சனி, 17 செப்டம்பர், 2016

தலைநகர் தில்லி – தொடரும் கொடுமைகள்தலைநகர் வாசிகளுக்கு தலைநகரில் இருக்கும் பூங்காக்கள் பற்றி ரொம்பவே பெருமை உண்டு. பல இடங்களில் மிகப் பெரிய பரப்பளவில் பூங்காக்கள் இருக்கின்றன – உதாரணத்திற்கு Lodhi Garden, Buddha Jeyanthi Park, Millennium Park,   Garden of Five Senses, Deer Park என பெரிய பட்டியல் உண்டு. அதைத் தவிர ஒவ்வொரு பகுதியிலும் சில வீடுகளுக்கு நடுநடுவே சிறிய அளவில் பூங்காக்களும் இங்கே உண்டு. இந்தப் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், காலை வேளைகளில் யோகாசனம்/உடற்பயிற்சி செய்வதற்கென்றே செல்பவர்களும் உண்டு! தலைநகர் வாசிகளுக்கு இந்தப் பூங்காக்கள் பற்றிய கர்வமும், இந்த மாதிரி வசதிகள் வேறெங்கும் கிடைக்காது என்ற எண்ணமும் உண்டு.  

ஆனால் இந்தப் பூங்காக்களில் பகல் நேரங்களிலும், மாலைப் பொழுதுகளிலும் நாம் குடும்பத்தோடு சென்று விட முடியாது! ஒவ்வொரு மரத்தடியிலும் காதலர்கள் கொஞ்சிக்குலவிக் கொண்டு இருப்பார்கள் – சில இடங்களில் கலவி கூட நடப்பதுண்டு! சரி அவர்கள் இஷ்டம் – அவர்களுக்குப் பிடித்திருக்கிறது, செய்கிறார்கள் என்று நாம் நகர்ந்தாலும், சில பெற்றோர்களுக்கு, கூட வந்திருக்கும் மகன்/மகள், அந்த காதலர்கள் செயல் பற்றி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திண்டாட்டம் தான்!

இப்படி இருக்கும் சிலரைப் பார்த்தாலே வேறு சிலருக்கு பொறாமை! அதுவும் நான்கு ஐந்து இளைஞர்கள் சேர்ந்திருக்கும்போது இப்படி யாரையாவது பார்த்துவிட்டால், அதுவும் மது அருந்திய நிலையில் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். அவர்கள் தங்களை கட்டுப்படுத்துவதில்லை. அதுவும் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்றால் அந்த ஜோடியில் இளைஞரை நன்கு அடித்துப்போட்டு, பெண்ணைக் கற்பழிக்கும் கேவலங்களும் நடப்பதுண்டு.

படம்: இணையத்திலிருந்து....

நேற்று கூட தலைநகரின் அமன் விஹார் பகுதியில் இரண்டு பெண்கள் அவர்களது ஆண் நண்பர்களோடு பூங்கா ஒன்றில் இருக்க, ஐந்து ஆண்கள் சேர்ந்து அந்த ஆண் நண்பர்களை அடித்துப் போட்டுவிட்டு அவர்கள் கண் முன்னாலேயே அந்த இரண்டு பெண்களை குதறிப் போட்டு இருக்கிறார்கள் அந்த காமுகர்கள்.  நான்கு பேரைக் கைது செய்து இருக்கிறார்கள் காவல் துறையினர். அந்தப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்ல நமக்கு நா கூசுகிறது. இது போன்ற காமுகர்கள் சிறுமிகளைக் கூட விட்டு வைப்பதில்லை.

தில்லியில் இரவு பதினோரு மணிக்குக் கூட மக்கள் நடமாட்டம் இருந்தாலும், சில பகுதிகளில் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை. அந்தப் பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.  காவல் துறை ரோந்து செல்வது உண்டென்றாலும் எல்லா இடங்களிலும் அவர்கள் இருக்கமுடியாது – மிகக்குறைவான அளவிலேயே காவலர்கள் இருக்கிறார்கள் – இருப்பதிலும் பெரும்பகுதி அரசியல்வாதிகள்/தலைவர்கள் ஆகியவர்களின் பாதுகாப்பிற்கே போய்விட, மக்களுக்கென்று இருப்பது குறைவான காவலர் துறையினரே...

இப்படி ஒரு கொடுமை நடந்தால் ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள் என அனைவரும் தங்கள் கருத்துகளைச் சொல்வார்கள் – வேறு ஏதாவது ஹாட் நியூஸ் வந்துவிட்டால் இந்த விஷயத்தினை அப்படியே விட்டு விடுவார்கள். அவர்களுக்கு அவர்கள் வேலை.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் இங்கே பாதுகாப்பில்லை. நேற்று அலுவலக நண்பர் ஒருவரின் மகன் – 20 வயது. இரவு பதினோரு மணிக்கு தன் வீடு இருக்கும் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருக்க, எதிரே இரு நபர்கள் நின்று, வண்டியை நிறுத்தும்படி சைகை செய்திருக்கிறார்கள். முன்னால் வந்து அவர்கள் நின்றுவிட, வண்டியை நிறுத்தும் கட்டாயம்.  நின்றதும், அந்த இளைஞரிடம் இருந்த தொடுதிரை அலைபேசியைத் தரும்படிக் கேட்டிருக்கிறார்கள். இளைஞர் கொஞ்சம் முரண்டு பிடிக்க, இருவர் கையிலும் துப்பாக்கிகள் முளைத்தன! அலைபேசி, பைக் இரண்டையும் பறித்துக் கொண்டு அந்த இருவரும் செல்ல, இந்த இளைஞர் அங்கேயே செய்வதறியாது நின்றிருக்கிறார். பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்து வீடு திரும்பியிருக்கிறார்.

இந்தக் கஷ்டங்கள் ஒரு புறம் இருக்க, எல்லா வருடங்களைப் போலவே இந்த வருடமும் இந்த மாதங்களில் வரும் டெங்கி, சிகன்குன்யா ஜுரமும் பெரும்பாலான தில்லி/NCR வாசிகளைத் தாக்கி இருக்கிறது. கொசுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்காதது யார் குற்றம் என ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். எனது அலுவலகத்திலேயே ஆறு-ஏழு பேருக்கு சிகன்குன்யா வந்து அவதிப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளும், அரசாங்கமும் இந்த நிலைக்கு யார் காரணம் – நீ தான் நீ தான் என்று மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறது. வரும் முன் காப்போம் என்பது இங்கே பழக்கமில்லை. வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதே இங்கே தாரக மந்திரம். அந்த நிலையிலும் எவ்வளவு இதில் பணம் சம்பாதிக்கலாம் என்பதே பெரும்பாலான அரசியல்வாதிகளின் கேவலமான எண்ணம். எல்லாவற்றையும் அரசியலாக்கி உருப்படியான வேலைகளைச் செய்யாமல் விடுவது இவர்களுக்குத் தான் பழக்கமாயிற்றே.

படம்: இணையத்திலிருந்து....

இது இப்படியிருக்க, முதல் அமைச்சர் கேஜ்ரிவாலுக்கு நாக்கு நீண்டு விட்டதாகவும், அதனால் தான் அவருக்கு தொடர்ந்து இருமல் தொல்லை இருப்பதாகவும் கண்டுபிடித்த மருத்துவர்கள் அவரது தடித்த நாக்கை கொஞ்சம் சர்ஜரி செய்து குறைத்திருப்பதாகவும் இன்னும் சில நாட்களுக்குப் பேசக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள் – இணையம் முழுவதும் கேஜ்ரிவாலைக் கிண்டல் செய்து நிறைய Troll-களும் கார்ட்டூன்களும் வந்து கொண்டே இருக்கின்றன!

படம்: இணையத்திலிருந்து....

தில்லியில் பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. மக்கள் தொகையும், தில்லிக்கு தினம் வந்து போகும் நபர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுவாசிக்கும் காற்றில் மாசு, தண்ணீர் பிரச்சனை, பாதுகாப்பின்மை – குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, குறைவான மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை, வழிப்பறிக் கொள்ளைகள் என பல பிரச்சனைகள்....  தீர்க்கவேண்டிய பிரச்சனைகளைக் கூட கண்டுகொள்ளாது, தாங்களும் தங்கள் அரசாங்கமும் இருந்து சம்பாதித்தால் போதும் என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நாட்களைக் கடத்துகிறார்கள்.

என்று விடிவுகாலம் வரப்போகிறதோ, என்று இம்மாதிரி பிரச்சனைகள் குறையுமோ என்று தில்லியில் வாழும் பலரும் நினைக்கிறார்கள் – என்னையும் சேர்த்து..... எப்படியும் இன்னும் சில வருடங்கள் இங்கே இருந்து தான் ஆகவேண்டும்! வேறு வழியில்லை!

நாளை வேறொரு பதிவில் சந்திக்கலாம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

38 கருத்துகள்:

 1. பொதுவிடங்களில் இவ்வாறானவர்கள் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. தங்கும்விடுதி செலவில்லாமல் தம் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தம்மை கேவலப்படுத்திக் கொள்கிறார்கள். பொதுமக்களை அவர்கள் மதிப்பதேயில்லை. நீங்கள் சொல்லும் பார்க்குகளில் மட்டுமல்ல. பேருந்து நிலையங்களிலும், பொது இடங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளை அதிகமாகக் காணமுடிகிறது. இதுதான் ஆணுரிமை, பெண்ணுரிமை என்பதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது உரிமையா, இல்லை வேறு ஏதாவதா என்பது தெரியவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
  2. எனது இந்தப் பதிவைப் பார்க்கவும். http://swamysmusings.blogspot.com/2016/09/blog-post.html

   நீக்கு
  3. உங்களது இந்தப் பதிவினை படித்திருக்கிறேன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 2. இருதரப்பட்ட செய்திகளையும் நானும் படித்தேன்.

  பொதுவாக கேஜரிவால் பாஸ்மார்க் வாங்குகிறாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ்மார்க் வாங்குவதில்லை - இரண்டு வருடங்களுக்குள் அவர் சாயம் வெளுத்துவிட்டதாகத் தான் சொல்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. எப்படியும் ரிடைர்டு ஆகி ஸ்ரீரங்கம் வந்து விடலாம். அந்த நினைவிலேயே பாக்கி சர்வீசை ஓட்டவும்.

   நீக்கு
  3. ரிட்டையர் ஆகி ஸ்ரீரங்கம் வந்து விடலாம்! :) அதற்கு இன்னும் 15 வருடங்கள் இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 3. நிகழ்வுகள் வேதனையே...
  பொது இடங்களில் காதலர்களின் செயல் ரொம்பக் கேவலமாத்தான் இருக்கு....
  இங்கு கூட சட்ட திட்டங்கள் அதிகம்... ஆனாலும் பொது இடங்களிலும் அண்டர்கிரவுண்ட் பாதைகளிலும் பள்ளிக் குழந்தைகள் (குறிப்பாக மலையாளிகள்) கட்டிப் பிடித்து முத்தமிட்டு நிற்பது சாதரணமாத்தான் இருக்கு.

  அரசு முன்னெரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என்பது தில்லி மற்றுமல்ல எல்லா இடத்திலும் உண்டு.

  சென்னை வெள்ளம் என்ன சொல்லிச் சென்றது... இதுவரை ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்... இதோ மீண்டும் மழைக்காலம் வந்துவிட்டது....

  பணம் சேர்க்க மட்டுமே அரசியல்... மக்களுக்காக இல்லை...

  இல்லேன்னா நத்தம் விசுவநாதனுக்கு ஏது 4000 கோடி சொத்து...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இடங்களிலும் இந்த தொல்லைதான்.... உங்கள் நாட்டிலும் இப்படி என்பது ஆச்சரியம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 4. ஒன்றும் சொல்வதற்கில்லை...

  அவரவரும் அவரவரைப் பாதுகாத்துக் கொள்ளுதல் கடமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 5. ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. மத்திய சர்க்கார் இருக்கும் இடத்திலா இப்படி? ஓட்டுக்காக நாட்டின், மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்குகிறார்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மத்திய சர்க்கார், மாநில சர்க்கார் என இரண்டுமே இருந்தாலும், அவர்களுக்குள் அடித்துக் கொள்ளவே நேரம் போதவில்லையே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. இந்தியாவின் எல்லா இடங்களிலும் இதே கதைதான் டெல்லி தலைநகர் என்பதால் பொதுப் பார்வைக்கு வருகிறது தனி மனிதர் திருந்த வேண்டும் எல்லாவற்றையும் சட்டத்தால் திருத்த முடியாது இதில் பெற்றொர்களின் பங்கும் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 7. வரவர எதிர்காலம் மிகவும் மக்கள் வாழ்க்கை பயங்கரமாகத் தான் இருக்கும்!நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 8. தலை நகரின் நிலையே இப்படியா?அரசியல் வாதிகளுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே நேரம் போதவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 9. இந்தியாவின் தலைநகரமான தில்லியில் இவ்வளவு கொடூரம் என்றால் இந்தியா முழுக்க..???காம வெறியர்கள் சற்றும் யோசிப்பதில்லை என்றே நினைக்கிறேன் தன்னை பெற்றதும் ஒரு பெண் என்று.பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு ஆணே இப்படி செய்தால் என்ன செய்வது..??

  தீர்க்கவேண்டிய பிரச்சனைகளைக் கூட கண்டுகொள்ளாது, தாங்களும் தங்கள் அரசாங்கமும் இருந்து சம்பாதித்தால் போதும் என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நாட்களைக் கடத்துகிறார்கள். இவ்வரிகள் எவ்வளவு உண்மை நிலையை கூறுகிறது.

  நேரம் பயனுள்ளதாக அமைந்தது நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   நீக்கு
 10. ஊர் மட்டும் பெரிதாக வில்லை ,கூடவே பிரச்சினைகளும் பூதாகரமாக தோன்ற ஆரம்பித்து விட்டது :)
  த ம 7 :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 11. மிகவும் வேதனையாக இருக்கின்றது சகோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 12. வேதனை ஐயா
  இந்தியாவின் தலைநகர்என்பதில் வேதனைஅடையவேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. பதில்கள்
  1. சனிக்கிழமை மதியத்திலிருந்து இணையம் பக்கம் வரவில்லை. அதனால் வெளியிடத் தாமதம்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 14. தலைநகரில் எங்கேயும் பாதுகாப்பில்லை. இளைஞர் இளைஞிகளுக்கு கீழ்த்தரமான செயல்களை செய்ய பயம் வெட்கம் எதுவுமில்லை. அதனால் பாதிப்புகள் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வருகிறது. மனது வலிக்கிறது.
  சுதா த்வாரகாநாதன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   நீக்கு
 15. தலைநகரிலேயே ம்ம்ம் என்ன சொல்ல..இந்தியாவில் எல்லா இடங்களிலும் பெருகி விட்டனதான். பாதுகாப்பு இல்லை இல்லவே இல்லை. அது போன்று பொதுச்சுகாதாரமும் இல்லை..நம் நாட்டில் பொதுச்சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் என்பதே இல்லை. விழிப்புணர்வும் இல்லை ..

  //இப்படி ஒரு கொடுமை நடந்தால் ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள் என அனைவரும் தங்கள் கருத்துகளைச் சொல்வார்கள் – வேறு ஏதாவது ஹாட் நியூஸ் வந்துவிட்டால் இந்த விஷயத்தினை அப்படியே விட்டு விடுவார்கள். அவர்களுக்கு அவர்கள் வேலை.// உண்மை இதுதான்..இரு கோடுகள் தத்துவம் தான் எதிலும்..வேதனையான நிகழ்வுகள்.

  வெங்க்ட்ஜி பார்த்துக் கொள்லுங்கள் உங்கள் உடல் நலத்தை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 16. தலைநகரில் பொது மக்களுக்கு பாதுகாப்பு குறைச்சல்தான் என்று கேள்வி பட்டிருக்கிறேன். என் அக்காவின் மருமகன் ஒரு முறை இரவு பணி முடிந்து தனியாய் டூ வீலரில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது இரண்டு பேர் வழிமறித்து காசு கேட்டிருக்கிறார்கள். அவர் தர மறுக்க, திடீரென்று ஒரு பாம்பை பைக்குள்ளிருந்து எடுத்து அவர் முகத்திற்கெதிரே நீட்டினார்களாம். வேலேவெலத்துப் போன அவர் கையில் இருந்த பைசாவை கொடுத்தாராம்.

  பூங்காக்களில் காதல் லீலைகள் எல்லா ஊர்களிலும்(மஸ்கேட் உள்பட) நடப்பதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 17. among the parks that exist in india i give firstgrade to bangalore parks...
  excellent climate rare trees most of them situated in busy areas thanks to british peo;ple....
  cafetarias bangalorians call them dharshinis offer cheaper delicious tiffins filter coffee just seven rupees.. behaviour of the people... all treat to watch...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....