வியாழன், 22 செப்டம்பர், 2016

கோர்சம் சோர்ட்டென் [அ] ஸ்தூபா.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 51

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


கோர்சம் ஸ்தூபா...

இந்திய மக்கள் பலரும் அறிந்திராத ஒரு இடத்தில் மிகப் பழமையான ஒரு வழிபாட்டுத் தலம் – புத்த மத வழிபாட்டுத் தலம் அமைந்திருக்கிறது. இது அமைக்கப்பட்ட காலம் 8-ஆம் நூற்றாண்டு அல்லது 12 – ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்ற இருவேறு பதில்கள் கிடைக்கின்றன. யார் கட்டியது என்ற குழப்பமும் உண்டு. நான் சேகரித்த, கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல்களை, எங்களுடைய அனுபவத்தோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பல சமயங்களில் பழமையான இடங்கள் பற்றிய தகவல்கள் அழிந்தும் திரிந்தும் போய்விடுவது வழக்கம்.


முதுகில் குழந்தையோடு ஒரு பெண்மணி...

ZEMITHONG எனும் இடத்திலுள்ள இந்தத் தலத்தின் பல தகவல்கள் அழிந்து போய்விட்டன என்று சொல்கிறார்கள். பாட்டிமார்கள் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு தாங்கள் கேள்விப்பட்ட செய்திகளைச் சொல்வதன் மூலமே பல விஷயங்கள் கிடைக்கின்றன. ஆனால் கதை சொல்லும் பாட்டிகள் இப்போது குறைந்து விட்டார்கள் என்பதும் சோகமான விஷயம்.


ஸ்தூபா முன் நானும் நண்பர் சசியும்...

லாமா என அழைக்கப்படும் புத்த மத குருவான லாமா சாங்க்யே ப்ரதார் என்பவர், இந்தப் பகுதியில் உலவிய தீய சக்திகளை ஒழித்துக் கட்ட ஏற்படுத்திய வழிபாட்டுத் தலமே கோர்சம் சோர்ட்டென் அல்லது கோர்சன் ஸ்தூபா. புத்த மதத்தினை பரப்பும் நோக்கத்துடன் பல இடங்களுக்கும் பயணித்த அவர் இவ்விடத்தில் புனிதத் தலத்தினை நிறுவ முடிவு செய்து, பல பகுதிகளுக்குப் பயணித்து பொருளைச் சேகரித்து இங்கே அழகிய 99.7 அடி உயர ஸ்தூபாவினை நிர்மாணம் செய்திருக்கிறார். முழுக் கதையும் இதோ கொஞ்சம் நேரத்தில் சொல்கிறேன்!


ஸ்தூபா வேறொரு கோணத்தில்...

99.7 அடி உயரம் – அதாவது எட்டு முதல் பத்து மாடிக் கட்டிடம் அளவிற்கு உயரமான இந்தக் கட்டிடம் – தொலைவில் இருந்து பார்க்கும்போதே தெரியும் இந்தப் புனிதத் தலம் பல இயற்கைச் சீற்றங்களில் மாட்டிக் கொண்டு பலமுறை சீரமைக்கப்பட்டிருக்கிறது. “மோன்பாஎன அழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேச பழங்குடியினரின் முக்கியமான வழிபாட்டுத் தலம் இது. கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஸ்தூபாவை தூரத்திலிருந்து பார்க்கும்போதே ஒரு உற்சாகம் கிடைக்க, அருகில் சென்று பார்த்தபோது மனதுக்குள் ஒரு ரீங்காரம்.....


ஸ்தூபா முன் நண்பர்களோடு...

இந்த ஸ்தூபா அமைந்திருக்கும் இடத்திலிருந்து ZEMITHONG கிராமம் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. திபெத்திலிருந்து வரும் நமங் சூ எனும் ஆறு அருகே இருக்க, சுற்றிலும் மலைகள் சூழ, நடுவே அமைந்திருக்கிறது இந்தச் சமவெளிப் பிரதேசம். அருணாச்சலப் பிரதேசத்தின் வடமேற்கு மூலையில் திபெத்-சீன எல்லைக்கு அருகே அமைந்திருக்கும் இந்த ஊருக்கு வருவதற்கு முன்னர் இந்த இடத்தின் பெயரோ, இந்த மிகப் பழமையான ஸ்தூபா பற்றியோ கேள்விப்பட்டது கூட இல்லை! இந்த ஸ்தூபா அமைக்கப்பட்டது எப்படி என்பதற்கு ஒரு செவிவழிக் கதை உண்டு. அந்தக் கதை.....


அடுத்ததா யாரை ஃபோட்டோ புடிக்கலாம்......

முந்தி ஒரு காலத்துல.... ZEMITHONG கிராமத்துல!.....

தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்ததுன்னு சொல்லப் போறதில்லை! பயிர்கள் நாசமாகின அல்லது விதை விதைத்தாலும் பயிர் கிடைக்கவில்லை, மழை பொய்த்தது, கிராமத்தில் விநோதமான பல வியாதிகள் தோன்றின.  அக்காலத்தில் தான் அக்கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களில் அக்குழந்தையை ஒரு பெரிய குரங்கு எடுத்துச் சென்றுவிட, குழந்தையின் அம்மா சோகத்தில் வீழ்ந்தாள். சோகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை – இரண்டு நாட்களில் குழந்தையை திரும்பக் கொண்டு வந்து விட்டது குரங்கு.


கோவில் அருகே மலைக்கட்டிடம்/தங்குமிடம்...

மீண்டும் வந்த குழந்தை சில நாட்களுக்குள்ளாகவே, நுண்ணிய அறிவும், சீரிய பல திறமைகளும் கொண்ட ஒரு குழந்தையாக திகழ, அக்குழந்தைக்கு சாங்க்யே ப்ரதார் என்று பெயரிட்டார்கள் – ப்ரதார் என்றால் குரங்கு, சாங்க்யே என்றால் அக ஒளி. சாங்க்யே பிரதார் வளர்ந்தபிறகு லாமா சாங்க்யே ப்ரதார் ஆனார்.  கிராமத்தில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க கோர்சம் சோர்ட்டென் [அ] ஸ்தூபா நிறுவினால் போதும் என்றும், அதற்கான செலவை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னபோது அவருக்கு அங்கே அத்தனை வரவேற்பு இல்லை.


ப்ரகாரம் சுற்றி வரும் பழங்குடி மக்கள்...

தேவையான பொருட்களைப் பெற அவர் பூட்டான் நோக்கிப் பயணித்தார். அங்கிருந்து நேபாள் சென்று தேவையான அளவு பொருட்களைச் சேகரித்துக் கொண்டார்.  நேப்பாளின் காட்மாண்டுவில் இருக்கும் புகழ்பெற்ற ஸ்வம்புநாத் ஸ்தூபாவினைப் பார்த்ததும் இதே வடிவத்தில் தான் கோர்சம் ஸ்தூபாவினை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்த அந்த உருவத்தினை ஒரு முள்ளங்கியில் வடிவமைத்து, ZEMITHONG கொண்டு வந்தார்.  ZEMITHONG வருவதற்குள் முள்ளங்கியில் சில சுருக்கங்கள் ஏற்பட, காட்மாண்டு ஸ்தூபாவிற்கும் கோர்சம் ஸ்தூபாவிற்கும் சில வித்தியாசங்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு!


வாவ்.... என்னா டேஸ்ட்!
என்று எதையோ சுவைக்கும் பழங்குடியினர்....

ஸ்தூபாவின் நான்கு பக்கங்களிலும் வரையப்பட்ட புத்தரின் கண்கள், சுற்றுவட்டாரத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொண்டே இருப்பதால் தீய சக்திகளை அழித்து, கிராமத்தினர் அனைவரையும் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.  இந்த ஸ்தூபாவினை கட்டி முடிக்க கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆனது என்று சொல்வதுண்டு.  ஸ்தூபா பற்றிய அனைத்து விவரங்களும் காலத்தால் அழிந்து விட்டன என்பதால் இப்போது கிடைக்கும் அனைத்து செய்திகளுமே செவிவழிச் செய்திகள் தான்!


ஹை... இவரும் கிருஷ்ணர் மாதிரி மயில்பீலி வைச்சுருக்காரே!...

இவர் பிறந்தது எப்படி என்பதற்கு இன்னுமொரு கிளைக்கதையும் உண்டு! சாங்க்யே ப்ரதாரின் அப்பா ஒரு துறவி – அவர் அப்பகுதியில் உள்ள குகை ஒன்றில் தவம் மேற்கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள சில பெண்கள் சேர்ந்து ராக்‌ஷி என்ற நாட்டுச் சரக்கை அவருக்கு ஊற்றிக் கொடுத்து அவர் மயக்கத்தில் இருக்கும்போது அப்பெண்களில் ஒருவருடன் உறவு கொள்ள, அதில் உருவானவர் தான் இந்த சாங்க்யே பிரதார் - என்பது தான் அந்தக் கிளைக்கதை.  இது உண்மையா, பொய்யா என்பது தெரியாது.  ஆனால் இப்போதும் அருணாச்சல் பகுதிகளில் ராக்‌ஷி எனப்படும் நாட்டுச் சரக்கு கிடைக்கிறது என்பது நன்கு தெரியும்!


சில பழங்குடியினர்...

இன்றைக்கும் இந்தக் குகைக்கும், அப்பகுதியில் இருக்கும் சாம்லிங் சூ எனும் ஏரிப்பகுதிக்கும் ட்ரெக்கிங்க் செல்ல வாய்ப்பிருக்கிறது. பல சுற்றுலாப் பயணிகள் இங்கே ட்ரெக்கிங்க் செய்கிறார்கள். ஏரிப்பகுதியில் இருக்கும் பெண்கள் மிகவும் அழகானவர்கள் என்றும் அங்கே சென்றால் நீங்களும் அவர்கள் அழகில் மயங்கிவிடக்கூடும் என்றும் ஓட்டுனர் ஷம்பு சொல்ல, நாங்கள் அங்கே செல்லவில்லை! இந்த கோர்சம் ஸ்தூபா பற்றிய தகவல்களை நான் கேட்ட அளவு உங்களுக்குச் சொல்லி விட்டேன். இனி உள்ளே செல்வோமா.....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

22 கருத்துகள்:

  1. அருமையான விவரங்கள் ஐயா
    அழகியப் படங்கள்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. எத்தனை எத்தனை விவரங்கள்.. நேர்த்தியான படங்கள்.. அழகு!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. பயணக்கட்டுரை ருசிகரமான தகவல்களுடன் அருமையாக உள்ளது. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போல உள்ளது.
    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  4. நேப்பாளின் காட்மாண்டுவில் இருக்கும் புகழ்பெற்ற ஸ்வம்புநாத் ஸ்தூபாவினைப் பார்த்ததும் இதே வடிவத்தில் தான் கோர்சம் ஸ்தூபாவினை அமைக்க வேண்டும்//

    போன பதிவில் பின்னூட்டத்தில்நேப்பாளில் இதே போல் கோவில் பார்த்தேன் என்று சொன்னது சரியாகி விட்டது அதை பார்த்து அமைத்ததுதானா?
    படங்கள் அருமை, கதைகளும் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற பதிவின் பதிலில் இதைச் சொல்லவில்லை - இங்கே எழுத இருந்ததால்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  5. செவி வழிக் கதைகள் ஸ்வாரஸ்யம்தான்... நல்ல பயணத் தொடர்...அறியாத இடங்கள்..

    கீதா: உலகம் முழுவதுமே குறிப்பாக கிழக்கு நாடுகளில் செவி வ்ழிக்கதைகள் அதிகம் தான்...நம் நாட்டில் நிறைய இப்படி ஸ்வாரஸ்யமாக நிறைய...கேட்க ஸ்வாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஜி அவர்கள் சொல்லச் சொல்லக் குறித்துக் கொண்டீர்களா? இல்லை என்றால் உங்களுக்கு நல்ல நினைவுத்திறன்.பெயர்கள் எல்லாம் வித்தியாசமான பெயர்கள் நினைவில் வைத்துக் கொள்ள..பாராட்டுகள் வெங்கட்ஜி!

    ஓ ட்ரெக்கிங்க் இருக்கிறது என்றால்...ம்ம்ம்ம் திட்டமிட வேண்டும்...நல்ல தகவல்கள் ஜி...குறித்துக் கொண்டாயிற்று...நன்றி ஜி...தொடர்கின்றோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்ரெக்கிங் இருக்கிறது. விவரங்கள் சேகரிக்க முடியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. எறக்குறைய அனைவருமே சிவப்பு வண்ணத்தில் உடை அணிந்திருக்கிறார்களே ! ! அது பற்றி விசாரித்தீர்களா ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களது பாரம்பரிய உடை பெரும்பாலும் சிவப்பிலேயே இருக்கிறது. காரணம் விசாரிக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர்.

      நீக்கு
  7. சுவாரஸ்யமான செய்திகள்! படங்கள் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. நம்பிக்கையின் அடிப்படையில் தொடரும்
    செவிவழிக் கதைகளில் எப்போதும்
    மிளிரும் சுவாரஸ்யம் இந்தக் கதைகளிலும்..
    படங்களுடன் பகிர்வும் நேரடியாகத் தரிசித்த
    அனுபவம் தருகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  9. அழகிய படங்கள். நீங்களும் ஸ்டைலாக இருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டைலாக இருக்கிறேனா! :) கிண்டல் பண்ணாதீங்க! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் கதை சொல்லும் நம் மக்களின் பாணியே தனி. அதனைத் தாங்கள் தந்துள்ள விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....