எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 24, 2016

கோர்சம் - பிரார்த்தனை உருளைகள்.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 52

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


பிரார்த்தனை உருளைகள்...

கோர்சம் ஸ்தூபா பற்றிய கதைகளை சென்ற பகுதியில் பார்த்தோம். கதைகளைத் தொடர்ந்து ஸ்தூபாவின் உள்ளே சென்ற எங்களின் அனுபவங்களைத் தொடர்கிறேன். புத்த மத வழிபாட்டுத் தலங்கள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அங்கே இருக்கும் உருளைகள் தான். கோர்சம் ஸ்தூபாவிலும் இப்படி பிரகாரம் முழுவதும் உருளைகள். மூன்று, நான்கு, ஏழு என வரிசை வரிசையாக உருளைகள். அதன் மீது பொறித்திருக்கும் எழுத்துகள். அவை என்ன, எதற்கு அவற்றை சுற்றி விடுகிறார்கள் என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை என்றாலும் எல்லோரும் சுற்றுகிறார்கள் அதனால் நாமும் சுற்றுவோம் என்று தான் பலரும் அப்படிச் செய்கிறார்கள்.


பிரார்த்தனை உருளைகளை உருட்டும் நண்பர்...

இந்த உருளைகளில் என்ன எழுதி இருக்கிறது. பெரும்பாலான உருளைகளில் “ஓம் மணி பத்மே ஹம்என்று சமஸ்கிருத மொழில் எழுதி இருக்கிறது.  மரம், உலோகம், கல், தோல் போன்றவற்றில் தயாரான மைய அச்சில் சுழலும் வகையில் இந்த உருளைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மந்திரம் தவிர அஷ்டமங்களா என அழைக்கப்படும் எட்டு வித உருவங்களும் இவற்றில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. மந்திரங்களைச் சொல்வதால் கிடைக்கும் பலன்களை, மந்திரங்கள் பொறிக்கப்பட்ட இந்த உருளைகளைச் சுழற்றுவதாலும் பெறலாம் என்பது புத்த மத நம்பிக்கை.


ஸ்தூபாவின் முன் நண்பர்
பின்புலத்தில் உருளைகள்..

புத்தகங்களிலோ அல்லது ஏடுகளிலோ இருக்கும் இந்த மந்திரங்களை படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தான் பலன் அடைய வேண்டுமா? படிக்காதவர்களுக்கு, படிக்கத் தெரியாதவர்களுக்கு தர்மத்தின் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதும் புத்த மதத்தில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். வழிபாட்டுத் தலங்கள் அமைக்கும்போது அங்கே நிச்சயம் இம்மாதிரி உருளைகள் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைத்தால், அவற்றைச் சுழற்றுவதன் மூலம், அம்மந்திரங்களைப் படித்த பலன் உருளைகளைச் சுழற்றும் படிக்காத மக்களுக்கும் கிடைக்கும் என்ற நல்லெண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.


பிரசங்கம் கேட்கும் பழங்குடியினர்....

இந்த உருளைகளைச் சுழற்றுவது எப்படி என்பதையும் சொல்லி இருக்கிறார்கள் – வேகவேகமாகச் சுழற்றுவதால் அதிக பலன் கிடைக்கும் என்பதல்ல....  பொறுமையாக, ஒரே வேகத்தில் சுழற்ற வேண்டும், அதைச் சுழற்றும் சமயத்தில் ஓம் மணி பத்மே ஹம்எனும் மந்திரத்தினையும் மனதுக்குள் சொல்லிக் கொண்டே சுற்றினால் அதிக பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. கோர்சம் ஸ்துபாவில் இப்படி 108 உருளைகள் இருக்கின்றன. மந்திரத்தினை 108 முறை சொன்ன பலன்! இந்து மதத்திலும் 108 – இங்கேயும் 108!


மேடையில் சில பழங்குடியினர்...

புத்த மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் இந்த உருளைகளை அங்கே சென்றுதான் சுழற்றவேண்டும் என்றல்ல, இப்போதெல்லாம் கைகளில் வைத்துச் சுழற்றும் வடிவிலும் இவை கிடைக்கின்றன. கைகளில் பிடித்தபடியே ஒற்றை உருளையைச் சுழற்றி ஓம் மணி பத்மே ஹம்என்று தொடர்ந்து மனதுக்குள் சொல்லி மனதை ஒருநிலைப்படுத்தலாம். எல்லா மதங்களும் மனதை ஒருநிலைப்படுத்தும் வழியை, அவரவர் வழியில் சொல்லித் தருகிறது. இங்கே இப்படி உருளைகள்....  சிலருக்கு மணிமாலைகள்.தவிர்க்க முடியாத முதுகுச் சுமை..
.
நாங்களும் இந்த உருளைகளைச் சுழற்றினோம் – ஏன் சுழற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே! நம்முடைய பல பழக்கங்களுக்கும் காரணம் உண்டு – சிலருக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்து தொடரச் செய்கிறார்கள் – சிலருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை – இப்படிச் செய்யணும் – ஏன்னு கேள்வி கேட்கக்கூடாது என்று மிரட்டித் தொடர வைக்கிறார்கள்.  காரணம் இல்லாது ஒரு காரியமும் இல்லை என்பதை புரிந்து கொண்டால் நல்லது – கூடவே அந்த காரணத்தினையும் தெரிந்து கொள்வது மிக நல்லது!


நான் ஃபுல்லா குடிச்சுடுவேன்...

உருளைகளை உருட்டியபடியே ஸ்தூபாவினை ஒரு சுற்று சுற்றி இருக்கிறோம். பிரகாரத்தில் எங்களைப் போலவே பலரும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சற்றே மேடான பகுதியில் இருப்பதால் கீழே அமர்ந்து பிரசங்கத்தினைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களை பின்புறத்திலிருந்து கவனிக்க முடிந்தது. நாங்களும் அங்கே நின்று வேடிக்கைப் பார்த்தபடியே புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு சிறுவன் இரண்டு லிட்டர் குளிர்பான பாட்டிலை தூக்க முடியாமல் தூக்கி வாயில் வைத்து குடித்துக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த பெற்றோர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி!


கூட்டத்திற்குள்
14வது ரின்பொச்சே...


பின்தொடரும் தொண்டர்கள்....

அச்சமயத்தில் 14வது THEGTSE RINPOCHE தனது பிரசங்கத்தினை முடித்துக் கொண்டு அவரது தங்குமிடம் நோக்கிச் செல்ல, அவரைத் தொடர்ந்து பலரும் செல்கிறார்கள். மதகுரு என்பதால் அவருக்கும் போலீஸ் பாதுகாப்பு! அவரைத் தொடர்ந்து போலீஸ் தவிர தொண்டர்களும் கைகளைப் பிணைத்து, அவரைச் சுற்றி ஒரு வேலி போல் அமைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்கள்.


14வது ரின்போச்சே – முகமூடியோடு

இனிமேல் மாலையில் தான் திருவிழா நிகழ்ச்சிகள் தொடரும் – அதுவும் மாலை ஐந்து மணிக்கு! அதுவரை மக்கள் அங்கே இருக்கும் விழாக்காலக் கடைகளில் சுற்றி வரலாம் – உணவு உண்ணலாம்!  மாலை ஐந்து மணி வரை இங்கே இருந்தால் தங்குவது கடினம் – தங்குமிடம் என பெரிதாய் எதுவுமில்லை – அரசாங்கத்தின் ஒரு தங்குமிடம் உண்டு – தனியார் தங்குமிடங்களும் மிகக் குறைவு என்பதால் மீண்டும் தவாங்க் திரும்புவதே நல்லது என்று முடிவு செய்திருந்தோம். 


கூட்டத்தோடு கூட்டமாக நானும் நண்பரும்,
பக்கத்தில் ஓட்டுனர் ஷம்பு...

மதிய உணவினை முடித்துக் கொண்டு புறப்பட எண்ணம் – வரும் வழியில் கேரள ராணுவ வீரர்கள் சாப்பிட அழைத்திருப்பதைச் சொல்லி இருந்தேன். சரி அங்கே சென்று உணவு உண்ணலாம் என அவ்விடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  என்ன உணவு கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

26 comments:

 1. நல்ல தகவல்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படங்கள் அழகு அண்ணா...
  உருளைகள் விவரம் அறியத் தந்தீர்கள்...
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 3. வணக்கம் ஜி
  பிரார்த்தனை உருளைகளை நாமும் உருட்ட வேண்டும்போல் இருக்கின்றது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 4. படங்கள்அழகு
  பிரார்த்தனை உருளைகள்
  வித்தியாசமான பிராத்ததனை வழியாக இருக்கிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. இந்த மாதிரியான புத்த மத வழிபாட்டு ஸ்தலத்தை நான் ஜப்பான் சென்றிருந்த போது கண்டிருக்கிறேன் மொழி தெரியாததால் தகவல்கள் திரட்ட முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. ரின்போச்சேவையும் தரிசித்துவிட்டீர்கள். பிரார்த்தனை உருளைகள் திபெத்திய கலாச்சாரம். இவைகளை சாளக்ராமக் கோவிலின் நுழைவாயிலிலும் பார்த்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. படங்கள் அருமை பேசுகின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 8. வணக்கம்.

  பயணங்களின் வாயிலாக நாம் பெறும் அனுபவங்கள் கொள்ளும் அறிவு வெறுமே புத்தகத்தைப் படிப்பதைவிட அருமையானது.

  உங்கள் புகைப்படங்கள் இன்னும் தங்கள் பயணத்தைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்துகின்றன.

  படிக்க வேண்டிய பாகங்கள் தங்கள் பதிவில் நிறைய இருக்கின்றன.

  மெல்லத் தொடர்கிறேன்

  நிச்சயமாய்..!

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது பதிவுகளைப் படித்து தங்களது மேலான கருத்துகளையும் சொல்லுங்கள் ஜோசப் விஜூ ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜூ ஜி!

   Delete
 9. பிரார்த்தனை உருளைகள் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொண்டேன்.
  நல்ல தகவல்.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 10. #காரணம் இல்லாது ஒரு காரியமும் இல்லை என்பதை புரிந்து கொண்டால் நல்லது – கூடவே அந்த காரணத்தினையும் தெரிந்து கொள்வது மிக நல்லது!#
  உருளைகளை சுற்றியதும் வந்த ஞானம் அருமை :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. தங்களுடைய பதிவின் மூலமாக பல்வேறு கலாச்சாரங்களையும் அழகிய படங்களுடன் தெரிந்து கொள்ள முடிகின்றது.. மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 12. உருளை சுற்றும் வழிபாடு! வித்தியாசமானது! ஆனால் சிறப்பானதாக தோன்றுகின்றது! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. பிரார்த்தனை உருளை திபெத் கலாச்சாரம். மட்டுமல்ல சில துறவிகள் கையில் ஒன்றை வைத்துக் கொண்டுச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் அது அப்போ இதுதான் போலும். நல்ல தகவல்கள்...கேரள உணவு என்ன என்பதை அறிய ஆவலுடன் தொடர்கின்றோம்...நிச்சயமாக சைவ உணவாக இருக்காது...என நினைக்கிறேன்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....