எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 6, 2016

ஜஸ்வந்த் சிங் எதிரே சீன ராணுவம்...

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 45

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


Rifleman Jaswant Singh, MVC [P]

இயற்கை எழில் கொஞ்சும் சேலா பாஸ் எனும் இடத்தில் இயற்கை எழிலையும் அனுபவித்து, கொஞ்சம் புகைப்படங்களும் எடுத்துக் கொண்ட பின்னர் நாங்கள் தொடர்ந்து பயணித்தோம். விரைவிலேயே எங்கள் அடுத்த இலக்கினை அடைந்தோம். எங்கள் அடுத்த இலக்கு ஜஸ்வந்த்கட் என அழைக்கப்படும் ஒரு இடம். இந்த இடம் பற்றி அறிந்து கொள்ள சற்றே பின்னோக்கிச் செல்வோம். சற்றே பின்னோக்கி என்றால் சற்றேறக்குறைய 54 வருடங்கள்.......

17 நவம்பர் 1962  - சீன ராணுவத்தினர் இந்திய எல்லையான பும்லா பாஸ் கடந்து தவாங் நகரைக் கைப்பற்றி மேலும் முன்னேறி சேலா பாஸ் வரை வந்துவிட்டார்கள். இந்தியாவின் ராணுவத்தின் ஒரு பிரிவான The Garhwal Rifles நான்காம் பாட்டாலியன் நூராநங் பாலத்தின் அருகே எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். காலை ஐந்து மணிக்கே சீனப் படையின் வீரர்கள் இந்திய வீரர்களை நோக்கிய பலத்த தாக்குதலைத் தொடங்க, இந்திய ராணுவ வீரர்களும் சரியான பதிலடி கொடுத்தார்கள்.  எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாத சீன ராணுவம் பின்வாங்கியது. அவர்கள் பக்கத்தில் பலத்த இழப்பு.


Lance Naik Trilok Singh Negi, VrC [P]

இந்திய வீரர்களிடத்தும் உயிரிழப்பும், தளவாடங்கள் இழப்பும் இருந்தது. என்றாலும் இருந்த அனைத்து தளவாடங்களையும் சரியாக பராமரித்து, அடுத்த தாக்குதலை சமாளிக்க தயாராகவே இருந்தார்கள் இந்திய வீரர்கள்.  காலை 11.00 மணிக்கு சீன வீரர்கள் தாக்குதலை மீண்டும் துவக்கினார்கள். இம்முறை சீனர்கள் இன்னும் முனைப்போடு, அதிக வீரர்கள் மற்றும் தளவாடங்களோடு தாக்குதல் நடத்தினார்கள்.  அதுவும் இந்திய ராணுவத்தினர் இருந்த பகுதிக்கு வெகு அருகில் 40 அடி தொலைவில் ஒரு MMG அதாவது Medium Machine Gun கொண்டு வந்து அதன் மூலம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்த, இந்தியப் பகுதியில் பலத்த சேதம். அந்த தாக்குதலை சமாளிக்க, ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலை. இந்திய வீரர்கள் தொடர்ந்து எதிர் தாக்குதல்கள் நடத்தினாலும் சீன MMG தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இந்திய வீரர்களில் யாராவது அந்த MMG அருகே சென்று Grenade வீசினால் அந்த தாக்குதலை நிறுத்த முடியும் என்று சொல்ல, மூன்று வீரர்கள் தாமாகவே முன்வந்தார்கள். அந்த மூன்று வீரர்கள் RFN Jaswant Singh, MVC [P], LNK Trilok Singh Negi, VrC [P], மற்றும் RFN Gopal Singh Gusain, VrC  ஆகிய மூவரும் தான் அவர்கள். இந்திய வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருக்க,  எதிரே இருந்து சீன ராணுவத்தினரின் துப்பாக்கிகளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.  சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், தங்களது உயிரையும் துச்சமாக மதித்து மூன்று பேரும் ஊர்ந்தபடியே முன்னேறுகிறார்கள்.


Rifleman Gopal Singh Gusain, VrC 

சீன MMG இயங்கும் இடத்தின் வெகு அருகே 10 அடி தொலைவில் வந்து தங்களிடம் இருந்த Grenade வீசி சீன வீரர்களை நிலைகுலையச் செய்தார்கள். தொடர்ந்து விரைந்து ஜஸ்வந்த் சிங் மற்றும் த்ரிலோக் சிங் நேகி ஆகிய இருவரும் அப்பகுதிக்குச் சென்று பார்க்க, இரண்டு சீன வீரர்கள் இறந்து கிடக்கிறார்கள். ஒரு சீன வீரர் உயிருடன் இருக்க அவர் மேல் பாய்ந்து அவரை கொன்று, அவர்களது MMG ஐக் கைப்பற்றி தங்களது Bunker திரும்ப மீண்டும் தவழ்ந்து வருகிறார்கள்.  சீன ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்த ஜஸ்வந்த் சிங் மற்றும் த்ரிலோக் சிங் நேகி இருவரும் உயிரிழந்தார்கள். மூன்றாவது வீரரான கோபால் சிங் கொசைன் பலத்த காயம் அடைந்திருந்தாலும், கைப்பற்றிய சீன MMG உடன் இந்திய பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து பலத்த போர் நடந்தது. சீன ராணுவம் தொடர்ந்து முன்னேறினாலும், இந்திய வீரர்களும் தொடர்ந்து பதிலடி கொடுத்தார்கள்.  சிறப்பாக பணியாற்றிய இந்த மூன்று வீரர்களுக்கும் போர் முடிந்த பிறகு தகுந்த பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்கள். தவிர தன் உயிரையும் துச்சமாக மதித்து போரிட்ட ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு ஒரு நினைவிடத்தினையும் அமைத்திருக்கிறார்கள் – அந்த இடம் ஜஸ்வந்த் கட் [Jaswant Garh]. இந்த விவரங்கள் தவிர வேறு நிறைய விஷயங்களும் அங்கே நாங்கள் தெரிந்து கொண்டோம்.

அந்த நாட்களில் மட்டுமல்ல, போரில்லாத இந்த நாட்களிலும் நமது ராணுவ வீரர்களின் உழைப்பும் இழப்பும் அளவிட முடியாதது. எத்தனை எத்தனை சோதனைகளைக் கடந்து, எத்தனை சந்தோஷங்களை இழந்து, பலவித கடினமான சூழல்களில்,  நமது நாட்டிற்காக, நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த வீரர்கள் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டும் – அவர்களின் மகத்தான பணி பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜஸ்வந்த் சிங் மற்றும் மற்ற ராணுவ வீரர்களது வீர பராக்கிரமங்கள், சாதனைகள் ஒரு பதிவில் முடித்து விடக் கூடியவை அல்ல.... அவர்கள் பற்றியும் 1962 சீனப் போர் பற்றியும் அப்பகுதி மக்களின் கதைகளையும் அடுத்த பதிவிலும் தொடரலாம்.    

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

24 comments:

 1. நாட்டுக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. மெய் சிலிர்க்கிறது.. சல்யூட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. இந்திய மக்கள் எப்போதும் நம் எல்லைப்பதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினரை நன்றியோடு நினைவுகூற வேண்டும். தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. 1962-ல் நடந்த சீனப் படையெடுப்பு ஒரு நம்பிக்கைத் துரோகம் ஹிந்தி சீனி பாய் பாய் என்று கூறியே நம்பவைத்துக் கழுத்தறுத்த செயல் பண்டிட் நேரு இதனாலேயே மனம் உடைந்தார் பதிவைப் படிக்கும் போது வரும் நினைவுகள்

  ReplyDelete
  Replies
  1. அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் தவறு செய்ய, உயிரிழப்பது ராணுவ வீரர்கள்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தியாகம் எல்லையற்றது
  போற்றுதலுக்கு உரியது
  போற்றுவோம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. இந்திய ராணுவம் பலகீனமாக இருந்தது என்பது தான் உண்மை.வீரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 7. மனம் சிலிர்க்கச் செய்யும்
  வீரத் தியாகம்
  பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. வீர வரலாறு ஒன்றைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. வீரர்களுக்கு வீரவணக்கம்.
  இது போன்ற எத்தனை வீரர்கள் தியாகத்தால் நாம் பாதுகாப்பாய் இருக்கிறோம்!
  அவர்களுக்கு நாள்தோறும் வணக்கமும் நன்றியும் சொல்லவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 10. ஹூம், நேரு செய்த தவறால் எத்தனை எத்தனை இழப்புகள்! :(

  ReplyDelete
  Replies
  1. அவர் செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்று....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 11. ஐஸ்வந்த் சிங் பற்றி அறியத் தந்தீர்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 12. வரலாற்றில்தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்!!! புதியதொரு தகவல் ஜஸ்வந்த் சிங்க் பற்றி அறிய முடிந்தது. தொடர்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....