புதன், 28 அக்டோபர், 2009

குரங்கின் மாத சம்பளம் ஆறாயிரமா...!!


அன்று அரசு அதிகாரிகளின் முக்கியமான கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அலுவலகங்களிருந்தும் வந்திருந்த பெரிய அதிகாரிகள் தங்களது கட்டிடங்களில் குரங்கு தொல்லை அதிகமாக இருப்பதைப்பற்றி பேசினார்கள். குரங்குகள் பல அலுவலர்களுடைய உணவினைப்பிடுங்கி சாப்பிடுவது பற்றியும், கைப்பையினை பறித்து பொருள்களை எல்லாம் கொட்டி சேதப்படுத்தும் தொல்லையிலிருந்து தப்பிக்க எல்லா ஜன்னல்களுக்கும் கம்பி வலை பொருத்தியதையும் தாங்கள் எடுத்த மற்ற முயற்சிகள் பற்றியும் சொன்னார்கள். ஆனாலும் குரங்குகள் தொல்லை நிற்காததால் வேறு என்ன செய்யலாம் என்று முடிவு செய்ய பலரின் கருத்தையும் கேட்டனர்.

ஒருவர் குரங்குகளைப் பிடிக்க ஆட்களை நியமித்து, பிடித்த குரங்குளை அருகில் உள்ள காடுகளில் விடலாம் என்றார். வேறொருவர் குரங்குகளுக்கு விஷம் கொடுத்துவிடலாம் என்று சொல்ல, மற்றவர்கள் அதில் உள்ள பிரச்சனைகளை எடுத்து சொல்ல இந்த யோசனைகள் கைவிடப்பட்டது. பலவித யோசனைகளுக்குப்பிறகு பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்து தங்களுடைய திட்டத்துடன் வரும்படி சொல்வது எனவும், இதற்கு ஒரு நேர்முகத்தேர்வு வைக்கவும் முடிவு செய்தார்கள்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. நிறைய பேர் தங்களது புதிய திட்டங்களுடன் வந்திருந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் சாதரணமான உடை அணிந்து, தன்னுடன் ஒரு லங்கூர் வகை குரங்கினை அழைத்து வந்திருந்தான். மற்ற எல்லோரும் தங்களது யோசனைகளையும் அதற்கு எவ்வளவு பணம் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எல்லாமே பல லட்சங்கள் செலவாகும் திட்டங்கள்.

கடைசியாக லங்கூர் மனிதனிடம் அரசு அதிகாரிகள் "உன்னுடைய திட்டம் என்ன? என்று கேட்க. அவன் குரங்குளை பயமுறுத்தியே தன்னால் துரத்த முடியும்!" என்று கூறினான். ஒரு கட்டிடத்தில் குரங்குகள் வராமல் பார்த்துக்கொள்ள மாதம் ஆறாயிரம் ரூபாய் தந்தால் போதும் எனவும் சொன்னான். அது எப்படி உன்னால் முடியும் எனக் கேட்க, சாதாரண குரங்குகளுக்கு லங்கூர் வகை குரங்கினை கண்டால் பயம், ஆகவே அதை பயமுறுத்தி துரத்தினால் அவைகள் அந்த இடத்தினை விட்டு வேறிடத்திற்கு சென்று விடும் என கூறினான். இந்த ஏற்பாடு நன்றாகவும் செலவு குறைவாக ஆகும் என்பதாலும் அந்த லங்கூர் வகை குரங்கினை தற்காலிக பணியாளராக அமர்த்துவது என முடிவு செய்தனர். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு லங்கூர் இப்போது பணியாளராக அமர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் - ஒவ்வொரு கட்டிடத்திலிருந்தும் ருபாய் ஆறாயிரம். இது கடைநிலை ஊழியராக உள்ள தற்காலிக பணியாளரின் சம்பளத்தை விட அதிகம். அவர்களுக்கு மாதம் நாலாயிரம் தான்!!

இந்த ஏற்பாடு நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் குரங்குகள் தொல்லை இப்போதும் குறைந்தபாடில்லை . குரங்குகள் லங்கூர் மனிதனிடம் ஒப்பந்தம் செய்து விட்டதோ என்னமோ - நீ துரத்துற மாதிரி துரத்து நாங்க ஓடற மாதிரி ஓடறோம். நாங்க மொத்தமா ஓடிட்டா உனக்கும் வேலை போயிடும் அப்புறம் உன் சாப்பாட்டுக்கு எங்கே போவே? .

புதன், 21 அக்டோபர், 2009

குரங்கு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?




குரங்கு உங்களை கடித்து விட்டால் வேறு வழியில்லை மருத்துவம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். வேறு யாரையாவது கடித்திருந்தால் அவரிடமிருந்து பத்து பதினைந்து அடியாவது தள்ளி இருப்பது உசிதம்.


முதலில் கடிவாயை [கடி பட்ட இடத்தை] தண்ணீர் மற்றும் சோப் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் மஞ்சள் பொடி ஆயின்மென்ட் போன்ற எதையும் போடக்கூடாது. அப்படி போடுவதினால் கிருமிகள் கடிவாயிலேயே சிறை செய்யப்பட்டு உங்களுக்கு தொல்லை தரக்கூடும். ரத்தம் நிறைய வராமல் இருக்கும் பட்சத்தில் கட்டு போடாமல் இருப்பது நலம். இந்த முதலுதவியை செய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் சென்று மருத்துவரை நாடுவது மிகவும் முக்கியம்.


இந்த பதிவு எழுத காரணம் எனது அலுவலக நண்பர் திரு விஜயராகவன். அவர் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து போவார். ஒரு நாள் காலை எட்டே முக்கால் மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி ஒரு சிகரெட் பிடித்தபடியே நடந்து வந்திருக்கிறார். அருகே உள்ள மரத்தில் ஒரு குரங்கு தன் சுற்றம் சூழ அளவளாவிக்கொண்டு இருந்திருக்கிறது. நண்பரும் சிகரெட்டை அனுபவித்துக்கொண்டே அந்த மரத்தின் பக்கத்தில் நடக்க, நெருப்பைக்கண்ட அந்த தாய்க் குரங்கு தாவி வந்து நண்பரின் தொடைப்பகுதியிலிருந்து அரை கிலோ சதையை எடுத்த மாதிரி கடித்துவிட்டு ஓட, வலியில் நண்பரும் அலறியபடிசாலையில் ஓட ஒரே களேபரம். விஷயம் தெரிந்து நானும் சக நண்பரும் விஜயராகவனுக்கு முதலுதவி அளித்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஒரு ஊசி போட்டு சில மருந்துகளும் கொடுத்தார்கள். மாதத்திற்கு ஒரு ஊசிவீதம் ஆறு மாதத்திற்கு போட வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நண்பரை பார்க்கும்போதெல்லாம் அவரை கலாய்ப்பதே எங்களுக்கு வேலை. அவருக்குக் "குரங்காட்டி" என்ற நாமகரணமும் செய்து, குரங்கை பற்றியே ஏதாவது கேள்வி கேட்டு அவரை மடக்கிக் கொண்டிருப்போம். அவரும் எங்கே குரங்கினை பார்த்தாலும் " ஆஞ்சநேயா! நீ கடிக்கற அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணிட்டேன்? " என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.


இந்த பதிவினை எழுத காரணமாக இருந்த நண்பர் விஜயராகவனுக்கும் அவரைக் கடித்த திருவாளர் குரங்கிற்கும் எனது நன்றி.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

தில்லி நகரின் தனியார் பேருந்துகள்

புது தில்லியில் ஓடும் தனியார் பேருந்துகள் தவறான பல காரணங்களுக்காக மிகவும் பிரபலம். Blue Lines/Red Lines/Whilte Lines போன்ற பல பெயர்களில் இயங்கும் இப்பேருந்துகள் நாளிதழ்களால் Killer Lines என்றே அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இப்பேருந்துகளால் மரணம் அடைந்தோர் பலர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைவதில்லை.

ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதமே சரியாக இருப்பதில்லை. சுத்தம் செய்யப்படாத இந்த பேருந்துகளில் நீங்கள் அழுக்காகாமல் பயணம் செய்ய முடியாது.


கல்யாணம் ஆன புதிதில் தில்லி வந்த என் மனைவி இப்பேருந்துகளை பார்த்ததும் சொன்னது - "என்னங்கய்யா பஸ் இது. எங்க ஊருக்கு வந்து பாருங்க, அங்க இருப்பது தான் பஸ், இதெல்லாம் குப்பை லாரி!". இதனால் என் மனைவியுடன் வெளியே செல்ல வேண்டிய அவசியம் வரும்போதெல்லாம் எனக்கு ஆட்டோவில் போக வேண்டிய கட்டாயம்.


அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வளவு குப்பை. இங்குள்ளவர்கள் குளிர் காலம் வந்தால் போதும், கிலோ கிலோவாக வேர்கடலை சாப்பிடுகிறார்கள். பேருந்தில் உள்ளேயே வேர்கடலையின் தோலை உடைத்து அங்கேயே கீழே போடுகிறார்கள். சுத்தம் என்பது சுத்தமாக இல்லாத ஒரு இடம் இது. இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் உள்ள சுத்தமான/அழகான பேருந்துகள், மற்றும் காலையில் குளித்து, சுத்தமாக இருக்கும் பணியாளர்கள் நினைவில் வந்து போகிறார்கள்.


எந்த ஒரு நடத்துனரும் விசில் வைத்து இருப்பதில்லை. பேருந்தில் கையால் ஒரு தட்டு தட்டினால் வண்டி நிற்கும். இரண்டு தட்டு தட்டினால் வண்டி ஓடும். வண்டி Stand-ல் வந்து நின்றவுடன் வண்டி செல்லும் இடங்களுடைய பெயர்களை வரிசையாக கத்துகிறார்கள்.


ஒரு முறை ITO என்கிற இடத்தில் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன். ஒரு வண்டி வந்து நிற்க, அதில் உள்ள நடத்துனர் "நாய்டா, நாய்டா" என்று என்னைப்பார்த்து கத்த நான் பயந்து போய் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் ஒரு நாயையும் [!] காணாமல், குழப்பத்துடன் நின்றேன். பிறகு தான் புரிந்தது, அவன் கூறுவது NOIDA [New Okhla Industrial Development Authority] என்ற இடத்திற்கு அந்த பஸ் செல்கிறது என்பது.

வியாழன், 15 அக்டோபர், 2009

எதிர் வீட்டு தேவதை

கதிருக்கு இரவு உணவுக்கு பிறகு தன் வீட்டு மொட்டை மாடியில் உலாத்துவது மிகவும் பிடித்தமான விஷயம். எப்போதும் போல அன்றும் பத்து மணிக்கு மாடிக்கு சென்று உலவ ஆரம்பித்தான். அவனுடைய வீடு நூறு அடி ரோடின் ஒரு பக்கத்தில் இருந்தது. எதிர் பக்க வீட்டின் மாடியில் நீண்ட கூந்தலை உலர்த்தியபடி இருட்டில் ஒரு அழகிய உருவம் தெரிவதை பார்த்ததும் அவனுக்கு எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று மனசு குறுகுறுத்தது. சிறிது நேரம் கழித்து அந்த உருவம் கீழே இறங்கி சென்று விட ஏமாற்றத்துடன் கீழிறங்கிய அவன் அவள் நினைவாகவே தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான்.

அடுத்த நாளும் மொட்டை மாடிக்கு அவன் சென்று காத்திருந்தான். எதிர்பார்த்தபடியே இன்றும் அந்த எதிர் வீட்டு தேவதை வந்துவிட்டு சிறிது நேரம் கழித்து சென்றது.

இதே காட்சி மேலும் பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்தது.


கதிருக்கு அந்த கூந்தல் அழகியின் மேல் காதல் வர எப்படியாவது அந்த அழகியைப் பார்த்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்று இரவு யாருக்கும் தெரியாமல் எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று ஒரு மறைவிடத்தில் காத்திருந்தான்.

அப்போது அங்கே வந்த சர்தார் சத்னாம் சிங் தன் தலைப்பாகையை [பகடி] கழற்றி அவனுடைய நீண்ட கூந்தலை உதறியபடி நடக்க ஆரம்பித்தான். அதைப் பார்த்த கதிர் மயங்கி விழாத குறைதான். எப்படியோ தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தான்.


இப்போதெல்லாம் எந்த பெண்ணையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்த பிறகே அவர்களிடம் பேசவே ஆரம்பிக்கிறான் அவன்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

தேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி?

தில்லியில் உள்ள தமிழர்களின் குழந்தைகளின் தமிழ் பேசும் அழகே அழகு. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற எல்லா பாஷையும் கலந்து பேசுவார்கள். அவர்கள் பேசுவதை கேட்கும் போது ஏதோ ஒரு புரியாத மொழி கேட்பது போல் இருக்கும். தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது உள்ள தொகுப்பாளர்கள்/தொகுப்பாளினிகள் பேசுவதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே தமிழ் புலமையோடு பேசுகிறார்கள் தில்லி வாழ் தமிழ் குழந்தைகள்.

ஒரு முறை நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு சில தமிழ் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் நடக்கும் விவாதம் எல்லாமே பல மொழிகள் கலந்த ஒரு பாஷையில் இருந்தது. ஒரு சிறுவன் அப்போது தேங்காய் முற்றியதா, இளசா என்று பார்ப்பது எப்படி என்பது பற்றி விளக்கிக் கொண்டு இருந்தான். விவரம் கீழே:

"நாரியலை எடுத்து அதை உங்கிளியால் தட்டி பார்க்கணும். தட்டும் போது நல்ல ஆவாஜ் வந்தால் அது பக்கா தேங்காய், வரலைன்னா அது கச்சா தேங்கா!" .

என்ன ஒன்றும் விளங்க வில்லையா? விஷயம் இது தான். "தேங்காயை எடுத்து விரலால் தட்டி பார்த்து நல்ல சத்தம் வந்தால் அது முற்றிய காய். இல்லையெனில் அது இளசு!" என்பதைத் தான் அந்த தில்லி தமிழ்ச் சிறுவன் அப்படி சொல்லிக் கொண்டு இருந்தான்.

அப்பாடா ஒரு வழியா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் வந்து விட்டது!

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கரோல் பாக் - கல்யாண்புரி

நண்பர் வி.எஸ். தில்லி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. தனக்கு ஹிந்தி பேசதான் தெரியாது ஆனால் சுலபமாக படித்து விடுவேன் என்று எங்களிடம் பெருமையாக சொல்லி இருந்தார். அதனால் எங்கு வேண்டுமானாலும் என்னால் தனியாக போக முடியும் என்றும் எங்களிடம் தற்பெருமையாக சொல்லுவார்.

ஓர் நாள் அலுவலகம் முடிந்து நாங்கள் எல்லோரும் வீடு வந்து நண்பருக்காக காத்திருந்தோம். இரவு 09.00 மணி ஆகியும் வந்து சேரவில்லை. நாங்கள் கவலையுடன் காத்திருக்க இரவு 10.30 மணி அளவில் வி.எஸ். வந்து சேர்ந்தார். எல்லோரும் விசாரிக்க ஏதோ சொல்லி சமாளித்துக்கொண்டு இருந்தார். சரி பரவாயில்லை சாப்பிடுவோம் என்று சொல்லி சாப்பாடு முடித்து அவரை மீண்டும் வம்புக்கு இழுத்தோம், என்ன தான் நடந்தது சொல்லுங்கள் என்று. ஒருவாறு அவர் சொன்னது இது தான். தான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது எதிரில் ஒரு பேருந்து "க" என்று ஆரம்பிக்கும் அறிவிப்பு பலகையோடு வர அவசரமாக பேருந்து கரோல் பாக் போகிறது என்று ஏறி அமர்ந்து கொண்டு விட்டாராம். அரை மணி நேரம் ஆகியும் கரோல் பாக் வரும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. திடீரென பேருந்து யமுனை நதியை தாண்டி போய்க்கொண்டிருக்க, பதறியபடி அருகில் இருந்தவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் அந்த பேருந்து கல்யாண்புரி செல்கிறது என்று சொல்ல, சத்தம் இல்லாமல் கல்யாண்புரி வரை சென்று அதே பேருந்தில் அலுவலகம் திரும்ப வந்து, வேறு பேருந்து பிடித்து கரோல் பாக் வந்து சேர்ந்து இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர் வி.எஸ். யாரிடமும் தனது ஹிந்தி புலமை பற்றி வாயை திறப்பதே இல்லை.



வியாழன், 8 அக்டோபர், 2009

பிரட் பக்கோடா

அதிகாலை மூன்று மணி. Calling Bell ஓசை. தூக்கக்கலக்கத்துடன் கதவினை திறந்தேன். கலங்கிய கண்களுடன் வாசலில் ஒரு சிறுவன். உள்ளே அழைத்து என்ன என்று கேட்ட போது தான் எனக்கு அச்சிறுவன் யார் என்பது நினைவுக்கு வந்தது. தனது தந்தை திடீரென மார்பு வலி வந்து இறந்து விட்டதாகவும் வீட்டிலே அவனையும் அவனது தாயையும் தவிர வேறு ஒருவரும் இல்லை எனவும் அழுது கொண்டே கூறினான். உடனே நான் அவனுடன் அவர்களது வீட்டிற்கு சென்று மற்ற நண்பர்களை அழைத்து ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். இறந்து போனவருக்கு சுமார் 58 வயது. காலை ஒன்பது மணி வாக்கில் இறந்து போனவரின் தாயாரை தில்லியில் உள்ள அவரது இன்னொரு மகனின் வீட்டில் இருந்து அழைத்து வந்தார்கள். வந்த உடன் நேராக மகனின் உடல் மீது விழுந்து கதறி அழுதது எல்லோருக்கும் வருத்தமாகவும் பதற்றமாகவும் இருந்தது. எமன் என்னுடைய உயிரை எடுத்து இருக்கலாமே, நான் இருந்து என்ன செய்ய போகிறேன் என்றெல்லாம் புலம்பியபடி இருந்தார். அவரை யாராலும் ஆசுவாசப்படுத்த முடியவில்லை. சுமார் இரண்டு மணிக்கு தகனத்துக்காக உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தபோது அப்படி ஒரு ஓலத்துடன் தனது மகனின் உடலின் மீது விழுந்து கட்டி அணைத்துக்கொண்டு தன்னையும் சேர்த்து எரித்துவிடும்படி எங்கள் எல்லோரையும் கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார். மிகுந்த சிரமத்துடன் அவரை ஒருவாறு தேற்றி, ஆக வேண்டிய வேலைகளை முடித்தோம். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு எனது வீடு சென்று குளித்து விட்டு அன்று சாயங்காலமே அடுத்த நாள் காரியத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்க்கு நானும் நண்பர் நரேஷும் சென்றோம்.

பாட்டி உட்கார்ந்து பம்மி ஸ்வீட்சில் வாங்கிய Bread பக்கோடாவை சாப்பிட்டு கொண்டு இருந்தார். "வாடா! பக்கோடா சாப்பிடு. உப்பு தான் கொஞ்சம் ஜாஸ்தி!" என்று எங்களிடம் சொன்னார்.