எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 4, 2016

கொலு பொம்மை செய்பவருடன் ஒரு சந்திப்பு....


 கொலு பொம்மைகள் அணிவகுப்பு....தக்ஷிணாமூர்த்தி....


கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம்....
மாயா பஜார் செட்....


சென்ற வருடம் நண்பர் ஒருவர் தில்லி பிரசாத் நகரில் இருக்கும் நரசிம்மர் கோவிலில் கொலு வைப்பதற்காக பொம்மைகளை தமிழகத்திலிருந்து வாங்கிக் கொண்டு வந்தார். அந்தக் கோவிலில் ஒரு வழக்கம். வருடா வருடம் புது பொம்மைகளை வாங்கி கொலு வைப்பார்கள். நவராத்திரி முடிவில் அனைத்து பொம்மைகளையும் ஏலத்தில் விற்று விடுவார்கள் – வீட்டில் கொலு வைப்பவர்கள் அவற்றை வாங்கிக்கொண்டு தங்களது அடுத்த வருட கொலுவில் வைக்க ஒரு வசதி – கோவிலில் வைத்து பராமரிக்கும் வேலையும் மிச்சம். கோவிலுக்கும் கொலு வைப்பதற்காக ஆகும் செலவு குறையும். இங்கே நாம் பார்க்கப் போவது கொலு பற்றி என்பதை விட அந்த பொம்மைகள் செய்வது பற்றி தான்!


தசரதன், தனது மூன்று ராணியர்களுடன்....


சத்யநாராயண பூஜா செட்....


மிருகங்களின் வாத்தியக் கோஷ்டி....


கொலு பொம்மைகள் ....

நண்பர் தமிழகத்திலிருந்து வாங்கிக் கொண்டு வந்தார் என்று சொன்னேன். தமிழகத்திலிருந்து என்று மட்டும் சொன்னால் எப்படி? நமது மயிலாடுதுறை என அழைக்கப்படும் மாயவரத்திலிருந்து தான் கொலு பொம்மைகளை வாங்கி வந்திருந்தார் நண்பர். கொலுவிற்கு முன்னர் தமிழகம் வந்திருப்பதால், அங்கே சென்று வர வேண்டும் என்ற எண்ணம். வெள்ளி அன்று திருச்சியிலிருந்து தஞ்சாவூர்-கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை சென்று அங்கே இருக்கும் மதுரை ஸ்ரீகுமரேசன் ஆர்ட் ஒர்க்ஸ் சென்று எங்கள் வீட்டிற்கும் சில பொம்மைகள் வாங்கி வரச் சென்றிருந்தேன்.


வீடும் தொழிற்சாலையும்....

Tranquebar Road, கொத்தத் தெரு என்பது முகவரி. சிலரைக் கேட்டு அங்கே சென்று சேர்ந்தேன். Tranquebar என்பது வேறொன்றுமில்லை – தரங்கம்பாடியைத் தான் ஆங்கிலேயர்கள் இப்படி மாற்றி இருக்கிறார்கள்! அச்சாலை தரங்கம்பாடி செல்லும் சாலை. வெளியிலிருந்து பார்ப்பதற்கு சிறிய வீடு போலத் தொன்றினாலும், நீண்ட வீடு... உள்ளேயே பொம்மைகள் செய்யும் இடம், கடை மற்றும் அவர்கள் தங்குமிடம் என அனைத்தும் ஓரிடத்தில். பொம்மைகளைப் பார்த்து ரசித்தபடியே திரு ஆனந்தன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.


திரு. ஆனந்தன்.....

104 வருடங்களாக, நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக கொலு பொம்மைகள், பொம்மைகள் செய்வது தான் இவர்களுக்குத் தொழில். களி மண், மற்றும் வண்டல் மண் கலந்து பதமாக்கி, அதை பொம்மைகளுக்கான அச்சில் [Mould] பதித்து, முக்கிய உருவத்தினை உருவாக்கிய பிறகு, பொம்மையில் இருக்கும் உருவத்திற்கு, கை, கால், தலை என ஒவ்வொரு பாகமாகச் சேர்க்கிறார்கள். அதன் பிறகு சூளையில் சுட வேண்டும். பிறகு வண்ணங்கள் பூச்சு என அதிகம் வேலை உண்டு. இத்தனை வேலைக்குப் பிறகு தான் நாம் பார்க்கும் வண்ணமயமான பொம்மை கிடைக்கிறது.


விதம் விதமாய் அச்சுகள்....


கிராமத்து வீடு....

இந்தப் பொம்மைகளுக்குப் பின்னே எத்தனை உழைப்பு.  அவரது தொழிற்சாலையில் – அதுவும் தொழில் தானே – எங்கு பார்த்தாலும் அச்சுகள் – அதனுள்ளே பலப்பல பொம்மை உருவங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பல வருடங்களாக காப்பாற்றி வைத்திருக்கும் அச்சுகள். தவிர புதிது புதிதாகவும் அச்சுகளை காலத்திற்குத் தகுந்த மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அச்சுகளை POP என அழைக்கப்படும் Plaster of Paris கொண்டு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால், அதை வைத்து இத்தனை பொம்மைகள் மட்டுமே செய்யலாம் என்ற கணக்கு இருக்கிறது! தொடர்ந்து ஒரே அச்சைப் பயன்படுத்தினால் பொம்மையின் வடிவம் மாற வாய்ப்புண்டு! ஆனாலும் இந்த அச்சுகளை வைத்து அடுத்த அச்சை தயாரிக்க வேண்டும் என்பதால் அனைத்து அச்சுகளும் இங்கே வைத்திருக்கிறார்கள்.


 பிள்ளையார் பொம்மைக்கான அச்சு...


கருமமே கண்ணாயினார்....
பிள்ளையார் பொம்மை செய்யும் பெரியவர்....


ஒரு அச்சு தயார் செய்து விட்டால், அதன் பிறகு அந்த அச்சை அவர்கள் பயன்படுத்திய பிறகும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தொழிற்சாலையில் ஒரு பகுதி முழுவதுமே அச்சுகளை பத்திரமாக வைத்திருக்கிறார்கள். திரு ஆனந்தன் அவர்கள் சொன்னது போல, இவையே அவர்களின் சொத்து....  அச்சில் களிமண்ணை அழுத்தி அழுத்தி பொம்மையாக செய்வதற்கு நிறையவே பொறுமையும் உழைப்பும் தேவை. அச்சு இருந்தால் நாமும் செய்துவிடலாம் என நினைக்க முடியாது. பெரியவர் ஒருவர் பிள்ளையார் பொம்மைகளைச் செய்து கொண்டிருந்தார். கரும்மே கண்ணாயினார் ஆக பொம்மையிலேயே மும்மரமாக இருந்த அவரையும் படம் பிடித்தேன் – அவருக்கு அது பற்றிய எண்ணமே இல்லாது பொம்மை செய்வதிலேயே தனது வேலையில் கவனமாக இருந்தார்.


கோபிகைகளின் கோலாட்டம்.....கல்யாண செட்.....

பொம்மைகள் தயாரிப்பதைப் பார்க்கலாமா? என்ற வேண்டுகோளை உரிமையாளர் திரு ஆனந்த் அவர்களிடம் சொன்னபோது, தாராளமாய் பார்க்கலாம் என என்னை உள்ளே அழைத்துச் சென்றார். ஒவ்வொரு பகுதியாகக் காண்பித்து விளக்கங்களும் தந்தார். பின் பகுதியில் இரண்டு மண் குவியல்கள். ஒன்று களிமண், மற்றொன்று வண்டல். இரண்டையும் சேர்த்து காலால் நன்கு மிதிக்க வேண்டும். மிதித்துக் கொண்டே இருந்தால் தான் பொம்மை செய்யும் நல்ல பதத்திற்கு வரும். அந்தப் பதம் எப்படி தெரிந்து கொள்வது என்பதையும் சொன்னார். கைகளில் கொஞ்சமாக களிமண்ணையும், வண்டல் மண்ணையும் சேர்த்து பிசைந்து கொண்டே இருந்தார். சிறிது நேரம் கழித்து, அந்த கலவையிலிருந்து கொஞ்சமாக எடுத்துப் பார்க்கச் சொன்னார். கையில் ஒட்டாமல் இருந்தால் அது தான் பொம்மை செய்யும் பதம்!


அம்பாள்... பின்புலத்தில் அஷ்டலக்ஷ்மி செட்டில் இரண்டு பொம்மைகள்


சிவனும் முருகனும்...

ஒவ்வொரு பகுதியாகச் சென்று, அவரிடம் விவரங்கள் கேட்டது மட்டுமின்றி எனது அலைபேசியில் புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  டிஜிட்டல் கேமரா கொண்டு செல்லவில்லையே என்ற எண்ணமும் வந்தது. அவருடன் உரையாடியது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்பது உண்மை. இந்த மாதிரி உழைப்பாளிகளுக்காகவே கொலு கொண்டாடலாம், தவறில்லை என்றும் தோன்றியது. பாரம்பரியமான கொலு பொம்மைகளான – தசாவதாரம், அஷ்டலக்ஷ்மி, கல்யாண செட், மாயா பஜார் செட் [கல்யாண சமையல் சாதம் பாட்டை நினைவில் கொள்ளுங்கள்!], கிராமத்து செட் என் பலப் பல Theme பொம்மைகள் தவிர, காலத்திற்கு ஏற்ற சில பொம்மைகளும் உண்டு – சோட்டா பீம், சுட்கி, டோலு, போலு, காலியா, ராஜு, ஜக்கு என ஏழு பொம்மைகள் சேர்ந்த சோட்டா பீம் செட்டும் உண்டு!


 காந்தி பொம்மைக்கான அச்சு....வேறொரு அச்சு.....

கொலு பொம்மைகள், பிள்ளையார் பொம்மைகள் தவிர, மதுரை வீரன், எம்.ஜி.ஆர்., காந்தி, பாரதியார், ராகவேந்திரர் என பலப் பொம்மைகளையும், அதன் அச்சுகளும் அங்கே காணக் கிடைத்தது. அச்சு ரூபத்தில் பார்க்கும்போது இது இந்த பொம்மை என்று நம்மால் சொல்ல முடிவதில்லை என்றாலும், திரு ஆனந்தன் அவர்கள் எந்த அச்சு எந்த பொம்மைக்கானது என்பதை சுலபமாகச் சொல்கிறார் – ஒரு அச்சு எடுத்துக் காண்பித்து இது எந்த பொம்மைக்கானது எனக் கேட்க, திருதிருவென முழித்தேன்! அது காந்தி பொம்மைக்கான அச்சு!


 ராதா கிருஷ்ணரும் கோபிகைகளும்....

மொத்த விலையில் தான் விற்பனை என்பதால், விலையும் அதிகமில்லை இங்கே. மாயவரம்/மயிலாடுதுறை பக்கம் சென்றால் உங்களுக்குத் தேவையான பொம்மைகளை நேரில் பார்த்து வாங்கலாம். அவரே பார்சல் மூலமும் அனுப்பி வைக்கிறார். WhatsApp மூலம் அவரைத் தொடர்பு கொண்டு, உங்கள் தேவைகளைச் சொன்னால் பொம்மை செட்களின் படங்களை அனுப்பித் தருவதாகவும் சொன்னார்.  கொலு பொம்மைகள் உங்களுக்குத் தேவையெனில், பிள்ளையார் சதுர்த்தி முடிந்த பிறகு அவரைத் தொடர்பு கொள்ளலாமே.....

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: திரு ஆனந்தன், Madurai Sri Kumaresan Art Works,  Navarathri Golu Dolls Maker, 26/48, Tranquebar Road, Kothan Street, Mayilaaduthurai, Tamil Nadu.  அலைபேசி எண்: +91-9944020021.


 சுட்ட பழம் வேண்டுமா.... சுடாத பழம் வேண்டுமா....


வெளிநாடுகளுக்கும் பொம்மைகள் அனுப்புகிறார்கள். சாதாரணமாக மண்ணில் செய்யும் பொம்மைகள் அதிக எடை இருக்கும். வெளிநாடுகளுக்கு இத்தனை எடையோடு அனுப்ப நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் மண்ணை சலித்து மிக Fine Quality மண்ணாக பிரித்து எடுத்து அதில் பொம்மைகள் ஸ்பெஷலாக செய்கிறார்கள். சாதாரண பொம்மைகளை விட இந்த மாதிரி செய்யும் போது எடை குறைவாகவே, Almost பாதியாக ஆகிவிடும் என்றும் சொன்னார்.

தயாராகும் பிள்ளையார்....

பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி கொலு சமயங்கள் தான் இவர்களது முக்கியமான வேலை நாட்கள். இந்தப் பண்டிகைகளுக்கு முன்னர் பொம்மைகள் தயாரிப்பு அதிகமாக இருக்கும். நாட்டின் பல பகுதிகளுக்கும் இவரது பொம்மைகள் செல்கின்றன என்பதால் வீட்டில் உள்ள அனைவருமே உழைக்க வேண்டும். வீட்டிலுள்ளவர்கள் தவிர பணியாளர்களும் உண்டு. பார்ப்பதற்கு சாதாரண மண்ணாக இருந்தாலும், இவர்களது கைவண்ணத்திலும் உழைப்பிலும் மிக அழகிய பொம்மைகளாக உருவம் கொடுத்து விடுகிறார்கள் இந்த பிரம்மாக்கள்.... படைக்கும் தொழில் செய்யும் அனைவருமே பிரம்மாக்கள் தானே.....

வேறொரு பதிவில் மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

38 comments:

 1. பாரம்பரியமான இம்மாதிரி தொழில்கள் செய்ய ஆட்கள் இல்லாமல் நலிந்து வருகின்றன ,அரசு ஊக்குவித்தால் நல்லது !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 2. கொலு அதுக்குள்ளேயே வந்துடுச்சானு ஆச்சரியத்தோடு வந்தேன். வந்தால் பொம்மைகள் விதம் விதமாக! எத்தனை பொம்மைகளை தானம் செய்தேன் என்று கணக்கே இல்லை! :) நாலு கை மாறி வரும்போது நமக்கு விலை அதிகம் ஆகி விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 3. ஶ்ரீரங்கத்திலே தான் இருக்கீங்களா? முன்னரே உங்கள் பதிவு ஒன்று ஶ்ரீரங்கத்திலிருந்து என்று பார்த்த நினைவு! இருப்பீங்களா? உங்களோட பல பதிவுகள் பாக்கி இருக்கு. ஒவ்வொன்றாய்ப் படிக்கணும். நேரம் தான் இல்லை! :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். திருவரங்கத்தில் தான்.... இன்னும் ஒரு சில தினங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 4. அருமையான தகவல்களுடன் - கலைக்கூடம் ஒன்றினை அழகாக அறிமுகம் செய்துடன் கலைஞனுக்கும் சிறப்பு செய்து விட்டீர்கள்..

  நவராத்திரி விழா நெருங்கி வரும் வேளையில் - பயனுள்ள பதிவு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. "இந்த மாதிரி உழைப்பாளிகளுக்காகவே கொலு போன்ற பண்டிகைகளைக் கொண்டாடலாம், தவறில்லை என்றுதான் எனக்கும் தோன்றும். சுவாரஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. பொம்மைகளைப் பார்க்கப்பார்க்க ஆசையாக இருக்கு!

  புள்ளையார் அச்சு இன்னும் சீனர்கள் செய்யலை போல! சிலிகான்லே செஞ்சால் கனமே இருக்காது. போகட்டும். நீங்க என்னென்ன பொம்மைகள் வாங்குனீங்க? நேரில் போய் பார்க்கிறேன், ஒருநாள் :-)

  ReplyDelete
  Replies
  1. நானும் சில பொம்மைகள் செட் வாங்கினேன்.... கொலு வைத்த பிறகு படங்கள் வரும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 7. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு கதையும், அதைச் செய்யும் பாரம்பரியமான பின்புலமும் உண்டு. இந்தப் பதிவு நன்றாக இருந்தது. முயற்சி எடுத்து இந்தத் தொழில் செய்பவரைப் பேட்டி எடுத்து வெளியிட்டதுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. நல்ல அனுபவம் எங்களுக்கும் கூடவே இருந்ததுபோல்
  விஜயன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete
 9. மிகவும் அழகழகான படங்களுடன் + அற்புதமான தகவல்களுடன், மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. பாராட்டுகள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. பண்ணுருட்டி கூட பெம்மைகளுக்கு மிகவும் விசேஷம். அருமையானபதிவு, எவ்வளவு அழகு பொம்மைகள்.வரலாறுமாதிரி நேராகப் பார்க்குமிடத்து எவ்வளவு விஷயங்கள் அறிய முடிகிறது. பொம்மைகளும் அருமையாக இருக்கிறது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா... பன்ரூட்டியும் பொம்மைக்கும் பலாப்பழத்துக்கும் மிகவும் பிரசித்தமானது. இப்போதெல்லாம் அங்கே பொம்மை செய்பவர்கள் குறைந்து விட்டார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 11. சிறப்பான பதிவு. அவருடைய உழைப்பை போற்றும் வண்ணம் பொம்மைக் கலைஞர் ஆனந்தன் அவர்களுடைய விலாசத்தையும் செல்போன் எண்ணையும் இங்கு தந்து இருபது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 12. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் கொலு வைத்தது, பெட்டியில் பாதுகாப்பாக அடுக்கிவைப்பது, அடுத்த ஆண்டு வைப்பது என்ற நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பொம்மைகள் சேர்ந்துகொண்டே இருக்கும். எங்கள் தெருவிலுள்ள கொலுக்களில் எங்கள் வீட்டு கொலுவும் மிகவும் அழகானதாகவும் பழமையானதாகவும் இருக்கும் என்பார்கள். காலச்சூழல். அனைத்தையும் இழந்து வாழ்வின் போக்கு மாறி பின்னர் தஞ்சையில் தஞ்சம். தற்போதுகூட கொலு பொம்மையை பார்த்தால் குழந்தையைப் போல பார்த்துக்கொண்டே இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கும்பகோணத்திற்கு நவராத்திரிக்கு இன்னும் சென்றுவருகிறேன். பொம்மை செய்யும் கலைஞர்களைப் பற்றிக்கூறி அதன் பெருமையை இன்னும் உயர்த்திவிட்டீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை என்றாலும் நண்பர்கள் வீட்டில் வைக்கும் கொலுவிற்கு உதவுவது, செல்வது என நிறைய ரசித்திருக்கிறேன். சென்ற வருடத்திலிருந்து தான் கொலு வைக்க ஆரம்பித்திருக்கிறோம்......

   உங்கள் அனுபவங்களையும், நினைவுகளையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 13. வரப்போகும் கொலுவிற்கு ஒரு முன்னோட்டம் போட்டுவிட்டீர்கள், வெங்கட். சுவாரஸ்யமான கட்டுரை. வருமான் குறைந்த நிலையிலும் பாரம்பரியத்தைக் காப்பாற்றி வருகிறார்களே, அவர்களை ரொம்பவும் பாராட்ட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்குரியவர்கள் தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 14. இத்தனை வண்ணங்களில் எவ்வளவு அழகழகான பொம்மைகள் ! ஒவ்வொன்றின் பின்னாலும் விலை மதிக்க முடியாத உழைப்பு தெரிகிறது. விவரங்களும் அருமை !

  திருவதிகையில்கூட பொம்மைகள் செய்வதாக சொல்வார்கள். போய் பார்த்து வாங்கிவர‌ வேண்டும் என நினைப்பதோடு சரி, செய்யுமிடத்திற்கு போன‌தில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி....

   Delete
 15. 1967-ம் ஆண்டு திருச்சியில் இருந்து சென்னை சென்றபோது குறளகத்தில் இருந்து பொம்மைகள் வாங்கிவந்தோம் நவராத்திரியின் போது கொலு வைப்போம் அது இரண்டாண்டுகள் முன்பு வரை தொடர்ந்தது. வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமேயாலும் வயதாகி விட்டதாலும் இருந்த பொம்மைகளை கொலுவைப்பவர்க்குக் கொடுத்து விட்டோம் பதிவு அருமை. கைவினைக் கலைஞரை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து பதிவை அழகு செய்ததற்கு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 16. அருமையான பகிர்வு...அனைத்து பொம்மைகளும் ரொம்ப அழகு...சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 17. நானும் சில பொம்மைகள் இங்கு வாங்கி இருக்கிறேன்.
  எங்கள் வீட்டுக்கும், உறவினர்கள், நண்பர்கள் வீட்டு கொலுவிற்கு இங்கு வாங்கி கொடுத்து இருக்கிறேன்.
  கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோவில் வாசல் கடையில் இன்னும் லட்சணமாய் பொம்மைகள் கிடைக்கும்.
  அழகான கொலு பொம்மை பகிர்வு .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 18. ஆஹா... கொலு பொம்மைகள் செய்முறை படங்களும் கொலு பொம்மைகளின் படங்களும் அழகு அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 19. இவர்களது உழைப்பிற்கு முதலில் ராயல் சல்யூட். படங்களும் தகவல்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசித்ரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....