எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 7, 2016

நாளைக்கு உனக்கும் இந்நிலை வரலாம்.....

ராஜா காது கழுதை காது.....


படம்: இணையத்திலிருந்து.

ஃப்ரூட் சாலட் பதிவுகளில் “ராஜா காது கழுதை காதுஎன்ற பகுதியில் பயணிக்கும் போதும், நடந்து செல்லும்போதும் காதில் விழுந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  கடந்த சில மாதங்களாகவே இந்த விஷயங்களை எழுதுவதில்லை.  எப்பவும் காதையும் கண்களையும் திறந்து வைத்திருந்தால் இப்படி நிறைய விஷயங்களை நாம் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.... நேற்று கூட சாலை ரோடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து இருசக்கர வாகனம் வரும் சத்தம்......

இரு குரல்கள் – ஒவ்வொருவரும் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்கிறது..... கேட்டது இரண்டுமே பெண் குரல்....  முதலாவது குரல் எதையோ வேண்டும் எனக் கேட்க, இரண்டாவது குரல் சத்தமாக, “என்ன நினைச்சுட்டு இருக்கே, இப்படி எதையாவது கேட்டுட்டே இருந்தா, அடிச்சு மண்டைய உடைச்சுடுவேன்.....”  அந்த சமயத்தில் ஹோண்டா ஆக்டிவா என்னைக் கடக்க, அதில் மூன்று பேர் – அம்மா வண்டியை ஓட்டுகிறார், நடுவில் அவர் மகன், பின்னால் பெண் – பெண்ணும் அம்மாவும் இப்படி சத்தமாக பேசிக்கொண்டு வர, பையன் பாவம் – இரண்டு பேருக்கு நடுவில் மாட்டிக்கொண்டு சத்தமில்லாமல் இருக்கிறார்.... 

சில நாட்கள் முன்னர் மயிலாடுதுறை சென்றபோது பேருந்தில் இப்படி நிறைய விஷயங்கள், பேருந்தில் அலறிக் கொண்டிருக்கும் பாடல்களைத் தாண்டி காதில் விழுந்த வண்ணம் இருந்தது. ஒன்று மட்டும் மனதில் தங்கி விட்டது! பக்கத்து இருக்கையில் கணவன் – மனைவி, ஒரு கைக்குழந்தை..... குழந்தைக்கு புட்டிப் பால் கொடுத்தபடியே அவர்கள் பேசிக் கொண்டிருக்க, நானும் மற்றவர்களும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம் – என் வேலை வேடிக்கை பார்ப்பது! சாலையில் பயணிக்கும்போது ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பதில் அப்படி ஒரு சுகம் – இப்பவும் ஜன்னல் ஓர இருக்கை தான் பிடிக்கிறது – சிறுபிள்ளை மாதிரி!

பக்கத்து இருக்கையில் இருந்து கேட்ட மனைவியின் குரல் அத்திப்பழம் சிவப்பா, இந்த அத்தை மக சிவப்பாபாடலையும் தாண்டி என் காதில் விழுகிறது – மனைவி தனது கணவனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் – “அறைஞ்சுடுவேன் அறைஞ்சு – என்னா நினைச்சுட்டு இருக்கே!”  அறைஞ்சுடுவாரோ என பேருந்தில் இருந்த பலரும் திரும்பிப் பார்த்தார்கள் – என்னையும் சேர்த்து தான்! நல்ல வேளை பேருந்தில் அடி வாங்கவில்லை – எப்படியும் வீட்டுக்குப் போனால் நிச்சயம் கிடைத்திருக்கும் – இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க பேருந்து தொடர்ந்து பயணித்து பேருந்து நிலையம் வந்து தான் நின்றது! – அதற்கும் திட்டு கிடைத்தது – ஸ்டாப் வந்துடுச்சான்னு பார்க்க மாட்டியா!

கும்பகோணம் பேருந்து நிலையம் – ஒரு டீ கடை முன்னர் நின்று தேநீர் குடித்துக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு பெண்மணி எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார் – யாருமே அவருடைய திட்டுகளுக்குத் தப்பவில்லை – அந்த பெண்மணி அந்த கடையில் வேலை செய்பவர் தான் என்றாலும் தொடர்ந்து பலரிடமும் கோபத்துடன் தான் பேசிக் கொண்டிருந்தார். எதிரே ஒரு மூதாட்டி – பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர் – அவரும் இந்தப் பெண்மணியின் கோபத்திலிருந்து தப்பவில்லை....

அந்த மூதாட்டியை ஏதோ திட்ட, டீ போடுபவர் தாங்க முடியாமல் சொல்லவே சொன்னார் – “எதுக்கு இப்படி எரிஞ்சு விழற அந்த பாட்டிக்கிட்ட, ஏதோ முடியல, நாளைக்கு நமக்கும் இந்த நிலை வரலாம்......நான் அங்கே நின்று தேநீர் அருந்தும் வரை அந்த பெண்மணியின் திட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  சிறிது நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் பெண்மணி வேலையை முடித்து, அடுத்த வேலை வரும் முன்னர் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து காப்பி ஒண்ணு கொடுன்னு வாங்கினார்.... 

சரி அவர் தான் வேலை நேரத்தில் காப்பி குடிக்கிறார் போலும் என நினைத்தால், காப்பியை எடுத்துக் கொண்டு போய், அந்த மூதாட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி, “மெதுவா ஊதிக் குடி, சூடாக் குடிச்சுடாதே.....என்று சொன்னார்.  அது கூட கோபமாகவே சொல்வது போல இருந்தது..... பார்த்துக் கொண்டிருந்த டீ போடுபவர், “அட இங்கப் பாரு, அது குடிக்கப்போதுன்னு நினைச்சா, பாட்டிம்மா கிட்ட கொடுக்குதேஎன்று சத்தமாகச் சொல்ல, அவருக்கும் திட்டு கிடைச்சுது....  “உன் வேலையைப் பார்க்க மாட்டியா.....  அதான் சொன்னியே, நாளைக்கு உனக்கும் இந்த நிலை வரலாம்னு...... ஒரு காப்பி வாங்கிக் கொடுத்தா நான் ஒண்ணும் குறைஞ்சுட மாட்டேன்...  வேலையைப் பாரு.....”.  வேலை செய்தபடியே இன்னும் பலரைத் திட்டிக் கொண்டிருந்தார். 


தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்....
வாங்குவாரா, இல்லை ஃபோட்டோ மட்டும் எடுத்துட்டு போயிடுவாரா...
தலையைச் சொறிந்து யோசிக்கும் தள்ளுவண்டி கடைக்காரர்....


பேருந்துப் பயணம் தொடர்ந்தது. இந்தப் பேருந்தில் ஓட்டுனர் மதுரையைச் சேர்ந்தவர். கும்பகோண வாசிகளைத் திட்டிக் கொண்டிருந்தார். எங்க மதுரையைப் போல வராதுன்னு சொல்லிக் கொண்டிருக்கிறார்... ஓட்டுனர் இருக்கையின் அருகே தான் அமர்ந்து கொண்டிருந்ததால், ஓட்டுனரும் நடத்துனரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. எதிரே ஒரு வாகனம் வர, அந்த ஓட்டுனர் தனது சட்டை பட்டன்களை பாதிக்கு மேல் கழற்றி விட்டு திறந்த மார்புடன் வந்தார். அதைப் பார்த்த பேருந்து ஓட்டுனர், “சட்டை பட்டனை திறந்து விட்டால் ரவுடின்னு நினைப்பு....  நமக்கு ஒரு பட்டனை கழட்டவே கஷ்டமா இருக்கு.....என்று சொல்ல, நடத்துனர் சொன்னது, “வயசு காலத்துல நீங்களும் இப்படிதான் இருந்திருப்பீங்க!

முதலில் சொன்னது போல கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் இப்படி பல விஷயங்களைப் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது..... என்றாலும் இப்படியே தொடர்ந்தால், கழுதைக் காது போலவே என் காதும் வளர்ந்து விடுமோ என அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!
..
..
..
..
..
..
..
..
..
இப்போது கூட தட்டச்சு செய்வதை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு கண்ணாடி முன் நின்று காது வளர்ந்திருக்கிறதா எனப் பார்த்து விட்டு தான் வந்தேன் என்றால் பாருங்களேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....  ராஜா காது கழுதைக் காது பகுதிகள் முடிந்த போது தனிப்பதிவாகவோ, ஃப்ரூட் சாலட்-பகுதியாகவோ தொடரலாம் என்ற எச்சரிக்கை செய்து விடுகிறேன்!

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


40 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. வாழ்வின் இதுபோன்ற நிகழ்வுகளை ரசிப்பது நல்லதுதான். பேருந்துக்குள் ஏறியவுடன் காதில் மைக்கை செருகிக்கொண்டு கண்ணையும் மூடி உலகில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் வந்துகொண்டிருக்கும்/வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலச் சமுதாயத்தினரின் நடுவே இது ஒரு வித்தியாசமான பாணிதான். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. காதில் மைக்கை செருகிக்கொண்டு கண்களையும் மூடி..... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. சுவையான அனுபவங்கள்...

  கோபகார அம்மா...சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 4. சுவாரஸ்யம்தாதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. பயணத்தின் போது கண்ணையும், காதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். அதை சரியாக கடைபிடிக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 6. கழுதைக் காது சுவையாய்க்கீது! (படித்த எனக்கே காது கொஞ்சம் வளர்ந்ததுபோல் இருக்கிறது!)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... நான் வந்து பார்க்கறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 7. எல்லாம் நல்லாத்தான் இருக்கு. படம் செலெக்ஷன் சூப்பர். ஒரு காது மட்டும் நீண்டமாதிரி. 'என்ன நான் சொல்றதைக் கேட்கிறீங்களா அல்லது பதிவுக்கு மேட்டர் தேத்த ஒட்டுக்கேட்டுக்கிட்டிருக்கீங்களா' ன்னு திட்டுவாங்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. (இரண்டுபேரிடமிருந்தும்)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... திட்டு வாங்கறது நமக்கு பழக்கமான விஷயம் தானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. ஸேம் ப்ளட்!! ஆனா இது வரை காது நீள்வது பற்றி யோசிக்கவில்லை! இனிமேல் இந்தக் கவலையும்!!:- ))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்க்ளாஸ் மாதவி.

   Delete
 9. பயணத்தின் சுகமே
  கண்களையும் காதுகளையும்
  விரித்து வைப்பதில்தானே இருக்கிறது
  கிடைத்தை விவரித்த விதம்
  காட்சியாக எம்முள்ளும் விரிகிறது
  தொடர்ந்தால் மகிழ்வோம்..
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. நண்பரே,

  உங்கள் காது க(ழுதை) காதானாலும் பரவாயில்லை(??!!) கே- காது ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு விஷயம் சேகரித்தும் சொல்ல.

  சொல்லிய விதம் சிறப்பு.

  கோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவில் பிள்ளை ஜி!

   Delete
 11. I too like people watching!! Not only during trips..wherever i happen to wait..i will be happily watching around!! ;) :) "பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையப் பாத்த மாதிரி"-ன்னு கமெண்ட் காதில விழுந்தாலும் கண்டுக்காம பராக்கு பார்ப்பேன். ஹிஹி...!!
  //தட்டச்சு செய்வதை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு கண்ணாடி முன் நின்று காது வளர்ந்திருக்கிறதா எனப் பார்த்து விட்டு தான்// ஹாஹ்ஹா!! :D

  ReplyDelete
  Replies
  1. பராக்கு பார்ப்பதில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது! தொடருங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி....

   Delete
 12. பயணங்களே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன....உங்கள் காதுகள் நீண்டு வாழ வாழ்த்துகள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... நல்லதொரு வாழ்த்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 13. இந்தியாவில் இருந்து எழுதும் சில பதிவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது விஷயம் ஏதும் இல்லாமல் மொக்கையாக இருக்கும் அப்படிபட்ட பதிவுகளை படிக்கும் போது என் மனதில் தோன்றுவது என்ன இவர்கள் தங்கள் காதுகளையும் கண்களையும் திற்ந்து பார்த்து பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ அல்லது வீட்டு வாசலில் நின்று கவனித்தாலே பல விஷயங்கள் எழுதக் கிடைக்குமே என்று நினைத்து கொள்வேன்

  அப்படி நான் நினைப்பதை நீங்கள் அப்படியே கண்களால் பார்த்ததையும் காதால் கேட்டதையும் வைத்து அழகான பதிவாக்கிவிட்டீர்கள் மிக அருமையாக இருக்கிறது... இந்த மாதிரி நீங்கள் எழுதும் பதிவுகளை உங்கள் எழுத்தில்படிக்கும் போது இந்தியாவில் வசிப்பது போலவே இருக்கிறது பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. நிறைய விஷயங்கள் எழுதுவதற்கு இங்கே கொட்டிக் கிடக்கின்றன. எத்தனை ஸ்வாரஸ்யமான விஷயங்களை மனிதர்கள் பேசுகிறார்கள். கவனித்தால் நிறைய எழுதலாம் என்பது உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 14. காதருகே - பேருந்து நிலையத்தின் ரகளை!..

  பயணங்கள் தொடரட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 15. எத்தனையோ விஷயங்கள் காதில் விழுகிறது ஆனால் மனதில் நிற்பதில்லை. அதற்கான காதுகள் இல்லை போலும் ரசித்தேன் ரகசியத்தை மனதுக்குள் வைக்காமல்இருப்பதைத்தானே ராஜாவுக்குக் கழுதைக் காது கதை கூறு கிறது. சொல்வதால் காது வளர்ந்ததாகவா இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஏதோ ஒரு சினிமாவில் காது வளர்ந்து விடுவதாக பார்த்திருக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 16. வழக்கம் போல சுவாரஸ்யமான பதிவு. ரசித்தேன். எனக்கும் இந்த பழக்கம் (பயணத்தின் போது அடுத்தவர்கள் பேசுவதை அவர்கள் அறியாமல் கவனித்தல்) உண்டு. ஒருமுறை பஸ் பயணத்தின் போது, ஒரு பையன் பஸ்சின் கடைசி இருக்கையின் வலது பக்க மூலையில் உட்கார்ந்து கொண்டு, அதே பஸ்சில் டிரைவர் சீட்டிற்கு அடுத்து இரண்டாவது இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண்ணுடன், பக்கத்தில் உள்ளவர்கள் கேட்கும் படியாக செல்போன் மூலம் நூல் விட்டுக் கொண்டு இருந்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... உங்கள் அனுபவமும் நன்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 17. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்குமென்று டீ வாங்கிக் கொடுத்த அந்த அம்மா நிரூபித்து விட்டாரே :)

  ReplyDelete
  Replies
  1. கோபப்பட்டாலும் கடைசியில் அவர் மனதளவில் நல்லவர் என்பதை நிரூபித்து விட்டார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 18. ஹாஹாஹா, இப்போதெல்லாம் பயணங்களின் போது சக பயணிகளைக் கவனிப்பதைக் குறைத்துவிட்டேன். அது சரி, உங்க காது பெரிசா ஆகிடாமப் பார்த்துக்கோங்க! :)

  ReplyDelete
  Replies
  1. காது பெரிசா ஆகாம - அதான் அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொள்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 19. உண்மைதான்... காதைத் திறந்துவைத்தால் நிறையக் கேக்கலாம்...
  அருமையான பகிர்வு அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 20. நல்ல சுவாரஸ்யம்தான்! கண்களையும், காதையும் திறந்து வைத்தால் நன்றாகவே கிடைக்கும் நிறைய ....தொடருங்கள் ஸ்வாரஸ்யங்களை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....