எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 26, 2016

பராட்டாயும் பின்னே சிக்கன் குருமாவும்.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 53

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


ஒரு முதியவர்..

கோர்சம் ஸ்தூபாவில் பிரார்த்தனை உருளைகளை உருட்டி, அங்கிருந்த மக்களையும், மக்களோடு மக்களாக எங்களையும் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மதிய உணவுக்காக முன்னர் சொல்லி இருந்த ராணுவ வீரர்களின் முகாமுக்கு வெளியே அமைந்திருந்த கடைக்கு வந்து சேர்ந்தோம். வழிலும் நிறைய மோன்பா பழங்குடியினர்கள் தங்களது பாரம்பரிய யாக் முடியால் உருவாக்கிய தொப்பியை அணிந்து வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு முதியவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க, அவர் மறுத்து விட்டார். 


ஒரு மூதாட்டி – யாக் தொப்பி, இரட்டைப் பின்னலோடு...

தூரத்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் இருந்தாலும், அவர்கள் அனுமதி பெற்று படம் எடுத்தால் இன்னும் சில படங்களை எடுக்கலாம் என்பது எங்கள் எண்ணம். ஆனாலும் அனுமதி இல்லாதபோது என்ன செய்ய முடியும். கண்களாலேயே அவர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு நடந்து முகாம் வரை வந்து விட்டோம்.  வெளியே டெண்ட் ஒன்றில் சமையல் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. உள்ளே ஒரு அறையில் சில மேஜைகளும், நாற்காலிகளும் இருக்க அங்கே சென்று அமர்ந்து கொண்டோம்.


அப்பகுதியில் இருந்த ஒரு கட்டிடம்...
  
ஒரு ராணுவ வீரர் எங்களிடம் வந்து என்ன சாப்பிடுகிறீர்கள் என்று ஹிந்தியில் கேட்டுக் கொண்டிருக்கும்போதே முதலில் பார்த்த மலையாளி உள்ளே வந்துவிட்டார். அவரே எங்களிடம் வந்து “ஆஹா வந்தாச்சா?, உட்காருங்கஎன்று உபசரித்து, விழா எப்படி இருந்தது என்றும், எங்களுக்குப் பிடித்திருந்ததா என்றும் விசாரித்தார்.  என்ன உணவு கிடைக்கும் என்று கேட்க, அவர் சொன்ன பதில் – சிக்கன் பிரியாணி உண்டு, பராட்டா-சிக்கன் குருமா உண்டுஎன்று சொல்ல எனக்கு ஏதாவது சைவ உணவினைச் சொல்ல மாட்டாரா என்று இருந்தது.


குழந்தையோடு உணவகத்திற்கு வந்த ஒரு பழங்குடிப் பெண்மணி....
அம்மா இருக்க பயமேன் எனத் தூங்கும் குழந்தை....

என்னுடைய நண்பரே, அவரிடம் சைவ உணவு எதுவும் கிடைக்குமா எனக் கேட்க, அவரோ, இல்லை என்று பதில் சொல்லி விட்டார். சரி இன்றைக்கு பட்டினி தான் போலும் என நினைத்துக் கொண்டேன். பிறகு எதற்கும் உணவு சமைக்கும், இடத்திற்குச் சென்று பார்க்கலாம் என வெளியே வந்தேன். அங்கே காசு வாங்கிக் கொண்டு உணவு கொடுத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்தால் தமிழரைப் போல இருக்க அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். “என்ன தமிழா? எந்த ஊரு உங்களுக்கு? என்ன பேரு என்று விசாரிக்க அவரும் ஆமாங்க தமிழ் தான். மதுரை பக்கம், பேரு ராம்மூர்த்திஎன்று சொன்னதோடு சாப்பிட்டீங்களா?என்று கேட்க, என் கேள்வியை நான் கேட்டேன்.


குழந்தை - அம்மாவின் தோளில் இருந்தார்!..

ஏங்க சைவம் ஒண்ணுமே இல்லையாஎன்று கேட்க, என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அவர் சொன்னது – “பராட்டா மட்டும் தான் இருக்கு! தொட்டுக்க சிக்கன் குருமா மட்டும் தான் இருக்கு, வேறொண்ணும் இல்லையே என்று சொன்னார்! என்ன செய்வது என்று சுற்றி முற்றி பார்க்க, தயிரில் வெங்காயம் போட்டு பச்சடி இருந்தது. சரி இன்றைக்கு இது தான் நமக்கு எனச் சொல்லி, பராட்டாவும், வெங்காயம் போட்ட தயிர் பச்சடியும் கொடுங்க என அவரிடம் சொல்ல, அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, “தரலாம்... ஆனா எங்களுக்கு கணக்கு இடிக்கும் – அதனால பராட்டா-சிக்கன் குருமாவுக்கு உண்டான காசையே கொடுங்கஎன்று சொல்ல ஏதோ உணவு கிடைத்தால் சரி என்று கொடுக்கச் சொன்னேன்.


இளைஞர்கள்..

உள்ளே சென்று அமர்ந்து கொள்ள, நான் கேட்ட, பராட்டாவும் தயிர் பச்சடியும் வந்தது. அதற்குள் நண்பர்கள் சிக்கன் பிரியாணி, பராட்டா-சிக்கன் குருமா என உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊர் சமையல் சாப்பிட்ட ஒரு உணர்வு அவர்களுக்கு! ஆறிப்போன பராட்டாவில், தயிர் பச்சடி விட்டு சாப்பிடுவதற்குள் ஒரு வழியாகிவிட்டது எனக்கு! இருந்தாலும் அந்த பசி நேரத்தில் இதாவது கிடைத்ததே என்று இயற்கையாகவே சில்லென்று இருக்கும் மலைப்பகுதிக் குடிநீரோடு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தள்ளினேன்! வேறு வழி! இதுவும் சாப்பிடவில்லை என்றால் இரவு தவாங்க் செல்லும் வரை ஒன்றும் கிடையாது – பட்டினி தான்!


மலை இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது..
சூரியனும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த காட்சி!

பொறுமையாக சாப்பிட்ட பின்னர், வெளியே வந்து மலையாள ராணுவ வீரர்களோடு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் அங்கே ஒரு குடும்பம் – கணவன், மனைவி, ஒரு கைக்குழந்தை – அங்கே வர, அவர்களைப் பார்க்கும்போதே தமிழர்கள் போல இருக்கிறார்களே என்ற எண்ணம் வர, அவர்களுடன் நான் தமிழில் பேசினேன்.  ஆமாம் அவர்கள் தமிழர்கள் தானாம். மூன்று வருடங்களாக இந்த ZEMITHONG பகுதியில் தான் இருக்கிறார்களாம்.  ஒன்றே முக்கால் வயது குழந்தையுடன் தைரியமாக இங்கே இருக்கும் அப்பெண்ணிற்கு ஒரு சல்யூட்! 


மதிய நேரத்துச் சூரியன்....

சில பழங்குடியினர்களும் இந்த உணவகத்தில் வந்து நமது ஊர் சிக்கன் பிரியாணியையும், பராட்டா-சிக்கன் குருமாவினையும் வாங்கி சாப்பிடுகிறார்கள்.  அவர்களில் ஒருவரிடம் இந்த உணவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்க, “எங்களுக்குத் தென்னிந்திய உணவு பிடிக்கும் என்கிறார்! கூடவே தோசா ரொம்பப் பிடிக்கும்என்று சொல்ல, நான் உடனே, கொஞ்சம் அலைந்து, “இங்கே கிடைக்கிறதா? எனக் கேட்க, இல்லை நானும் ராணுவத்தில் இருந்திருக்கிறேன் – வெளி ஊர்களுக்குச் சென்ற போது தோசா சாப்பிட்டு இருக்கிறேன்என்கிறார்.

அந்த தமிழ்க் குடும்பம் எங்கே இருக்கிறார்கள், என்ன பணி செய்கிறார்கள், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் ஆகியவை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

22 comments:

 1. யாக் தொப்பி, இரட்டைப்பின்னலோடு. வித்தியாசமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. ஆஹா ,எங்கே போனாலும் நம்ம தமிழன் ,அதிலும் ஒருவர் மதுரை :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டு.. இது இந்தியா முழுக்க உள்ள நம்பிக்கை. திபெத்தியர், பூடான் - இவர்கள் கொஞ்சம் சென்சிடிவ். அவர்களுக்கு சைனா மூலமான பிரஷர் அதிகம். வேவு பார்ப்பதும் அதிகம். அதனால் அவர்கள் போட்டோ எடுக்க அனுமதி கொடுக்க கொஞ்சம் தயங்குவார்கள் (உங்களுக்கு அவர்களின் தலாய்லாமா.. போன்ற பிரச்சனைகள் தெரியும்தானே).

  உங்களின் உணவுப்பிரச்சனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னைவிட நீங்கள் ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்கிறீர்கள். அதனால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் கொலைப்பட்டினிதான். அப்புறம் எங்க இயற்கையை, புதிய இடங்களை அனுபவிப்பது?

  ReplyDelete
  Replies
  1. குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டு - இந்தியாவின் பல பகுதிகளிலும் இது உண்டு!

   ஃபோட்டோ பிரச்சனை - உண்மை தான். அவர்களுக்கு தயக்கம் இருப்பது நியாயம் தான்.

   உணவில் கொஞ்சம் இப்படி அப்படி அட்ஜஸ்ட் செய்யாமல் வெளியிடங்களுக்குச் செல்வது மிகவும் கடினம்தான். அப்படி இல்லை என்றால் நீங்கள் சொல்வது போல கொலைப்பட்டினி தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. ஆமாம், அதையும் சாப்பிடவில்லை என்றால் தவாங் செல்லும்வரை வயிறு கவாங் கவாங் என்று இழுக்கும்!!! எப்படியும் குருமாவுக்கும் காசு வாங்குகிறார் அந்தத் தமிழர் என்றால் அந்தக் குருமாவை வாங்கி நண்பர்களுக்குத் தந்திருக்கலாமே....

  ReplyDelete
  Replies
  1. தவாங் வரை கவாங்... கவாங்.... அதே!

   குருமாவிற்குப் பதிலாகத் தானே தயிர் பச்சடி! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. யாக் தொப்பி அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. பயண நேரங்களில் நாம் சாப்பிடக் கூடிய உணவு கிடைக்கவில்லையென்றால் பாடுதான் நானும் அனுபவித்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. பலருக்கு இந்தப் பிரச்சனை உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. தோசை நிறைய பேரை கவர்ந்து விடுகிறது! படங்கள் அழகு! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. நல்ல அனுபவங்கள். யாக் தொப்பு அழகு...அந்தக் குழந்தையின் படமும் அழ்கு....கேரளத்தவர் எங்கும் செல்வார்கள் என்று பொதுவாகச் சொல்வதுண்டு...அங்கு தமிழர் குடும்பமுமா....எப்படி இருக்கிறார்கள் என்று அறிய ஆர்வமாக இருக்கிறது ஜி. தொடர்கின்றோம்....

  ReplyDelete
  Replies
  1. அந்த தமிழ்க்குடும்பம் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்! - நாளை வரலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. >>> ஆறிப்போன பராட்டாவில், தயிர் பச்சடி விட்டு சாப்பிடுவது..<<<

  ஊர் சுற்றுவதிலும் எத்தனை எத்தனை கஷ்டங்கள்!..

  அழகான படங்களுடன் - பதிவு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 10. படங்களும் பகிர்வும் அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 11. புகைப்படங்கள் நன்று, ஒன்றைத்தவிர.//மலை இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது..
  சூரியனும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த காட்சி!//
  விஜயன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....