எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, June 16, 2015

சாப்பிட வாங்க: சான்வி!

ஆங்கிலத்தில் Sandwich என்பதைத் தான் தவறுதலாக தமிழில் சான்விஎன்று எழுதி விட்டேனோ என்று குழம்ப வேண்டாம் நண்பர்களே.  இன்று நாம் பார்க்கப் போகும் ஒரு இனிப்பின் பெயர் தான் இந்த சான்வி. இதற்குபர்வல் கி மிட்டாய்என்ற பெயரும் உண்டு. இந்த இனிப்பு பெரும்பாலும் பீஹார்/ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை. 

எங்கள் அலுவலகத்தில் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு இளைஞர் சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்திருக்கிறார். அவரது அன்னை கிராமத்திலிருந்து இந்த வாரம் தில்லிக்கு மகனைப் பார்ப்பதற்காக வந்தார். அப்படி வரும்போது கிராமத்திலிருந்து செய்து எடுத்து வந்திருந்த இனிப்பு தான் இந்த சான்வி எனப்படும் பர்வல் கி மிட்டாய். நிறையவே எடுத்து வந்திருந்த காரணத்தினால் அலுவலகத்திற்கும் கொண்டு வந்து எங்களுக்கும் கொடுத்தார். பார்க்கும்போது “எப்படி இருக்குமோ? என்ற எண்ணம் இருந்தாலும் சாப்பிட்ட பிறகு இன்னும் ஒன்று கிடைக்குமா? என்ற கேள்வி மனதிற்குள் பிராண்டியது!முதலில் பர்வல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்! இது ஒரு காய்கறி. தமிழகத்தில் இந்த காய்கறி கிடைப்பதாகத் தெரியவில்லை. புடலங்காய், பாவக்காய் போன்று இதுவும் “Gourd” வகையைச் சார்ந்தது. பார்க்க, கோவைக்காய்க்கு பெரியக்கா மாதிரி இருக்கும்! இந்த காய்கறியை சப்ஜி/பொரியலாக சமைத்துச் சாப்பிடுவதுண்டு.  ஆனால் இதிலும் இனிப்பு செய்யலாம் என்பது இப்போது தான் தெரிந்தது! சரி எப்படிச் செய்ய வேண்டும் என பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

பர்வல் – 250 கிராம் [தோலெடுத்து, குறுக்கே வெட்டி [துண்டு பட்டுவிடாமல்], உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
கோயா/மாவா – 1 கப்
சர்க்கரை – 1½ கப்
பச்சை ஏலக்காய் பொடி – ¼ ஸ்பூன்.
பாதாம் – 10 [உடைத்தது]
பிஸ்தா – 10 [உடைத்தது]
பால் பவுடர் – 2 ஸ்பூன்.
ஆப்பசோடா -  1 சிட்டிகை
குங்குமப்பூ – சில இதழ்கள்.
Silver Warq – அலங்காரம் தேவையெனில்!

எப்படிச் செய்யணும் மாமு?

முதலில் பர்வல் உள்ளே வைத்து Stuff செய்ய கோயாவை மிதமான சூட்டில் வதக்க வேண்டும். மிருதுவாக ஆனதும் அதில் அரை கப் சர்க்கரையைச் சேர்த்து வதக்கவும்.

மீதி இருக்கும் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் மெல்லிய பாகாக செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வதங்கிய கோயாவில் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி அதில் உடைத்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை கலக்கவும். அதில் பால் பவுடரையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.

ஒரு வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஆப்ப சோடா சிறிதளவு சேர்த்து வெட்டி வைத்திருக்கும் பர்வல்களை வேக வைக்கவும். இரண்டு மூன்று நிமிடங்களில் வெந்து விடும். பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, அவற்றை தயாரித்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு சூடு செய்யவும். நன்கு வெந்த பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.

பிறகு தயாரித்து வைத்திருக்கும் கோயாவினை வெட்டி வைத்திருக்கும் பகுதிகளில் Stuff செய்யவும்.  ஒவ்வொரு பர்வல் மீதும் குங்குமப் பூவினைத் தூவி, தேவையெனில் Silver Warq கொண்டு அலங்கரிக்கலாம். அதன் பிறகு நன்கு குளிர வைத்து [Fridge-ல்] வைத்து சாப்பிட்டுப் பாருங்கள்! வாவ்! என்னவொரு சுவை!என்று நிச்சயம் நீங்களும் சொல்வீர்கள். 

பர்வல் கிடைக்கவில்லையே என்று சொல்லக் கூடாது. கிடைக்கும்போது செய்து பாருங்கள்! இல்லையெனில் பீஹார் பக்கமாகச் செல்லும்போது மறக்காமல் இந்த சான்வி என்று அழைக்கப்படும் பர்வல் கி மிட்டாய் நிச்சயம் சாப்பிட்டுப் பாருங்கள்!

அடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம் பற்றிப் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 comments:

 1. என்னென்னமோ புதுப்புது பெயர்களில் எல்லாம் ஸ்வீட்! நாம் பரங்கி, கேரட், பீட்ரூட் அல்வா செய்வோமே அது போல!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படிக்கப் படிக்க சாப்பிடத் தூண்டுகிறது ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. இந்த பர்வல் நம்ம பஞ்சாபி டிண்டா (Tinda) மாதிரி இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. டிண்டா உருண்டையாக இருக்கும் டீச்சர். இது நீள வாக்கில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 4. படித்ததும் ருசிக்கத் தூண்டுகிறது. நன்றி. தலைப்பில் குழப்பம் இருப்பதுபோல் இருந்தது. முதல் வரியில் தெளிவுபடுத்திவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா......

   Delete
 5. குளிர்வான சுவையுடன்... புதிய சுவை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் Parwal என இந்தியில் அழைக்கப்படும் காயின் அறிவியல் பெயர் Trichosanthes dioica என்பதாகும். இதை ஆங்கிலத்தில் Pointed Gourd என்பார்கள். தமிழில் இதற்கு கொம்பு புடலை என்று பெயர். மலையாளத்தில் காட்டு படவளம் என்றும் தெலுங்கில் கொம்மு போட்லா என்றும் கன்னடத்தில் காடு படவள காயி என்றும் பெங்காலியில் படோல் என்றும் சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. கோவக்காவுக்கு பெரிய அக்காவோ - சின்ன அக்காவோ!..

  படிக்கும் போதே சுவையாக இருந்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 8. பர்வல்,ஆக்க முடியாது ,,,பரவாயில்லை பீகார் போகும் போது சாப்பிட்டுக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. பர்வல் தெரியும்;அதில் இப்படி ஒரு இனிப்பா!அருமை
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. நல்ல ஸ்வீட்டான ஸ்வீட் போல இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. புதிய இனிப்பு அறிமுகத்திற்கும் செய்முறைக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. தமிழ் மணம் 9 சாரி பிறகு வருவேன்

  ReplyDelete
  Replies
  1. பெயரே புதுமையாக இருக்கிறதே....

   Delete
  2. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. இந்த பர்வல் இங்கு திருவான்மியூர் சந்தைக்குள் அவ்வப்போது கிடைக்கும், அதை பெரிய கோவைக்காய் என்று சொல்லுகின்றார்கள். சிலர் காட்டுக் கோவைக்காய் என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் தமிழ் பெயர் தெரியவில்லை...நானும் பெரிய கோவைக்காய் என்று சொல்லி வருகின்றேன். இதே சான்வி செய்வதுண்டு. சர்க்கரை சேர்க்காத கோவா கிடைக்காது இங்கு அவ்வளவு எளிதாக என்பதால் ஆவின் கோவா வாங்கி ஸ்டஃப் செய்ய. மற்றபடி கொஞ்சம் சர்க்கரை இளம் பாகு வைப்பதுண்டு...இந்தக் காயை ஆப்ப சோடா சேர்க்காமல் ஸ்டீம் செய்துவிட்டுச் செய்வதுண்டு...அதுவும் நன்றாக வருகின்றது..மற்றதெல்லாம் நீங்கள் சொல்லியிருப்பதுதான். சில்வர் வார்க் சேர்க்காமல்..நான் கண் அளவில்தான் செய்வேன். விரும்பிச் சாப்பிடுவார்கள்...

  மிக்க நன்றி அளவு தெரிந்து கொண்டதற்கு.....பகிர்ந்ததற்கு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. பர்வல் இனிப்பு செய்வது பற்றி எழுதியது அதில் விடுபட்டுவிட்டது

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 15. புதிய பெயர், புதிய சுவை, அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 16. சாப்பிட முடியாவிட்டாலும் ...
  நல்ல பதிவு
  தொடர்க
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 17. புதிய ஆனால் ருசியான தகவல்கள். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....