எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 10, 2010

சுடும் நிஜம்எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு வயது நாற்பத்தியிரண்டு. நீண்ட காலமாக அவருக்கு ஒரு வரன் அமையாததற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இந்த வயதில் கல்யாணம் இனிமேலும் அவசியம் தானா என்ற எண்ணமும் அவருக்கு வலுவாக இருந்தது. இப்படியே இருந்துவிட்டு போலாமே என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ஒரு முறை தமிழகம் வந்தபோது தானாக வந்த ஒரு பெண்ணின் சம்பந்தம் அவருக்குப் பிடித்துப்போனது.

ஜானகி என்ற அந்த பெண் மிகுந்த திறமைசாலி. கர்நாடக சங்கீதத்திலும் அவருக்கு புலமை இருந்தது. நிறைய திறமைகள் இருந்தும் அவருக்கு ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டேயிருந்தது.

எந்தக் குறையுமில்லாமல் பிறந்து விட்டு பிறகு ஏதோ ஒரு விபத்திலோ அல்லது நமக்குப் புரியாத காரணங்களிலோ நமக்கு உடலில் குறை ஏற்படுவது என்பது மிகவும் கொடுமையான ஒரு விஷயம்.

கல்லூரியில் ஜானகி படித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் மாலையில் கண் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. இரண்டு மூன்று நாட்களில் பார்வையில் கோளாறு ஏற்பட்டு அருகிலே இருப்பவர்களைக் கூட பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது.

கண் மருத்துவர்களிடம் காண்பித்தபோது கண்களில் ஏதோ குறை இருப்பதாகச் சொல்லி மருந்துகள் கொடுத்து இருக்கின்றனர். ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது பார்வை சுத்தமாகப் போய்விட்டது. பல கண் மருத்துவர்களிடம் காண்பித்த போது இதற்கு ஒரே தீர்வு, கண் தானம் பெறுவதுதான் என்று தெரிவித்துவிட்டனர் .

இந்த குறையின் காரணமாக ஜானகிக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே வந்தது. கண் பார்வை தெரியாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை, இந்த நிலையில்தான் நண்பர் தமிழகம் சென்ற போது, ஜானகியைப் பற்றிக் கேள்விப்பட்டு, தனக்கும் ஜானகிக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லாததால் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களின் வாழ்த்துக்களோடு அவரை திருமணம் செய்து கொண்டார். அவரது இந்த நல்ல குணத்தைப் பாராட்டாத ஆளில்லை.

தில்லிக்கு அழைத்துவந்த பிறகு இங்குள்ள பெரிய கண் மருத்துவர்களிடம் ஜானகியை அழைத்துச் சென்று காண்பித்த போதும் கண் தானம் தான் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்க ஒரே வழி என்று கூறி விட்டனர்.

கண் தானம் பெறுவதற்கு பலர் காத்திருக்கும் நிலையில் இவரது முறை வருவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதை சுலபமாக அறுதியிட்டுக் கூற முடியாது.

இந்நிலையில் நண்பரின் தாயார் அவரது வயது காரணமாய் மரணம் அடைந்து விட, அவருடைய கண்களை எடுத்து ஜானகிக்கு வைத்து இருக்கலாமே என்று எனக்கு தோன்றியது. நேரம் கடந்துவிட்டதால் அது முடியாத காரியமாகிவிட்டது.

இறந்த சில மணி நேரத்திற்குள் அவரது கண்களை எடுத்து ஜானகிக்குக் கொடுத்திருந்தால்…இழந்திருந்த கண்பார்வை கிடைத்திருக்கும் அல்லவா?

கண் தானம் செய்வது பற்றி பலருக்கும் பெரிய பயம். உயிருடன் இருக்கும்போதே நம் கண்களைத் தானம் கேட்டு யாரும் வரப்போவதில்லை. நாம் மரணம் அடைந்த பின் நமது கண்களைத் தானம் செய்வதால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடப் போவதில்லை. மாறாக நமக்குப் பிடித்த இவ்வுலகினை வேறு ஒருவர் அல்லது இருவர் மூலம் பார்க்க நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை நம்மில் பலரும் சிந்திக்க மறந்து விடுகிறோம் .

இப்போதெல்லாம் இரத்த வங்கிகள் போலவே கண் தானம் செய்ய விழையும் நபர்களுக்காகவே பல நகரங்களில் கண் வங்கிகளும் செயல்படுகின்றன.

ஆகையால் வாருங்கள் நண்பர்களே, இன்றே நாமும் நம் கண்களை தானம் செய்வதாய் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். பக்கத்தில் இருக்கும் கண் வங்கியில் நமது பெயரைப் பதிவு செய்து, அந்த விவரத்தினை நமது குடும்பத்தினருக்கும் தெரிவிப்போம்.

26 comments:

 1. ஏற்கனவே நானும் என் தந்தையும் தானம் செய்ய பதிவு செய்துள்ளோம் நண்பரே .. நல்ல பகிர்வு

  ReplyDelete
 2. naanum kandipaga padhivu seiven.. nandri

  ReplyDelete
 3. கண்தானம் செய்ய பதிவு செய்தால் 150 ரூபாயும், அஞ்சிகிலோ அரிசியும் கொடுத்தால் போதும்,அப்புறம் பாருங்க.

  இதற்காக விழிப்புணர்வு எல்லாம் தேவை இல்லை

  ReplyDelete
 4. I have already done Venkat; Thanks for this good article.

  ReplyDelete
 5. விழிப்புணர்வு தரும் பதிவுக்குப் பாராட்டுகிறேன் வெங்கட். இரு ஆண்டுகளுக்கு முன் எனது மாமனார் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில்
  மாரடைப்பில் காலமாகி விட , தலைமை மருத்துவரே எங்களிடம் அனுமதி பெற்று, உடனடியாக அவரது கண்களை தானமாகப் பெற்றனர். இத்தனைக்கும் அவருக்கு ஐ ப்ரஷருக்காக மூன்று முறை லேசர் சிகிச்சை செய்திருந்தோம். உபயோகப்படுமென தெரிந்ததும் தாமதிக்காமல் சம்மதித்தது பற்றி இறுதிச் சடங்கில் அனைவரும் நெகிழ்வுடன் வியந்தனர். இப்படி, தானத்துக்குப் பதிவிடாவிட்டாலும் மருத்துவமனையில் நிகழும் இறப்பில் சாத்தியங்கள் உள்ளன போலும்.

  ReplyDelete
 6. LK, தோசை, தொப்பிதொப்பி, மோகன்குமார், நிலாமகள் - உங்கள் அனைவருக்கும் நன்றி. நானும் சங்கர் நேத்ராலயாவில் பதிந்து வைத்துள்ளேன்.

  ReplyDelete
 7. விழிப்புணர்வுப் பொறியைப் பற்ற வைக்கும் பதிவு.

  ReplyDelete
 8. அன்புள்ள சுசீலாம்மா, உங்களது கருத்துக்கும், ஊக்க்குவிப்பிற்கும் நன்றி.

  ReplyDelete
 9. பதிவிற்கு உங்களுக்கு நன்றி...
  கண் தானம் பதிந்தவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..

  ReplyDelete
 10. @@ RVS: கருத்துரைத்த உங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 11. அருமையான பதிவு!

  ReplyDelete
 12. கண் தானம் பற்றிய இவ்விடுகை படிப்பவருக்கு நிச்சயமாய் விழிப்புணர்வு தரும்!!

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  ReplyDelete
 13. நல்ல பதிவு.. வெங்கட்..
  நண்பரின் மனைவிக்கு விரைவில் கண் பார்வை கிட்ட வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 14. மிக நல்லதொரு பதிவு. விரைவில் ஜானகி அவர்களுக்கு பார்வை கிடைக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. கே.பி.ஜனா சார், ஆர்.ஆர்.ஆர் சார், முத்துலெட்சுமி, லாவண்யா [உயிரோடை] உங்கள் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 16. மிக நல்ல விஷயத்தை உயிரோட்டமாக சொன்னதற்கு நன்றி.

  ReplyDelete
 17. எனது பதிவினை படித்து கருத்துரைத்துரைத்த அமைதி அப்பா அவர்களுக்கு எனது நன்றி.

  ReplyDelete
 18. சிறப்பான இடுகை; சீரிய செய்தி.

  ReplyDelete
 19. நன்றி சேட்டைக்காரன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.

  ReplyDelete
 20. ரொம்ப நல்ல விஷயத்தை பகிர்ந்திருக்கீங்க..

  ReplyDelete
 21. அருமையான விழிப்புணர்வுப் பதிவு.. நன்றி..

  ReplyDelete
 22. அமைதிச்சாரல் மற்றும் பதிவுலகில் பாபு, உங்களிருவருக்கும் எனது நன்றி.

  ReplyDelete
 23. நல்ல பதிவு.

  உங்கள் நண்பர் மனைவிக்கு கண் பார்வை விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.

  நானும் என் கணவரும் கண் தானத்திற்கு
  பதிவு செய்துள்ளோம்.கண் மருத்துவமனையில்.

  ReplyDelete
 24. உங்கள் வருகைக்கும், நீங்களும் கண் தானத்திற்கு பதிவு செய்திருப்பதற்கும் நன்றி அம்மா. நல்ல விஷயம் தான்.

  ReplyDelete
 25. இனிமேதான் செய்யனும் அண்ணா, நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு. உண்மையில் இது வரை இதை செய்யவில்லையே மனதை உறுத்துகிற பதிவுங்ணா.

  நன்றி பகிர்ந்ததில்.

  ReplyDelete
 26. @@ அன்னு: நன்றி சகோ. இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் கூட கண் தானம் செய்ய பதிவு செய்ய முடியும். சென்னை சங்கர் நேத்ராலயா கூட இந்த வசதியை தருகிறது. அதன் சுட்டி http://www.sankaranethralaya.org/eye-pledge.html.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....