக்கே நியாயமா இருக்கா??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா ஏமாந்துட்டீங்களே சொக்கன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....