புதன், 29 செப்டம்பர், 2010

வலைப்பூ உலகில் ஒரு வருடம்


பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் கவிதை, கதை, கட்டுரை என்று எதையேனும் பேப்பரில் கிறுக்கிக் கொண்டு இருப்பேன். வேலை கிடைத்து தில்லி வந்த பிறகு தமிழைத் தவிர வேறு துணை இல்லாத காரணத்தினால் கிடைக்கும் புத்தகங்கள், புதினங்கள் ஆகியவற்றை ஒன்று விடாமல் படிக்க ஆரம்பித்தேன்.

எழுதும் பழக்கமும் விடவில்லை. ஆனால் எழுதி வைத்த எதையும் யாரிடமும் படிக்கக் கூடக் காண்பித்ததில்லை. ஒவ்வொரு வீடாக மாறும் போதும், எழுதிய காகித கட்டுக்களை அங்கேயே விட்டு விடுவதும் எனக்கு பழகிப்போனது..

கணினியும், இணைய வசதிகளும் அறிமுகமான பின்னும் மற்றவர்களின் எழுத்துகளைப் படிப்பது தவறவில்லை. தமிழில் உள்ள இணைய தளங்களைத் தேடித் தேடி படிப்பேன். சென்ற வருடத்தில் தான் வலைப்பூ உலகம் எனக்கு அறிமுகமானது. அதனை எனக்கு அறிமுகப்படுத்தியது ரேகா ராகவன் என்ற புனைப் பெயரில் பத்திரிக்கை மற்றும் வலைப்பூக்களில் எழுதி வரும் திரு ராகவன்.

அவரின் ரேகா ராகவன் மற்றும் அன்பேசிவம் வலைப்பூ முகவரிகளை கொடுத்ததுடன் திரு கே.பி.ஜே, ரிஷபன், சத்யராஜ்குமார் போன்ற பிரபலங்களின் வலைப்பூக்களுக்கான சுட்டிகளை எனக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி, அதில் உள்ள நெளிவு-சுளிவுகள் போன்ற விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்.

அவரின் உதவியுடன் வலைப்பூ ஆரம்பித்து, கடந்த 30 செப்டம்பர் 2009 அன்று எனது முதலாவது பதிவாக ”குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர் நடராஜனும்” வெளியிட்டேன். இன்றுடன் முடியும் இந்த ஒரு வருடத்தில் இப்பதிவுடன் சேர்த்து 85 பதிவுகளை பதிவு செய்திருக்கும் இவ்வேளையில் என் முதற்கண் நன்றியை ரேகா ராகவன் அவர்களுக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த ஒரு வருடத்தில் 85 பதிவுகள், என்னைத் தொடரும் 59 பதிவாளர்கள், 766 கருத்துரைகள், கணக்கற்ற முகம் தெரியா நண்பர்கள், தில்லியில் பதிவர் சந்திப்புகள், வலைச்சரத்தில் நான்கு அறிமுகங்கள் என வளர்ந்துள்ளேன்.

இந்த ஒரு வருடத்தில் எனது எழுத்தினைப் படித்து, எனக்கு ஆதரவு அளித்த வலைப்பூ உலக நட்புக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இதே ஆதரவினை எனக்குத் தொடர்ந்து அளிக்கவும் வேண்டுகிறேன்.


வெங்கட் நாகராஜ்
புது தில்லி

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சென்னை பயணமும் சில சந்திப்புகளும் - பகுதி-2

இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கலாம்!!

தமிழ்நாடு விரைவு வண்டியில் இரவு 10.00 மணிக்கு சென்னையில் கிளம்பினால் 33 மணி நேரம் பயணித்த பிறகு இரண்டாம் நாள் காலை 07.00 மணிக்கு உங்களை தில்லியில் சேர்க்கும். சற்றே நீளமான இந்தப் பயணத்தில் சக பயணிகள், உணவளிக்கும் இரயில்வே வேலையாட்கள், வியாபாரிகள் என நீங்கள் சந்திக்கும் நபர்கள் ஏராளம்.

இரவு 09.00 மணிக்கே, சென்னை சந்திப்பின் ஐந்தாம் நடைமேடைக்கு வந்தால் தமிழ்நாடு காத்திருந்தது. உள்ளே சென்று என் பெட்டியை இருக்கைக்குக் கீழே வைக்கலாம் எனக் குனிந்த போது அங்கே ஏற்கனவே ஒரு பெட்டி சங்கிலியால் இருக்கையுடன் கட்டப்பட்டு இருந்தது. யாருடையது என விசாரித்ததில் சன்னலோர இருக்கைக் காரருடையது எனத் தெரிய வந்து அவரிடம் " உங்கள் இருக்கையின் கீழே வைத்து இருக்கலாமே! " என்ற போது "அங்க மழை பெய்து ஒரே ஈரம், அதனால் தான் இங்கே வைத்து இருக்கிறேன், நீங்க உங்க பெட்டியை தாராளமா அங்கே வைத்துக்கொள்ளுங்கள்!!" என்றார். அவர் பெட்டி மட்டுமே நனைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்கு. ஏற்கனவே இருந்த கண்வலி வேதனையோடு இந்த வேதனையும் சேர்ந்து கொண்டது.

பொதுவாக இது போன்ற நீண்ட நேர பயணத்தின் போது உங்களுக்கு பெட்டியின் நடுவில் இருக்கும் இருக்கைகள் கிடைத்து விட்டால் பரவாயில்லை. 72 படுக்கைகள்/இருக்கைகள் கொண்ட பெட்டியில் முதல் எட்டோ, கடைசி எட்டோ கிடைத்தால் கொஞ்சம் அசௌகரியம்தான். அந்த விதத்தில் எனக்கு தில்லி – சென்னை, சென்னை – தில்லி இரண்டு பயணமுமே முதல் எட்டிலும், கடைசி எட்டிலும் அமைந்தது துரதிர்ஷ்டம். இரண்டுமே கழிவறையின் பக்கத்தில் இருப்பதால், காலை ஐந்து மணிக்கே விதவிதமான “DTS Sound Effects” உங்களை தூங்க விடாமல் எழுப்பி விடும்.

பல் தேய்க்கிறேன் பேர்வழி என்று சிங்கம், புலி, காண்டாமிருகம், டைனசோர் போன்ற எல்லாவித மிருகங்களின் குரலைக் கலந்து சத்தம் எழுப்புகின்ற பல பேர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் வீட்டில் இருக்கும் போது பல் தேய்க்கவே மாட்டார்களோ என்பது எனது நீண்ட நாள் சந்தேகம்!

கடந்த 20 வருடங்களாக இந்த வழியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு பயணத்திலும் சிலரை தவறாமல் பார்க்கிறேன். முதலாவது, ஆந்திரா மாநிலத்தின் வாரங்கல் ரயில் நிலையத்தில் வண்டியில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக பேப்பர் விற்கும், கையில் குச்சியுடன் நடக்கும் ஒரு கால் சரியில்லாத வயதானவர். கடின உழைப்பு – எஸ்-1- இல் ஆரம்பித்து எஸ்-12 வரை சென்று பேப்பர் விற்று விட்டு, அங்கிருந்து திரும்பும்போது கடலை மிட்டாய் விற்றபடி வருவார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை இம்முறை அந்த நபர் தென்படவில்லை. அடுத்த முறை விசாரிக்க வேண்டும்.

இரண்டாவது மஹாராஷ்டிரா மாநிலத்தின், பல்லார்ஷா ரயில் நிலையத்தில் “சாப்பாடு, சாப்பாடு” என செந்தமிழில் எலுமிச்சை, தயிர் சாதம் விற்கும் பெண்மணி. முன்பெல்லாம் சாப்பாட்டுப் பொட்டலங்களை தன் தலையிலேயே ஒரு ஒயர்கூடையில் வைத்துக்கொண்டு விற்ற அவர் இப்போது வேறொரு இளம் பிராயத்தினன் தலையில் வைத்துக் கூவி விற்கிறார். வயது ஆகிவிட்டாலும் இன்னமும் உழைத்துக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பிரமிப்பு ஏற்படும். வண்டி அங்கு நிற்கும் பத்து நிமிடத்திற்குள் பையில் இருக்கும் சாப்பாடுப் பொட்டலங்கள் அனைத்தையும் விற்று விடுவார். கடின உழைப்பு என்றும் வீண் போவதில்லை என்பதற்கு தாராளமாய் இந்த அம்மாவை உதாரணம் காட்டலாம் .

இந்த நினைவுகளோடேயே தூங்கிப்போனேன். “சலோ சலோ, நிஜாமுதீன் ஆகயா! ஜல்தி உதரோ” பழக்கப்பட்ட ஹிந்தி சப்தங்கள் தில்லிக்கு என்னை மீண்டும் வரவேற்றன. புது தில்லி ரயில் நிலையத்திலிறங்கி, வீடு சென்று அலுவலகம் செல்ல தயாராக வேண்டும், இனி அடுத்த பயணம் எப்போழுதோ என்ற எண்ணங்களோடு முடிந்தது இப்பயணம்.

புதன், 22 செப்டம்பர், 2010

சென்னை பயணமும் சில சந்திப்புகளும்



ஒவ்வொரு பயணங்களும் நமக்கு பல விஷயங்களை, நினைவுகளைத் தந்து விட்டுத்தான் செல்கின்றன. கடந்த 09.09.2010 [வியாழன்] அன்று தில்லியிலிருந்து கிளம்பி சென்னை சென்று, உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு 14.09.2010 [செவ்வாய்] காலை தில்லி திரும்பினேன். இப் பயணம் எனக்களித்த சில சந்திப்புகள், நினைவுகள், பரிசுகள் ஆகியவைகளைப் பற்றிய பகிர்வு இது! ஒரு முக்கிய நபரையும் இந்த பயணத்தில் சந்தித்தேன். அவரை பற்றி கடைசியில் சொல்கிறேனே…

பிரயாண ஆரம்பமே கலகலப்பாக அமைந்தது. நானிருந்தது எஸ்-8 கோச். வண்டி கிளம்ப இன்னும் 15 நிமிடங்கள் இருக்கும்போது இரு நபர்கள் எங்கள் கோச்சில் ஏறி 6 மற்றும் 8-ஆம் இருக்கையில் உட்கார்ந்த நபர்களிடம் அந்த இருக்கைகள் அவர்களது என தமிழில் ஹிந்தி பேசினர். உட்கார்ந்திருந்த நபர்களோ, ”இல்லை, இல்லை, இது எங்கள் இருக்கைகள், நாங்கள் தான் முன்பதிவு செய்துள்ளோம்” என மறுத்தனர். அந்த நால்வரும் தாங்களே முன்பதிவு செய்திருப்பதாக வாதாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் பயணச்சீட்டைக் காண்பிக்க ஒருவரும் தயாரில்லை. ஒரு வழியாக மெதுவாக வந்த நபர்களின் சீட்டை வாங்கிப் பார்த்தால் – அவர்களிடம் எஸ்-8, 6 மற்றும் 8-ஆம் இருக்கைகளுக்கான முன்பதிவுச் சீட்டு இருந்தது. தேதியில் மட்டுமே சிறு குழப்பம். அது 09.10.2010. ரொம்பவுமே சுறுசுறுப்பாக ஒரு மாதம் முன்பே ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டனர் பாவம்! “சார், இது அக்டோபர் 9-ஆம் தேதிக்கான பயணச்சீட்டு!, நீங்கதான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக – ஒரு மாசம் முன்னாடியே வந்துட்டீங்க” என்றால் ”இப்ப நடக்கறது அக்டோபர் மாசம்தானே சார், என்று சொன்னபடியே” இறங்கிச் சென்றனர்.

”குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!” என்பது இதுதானோ?" எப்பொழுதும் நாம் முன்பதிவு செய்த பின்பு டிக்கெட்டில் பதிவு செய்திருக்கும் விவரங்கள் சரிதானா என்று பார்த்துக் கொள்வது நல்லது!

முன் பதிவு செய்ததில் எனக்குக் கிடைத்தது கீழ் Berth. ஒரு கைக்குழந்தையுடன் இருந்த பெண்மணிக்குக் கிடைத்தது மேல் Berth. தனக்கு பக்கவாட்டில் உள்ள கீழ் Berth கிடைத்தால் சௌகரியமாக இருக்கும் என்று அதில் இருந்தவரிடம் போய் கேட்டதற்கு , அவரோ – “ம்.. தர மாத்தேன் போ… எனக்குத் தான் இது!” என்று சற்றே பெரிய குழந்தை போல அடம் பிடிக்கவே, மனிதாபிமானத்துடன் என்னுடைய கீழ் Berth- ஐ அந்த குழந்தைக்காரிக்கு விட்டுக் கொடுத்தேன். அவளும் சுகமாக பயணம் செய்து வந்தாள் – Berth- ஐ விட்டுக்கொடுத்த எனக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல். சரி அவ்வளவு தான், நாம் எதிர்பார்ப்பதுதான் தப்பு என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன், பின்னர் பெரிய பரிசாக எனக்குக் கிடைக்கப்போவதை தெரியாமலே.

பொதுவாக இரண்டாம் வகுப்பில் பயணம் செல்லும் பயணிகள், நீங்கள் கேட்கிறீர்களோ இல்லையோ, உங்களிடம் தாமாகவே சொல்வர் – “நான் எப்பவுமே ஏ.சி.யில் தான் செல்வேன், தத்காலில் கூட கிடைக்கவில்லை” என்று . நான் ஏ.சி.யில் பயணம் செய்யும் போதும் இதே கதைதான் – தாம் எப்போதுமே விமானத்தில்தான் செல்வதாக சொல்லிக்கொள்வர். ஏன் இந்த மனநிலை என்பது புரிவதில்லை.

சென்னை அடைந்து, உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டேன். முதல் நாளில் வைத்திருந்த வரவேற்பு விழாவில், சக்தி விகடன் பத்திரிக்கையின் முதன்மை பொறுப்பாசிரியர் திரு ரவி பிரகாஷ் அவர்களைச் சந்திக்கவும் அவருடன் சுமார் பதினைந்து நிமிடங்கள் பேசவும் எனக்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. அவரது வலைப் பூவில் எழுதிக் கொண்டு இருக்கும் விஷயங்கள் பற்றியும் பொதுவாகவும் இருவரும் அளவளாவினோம். அவருடன் பேசியது என்னை மேலும் எழுத ஊக்குவித்ததில் சந்தேகமில்லை. அவர் எழுதிக்கொண்டு இருக்கும் இரு வலைப்பூக்கள் – என் டைரி மற்றும் உங்கள் ரசிகன்.

எனக்குக் கிடைத்த பரிசு

கைக்குழந்தைக்காரிக்கு என் இருக்கையை விட்டுக் கொடுத்தேன் என்று சொன்னேன் அல்லவா?அவள் எனக்குக் கொடுத்த மறக்க முடியாத பரிசு – அவளுக்கு இருந்த கண் வலி [Eye Flu – Madras Eye] எனக்கும்! வாய் வார்த்தையாகச் சொல்லும் “நன்றி!” சீக்கிரம் மறந்து விடும் என்று நினைத்தாளோ என்னமோ!.

நல்ல வேளை திருமணம் முடிந்த பிறகே எனக்கு கண் வலிக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்ததால் மணம் முடித்த தம்பதிக்கும், மற்ற விருந்தினர்களுக்கும் நானும் இதையே பரிசாகக் கொடுக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தோடு மண்டபத்தை விட்டு திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வெளியேறினேன்.

பயணத்தில் கிடைத்த மற்ற விஷயங்களை இரண்டாம் பாகமாக போட்டு விடுகிறேன். உங்களுக்கும் நல்லது – எனக்கும் நல்லது… [”உனக்கு என்ன நல்லது, இன்னுமொரு இடுகையா?” என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல… ஹிஹிஹி…]

தொடரும்…

சனி, 18 செப்டம்பர், 2010

அந்த இரண்டு பேர்


“ஐயோ அம்மா யாராவது காப்பாத்துங்களேன்... பக்கத்திலேயே நிறைய பேச்சுக்குரல்கள் கேட்கிறதே, ஆனாலும் யாருக்கும் என்னோட குரல் கேட்கலையா என்ன?” வலியோடு அரற்றினான் கோபி.

என்ன நடந்தது எனக்கு? ஆட்டோவில் சக ஓட்டுனர் மாரியுடன் முன்னால் உட்கார்ந்து சவாரி ஏற்றிக்கொண்டு வந்தோம். எதிரே அசுர வேகத்தில் வந்த பேருந்துடன் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது ஆட்டோ. அதன் பிறகு நடந்தது நினைவில் இல்லை. எத்தனை நேரமாக இந்த இடத்தில் கிடக்கிறோம்? தெரியவில்லை. வெளியே பேச்சுக்குரல்கள்….

“என்னவொரு கோரமான விபத்துப்பா? ஆட்டோ முற்றிலும் உருத்தெரியாமல் மாறிவிட்டது. டிரைவர் மாரிக்கு உடம்பு, தலை முழுவதும் அடிபட்டு ரத்தம் ஆறாய் ஓடிச்சுப்பா. பின்னால் உட்கார்ந்திருந்த இரு பயணிகளுக்கும் பலத்த அடி. நல்ல வேளையா பின்னாலே வந்த ஒரு ஜீப்பில் அடிபட்டவங்களை மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க.”

யாரோ பேசியது முதலில் அவனுக்குக் கேட்டது. இப்போது ஒரு சில குரல்களே கேட்டது. ஒவ்வொருவராக அங்கிருந்து விலகிச் செல்கின்றனர் போலும். ஆனால் யாருக்குமே அவனின் முனகல் சத்தம் கேட்கவில்லையா? “யாருங்க அங்கே, இங்க பாருங்க, என்னைக் காப்பாத்துங்க!” சற்று முயன்று குரலை உயர்த்தி சொல்லிப் பார்த்தான் கோபி.

வெளியேயிருந்து, “சரிடா கிளம்பு, நானும் வீட்டுக்கு போய் அலுவலகத்துக் கிளம்பணும்!” என்று சொல்லும் ஓசை.

”ஏன் நம்ம குரல் கேட்கவில்லை இவர்களுக்கு?” கழுத்தில் கையை வைத்துக்கொண்டு கடைசி முயற்சியாய் “என்னைக் காப்பாத்துங்க!” என்று அலறியபடி சாய்ந்தான்.

"என்னைக் காப்பாத்துங்க!”--குரல் கேட்டு கிளம்பிய இருவரும் நின்றனர். சுற்று முற்றும் பார்த்தால் ஒருவரும் இல்லை. ஒருவேளை பிரமையோ? இல்லை “காப்பாத்துங்க! என்ற ஈனஸ்வரம் கேட்டதே. பக்கத்திலே உள்ள பள்ளத்தில் சலசலப்பு. உள்ளே பார்த்தால் செடிகளுக்கிடையே ரத்த வெள்ளம். கிடுகிடுவென கீழே இறங்கி பார்த்தால் கழுத்திலிருந்து தலை பாதி அளவு துண்டித்த நிலையில் காக்கி உடையிலிருந்த கோபி.

அவனிடமிருந்து மெலிதாக ஸ்வாசம் வந்து கொண்டு இருந்தது. வெளியே கொண்டு வந்து அந்த வழியே வந்த அடுத்த வாகனத்தில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஒரு வார கடும் முயற்சிக்குப் பிறகு பிழைத்தெழுந்த கோபி, தனக்கு உயிர் கொடுத்த அந்த இரண்டு நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறிக் கொண்டு இருந்தான்.

இந்த நிகழ்ச்சி நெய்வேலியில் பல வருடங்கள் முன்பு உண்மையாக நடந்த ஒன்று. இன்றும் கோபி நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி தன்னுடைய குடும்பத்தினைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

குறையொன்றுமில்லை!

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு மயங்கும் மாலைப்பொழுது. மனதில் ஏதோ ஒரு குழப்பம் – எல்லாவற்றின் மீதும் அப்படி ஒரு வெறுப்பு!” ச்சே! என்ன வாழ்க்கை இது – இயந்திர மயமான வாழ்க்கை – ஓட்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறோம்” என்ற எண்ணம். எல்லோருக்கும் இது போன்ற சில சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் அவ்வப்போது வரும் என்று நினைக்கிறேன்.

இரவு அந்த எண்ணத்துடனேயே உணவு உண்டு, தூக்கம் வராமல் கணினியைத் திறந்து, மின்னஞ்சல் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்க்க அமர்ந்தேன். எப்பொழுதும் போல நிறைய மின்னஞ்சல்கள் – அதில் அலுவலக நண்பர் ஒருவரிடமிருந்து “The Dance” என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் வந்திருக்க, சரி பார்க்கலாம் என்று அதைத் திறந்தேன்.

“HAND IN HAND” என்ற தலைப்பில் ஒரு நடனம். ஆடியவர்களின் பெயர்கள்: Ma Li, Zhai Xiowel; நடன இயக்குனர்: Zhao Limin.

ஐந்து நிமிடங்கள் நடனம். அதைப் பார்க்கப் பார்க்க மனதில் இருந்த குழப்பங்கள் மெல்ல மெல்ல காற்றில் கலக்கும் புகை போல விலக ஆரம்பித்தது. நமக்கு வரும் குழப்பங்கள் எல்லாமே சர்வ சாதாரணம் என்ற நினைவு வலுக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் ஒரு பெண் தனியே நடனம் ஆட, சில நிமிடங்களில் அப்பெண்ணுடன் இன்னொரு ஆணும் சேர்ந்து கொள்ள, ஐந்து நிமிடங்கள் கண் சிமிட்டாமல் அந்த ஆட்டத்தில் மூழ்கினேன். மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் விலகியது. எந்த சந்தர்ப்பத்திலும் அழுகை வராத எனக்கு கண்களில் கண்ணீர் திவலைகள் எப்போது வெளிவரலாம் எனக் காத்திருந்தது.

ஆட்டத்தின் போது அந்தப் பெண் மற்றும் ஆணின் முகங்களில் அப்படி ஒரு பேரானந்தம். மக்களின் கரகோஷங்கள் எதுவுமே என் காதில் கேட்கவில்லை. தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை உணர்த்தியது அந்த நடனம். அந்த நடனத்தின் பின்னால் இருந்த உழைப்பு, ”முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பதை எனக்கு உணர்த்தியது.

நீங்களும் பாருங்கள். முடிந்தால் மற்றவர்களுக்கும் இப் பதிவின் சுட்டி அனுப்பிப் பார்க்கச் சொல்லுங்கள்.


The Dance