வியாழன், 20 ஆகஸ்ட், 2015

காலை உணவும் சாலைப் பயணமும்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 3

முந்தைய பகுதிகள் – 1 2


படம்: இணையத்திலிருந்து.....

ஆம்தாவாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் வாயிலை நோக்கி முன்னேறினோம். வெளியேறும்போதே அங்கிருக்கும் நண்பரைத் தொடர்பு கொள்ள, எங்களுக்காக வாகனத்துடன் ஓட்டுனர் காத்திருப்பதாகச் சொல்லி, அவரது அலைபேசி எண்ணையும் தந்தார்.  அவரைத் தொடர்பு கொள்ள அவர் காத்திருக்கும் இடத்தினைச் சொன்னார். நாங்களும் வெளியே வந்து அவரை மீண்டும் தொடர்பு கொண்டு நாங்கள் காத்திருக்கும் இடத்திற்கே வாகனத்தினை கொண்டு வரச் சொன்னோம். 

ஆம்தாவாத் நகரில் எங்களை வரவேற்றது ஓட்டுனர் வசந்த் [B]பாய்! குஜராத் மக்களுக்கு ஒரு பழக்கம் – பெரும்பாலான ஆண்கள் பெயரில் [B]பாய் நிச்சயம் இருக்கும். அதைப்போலவே பெண்கள் பெயரில் [B]பெகன்! ஓட்டுனர் வசந்த் [B]பாய், வாய் நிறைய மாவா மசாலாவுடன் எங்களை வரவேற்றார். மாவா என்பது என்ன என்று நான் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்த போது பகிர்ந்து கொண்டதை, படிக்காதவர்களின் வசதிக்காக மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! 


 உள்ளங்கையில் மாவா மசாலா!

மாவா மசாலா – அதாவது புகையிலை, பாக்குச் சீவல், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் கலந்து வாயில் நிரந்தரமாக அடக்கிக் கொள்கிறார்கள் – குஜராத்தில் பார்த்த பலர் – பெண்கள் உட்பட இதை அடக்கி வழியெங்கும் எச்சில் உமிழ்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு ஒரு சிறிய பிளாஸ்டிக் காகிதத்தில் கட்டப்பட்ட புடியா கிடைக்கிறது. நாளொன்றுக்கு பத்து பதினைந்து பொட்டலங்களை சர்வசாதாரணமாக உள்ளே தள்ளுகிறார்கள் சிலர்.

ஆம்தாவாத் நகரிலிருந்து நாங்கள் நேரடியாக சோம்நாத் சென்று வர திட்டமிட்டிருந்தோம். ஆம்தாவாத் நகரிலிருந்து சோம்நாத் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவு என்றாலும் சாலைகள் சிறப்பாக இருப்பதால் விரைவாகச் செல்ல முடியும்.  தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்லாது இம்மாநிலத்தில் மாநில நெடுஞ்சாலைகளும் மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.  அதனால் மிகவும் சுலபமாக இங்கே பயணிக்க முடிகிறது.அதிகாலையிலேயே தில்லியிலிருந்து புறப்படட்தால் காலை உணவினை ஆம்தாவாதிலேயே முடித்துக் கொள்ளலாம் என ஓட்டுனர் வசந்த் [B]பாய்-இடம் சொல்ல, அவர் வழியில் இருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிடலாம் என்று அங்கே அழைத்துச் சென்றார். குஜராத் மாநிலத்திலும் வட இந்தியாவினைப் போல பலரும் மெதுவாகத் தான் துயிலெழுவார்கள் போலும்! பல உணவகங்கள் மூடியிருக்க, திறந்திருந்த ஒரு உணவகத்திற்குச் சென்றோம்.

படம்: இணையத்திலிருந்து....

பெரும்பாலான குஜராத்தி உணவகங்களில் காலை வேளையில் பூரியும் சப்ஜியும் கிடைக்கிறது. நாங்களும் பூரியே சொன்னோம். குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கை Batata என அழைக்கிறார்கள்.  உருளையுடன் வேர்க்கடலை பொடியாக சேர்த்து அருமையான சப்ஜி செய்கிறார்கள்.  நாங்களும் காலை உணவினை பூரி-சப்ஜியோடு முடித்துக் கொண்டோம்.  இந்த உருளை சப்ஜி எப்படி செய்வது என சாப்பிட வாங்க பகுதியில் விரைவில் பார்க்கலாம்! பொதுவாகவே பயணங்களில் எவ்வளவு குறைவாக உணவு எடுத்துக் கொள்கிறோமோ அவ்வளவு நல்லது! எங்கு பயணம் செய்தாலும் அந்த இடத்தின் உணவை உண்பதும் நல்லது!காலை உணவினை முடித்த பிறகு எங்கள் சாலைப் பயணம் துவங்கியது.  அருமையான சாலை என்பதால் வாகனம் வெகு சுலபமாக 70-80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. ஆனாலும் எங்கள் ஓட்டுனரை விட விரைவாக ஓட்டும் ஓட்டுனர்களையும் பார்க்க முடிந்தது! எப்போதும் போல நான் ஓட்டுனருக்கு அடுத்த முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, பின் இருக்கைகளில் நண்பர் அவரது துணைவியுடன். இவ்விடத்தில் நண்பர் பற்றியும் சொல்ல வேண்டும்!

நான் தில்லியில் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் தெரியும். அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பழக்கம்.  தில்லியில் இருக்கும் என் நலம் விரும்பிகள் பலரில் அவரும் உண்டு. அவருடன் பயணிப்பதில் எனக்கோ அவருக்கோ எந்த பிரச்சனையும் இல்லை. குடும்பத்தினருடன் பயணிப்பது போல தான் இருக்கும். நிறைய இப்படி பயணித்திருக்கிறோம்.

வழியெங்கும் இருக்கும் காட்சிகளைப் பார்த்தவாறும், பயணிக்கும் போதே ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்தபடியும் நான் இருக்க, பின் இருக்கைகளில் அவர்கள் இருவரும் உறங்க ஆரம்பித்தனர்! வழியில் பார்த்த சில கிராமங்களின் பெயர்கள் சுவாரஸ்யம்! – வன்பரி [வனதேவதை!], சரி, பாவ்லா, மூளி, ஆயா, வாங்கியா என பல பெயர்கள் படிக்கும் போதே சுவாரஸ்யம்.  ஹிந்தியில் மூளி என்றால் முள்ளங்கி! மற்ற பெயர்களுக்கு விளக்கம் தேவையிருக்காது!காண்ட்லா, முந்த்ரா ஆகிய துறைமுகங்களுக்கு இந்த வழியாகத் தான் பயணிக்க வேண்டும் என்பதால் சாலைகள் மிகச் சிறப்பாக பராமரிக்கிறார்கள்.  வழியெங்கும் சின்னச் சின்ன ஊர்களும் இருக்கின்றன. 

போகும் வழியில் தான் [CH]சண்டீலா எனும் [CH]சாமுண்டா தேவி கோவில் இருக்கிறது. என்றாலும் நாங்கள் மாலைக்குள் சோம்நாத் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அங்கே செல்லவில்லை. ஜேத்பூர் என்ற இடத்திலிருந்து சோம்நாத் செல்லும் சாலையில் சென்ற பிறகு சாலை அவ்வளவு நன்றாக இல்லை. கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது! இந்த வழியில் ஏனோ சாலைவழி உணவகங்களும் குறைவாகத் தான் இருந்தது!புறவழிச்சாலை வரை பேருந்துகள் இருந்தாலும், கிராமங்களின் உள்ளே செல்லும் பேருந்துகளை அவ்வளவாக பார்க்க இயலவில்லை. அதற்கு பதிலாக சிறு வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அவ்வாகனத்தின் பெயர் [Ch]சகடா! இந்த சாலைப் பயணத்தில் கண்ட வேறு சில விஷயங்களும், [Ch]சகடா பற்றியும், அடுத்த பதிவில் பார்க்கலாமே!


நட்புடன்


34 கருத்துகள்:

 1. பயணங்களில் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பது போன்று இடை இடையே வரும் பயண டிப்ஸ் உபயோகம். சகடா பற்றி முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறீர்களோ! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சர ஆசிரியராக இருந்த போது அங்கே எழுதி இருக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அருமையான பயண நிகழ்வுகள் ஐயா
  தொடர்கிறேன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. சாலைப் பயணங்கள் சுவாரஸ்யமானவை. ஊர்ப்பக்கத்தில் மெதுவாகச் செல்லும் வண்டிகளைப் பார்த்து ’சரியான (ச்)சக்டா வண்டி’ என்பார்கள்:). காரணம் இப்போது புரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 4. சக்கடாவை குஜராத்தில்தான் (ராஜ்கோட் பகுதியில்) முதல்முதலாப் பார்த்தேன்!
  சாலைகளைப் பற்றிச் சொன்னது உண்மை. அருமையா இருந்தது!
  ஆமடாவாடில் தங்கலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரும்பவும் ஆம்தாவாடில் வந்து ஒரு நாள் தங்கினோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
  2. மலைகள் நடுவே சாலை ,ஒரு முறை இந்த சாலை வழியாக ராஜ்கோட்டிற்கு சென்ற நினைவுக்கு வந்தது ,நல்ல பராமரிப்பு !

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 5. உங்களுடன் காரில் சேர்ந்து பயணம் பண்ன முடியவில்லை என்றாலும் இத்தொடர்மூலம் பயணம் செய்து கொள்வது போல இருக்கிறது அதுவும் சுகமான பயணமாகத்தான் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த இந்தியப் பயணத்தின் போது தலைநகர் வாருங்கள்! பயணிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 6. துளசிதரன்: அருமையான சுவாரஸ்யமான தகவல்களுடன் தங்கள் பயணத் தொடர். பயணிக்கின்றோம் நாங்களும் தங்களுடன்...

  கீதா: சக்கடா பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்...கொஞ்ச தூரம் - வேண்டுமென்றே அதில் பயணித்துப் பார்க்கும் ஆர்வத்துடன் - பயணித்த அனுபவம் உண்டு....சாப்புத்தாரா ஹில் ஸ்டேஷன் மஹாராஷ்டிரா-குஜராத் எல்லையில். குஜராத்தில் இருக்கும் மூன்று ஹில்ஸ்டேஷன்களில் ஒன்று ...அங்கிருந்து குஜராத் எல்லை ஆரம்பம் சாலை சூரத் செல்லும் சாலை. தங்கியிருந்த இடத்தில் குஜராத் உணவு பரிமாறப்பட்டது. அருமையான உணவு. நாங்கள் சென்றது 10 வருடங்களுக்கு முன்னால்...பட்டாட்டா ரொம்ப நன்றாக இருக்கும் - உருளை வைத்து நிறையவே செய்கின்றார்கள். பெரும்பான்மையான உணவுகளில் நிலக்கடலை சேர்க்கின்றார்கள் பொடியாக இல்லை முழுதாக. பருப்பிலும் சேர்க்கின்றார்கள். மஹாராஸ்ட்ராவிலும் பட்டாட்டா என்றுதான் சொல்லுகின்றார்கக்ள்...சாப்புத்தாரா பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வில்லை.. இப்போது தெரிந்திருக்கலாம்...நிறைய மாற்றங்களும் வந்திருக்கலாம். மனம் உறச்சாகத்திற்கு உகந்த இடம்...நிதானமாக ரசிக்கலாம்...

  உங்கள் பயணக் குறிப்புகள் அருமையாக உள்ளன வெங்கட்ஜி...தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் [ch]சகடாவில் பயணிக்க ஆவலாக இருந்தாலும் பயணிக்கவில்லை. அடுத்த முறை குஜராத் சென்றால் பயணிக்க வேண்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 8. உங்களுடன் பயணிக்கும் அனுபவமே அருமைதான். அவ்வப்போது சொற்களுக்கு விளக்கங்கள், தெரியாத பழக்கவழக்கங்களுக்கு அறிமுகங்கள். தங்களின் ஆம்தாவாத் உச்சரிப்பை அதிகம் ரசித்தேன். ஏனென்றால் அண்மையில் அலகாபாத் சென்றபோது இந்தியில் இலகாபாத் என்றிருந்ததைப் படித்த நினைவு ஏற்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆங்கிலத்தில் எழுதி இருப்பதை படிக்கும் போது பல சமயங்களில் உச்சரிப்பு மாறி விடுகிறது. இலஹாபாத் என்று தான் சொல்கிறார்கள். தில்லி என்பதைக் கூட [dh]தேஹ்லி
   என்று அழைப்பதுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. எனக்கும் பயணிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் பல பயணங்களில் என் சிரத்தையும் கூட பயணிப்பவர் சிரத்தையும் மாட்ச் ஆவதில்லை. நிறையவே காம்ப்ரமைஸ்கள். உங்கள் பயணம் சுவாரசியம் தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒத்த சிந்தனைகள் கொண்டவரோடு பயணிப்பது எப்போதும் நல்லது! இல்லையெனில் பல விதங்களில் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 10. தென்னாற்காட்டில் குதிரை வண்டிக்கு ஜட்கா வண்டி என்று சொல்வார்கள். சக்கடா புதியதாக இருக்கிறது. குஜராத்துக்கும் கூடவே பயணித்தால் நன்றாக விவரமாக சுற்றிப் பார்க்கலாம். கிளம்பிண்டே இருக்கேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் கூடவே பயணிப்பது மனதிற்கு சந்தோஷம் தருகிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 12. நாங்கள் வழக்கமாக ஆமதாபாத் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் "ஆம்தாவாத்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா? ஒன்று என்றால் ஏன் இந்த வித்தியாசம்.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்தாபாத் என்று நாம் சொன்னாலும், அங்கே இருப்பவர்கள் ஆம்தாவாட்[த்] என்று தான் சொல்கிறார்கள்! ஆங்கிலத்தில் படிப்பதற்கும் குஜராத்தி மொழியில் படிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   நீக்கு
 13. சாலை சிறப்பாக இருக்கிறது சரி! டோல்கேட் வசூல் இருக்கிறதா? அதற்கே சொத்தை எழுதி வைத்துவிட வேண்டி வருகிறதே தமிழகத்தில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில இடங்களில் டோல்கேட் வசூல் உண்டு! அத்தனை அதிகம் இல்லை. தமிழகம் மட்டுமல்ல, எல்லா இடங்களில் டோல் உண்டு. சில இடங்களில் நூற்றுக் கணக்கில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. ஐயா நானும் தங்களுடன் பயணிக்கிறேன்.

  அடியேனது கருட சேவை வலைப்பூவை வந்து பார்த்து அதில் உள்ள பிரச்சனை பற்றி தெரிவித்ததற்கு நன்றி. பிரச்னை சரியாகி விட்டதென்று நினைக்கிறேன். மறுபடியும் சென்று பார்க்கவும். சமயம் கிடைக்கும் போது அடியேனது திருக்கயிலாய யாத்திரை வலைப்பூவையும் சென்று பார்க்கவும். http://kailashi.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களது வலைப்பூவையும் மீண்டும் வந்து பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் சுப்ரமணியன் ஜி!

   நீக்கு
 15. ஹைய்யா... நான் சக்கடாவில் போயிருக்கேன்:-)

  http://thulasidhalam.blogspot.com/2010/02/12.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நீங்க போயிருக்கீங்களா? பார்க்கிறேன்!

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 16. "குஜராத் மாநிலத்திலும் வட இந்தியாவினைப் போல பலரும் மெதுவாகத் தான் துயிலெழுவார்கள் போலும்!" _____ ஒருவேளை இந்தியா முழுவதும் ஒரே 'டைம் ஸோன்' ஆக இருப்பதால் வரும் பிரச்சைனையாக இருக்குமோ !

  நாங்களும் குஜராத் சாலையில் முதலில் விரைவாக பயணித்து, இப்போது கொஞ்சம் மெதுவே நகர்வதுபோலவும் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....