திங்கள், 29 நவம்பர், 2010

சதம் அடிச்சாச்சு! [100 வது பதிவு]



சென்ற வருடத்தில் பதிவர் திரு ராகவன் அவர்களுடன் ஜி-மெயில் அரட்டையின் போது அவரது வலைப்பூக்களை [ரேகா ராகவன், அன்பே சிவம்] அறிமுகப்படுத்தி என்னையும் எழுதச் சொல்லி வலைப்பூ ஆரம்பிக்கச் சொல்லிக் கொடுத்தார். ஒரு சுப யோக சுப தினத்தில் வலைப்பூவினை ஆரம்பித்து, ”எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாரு” என்பதாய், எனது முதல் பதிவாக, செப்டம்பர் 30, 2009 அன்று, ஒரே ஒரு பத்தியில் குரங்கு வீழ்ச்சியில் எங்களது கல்லூரி சுற்றுலாவின் போது நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தேன்.

ஒரு வருடம், இரண்டு மாதம் கழித்து இன்று எனது வலைப்பூவில் 100-வது பதிவு [சதம் அடிச்சாச்சு!]. வடிவேலு ஏதோ ஒரு படத்தில் வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏறிக்கொண்டு, “எல்லோரும் பார்த்துக்குங்க, நானும் ரௌடி தான்!” என்று அலறுவது போல, நானும் “ஒரு வலைப்பதிவாளன் தான்!” என்று அலப்பறை விட்டுக் கொண்டிருக்கிறேன்.

“வலைப்பூ எனக்கு என்ன தந்தது?” என்று பல முறை என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். ”பணமா, பதவியா?” ஒன்றுமே இல்லை. எனினும் எனக்கு இந்த வலைப்பூ அள்ளி அளித்தது ஏராளமான நட்பு எனும் பூக்களை. எத்தனை எத்தனை முகம் தெரியா நட்புகள் எனக்கு வாய்த்திருக்கின்றன இந்த கால கட்டத்தில்.

பதிவுலகோடு நின்றுவிடாமல், பத்திரிக்கைகளிலும் சிறுகதை, நாவல், கவிதை என்று அசத்திக்கொண்டிருக்கும், திரு ரவி பிரகாஷ், திரு கே.பி, ஜனார்த்தனன், திரு ரிஷபன், திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி போன்ற பெரியவர்களின் நட்பும் எனக்குக் கிடைத்தது இந்த வலைப்பூ உலகின் மூலமே. தவிர, என்னுடைய பதிவுகளைப் படித்து, இது வரை 1000-த்திற்கு மேலான பின்னூட்டங்கள் மூலமாக கருத்துக்களை அளித்து ஊக்கமூட்டிய, ஊக்கமளித்துக் கொண்டு இருக்கும் பல நண்பர்கள், எனது வலைப்பூவினை தொடரும் 67 நண்பர்கள் என வளர்ந்திருக்கிறேன். அத்தனை நண்பர்களின் வலைப்பூ முகவரியையும் இங்கே குறிப்பிட ஆசைதான் எனினும் பதிவு நீள…..மாக ஆகிவிடும் என்பதினால் பொதுவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தில்லியிலும் எனக்கு பல நண்பர்களை பெற முடிந்தது. ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் சுசீலாம்மா, சந்திரமோகன், மோகன்குமார் கருணாகரன், முத்துலெட்சுமி, விக்னேஷ்வரி, லாவண்யா, விட்டலன், கலாநேசன், ஜீஜீ என அடுக்கிகொண்டு போகலாம். இவர்களில், சிலரைத் தவிர மற்றவர்களை தில்லியில் நடந்த பதிவர் சந்திப்புகளில் சந்தித்து அளவளாவி இருக்கிறேன். எல்லோருக்கும் எனது நன்றிகள்.

வலைப்பூ எழுதுவதன் மூலம் கிடைத்த இன்னுமொரு நன்மையையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னுடன் பணிபுரிந்து மாற்றல் வாங்கிக் கொண்டு போனார் ஒரு நண்பர். நீண்ட நாட்களாக அவரிடம் தொடர்பு இல்லாமலேயே இருந்தது. சென்ற மாதம் திடீரென்று அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். தான் வலையில் ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது என்னுடைய வலைப்பூவைப் பார்த்து அதன் மூலம் என் முகவரி கிடைத்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

இன்னுமொரு விஷயம் நான் எழுதுவதைப் பார்த்து இப்போது என் மனைவியும் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து விட்டார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அவருடைய இடுகைகள் வெளிவந்துவிட்டது.

மேன்மேலும் எழுதவும் ஆசை இருப்பதால்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன், உங்களின் தொடர்ந்த ஆதரவும் வரவேற்பும் இருக்கும் என்கிற தெம்பில்.

நூறாவது படிக்கட்டில் காலெடுத்து வைக்கும் இந்த நாளில், நல்லதொரு கருத்துப் பரிமாற்றத்திற்கு உறுதுணையாய் இருக்கின்ற இந்த வலைப்பூவிற்கும், வலையுலக நட்புகள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்.

தொடர்ந்து சந்திப்போம்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

“ப்ளேட் இன் தி ஓபன்” – மழலை மொழி



முன்பு ஒரு பதிவில் மழலை மொழி என்று எனது மகளின் சில மழலை மொழிகள் பற்றி எழுதி இருந்தேன். இந்த பதிவில் மேலும் சில – அவளின் பாஷையிலேயே...

மூன்றரை வயதில் என் மகளை ஒரு மழலைகளுக்கான பள்ளியில் சேர்த்து இருந்தோம். அங்கே குழந்தைகளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பாடல்களை சொல்லித் தருவார்கள். அதை அவளது பாஷையில் எங்களிடம் சொல்லுவாள்.

ஒரு நாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து வந்த போது, அவளது பள்ளியில் அன்று சொல்லிக்கொடுத்ததாக கீழ்க்கண்ட பாடலை அவளின் மொழியில் சொன்னாள் –

கேக் யுவ பா கெய்லி,
ஏரி க்ளோத்ஸ்,
ஈ கூ ஃபூட்,
ப்ளேட் இன் தி ஓபன்,
பெட்ஸ்பிரட் யுவர் எல்டர்ஸ்”

அழகாய் கையைக் காலை ஆட்டி, தலையை சாய்த்து சொல்லி முடித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு மூன்று தடவை கேட்ட பிறகு தான் புரிந்தது – அன்று சொல்லிக் கொடுத்த பாடல் –

“Take Your Bath Daily
Wear Clean Clothes
Eat Good Food
Play in the Open
Respect your elders”

அவளது பள்ளியில் ஆங்கில நர்சரி பாடல்களைத் தவிர ஹிந்தி மொழியிலும் நிறைய பாடல்களை சொல்லித் தருவார்கள். ஒவ்வொன்றையும் அவள் மழலை கொஞ்சும் ஹிந்தியில் சொல்லுவதைக் கேட்டு அவளது பள்ளி ஆசிரியையே ஒவ்வொரு சந்திப்பின் போதும் எங்களிடம் சிலாகித்து சொல்லுவார்.

அவள் சொல்லும் மற்றுமொரு ஆங்கில நர்சரி பாடலின் சில வரிகள் –

“மம்மா கால் டாக்டர்,
டாக்டர் சேஸ், நோ நோ மோன்கி,
நம்பிக்கோத்தா பேர்” –

அந்த பாடலின் சரியான வரிகள் –

“Mumma Called the Doctor,
The Doctor Said, “No More Monkey”
Jumping on the Bed”

இப்போதும் கூட வீட்டில் சில சமயங்களில் நானும் எனது மனைவியும் “நம்பிக்கோத்தா பேர்” என்று அவளிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருப்போம்.

ஒரு சில பாடல்களை மட்டும் அவளின் மொழியிலேயே சொல்லச் செய்து பதிவு செய்து வைத்திருக்கிறோம். வீட்டில் அதை எப்போது கேட்டாலும் ஒரே சிரிப்புதான். ஒரு முறை என் மகளுக்கு பாரத மாதா வேடமிட்டு, இரண்டு வரியில் பாரத மாதாவைப் போல பேச வீட்டில் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் பள்ளிக்குச் சென்று சொல்லிக் கொடுத்ததை விட்டு “அம்மா, அம்மா” என்று சொல்லிவிட்டு வந்து விட்டாள்.

புதன், 24 நவம்பர், 2010

தலைநகர் தில்லியில் தமிழ் கருத்தரங்கம் – தமிழ் 2010

கடந்த 64 ஆண்டுகளாக, தலைநகர் தில்லியில் இயங்கி வரும் தில்லி தமிழ் சங்கம் வரும் டிசம்பர் மாதம் 10-12 தேதிகளில் “தமிழ் 2010” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்திட ஏற்பாடு செய்துள்ளனர்.

டிசம்பர் 10, 2010 வெள்ளிக்கிழமை அன்று தொடக்கவிழாவும், 11-12, தேதிகளில் தில்லி தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் ஏனைய நிகழ்ச்சிகளும் நடைபெறும். அவ்வமயம் 50 ஆண்டுகாலப் புனைவிலக்கியம், கவிதை இலக்கியம், கணினித் தமிழ், பிறமொழிகளில் தமிழ், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், நாடக-ஊடகத்தமிழ் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இருக்கும்.

கவிஞர் சிற்பி, கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் ப்ரேம், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், வெளி ரங்கராஜன், கவிஞர் இமையம், அம்பை, லிங்க்ஸ்மைல் வித்யா, காந்தளகம் சச்சிதானந்தன், அமரந்தா, தியடோர் பாஸ்கரன், ரவிசுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி, பேராசிரியர் சந்திரபோஸ் ... மற்றும் பலர் கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள். நிறைவு விழா சிறப்புரையை டாக்டர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் sangamtamil2010@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation -என்று குறிப்பிடுவதுடன் அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை அவசியம் தர வேண்டும்.

விழா அழைப்பிதழ் கீழே.








திங்கள், 22 நவம்பர், 2010

பவானிபுரம் தீவு

(பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 7)

பெஜவாடா – விஜயவாடா பயணம்
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 5
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 6

அடடே பரவாயில்லையே! எல்லோரும் சரியா விசைப்படகு கிளம்பறதுக்கு முன்னாடியே வந்துட்டீங்களே. சரி வாங்க போகலாம்.

கிருஷ்ணா நதியின் இரு கரைகளிலும் ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை நடத்தும் படகுத் துறைகள் உள்ளன. இங்கே இரு வகையான விசைப் படகுகள் இயங்குகின்றன, அவற்றில் ஒன்று குளிரூட்டப்பட்டது. கரையிலிருந்து ”புன்னமி” பவானி தீவிற்குச் செல்ல கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் நாற்பதும், சிறியவர்களுக்கு ரூபாய் இருபத்தி ஐந்தும் வசூலிக்கிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு இயங்குகிறது.

பத்து-பதினைந்து நிமிட படகுச் சவாரி முடிந்த பிறகு பவானிபுரம் தீவில் நம்மை இறக்கி விட்டு விடுகிறார்கள். நீங்கள் தீவை சுத்தோ சுத்துன்னு சுற்றி வந்து மாலை வரை அங்கு இருக்கலாம். நாலு மணிக்கு கடைசி படகு கிளம்பும் முன் வந்தால் போதும். தீவினுள் ஒரு ஹோட்டலும், நாள் வாடகைக்கு நிறைய தங்கும் அறைகளும் உண்டு. சுற்றுலாத்துறையின் தங்கும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்ய 0-9848910517 மற்றும் 0-9848779685 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று இங்கிருக்கும் அறிவிப்பு பலகை தெரிவிக்கிறது.






தீவிலிருந்து கிருஷ்ணா அணைக்கட்டு, கனகதுர்கா குடிகொண்டு இருக்கும் இந்திரகிலாத்ரி மலை, மற்றும் மலைத்தொடர் போன்றவற்றை கண்ணாரக் கண்டுகளிக்கலாம்.

குழந்தைகள், மற்றும் குழந்தைகளாக நினைத்துக்கொள்ளும் பெரியவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல்கள், சறுக்கு மரம், கயிற்றுப்பாலம், போன்றவைகளை வைத்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில்தான் இங்கு கூட்டம் அதிகமாய் வருகிறதாம். மற்ற நாட்களில் இளஞ்சோடிகளும், காதலர்களும் தான் இங்கு வருகை புரிகிறார்கள். நாங்கள் சென்றிருந்த போது மூன்று-நான்கு தேனிலவுத் தம்பதிகளை பார்க்க முடிந்தது.

பாதுகாப்புக்காக ஆங்காங்கே நிறைய தனியார் காவலர்களையும் அமர்த்தியுள்ளது சுற்றுலாத்துறை. இங்கே உள்ள உணவகத்தில், ஆந்திர உணவு வகைகள் தவிர வேறு ஒன்றும் கிடைப்பதில்லை.

ஆந்திர மாநில மக்கள் பொதுவாகவே உணவில் காரம் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். சில சமயங்களில் அந்த உணவினை சாப்பிடக் கூட வேண்டாம், பார்த்தாலே கண்களில் கண்ணீர் வந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இந்த ஊரில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி – அதன் காரத்தினைக் குறைப்பதற்காகவே நடுவே வெங்காயம் வைத்து பொரித்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து தருகிறார்கள். அப்படியே சாப்பிட்டால் கண்ணீரும் கம்பலையுமாகத் தான் திரும்ப வேண்டியிருக்கும் என்பதால் நான் சாப்பிடவில்லை. பதிலாக மாம்பழச் சாறில் தயாரிக்கும் ”மாவடித் தண்ட்ரை” என தெலுங்கில் கூறப்படும் மாம்பழ ஜெல்லி வாங்கிச் சாப்பிட்டேன். கிலோ எண்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். தயார் செய்த பிறகு 21 நாட்கள் வரை கெடாமல் இருக்குமாம். நல்ல சுவை.

சந்தோஷமாய் மூன்று நாட்கள் விஜயவாடாவில் தங்கியிருந்து கிருஷ்ணா நதியில் குளித்து, பல கோவில்களில் இறைவனை தரிசனம் செய்து, ஹவுராவிலிருந்து விஜயவாடா வழியாக கன்யாகுமரி செல்லும் விரைவு வண்டியில் கிளம்பி திருச்சி சென்றோம்.

இந்த விஜயவாடா பயணத்தின் போது நீங்களும் எங்களுடனேயே வந்ததில் எனக்கு ஆனந்தம், மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் வேறு ஒரு பயணத்தில் சந்திப்போமா?.

வியாழன், 18 நவம்பர், 2010

உண்டவல்லி குகைகள்

[பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 6]

பெஜவாடா – விஜயவாடா பயணம்
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4
பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 5

சென்ற பகுதியில் சொன்ன மாதிரி எல்லோரும் கைக்குட்டையை தயாரா எடுத்து வச்சுக்கிட்டீங்களா? நாம அடுத்து பார்க்க போற இடத்துக்கு நிச்சயமா தேவைப்படும். ஏன்னா நான் கைக்குட்டை இல்லாம போயிட்டு ஒரே திண்டாட்டமா போச்சு!

உண்டவல்லி குகைகள்: கனகதுர்கா கோவிலில் துர்காம்மாவினை தரிசித்த பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி, கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் வழியே ஆறு கிலோ மீட்டர் சென்றால் அங்கே உள்ள ஒரு சிறிய கிராமம் உண்டவல்லி. கிருஷ்ணா நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் மலையை குடைந்து நான்கு நிலைகள் கொண்ட குகைக் கோவில்களை அமைத்துள்ளனர். நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குகைக் கோவில்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. ஒவ்வொரு நிலையிலும் பல அழகிய சிலைகள் உள்ளன. விநாயகர், ஆஞ்சனேயர், பிரம்மா, நரசிம்மர், தேவி, போன்ற மூர்த்திகளும், சயனித்திருக்கும் மிகப்பெரிய விஷ்ணுவின் சிலை என்று பல உருவங்கள் இங்கே உள்ளன. சுமார் 5 மீட்டர் நீளத்தில் இருக்கும் விஷ்ணுவின் சிலை ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் சிலைக்கு பக்கச்சுவர், மற்றும் காலடியில் பல சிலா ரூபங்களையும் காண முடிகிறது.



குகையில் நான் எடுத்த சில படங்களையும், குகை மேலிருந்து எடுத்த சில படங்களையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

நான்காம் நிலைக்குச் செல்லும் வழியினையும் வேறு சில குகைகளுக்குச் செல்லும் வழிகளையும் அடைத்து வைத்துள்ளனர். அங்கு செல்ல அனுமதியில்லை. முற்காலத்தில் இந்த குகைகளின் வழியே பானக நரசிம்மர் கோவில் இருக்கும் மங்களகிரிக்கு செல்ல வழி இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினால் பராமரிக்கப்படும் இந்த கோவில் “பராமரிப்பு”என்றால் என்ன என்றும் கேட்கும் நிலையில் உள்ளது. உள்ளே நுழையும் போதே வௌவால் எச்சத்தின் “மணம்” ஆளைத்தூக்குகிறது. உள்ளே செல்ல கட்டணம் [10 ரூபாய்] வாங்க இருக்கும் ஒரே ஒரு பணியாளர் கூட குகையில் இருந்து தொலைவில் வெட்ட வெளியில் உட்கார்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ஊரை விட்டு சற்றே தள்ளி இருப்பதாலோ என்னவோ நிறைய காதலர்களைக் காண முடிந்தது – கோவிலின் வெளியே இருந்த புல்தரையில். எல்லா சுற்றுலாத் தலங்களைப் போலவே இந்த குகைகளிலும் “ஐ லவ் யூ” வை செதுக்கி வைத்தும், எழுதி வைத்தும் சென்றிருக்கின்றனர் நவீன கால ரோமியோக்கள் பலர்.



பராமரிப்பு மட்டும் ஒழுங்காய் இருந்தால், சுமார் 16 நூற்றாண்டுகளுக்கு முன் அமைத்த இந்த குடைவரைக் கோவிலை நிம்மதியாய் தரிசிக்கலாம்.

கோவில், கோவிலாத் தான் போனீங்களா, வேற எங்கேயாவது அழைத்துச் செல்லுங்களேன் என்று சில குரல்கள் கேட்பதனால் அடுத்து நான் உங்களை ஒரு அழகிய தீவிற்கு அழைத்துச் செல்கிறேன். விசைப்படகு கிளம்புவதற்குள் ஏறி உட்கார்ந்துடுங்க. சரியா?…

செவ்வாய், 16 நவம்பர், 2010

துர்காம்மா - சேக்கொடி

(பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 5)

பெஜவாடா – விஜயவாடா பயணம்

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4



கனகதுர்கா கோவில்: கிருஷ்ணா நதியின் இடது கரையில் இந்திரகிலாத்ரி மலையின் மேல் உள்ள கனக துர்கா என அழைக்கப்படும் துர்காதேவி எட்டாம் நூற்றாண்டிலியே ஆதி சங்கரரால் பூஜிக்கப்பட்ட ஒரு ஸ்வயும்பு மூர்த்தம். இந்த கோவில் முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டது. ஆந்திராவில் திருப்பதிக்கு அடுத்ததாய் இரண்டாவது பெரிய கோவில் கனக துர்கா கோவில். துர்காம்ம்மா என்று பக்தர்களால் பாசமாய் அழைக்கப்படும் இந்த கோவில் தினமும் காலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.

கிருஷ்ணா நதியில் திவ்யமாய் ஒரு குளியல் போட்டு விட்டு, மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் தேவஸ்தானத்தின் பேருந்திலோ, நடந்தோ செல்லலாம். வாடகை வண்டியில் சென்றால் மலை உச்சிக்கே சென்று சேர முடியும். இந்திரகிலாத்ரி மலையில் உள்ள கனகதுர்கா கோவில் செல்லும் பாதையின் நுழைவாயிலில் உள்ள கோபுரத்தின் ஒரு தோற்றம் கீழே.




துர்காம்மாவை தரிசிக்க இலவச சேவை, ஐந்து ரூபாய் , 25 ரூபாய் மற்றும் 50 ரூபாய் சேவை என நான்கு விதமான சேவைகள்/வரிசைகள் இருக்கின்றன. உங்களுக்கு இருக்கும் நேரத்தையும் வசதியையும் பொறுத்து நீங்கள் தேவி கனக துர்காவினை தரிசனம் செய்யலாம்.

நாங்கள் சென்றது நவராத்ரியின் ஓரிரு தினங்களுக்கு முன்பு என்பதால் கனக துர்காவினை சிறிது சுலபமாய் தரிசிக்க முடிந்தது. அலங்கார ஸ்வரூபியாய் தரிசனம் அளித்துக் கொண்டு இருந்தாள் கனக துர்கா தேவி.

கோவில் தேவஸ்தானமே பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடங்கள், உடைமைகளைப் பாதுகாக்கும் அறைகள் போன்ற பலவித வசதிகள் செய்து கொடுக்கிறது.

கோவில் பற்றிய விவரங்களை பக்தர்கள் தெரிந்து கொள்ள கோவில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள இணையதளத்தினை நீங்களும் சென்று பாருங்களேன்.

சேக்கோடி: அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்த மாவினை மெல்லியதாக திரித்து சிறிய துண்டுகளாக்கி, அதன் இரு முனைகளையும் சேர்த்து வட்ட வடிவமாய் எண்ணையில் பொரித்து எடுக்கும் ஒரு கார வகை தின்பண்டமே சேக்கோடி, கொஞ்சம் தெலுங்கு உணர்வு வேணும்னா, ஒரு “லு” சேர்த்து – சேக்கோடிலு!!!!





சேக்கோடிலு சாப்பிட்டு கொஞ்சமா காத்திருங்களேன் நான் உங்களை ஒரு முக்கியமான இடத்திற்கு கூட்டிட்டு போகப் போறேன். எதுக்கும் ஒரு கைக்குட்டையை தயாரா வைச்சுக்கோங்க!

திங்கள், 15 நவம்பர், 2010

ஆசைக்கு அளவேது

அளவுக்கு அதிகமாக ஆசைப் படக்கூடாதுன்னு நிறைய பெரியவங்க சொல்லிட்டு போய்ட்டாங்க. கௌதம புத்தர் கூட “ஆசையே அழிவிற்க்குக் காரணம்”னு பல வருடங்களுக்கு முன்னாடியே சொல்லி வைச்சிருக்காரு.

ஆனாலும் நாம திருந்துவோம்? நடந்து போயிட்டுருக்கும் போது ”பஸ்லேயாவது போகணும்”னு தோணும், பஸ்லே போகும்போது, ”சே, இதுல ஒரே கும்பல், தாங்கலையே, ஒரு ஸ்கூட்டராவது வாங்கணும்”னு மனசு புலம்பும். சரி, ஸ்கூட்டரும் வாங்கி அதுல சவாரி செய்ய ஆரம்பிச்சாச்சுய்யா, போதும்னு நினைபோம்? – நிச்சயமா இல்லையே. ”இந்த ஸ்கூட்டர்ல மழைல நனைஞ்சு, வெய்யில்ல காஞ்சு போறோமே, ஒரு ஏ.சி. கார் இருந்தா சொகுசா பயணம் செய்யலாம்”னு முடிவில்லா ஆசைகள்….

இதுக்கு நடுவுலே, யாராவது சிலர், “அத்தனைக்கும் ஆசைப்படு”ன்னு வேற சொல்லிட்டாங்கன்னா போச்சு, விபரீதமான ஆசைகள் வந்துடுது மனசுக்கு.

இங்க பாருங்களேன் இந்த ஆளு அது மாதிரி தான் அளவில்லாத ஆசையினால என்ன ஆயிட்டாருன்னு!



வெள்ளி, 12 நவம்பர், 2010

குரங்கு மிட்டாயும், ஆஞ்சனேயரும்

(பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 4)

பெஜவாடா – விஜயவாடா பயணம் _ பகுதி 1 படிக்க இங்கே

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2 படிக்க இங்கே

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 3 படிக்க இங்கே

இப்பயணத் தொடரின் நான்காம் பகுதியான இப்பதிவில் நாம் காணப் போவது ஆஞ்சனேயர் கோவில் மற்றும் வேங்கடாசலபதி கோவில்.



தென்னூர் – நெடுபுரோலு ஆஞ்சனேயர் கோவில்: குண்டூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் தெனாலியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் ஒரு சிறிய ஊர் தென்னூர். அருகிலிருக்கும் ரயில் நிலையம் நெடுபுரோலு. இந்த ஊரில் கருப்பு நிறக் கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி ஆஞ்சனேயர் பக்தர்களுக்கு சேவை சாதித்துக்கொண்டு இருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களைப் போலவே இந்த கோவிலும் பகல் நேரத்தில் 1 மணி முதல் 4 மணி வரை நடை சார்த்தி வைத்துள்ளார்கள். பிரம்மாண்டமான ஆஞ்சனேயர் சிலை – தமிழ் நாட்டின் நாமக்கல் ஆஞ்சனேயர் அளவு உயரமாக இல்லை – இங்கும் விக்ரத்திற்கு மாலை சார்த்துவதிற்கும், அபிஷேகம் போன்றவைகளை படிகள் மூலம் மேலே ஏறிச் சென்று மேடையில் நின்று தான் செய்ய வேண்டி இருக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த கோவில் தெனாலி-குண்டூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.



வைகுண்டபுரம் வேங்கடாசலபதி கோவில்: திருப்பதியில் இருப்பது போல இங்கும், பெருமாள் பத்மாவதி தாயார் உடன் காட்சி அளிக்கிறார். மற்றும் லக்ஷ்மி தேவியின் சன்னிதியும் இங்கே அமைந்துள்ளது. ஒரு பெரிய புற்றின் மேலே நாகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. புற்று மண்ணை காது மடல்களில் பூசிக் கொண்டால் காதில் எந்த பிரச்சனையும் வராது என இங்குள்ள மக்கள் சொல்கின்றனர். பித்தளையில் செய்யப்பட்ட அன்னப்பட்சி, யானை, கருடன், குதிரை, ஆஞ்சனேயர் போன்ற அழகிய வாகனங்களையும் கோவில் பிரகாரத்தில் காண முடிகிறது. கோவிலின் வெளியேயும், ஆஞ்சனேயர் மற்றும் கருடாழ்வாரின் பெரிய சிலைகளை அமைத்துள்ளார்கள்.


மடித்த மஞ்சம்: இப்ப இருக்கிற Camp Cot-க்கு தாத்தா தான் மடித்த மஞ்சம். ஆந்திர மாநிலத்தில் இந்த மடித்த மஞ்சம் பெரும்பாலானோர் வீட்டில் இருக்கிறது. கட்டிலில் கால்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டு அதன் நடுவில் கெட்டியான துணியால் இணைக்கப்பட்ட இந்த படுக்கையை தேவையான போது விரித்து போட்டுக் கொண்டு தேவையில்லையெனில் மடித்து சுவற்றில் சாய்த்து வைத்து விடலாம். ஆனால் நான் பார்த்த எல்லா மடித்த மஞ்சமும் 5 முதல் ஐந்தரை அடி நீளம் தான் இருந்தது. உயரமான மனிதர்களுக்கு இந்த படுக்கையில் படுப்பது கொஞ்சம் சிரமம்தான். எனினும் இன்றைய புறாக்கூண்டு அடுக்கு மாடி குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறையை சமாளிக்க இது உதவியாக இருக்கும்.

பந்தர் மிட்டாய்: ஹிந்தியில் “பந்தர்” [Bandhar] என்றால் குரங்கு. பந்தர் மிட்டாய் என்றவுடனே ஏதோ குரங்கு மிட்டாய் போல இருக்கு என நினைத்தால் – அப்படி இல்லை என நம்மைப் பார்த்து இளிக்கிறது இந்த பந்தர். லட்டுக்கு பூந்தி செய்வது போல பூந்தி செய்து அதனை முக்கால் பங்கு வெல்லம் மற்றும் கால் பங்கு சக்கரை சேர்த்து பாகு செய்து அதில் பூந்தியைப் போட்டு அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட்டால் கிடைக்கும் ஒரு வித இனிப்பே ”பந்தர் மிட்டாய்”. லட்டு போல மிருதுவாக இல்லாமல் கரகரவென இருக்கிற பந்தர் மிட்டாய். இதோ உங்களுக்காகவே.



சாப்பிட்டு முடித்து தயாராய் இருங்கள், உங்களை விஜயவாடாவின் முக்கியமான கோவிலான கனகதுர்கா ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன். “துர்காம்மா” என ஆந்திர மக்களால் அழைக்கப்படும் கனக துர்கா கோவில் வாசலில் சந்திப்போமா?...

புதன், 10 நவம்பர், 2010

சுடும் நிஜம்



எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு வயது நாற்பத்தியிரண்டு. நீண்ட காலமாக அவருக்கு ஒரு வரன் அமையாததற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இந்த வயதில் கல்யாணம் இனிமேலும் அவசியம் தானா என்ற எண்ணமும் அவருக்கு வலுவாக இருந்தது. இப்படியே இருந்துவிட்டு போலாமே என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ஒரு முறை தமிழகம் வந்தபோது தானாக வந்த ஒரு பெண்ணின் சம்பந்தம் அவருக்குப் பிடித்துப்போனது.

ஜானகி என்ற அந்த பெண் மிகுந்த திறமைசாலி. கர்நாடக சங்கீதத்திலும் அவருக்கு புலமை இருந்தது. நிறைய திறமைகள் இருந்தும் அவருக்கு ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டேயிருந்தது.

எந்தக் குறையுமில்லாமல் பிறந்து விட்டு பிறகு ஏதோ ஒரு விபத்திலோ அல்லது நமக்குப் புரியாத காரணங்களிலோ நமக்கு உடலில் குறை ஏற்படுவது என்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம்.

கல்லூரியில் ஜானகி படித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் மாலையில் கண் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. இரண்டு மூன்று நாட்களில் பார்வையில் கோளாறு ஏற்பட்டு அருகிலே இருப்பவர்களைக் கூட பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது.

கண் மருத்துவர்களிடம் காண்பித்தபோது கண்களில் ஏதோ குறை இருப்பதாகச் சொல்லி மருந்துகள் கொடுத்து இருக்கின்றனர். ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது பார்வை சுத்தமாகப் போய்விட்டது. பல கண் மருத்துவர்களிடம் காண்பித்த போது இதற்கு ஒரே தீர்வு, கண் தானம் பெறுவதுதான் என்று தெரிவித்துவிட்டனர் .

இந்த குறையின் காரணமாக ஜானகிக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே வந்தது. கண் பார்வை தெரியாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை, இந்த நிலையில்தான் நண்பர் தமிழகம் சென்ற போது, ஜானகியைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனக்கும் ஜானகிக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லாததால் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களின் வாழ்த்துக்களோடு அவரை திருமணம் செய்து கொண்டார். அவரது இந்த நல்ல குணத்தைப் பாராட்டாத ஆளில்லை.

தில்லிக்கு அழைத்துவந்த பிறகு இங்குள்ள பெரிய கண் மருத்துவர்களிடம் ஜானகியை அழைத்துச் சென்று காண்பித்த போதும் கண் தானம் தான் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்க ஒரே வழி என்று கூறி விட்டனர்.

கண் தானம் பெறுவதற்கு பலர் காத்திருக்கும் நிலையில் இவரது முறை வருவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதை சுலபமாக அறுதியிட்டுக் கூற முடியாது.

இந்நிலையில் நண்பரின் தாயார் அவரது வயது காரணமாய் மரணம் அடைந்து விட, அவருடைய கண்களை எடுத்து ஜானகிக்கு வைத்து இருக்கலாமே என்று எனக்கு தோன்றியது. நேரம் கடந்துவிட்டதால் அது முடியாத காரியமாகிவிட்டது.

இறந்த சில மணி நேரத்திற்குள் அவரது கண்களை எடுத்து ஜானகிக்குக் கொடுத்திருந்தால்…இழந்திருந்த கண்பார்வை கிடைத்திருக்கும் அல்லவா?

கண் தானம் செய்வது பற்றி பலருக்கும் பெரிய பயம். உயிருடன் இருக்கும்போதே நம் கண்களைத் தானம் கேட்டு யாரும் வரப்போவதில்லை. நாம் மரணம் அடைந்த பின் நமது கண்களைத் தானம் செய்வதால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடப் போவதில்லை. மாறாக நமக்குப் பிடித்த இவ்வுலகினை வேறு ஒருவர் அல்லது இருவர் மூலம் பார்க்க நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை நம்மில் பலரும் சிந்திக்க மறந்து விடுகிறோம் .

இப்போதெல்லாம் இரத்த வங்கிகள் போலவே கண் தானம் செய்ய விழையும் நபர்களுக்காகவே பல நகரங்களில் கண் வங்கிகளும் செயல்படுகின்றன.

ஆகையால் வாருங்கள் நண்பர்களே, இன்றே நாமும் நம் கண்களை தானம் செய்வதாய் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். பக்கத்தில் இருக்கும் கண் வங்கியில் நமது பெயரைப் பதிவு செய்து, அந்த விவரத்தினை நமது குடும்பத்தினருக்கும் தெரிவிப்போம்.

திங்கள், 8 நவம்பர், 2010

அமராவதி – அமரலிங்கேஸ்வரர் [பெஜவாடா – விஜயவாடா பயணம் –பகுதி 3]

பெஜவாடா – விஜயவாடா பயணம் -- பகுதி 1 படிக்க இங்கே

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2 படிக்க இங்கே

முதல் இரண்டு பகுதிகளையும் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். ”சென்ற பகுதியில் ஜாங்கிரி தரேன்னு சொன்னீங்களே, எங்க?”ன்னு கேட்கறீங்களா, நிச்சயம் உண்டு. இந்தப் பகுதியை படிச்சுட்டு போகும்போது தர்ரேனே சரியா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

அமராவதி – அமரலிங்கேஸ்வரர் – புத்த விக்ரகம்:



பானக நரசிம்மர் மற்றும் லக்ஷ்மி நரசிம்மரை தரிசித்த பிறகு நாங்கள் சென்ற இடம் ஸ்வர்ணமுகி ஆற்றின் நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதி நகர். விஜயவாடா நகரிலிருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவிலும், குண்டூர் நகரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது அமராவதி. முற்காலத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றின் நீர் தங்கம் போல ஜொலிக்குமாம் – அதனால் தான் ஸ்வர்ணமுகி. ஆனால் அந்தோ பரிதாபம் இப்போது தங்கம் போல ஜொலிக்காமல், தண்ணீர் சுத்தமாய் இல்லாமல், பிளாஸ்டிக் குப்பைகளும், பெட் பாட்டில்களுடன் அழுக்காய் இருக்கிறது. எல்லா நதி-ஆறுகள் போல இங்கேயும் ஜரூராக மணல் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது.




அமராவதி என்ற ஊர் பெயருக்குக் காரணம் ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அமரலிங்கேஸ்வரர் ஆலயம். ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான அமரலிங்கேஸ்வரர் சுமார் 15 அடி உயரமுள்ள லிங்க ரூபமாய் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறார். 50 ரூபாய்க்கு ஆலயத்தின் அலுவலகத்தில் அபிஷேகச் சீட்டும், வெளியே இருக்கும் கடையில் 50 ரூபாய்க்கு அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களும் வாங்கிச் சென்றால், மேல் மாடியிலிருந்து அமரலிங்கேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்து வைக்கிறார்கள். திவ்யமாய் 10-15 நிமிடத்திற்கு பொறுமையாக தரிசனம் செய்யலாம். அமரலிங்கேஸ்வரரை தரிசித்து பிறகு சாமுண்டிதேவியையும் தரிசித்து வெளியே வந்து மதிய உணவினை முடித்துக் கொண்டோம்.

அமராவதி நகருக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் அருங்காட்சியகம். மௌரியர்களின் காலத்திற்கு முன்பான புத்த விக்ரகங்கள், ஸ்தூபம், நாணயங்கள், போன்ற பல பொருட்களை கண்காட்சியாக வைத்துள்ளனர். வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் திறந்து இருக்கும் இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் 5 ரூபாய். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பதில்லை.

அருங்காட்சியகத்தின் அருகாமையிலேயே தியானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான புத்தரின் சிலையை வடித்து, தியான மண்டபம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தியான மண்டபத்திலும் புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. புத்தரின் சிலையை வெளியே இருந்தே புகைப்படங்கள் எடுக்கலாம்.



சரி இப்ப உங்களுக்காகவே ஜாங்கிரி: அச்சச்சோ நான் ஜாங்கிரி தரேன்னு சொன்னது சாப்பிடற ஜாங்கிரின்னு நீங்க நினைச்சுட்டீங்களா.



ஆந்திர மாநிலம் முழுவதுமே எங்கு சென்றாலும், மேலே உள்ளது போல ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல எழுதி வைத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் கூட தூரத்தினைத் தெரியப்படுத்தும் பலகைகளில் ஜாங்கிரி ஜாங்கிரியாகத் தான் சுற்றி வைத்து இருக்கிறார்கள். ஒன்றிரண்டு இடங்களிலேயே ஆங்கிலத்தில் தகவல் பலகைகளைக் காண முடிந்தது. தெலுங்கு படிக்கத் தெரியாவிட்டால் நமக்குத் திண்டாட்டம் - வாகன ஓட்டியின் தயவில் தான் நாம் செல்ல வேண்டிய இடம் எவ்வளவு தொலைவு என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ஜாங்கிரியைச் சுவைத்துக் கொண்டு இருங்கள் – விரைவில் அடுத்த பகுதியில் “பந்தர் மிட்டாய்” - யுடன் சந்திக்கிறேன்.

தொடரும்...

புதன், 3 நவம்பர், 2010

என்னைப் போல் ஒருவன்!

உலகத்திலே ஒருத்தரை மாதிரியே ஏழு பேரு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க! ”நம்மளை தவிர மீதி ஆறு பேர் எங்கன்னு தெரியல்லியே”ன்னு சில சமயம் நம்ம எல்லோருக்குமே தோணுமில்லையா?

நானும் அதுபத்தி எப்போதாவது யோசிப்பதுண்டு. சில நாட்களுக்கு முன் எனக்குக் கிடைத்த அனுபவம் ”என்னைப்போல ஒருவனை”ப் பற்றிய சிந்தனையை மீண்டும் தூண்டியது.

அன்று மெட்ரோ ரயிலில் பயணித்த போது வழக்கமாகப் பார்க்கும் ஒரு பெண் தென்பட்டாள். நான் இறங்க வேண்டிய நிலையம் வரும்போதுதான் அவளும் என்னைப் பார்த்துவிட்டு புன்முறுவலை உதிர்த்தாள். நான் இறங்கும் அதே இடத்தில் தான் அவளும் இறங்கினாள். பிறகு பேசியபடியே நிலையத்திலிருந்து வெளியே வந்தோம்.

அப்பெண்ணை, அவள் பிளஸ் 2 படித்த காலத்திலிருந்தே பார்த்திருக்கிறேன் என்பதால், இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதைப் பற்றி அவளிடம் விசாரித்த போது தான் பத்திரிக்கைத் துறையில் இருப்பதாக தெரிவித்து தனது பத்திரிக்கையில் வந்துள்ள அவளது சமீபத்திய கட்டுரையைப் படிக்கும்படி சந்தோஷமாக சொல்லிக் கொண்டே என்னுடன் வந்தாள்.

பேசிக்கொண்டே என் வீட்டின் அருகாமையில் வந்திருந்தோம். எனக்கு அப்பெண்ணை அவளின் கூடப்படித்த குடும்ப நண்பரின் பெண் மூலமே தெரியுமாதலால் என் நண்பரின் பெண்ணைப்பற்றி நான் அவளிடம் பேசப் போக ”அப்பெண்ணை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என அவள் திருப்பிக் கேட்டபோதுதான் எனக்கே சந்தேகம் வந்தது, "ஒரு வேளை நான் யாரோ தெரியாதவங்ககிட்ட வழிஞ்சிட்டேனோ?" என்று.

இத்தனைக்கும் நான், நண்பரின் மகள், அவளின் தோழி மற்றும் சிலர் சேர்ந்து சில நாட்கள் யோகா பயிற்சி வேறு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னிடமிருந்து பதில் எதுவும் வராததால் அப்பெண் சந்தேகத்துடன் [!] என்னைப்பார்த்து, ”நீங்க எங்க அப்பாவோட வேலை பார்க்கிற பார்கவ்ஜி என்று நினைத்தல்லவா இத்தனை நேரம் பேசினேன்?" என்றாள். மேலும் இதற்கு முன்னால் என்னை பார்த்த போதெல்லாம் கூட தன் அப்பாவிடம், ”பார்கவ்ஜியை இந்த இடத்தில் பார்த்தேன், அந்த இடத்தில் பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டிருந்ததாகச் சொன்னாள்.

"நல்ல வேளை, இன்றாவது உண்மை தெரிந்ததே!". எதற்கும் அந்த “என்னைப்போல் ஒருவன்[ர்]” ஆன பார்கவ்ஜியிடம் என்னை அறிமுகம் செய்து வையுங்க!"ன்னு சொல்லிவிட்டு, மீதி ஐந்து பேர் எங்கே இருக்கிறார்களோ என்ற நினைவுடன் அவளிடமிருந்து விடை பெற்றேன்.

திங்கள், 1 நவம்பர், 2010

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2


பெஜவாடா – விஜயவாடா பதிவின் முதலாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கலாமே :-)

விஜயவாடா நகரத்தின் ரயில் நிலையத்தின் இரு புறங்களையும் தனியாக பிரித்து 1 டவுன், 2 டவுன் என்று அழைக்கின்றனர். நாங்கள் இருந்தது 2 டவுன் பகுதியில் இருந்த பூர்ணானந்தம்பேட் பகுதியில். அங்கே ஒரு அழகிய ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது. இங்கே ஆஞ்சனேயருக்கு வெற்றிலையால் அர்ச்சனை செய்து, அதை எடுத்து பிரசாதமாக பக்தர்களுக்குக் கொடுத்து விடுகின்றனர். முதல் நாளே அங்கே சென்று தரிசனம் செய்து வந்தோம்.

அடுத்த நாள் விஜயவாடா மற்றும் அதனருகில் இருக்கும் சில கோவில்களுக்கு செல்வதற்கு வசதியாக வண்டியை ஏற்பாடு செய்து வைத்திருந்தார் நண்பர். காலை 07.௦௦ மணிக்குத் தயாராகி வீட்டை விட்டு புறப்பட்டோம். எங்களது முதலாவது நிறுத்தம் கிருஷ்ணா அணைக்கட்டைக் கடந்த பின் வரும் சீதாநகரத்தில் உள்ள ஆஞ்சனேயர் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வேங்கடாசலபதியின் கோவில். பயணம் நல்லபடியாக அமைய பிரார்த்தனை செய்து அங்கிருந்து கிளம்பினோம்.

மங்களகிரி பானக நரசிம்மர் கோவில்:

முற்காலத்தில் “தோதாத்ரி” என்று அழைக்கப்பட்ட மலையே மங்களகிரி மலை. எந்தப்பக்கத்தில் இருந்து பார்த்தாலும் இம்மலையின் தோற்றம் ஒரு யானையைப் போல இருக்கும் என்று சொல்கிறார்கள். முன்பெல்லாம் படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது. இப்போது காரிலேயே மலையின் மேலே செல்ல வழி ஏற்படுத்தி விட்டார்கள்.




ஒரு குகைக்குள் இருக்கும் இந்த கோவிலில் நரசிம்ம மூர்த்தியின் சிலை வடிவம் கிடையாது – பெரியதாய் வாய் திறந்திருக்கும் சிங்கமுகம் தான் மூர்த்தம். நரசிம்மருக்கு பிரசாதமாய் பானகம் – ”பிந்தி” என்று தெலுங்கில் அழைக்கப்படும் குடத்தில் படைக்கிறார்கள். ஒரு சொம்பு பானகத்தினை சிங்கத்தின் அகன்ற வாயினுள் ஊற்றினால் பாதியே உள்ளே செல்லும், மீதி வெளியே வழிந்து விடும் அதிசயம் இன்றைக்கும் நடக்கிறது. தினம் தினம் அவ்வளவு பானகம் அங்கே இருந்தாலும், ஒரு எறும்பைக் கூட பார்க்கமுடிவதில்லை. நாங்களும் ஒரு பிந்தி பானகத்தினை நரசிம்மமூர்த்திக்கு படைத்து, பாதி பானகத்தினை பிரசாதமாக பெற்றோம்.



பின்னர், கோவிலின் மேலே இருந்த ராஜலக்ஷ்மி சன்னிதி, அளவில் சிறிய அரங்கநாதர் சன்னிதி, மற்றும் ஆஞ்சனேயர் சன்னிதிகளை வழிபட்டுவிட்டு கீழே இறங்கினோம்.

லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்: நாங்கள் அடுத்து சென்றது மங்களகிரியின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில். மேலே பானக நரசிம்மர் என்றால் மலையின் கீழே, லக்ஷ்மி நரசிம்மர். லக்ஷ்மிதேவியை இடப்பக்கத்தில் அமர்த்தியபடி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தி என்று இக்கோவிலின் வரலாறு தெரிவிக்கிறது.

கோவிலின் கோபுரம் சிறப்பான முறையில் 153 அடி உயரமாகவும், 49 அடி அகலத்திலும், 11 நிலைகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் உயரமான கோபுரங்கள் அமைக்கும்போது, அதன் அகலமும் அதிகமாக இருக்கும், ஆனால் இங்கே குறைந்த அகலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம்.



நாங்கள் சென்ற அன்று, யாரோ ஒரு பக்தர், நரசிம்மமூர்த்திக்கு தங்கத்தில் பற்கள் செய்து அணிவித்திருந்தார். சாதாரண நாட்களில் வெள்ளிப்பற்களுடன் இருக்கும் அவர் அன்று தங்கப் பற்களில் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.

இங்குள்ள ஒரு மண்டபத்தில் இரண்டு பல்லிகளின் உருவங்கள் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொட்டு வழிபட்டால் பல்லி விழும் தோஷம் போகும் என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

தொக்குடு லட்டு:



உளுத்த மாவு, பயத்த மாவு கலந்து அதில் ஓமப்பொடியாக செய்து அதனை நன்றாக மிக்ஸியில் பொடி செய்து அதில் நெய், சக்கரைப்பாகு சேர்த்து உருண்டையாகப் பிடித்து செய்யும் தொக்குடு லட்டு ஆந்திராவில் கிடைக்கும் மற்றொரு இனிப்பு வகை. கிலோ ரூ.180- க்குக் கிடைக்கிறது. கர்ப்பமாக இருக்கும் ஆந்திரப் பெண்களுக்குக் கட்டாயமாக இந்த இனிப்பு கொடுப்பார்கள் என்பது கூடுதல் தகவல்!

அடுத்த இடுகையில் உங்களுக்கு ஜாங்கிரி தரப்போகிறேன். தயாராய் இருங்கள். சாப்பிட ரெடியா?