திங்கள், 24 ஆகஸ்ட், 2015

[CH]சகடா – ஆல் இன் ஆல் அழகுராஜா

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 4

முந்தைய பகுதிகள் – 1 2 3

ராஜ பவனி!

குஜராத் மாநிலத்தில் நான் பார்த்த ஒரு மூன்று சக்கர வாகனத்தினைப் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். சென்ற பதிவில் சொன்னது போல குஜராத் மாநிலத்தில் சாலைகள் மிகவும் அருமையாக அமைத்திருப்பது மட்டுமல்லாது சீராக பராமரிப்பதும் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் தவிர மாநில நெடுஞ்சாலைகள் என்ற பெயரில் பல மாவட்ட தலைநகரங்களும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.  இதனால் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்று வருகிறது.  இந்த சாலைகளில் பயணம் செய்யும் போது பயணம் விரைவில் முடிய வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதில்லை – அப்படியே பயணித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது!

தனிக்காட்டு ராஜா!

இந்த சாலைகளில், குஜராத் மாநிலத் தலைநகரான காந்திநகரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இவை அனைத்தும் இப்படி பிரதான சாலைகளில் மட்டுமே இயங்குகின்றன.  பிரதான சாலையிலிருந்து விலகி, கிராமங்களுக்குள் செல்லும் பேருந்துகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள். அதனால் இங்கே நிறைய மூன்று சக்கர வண்டிகள், பிரதான சாலைகளிலிருந்து கிராமங்களுக்கு பயணிக்கிறது. அப்படி இருக்கும் இந்த மூன்று சக்கர வண்டிகளுக்கு குஜராத்தி மொழியில் “[ch][g]கடா என்று பெயர் சொல்கிறார்கள்.

எதிரும் புதிரும்!

இப்படி கிராமங்களுக்குள் பயணம் செல்ல நமது ஊரில் இருக்கும் வசதிகள் போல பேருந்து வசதிகள் இல்லை என்றாலும், இப்படி ஒரு வசதியாவது இருக்கிறதே என்று நினைத்தேன்.  வேறு சில வட இந்திய நகரங்களில் இந்த வசதி கூட இல்லை. உத்திரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஜீப்-ல் 25 முதல் 30 பேர் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன்! ஒரு முறை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணமும் செய்திருக்கிறேன் – புளிமூட்டை கணக்காக மனிதர்களை அடைத்து வாகனங்களைச் செலுத்துவார்கள்! அதுவும் கண்மூடித்தனமான வேகத்தில்!


 போவாமா? ஊர்கோலம்?

மனிதர்கள் முதல், காய்கறிகள், உணவுப் பொருட்கள், ஆடு-மாடு-மீன், வீட்டுப் பொருட்கள் என இவற்றில் கொண்டு செல்லாத விஷயமே இல்லை என்று சொல்லலாம். பிரதான சாலையில் பயணிக்கும்போது பார்த்த பல வண்டிகளில் இப்படி எல்லா விதமான போக்குவரத்திற்கும் இந்த வண்டி பயன்படுத்துவதைப் பார்க்க முடிந்தது.  மனிதர்களும் நிறையவே பயணிக்கிறார்கள். உள்ளே அமர இடம் இல்லாதவர்கள் பின்னால் நின்றபடி பயணிக்கிறார்கள். ஓர் இடத்தில் பேருந்து ஒன்று Repair ஆகி நிற்க, அதை Tow செய்யவும் பயன்படுத்தியது ஒரு “[ch][g]கடாவை!  
 எங்கும் செல்வோம்! எப்படியும் செல்வோம்!

இந்த “[ch][g]கடா வண்டியைப் பார்க்கும்போதெல்லாம் இதில் பயணிக்கும் ஆசை வந்தது. ஓட்டுனர் இருக்கை அதிக உயரத்தில் இருக்க, பின் பக்கம் கொஞ்சம் சாய்ந்த மாதிரி இருக்கிறது. ஓட்டுனர்கள் ஏதோ ராஜா மாதிரி உட்கார்ந்திருக்கிறார்.  இந்த வாகனங்களை சிறப்பாக அலங்கரித்தும் வைத்திருக்கிறார்கள். பழைய என்ஃபீல்ட் புல்லட்டின் இஞ்சின் மட்டும் எடுத்து அதனை வைத்து இந்த வண்டிகளைச் செய்கிறார்கள். இதை இயக்க டீசல் பயன்படுத்துகிறார்கள்.  படபடவென்று ஒரு ஓசையுடன் இவை பயணிப்பதைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது.

சற்றே ஓய்வெடுக்கலாம்!

நாங்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த நாள் பக்ரீத் பண்டிகைக்கு முதல் நாள். வழியில் நாங்கள் பார்த்த ஒரு கிராமத்தில் ஆட்டுச் சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆடுகள் வாங்க அப்படி ஒரு கூட்டம்.  சுற்றி இருக்கும் பல கிராமங்களிலிருந்து ஆடுகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் அங்கே குழுமியிருக்க, வியாபாரம் கண ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆடுகளை வாங்கியவர்கள் அவற்றை எப்படி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவார்கள் எனப் பார்த்தால் இருக்கவே இருக்கிறார் ஆல் இன் ஆல் அழகுராஜா! அவற்றின் பின் புறத்தில் இரண்டு மூன்று ஆடுகள் நின்றபடியே பயணம் செய்ய, பக்கவாட்டு இருக்கைகளில் அவற்றை வாங்கியவர்கள் உட்கார்ந்து கொண்டு ஆடுகளை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கம்பியைக் கூட பிடிக்காது ஜில்லென்று அமர்ந்திருக்கும் ஒரு பெண்!

பயணிக்கும் போது நடுநடுவே வசந்த் [B]பாயிடம் பேசிக் கொண்டே வந்தேன். சில குஜராத்தி (ગુજરાતી) சொற் பிரயோகங்களையும் கற்றுக் கொண்டேன்! கேம் [ch]சோ?என்றால் “எப்படி இருக்கீங்க?”,  “தமாரு நாம் சுன் [ch]சே?என்றால் உங்களுடைய பெயர் என்ன?“ஆனோ சு [b]பாவ் [ch]சேஎன்றால் “இது எவ்வளவு?” !  அவரிடம் கேட்க, வேகவேகமாக சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு ஹிந்தியில் நான் சொன்னேன் – “ஏம்பா இவ்வளவு வேகமா சொன்னா எனக்குப் புரியாது, கொஞ்சம் மெதுவா சொல்லிக் குடுப்பா!என்று! அதற்கும் குஜராத்தியில் சொல்லித் தந்தார்!  - “தமே மெஹர்பானி கரினே தோடு [dh]தீரே  [b]போல்சோ!

வண்டியில் பயணிப்பது மீன்கள்! கடலிலிருந்து அப்போது தான் பிடிக்கப்பட்ட மீன்கள் - மார்க்கெட் நோக்கிய பயணம்!

பார்ப்பதற்கு ஹிந்தி எழுத்துகளைப் போலவே இருந்தாலும் பல எழுத்துகளில் வித்தியாசம் இருக்கிறது.  கற்றுக் கொள்ள சுலபம் தான் என நினைக்கிறேன்.  தில்லி திரும்பிய பிறகு குஜராத்தி கற்றுக் கொள்ள நினைத்தேன் என்றாலும் இது வரை கற்றுக் கொள்ளவில்லை! அலுவலகத்தில் ஒரு குஜராத் மாநிலத்தவர் இருக்கிறார். அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!


இது ஜீப் சவாரி! இதுவும் குஜராத்தின் சில மாவட்டங்களில் உண்டு!

ஆட்டோவில் இப்படியும் பயணிக்கலாம்!

இப்படியாக பயணித்து மாலை நாங்கள் சோம்நாத் வந்து சேர்ந்தோம்.  சோம்நாத் நகரில் பார்த்தது என்ன, அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமே!

நட்புடன்வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ஃப்ரூட் சாலட் – 143 – புதிய ரயில் பெட்டிகள் – நடனத்துடன் துவங்கும் அலுவலகம் – மியாவ்.... மியாவ்....இந்த வார செய்தி:

சென்னையில் இருக்கும் ICF 50000-வது ரயில் பெட்டியை தயார் செய்திருக்கிறது.  தற்போது இருக்கும் பெரும்பாலான ரயில் பெட்டிகளில் மேலே இருக்கும் படுக்கைக்குச் செல்ல உங்களுக்கு பல வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும்! கொஞ்சம் சுலபமாக மேல் படுக்கைக்குச் செல்லும் விதமாக படிகள் அமைத்திருப்பது நல்ல விஷயம்!பெட்டிக்குள் இருக்கும் தகவல்களை ப்ரைலி முறையிலும் கொடுத்திருப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருப்பது என நல்ல சில வசதிகள்.

புதிய வசதிகளுடன் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த ரயில் பெட்டி போலவே எல்லா ரயில் பெட்டிகளும் இருந்தால் நல்லது. பழைய பெட்டிகளையும் மாற்றம் செய்யவேண்டும். மேலும் பல வசதிகளையும், சுத்தமான பராமரிப்பும் செய்தால் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:

ரேஷன் கார்டு ஃபோட்டோ 15 வருஷத்துக்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம்னு காட்டுது!

ஆதார் கார்டு ஃபோட்டோ 15 வருஷத்துக்கு அப்புறம் நாம எப்படி இருப்போம்னு காட்டுது!

மியாவ்.... மியாவ்....

சென்ற வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும் போது எங்கிருந்தோ மெல்லிய குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. எல்லா இடத்திலும் தேடினாலும் எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை.  சற்றே மும்மரமாக தேடியதில் சுவற்றுக்குள் பதித்து வைத்திருக்கும் Safety Locker பக்கத்தில் இருக்கும் சிறிய இடைவெளிக்குள் இருந்து சத்தம் வருவது தெரிந்தது.  அங்கே பார்த்தால் மூன்று பூனைக்குட்டிகள்! அலுவலக நேரம் முடிந்ததும் இங்கே பூனையார் வந்து குட்டிகள் போட்டிருக்கிறார் போலும்!

ஒரு சிறிய தட்டில் பால் வைத்து வந்தோம்.  மூன்று நாட்களுக்குப் பிறகு குட்டிகளில் இரண்டினை எங்கோ எடுத்துச் சென்று விட்டது தாய்ப் பூனை. ஒரு குட்டி மட்டும் அங்கேயே. அதற்கு உடல் நிலை சரியில்லை போலும்! வைத்த பாலை தொடக்கூட இல்லை. தாயும் வரவே இல்லை. சோர்ந்து படுத்திருக்க, அலைபேசியில் விலங்குகளுக்கான மருத்துவமனையை அழைத்தோம். அவர்கள் வாகனத்தில் வந்து சேருவதாகச் சொல்ல, அந்தப் பூனைக்குட்டியை மிக பத்திரமாய் கொண்டு போய்க் கொடுத்தோம். 

அரை மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து அலைபேசி அழைப்பு!

போகும் வழியிலேயே பூனைக்குட்டி இறந்து விட்டதாம்!  அன்றைக்கு வெகு நேரம் நினைவில் பூனைக்குட்டியின் மியாவ்... மியாவ்.. கேட்டுக்கொண்டே இருந்தது.  அலுவலகத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்படும்போது தாய்ப்பூனை தனது குட்டியைத் தேடிக்கொண்டு வந்தது! Safety Locker அருகில் சுற்றிச் சுற்றி வந்த பூனையைப் பார்க்கும் போது அதன் சோகம் எங்களையும் ஒட்டிக் கொண்டது.... 

இந்த வார காணொளி:

தலைநகர் தில்லியின் அருகே இருக்கும் குர்காவ்ன் பகுதியில் இருக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் அலுவலகம்.  தினம் தினம் அலுவலகத்திற்கு காலையில் வந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை என்ன?  பாருங்களேன்!

VID-20150802-WA0005.mp4
A multinational company office... in Gurgaon...watch d video in the office they dance daily for 5 minutes before they start their work
Posted by Vishal Sharma on Sunday, August 2, 2015

இங்கும் பார்க்கலாம்! [முகப்புத்தக பயனராக இருந்தால்!]

https://www.facebook.com/video.php?v=10207318463702515

படித்ததில் பிடித்தது:

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவு செய்திருந்தார். அருகில் இருந்தவர்கள், “வெகுதூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே, பரவாயில்லையா? என்றனர்.

அதற்கு அவர், “உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களுமே வலிக்கும். எனக்கு ஒரு கால் மட்டும் தான் வலிக்கும்என்றார் புன்சிரிப்புடன்.

தன் பலவீனங்களை பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்
வியாழன், 20 ஆகஸ்ட், 2015

காலை உணவும் சாலைப் பயணமும்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 3

முந்தைய பகுதிகள் – 1 2


படம்: இணையத்திலிருந்து.....

ஆம்தாவாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் வாயிலை நோக்கி முன்னேறினோம். வெளியேறும்போதே அங்கிருக்கும் நண்பரைத் தொடர்பு கொள்ள, எங்களுக்காக வாகனத்துடன் ஓட்டுனர் காத்திருப்பதாகச் சொல்லி, அவரது அலைபேசி எண்ணையும் தந்தார்.  அவரைத் தொடர்பு கொள்ள அவர் காத்திருக்கும் இடத்தினைச் சொன்னார். நாங்களும் வெளியே வந்து அவரை மீண்டும் தொடர்பு கொண்டு நாங்கள் காத்திருக்கும் இடத்திற்கே வாகனத்தினை கொண்டு வரச் சொன்னோம். 

ஆம்தாவாத் நகரில் எங்களை வரவேற்றது ஓட்டுனர் வசந்த் [B]பாய்! குஜராத் மக்களுக்கு ஒரு பழக்கம் – பெரும்பாலான ஆண்கள் பெயரில் [B]பாய் நிச்சயம் இருக்கும். அதைப்போலவே பெண்கள் பெயரில் [B]பெகன்! ஓட்டுனர் வசந்த் [B]பாய், வாய் நிறைய மாவா மசாலாவுடன் எங்களை வரவேற்றார். மாவா என்பது என்ன என்று நான் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்த போது பகிர்ந்து கொண்டதை, படிக்காதவர்களின் வசதிக்காக மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! 


 உள்ளங்கையில் மாவா மசாலா!

மாவா மசாலா – அதாவது புகையிலை, பாக்குச் சீவல், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் கலந்து வாயில் நிரந்தரமாக அடக்கிக் கொள்கிறார்கள் – குஜராத்தில் பார்த்த பலர் – பெண்கள் உட்பட இதை அடக்கி வழியெங்கும் எச்சில் உமிழ்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு ஒரு சிறிய பிளாஸ்டிக் காகிதத்தில் கட்டப்பட்ட புடியா கிடைக்கிறது. நாளொன்றுக்கு பத்து பதினைந்து பொட்டலங்களை சர்வசாதாரணமாக உள்ளே தள்ளுகிறார்கள் சிலர்.

ஆம்தாவாத் நகரிலிருந்து நாங்கள் நேரடியாக சோம்நாத் சென்று வர திட்டமிட்டிருந்தோம். ஆம்தாவாத் நகரிலிருந்து சோம்நாத் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவு என்றாலும் சாலைகள் சிறப்பாக இருப்பதால் விரைவாகச் செல்ல முடியும்.  தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாது இம்மாநிலத்தில் மாநில நெடுஞ்சாலைகளும் மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.  அதனால் மிகவும் சுலபமாக இங்கே பயணிக்க முடிகிறது.அதிகாலையிலேயே தில்லியிலிருந்து புறப்படட்தால் காலை உணவினை ஆம்தாவாதிலேயே முடித்துக் கொள்ளலாம் என ஓட்டுனர் வசந்த் [B]பாய்-இடம் சொல்ல, அவர் வழியில் இருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிடலாம் என்று அங்கே அழைத்துச் சென்றார். குஜராத் மாநிலத்திலும் வட இந்தியாவினைப் போல பலரும் மெதுவாகத் தான் துயிலெழுவார்கள் போலும்! பல உணவகங்கள் மூடியிருக்க, திறந்திருந்த ஒரு உணவகத்திற்குச் சென்றோம்.

படம்: இணையத்திலிருந்து....

பெரும்பாலான குஜராத்தி உணவகங்களில் காலை வேளையில் பூரியும் சப்ஜியும் கிடைக்கிறது. நாங்களும் பூரியே சொன்னோம். குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கை Batata என அழைக்கிறார்கள்.  உருளையுடன் வேர்க்கடலை பொடியாக சேர்த்து அருமையான சப்ஜி செய்கிறார்கள்.  நாங்களும் காலை உணவினை பூரி-சப்ஜியோடு முடித்துக் கொண்டோம்.  இந்த உருளை சப்ஜி எப்படி செய்வது என சாப்பிட வாங்க பகுதியில் விரைவில் பார்க்கலாம்! பொதுவாகவே பயணங்களில் எவ்வளவு குறைவாக உணவு எடுத்துக் கொள்கிறோமோ அவ்வளவு நல்லது! எங்கு பயணம் செய்தாலும் அந்த இடத்தின் உணவை உண்பதும் நல்லது!காலை உணவினை முடித்த பிறகு எங்கள் சாலைப் பயணம் துவங்கியது.  அருமையான சாலை என்பதால் வாகனம் வெகு சுலபமாக 70-80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. ஆனாலும் எங்கள் ஓட்டுனரை விட விரைவாக ஓட்டும் ஓட்டுனர்களையும் பார்க்க முடிந்தது! எப்போதும் போல நான் ஓட்டுனருக்கு அடுத்த முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, பின் இருக்கைகளில் நண்பர் அவரது துணைவியுடன். இவ்விடத்தில் நண்பர் பற்றியும் சொல்ல வேண்டும்!

நான் தில்லியில் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் தெரியும். அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பழக்கம்.  தில்லியில் இருக்கும் என் நலம் விரும்பிகள் பலரில் அவரும் உண்டு. அவருடன் பயணிப்பதில் எனக்கோ அவருக்கோ எந்த பிரச்சனையும் இல்லை. குடும்பத்தினருடன் பயணிப்பது போல தான் இருக்கும். நிறைய இப்படி பயணித்திருக்கிறோம்.

வழியெங்கும் இருக்கும் காட்சிகளைப் பார்த்தவாறும், பயணிக்கும் போதே ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்தபடியும் நான் இருக்க, பின் இருக்கைகளில் அவர்கள் இருவரும் உறங்க ஆரம்பித்தனர்! வழியில் பார்த்த சில கிராமங்களின் பெயர்கள் சுவாரஸ்யம்! – வன்பரி [வனதேவதை!], சரி, பாவ்லா, மூளி, ஆயா, வாங்கியா என பல பெயர்கள் படிக்கும் போதே சுவாரஸ்யம்.  ஹிந்தியில் மூளி என்றால் முள்ளங்கி! மற்ற பெயர்களுக்கு விளக்கம் தேவையிருக்காது!காண்ட்லா, முந்த்ரா ஆகிய துறைமுகங்களுக்கு இந்த வழியாகத் தான் பயணிக்க வேண்டும் என்பதால் சாலைகள் மிகச் சிறப்பாக பராமரிக்கிறார்கள்.  வழியெங்கும் சின்னச் சின்ன ஊர்களும் இருக்கின்றன. 

போகும் வழியில் தான் [CH]சண்டீலா எனும் [CH]சாமுண்டா தேவி கோவில் இருக்கிறது. என்றாலும் நாங்கள் மாலைக்குள் சோம்நாத் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அங்கே செல்லவில்லை. ஜேத்பூர் என்ற இடத்திலிருந்து சோம்நாத் செல்லும் சாலையில் சென்ற பிறகு சாலை அவ்வளவு நன்றாக இல்லை. கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது! இந்த வழியில் ஏனோ சாலைவழி உணவகங்களும் குறைவாகத் தான் இருந்தது!புறவழிச்சாலை வரை பேருந்துகள் இருந்தாலும், கிராமங்களின் உள்ளே செல்லும் பேருந்துகளை அவ்வளவாக பார்க்க இயலவில்லை. அதற்கு பதிலாக சிறு வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அவ்வாகனத்தின் பெயர் [Ch]சகடா! இந்த சாலைப் பயணத்தில் கண்ட வேறு சில விஷயங்களும், [Ch]சகடா பற்றியும், அடுத்த பதிவில் பார்க்கலாமே!


நட்புடன்


புதன், 19 ஆகஸ்ட், 2015

காக்கா முட்டை....


மனச்சுரங்கத்திலிருந்து....


படம்: இணையத்திலிருந்து....

நெய்வேலி நகரத்தில் இருந்த போது கிடைத்த அனுபவங்களை “மனச்சுரங்கத்திலிருந்துஎன்ற தலைப்பில் பகிர்ந்து கொள்வது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். இன்றைக்கு அந்த வரிசையில் ஒரு பகிர்வு காக்கா முட்டை!  சமீபத்தில் வெளி வந்த காக்கா முட்டை படமும் [சனிக்கிழமை சுதந்திர தினத்தினை முன்னிட்டு விஜய் டிவியில் காண்பிக்கும்போது கூட பாதி திரைப்படம் தான் பார்க்க முடிந்தது! நடுவில் மழை பெய்ததால் TATASKY காலை வாரிவிட்டது! தில்லி வந்த பிறகு திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதே அரிதாகிவிட்டது!] நண்பர் துளசிதரன்/கீதா ஜி! அவர்களின் தளத்தில் எழுதிய காக்கா முட்டை பதிவும் இப்பதிவிற்கு வித்திட்டன!

வீட்டைச் சுற்றி பல மரங்கள் என்பதால் பறவைகளின் கூடுகளும் இங்கே அதிகம்.  சிகப்பு எறும்பு [கட்டை எறும்பு அளவிற்கு இருக்கும்] – பொதுவாக மாமரத்தின் கிளைகளில் இருக்கும் சில இலைகளைச் சேர்த்து கூடாகக் கட்டும்.  தப்பித்தவறி அந்த கூடு இருக்கும் கிளைகளில் தெரியாமல் சென்றுவிட்டால் கால்களை குதறி விடும். கடிக்க ஆரம்பித்தால் அவை நம் தோலை விட்டு விலகாது – பிய்த்து தான் எடுக்க வேண்டியிருக்கும்! அப்படி இருக்கிற கூடுகளை, அவற்றை கட்டிய சிகப்பு எறும்புகளிடமிருந்து தப்பித்து சற்றே அருகில் சென்று பார்த்ததுண்டு.  மாங்காய் பறிக்கும் போது இந்த வேலையும் நடக்கும்!


படம்: இணையத்திலிருந்து....

கொஞ்சம் தப்பினாலும் எறும்புகள் கூட்டமாக உடலில் கதகளி ஆடிவிடும் என்று தெரிந்தாலும் இப்படி அருகில் சென்று பார்ப்பதில் எந்த தயக்கமும் பயமுமோ அப்போது இருந்ததில்லை! இப்போது நினைத்தாலே மனதுக்குள் நடுக்கம்.  சில சமயங்களில் கொத்தாக சிகப்பு எறும்புகள் கைகளில்/கால்களின் ஒட்டிக்கொள்ள நான் கதகளி ஆடியதும் நடந்திருக்கிறது!

அதே போல, புளிய மரத்தில் வருடா வருடம் புளி காய்க்கும் நாட்களில் மரத்திலேறி கிளைகளை உலுக்குவது என்னுடைய வேலை தான். அது தான் பெரிய வேலை என அதிகம் அலட்டிக்கொண்டதுண்டு! அதன் பிறகு இருக்கும் நச்சு வேலைகள் அனைத்தையும் [காய வைத்து, ஓடுடைத்து, அதிலிருந்து விதைகளையும்,  நார்களையும் நீக்கி மீண்டும் காய வைத்து] செய்யும் அம்மாவும் நான் செய்யும் வேலை தான் அதிக கஷ்டமானது, உடம்பு சூடாயிடும் பாவம் என்று சொல்லி அங்கலாய்ப்பார்.  புளி உலுக்க மட்டுமே நான் மரம் ஏறுவதில்லை. இன்னும் சில ஆசைகளும் அதற்குக் காரணம்!

வருடா வரும் புளிய மரத்தில் ஏதேனும் ஒரு கிளையில் தேன்கூடு கட்டிவிடும். அந்த கிளைப்பக்கம் செல்வது ஆபத்து என்றாலும், தேன்கூட்டை அருகிலிருந்து பார்க்கும் ஆசையினால் அந்த கிளை நோக்கிச் செல்லும் போது அம்மா கீழிருந்து சத்தம் போடுவார். சில சமயங்களில் தேன் எடுக்க முயற்சித்ததும் உண்டு!  அதிலிருக்கும் ஆபத்துகள் தெரியாத வயது அது! ஒரே ஒரு முறை கொட்டும் வாங்கியதுண்டு! அதை விட அதிகம் நினைவிலிருப்பது தென்னை மரத்திலிருக்கும் வண்டால் பட்ட அவஸ்தை!

பள்ளிக்கு குறுக்கு வழிகளில் – பலரின் வீட்டுத் தோட்டங்கள் வழியே செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தென்னை மரத்தின் வழியே செல்ல, அங்கே கூடு கட்டிக்கொண்டிருந்த பெரிய வண்டு ஒன்று பறந்து, போகிற போக்கில் என் உதட்டில் ஒரு உம்மா கொடுத்து விட்டுப் போனது.  கொடுத்தது தெரியாத அளவிற்கு கொடுத்த உம்மா, சற்று நேரத்தில் அதன் வேலையைக் காண்பிக்க, என் உதடு கழுத்து வரை வீங்கிப் போனது! நாலு நாளுக்கு பள்ளிக்கு போகவில்லை [ஹையா ஜாலி!] என்பது தேவையில்லாத செய்தி!


படம்: இணையத்திலிருந்து....

சரி தலைப்புக்கு வருவோம்!  புளிய மரத்தின் கிளைகளில் காக்காய்களும் கூடு கட்டி வைத்திருக்கும்.  மரத்தில் ஏறியவுடனேயே அங்கும் இங்கும் பறந்து சத்தமிட்டபடியே இருக்கும். அதற்கு அதன் பயம்...  எங்கே கூட்டைக் கலைத்து விடுவோமோ, அதன் முட்டைகளை அழித்து விடுவோமோ என பயந்து கூச்சல் போட்டபடி இருக்க, நானோ, அந்தக் கிளையில் முன்னேறிக் கொண்டிருப்பேன்.  சில நாட்கள் உணவு தேடி காகங்கள் போயிருக்க, நான் கூட்டின் வெகு அருகில் சென்று அதில் இருந்த காக்காய் முட்டைகளை கையில் எடுத்துப் பார்த்து, மீண்டும் வைத்ததுண்டு! ஒரு சமயம் அப்படி வைக்கும்போது கை தவறி கீழே விழுந்து உடைந்ததும் உண்டு!

இரண்டொரு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் அரச மரத்தில் காக்காய் கூடு கட்டி இருக்கும் போல! அதைக் கட்டிய காகம் நான் அவ்விடத்தைக் கடக்கும் போது, தலையில் தட்டும் அளவு கிட்டே வர முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக குனிந்து கொண்டேன். நல்ல வேளை தலையில் அதன் அலகால் கொத்தாமல் போயிற்றே!

ஒரு வேளை முன் ஜென்ம பகை இருக்குமோ அதற்கு! என்னைப் பத்தி பழைய காக்கா போட்டுக் கொடுத்திருக்குமோ! இல்லை இது அதே காக்கவோட அடுத்த ஜன்மமோ! என என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரத்தின் அருகே இருக்கும் வீட்டில் வசிக்கும் நண்பர் சொன்னார் – இரண்டு மூணு நாளா யாரும் இந்தப் பக்கம் வர முடியல! எல்லார் தலையிலையும் இறக்கைகளாலோ, அல்லது கால்களாலோ தட்டி விடுகிறது!”.

நல்ல வேளை அன்று அதனிடமிருந்து தப்பிய நான் அதற்கடுத்த நாள்களில் அலுவலகம் செல்லும் போது வேறு பாதையை பயன்படுத்தினேன்! எதுக்கு அந்த காக்கா கிட்ட மாட்டிக்கணும் அப்படிங்கற எண்ணம் தான்!

மனச்சுரங்கத்திலிருந்து வேறு சில நினைவுகளோடு பிறிதொரு சமயத்தில் சந்திக்கும் வரை....

நட்புடன்செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பதிவர் சந்திப்பு – 2015 - மதுரைத் தமிழன் அளிக்கும் ஃபைவ் ஸ்டார் விருதுதமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு முதல் இரண்டு வருடங்கள் சென்னையிலும் மூன்றாம் வருடம் மதுரையிலும் நடந்திருக்க, நான்காம் வருடமான இவ்வருடம் புதுக்கோட்டையில் நடைபெறப் போகிறது. விவரங்கள் கீழே:

நாள்: அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் [ஞாயிறு]
நேரம்: காலை 09-00 மணி முதல் மாலை 05-00 மணி வரை.
இடம்: ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், Be Well மருத்துவமனை எதிரில், ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை.

தமிழகத்தில் இருக்கும் பதிவர்களும், வெளியூர் பதிவர்களும் இப்பொழுதே புதுக்கோட்டை செல்ல ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வசதியாக முன்னரே அறிவித்திருக்கிறார்கள்.  சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் படிவம் வெளியிட்டு இருக்கிறார். கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் படிவத்தினை பூர்த்தி செய்யலாம்!

புத்தக வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள், விருதுகள் வழங்குதல் என பல சிறப்பான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.  விழாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015 எனும் நூலை தர இருக்கிறார்கள்.  வர முடியாத வலைப்பதிவர்களுக்கு மின் புத்தகமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதியும் தந்தால் நல்லது! விழா பற்றிய தகவல்கள் தொடர்ந்து புதுக்கோட்டை பதிவர்களின் தளங்களில் வெளியிடுவார்கள். 

சென்னையில் நடந்த இரண்டாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பதிவில் நான் எடுத்த பதிவர்களின் புகைப்படங்கள் எனது தளத்தில் உண்டு! பார்க்க விரும்புவர்களின் வசதிக்காக சுட்டிகள் கீழே:
கடந்த முறை மதுரையில் நடந்த மூன்றாம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். இம்முறையும் கலந்து கொள்வது கடினம். அலுவலகத்தில் தணிக்கை ஆரம்பிக்க இருக்கிறது. ஆரம்பித்து விட்டால் விடுமுறை எடுப்பது கடினம். மேலும் இந்த மாதத்தின் இறுதியில் சில சொந்த வேலைகளுக்காக ஒரு வார விடுப்பில் திருச்சி வர முன்பதிவு செய்திருக்கிறேன். ஒரு மாதத்திற்குள் மீண்டும் விடுப்பு கிடைப்பது கடினம்! கடைசி நேரத்தில் வந்தாலும் வரலாம்!

Five Star Blogger Awardமுன்னணி பதிவர்களில் ஒருவரான திரு மதுரைத் தமிழன் அவர்கள், தனது தளமான “அவர்கள் உண்மைகள்எனும் தளத்தின் மூலம் Five Star Blogger என சில பதிவர்களை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிமுகம் செய்ய இருக்கிறார். அவர் தொடர்ந்து படிக்கும் பதிவர்களை அறிமுகம் செய்து “Five Star Bloggerஎன்று தனது தளத்தில் அப்பதிவரின் வலைப்பூவிற்கான சுட்டியும் தரப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

முதல் Five Star Blogger-ஆக அவர் தேர்ந்தெடுத்திருப்பது என்னையும் எனது வலைப்பூவினையும்! என்று இங்கே சொல்லிவிடுகிறேன்! அவரது தளத்தில் இரண்டு வாரங்களுக்கு விருது பெறும் பதிவர்களின் வலைப்பூவிற்கான சுட்டி இருக்கும்.  இந்த இரண்டு வாரமாக எனது தளத்தின் சுட்டி இருக்கிறது. வரும் வாரத்தில் இந்த இடத்தில் வேறொரு பதிவரின் தளத்திற்கான சுட்டி இருக்கும்.

எனது தளம் பற்றி புகழ்ந்து எழுதி இருப்பது பார்த்து மனதில் நிறைந்த மகிழ்ச்சியும், ஒரு ஓரத்தில் கொஞ்சம் பயமும் வந்தது! தொடர்ந்து நல்ல பதிவுகளை தர வேண்டுமே என்ற பயம் தான்! முடிந்த வரை படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் தான் பதிவுகள் எழுதுகிறேன் என்றாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமே என்கிற பயம் தான்!

இது வரை 906 பதிவுகளும், கிட்டத்தட்ட 5 லட்சம் [4.83 லட்சம்] பக்கப் பார்வைகள் பெற்றிருந்தாலும் மேலும் மேலும் பதிவுகள் வெளியிடும் எண்ணம் குறையவில்லை.  அலுவலகத்தில் ஆணிகள் அதிகமென்பதால் ஒவ்வொரு நாளும் பதிவுகள் எழுதுவது கடினமாக இருக்கிறது.  முடிந்த போது பதிவுகள் வெளியிடுகிறேன்.

முதல் Five Star Blogger ஆக என்னைத் தேர்ந்தெடுத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வரும் வாரத்தில் அடுத்த Five Star Blogger-ஆக தேர்ந்தெடுக்கப் படும் நண்பருக்கு வாழ்த்துகள்! அது யார் என்பது மதுரைத் தமிழனுக்கே வெளிச்சம்!

விடை பெறுமுன்னர் உங்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக புதுக்கோட்டை பதிவர்கள் சந்திப்பிற்கு உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள திண்டுக்கல் தனபாலன் தளத்தின் சுட்டியை மீண்டும் ஒரு முறை இங்கே தருகிறேன்!


சகோ தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் தனது ஒவ்வொரு பதிவிலும் சொல்வதைச் சொல்லி பதிவினை முடிக்கலாம்!

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஃப்ரூட் சாலட் – 142 – குப்பை போடாதே! – Yummydrives.com – கண்ணகியின் தவறு!


இந்த வார செய்தி:

படம்:  இணையத்திலிருந்து....

திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் கண்ட இடங்களில் தூக்கி வீசும் குப்பைகளை மனநல நோயாளி ஒருவர் ஓடோடிச் சென்று எடுத்து குப்பை தொட்டியில் கொண்டு போடுகிறார். அவரைப் பார்த்து பயணிகளும் குப்பையை கீழே போடத் தயங்குவதால் வத்தல குண்டு பஸ் நிலையம் இப்போது சுத்தமாக காணப்படுகிறது.

வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகளை வத்தலகுண்டு பேரூராட்சி துப்பு ரவுத் தொழிலாளர்கள் தினமும் காலையில் மட்டும் அகற்றுவர். மற்ற நேரங்களில் குப்பைகள் குவிந்து காணப்படும்

இந்நிலையில் கடந்த 2 மாதங் களாக வத்தலகுண்டு பஸ் நிலை யம் குப்பை இன்றி சுத்தமாகக் காணப்படுகிறது. இதன் பின்னணி யில் ஒரு மனநோயாளி உள்ளார். காலை முதல் இரவு வரை பேரூராட்சி குப்பை வண்டியுடன் பஸ் நிலைய வளாகத்தில் சுற்றித் திரியும் இந்த மனநோயாளி பயணிகள் வீசும் குப்பைகளை ஓடிச்சென்று எடுத்து குப்பைத் தொட்டியில் கொண்டு போடுகிறார்.

கண்ட இடங்களில் கூச்சமில்லாமல் போடும் குப்பைகளை மன நலம் பாதித்த ஒருவர் எடுத்து அகற்றுவதைப் பார்த்து தற்போது பஸ் நிலைய கடைக்காரர்கள், பயணிகள், குப்பையை திறந்த வெளியில் வீசத் தயங்குகின்றனர். வத்தலகுண்டு பஸ் நிலையம் வரும் பயணிகள், அப்பகுதி மக்கள் ஒரு மன நோயாளியால் மனமாற்றம் அடைந்திருப்பது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

இதுகுறித்து பஸ் நிலைய கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர் பிச்சை கூறியதாவது:

தூய்மை இந்தியாதிட்டத்துக் காக ஒருமுறை பஸ்நிலையத்தில் சிலர் ஒருநாள் முழுவதும் இருந்து குப்பைகளை ஓடி ஓடி எடுத்தனர். அவர்களைப் பார்த்து மனநிலை பாதித்த இவர் பஸ் நிலையத்தில் ஒரு குப்பையை விடுவதில்லை.

டீக்கடை, ஹோட்டலில் யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டார். நாங்கள், கடைக்காரர்கள், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அவருக்கு உணவு வாங்கிக் கொடுப்போம். இன்று அவரால் எங்கள் ஊர் பஸ் நிலையம் சுத்தமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

     தி இந்து தமிழ் நாளிதழிலிருந்து.....


இந்த வார முகப்புத்தக இற்றை:

உங்களின் தினத்தினை நேற்றைய எச்சங்களுடன் தொடங்காதீர்கள். இன்றைய தினம் புத்தம் புதியது! ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம். எழுந்திருக்கும் ஒவ்வொரு காலையும், நமது புதிய வாழ்வின் முதல் நாள் என்ற உணர்வுடன் தொடங்கட்டும்!

இந்த வார குறுஞ்செய்தி:

யாருக்கேனும் கெடுதல் செய்ய வேண்டுமெனில் மட்டுமே உங்களுக்கு வானளாவிய அதிகாரம் [தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் சொன்னதோ!] தேவை.  இல்லையெனில் அன்பு கொண்டே பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும்!

இந்த வார புகைப்படம்:ஆகஸ்டு மாத பிட் புகைப்படப் போட்டிக்கு தலைப்பாக ஊர்வனவும் ஈரூடக வாழ்வனவும் என்று கொடுத்து நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (Amphibian) படங்களை போட்டிக்கு அனுப்ப கேட்டிருக்கிறார்கள். போட்டிக்கு அனுப்புகிறேனோ இல்லையோ, நான் எடுத்த ஒரு Amphibian-ஆகிய முதலையின் படம் இங்கே! படம் எடுக்கப்பட்டது சென்னையின் முதலைப் பண்ணையில்! வாயைத்திறந்தபடி என்னவொரு அழகு! :)

இன்றைய வாழ்த்து:கடல் பயணங்கள்தளத்தினில் எழுதும் நண்பர் சுரேஷ்குமார் அவர்கள் திரு கேபிள் சங்கர் மற்றும் கோவை ஜீவா அவர்களுடன் இணைந்து WWW.YUMMYDRIVES.COM எனும் புதிய தளத்தினை இன்றைக்கு அறிமுகம் செய்கிறார்கள்.  எந்த ஊரில் என்ன உணவு கிடைக்கும், அந்த ஊரில் என்ன சிறப்பான உணவு என பல தகவல்களை நமக்குத் தரப்போகும் இவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பூங்கொத்துகளும்!

இந்த வார காணொளி:

India Got Talent என்று ஒரு Reality Show, Colours Channel-ல் வந்து கொண்டிருந்த்து.   அதில் Prahlad Acharya எனும் நபர் நிழல்களின் மூலம் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களை பலரை நம் கண் முன்னே கொண்டு வந்தார்.  அந்த காணொளியை நீங்களும் பார்த்து ரசிக்க இதோ இங்கே.....
படித்ததில் பிடித்தது:பேச வேண்டிய நேரத்தில்
பேசியிருந்தால்
கேட்க வேண்டிய நேரத்தில்
கேட்டிருந்தால்
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்லியிருந்தால்
கழுத்து நகையையும்
கால் நகையையும்
கழட்டியிருக்க வேண்டாமே
தவறு செய்தவள் நீ
தண்டனை மன்னனுக்கா?

-   சுமதி

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்