வியாழன், 25 ஜூன், 2015

சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்


தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 23

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

பனிமூட்டத்தில் மெதுவாகச் செல்லும் வாகனம்

இப்பயணத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து படித்து வந்த உங்களுக்கும் புதியதாய் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருந்தால் இன்னமும் அதிக மகிழ்ச்சி. இப்பயணத்தின் கடைசி பகுதிக்கு நாம் வந்து விட்டோம்

Fully Packed
குளிரில் பயணிக்கும் ஒரு குடும்பம்

அதிக குளிர் என்றாலும் நான்கு மணிக்கே எழுந்து குளித்து தயாராகிவிட்டேன். தங்குமிடத்தில் Geyser மட்டும் இல்லாவிட்டால் சுடு நீர் இல்லாமல் குளிக்க யோசிக்க வேண்டியிருந்திருக்கும்! சில தங்குமிடங்களில் சுடு நீர் வசதிகள் சரியாக இருப்பதில்லை. நாங்கள் தங்கிய இடம் பரவாயில்லை. இவ்வசதிகள் இருந்தன! காலையிலே குளித்து விட்டதால், மற்றவர்கள் தயாராவதற்குள் கொஞ்சம் தொலைவு நடந்து சென்று வந்தேன். இப்படி நடந்து செல்வதால் அதிகாலையில் நல்ல காற்று சுவாசிக்க முடிந்தது

உள்ளே இடம் இல்லைன்னா என்ன?
நாங்க மேலே கூட அமர்ந்து பயணம் செய்வோம்....

நடை முடித்து திரும்பவும் தங்குமிடம் வந்தபோது பெரும்பாலானவர்கள் தயாராகி இருந்தார்கள். இப்பயணத்தில் எங்களுக்கு நிறையவே உதவி செய்த நண்பர் மனீஷ்-ஐ அலைபேசியில் அழைத்து நாங்கள் புறப்படத் தயார் என்று சொல்லவே  அவரும் இதோ வருகிறேன் எனச் சொல்லி வந்தார். வரும்போது காங்க்ரா தேவி [வஜ்ரேஷ்வரி தேவி] கோவிலுக்குச் சென்று அன்னையின் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து தில்லி வந்தால் கட்டாயம் தெரிவிக்கச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.

நங்கல் அணைக்கட்டு.....

துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே......
அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர்!

வழி நெடுகிலும் பனிமூட்டம் தொடர்ந்து இருக்க, மிதமான வேகத்திலேயே பயணிக்க முடிந்தது. திரும்பி வரும் வழியில் பக்ரா-நங்கல் அணைக்கட்டு பார்க்க நினைத்திருந்தோம். நாங்கள் பயணித்த பாதையிலிருந்து விலகி சில கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்பதாலும், பனி மூட்டத்தில் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியாது என்பதாலும் அத்திட்டத்தினை கைவிட்டு, நாங்கள் சென்ற பாதையிலே இருந்த ஒரு சிறிய அணைக்கட்டினைப் பயணித்தபடியே பார்த்து, சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டோம்.சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் உணவு.....
சீக்கியர்களின் லங்கர்

நாங்கள் செல்லும்போது சொன்ன மாதிரியே இப்போதும் வழியெங்கும் சீக்கியர்கள் சில கொட்டகைகளை அமைத்து சாலையில் செல்லும் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டிருந்தார்கள். தங்களது ஒவ்வொரு குருமார்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று இப்படி அனைவருக்கும் உணவு அளிப்பதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அதுவும் தானம் தானே என்ற எண்ணமில்லாது நல்ல உணவு அளிப்பார்கள்வழி நெடுகிலும் இப்படி பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகள் அனைவருக்கும் நாள் முழுவதும் உணவளிப்பது சுலபமான விஷயமல்ல. அதனையும் களைப்பே இல்லாது மகிழ்வுடன் செய்வது எத்தனை நல்ல விஷயம்.

சோள ரொட்டியும் கடுகுக்கீரையும்
படம்: இணையத்திலிருந்து.....

மக்காச்சோள மாவில் செய்த ரொட்டியும், அதற்கு பக்க துணையாக  கடுகுக் கீரையில் செய்த சப்ஜியும், வெண்ணைத் துண்டும் வைத்து ஒரு இடத்தில் கொடுக்க, மற்றொரு இடத்தில் தந்தூரி ரொட்டி, வெண்ணை, இரண்டு சப்ஜிகள் என கொடுத்தார்கள். சில இடங்களில் தேநீரும் ப்ரெட் பகோடாவும் கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிச் சாப்பிட்ட படியே பயணிப்பது நமக்கு நல்லதல்ல! என்றாலும் ஒரு சில இடங்களில் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தட்டில் வாங்கி, அனைவரும் சிறிது பங்கிட்டு உண்டோம். அவர்களுக்கும் கொடுத்த மகிழ்ச்சி, நமக்கும் சாப்பிட்ட திருப்தி!


வெல்லம் காய்ச்சும் பெரியவர்.....

சுடச்சுட காய்ச்சிய வெல்லம்.....

தொடர்ந்து பயணித்து வரும் வேளையில் வயலில் வெல்லம் காய்ச்சுவதைப் பார்த்தவுடன் திரும்பி வரும்போது வெல்லம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனச் சொன்னது நினைவுக்கு வர, அப்படி ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தினோம். அனைவரும் தேவையான வெல்லத்தினை வாங்கிக் கொள்ள, நானும், ஓட்டுனர் ஜோதியும் அங்கே அடுக்கி வைத்திருந்த கரும்புகளில் இரண்டினை எடுத்து சுவைக்க ஆரம்பித்தோம். இப்படி கரும்பினைச் சுவைத்து எத்தனை வருடங்களாகி விட்டன! நெய்வேலியில் இருந்தவரை பொங்கல் சமயத்தில் கரும்பு நிறையவே சாப்பிட்டிருக்கிறேன். தில்லி சென்ற பிறகு கரும்பு இப்படிச் சாப்பிட வாய்ப்பு இருந்ததில்லை.


கரும்பு சுவைக்கும் எங்கள் ஓட்டுனர் ஜோதி....


கரும்பு விவசாயி.....

மேலே இருப்பவரின் மகன்...
வெல்லம் விற்பனைக்கு!

பத்து பதினைந்து நாட்களிலேயே பொங்கல் வருவதால், அனைவரும் வெல்லம் வாங்கிக் கொண்டு தயாராக எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். வழியில் இன்னும் ஒரு இடத்தில் ஆரஞ்சு போலவே இருக்கும்கின்னுவிற்க அதனையும் வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு தொடர்ந்து பயணித்தோம். நான்கு நாட்கள் பயணம் முடிவடைவதில் அனைவருக்கும் வருத்தம். இப்படித் தொடர்ந்து பயணித்தபடியே, பல இடங்களைப் பார்த்தபடியே, பல்வேறு அனுபவங்களை பெற்றபடியே இருந்தால் நன்றாக இருக்கும் என்றாலும், வேலைக்குச் சென்று தானே ஆகவேண்டும்!

சாலையில் சென்று கொண்டிருந்த சீக்கிய திருமண ஊர்வலம்.....


சாலையோரத்தில் சுடச்சுட வேர்க்கடலை விற்பனை....

 சாலையோரங்களில் கொட்டி வைத்திருக்கும் கின்னு....
இவையும் விற்பனைக்கே!

குழுவினர் அனைவரும் இப்பயணித்தினைப் பற்றியும், அனைத்து விஷயங்களையும் சிலாகித்துப் பேசியபடி பயணிக்க, தில்லி வந்து சேர்ந்தோம்ஓட்டுனருக்கும், வாகனத்திற்குமான கட்டணங்களைக் கொடுத்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம். டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி புறப்பட்டு 29-ஆம் தேதி திரும்பி வந்தோம். மொத்தம் நான்கு நாட்கள். கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்களை கணக்கில் கொண்டால் பயணத்திற்கான மொத்த செலவு மிகக் குறைவே. ஆளொன்றுக்கு ரூபாய் 4000/- அளவில் தான் ஆனது.

”இறக்கி விட்டுப் பாருய்யா.... நானே ஓடிக் காட்டறேன்!”
வாகனத்தில் பயணிக்கும் வாகனங்கள்....

இத்தொடரில் பார்த்த, படித்த அனைத்து பகுதிகளையும் படிக்க முடியாதவர்களின் வசதிக்காக அப் பகுதிகளின் தலைப்பும், சுட்டியும் இதோ இங்கே!

பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்

அடர் பனியோ, அடைமழையோ, சுட்டெரிக்கும் வெயிலோ....
எதுவாக இருந்தாலும் பயணிப்போம்!

பயணத்தில் தொடர்ந்து வந்து பதிவுகளை படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லிய, சொல்லாத அனைவருக்கும் நன்றிபயணம் செய்வது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறதுபோலவே கட்டுரைகளும்இருந்தாலும் இக்கட்டுரைகளில் சற்றே இடைவெளி இருந்தாலும் இருக்கலாம். எழுத நினைத்தாலும் அலுவலகப் பணிகள் சற்றே அழுத்துகின்றன. சில காலத்திற்கு பதிவுகள் எழுத முடியாது போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!

முடிந்த போது எழுத எண்ணம்குஜராத் பயணம், வடகிழக்கு மாநிலப் பயணம் ஆகியவை பற்றி எழுத நிறையவே இருக்கிறது. பார்க்கலாம்!

ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து


செவ்வாய், 23 ஜூன், 2015

ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 22

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

காரில் தொங்கவிட ஏதுவாய் பிள்ளையார்....
பாதங்களைத் தொட்டுத் தொட்டு அழுக்காகி விட்டார் பாவம்! 

சென்ற பதிவில் சொன்னது போல பைஜ்னாத் சிவன் கோவில் பார்த்து விட்டு காங்க்டா திரும்பினோம். எங்களது வருகையை மனிஷுக்கு தெரிவிக்க, அவர் எங்களது தங்குமிடத்திற்கு வந்தார். மூன்று நாள் பயணத்தில் பைஜ்னாத் கோவில் வாசலில் சின்னதாய் ஒரு Purchase மட்டுமே செய்திருந்ததால், காங்க்டாவில் Shopping செய்ய ஒரு வாய்ப்பு வேண்டும் என்பது எங்களுடன் வந்திருந்தவர்களின் ஏகோபித்த குரல்!

பளிங்கினால் செய்த ஒரு கணபதி.....

காங்க்டா தேவி கோவிலுக்கும் இன்னுமொரு முறை செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை சென்று நின்று நிதானித்து மாலை நேர ஆரத்தி பார்த்து விட்டு கடைத் தெருவிற்கு வந்தோம். குளிர் பிரதேசம் என்பதால் இங்கே குளிர் கால உடைகள் விற்கும் கடைகள் நிறையவே உண்டு. “ஜவஹர் கோட்என்று அழைக்கப்படும் கோட் எனக்கு ஒன்று வாங்கிக் கொண்டேன்மற்றவர்களும் சில குளிர் கால உடைகளை வாங்கிக் கொண்டார்கள்.

பனிபடர்ந்த மலைகள்.... மேலும் ஒரு முறை பார்க்க ஏதுவாய்!

வாங்கிய பொருட்கள் அனைத்தையும் தங்குமிடத்தில் வைத்து விட்டு இரவு உணவு உண்பதற்காக முந்தைய நாள் சாப்பிட்ட அதே இடத்திற்குச் சென்றோம். கூடவே மனிஷும் வந்திருந்தார். அறுசுவை உணவு சாப்பிடும் போதே மனிஷின் அலைபேசியில் தொடர்ந்து அழைப்புவீட்டிலிருந்து! வீட்டில் உறவினர்கள் இவரது வருகைக்காக காத்திருப்பதாகவும் அனைவரும் சேர்ந்து உண்ணவேண்டும் எனவும் சொல்லவே, இவர் தொடர்ந்து சில நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி எங்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க, அவரை கட்டாயப்படுத்தி காலையில் சந்திக்கலாம் என அனுப்பி வைத்தோம்.

நோட்டு நல்ல நோட்டா, கள்ள நோட்டா?
வழியில் தேநீர் அருந்திய போது சோதித்துப் பார்க்கும் உணவகத்தின் முதலாளி!

இரவு உணவு திருப்தியாக உண்டு முடித்து தங்குமிடம் வரை காலாற நடந்து வருவது ஒரு அலாதியான அனுபவம்அன்றைய பொழுதில் பார்த்த விஷயங்களைப் பேசியபடியே திரும்பி வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு தில்லி நோக்கி திரும்ப வேண்டும் என்பதால், உடைமைகளை சரி பார்த்து Packing செய்ய வேண்டும். அனைவரும் விரைவாகப் புறப்பட்டால் தான் இரவுக்குள் தில்லி திரும்ப முடியும்.

”மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?” ஒளிந்து விளையாடிய சூரியன்!

இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த அனைத்து விஷயங்களையும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் பார்க்க வேண்டியவை நிறையவே உண்டு. தேவ் பூமி என்று சொல்லப்படும் இம்மாநிலத்தில் கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், குளிர் பிரதேசங்கள் என நிறையவே உண்டுநாங்கள் பார்த்த இடங்களுக்கு அருகிலேயே இருக்கும் இன்னும் சில இடங்களைப் பற்றிய சில குறிப்புகளை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

இலைகள் அனைதும் உதிர்ந்த நிலையில் ஒரு மரத்தின் கிளைகள்..... 

பாலம்பூர் அருகிலேயே “[Dh]தரம்ஷாலாஎனும் இடம் இருக்கிறது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த “[Dh]தரம்ஷாலாவில் இருக்கும் விளையாட்டு அரங்கில்  நடக்கும்போது கிரிக்கெட் ப்ரேமிகள் பார்த்திருக்கக் கூடும். மிகவும் அருமையான குளிர் வாசஸ்தலம். திபெத்திய புத்த மத குருவான [Dh]தலாய் லாமா இருக்கும் இடம் இது தான். புத்தர்களின் வழிபாட்டுத் தலங்களும் இங்கே அதிக அளவில் உண்டு. அனைத்துமே அருமையான வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும்

குளிருக்கு இதமாய் தேநீர்!
சாலையோர உணவகம் ஒன்றில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி!

இயற்கைக் காட்சிகளுக்கும் இங்கே குறைவில்லை. கண்கவர் காட்சிகள் நிறைந்த இவ்விடத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும் படிச் செல்வது நல்லது. வெறும் சுற்றுலாவாக அல்லாது இப்படி ஓய்வாக இருப்பதில் நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். பயணங்களில் நிறைய இடங்களைப் பார்த்து ரசிப்பது ஒரு வகை ஆனந்தம் எனில், எந்த வித வேலையும் செய்யாது, இயற்கைக் காட்சிகளை பார்த்தபடி அந்த எழிலில் மூழ்கிப் போவது மற்றொரு வகை!

உணவகத்தின் அருகே இருந்த ஒரு பறவை!

கடல் மட்டத்திலிருந்து 1380 மீட்டர் உயரத்தில் இருக்கும் தரம்ஷாலா நகரிலிருந்து இன்னும் மேலே 1830 மீட்டர் அளவில் சென்றால் Upper Dharmshala என அழைக்கப்படும் பகுதியில் Mcleodganj, Forsytheganj எனும் இடங்கள் உண்டு. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இடங்கள் என்பதால் கலோனியல் வகைக் கட்டிடங்கள் இங்கே நிறையவே உண்டு.

பயணித்தபடியே எடுத்த ஒரு புகைப்படம்!

Trekking செய்ய விருப்பமுள்ளவர்களுக்கும் இங்கே சில இடங்கள் உண்டு.  Triund எனும் இடத்தில் வருடம் முழுவதும் [பனி அதிகம் விழும் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்கள் தவிர] Trekking செய்ய முடியும்அனைத்து வயதினரும் இங்கே Trekking செய்வதை பார்க்க முடியும். முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை சற்றே சுலபமாகத் தெரிந்தாலும், கடைசி ஒரு கிலோ மீட்டர் தொலைவு கொஞ்சம் கடினமானது தான். நண்பர்களோடு பல வருடங்களுக்கு முன்பு இங்கே முதன் முதலாய் சென்றதுண்டு. கடைசி ஒரு கிலோ மீட்டரில் பல கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. அங்கே நடப்பது ஒரு சவாலான விஷயம் தான்!

பயணித்தபடியே எடுத்த மற்றுமோர் புகைப்படம். இது என்ன வழிபாட்டுத் தலம்?

இப்படி நிறைய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே உண்டு. பொதுவாக ஷிம்லா, குலு, மணாலி போன்ற இடங்கள் தான் நிறைய பேருக்குத் தெரியும் என்றாலும், மணிகரன், டல்ஹவுசி, குஃப்ரி, [Ch]சைல், சோலன், பாலம்பூர், கசௌலி போன்ற நிறைய இடங்களும் இம்மாநிலத்தில் உண்டு. ஒவ்வொரு இடமும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் தான். எத்தனை தான் பயணித்தாலும் அலுக்காத ஒரே விஷயம் பயணம் தானே!


இப்படி பயணிப்பதிலும் ஒரு சுகம் இருக்குமோ?

இந்தியா முழுவதுமே இப்படி நிறைய இடங்கள் இருக்க, அனைத்து இடங்களுக்கும் இவ்வாழ் நாளில் பயணித்து விட முடியுமா? முடிந்தால் பயணிக்க ஆசை தான் எனக்கு! உங்களுக்கு

ஹிமாச்சலப் பிரதேசம் பற்றிய இத்தொடர் அடுத்த பகுதியோடு நிறைவடையும்.   

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து


புதன், 17 ஜூன், 2015

பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்
தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 21

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

சென்ற பகுதியில் பைஜ்னாத் கோவில் பற்றிய சில தகவல்களைச் சொல்லி இருந்தேன். இப்பகுதியில் அக்கோவிலின் சுற்றுச் சுவர்களில்/பிரகாரத்தில் இருந்த சில சிறப்பான சிற்பங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு சிற்பமும் என்ன அழகு! அதிலும் சில சிற்பங்கள் நம் தமிழகத்தில் பார்க்கும் சிற்பங்களைப் போலவே இருந்தன. பொதுவாகவே வடக்கில் பார்க்கும் சிலைகள் எல்லாமே பளிங்குக் கற்களில் தான் அமைந்திருக்கும். ஆனால் இச்சிலைகள் நமது ஊர் போலவே வடித்திருக்கிறார்கள்!

இக்கோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?

 1. நர்த்தன விநாயகர்

1. முதலில் ஆனைமுகத்தான் – அவன் தானே முழு முதற்கடவுள்! இக்கோவிலில் இருக்கும் கணபதி – நர்த்தன கணபதி. வித்தியாசமாக சிங்கம், மூஷிகம் என இரண்டு வாகனங்கள் – இடப்புறத்தில் சிங்கமும் வலப் புறத்தில் மூஷிக வாகனம். ஆறு கரங்கள். நர்த்தன விநாயகர் என்பதாலோ என்னமோ, மேடையின் அடி பாகத்தில் மூன்று பேர் மத்தளம் வாசிக்கும்படி வடித்திருக்கிறார் அந்த சிற்பி! 

 2. ஹரிஹர்

2. ஹரியும் சிவனும் ஒண்ணு! அதை அறியாதவன் வாயில் மண்ணு! என்று சொல்வதுண்டு. இங்கே இருக்கும் ஒரு சிலை – ஹரி ஹர் – மூன்று தலைகளோடு காட்சியளிக்கும் இச்சிலையில் வலப்பக்கம் சிவனையும் இடப்பக்கம் விஷ்ணுவையும் குறிக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி வலப்பக்க கை ஒன்றில் திரிசூலம் இருக்க, இடப்பக்க கை ஒன்றில் சக்கரம் இருக்கிறது. கீழ்ப்பக்கத்தில் இடப்பக்கம் லக்ஷ்மியும், வலப்பக்கத்தில் பார்வதியும் அமைத்திருக்கிறார் சிற்பி. நுணுக்கமான வேலைப்பாடுகள் இச் சிற்பத்திலும்.

 3. கல்யாண சுந்தரர்

3. கல்யாண சுந்தரர்: சிவபெருமானும் பார்வதி தேவியும் கல்யாண கோலத்தில். நடுவே விஷ்ணு கன்யா தானம் செய்து கொடுக்கிறார்! இச்சிற்பம் வெகுவாக சிதிலம் அடைந்திருக்கிறது. ஆகையால் இதன் அழகு அவ்வளவாக தெரியவில்லை. 

 4. கார்த்திகேயன்

4. கார்த்திகேயன்: பொதுவாக முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் வரிசையாக இருப்பது பார்த்திருக்கிறோம். மூன்று முகங்கள் – அதன் மேலே மூன்று முகங்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? இங்கே இருக்கும் சிற்பம் அப்படி இருக்கிறது. முதன் முறையாக ஆறுமுகனின் இப்படியான சிற்பத்தினை இங்கே தான் பார்த்தேன்.  மயில்வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் அந்த சிற்பத்தினை நீங்களும் பார்க்க உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.......

 5. அந்தகாசுர வதம்

5. அந்தகாசுரன் வதம்: விஷ்ணுவின் விராட ரூபம் பல ஓவியங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிவனின் விராட ரூபம் பார்த்ததுண்டா? அந்தகாசுரன் எனும் அசுரனுக்கு பயங்கர பலம். பார்வையற்றவனாக இருந்தும், தனது தவ வலிமையால், ஆகாயம் பூமி ஆகிய இரண்டு இடங்களிலும் வதம் செய்ய முடியாது என்ற வரம் பெற்றிருந்தவன். தனது திரிசூலம் கொண்டு அந்தரத்தில் அந்தகாசுரனின் சிரம் கொய்து வதம் செய்த கோலம். நான்கு சிரங்களும், பதினாறு கைகளும் கொண்ட இந்த சிற்பம் இதோ உங்கள் பார்வைக்கு! எத்தனை வேலைப்பாடு இச்சிற்பத்தில்.

 6. சாமுண்டா தேவி

6. சாமுண்டா தேவி: பத்து கைகளுடன் காட்சி தருகிறார் சாமுண்டா தேவி.  ஒரு அசுரனை வதைத்து தனது காலடியில் வைத்து, மற்றொரு அசுரனை தனது குறுவாளினால் வதைக்கும் வடிவில் இருக்கும் இச்சிலையில் கபாலங்களினால் ஆன மாலை! கன்னத்தில் ஒற்றை விரல் வைத்து அழகாய் இருக்கும் சிலை. என்னவொரு கலைநயம்.....

 7. அர்த்தலக்ஷ்மி நாராயணன்

7.  அர்த்தலக்ஷ்மி நாராயணன்:  அர்த்தநாரீஸ்வரர் – சிவனும் பார்வதியும் பாதிப்பாதியாக இருக்கும் சிற்பம் நமது கோவில்கள் பலதிலும் பார்த்திருக்க முடியும். அர்த்தலக்ஷ்மி நாராயணன் பார்த்ததுண்டா? கருட வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் இச்சிற்பத்தில் பத்து கைகளுடன் காட்சி தருகிறார். வலப்புறத்தில் விஷ்ணு, இடப்புறத்தில் லக்ஷ்மி.  பார்த்துப் பார்த்து ஒவ்வொரு விஷயத்தினையும் சிறப்பாக செய்திருக்கிறார் இந்தச் சிற்பி!

 8. சிவபெருமான்.

8.    இந்த சிற்பமும் சிவபெருமானின் ரூபமாகத் தான் தெரிகிறது. இது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

 9. சூரியதேவன்

9.   சூரியதேவன்:  ஏழு குதிரைகள் கொண்ட தேரில் அமர்ந்து இருப்பது போல வடிவமைத்திருக்கிறார்கள்.

 10

 11

இப்படி கோவில் முழுவதும் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசித்த பிறகு இயற்கைச் சூழலில் குழுவினரின் சில புகைப்படங்களையும் எடுத்து முடித்தேன்!  அதன் பிறகு அனைவரும் வெளியே சின்னதாய் ஒரு Shopping செய்ய, நான் அங்கே கண்ட காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். மெதுவாக அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் அனைவரும் காங்க்ரா நகர் நோக்கி பயணத்தினைத் துவங்கினோம்.  அன்றைக்கு இரவும் காங்க்ரா நகரில் தான் தங்க வேண்டும்......

அப்பயணமும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் அடுத்த பதிவாக!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.