எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 21, 2016

ஃபேஸ்புக் கதைகள் – ரவி நடராஜன்சமீபத்தில் தமிழகம் பயணமாக வந்தபோது பயணத்தில் எதையாவது படிக்க வேண்டும் என புத்தக அலமாரியில் பார்த்தால், படித்த புத்தகங்களாகவே கண்ணில் பட்டது. பொழுது போகவேண்டுமே – எத்தனை நேரம் தான் சக பயணிகளையும், விமானப் பணியாளர்களையும் பார்க்க முடியும்? காதைத் தீட்டிக்கொண்டு ராஜா காது கழுதைக் காது பகுதிக்கு ஏதாவது விஷயம் கிடைக்குமா என்று இருக்கமுடியுமா? நிச்சயம் முடியாது – அவ்வப்போது காதில் விழுவதில் பலவற்றை எழுதவும் முடியாது...  பிறகு என்ன செய்வது? என்று யோசித்தபோது, ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

அது.....

அட நம்ம மின்புத்தகம் வெளியிட்ட WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் இன்னும் பல நூல்களை வெளியிட்டு இருக்கிறார்களே, அதில் நிறைய புத்தகங்கள் இன்னும் படிக்கவில்லையே, அங்கே சென்று தேடுவோம், சில மின்புத்தகங்களை அலைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால், பயணத்தின் போது படிக்க வசதியாக இருக்குமே என்ற எண்ணம் தோன்ற, உடனடியாக செயல்படுத்தினேன். அவர்களது தளத்திற்குச் சென்று வரிசையாக சில மின்புத்தகங்களை தரவிறக்கம் செய்தேன். அவை என்னென்ன புத்தகங்கள் என்று இப்போது சொல்லப் போவதில்லை!

அப்படி தரவிறக்கம் செய்த மின்புத்தகங்களில் ஒன்று திரு ரவி நடராஜன் அவர்கள் எழுதிய “ஃபேஸ்புக் கதைகள்”.  திரு ரவி நடராஜன் இணையத்தில் பிரபலமானவர். சொல்வனம் இணைய இதழில் விஞ்ஞான/தொழில்நுட்ப கட்டுரைகளை எழுதி வருபவர். இளையராஜா பற்றியும் இணையதளத்தில் எழுதி வருகிறார். ஆம்னிபஸ் தளத்தில் விஞ்ஞான புத்தக விமர்சனங்களும் எழுதி வருவதை புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஃபேஸ்புக்-ஐ உபயோகத்தில் உள்ளது. இன்றைக்கு இதைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை வெகுவும் குறைவாகவே இருக்கும். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இதில் உள்ள நல்லதும் கெட்டதும் தெரியுமா என்று கேட்டால், பாதிக்கு மேலானவர்களுக்கு தெரிவதில்லை.  ஃபேஸ்புக்-கில் பதிவு செய்யும் விஷயங்களால் பிரச்சனைகளில் சிக்கியவர்கள் நிறைய பேர். பல இளைஞிகள்/இளைஞர்கள் காதல் வயப்பட்டு பின்னால் கஷ்டங்களைச் சந்தித்ததுண்டு. Fake ID வைத்துக் கொண்டு உலவுபவர்கள் எத்தனை பேர்.....

ஃபேஸ்புக் உபயோகிப்பவர்கள் பலர் தங்களது அந்தரங்க விஷயங்களை, புகைப்படங்களை இதில் வெளியிட்டு அதனால் பிரச்சனைக்குள்ளாவதும், கல்யாணத்தில் முடியாத ஃபேஸ்புக் காதல்களும் இங்கே உண்டு.  இப்படி இதில் இருக்கும் பிரச்சனைகளை வைத்து கதைகள் எழுதி இருக்கிறார் திரு ரவி நடராஜன் அவர்கள். புத்தகம் பற்றிய அறிமுகத்தில் இப்படிச் சொல்கிறார்.....

“சமூக வலையமைப்பு மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஏற்படும் நல்ல மற்றும் தீய விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியே இந்த மின் புத்தகம். சில கதைகள் உங்களுக்கு அபத்தமாகப் படலாம் – இப்படி யோசிக்காமலா நுகர்வோர் இயங்குகிறார்கள் என்று கூடத் தோன்றலாம். உண்மை என்னவோ, விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத இளைஞர்கள், இவ்வாறு இயங்குவதற்கு, பல உண்மை நிகழ்வுகள் உலகெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிக்கும் வாசகர், ஏதாவது ஒரு தீய ஃபேஸ்புக் விஷயத்தைத் தவிர்த்தால், இம்முயற்சியில் ஒரு அர்த்தமிருக்கும்.

என்னுடைய நண்பர்கள் சிலர் ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த கதைகள் உண்டு. பெண்ணின் பெயரில் உலவுகிற ஒரு ஃபேஸ்புக் ஆசாமி ஒருவரை பெண் என்று நம்பி காதல் கவிதைகளைச் சொல்லி, அவரைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் சொல்லும் அளவுக்குக் காதல்! பின்னர் அந்த நபர் Fake ID வைத்து இருப்பது தெரிந்து, மனமுடைந்து போனார்.  வேறு ஒருவரோ, இன்னும் ஒரு படி மேலே போய், பெண் பெயர் கொண்ட Fake ID ஆசாமியைச் சந்திக்க தனிமையில் சென்று, பணமும் பொருளும் இழந்து வந்தார்!

இந்த மின்புத்தகத்தில் மொத்தம் பத்து கதைகள் மட்டுமே. 42 பக்கங்கள்.  இணையத்தில் இலவசமாகவே தரவிறக்கம் செய்து படிக்கலாம்.  உங்கள் கணினியிலோ, ஆண்ட்ராய்டு அலைபேசியிலோ, அல்லது கிண்டில் கருவிகளிலோ தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.   இந்தப் பதிவு வெளிவரும் இந்நாள் வரை 11265 முறை தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது இம் மின்புத்தகம்.

ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள, இப்புத்தகத்தினை படிக்கலாமே....

தொடர்ந்து மின்புத்தகங்கள் வெளியிட்டு வரும் www.freetamilebooks.com தள நண்பர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

நாளை வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

20 comments:

 1. Facebookன் நன்மை தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள, இப்புத்தகம் உதவட்டும்.

  பயனுள்ள பதிவு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. படித்துப்- பார்க்கிறேன். இணைப்புக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. ரொம்ப கேர்ஃபுல்லாக இல்லை என்றால் முக'நூல் நமக்கு கசப்பைக் கொடுக்கும். சிறிய தவறுகூட (Setupல்), நம் விஷயங்களைப் பிறர் பார்க்கும்படியாகிவிடும். முக'நூலில் நான் இல்லாததுக்கு இதுதான் காரணம்.

  "அவ்வப்போது காதில் விழுவதில் பலவற்றை எழுதவும் முடியாது... " - எதைப் பகிர்ந்துகொள்வது என்பதில் கட்டுப்பாடு கொண்டிருப்பது பாராட்டத்தக்கதுதான்.

  Fake ID என்றதும் எனக்கு ஒன்று ஞாபகம் வருது. 2000ல் குமுதம் சைட் (என்று நினைக்கிறேன்) மூலமாக பெண் பெயரில் chat பண்ணின நண்பன் கடைசியில் அந்தப் பெண், தான் இளைஞன் என்றும் சரி என்றால் நண்பனிடம் இன்னும் 'நெருக்கமாகப் பழக ஆசைப்படுவதாகவும் சொன்னான். இவனும், நானும் ஆண்தான் என்றவுடன், அவன் கன்னா பின்னா என்று திட்டி மெஸேஜ் போட்டான். அப்போதுதான் இப்படியெல்லாம் ஃப்ராடுகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. இதுவரை படிக்காத பக்கம்
  தங்கள் மிகச் சிறந்த அறிமுகம்
  படிக்கவேண்டும் எனும்
  ஆவலைத் தூண்டிப் போகிறது
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. பயனுள்ள பதிவு ஐயா
  தரவிறக்கம் செய்து கொண்டேன்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. உபயோகமான தகவல். புத்தகத்தைத் தரவிறக்கிக் கொண்டோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. நல்லதொரு நூல் அறிமுகம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. நல்லதொரு பகிர்வு. நல்லதொரு அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....