வெள்ளி, 30 செப்டம்பர், 2016

ஏழு முடிந்து எட்டு!இன்று செப்டம்பர் 30.....  2009-ஆம் ஆண்டின் இதே நாளில் தான் இந்த வலைப்பூவில் முதன் முதலாக எழுத ஆரம்பித்தது.  ஏழு வருடங்கள் முடிந்து எட்டாம் ஆண்டின் தொடக்கம். “சந்தித்ததும் சிந்தித்ததும்என்று தலைப்பிட்டு, “வெங்கட் நாகராஜ்என்ற பெயரில் எழுதத் துவங்கியது இதே நாளில் தான்! வலைப்பூக்களை எனக்கு அறிமுகம் செய்த, நான் எழுதுவதற்கு முழுமுதற் காரணமாக இருந்த என்னுடைய சித்தப்பா திரு ராகவன் கல்யாணராமன்  [ரேகா ராகவன்] அவர்களுக்கு எனது முதல் நன்றி!

இந்த ஏழு வருடங்களில் – அதாவது 30 செப்டம்பர் 2009 முதல் 29 செப்டம்பர் 2016 வரை எழுதிய மொத்த பதிவுகள் 1185.  மொத்தப் பக்கப் பார்வைகள் – இப்பதிவினை தட்டச்சு செய்யும் வரை 686514.  வந்த கருத்துரைகள், அதற்கு நான் தெரிவித்த நன்றி, பதில் சேர்த்து மொத்தம் 47371. பக்கப் பார்வைகள் என Blogger தரும் கணக்கு, பதிவு எழுத ஆரம்பித்து சில மாதங்கள் கழித்து தான், அதாவது மே 2010 முதல் தான் இருக்கிறது.  அதனால் பக்கப் பார்வைகள் 7,00,000 தொட்டிருக்கலாம்.....மொத்தம் 1185 பதிவுகள் என்று சொல்லும் போது அதிகமாகப் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள் இவை தான் என Blogger Stats தகவல் தருகிறது.  அத்தகவல்கள் கீழே...


ஏழு ஆண்டுகளில் இந்த பக்கப்பார்வைகளும் பதிவுகளும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான சமயங்களில் தினம் தினம் பதிவு எழுதுவது இயலாமல் இருந்திருக்கிறது. எழுதும் பதிவுகளுக்கு வரும் பார்வையாளர்கள் பற்றிய கவலை இதுவரை இருந்ததில்லை. ஸ்வாரஸ்யமான விஷயங்களை எழுதும் பல பதிவர்கள் இருக்கும்போது என்னுடைய பதிவுகளை இவ்வளவு பேர் படிப்பதே பெரிய விஷயம் என்று தான் தோன்றும். சில பதிவுகளுக்கு வந்திருக்கும் பக்கப் பார்வைகளைப் பார்த்தால், விவேக் நடித்த படத்தில் ஆளில்லாத டீக்கடையில் கடமை உணர்வோடு டீ ஆத்தும் சர்தார் நினைவுக்கு வருகிறார்!

தமிழ்மணம் திரட்டி மூலம் தான் என்னுடைய பதிவுகளை அதிகம் பேர் படித்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் பதிவு வெளியிட்டவுடன் சில நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி தகவல் தெரிவித்து இருக்கிறேன். முகநூலிலும் பதிவிட்ட உடன் அதன் சுட்டி கொடுத்திருக்கிறேன்.  இண்ட்லி, தமிழ்10, பதிவர் திரட்டி என சில திரட்டிகளிலும் ஆரம்ப காலங்களில் பதிவுகளை இணைத்து வந்திருக்கிறேன். என்றாலும் சமீப காலங்களில் தமிழ்மணம் தவிர வேறெதிலும் இணைப்பதில்லை – திரட்டிகளும் இல்லை என்று சொல்லலாம்!

சில வருடங்களாகவே, பதிவுகளுக்கு கிடைக்கும் பக்கப்பார்வைகள், கிடைக்கும் தமிழ்மண வாக்குகள் என்பது பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை.  தமிழ்மணத்தில் எத்தனாவது இடம் என்பது பற்றியும் பெரிதாக யோசிப்பதில்லை. எழுதுவதே நமது சந்தோஷத்திற்குத்தானே... எழுதுவதன் மூலம், அதைப் படித்து நண்பர்கள் சொல்லும் கருத்துகள் அந்த சந்தோஷத்தினை இரட்டிப்பாக்கும். நமது எழுத்து யாராவது சிலருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில் தானே தொடர்ந்து எழுதுகிறோம்.

எனக்கென்று ஒரு வரைமுறை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிறேன். மனச்சுரங்கத்திலிருந்து (28 பதிவுகள்), தலைநகரிலிருந்து (32 பதிவுகள்), பயணம், புகைப்படங்கள், படித்ததில் பிடித்தது, ஃப்ரூட் சாலட் (178 பதிவுகள்), ச்மையல் (36 பதிவுகள்) என வேறு வேறு தலைப்புகளில் பதிவுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதில் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.  இதுவரை சென்ற பயணங்களில் சிலவற்றை தொடராக எழுதி இருக்கிறேன். அந்த தொடர்களும் அதன் தலைப்புகளும், இணைப்புகளும் கீழே......

ஏரிகள் நகரம்21 பதிவுகள் – உத்திராகண்ட் மாநிலத்தின் நைனிதால் மற்றும் அதன் அருகே உள்ள சில இடங்களுக்குச் சென்று வந்த சுற்றுலா பற்றிய இத் தொடரினை எனது முதலாவது மின்புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். ஏரிகள் நகரம் மின்புத்தகம் இதுவரை 9566 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏழைகளின் ஊட்டி8 பதிவுகள் – நம் தமிழகத்தின் ஏற்காடு சென்று வந்தது பற்றிய பதிவுகள்.

காசி-அலஹாபாத்16 பதிவுகள் – உத்திரப் பிரதேசத்தில் உள்ள காசி மற்றும் திரிவேணி சங்கமம் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் பற்றிய தொடர்.

சபரிமலை13 பதிவுகள் – சபரிமலை சென்று வந்தது பற்றிய பயணத் தொடர் கட்டுரைகள்.

தேவ்பூமி ஹிமாச்சல்23 பதிவுகள் – ஹிமாச்சலப் பிரதேசம் பயணக் கட்டுரைகள் – கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், உணவு என பயண அனுபவங்களின் தொடர். இன்னும் சில நாட்களில் இக்கட்டுரைகளின் தொகுப்பு எனது மூன்றாவது மின்புத்தகமாக வெளிவர இருக்கிறது.

பஞ்ச துவாரகா30 பதிவுகள் – குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஐந்து துவாரகைகள் சென்று வந்த அனுபவங்கள், பயணக் குறிப்புகள் உள்ள தொடர்.

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது27 பதிவுகள் – மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான இடங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்ததில் கிடைத்த அனுபவங்கள் உள்ள தொடர்.  இத் தொடரின் அனைத்து பகுதிகளையும் தொகுத்து WWW.FREETAMILEBOOKS.COM தளம் மூலம் எனது இரண்டாவது மின்புத்தகம் வெளிவந்திருக்கிறது. இதுவரை 2354 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

மஹாகும்பமேளா8 பதிவுகள் – அலஹாபாத் – திரிவேணி சங்கமத்தில் நடக்கும் மஹாகும்பமேளா சமயத்தில் அங்கே சென்று வந்த அனுபவங்களின் கட்டுரைத் தொடர்.

ரத்த பூமி10 பதிவுகள் – ஹரியானா மாநிலத்தில் இருக்கும் குருக்ஷேத்திரா சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள், பயணக் குறிப்புகள் கொண்ட தொடர்.

வைஷ்ணவ் தேவி13 பதிவுகள் – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்ரா எனும் இடம் அருகே மலைப்பகுதியில் இருக்கும் கோவில் வைஷ்ணவ் தேவி கோவில் – கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் மலையேற்றம் – நடந்தே சென்று வந்த அனுபவங்கள் கொண்ட தொடர்.

ஜபல்பூர் – பாந்தவ்கர் 12 பதிவுகள் – மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மற்றும் பாந்தவ்கர் வனப்பகுதிகளுக்குச் சென்று வந்த பயணம் குறித்த கட்டுரைகள்.

ஏழு சகோதரிகள்இதுவரை 54 பதிவுகள் – இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தொடரில் வட கிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வந்த பயணம் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வருடத்தில் சென்ற பயணங்கள் பற்றி இன்னும் எழுதத் தொடங்கவேயில்லை! மொத்தம் மூன்று பயணங்கள்! ஏழு சகோதரிகள் தொடர் முடிந்த பிறகு அப்பயணங்கள் குறித்து எழுதும் எண்ணமுண்டு!

இந்த ஏழு வருடங்களாக என் பதிவுகளைப் படித்து, தங்களது கருத்துகளைச் சொல்லி, என்னை இன்னும் எழுதிக் கொண்டிருக்க ஊக்கமளிக்கும் அனைத்து பதிவுலக நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உறவினர்கள், மற்ற நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. சற்றே திரும்பிப் பார்க்கையில் நான் இத்தனை பதிவுகள் எழுதி இருக்கிறேன், இரண்டு மின்புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது என்பதே எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இத்தனைக்கும் காரணமாக இருக்கும் உங்கள் அன்பிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.......

என்னதான் ஃபேஸ்புக் வந்தாலும், என்னால் வலைப்பூவில் எழுதுவதை விட முடியவில்லை – ஃபேஸ்புக்-ஐ விட வலைப்பூ இன்னும் நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருக்கிறது. வலைப்பூவில் எழுதி வந்த பல நண்பர்கள் ஃபேஸ்புக்கிற்குத் தாவி ஒவ்வொரு நாளும் பத்து பதினைந்து இற்றைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் – நானும் சில நாட்கள் எழுதுகிறேன் என்றாலும், வலைப்பூவே முதல் சாய்ஸ் எனக்கு!

முடிந்த வரை எழுதலாம்... என்றைக்கு எழுதுவதற்கு தடை வருகிறதோ அதுவரை எழுதுவோம். 

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை......

நன்றி கலந்த நட்புடன்

வெங்கட்

புது தில்லி......

வியாழன், 29 செப்டம்பர், 2016

ஏழாவது குறுக்கு சந்து...... - பவுடர் வாசனை


நேற்று அலுவலகத்தில் பரபரப்பான நேரம். சில வேலைகளை உடனடியாக முடித்து அனுப்ப வேண்டி, அனைவரும் வேலையில் மூழ்கி இருந்தோம். பொதுவாகவே அலுவலக தொலைபேசிக்கு நிறைய அழைப்புகள் வந்த வண்ணமே இருக்குமே..  ஒவ்வொரு அழைப்பாளரிடமும் பேசி அவர்களுக்கு விஷயங்களை புரிய வைப்பதற்கென்றே அழைப்பை எடுக்கும் நபர் தனியாக சாப்பிட வேண்டும். கேள்விகள், கேள்விகள், கேள்விகள் – இடை விடாத கேள்விகள்! சொல்லும் பதில்கள் அவர்களுக்குப் பிடித்திருந்தால் நன்றி சொல்வார்கள். பிடிக்காத பதில் என்றால் இன்னும் கிளைக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்!

இப்படி பரபரப்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது எனது அலைபேசியில் ஒரு அழைப்பு – சேமிக்காத எண்ணிலிருந்து. பெரும்பாலும் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது, குறிப்பாக அலுவலத்தில் பணியிலிருக்கும் போது அழைப்பை ஏற்பதில்லை. ஒரு முறை முழுவதும் அடித்து ஓய்ந்தது. தொடர்ந்து இரண்டாம் முறையும் அழைப்பு வரவே, யாருக்கு என்ன பிரச்சனையோ, எதற்கு அழைக்கிறார்களோ என்று தோன்ற அழைப்பை ஏற்றுக் கொண்ட்டேன்.......

எதிர் முனையிலிருப்பவர், யார் பேசுகிறார் என்பதை எல்லாம் சொல்லவில்லை, “நான் ஏழாவது குறுக்கு சந்துக்கு வந்துட்டேன், இதுக்குப்புறம் எப்படி வரணும்?ன்னு கேட்கிறார்.  நான் எட்டாவது முட்டுச் சந்துக்குப் போங்கஎன்று சொல்ல நினைத்தேன்! ஆனாலும், உங்களுக்கு யார்ட்ட பேசணும், தப்பான நம்பருக்கு ஃபோன் பண்ணி இருக்கீங்கஎன்று கேட்க, எதிர் முனையிலிருந்து மீண்டும் அதே கேள்வி “நான் ஏழாவது குறுக்கு சந்துக்கு வந்துட்டேன், இதுக்குப்புறம் எப்படி வரணும்?

இரண்டாவது முறையும் பொறுமையாக, தப்பான நம்பருக்கு ஃபோன் பண்ணிட்டீங்க, நம்பர் செக் பண்ணுங்கஎன்று சொல்லி, அணைப்பைத் துண்டித்தேன்.  சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு – அதே எண்ணிலிருந்து. இந்த முறையும் தப்பான நம்பர், நம்பர் செக் பண்ணுங்க என்று சொல்ல அவரோ ஏழாவது குறுக்குச் சந்தை விட மாட்டேன் என அடம்!.... சரி இணைப்பு சரியில்லை போலும், அதனால் நான் பேசுவது கேட்கவில்லை என விட்டு விட்டேன்....

அலுவலகத்தின் வேறொரு பாகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் அலைபேசியை எனது இருக்கையிலேயே வைத்துவிட்டு சென்று விட்டேன்.  திரும்பி வந்து பார்த்தால், அதே தெரியாத எண்ணிலிருந்து ஏழு மிஸ்டு கால்!

ஏழாம் குறுக்கு சந்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறாரோ......

உலக சுற்றுலா தினம் - எதையும் சமாளிப்போம்....

செப்டம்பர் 27 – உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடப்படுகிறது. பயணப் பிரியனான நான் அன்றைய தினத்தில் பயணம், சுற்றுலா பற்றி ஏதாவது பதிவு போட்டு இருக்க வேண்டும்.....  ஆனாலும் எழுதவில்லை – எழுத முடியவில்லை. நண்பர் துரை செல்வராஜூ அவர்கள் தளத்தில் உலக சுற்றுலா தினம் முன்னிட்டு மிகச் சிறப்பாக அவரது ஊரான தஞ்சையின் சிறப்புகளைப் பற்றி ஊர் சுற்றலாம்என்ற தலைப்பில் எழுதி இருந்தார்.  

இந்தியாவினைப் பொறுத்த வரை, எனக்குத் தெரிந்து, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்கள் அதிகம் பயணம், குறிப்பாக சுற்றுலாக்கள் செய்கிறார்கள் – எங்கே சென்றாலும், எந்த ஊருக்குச் சென்றாலும், இம்மக்களை பார்க்க முடிகிறது. இவர்களைப் போலவே பெங்காலிகளும் நிறைய பயணம் செய்கிறார்கள். தமிழக மக்களும் பெங்காலிகளுடன் போட்டி போடுகிறார்கள். நான் பயணிக்கும் போது வெளிமாநிலங்களில் பல முறை தமிழகத்திலிருந்து சுற்றுலாவாக வந்துள்ளவர்களைப் பார்த்திருக்கிறேன்.  சிலரிடம் பேசியும் இருக்கிறேன்.

நேற்று வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தேன். கமகமவென்று பவுடர் வாசனைஎங்கிருந்தோ வந்தது. பொதுவாக இந்த ஊர் மக்கள் நாத்தமருந்து என நான் அழைக்கும் செண்ட் வாசனையோடு தான் அதிகம் வருவார்கள் – பவுடர் வாசனை நம் ஊருக்கே உரியது! பவுடர் வாசனை பற்றி வேறு சில நினைவுகள் உண்டு – அது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன் – பவுடர் வாசனை தாக்கத்தில் யாருப்பா அது, இத்தனை பவுடரோட, அதுவும் ராத்திரி ஒன்பது மணிக்குஎன்ற எண்ணத்தோடு திரும்பினேன்.

காலில் செருப்பில்லாமல் ஒரு முதியவர், பேண்ட், டக் இன் செய்யாத சட்டை, முகம் மட்டுமல்லாது, காலர் பகுதி, கழுத்துப் பகுதி, சட்டையின் முதல் இரண்டு பட்டன்கள் திறந்திருக்க, நெஞ்சுப்பகுதி முழுவதும், ஒரு டப்பா நிறைய கொட்டிக்கொண்ட பவுடரோடு, என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். பார்க்கும்போதே நம்ம தமிழ்நாடு என்று தைரியமாகச் சொல்ல முடியும்! அந்தச் சந்தில் என்னருகே வந்து, கையை நீட்டினார். கையில் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட ஒரு சீட்டு – “Chugh Charitable Trust”  என முகவரியோடு அச்சடித்து இருந்தது. அந்தச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு தமிழில் கேட்கிறார் – இந்த சந்து தான்னு நினைக்கிறேன் – இந்த இடம் எங்க இருக்கு?என்கிறார்! அதுவும் அந்த இடத்திற்கு எதிரே நின்று கொண்டு!  அவருக்கு இதோ இருக்கு எனச் சொன்ன பின்னர், எந்த ஊருலேருந்து வந்து இருக்கீங்க?என்று கேட்டேன்.  சென்னையிலிருந்து என்று சொல்லி, வழி சொன்னதற்கு நன்றி கூட சொல்லாது மேலே நடந்தார்....

ஹிந்தி தெரிகிறதோ இல்லையோ, தமிழ் மட்டுமே தெரிந்த இவர் போன்ற பலரும் குழுவாக பயணித்து வந்து விடுகிறார்கள். இப்படி வரும் பெரும்பாலான பயணிகள் தங்கும் விடுதியான Chugh Charitable Trust வாசலில் நிரந்தரமாக இரு தரைக் கடைகள் – ஒன்று குழந்தைகளுக்கான துணி விற்கும் ஒரு முதியவர் – இன்னுமொன்று சைக்கிளில் வந்து துணிப்பைகள் விற்பவர்! இரண்டு பேரும் வட இந்தியர்கள்! அவர்களிடம் தமிழிலேயே பேசுகிறார்கள், பேசித் தள்ளுகிறார்கள் – வியாபாரிகள் எண்களை மட்டும் தமிழில் தெரிந்து வைத்திருக்கிறார்கள், விலையை தமிழிலோ ஆங்கிலத்திலோ சொல்ல, இவர்கள் தமிழிலேயே பேரம் பேசுகிறார்கள்......  ஒன்றிரு முறை நின்று வேடிக்கைப் பார்த்திருக்கிறேன்.

ஹிந்தி தெரியாவிட்டாலும் தமிழை வைத்துக் கொண்டே “எதையும் சமாளிப்போம்என்று வந்து விடுகிறார்கள்.  சுற்றுலா மோகம், நிறைய இடங்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆசை அவர்களை இப்படி மொழி தெரியாத தூர தேசங்களுக்கும் வர வைக்கிறது...... ஒரே ஒரு மொழி தெரிந்த அவர்களைப் போன்றவர்களே, எதையும் சமாளிக்கலாம் என்று தைரியத்தோடு பயணம் செய்ய, இரண்டுக்கும் மேலான மொழிகள் தெரிந்திருந்தும் பயணம் செய்ய ஆசையே இல்லாது பலரும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.......

புது வருடம் ஆரம்பிக்கும்போது ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு Resolution வைத்திருக்கிறோம்  - இந்த வருடத்தில் இதைச் செய்வேன் என்று!  சுற்றுலா தினம் கொண்டாடும் இந்தச் சமயத்தில் நாமும் ஒரு Resolution வைத்துக் கொள்வோம் - வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான் அது! ஏற்கனவே வருடத்தில் நிறைய பயணம் செய்யும் நான் இப்படிச் சொல்வது சரி தானே!

ஆதலினால் பயணம் செய்வீர்!

வேறு சில எண்ணங்களோடு நாளைய பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

புதன், 28 செப்டம்பர், 2016

தனியே தன்னந்தனியே - தமிழ்க்குடும்பம்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 54

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


சென்ற பகுதியில், ராணுவ வீரர்கள் வைத்திருந்த உணவுக் கூடத்தில் பராட்டாவும்-தயிர் பச்சடியும் சாப்பிட்ட பிறகு வெளியே ஒரு தமிழ்க்குடும்பத்தினைச் சந்தித்தது பற்றியும், அவர்கள் பற்றி அடுத்த பதிவில் சொல்வதாகவும் எழுதி இருந்தேன். இந்தப் பதிவில் அவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நம்மில் பலர் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கே துவண்டு விடுகிறோம். அரசாங்கம் நமக்கு அந்த வசதி செய்து தரவில்லை, இந்த வசதி தரவில்லை என பெரிய பட்டியலே வைத்திருக்கிறோம். எவ்வளவோ வசதிகள் இருந்தாலும், இல்லாததை நினைத்து தான் ரொம்பவே அதிகம் பேசுகிறோம், எழுதுகிறோம்! ஆனால் அடிப்படை வசதிகளே இல்லாத இடத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் அதுவும் கைக்குழந்தையுடன் ஒரு தமிழ்க் குடும்பம் வசித்து வருகிறது. அவர்களுக்கு பிரச்சனைகள் ஒன்றல்ல, ரெண்டல்ல – பன்மடங்கு பிரச்சனைகள்! அவற்றைப் பிரச்சனைகளாகப் பார்க்காமல் அவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.பெரம்பலூர் எங்கே, ZEMITHANG  எங்கே? சாலை வழியே பயணிக்க வேண்டுமென்றால் – பெரம்பலூரில் இருந்து சென்னை வழியே கடலோரமாகவே சுமார் 3500 கிலோமீட்டர் பயணித்து, பல மாநிலங்ளைக் கடந்து ZEMITHANG அடைய முடியும்! ரயில் பயணம் என்றால் அசாம் மாநிலத்திலுள்ள தேஸ்பூர் வரை வந்து பிறகு முதுகொடிக்கும் பேருந்துப் பயணம். விமானம் என்றாலும் கௌகாத்தி/தேஸ்பூர் வரை தான். சாலை வழியாக நிற்காமல் தொடர்ந்து பயணித்தால் 65 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம்!

இத்தனை தூரத்தில், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் ஒரு தமிழ்க்குடும்பம் வசிக்கிறது. அந்த நபர் ராணுவத்தில் பணி புரிகிறார். அவரது மனைவி வீட்டையும், தனது மகனையும் கவனித்துக் கொள்கிறார். வீடு என்றால் மாளிகை அல்ல! சாதாரண டெண்ட் கொட்டகை தான்! சுற்றிலும் அருணாச்சல பழங்குடி மக்கள் – அவர்கள் பேசுவது இவர்களுக்குப் புரியாது – இவர்கள் பேசும் தமிழ் அந்த மக்களுக்குப் புரியாது! அதிலும் ராணுவ வீரருக்காவது ஹிந்தி தெரிந்திருக்கிறது – அவர் மனைவிக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் – ஆங்கிலமும் தெரியாது....


இனிதன்.....

நமது ஊர் பொருட்கள் என எதுவும் கிடைக்காது! காய்கறிகள் கூட வித்தியாசமான காய்கறிகள். நம் ஊரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழல்! குளிர், பனி என மோசமான தட்பவெட்பம்.  மருத்துவமனை வசதிகள் அதிகம் கிடையாது – இருப்பதும், ராணுவ வீரர்களுக்கான தற்காலிக வசதிகள் மட்டுமே! அப்படியான இடத்தில் தைரியமாக, தனது கணவன் மற்றும் ஒன்றே முக்கால் வயது குழந்தை இனிதன் உடன் அங்கே வசிக்கிறார் அந்தப் பெண். இப்பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொன்னார் அந்த ராணுவ வீரர்.

ஊருக்குச் செல்ல நினைத்தால் தேஸ்பூர்/கௌகாத்தி வரை சாலைப் பயணம் – மோசமான சாலையில் பயணம் செய்ய உங்களுக்கு தேகபலம் மட்டுமல்ல மனோபலமும் தேவை! ஒரு முறை சென்று வந்ததற்கே உடலின் பல பாகங்கள் கழன்று போனது போல இருந்தது எங்களுக்கு! இம்மாதிரி இடத்திலிருந்து ஊருக்குச் செல்வது என்பது கடினமான விஷயம் என்பதால் இந்த மூன்று வருடங்களில் ஒரு முறையோ, இரண்டு முறையோ தான் பெரம்பலூருக்குச் சென்றிருக்கிறார்கள். இங்கிருந்து பணி மாற்றம் கிடைக்கும் வரை கடின வாழ்க்கை தான் என சிரித்தபடியே சொல்கிறார் அந்த ராணுவ வீரர்!

பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். குழந்தையுடன் அந்த இளம்பெண் அமர்ந்திருந்தாரே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. அவருக்கே பதினெட்டு-இருபது வயது தான் இருக்கலாம். இந்தச் சிறுவயதில் தனது குடும்பத்தினரை விட்டு விலகி இத்தனை தூரத்தில் தனது கணவன் – குழந்தையுடன் வாழ்க்கை நடத்துவதற்கு அசாத்திய மனோதைரியம் வேண்டும். பெரும்பாலான ராணுவ வீரர்கள் சின்னச் சின்ன டெண்ட் கொட்டகைகளில் தான் வசிக்கிறார்கள். குடும்பத்தினை ஊரில் விட்டுவிட்டு, தனியாகத் தான் வசிக்கிறார்கள் என்றாலும் இந்த பெரம்பலூர் நண்பரைப் போல குடும்பத்துடன் வசிப்பவர்கள் வெகுசிலரே. திருவிழா சமயம் என்பதால் இங்கே இத்தனை மக்கள் – இல்லை என்றால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.

அந்த பெரம்பலூர் ராணுவ வீரரையும் அவர் குடும்பத்தினரையும் வாழ்த்தி விட்டு எங்கள் பயணத்தினைத் துவங்க, எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு நடக்க ஆரம்பித்தோம். ஓட்டுனர் ஷம்பு எங்களுக்கு முன்னால் நடந்து சென்று வாகனத்தினை தயாராக வைத்திருந்தார். வழியெங்கும் மோன்பா பழங்குடியினர் தங்களது வாகனங்கள் வைத்திருந்த இடத்திற்கு வந்து வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை ருசித்துக் கொண்டிருந்தார்கள் – பெரும்பாலும் சைனீஸ் உணவு வகைகள்! Chop Sticks மட்டும் தான் இல்லை!

அவர்களை நாங்கள் வித்தியாசமாகப் பார்க்க, அந்த மனிதர்கள் எங்களை வித்தியாசமாகப் பார்க்க.....  புன்னகை புரிந்து இருக்கத்தினைக் குறைத்துக் கொண்டோம். ஆங்காங்கே இருக்கும் குழந்தைகளுக்கு டாட்டா காண்பிக்க அவர்களும் எங்களுக்கு டாட்டா காண்பித்தார்கள்! குழந்தைகள் முகத்தில் அதிக புன்னகை! அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனதென்னவோ அந்த பெரம்பலூர் குடும்பத்தினையே நினைத்துக் கொண்டிருந்தது. அக்குடும்பம் இத்தனை தொலைவில் வாழ்க்கை நடத்துவதில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு முன்னால் நமக்கு வரும் பிரச்சனைகள், பிரச்சனைகளே அல்ல!

குறிப்பாக அந்தப் பெண்ணின் மனோ தைரியம் ஆச்சரியப்படுத்தியது! கணவன், குழந்தை தவிர வேறு யாரிடமும் தமிழில் பேசக்கூட முடியாத நிலை. கணவன் வேலைக்குப் போனபிறகு என்ன செய்வார், பெரிதாக பொழுது போக்கும் வசதிகளும் இல்லாத அவர் எப்படி நேரத்தினை கடத்துகிறார் என்றெல்லாம் சிந்தித்த படியே பயணித்துக் கொண்டிருந்தேன். மூன்று மணி நேர பயணம் – தவாங்க் சென்று சேர்ந்து விடலாம்.... 

வழியில் கிடைத்த சில அனுபவங்களோடு தவாங்க் சென்று என்ன செய்தோம் என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மாதவம் செய்தவர்கள்


புதுக்கோட்டை சகோ கீதா அவர்கள் எழுதிய இக்கவிதையை நீங்களும் படித்திருக்கலாம். படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள். மனதைத் தொட்ட கவிதை.படிக்கும் பருவத்தில் பள்ளியில்
பதற்றமாய் இருக்கும்
வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்
சென்று மீள்வோம்..

பணியிடத்தில் அதற்கென்று இடமே
பார்த்திராத பொழுது மறைவிடங்கள்
நாடுவோம்..

பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது
பரிதவித்து அடக்கியிருப்போம்...
அதற்காக உள்ளே எதுவும் இறக்காது
ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...

நகரங்கள் கிராமங்கள்
எல்லாமே மாறுதலின்றி
ஒரே நிலைதான்....என்ன

கிராமங்கள் மறைவிடம்
கொடுக்கும்...

காலங்கள் மாறவில்லை
முப்பது வருடங்களாகியும்
என் சந்ததியும் அலைகின்றனர்..
எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்
நுழைவோம்...

இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்
இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று
இல்லாது அலைவோம்...

மாதவம் செய்து பிறந்த பெண்கள்
நாங்கள்...


இன்றைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போது சந்திக்கும் அவலம் இது. நமது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இதே நிலைமை தான்.  பல மாநிலங்களில் பயணித்திருக்கும் அனுபவத்தில் நான் பார்த்து வெட்கிப் போன ஒரு விஷயம் இது.

ஒரு முறை ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள தரம்ஷாலாவிற்கு தில்லியிலிருந்து பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட 500 கிலோமீட்டருக்கும் மேல் தொலைவு – தில்லியின் பேருந்து நிலையத்திலிருந்து தள்ளி கழிப்பறை வசதி இல்லாத இடத்திலிருந்து தான் தனியார் பேருந்துகள் புறப்படும். ஆகையால் இப்பேருந்துகளில் பயணிப்பவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே எல்லா வேலைகளையும் முடித்திருக்க வேண்டும். இரவு ஒன்பது மணிக்குப் புறப்பட்டால் நள்ளிரவு சமயத்தில் வழியே உள்ள உணவகத்தில் நிறுத்துவார்கள். அங்கே சென்றால் தான் கழிப்பறை வசதிகள். 

அதன் பிறகு எங்கும் நிறுத்துவதில்லை. காலை 07.30 மணிக்கு தான் தர்ம்ஷாலா சென்றடையும் அப்பேருந்து.  கிட்டத்தட்ட 07.30 மணி நேரம் எப்படித் தாங்குவது? ஆணோ-பெண்ணோ யாராலும் இயற்கை உபாதைகளை இத்தனை நேரம் அடக்குவது மிகவும் கடினம். நடுவே ஒரு இளம்பெண் ரொம்பவே முடியாமல், ஓட்டுனரிடம் வண்டியை கழிப்பறை வசதி உள்ள இடத்தில் நிறுத்தச் சொல்ல, அவ்விடத்திலேயே நிறுத்தினார் – அந்த இடம் – அத்துவானக் காடு – மலைப்பகுதி – அப்படியே ஓரமாப் போய்ட்டு வாஎன்கிறார். 

இங்கே இன்னும் ஒரு விஷயத்தினையும் சொல்ல வேண்டும் – வட மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் பெண்களை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை – குறிப்பாக ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில்! வட மாநிலங்களின் இந்த அவலம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்...... உதாரணத்திற்கு ஒரு விஷயம் மட்டும்.....

பெரும்பாலான வட இந்திய கிராமங்களில் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. பெண்கள் அதிகாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ, தங்கள் வீடுகளிலிருந்து வயல்வெளிப்பக்கமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்வார்கள். கும்பலாகத் தான் செல்வார்கள் என்றாலும், சில தவிர்க்க முடியாத சமயங்களில் தனியாகவும் செல்ல வேண்டியிருக்கும். அப்படித் தனியாக செல்லும் பெண்களை அந்தக் கிராமத்திலுள்ள சில காமுகர்கள் வேட்டையாடி கற்பழிக்கும் கொடுமைகள் பல முறை நடந்திருக்கிறது. பெரும்பாலும் இந்த விஷயங்கள் வெளியே வருவதே இல்லை. அப்படியே வந்தாலும், காப்என அழைக்கப்படும் பஞ்சாயத்துகளிலேயே பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் – காமுகர் கிராமத்துக்கு இத்தனை பணம் கொடுக்க வேண்டும், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது போன்ற கேவலமான தீர்ப்பாகத் தான் இருக்கும் அந்த காப் பஞ்சாயத்தின் தீர்ப்பு....... கேட்கும்போதே கோபம் கொப்புளிக்கிறது என்றாலும் ஒன்றும் செய்வதிற்கில்லை – அதிலும் அரசியல், பணபலம் என விகாரமாக பல்லிளிக்கும் நிலை...

பேருந்து விஷயத்திற்கு வருவோம்....  அந்த இளம்பெண், கழிவறை வசதி இருக்கும் இடத்தில் நிறுத்தச் சொன்னால் இப்படி நட்டநடுக்காட்டில் நிறுத்தினால் எப்படி என்று கஷ்டத்துடன் ஓட்டுனரிடம் சொல்ல, “போறதுன்னா போயிட்டு சீக்கிரமா வா, எல்லாருக்கும் நேரமாவுது பாரு!என்கிறார் அந்த ஓட்டுனர் திமிராக. அந்த இளம்பெண்ணோ தனியாக வந்திருக்க, வேறு வழியில்லாமல் கீழே இறங்க, வேறொரு பெண்ணும் துணைக்கு இறங்கினார்.  ஆண்களில் சிலரும் வேறு பக்கத்துக்குச் செல்ல, தன் நிலையைக் குறித்த ஒரு பதட்டத்துடன் தலையைக் குனிந்தபடி திரும்பினார் அந்த இளம்பெண்.  அந்த ஓட்டுனரிடம் வழியில் கழிவறை வசதி உள்ள இடத்தில் நிறுத்தாமல் இப்படி நட்டநடுக்காட்டில் நிறுத்துவது சரியா? என்று நானும் நண்பர்களும் கேட்க, ‘இப்பகுதிக்குப் புதுசா? இங்கே அப்படி வசதிகள் ஒண்ணும் கிடையாதுஎன்று திமிராகவே பதில் சொன்னார். நானும் விடாமல், பெட்ரோல் பம்புகளில் கழிவறை வசதி இருக்குமே அங்கே நிறுத்தலாமே என்றால் அதற்கும் திமிராகவே பதில் வந்தது.....

இது இப்படி இருக்க, சமீபத்தில் தமிழகம் வந்தபோது சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பள்ளி ஒன்றை பேருந்திலிருந்து காண முடிந்தது. அரசுப் பள்ளி அது – சுற்றிலும் சுவர் இருக்க, நடுவே சிறியதாய் பள்ளி – நன்கு வளர்ந்திருக்கும் புதர்களைத் தாண்டி சுவர் ஓரமாக கழிவறை – பெண்கள் பயத்தோடு அந்த புதர்களைத் தாண்டி செல்வதைப் பார்க்க முடிந்தது. இருக்கும் கழிவறையையும் சரியான முறையில் பராமரிக்காத பள்ளியை என்ன சொல்ல......

இங்கே இப்படி என்றால், சென்னையின் விமான நிலையம் அதை விட மோசமாக இருக்கிறது.  வாயில் எண்கள் 7-10 அருகே இருக்கும் பெண்களுக்கான கழிப்பறை மூடி இருக்க, அங்கே ஒரு பதாகை – கழிவறை பயன்படுத்த கீழ் தளத்துக்குச் செல்லுங்கள் என எழுதி இருக்கிறது. விமானத்திற்குள் செல்லுமுன்னர் கழிவறை பயன்படுத்த நினைத்தால் அதோகதிதான் – இரண்டு மூன்று வயதான பெண்மணிகள் ரொம்பவே திண்டாடினார்கள் – விமான நிலைய அதிகாரிகளைத் திட்டியபடியே சென்றனர் அந்த வட இந்தியர்கள் – கூடவே தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் திட்டு!

பெண்கள் பகுதி இப்படி என்றால், ஆண்களுக்கான கழிவறை இன்னும் மோசம் – திறந்திருந்ததே என்று உள்ளே போனால், அங்கே தண்ணீர் குளமாக நின்று கொண்டிருக்கிறது. அதிலும் நீச்சல் அடித்து ஒருவர் உள்ளே சென்று கழிவறையில் அமர்ந்திருக்கிறார் – அவருக்கு என்ன அவசரமோ?  அவர் உள்ளே உட்கார்ந்திருப்பது தண்ணீரில் பிம்பமாகத் தெரிகிறது – எல்லோருக்கும் ஃப்ரீ ஷோ! பராமரிப்பவர்களைத் தேடினால் யாருமே இல்லை! விமானநிலைய அதிகாரியைப் பார்த்து புகார் அளிக்கலாம் என்றால், நான் புறப்படவேண்டிய விமானத்திற்கான அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  எனவே தில்லி திரும்பியதும், ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். இது வரை ஒரு பதிலும் வரவில்லை!

அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டிய முதல் வேலை – கழிப்பறை வசதிகள் – அதுவும் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்....  மக்களும் அந்த வசதிகளை தம் வீடுகளில் எப்படி பயன்படுத்துவார்களோ அதே போல பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு கழிப்பறைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது கூடத் தெரிவதில்லை! இந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவது – குறிப்பாக பெண்கள் படும் கஷ்டங்கள் வரும் காலத்திலாவது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப் போகிறோம்......

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

திங்கள், 26 செப்டம்பர், 2016

பராட்டாயும் பின்னே சிக்கன் குருமாவும்.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 53

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


ஒரு முதியவர்..

கோர்சம் ஸ்தூபாவில் பிரார்த்தனை உருளைகளை உருட்டி, அங்கிருந்த மக்களையும், மக்களோடு மக்களாக எங்களையும் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மதிய உணவுக்காக முன்னர் சொல்லி இருந்த ராணுவ வீரர்களின் முகாமுக்கு வெளியே அமைந்திருந்த கடைக்கு வந்து சேர்ந்தோம். வழிலும் நிறைய மோன்பா பழங்குடியினர்கள் தங்களது பாரம்பரிய யாக் முடியால் உருவாக்கிய தொப்பியை அணிந்து வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு முதியவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க, அவர் மறுத்து விட்டார். 


ஒரு மூதாட்டி – யாக் தொப்பி, இரட்டைப் பின்னலோடு...

தூரத்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் இருந்தாலும், அவர்கள் அனுமதி பெற்று படம் எடுத்தால் இன்னும் சில படங்களை எடுக்கலாம் என்பது எங்கள் எண்ணம். ஆனாலும் அனுமதி இல்லாதபோது என்ன செய்ய முடியும். கண்களாலேயே அவர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு நடந்து முகாம் வரை வந்து விட்டோம்.  வெளியே டெண்ட் ஒன்றில் சமையல் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. உள்ளே ஒரு அறையில் சில மேஜைகளும், நாற்காலிகளும் இருக்க அங்கே சென்று அமர்ந்து கொண்டோம்.


அப்பகுதியில் இருந்த ஒரு கட்டிடம்...
  
ஒரு ராணுவ வீரர் எங்களிடம் வந்து என்ன சாப்பிடுகிறீர்கள் என்று ஹிந்தியில் கேட்டுக் கொண்டிருக்கும்போதே முதலில் பார்த்த மலையாளி உள்ளே வந்துவிட்டார். அவரே எங்களிடம் வந்து “ஆஹா வந்தாச்சா?, உட்காருங்கஎன்று உபசரித்து, விழா எப்படி இருந்தது என்றும், எங்களுக்குப் பிடித்திருந்ததா என்றும் விசாரித்தார்.  என்ன உணவு கிடைக்கும் என்று கேட்க, அவர் சொன்ன பதில் – சிக்கன் பிரியாணி உண்டு, பராட்டா-சிக்கன் குருமா உண்டுஎன்று சொல்ல எனக்கு ஏதாவது சைவ உணவினைச் சொல்ல மாட்டாரா என்று இருந்தது.


குழந்தையோடு உணவகத்திற்கு வந்த ஒரு பழங்குடிப் பெண்மணி....
அம்மா இருக்க பயமேன் எனத் தூங்கும் குழந்தை....

என்னுடைய நண்பரே, அவரிடம் சைவ உணவு எதுவும் கிடைக்குமா எனக் கேட்க, அவரோ, இல்லை என்று பதில் சொல்லி விட்டார். சரி இன்றைக்கு பட்டினி தான் போலும் என நினைத்துக் கொண்டேன். பிறகு எதற்கும் உணவு சமைக்கும், இடத்திற்குச் சென்று பார்க்கலாம் என வெளியே வந்தேன். அங்கே காசு வாங்கிக் கொண்டு உணவு கொடுத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்தால் தமிழரைப் போல இருக்க அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். “என்ன தமிழா? எந்த ஊரு உங்களுக்கு? என்ன பேரு என்று விசாரிக்க அவரும் ஆமாங்க தமிழ் தான். மதுரை பக்கம், பேரு ராம்மூர்த்திஎன்று சொன்னதோடு சாப்பிட்டீங்களா?என்று கேட்க, என் கேள்வியை நான் கேட்டேன்.


குழந்தை - அம்மாவின் தோளில் இருந்தார்!..

ஏங்க சைவம் ஒண்ணுமே இல்லையாஎன்று கேட்க, என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அவர் சொன்னது – “பராட்டா மட்டும் தான் இருக்கு! தொட்டுக்க சிக்கன் குருமா மட்டும் தான் இருக்கு, வேறொண்ணும் இல்லையே என்று சொன்னார்! என்ன செய்வது என்று சுற்றி முற்றி பார்க்க, தயிரில் வெங்காயம் போட்டு பச்சடி இருந்தது. சரி இன்றைக்கு இது தான் நமக்கு எனச் சொல்லி, பராட்டாவும், வெங்காயம் போட்ட தயிர் பச்சடியும் கொடுங்க என அவரிடம் சொல்ல, அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, “தரலாம்... ஆனா எங்களுக்கு கணக்கு இடிக்கும் – அதனால பராட்டா-சிக்கன் குருமாவுக்கு உண்டான காசையே கொடுங்கஎன்று சொல்ல ஏதோ உணவு கிடைத்தால் சரி என்று கொடுக்கச் சொன்னேன்.


இளைஞர்கள்..

உள்ளே சென்று அமர்ந்து கொள்ள, நான் கேட்ட, பராட்டாவும் தயிர் பச்சடியும் வந்தது. அதற்குள் நண்பர்கள் சிக்கன் பிரியாணி, பராட்டா-சிக்கன் குருமா என உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊர் சமையல் சாப்பிட்ட ஒரு உணர்வு அவர்களுக்கு! ஆறிப்போன பராட்டாவில், தயிர் பச்சடி விட்டு சாப்பிடுவதற்குள் ஒரு வழியாகிவிட்டது எனக்கு! இருந்தாலும் அந்த பசி நேரத்தில் இதாவது கிடைத்ததே என்று இயற்கையாகவே சில்லென்று இருக்கும் மலைப்பகுதிக் குடிநீரோடு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தள்ளினேன்! வேறு வழி! இதுவும் சாப்பிடவில்லை என்றால் இரவு தவாங்க் செல்லும் வரை ஒன்றும் கிடையாது – பட்டினி தான்!


மலை இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது..
சூரியனும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த காட்சி!

பொறுமையாக சாப்பிட்ட பின்னர், வெளியே வந்து மலையாள ராணுவ வீரர்களோடு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் அங்கே ஒரு குடும்பம் – கணவன், மனைவி, ஒரு கைக்குழந்தை – அங்கே வர, அவர்களைப் பார்க்கும்போதே தமிழர்கள் போல இருக்கிறார்களே என்ற எண்ணம் வர, அவர்களுடன் நான் தமிழில் பேசினேன்.  ஆமாம் அவர்கள் தமிழர்கள் தானாம். மூன்று வருடங்களாக இந்த ZEMITHONG பகுதியில் தான் இருக்கிறார்களாம்.  ஒன்றே முக்கால் வயது குழந்தையுடன் தைரியமாக இங்கே இருக்கும் அப்பெண்ணிற்கு ஒரு சல்யூட்! 


மதிய நேரத்துச் சூரியன்....

சில பழங்குடியினர்களும் இந்த உணவகத்தில் வந்து நமது ஊர் சிக்கன் பிரியாணியையும், பராட்டா-சிக்கன் குருமாவினையும் வாங்கி சாப்பிடுகிறார்கள்.  அவர்களில் ஒருவரிடம் இந்த உணவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்க, “எங்களுக்குத் தென்னிந்திய உணவு பிடிக்கும் என்கிறார்! கூடவே தோசா ரொம்பப் பிடிக்கும்என்று சொல்ல, நான் உடனே, கொஞ்சம் அலைந்து, “இங்கே கிடைக்கிறதா? எனக் கேட்க, இல்லை நானும் ராணுவத்தில் இருந்திருக்கிறேன் – வெளி ஊர்களுக்குச் சென்ற போது தோசா சாப்பிட்டு இருக்கிறேன்என்கிறார்.

அந்த தமிழ்க் குடும்பம் எங்கே இருக்கிறார்கள், என்ன பணி செய்கிறார்கள், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் ஆகியவை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

சனி, 24 செப்டம்பர், 2016

கோர்சம் - பிரார்த்தனை உருளைகள்.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 52

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


பிரார்த்தனை உருளைகள்...

கோர்சம் ஸ்தூபா பற்றிய கதைகளை சென்ற பகுதியில் பார்த்தோம். கதைகளைத் தொடர்ந்து ஸ்தூபாவின் உள்ளே சென்ற எங்களின் அனுபவங்களைத் தொடர்கிறேன். புத்த மத வழிபாட்டுத் தலங்கள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அங்கே இருக்கும் உருளைகள் தான். கோர்சம் ஸ்தூபாவிலும் இப்படி பிரகாரம் முழுவதும் உருளைகள். மூன்று, நான்கு, ஏழு என வரிசை வரிசையாக உருளைகள். அதன் மீது பொறித்திருக்கும் எழுத்துகள். அவை என்ன, எதற்கு அவற்றை சுற்றி விடுகிறார்கள் என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை என்றாலும் எல்லோரும் சுற்றுகிறார்கள் அதனால் நாமும் சுற்றுவோம் என்று தான் பலரும் அப்படிச் செய்கிறார்கள்.


பிரார்த்தனை உருளைகளை உருட்டும் நண்பர்...

இந்த உருளைகளில் என்ன எழுதி இருக்கிறது. பெரும்பாலான உருளைகளில் “ஓம் மணி பத்மே ஹம்என்று சமஸ்கிருத மொழில் எழுதி இருக்கிறது.  மரம், உலோகம், கல், தோல் போன்றவற்றில் தயாரான மைய அச்சில் சுழலும் வகையில் இந்த உருளைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மந்திரம் தவிர அஷ்டமங்களா என அழைக்கப்படும் எட்டு வித உருவங்களும் இவற்றில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. மந்திரங்களைச் சொல்வதால் கிடைக்கும் பலன்களை, மந்திரங்கள் பொறிக்கப்பட்ட இந்த உருளைகளைச் சுழற்றுவதாலும் பெறலாம் என்பது புத்த மத நம்பிக்கை.


ஸ்தூபாவின் முன் நண்பர்
பின்புலத்தில் உருளைகள்..

புத்தகங்களிலோ அல்லது ஏடுகளிலோ இருக்கும் இந்த மந்திரங்களை படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தான் பலன் அடைய வேண்டுமா? படிக்காதவர்களுக்கு, படிக்கத் தெரியாதவர்களுக்கு தர்மத்தின் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதும் புத்த மதத்தில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். வழிபாட்டுத் தலங்கள் அமைக்கும்போது அங்கே நிச்சயம் இம்மாதிரி உருளைகள் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைத்தால், அவற்றைச் சுழற்றுவதன் மூலம், அம்மந்திரங்களைப் படித்த பலன் உருளைகளைச் சுழற்றும் படிக்காத மக்களுக்கும் கிடைக்கும் என்ற நல்லெண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.


பிரசங்கம் கேட்கும் பழங்குடியினர்....

இந்த உருளைகளைச் சுழற்றுவது எப்படி என்பதையும் சொல்லி இருக்கிறார்கள் – வேகவேகமாகச் சுழற்றுவதால் அதிக பலன் கிடைக்கும் என்பதல்ல....  பொறுமையாக, ஒரே வேகத்தில் சுழற்ற வேண்டும், அதைச் சுழற்றும் சமயத்தில் ஓம் மணி பத்மே ஹம்எனும் மந்திரத்தினையும் மனதுக்குள் சொல்லிக் கொண்டே சுற்றினால் அதிக பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. கோர்சம் ஸ்துபாவில் இப்படி 108 உருளைகள் இருக்கின்றன. மந்திரத்தினை 108 முறை சொன்ன பலன்! இந்து மதத்திலும் 108 – இங்கேயும் 108!


மேடையில் சில பழங்குடியினர்...

புத்த மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் இந்த உருளைகளை அங்கே சென்றுதான் சுழற்றவேண்டும் என்றல்ல, இப்போதெல்லாம் கைகளில் வைத்துச் சுழற்றும் வடிவிலும் இவை கிடைக்கின்றன. கைகளில் பிடித்தபடியே ஒற்றை உருளையைச் சுழற்றி ஓம் மணி பத்மே ஹம்என்று தொடர்ந்து மனதுக்குள் சொல்லி மனதை ஒருநிலைப்படுத்தலாம். எல்லா மதங்களும் மனதை ஒருநிலைப்படுத்தும் வழியை, அவரவர் வழியில் சொல்லித் தருகிறது. இங்கே இப்படி உருளைகள்....  சிலருக்கு மணிமாலைகள்.தவிர்க்க முடியாத முதுகுச் சுமை..
.
நாங்களும் இந்த உருளைகளைச் சுழற்றினோம் – ஏன் சுழற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே! நம்முடைய பல பழக்கங்களுக்கும் காரணம் உண்டு – சிலருக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்து தொடரச் செய்கிறார்கள் – சிலருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை – இப்படிச் செய்யணும் – ஏன்னு கேள்வி கேட்கக்கூடாது என்று மிரட்டித் தொடர வைக்கிறார்கள்.  காரணம் இல்லாது ஒரு காரியமும் இல்லை என்பதை புரிந்து கொண்டால் நல்லது – கூடவே அந்த காரணத்தினையும் தெரிந்து கொள்வது மிக நல்லது!


நான் ஃபுல்லா குடிச்சுடுவேன்...

உருளைகளை உருட்டியபடியே ஸ்தூபாவினை ஒரு சுற்று சுற்றி இருக்கிறோம். பிரகாரத்தில் எங்களைப் போலவே பலரும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சற்றே மேடான பகுதியில் இருப்பதால் கீழே அமர்ந்து பிரசங்கத்தினைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களை பின்புறத்திலிருந்து கவனிக்க முடிந்தது. நாங்களும் அங்கே நின்று வேடிக்கைப் பார்த்தபடியே புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு சிறுவன் இரண்டு லிட்டர் குளிர்பான பாட்டிலை தூக்க முடியாமல் தூக்கி வாயில் வைத்து குடித்துக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த பெற்றோர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி!


கூட்டத்திற்குள்
14வது ரின்பொச்சே...


பின்தொடரும் தொண்டர்கள்....

அச்சமயத்தில் 14வது THEGTSE RINPOCHE தனது பிரசங்கத்தினை முடித்துக் கொண்டு அவரது தங்குமிடம் நோக்கிச் செல்ல, அவரைத் தொடர்ந்து பலரும் செல்கிறார்கள். மதகுரு என்பதால் அவருக்கும் போலீஸ் பாதுகாப்பு! அவரைத் தொடர்ந்து போலீஸ் தவிர தொண்டர்களும் கைகளைப் பிணைத்து, அவரைச் சுற்றி ஒரு வேலி போல் அமைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்கள்.


14வது ரின்போச்சே – முகமூடியோடு

இனிமேல் மாலையில் தான் திருவிழா நிகழ்ச்சிகள் தொடரும் – அதுவும் மாலை ஐந்து மணிக்கு! அதுவரை மக்கள் அங்கே இருக்கும் விழாக்காலக் கடைகளில் சுற்றி வரலாம் – உணவு உண்ணலாம்!  மாலை ஐந்து மணி வரை இங்கே இருந்தால் தங்குவது கடினம் – தங்குமிடம் என பெரிதாய் எதுவுமில்லை – அரசாங்கத்தின் ஒரு தங்குமிடம் உண்டு – தனியார் தங்குமிடங்களும் மிகக் குறைவு என்பதால் மீண்டும் தவாங்க் திரும்புவதே நல்லது என்று முடிவு செய்திருந்தோம். 


கூட்டத்தோடு கூட்டமாக நானும் நண்பரும்,
பக்கத்தில் ஓட்டுனர் ஷம்பு...

மதிய உணவினை முடித்துக் கொண்டு புறப்பட எண்ணம் – வரும் வழியில் கேரள ராணுவ வீரர்கள் சாப்பிட அழைத்திருப்பதைச் சொல்லி இருந்தேன். சரி அங்கே சென்று உணவு உண்ணலாம் என அவ்விடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  என்ன உணவு கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....