எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 24, 2010

சென்னை பயணமும் சில சந்திப்புகளும் - பகுதி-2

இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கலாம்!!

தமிழ்நாடு விரைவு வண்டியில் இரவு 10.00 மணிக்கு சென்னையில் கிளம்பினால் 33 மணி நேரம் பயணித்த பிறகு இரண்டாம் நாள் காலை 07.00 மணிக்கு உங்களை தில்லியில் சேர்க்கும். சற்றே நீளமான இந்தப் பயணத்தில் சக பயணிகள், உணவளிக்கும் இரயில்வே வேலையாட்கள், வியாபாரிகள் என நீங்கள் சந்திக்கும் நபர்கள் ஏராளம்.

இரவு 09.00 மணிக்கே, சென்னை சந்திப்பின் ஐந்தாம் நடைமேடைக்கு வந்தால் தமிழ்நாடு காத்திருந்தது. உள்ளே சென்று என் பெட்டியை இருக்கைக்குக் கீழே வைக்கலாம் எனக் குனிந்த போது அங்கே ஏற்கனவே ஒரு பெட்டி சங்கிலியால் இருக்கையுடன் கட்டப்பட்டு இருந்தது. யாருடையது என விசாரித்ததில் சன்னலோர இருக்கைக் காரருடையது எனத் தெரிய வந்து அவரிடம் " உங்கள் இருக்கையின் கீழே வைத்து இருக்கலாமே! " என்ற போது "அங்க மழை பெய்து ஒரே ஈரம், அதனால் தான் இங்கே வைத்து இருக்கிறேன், நீங்க உங்க பெட்டியை தாராளமா அங்கே வைத்துக்கொள்ளுங்கள்!!" என்றார். அவர் பெட்டி மட்டுமே நனைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்கு. ஏற்கனவே இருந்த கண்வலி வேதனையோடு இந்த வேதனையும் சேர்ந்து கொண்டது.

பொதுவாக இது போன்ற நீண்ட நேர பயணத்தின் போது உங்களுக்கு பெட்டியின் நடுவில் இருக்கும் இருக்கைகள் கிடைத்து விட்டால் பரவாயில்லை. 72 படுக்கைகள்/இருக்கைகள் கொண்ட பெட்டியில் முதல் எட்டோ, கடைசி எட்டோ கிடைத்தால் கொஞ்சம் அசௌகரியம்தான். அந்த விதத்தில் எனக்கு தில்லி – சென்னை, சென்னை – தில்லி இரண்டு பயணமுமே முதல் எட்டிலும், கடைசி எட்டிலும் அமைந்தது துரதிர்ஷ்டம். இரண்டுமே கழிவறையின் பக்கத்தில் இருப்பதால், காலை ஐந்து மணிக்கே விதவிதமான “DTS Sound Effects” உங்களை தூங்க விடாமல் எழுப்பி விடும்.

பல் தேய்க்கிறேன் பேர்வழி என்று சிங்கம், புலி, காண்டாமிருகம், டைனசோர் போன்ற எல்லாவித மிருகங்களின் குரலைக் கலந்து சத்தம் எழுப்புகின்ற பல பேர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் வீட்டில் இருக்கும் போது பல் தேய்க்கவே மாட்டார்களோ என்பது எனது நீண்ட நாள் சந்தேகம்!

கடந்த 20 வருடங்களாக இந்த வழியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு பயணத்திலும் சிலரை தவறாமல் பார்க்கிறேன். முதலாவது, ஆந்திரா மாநிலத்தின் வாரங்கல் ரயில் நிலையத்தில் வண்டியில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக பேப்பர் விற்கும், கையில் குச்சியுடன் நடக்கும் ஒரு கால் சரியில்லாத வயதானவர். கடின உழைப்பு – எஸ்-1- இல் ஆரம்பித்து எஸ்-12 வரை சென்று பேப்பர் விற்று விட்டு, அங்கிருந்து திரும்பும்போது கடலை மிட்டாய் விற்றபடி வருவார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை இம்முறை அந்த நபர் தென்படவில்லை. அடுத்த முறை விசாரிக்க வேண்டும்.

இரண்டாவது மஹாராஷ்டிரா மாநிலத்தின், பல்லார்ஷா ரயில் நிலையத்தில் “சாப்பாடு, சாப்பாடு” என செந்தமிழில் எலுமிச்சை, தயிர் சாதம் விற்கும் பெண்மணி. முன்பெல்லாம் சாப்பாட்டுப் பொட்டலங்களை தன் தலையிலேயே ஒரு ஒயர்கூடையில் வைத்துக்கொண்டு விற்ற அவர் இப்போது வேறொரு இளம் பிராயத்தினன் தலையில் வைத்துக் கூவி விற்கிறார். வயது ஆகிவிட்டாலும் இன்னமும் உழைத்துக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பிரமிப்பு ஏற்படும். வண்டி அங்கு நிற்கும் பத்து நிமிடத்திற்குள் பையில் இருக்கும் சாப்பாடுப் பொட்டலங்கள் அனைத்தையும் விற்று விடுவார். கடின உழைப்பு என்றும் வீண் போவதில்லை என்பதற்கு தாராளமாய் இந்த அம்மாவை உதாரணம் காட்டலாம் .

இந்த நினைவுகளோடேயே தூங்கிப்போனேன். “சலோ சலோ, நிஜாமுதீன் ஆகயா! ஜல்தி உதரோ” பழக்கப்பட்ட ஹிந்தி சப்தங்கள் தில்லிக்கு என்னை மீண்டும் வரவேற்றன. புது தில்லி ரயில் நிலையத்திலிறங்கி, வீடு சென்று அலுவலகம் செல்ல தயாராக வேண்டும், இனி அடுத்த பயணம் எப்போழுதோ என்ற எண்ணங்களோடு முடிந்தது இப்பயணம்.

12 comments:

 1. nanum kadantha murai payanthil antha newspaper periyavarai parthen

  ReplyDelete
 2. பெட்டி வைக்க இடம்பிடிக்கிரவங்களால் அந்த நேரத்து சூழ்நிலையே கெட்டுபோகும்..

  ReplyDelete
 3. //காலை ஐந்து மணிக்கே விதவிதமான “DTS Sound Effects” உங்களை தூங்க விடாமல் எழுப்பி விடும்.//

  நல்லா காமெடிப் பண்றிங்கப்பா! ஹா! ஹா! ஹா! வாய்விட்டு சிரிச்சேன்.

  அருமையா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்

  ReplyDelete
 4. //முதல் எட்டிலும், கடைசி எட்டிலும் அமைந்தது துரதிர்ஷ்டம். இரண்டுமே கழிவறையின் பக்கத்தில் இருப்பதால், காலை ஐந்து மணிக்கே விதவிதமான “DTS Sound Effects” உங்களை தூங்க விடாமல் எழுப்பி விடும்//.

  DTS மட்டுமல்ல.. washroom போறதுக்காக காத்திருக்கிறவங்க சிலசமயம்,கொஞ்ச நேரத்துக்கு பக்கத்து இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொள்வதும் உண்டு :-))

  ReplyDelete
 5. நெக்ஸ்ட் டைம் இதர் கமிங்க்...ஹம் மீட்டிங்! டீக் ஹை? :-)

  ReplyDelete
 6. வெங்கட், அடுத்த தடவை வரும்போது அப்படியே கோயமுத்தூருக்கும் ஒரு நடை வந்துட்டுப்போங்க.

  ReplyDelete
 7. சுவாரசியமான பதிவு. கூடவே பயணிக்கிற மாதிரி உணர்வு வந்தது.

  ReplyDelete
 8. நல்ல பயண அனுபவ பகிர்வு.

  ReplyDelete
 9. //72 படுக்கைகள்/இருக்கைகள் கொண்ட பெட்டியில் முதல் எட்டோ, கடைசி எட்டோ கிடைத்தால் கொஞ்சம் அசௌகரியம்தான்.//

  வாழ்க்கையில்தான், முதல் எட்டிலும், கடைசி எட்டிலும் அடுத்தவர் தயவு தேவை. ரயில் பயணங்களிலும், முதல் எட்டிலும், கடைசி எட்டிலும் சங்கடம்தான். வாழ்க்கையே ஒரு பயணம்தானே!

  ReplyDelete
 10. எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம்..ரொம்ப நாட்கள் இவர்கள் வீட்டில் பல் தேய்க்கவில்லை என்று..
  உங்களைப் போலவே வெங்கட்!

  ReplyDelete
 11. வெங்கட் அண்ணன், உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
  http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

  ReplyDelete
 12. அன்பு வெங்கட்..
  இந்தப் பயணப்பதிவு ரொம்பவும் சுவையானது. நான் தினமும் தஞ்சைக்கும் சிதம்பரத்துக்குமான் ரயில் பயணத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிறைய பார்த்து அனுபவித்து வருகிறேன். சபை நாகரிகம் அறியாதவர்களை எண்ணி நான் எதுவும் செய்ய இயலாத இயலாமையில் வருத்தமுற்று என்னுடைய படைப்புக்களில் பதிவு செய்து வருகிறேன். காரி காரி துப்புவது (பெண்களும் சிலர் இப்படி),
  சளி சிந்துவது, வாஷ்பேஷினில் நீங்கள் சொல்வதுபோல் காட்டுமிராண்டித்தனமாக உமிழ்வது..மிருகங்கள் தேவலாம்....கை..விரல்களால் பள்ளம் தோண்டுவதுபோல் தோண்டுவது..அருவருப்பான செயல்களால் எப்படித்தான் இவர்கள் மனிதர்களாக உலவுகிறார்களோ?
  உங்களுடைய பதிவு பலவற்றை எழுத வைத்துவிட்டது. இதுபோல பல இருக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்வோம். உறரணி

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....