திங்கள், 12 செப்டம்பர், 2016

சரக்கு தேர்ந்தெடுக்க இங்கி பிங்கி பாங்கி!


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 48

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

தவாங்க் நகரில் இருக்கும் மாநில அரசின் தங்குமிடம் சேர்ந்ததும் அந்த நகரில் இருக்கும் மலையாள நண்பரும் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் அவரோடு பேசிக் கொண்டிருந்தோம். பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு என்னிடம் தமிழில் பேசினார் – கோவை நகரில் சில வருடங்கள் இருந்திருக்கிறாராம். இருந்தாலும் என் ஒருவனுக்காக தமிழில் கஷ்டப்பட்டு பேச வேண்டாம் என்று நானே சொல்லி விட்டேன் – மலையாளம் புரிந்து கொள்ள முடியும் என்று சொன்ன பிறகு மலையாளத்திலேயே சம்சாரிக்கத் துவங்கினார்.

இரவு எட்டு மணி ஆகிவிட்டதே, எங்களுடன் வந்திருந்த நண்பர்களுக்கு அன்றைய தினத்தின் முடிவைக் கொண்டாட வேண்டுமே என்ற எண்ணம் வந்திருந்தது. தவாங்க் நகர நண்பரும் யாருக்கு என்ன பிராண்ட் எனக் கேட்டவுடன் என்னையும் நண்பர் பிரமோத்-ஐயும் தவிர மற்ற அனைவருக்கும் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்....  கொஞ்சம் இருங்கள் வண்டியிலிருந்து எடுத்து வருகிறேன் என்று சொல்லி அவர் புறப்பட, அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.

படம்: இணையத்திலிருந்து...

சிறிது நேரத்தில் ஒரு சிப்பந்தி ஒரு அட்டைப்பெட்டியுடன் உள்ளே வந்தார் – அவரின் பின்னே தவாங்க் நண்பரும் வந்து சேர, சிப்பந்தியிடம் தேவையானவற்றைச் சொல்லி அனுப்பினார். அட்டைப்பெட்டியை திறந்தால் – ஏழெட்டு பாட்டில்கள் – ஒவொன்றிலும் ஒவ்வொரு வித சரக்கு! இத்தனையும் ஒரு சேரப் பார்த்ததில் அனைவருக்கும் குழப்பம் – எதை அன்றைய தினம் குடிப்பது என்ற குழப்பம் தான்.  அவர்களுக்கு ஒரு யோசனை வர அதனை செயல்படுத்தினார் ஒருவர்!

படம்: இணையத்திலிருந்து...

அந்த யோசனை – இங்கி பிங்கி பாங்கி போட்டு பார்த்து விடுவது தான்! அனைத்து பாட்டில்களையும் ஒரு வட்டமாக வைத்து இங்கி பிங்கி பாங்கி பாடலைப் போலவே மலையாளத்தில் ஏதோ ஒரு பாட்டு பாடி, ஒவ்வொன்றாகத் தொட்டு கடைசி வார்த்தைக்கு எந்த பாட்டில் வருகிறதோ அந்த பாட்டில் சரக்கை அன்றைக்கு காலி செய்வது! அந்த மலையாளப் பாட்டை அப்போது கேட்டாலும் ஏனோ நினைவில் இல்லை. யாருக்காவது அது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம்!

அன்றைய சரக்கை தேர்ந்தெடுத்த பின்னர் எங்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சந்தோஷ சாரலில் மூழ்கினார்கள். நானும் நண்பர் பிரமோத்-உம் அன்றைய தினம் எப்படிக் கழிந்தது என்பதை குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டோம்.  கூடவே அன்றைய தினம் செய்த செலவுகளையும் எழுதி வைத்தோம்.  இம்மாதிரி பயணங்கள் அனைத்திலும் செலவுகளை ஒருவரே செய்வது எங்கள் வழக்கம். அவ்வப்போது அன்றைய செலவுகளை எழுதி வைத்துக் கொண்டு விட்டால் பயண முடிவில் எத்தனை செலவானது, ஒவ்வொருவரும் எவ்வளவு தர வேண்டும் என்பதை சரியாகச் செய்ய முடியும்.

இப்படி பயணம் செய்வதில் சுற்றிப் பார்க்கும் இடங்களைப் பற்றிய குழப்பங்களை விட யார் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதில் தான் குழப்பங்களும், சச்சரவுகளும் வரும். இதனைத் தவிர்க்க தனித்தனியாக யாரும் செலவு செய்வதில்லை. பொது செலவுகள் – உணவு, போக்குவரத்து, நுழைவுக் கட்டணங்கள் என அனைத்து பொது செலவுகளும் ஒருவரே செய்வோம். சரக்கு வாங்குவது, அவரவர் வீட்டிற்கு வாங்கிச் செல்ல செய்யும் ஷாப்பிங் ஆகியவை அவரவர் செலவு!

ஒவ்வொரு நாள் முடிவில் மற்ற நண்பர்கள் தங்களது வேலைகளைப் பார்க்க நானும் நண்பர் பிரமோத்-உம் இந்த வேலைகளைக் கவனிப்போம். அன்றைய செலவுகளை எழுதி முடித்த பின்னர் கையிருப்பைப் பார்த்து, அடுத்த நாள் என்ன செலவு, அதற்கு ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்து வாங்கி வைத்துக் கொள்வோம். நான் செல்லும் எல்லாப் பயணங்களிலும் இப்படிச் செய்வது எனது வழக்கம். பிரச்சனைகள் இல்லாமல் பயணம் செய்வத் தானே நல்லது!

அந்த நாள் முழுவதும் பயணத்திலும் ஒரு சில இடங்கள் பார்ப்பதிலும் கழிந்தது. சிங்ஷூவிலிருந்து தவாங்க் நகருக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் – கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தொலைவு கரடு முரடான பாதைகளில் பயணித்திருக்கிறோம் – நடுவில் போம்டிலா, சேலா பாஸ், ஜகத்சிங் கட், ஜங்க் என்ற இடங்களில் நின்று பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்திருந்தாலும் கடுமையான உடல் வலியைத் தரக்கூடிய பயணம். கண்டிப்பாக ஓய்வு தேவை. அடுத்த நாளும் பயணம் உண்டு – காலையில் புறப்பட்டால் மதியத்திற்குள் ஒரு அருணாச்சலப் பிரதேசத்தின் சில பழங்குடியினர் கொண்டாடும் திருவிழா பார்க்கச் செல்ல திட்டம்.  என்ன இடம், அங்கே செல்லும் போது கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை வரும் பகுதிகளில் சொல்கிறேன்.

நாங்கள் எங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள, நண்பர்கள் அவர்கள் வேலைகளை முடித்து உறங்கச் சென்றார்கள்.  நாங்களும் எங்களுக்கான அறைக்குச் செல்ல தவாங்க் நண்பர் அவரது இல்லத்திற்குச் சென்றார். நாங்களும் எங்கள் அறைக்குச் சென்று படுத்து சில நொடிகளில் நித்ரா தேவியின் பிடியில் வீழ்ந்தோம். அன்றைய பயணம் எங்களுக்கு அந்தத் தூக்கத்தினை விரைவில் வரச் செய்திருந்தது. நானும் கொஞ்சம் தூங்கி விட்டு வருகிறேன் – நீங்களும் பாராம்பரிய திருவிழாவிற்குச் செல்ல தயாராகக் காத்திருங்கள்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

34 கருத்துகள்:

 1. எப்போதுமே செலவுக்கணக்கு எழுதுவது எப்போதுமே நல்ல வழக்கம். எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்த பழக்கம். அவர் கடைசி (எழுத முடிந்த) வரை எழுதினார். அந்த நல்ல பழக்கத்தை நானும் 2001 வரை வைத்திருந்தேன்..அப்புறம் நின்று போச்சு.

  நண்பர் ப்ரமோத்தும் செலவுக்கணக்குகள் தவிர பயணக்குறிப்புகள் எழுதிக் கொள்கிறார் என்றால், அவரும் ப்ளாக் எழுதறாரோ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் தினம் எழுதுவது விட்டுப் போயாச்சு... பயணங்களில் கண்டிப்பாக எழுதி விடுவேன் - அதுவும் மற்றவர்களோடு செல்லும்போது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. இவ்வாறாகச் செல்லும்போது நானும் தாங்கள்கூறியபடியேதான் செலவு செய்வேன். பொதுச்செலவு, தனிச்செலவு என்ற நிலையில் அமையும்போது யாருக்கும் எந்த குறையும் வராது. தவிரவும் அதிகமான இடங்களைக் காணவும் முடியும். அடுத்து,விழாவிற்காகக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. நல்ல பதிவு.
  நானும் ஒருமுறை சுற்றுலா சென்றிருந்தபோது இப்படித்தான். உடன் வந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மதுவிலே மூழ்கியிருந்தார்கள். பயண ஏற்பாட்டாளரும் ஒரு மதுப்பிரியர்தான். இதனால் நாங்கள் பல தொல்லைகளை அனுபவித்தோம். 18 பேர் கொண்ட அந்தக் குழுவில் மது அருந்தாதவர்கள் நான்கு பேர் மட்டும்தான். மது அருந்துபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பல சமயங்களில் சுற்றிப் பார்க்க வெளியே கிளம்புவதைவிட அறைக்குள் மது அருந்தி மயக்கத்தில் இருப்பதற்கே முன்னுரிமை கொடுத்தார்கள். அதனால் அவர்கள் அறையில் இருக்க, நாங்கள் நான்கு பேர் மட்டுமே வெளியே கிளம்புவோம். மதுவால் சங்கடப்பட்ட சுற்றுலா என்றே அதை சொல்லலாம்.

  மது அருந்துவது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனாலும், மற்றவர்களை பாதிக்காத வகையில் அதை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். பெரும்பாலான மதுப்பிரியர்கள் அப்படி இருப்பதில்லை என்பதே சுடும் உண்மை.

  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். பயணம் செல்வதே மது அருந்த மட்டுமே என்ற கொள்கையுடன் இருப்பவர்கள் நிறைய பேர் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   நீக்கு
 5. நானும் இப்படிதான் பயணம் செல்லும் போது இரு குடும்பங்களாக சென்றால் யாரவது ஒருத்தர் மட்டும் செலவு செய்து செலவை பங்கிட்டு கொள்வோம் இப்படி செய்யும் போது தனிப்பட்ட செலவிற்கு என்று ஒரு கிரெட்டி கார்டையும் பொது செலவிற்கு என்று ஒரு கார்டையும் பயன்படுத்துவேன் அதனால் அன்று அன்று கணக்கு எழுத வேண்டிய அவசியம் இருக்காது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவில் பல இடங்களில் க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இல்லை. குறிப்பாக சிறு ஊர்களில்..... பணம் மூலம் மட்டுமே எதையும் வாங்கமுடியும் என்பதால் இங்கே செலவுக் கணக்கு எழுதி வைக்க வேண்டியிருக்கிறது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 6. இனிய பயணத்துக்கு தாங்கள் சொல்லும் வரவு செலவு முறையே சரியான தீர்வாகும் !

  உறவினர்கள் கூடி செல்லும் பயணங்களில் பணப் பிரச்சினையும் இல்லை ,மதுப் பிரச்சினையும் இல்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 7. செலவு கணக்கை அவ்வப்போது எழுதி வைத்து பின்னர் தொடர்வதில்லை...
  இங்கி பிங்கி பாங்கி போட்டு தண்ணி அடிக்கிறாங்களா...? அது சரி....
  நல்ல தொடர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செலவு கணக்கை சில சமயங்களில் எழுதி வைப்பதுண்டு. சில வருடங்களாக விட்டுவிட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்

   நீக்கு
 8. இதெல்லாம் உண்டா!?..

  இதுவும் ஒரு உற்சாகம் அல்லவா!..

  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு இல்லை என்றாலும், மற்றவர்கள் செய்வதை நாம் தடுக்கவா முடியும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 9. பிரச்சனை இல்லாத பயணம்தான் அருமை! எங்க பயணத்திலும் சாலைகளில் கட்டும் சுங்க வரியை நம்ம சீனிவாசனே கட்டிருவார். கடைசியில் மொத்த ரசீதையும் சேர்த்துக் கணக்குப்போட்டு வண்டி வாடகையுடன் பில் வந்துரும் ட்ராவல் ஓனரிடமிருந்து. மற்ற செலவுகள் அனைத்தையும் ஒருவரே செய்துக்கிட்டு வருவார் ஷாப்பிங் உட்பட:-)

  அங்கங்கே பெட்ரோல் போட கொடுக்கும் ரெண்டு மூணு ஆயிரங்களைக் கணக்கில் எழுதி வைப்பது உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செலவுகள் அனைத்தையும் ஒருவரே செய்துக்கிட்டு வருவார்! :) ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 10. சேர்ந்து செல்லும் போது பயணசெலவு எழுதிவைத்துக் கொள்வது நல்லது.
  பயண அனுபவம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 12. எந்த பாட்டில் வருகிறதோ அந்த பாட்டில் சரக்கை அன்றைக்கு காலி செய்வது! மீதி பாட்டில்கள்...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் இரண்டு நாட்கள் அதே ஊரில் தானே... புறப்படுவதற்குள் காலி செய்து விடுவார்கள்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 13. நீங்கள் பயண அனுபவத்துக்காக நல்லா அட்ஜஸ்ட் செய்துக்கறீங்க. இல்லாட்டா வட கிழக்குப் பயணங்களுக்கு வாய்ப்பேது.. காலைல சரியான நேரத்துக்கு உற்சாகபானப் பிரியர்கள் ரெடியாயிடறாங்களா? தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் ரெடியாகிவிடுவார்கள்.... Adjust செய்து கொள்ள வேண்டியிருக்கிறது - வாழ்க்கையில் பல சமயங்களில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. பயண்ங்கள் தொடர்ந்து
  மிகச் சிறப்பாகத் தொடர இந்த முறைதான்
  மிகச் சிறந்தது
  நாங்களும் இந்த முறையைத் தான்
  கையாளுவோம்
  பகிர்ந்த விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 15. செலவை எழுதிவைத்துக்கொள்வது நல்ல முறை நானும் ஆன்மீகப்பயணத்தில் இதைக்கைகொள்பவன். தொடர்கின்றேன் பகிர்வை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 16. வெங்கட் நல்ல அனுபவங்கள்....தொடர்கின்றோம்.

  கீதா: ஆம் வெங்கட் ஜி நாங்கள் குழுவாகப் பயணம் மேற்கொள்ளும் போது இப்படித்தான் ஒருவரே செலவு மேற்கொண்டுவிட்டு பின்னர் அவரவட் தொகையைக் கொடுப்பது. பொதுச்செலவுகள் எல்லாம் அப்படித்தான். பெர்சனல் அவரவரவர் கணக்கு. நான் எனது தனிக் கணக்கையும் குறித்துக் கொள்வது வழக்கம். + பயணக் குறிப்புகள். பல வருடங்கள் முன்பு குறித்தது இல்லை.

  தொடர்கின்றோம் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 17. செலவுகளை ஒருவரே பார்த்து செல்வது நல்ல யோசனைதான்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....