செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஸ்வச்ச் பாரத் செஸ்

முகப்புத்தகத்தில் நான் – 13

ஸ்வச்ச் பாரத் - எங்கும் குப்பை போடுவேன்….
21 ஃபிப்ரவரி 2017இரண்டு நாட்களுக்கு முன்னர் எங்கள் பகுதியில் ஒரு நிகழ்வு. இரண்டு நாட்கள் – ஐந்து வேளை உணவு – எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் கழிவுகள் – அதையும் அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பைகளில் போடாமல் ஆங்காங்கே போட்டு வைத்தார்கள் மக்கள்! கொஞ்சம் ஏமாந்தால், அசையாமல் நின்று கொண்டிருந்தால் உங்கள் மேலும் குப்பைகளைப் போட்டு விடும் அபாயம் உண்டு. நிகழ்வு நடக்கும் இடத்திலேயே சிலர் செய்த விஷயம் பார்த்த போது – “வாழைப்பழ சோம்பேறி” என்பதற்கு புதியதோர் அர்த்தம் கிடைத்தது!

தூண் பக்கத்தில் அமர்ந்து நிகழ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தவர் கிடைத்த வாழைப்பழத்தினைச் சாப்பிட்டு, அதன் தோலைக் கொண்டு போய் குப்பைக் கூடையில் போடாமல், தூண் பக்கத்திலேயே போட்டு வைத்திருந்தார்! சரி, எழுந்து செல்லும்போதாவது அதைக் கொண்டு போய் போட்டிருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. எங்கே போட்டாரோ, அங்கேயே இருந்தது – நாங்கள் சுத்தம் செய்யும் வரை…. என்ன மனிதர்களோ….

இந்தியா கேட் பகுதியில் பார்த்த/கேட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது – இதை ராஜா காது பகுதியில் எழுத நினைத்தாலும், இங்கேயே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கேயே!

“இரண்டு இளம் ஜோடிகள்… புல்வெளியில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் பிளாஸ்டிக் பெப்சி பாட்டில்கள், சாப்பிட்ட குர்குரே பாக்கெட்டுகள் என நிறைய குப்பை. ஜோடிகளிலிருந்த ஒரு பெண், ஆணிடம் “குப்பையை எல்லாம் எடுத்து குப்பைக் கூடையில் போடு!” அதற்கு அந்த ஆண்சிங்கம் சொன்னது – “நான் ஸ்வச்ச் பாரத் செஸ் கட்டுகிறேன். அதனால் எங்கு வேண்டுமானாலும் குப்பை போடுவேன்!”  - இவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை குடுக்கிறார் என்பதால், வீட்டு ஹாலில் குப்பையைப் போட்டுக் கொள்வாரா? குப்பைகளை சுத்தம் செய்யும் மனிதரும் தான் செஸ் கட்டுகிறார் – அதனால் அவரும் நான் செஸ் கட்டுகிறேன், குப்பைகளை எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டால் நாடு நாறிவிடாதா….. 

இன்னுமொரு மனிதர் பூட்டியிருக்கும் சாலையோரக் கடை அருகே உள்ள நடைபாதையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்.  சில மணித்துளிகளில் அந்தக் கடை திறக்கும்போது கடைக்காரருக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் சில அடி தூரத்திலேயே இலவசக் கழிப்பிடம், அதுவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இலவசக் கழிப்பிடம் இருக்க, இப்படி செய்வது கொஞ்சம் கூட நல்லதல்லவே.  நடைபாதை வழியே வந்தவர் அவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறாய்?” எனக் கேட்க, “உனக்கென்ன வந்தது, உன் மேலா சிறுநீர் கழித்தேன்!” என எகத்தாளமாகக் கேட்கிறார்.

சுத்தமாக வைத்திருப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நாமும் அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வரை குப்பைக் கூடமாகத்தான் இருக்கப்போகிறது நம் தேசம்…..

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

திங்கள், 27 பிப்ரவரி, 2017

கொல்கத்தா – பிரம்மாண்ட ஆலமரம்…..


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 100

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

The Grate Banyan Tree....


பாலம்.....

இந்தியா அருங்காட்சியகம் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் Acharya Jagdish Chandra Bose Botanic Garden. கொல்கத்தா என்று சொன்னாலும், இந்த பூங்கா இருக்கும் இடம் ஹௌரா பகுதியில் தான் இருக்கிறது.  கொல்கத்தா பகுதியிலிருந்து புதிய தொங்கு பாலம் வழியாக பல சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே நாங்கள் பூங்காவிற்குச் சென்ற போது மதிய நேரம்.  வழியில் எங்காவது சாப்பிடலாம் என ஓட்டுனரிடம் சொன்னபோது வண்டியை சாலையோரத்தில் நிறுத்தி ஏதோ ஒரு சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சொன்னார். பார்க்கும்போதே எங்களுக்கு அந்த இடமும் சூழலும் பிடிக்காமல் போக, எதிர் புறத்தில் இருந்த ஒரு கடையில் கொஞ்சம் நொறுக்குத் தீனி சாப்பிட்டு லஸ்ஸி குடித்து மதிய உணவை முடித்துக் கொண்டோம். 


வழியில் பழுதாகி நின்ற ட்ராம்....அங்கிருந்து புறப்பட்டு பூங்காவிற்குச் சென்றால் வெளியே வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். பூங்கா அமைந்திருப்பது மிகப் பெரிய பரப்பளவில்! கொஞ்சம் நஞ்சமல்ல அதன் பரப்பளவு – 109 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பூங்காவும் ஆகும். பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட 12000 வகைகளுக்கு மேலான மரங்கள், செடிகள் என இங்கே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென இருக்கும் இந்த இடத்திற்குள்ளே பல நீர்நிலைகளும் உண்டு. மரங்கள், நீர்நிலைகள் ஆகியவை இருக்கும்போது பறவைகளுக்குப் பஞ்சமா என்ன…. வருடா வருடம் இங்கே வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகம் தான்.இத்தனை மரங்களும் நீர்நிலைகளும் இருந்தாலும், இந்தப் பூங்காவிற்கு வரும் பலரும் பார்க்க நினைப்பது இங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஆலமரத்தினை தான்.  The Great Banyan என அழைக்கப்படும் இந்த ஆலமரத்தின் வயது 250 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.  வயது தவிர, உலகிலேயே பரப்பளவில் மிக அதிக இடத்தினைக் கொண்டது இந்த ஆல மரம் என்றும் சொல்கிறார்கள்.  ஆலமரத்தின் விழுதுகள் பல இடங்களிலும் வேறூன்றி இருந்தாலும் முதல் முதலாக இருந்த தண்டுப் பகுதி இப்போது இல்லை – 1925-ஆம் ஆண்டே அதன் தண்டுப் பகுதி அகற்றப்பட்டு விட்டது.இரண்டு மிகப்பெரிய புயல்களில் சிக்கிய இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பூஞ்சை பிடிக்க அதனால் தான் அதை 1925-ஆம் ஆண்டு அகற்றி இருக்கிறார்கள்.  இப்போது, மண்ணில் புதைந்து மரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் விழுதுகளின் எண்ணிக்கை மட்டுமே 3618! மொத்த மரத்தின் சுற்றளவு மட்டுமே 450 மீட்டர்! அதாவது கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அளவு பரந்து விரிந்திருக்கிறது இந்த ஆலமரம்! Great Banyan என்ற பெயர் பொருத்தமானது தானே!இந்த மரத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட 15665 சதுர மீட்டர்! இந்த கணக்கெல்லாம் எடுத்தது 31 மே 2013 – அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னர்! இந்த நான்கு வருடங்களில் மேலே சொன்ன அளவுகள் அனைத்துமே அதிகமாகி இருக்க நிறையவே வாய்ப்புண்டு.  எவ்வளவு நேரம் நின்று அங்கே அந்த ஆலமரத்தினைப் பார்த்துப் பிரமித்து நின்றிருப்போம் என்று சொல்ல முடியவில்லை. அவ்விடத்தினை விட்டு அகலவே மனதில்லை.  இவ்வளவு பெரிய மரத்தில் எத்தனை பறவைகள் வந்து போகும், ஒவ்வொரு பறவைக்கும் இருக்கும் கதை, எந்தெந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். கின்னஸ் புத்தகத்திலும் இந்த ஆலமரத்திற்கு ஒரு இடம் உண்டு என்பதையும் அங்கே தகவல் பலகையில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். பூங்காவின் மற்ற பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகள், பல்வேறு மரங்கள் என அனைத்தையும் சுற்றி வந்து பார்க்கிறார்களோ இல்லையோ, இங்கே வரும் அனைவருமே பார்க்க விரும்பும் ஒன்று இந்த Great Banyan Tree தான்.  நாங்கள் சென்றிருந்தபோதும் நிறைய சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடிந்தது.  பூங்காவின் ஊழியர்கள் இந்த மரத்தினை ரொம்பவும் சிரத்தை எடுத்து பாதுகாக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது. 
முழு பூங்காவினையும் சுற்றி வந்ததில் எங்காவது அமர்ந்து கொண்டால் போதும் என்று இருந்தது எங்களுக்கு! ஆனாலும், அமர்வதற்கு சரியான இடம் இல்லை. நீர்நிலைகளுக்கு அருகில் புல் தரைகளும், சில இருக்கைகளும் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் காதல் ஜோடிகள் அமர்ந்து கொண்டு மூக்கை மூக்கை உரசிக் கொண்டிருக்க, நாங்கள் – நாங்கள் என்பது இங்கே ஐந்து பேர் – அனைவரும் ஆண்கள் – அங்கே சென்று அமர்ந்தால் சரியாக இருக்காது என்பதால் எங்கும் அமரவில்லை.  ஆலமரத்தின் அருகே அமர்ந்து கொள்ளலாம் என்றால், அங்கே ஏதோ பராமரிப்பு வேலை என எல்லாவற்றையும் தோண்டிப் போட்டிருந்தார்கள்! சரி இவ்வளவு நடந்தாயிற்று, இன்னும் கொஞ்சம் நடந்து வாகனம் நிறுத்துமிடத்திற்கு வந்து வாகனத்திற்குள் அமர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்து விட்டோம். நாங்கள் பூங்காவிலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் சென்ற இடம், அது என்ன இடம்…. அடுத்த பகுதியில் சொல்கிறேன்……

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: இந்தத் தொடரின் 100-வது பகுதி! இன்னும் சில பதிவுகளில் இத்தொடர் முடியும்!ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

குட்டி சுட்டீஸ்…..

நாளைய பாரதம் – 10

பல்வேறு இடங்களுக்குச் செல்லும் போது பார்க்கும் இளஞ்சிறார்களை புகைப்படம் எடுப்பது வழக்கம். அப்படி எடுத்த புகைப்படங்களை நாளைய பாரதம் என்ற தலைப்பில் எனது பக்கத்தில் வெளியிடுவதுண்டு. 

சமீபத்தில் அப்படி நான் எடுத்த இளஞ்சிட்டுகளின் புகைப்படங்கள் இந்த ஞாயிறில் நாளைய பாரதம் புகைப்படப் பதிவாக……

இதோ புகைப்படங்கள்….


பிள்ளையார் என் ஃப்ரெண்ட்….
திருவரங்கம் – விநாயகச் சதுர்த்தி சமயத்தில் பிள்ளையார் பொம்மை அருகே அமர்ந்திருந்த இவரை படம் பிடித்தேன்!


ஒட்டகம் மிரண்டா என்ன பண்ணறது என்று மிரண்டு நிற்கும் சிறுவன்!
குஜராத் – அம்மா-அப்பா, இவரை ஒட்டகத்தின் அருகே நிற்க வைத்து படம் எடுக்க, நானும் எடுத்தேன்!


அப்பாவின் தோள்களில் பயமின்றி அமர்ந்திருக்கும் சிட்டு….
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம். இப்போது மாதிரியே அப்பா தரும் தைரியம் நிலைக்க வேண்டும்.


எங்க ரெண்டு பேருக்கும் சண்டையில்லை… 
ஏம்மா, நீயும் எடுக்கற, அந்த அங்கிளும் ஃபோட்டோ எடுக்கிறாரே… நான் எந்தப் பக்கம் பார்க்கறது!
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


என்ன வேணும் கண்ணு….  இங்கே இருக்கற எல்லாம் வேணும்!
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


நீ பயப்படாத, நான் உன்னை பத்திரமா கூட்டிட்டு போறேன்….
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


இந்த சிரிப்பு போதுமா…  இன்னும் கொஞ்சம் புன்னகை புரியவா! கிராமிய இசைக்கு நடனமாடிய குழந்தை…..
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


நான் நல்லா ஆடுவேன்… பொய்க்கால் குதிரை நடனமாடும் இளஞ்சிட்டு… ஓய்வாக அமர்ந்திருந்தபோது….
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.


இதுவும் ஒரு வகை யோகா!
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….


இந்தத் தொப்பில நான் எப்படி இருக்கேன்!
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….


சின்னக்குட்டிம்மா….  கண்களில் ஒரு தீர்க்கம்….
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….என் ஜிகுஜிகு ட்ரெஸ் நல்லா இருக்கா?
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….அந்த அங்கிள் என்னை புகைப்படம் எடுக்கறார்பா…..
எங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….திருவரங்கத்தில் ஒரு குட்டிச் செல்லம்…..

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நாளைய பாரதம் புகைப்படங்களை ரசித்தீர்களா?  உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

சனி, 25 பிப்ரவரி, 2017

கொல்கத்தா – இந்தியா அருங்காட்சியகம் – ஒரு பார்வை


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 99

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.விக்டோரியா மெமோரியல் பார்த்த பிறகு நாங்கள் சென்றது கொல்கத்தா நகரில் உள்ள பழமையான அருங்காட்சியகம் – இந்தியா அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இது, மிகவும் பழமையானது – இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் – 1814-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 400 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என்று பார்க்கும்போது அதற்கு வித்திட்ட முதல் அருங்காட்சியகம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் என்பது புரியும்.  1814 – அதாவது இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது!வாசலில் புல்லாங்குழல் வியாபாரி ஒருவர் தனது மனதில் இருக்கும் இசையை குழலின் வழி வெளியேற்றி, கேட்பவர்களை தனது இசையால் மயக்கிக் கொண்டிருந்தார்.  Asiatic Society என்ற அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பல தனிமனிதர்கள் வசம் இருந்த புராதானப் பொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. பல வருடங்கள் கழித்து, அரசாங்கமே அருங்காட்சியகத்தினை எடுத்து நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டு, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1 ஏப்ரல் 1878 ஆம் ஆண்டு, சௌரிங்கி பகுதியில் தற்போது இருக்கும் கட்டிடத்தில் இரண்டு விதமான காட்சியகங்களுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் வந்தது இந்தியா அருங்காட்சியகம்.அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்க்க தேவையான கட்டணத்தினைக் கொடுத்து, [கேமராவிற்கு தனிக் கட்டணம் உண்டு!] உள்ளே நுழைந்தோம். பல பிரிவுகளாகத் தடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான விஷயங்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். புராதனச் சிலைகள், நாணயங்கள், பொருட்கள் என ஒரு அறையில் இருந்தால், வேறு அறையில் பல்வேறு மிருகங்களின் எலும்புக்கூடுகள், அவற்றின் தலைப்பகுதி, பற்கள், நகங்கள் என தனித்தனியே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அழிந்து போன டைனசோர் எலும்புக்கூடு ஒன்றும் இங்கே உண்டு. 
அத்தனை பெரிய மிருகங்களின் முழு உருவ எலும்புக்கூடுகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.  இத்தனை விஷயங்களை ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். அதுவும் அழிவிலிருந்து பாதுகாப்பது தவிர, வரும் பார்வையாளர்களிடமிருந்தும் காப்பாற்றி வைக்க, அங்கிருக்கும் பணியாளர்கள் போராட வேண்டியிருக்கிறது.  தொடாதே என எழுதி வைத்தால், நிச்சயம் தொட்டுப் பார்க்க வேண்டும் என நினைக்கும் மக்கள் நிறையவே உண்டு இங்கே.  செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என எலும்புக்கூடை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார் ஒரு இளைஞர்!பல்வேறு பகுதிகள், பல தலைப்புகளில் சேகரித்து வைக்கப்பட்ட பொருட்கள் என முழு அருங்காட்சியகமும் பார்க்கக் குறைந்தது மூன்று மணி நேரமாவது உங்களுக்குத் தேவை. நின்று நிதானித்துப் பார்க்க வேண்டுமெனில் அரை நாளாவது அவசியமாக இருக்கும்.  எத்தனை எத்தனை சிலைகள், அதில் பல சேதப்படுத்தப்பட்ட நிலையில்.  பார்க்கும்போது நமக்கே கஷ்டமாக இருக்க, அந்தச் சிலைகளை செய்த சிற்பி இன்று பார்த்தால் நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடிப்பார்.  தலைகள் துண்டிக்கப்பட்டு, கை-கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சிலைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி உண்டாவதை தடுக்க முடியவில்லை.

எகிப்து நாட்டின் புகழ்பெற்ற “மம்மி” ஒன்றும் இங்கே இருக்கிறது. இந்தியா தவிர வேறு சில நாடுகளின் பொருட்களும் இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பு. அனைத்து அறைகளிலும் இப்படியான விஷயங்கள் நிறையவே உண்டு என்பதால் நின்று நிதானித்து ஒவ்வொன்றாக பார்க்க வேண்டியிருக்கும்.  உங்களுடைய விருப்பம் எந்த அறையில் இருக்கிறது என்பதை நுழையும்போதே கேட்டு வைத்துக் கொண்டால் அந்த இடத்திற்கு மட்டும் சென்று நிதானமாகப் பார்க்க முடியும். இல்லை என்றால் எல்லா அறைகளுக்கும் சென்று வரலாம்.
கொல்கத்தா சென்றால் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இந்தியா அருங்காட்சியகத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  அருங்காட்சியகத்தின் பின்னர் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் தேநீர் அருந்தி மீண்டும் சில அறைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் வெளியே வந்தோம்.  அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
  
தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

குறிப்பு:  இங்கே சென்றபோது ஒரே ஒரு காமிராவுக்கு மட்டும் டிக்கெட் வாங்கலாம் எனச் சொல்லி, எனது காமிராவில் புகைப்படம் எடுக்காமல் விட்டோம்.  அதனால் நான் இங்கே புகைப்படம் எடுக்கவில்லை என்பதில் வருத்தமுண்டு! நண்பர் எடுத்த புகைப்படங்களில் பல ஒழுங்காக இல்லை! 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஃப்ரூட் சாலட் 194 – பூந்தளிர் - வாவ் புகைப்படம் - பொதுத் தேர்வு

இந்த வார பாடல்:

1979-ஆம் வருடம் வெளி வந்த பூந்தளிர் எனும் படத்திலிருந்து ஒரு பாடல் இந்த வார ரசித்த பாடலாக….


இந்த வார குறுஞ்செய்தி:

”அவர்கள் மோசமானவர்கள் இல்லை, சற்று வித்தியாசமானவர்கள்” என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் பல சொந்தங்கள் நம்மை விட்டுப் பிரிவதிலிருந்து தடுக்க முடியும்…..

இந்த வார முகப்புத்தக இற்றை:

வாவ் புகைப்படம்!


இந்த வார காணொளி:

பொதுத் தேர்வு வரப் போகிறது. இச்சமயத்தில் குழந்தைகள் படும் கஷ்டம், அவர்கள் மனதுக்குள் ஓடுகின்ற எண்ண ஓட்டம் என்ன என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. நிறைய வீடுகளில் அடுத்த குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து தங்களது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தைத் தருவதுண்டு.  அவர்கள் எண்ணம் என்னவாக இருக்கும்…. இந்த காணொளியைப் பாருங்களேன்…. உங்களுக்கும் பயன்படலாம்!


இந்த வார படமும் கவிதையும்:

நான் எடுத்த புகைப்படத்திற்கான கவிதை ஒன்று – எழுதியது யாதவன் நம்பி புதுவை வேலு…..

படம்: 


படத்திற்கான கவிதை:

இலைகள் இணைந்து நடத்தும்
இயற்கையின்....
இன்பக் கலைக்கூடம் கண்டு!-
துன்பம் பாசிகள் எல்லாம்
துவண்டு!
தூர தேசம் செல்லத் துடிக்கிறதோ?

புதுவை வேலு


இந்த வார புகைப்படம்:

சூரஜ்குண்ட் மேளா-2017 சென்றபோது நிறைய சிறுவர்/சிறுமியரின் புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.  அவற்றில் இந்த புகைப்படம் பிடித்தது. இரண்டு பேருக்கும் அப்படி ஒரு ஒற்றுமை! அப்பா-அம்மா மொபைலில் எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த போது நான் எடுத்த க்ளிக்!

நான் எடுத்த புகைப்படங்களுக்கு கவிதை எழுத அழைப்பு விடுத்தது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

இதோ இந்த வார புகைப்படம்!


படித்ததில் பிடித்தது:

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும்

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்
நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.

அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.....

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்...

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.