அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட திருச்சி பறவைகள் பூங்கா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் - நடை நல்லது - நடைபாதை கடைகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சிறுகதை - மௌனத்தின் குரல் - வாசந்தி - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த
பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் கரும்பின் சாறு போல, அதிலிருந்து
எடுக்கப்படும் வெல்லம்போல இனிப்பாக இருக்கட்டும்!
இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.
விதைத்துக் கொண்டே இரு – முளைத்தால் மரம்! இல்லையேல் உரம் – சே குவேரா.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இருப்பதிலேயே மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம் எதுவென்றால், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது
தான். அப்படியான ஒரு விஷயத்தினை பல வருடங்களாகத் தொடர்ந்து செய்து வந்தவர் திரு
க்ரேஸி மோகன் அவர்கள். க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், சாக்லேட் கிருஷ்ணா, ஒரு
பேபியின் டைரிக் குறிப்பு, க்ரேஸி கிஷ்கிந்தா, ரிடர்ன் ஆஃப் க்ரேஸி தீவ்ஸ், மதில்
மேல் மாது என அவரது நாடகங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். திரையிலும் பல படங்களில்
வசனகர்த்தாவாக இருந்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவர்! அவரது வசனத்திற்காகவே நான் திரும்பத்
திரும்ப பார்த்த கமல் படங்கள் பல உண்டு! கமலுக்காக அவரது படத்தினை ஒரு முறை பார்ப்பதே
கடினம்! ஆனால் க்ரேஸி மோகன் வசனம் என்பதற்காகவே பல முறை பார்த்திருக்கிறேன் –
மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என
பெரிய பட்டியலே உண்டு!
அவருடன் எனக்கான அனுபவம் பற்றி
தான் இன்றைக்கு சொல்லப் போகிறேன் – நாடகங்கள் மீது அவர் வைத்திருந்த மரியாதை,
எப்படியான நிலையிலும் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தது அவர் மீது மிகுந்த
மரியாதை கொள்ள வைத்தது.1990-ஆம் ஆண்டு
நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். ஜூனியர் ஜேசீஸ் என்ற
இளைஞர் பிரிவு ஜேசீஸ் கிளப்பில் நான் தலைவராக இருந்த போது [மொத்தமே பத்து பேர்
தான் அந்த ஜூனியர் ஜேஸீஸ் குழுவில்!] நடந்த ஒரு நிகழ்வு. ஜேஸீஸ் கிளப்பிலிருந்து
ஏதோ ஒரு Fund Raising நிகழ்வாக திரு கிரேஸி மோகன் அவர்களின் “ஒரு
பேபியின் டைரிக்குறிப்பு” நாடகத்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
டிக்கட் விற்பனை, தங்குமிட
ஏற்பாடு, விருந்தினர் வரவேற்பு, கலைஞர்களுக்கான வசதிகள் செய்வது போன்றவற்றை ஜேசீஸ்
குழுவினர் செய்ய, டிக்கெட் செக்கிங், கூட்டத்தினை கட்டுப்படுத்துவது போன்ற சில
வேலைகளை எங்களுக்கு அளித்திருந்தார்கள். எங்களுக்கும் க்ரேஸி மோகன் குழுவினரின்
“ஒரு பேபியின் டைரிக்குறிப்பு” நாடகத்தினை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு – நான்
நேரில் பார்த்த முதல் நாடகமே அது தான்! நெய்வேலி நகரின் 24-ஆம் வட்டத்தில்
இருக்கும் திறந்தவெளி கலையரங்கத்தில் தான் நாடகம் ஏற்பாடு ஆகியிருந்தது. எல்லாம்
சரியாக நடந்து கொண்டிருந்தது. நாடகக் குழுவினர் வந்தாயிற்று. பார்வையாளர்களின்
நுழைவுச் சீட்டு சரிபார்த்து உட்கார வைத்தாயிற்று.
நாடகம் ஆரம்பித்தது. விறுவிறுப்பாகவும்,
கலகலப்பாகவும் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை! நெய்வெலியில் எப்போது
மழை வரும் என்று சொல்ல முடியாது! திடீரென மழை வரும் – வந்தால் நின்று நிதானமாக
அடித்துப் பெய்யும். திறந்த வெளி அரங்கம் என்பதால் பார்வையாளர்கள் எல்லோரும் ஓடி
நாடக மேடைக்குள் பிரவேசிக்க, நாடகத்தினை நிறுத்த வேண்டியாதாயிற்று!
எங்களுக்கெல்லாம் ஒரே பதட்டம். காசு கொடுத்து பார்க்க வந்தவர்கள் பாதி நாடகம்
நடத்த முடியாவிட்டால் திரும்பக் கேட்பார்களோ, பிரச்சனை ஆகுமோ என்று குழம்பிக்
கொண்டிருக்க, திரு கிரேஸி மோகன் அவர்கள் பதட்டமே இல்லாமல் எல்லோரையும் அவரது
பேச்சினால் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். கவலையே படாதீங்க, மழை நின்ற பிறகு
தொடர்ந்து நாடகம் நடத்தாமல் இந்த ஊரை விட்டுப் போகப் போவதில்லை என்று எங்களை
ஆஸ்வாசப்படுத்தினார்.
சிறிது நேரம் அடித்துப் பெய்த மழை
நிற்க, விட்ட இடத்திலிருந்து மீண்டும் சரியாகத் தொடங்கியது நாடகம்.சில காட்சிகள் முடிந்திருக்கும், மீண்டும் மழை
துவங்கியது! இப்படி மூன்று முறை நாடகம் – மழை என மாறி மாறி காட்சிகள்! ஒவ்வொரு
முறையும் நிறுத்திய இடத்திலிருந்து சரியாகத் துவங்கியது நாடகம் – அவ்வளவு
Perfection! ஒன்று, ஒன்றரை மணி நேரம் நடக்க வேண்டிய நாடகம், அன்றைக்கு முடிக்க
மூன்றரை நான்கு மணி நேரம் ஆனது! இரவு நாடகம் முடிந்தபோது பத்தரை பதின்றொன்று மணி
ஆகியிருக்கும். குழுவினருக்கு விடை கொடுத்து அனுப்பும் வரை நானும் அங்கேயே
இருந்தேன். நான் இரவு வீடு திரும்பியபோது பன்னிரெண்டு மணிக்கு மேல்!
தன்னுடைய பணியில் அத்தனை Sincerity!
நாடகம் ரசித்தது மட்டுமல்லாது அவரது இந்தப் பண்பும் என்னால் மறக்கவே முடியாது! மழை
பெய்து கொண்டிருந்த சமயத்தில் நாங்களும் சில நிமிடங்கள் அவரிடம் பேசிக்
கொண்டிருந்தோம் – பதட்டமாகிவிட்டது என்று சொன்னபோது, “அடடா எதுக்கு? நாடகம்
நடத்தவேண்டிய நாங்களே பதட்டமாகலையே! எல்லாம் நல்லபடியாவே நடக்கும்!” என்று அவர்
சொன்னது இன்றைக்கும் நினைவில்!அலுவலகத்தில்
இருக்கும்போது அவர் மறைவு பற்றித் தெரிந்தவுடன் இந்த நினைவுகள் எனக்குள்! அவரது
மறைவு நாடக உலகிற்கு ஒரு பெரிய இழப்பு.”க்ரேசியைக்
கேளுங்கள்” என்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்ட ஒரு கேள்வி-பதிலுடன் பதிவினை
முடிக்கலாம்.
“எப்படி மரணம்
நிகழ்ந்தால் அது நம்மை சோகத்தில் ஆழ்த்தாது?” என்ற ஒரு கேள்வி கேட்டு ஒரு
க்ரேஸியான பதில் தரச் சொன்னதற்கு க்ரேஸி மோகன் சொன்ன பதில்!
”குளிக்கும்போது
சோப்பு கரையற மாதிரி, அப்படியே கரைஞ்சு, சாக்கடைக்குள்ள போயிட்டோம்னா, மரண பயமே
கிடையாது. மரண ஆச்சர்யம் தான்! என்ன நமக்குத் தெரிஞ்சவங்க, குளிக்கப் போனவன்
திரும்பாம காணாம போயிட்டானேன்னு தேடிட்டு இருப்பாங்க…. சோகத்தை விட மர்மம் பெட்டர்
இல்லையா?”
க்ரேஸி அவர்களின் மரணம் பலரையும்
சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்பது நிஜம்! மேலுலகிலும் அவர் எல்லோரையும் சிரிக்க
வைத்துக் கொண்டிருப்பார் என நம்புவோம்!
நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள்
கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு
நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய நினைவுகளைத் தேடி
பதிவுகளின் சுட்டி கீழே.
சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச்
சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய நினைவுகளைத் தேடி பதிவுகளின் சுட்டி
கீழே.
நெய்வேலி வாழ்க்கையில் மறக்க
முடியாத பல விஷயங்கள் – அவற்றில் ஒன்று பங்குனி உத்திரம் சமயத்தில் காவடி
பார்க்கப் போவது – நெய்வேலி நகரில் உள்ள வில்லுடையான்பட்டி முருகன் கோவிலுக்கு நகரில்
உள்ள அத்தனை கோவில்களிலிருந்தும் காவடி எடுத்து வருவார்கள். ஒவ்வொரு
கோவிலிலிருந்தும் 108, 1008 போன்ற எண்ணிக்கைகளில் காவடிகள் ஊர்வலமாக வந்து
கோவிலுக்குச் செல்ல, நெய்வேலி நகரமே திருவிழா கோலம் கொண்டிருக்கும். பத்து
நாட்களுக்கும் மேலாக திருவிழா நடக்கும் என்றாலும் பங்குனி உத்திரம் அன்று எடுக்கப்படும்
காவடி பார்க்க அத்தனை ஆனந்தம். வீட்டிலிருந்து ஆறரை மணிக்குள் குளித்து,
புறப்பட்டு எட்டு ரோடு என அழைக்கப்படும் சந்திப்பிற்கு சென்று விடுவோம்.
நெய்வேலியில் இருந்த போது
வீட்டிலேயே அரிநெல்லிக்காய் மரம் இருந்தது. பந்தல் போட்டமாதிரி கொத்துக் கொத்தாய்
நெல்லிக்காய் காய்த்துத் தொங்கும். சாதாரண அரிநெல்லி மரங்களை விட சற்றே உயரமாக
வளர்ந்த மரம்! அரிநெல்லி மரத்திற்கு அத்தனை வலு கிடையாது. கிளைகளை பிடித்து
இழுத்தாலே உடைந்து விடும் தன்மை கொண்டது. இருந்தாலும் சிறு வயதில் மரத்தின் உச்சி
வரை சரசரவென்று ஏறிவிடுவது எனக்கு வழக்கமாக இருந்தது – உடைந்து விடும், கீழே
விழக்கூடும் என்ற எண்ணமோ பயமோ வந்ததே இல்லை – அப்போது நானும் முப்பது கிலோவிற்கு
மேல் இருக்க மாட்டேன் என்பது வேறு விஷயம்!
நெய்வேலி ஜவஹர் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்தபோது ஜூனியர் ஜேசீஸ் என அழைக்கப்படும் Junior Chamber of
India கழகத்தின் மாணவர் பிரிவில் இரண்டு வருடங்கள் இருந்தேன் – அதுவும் Chairman பொறுப்பில்.
சில நிகழ்வுகளை நடத்தியதில் பங்கு வகித்து இருக்கிறேன். கூடவே ஒன்றிரண்டு நாடகங்களில்
பங்கு பெற்றதோடு, எங்கள் கல்லூரி சார்பாக திருச்சி REC-ல் நடந்த ஒரு விழாவிற்கும் நண்பர்களுடன்
சென்றதுண்டு. ஜூனியர் ஜேசீஸ்-ல் இருந்தபோது
நிறைய வகுப்புகள் – நேரக் கட்டுப்பாடு, பொது சேவை போன்ற தலைப்புகளில் வகுப்புகள் எடுப்பார்கள். அதில் நேரக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு வகுப்பு
இன்றளவும் நினைவில் இருக்கிறது. அதற்குக் காரணம் உண்டு. அந்த வகுப்பில் காட்டப்பட்ட
ஒரு வரைபடமும், அதன் கதையும் தான் காரணம்.
நெய்வேலியில்
இருந்த போது எங்கள் வீட்டிற்கு சில தெருக்கள் தாண்டி, ஒரு உறவினர் இருந்தார். சில சமயங்களில்
எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் பேசுவதைக் கேட்டாலே எங்களுக்கு சிரிப்பு வரும் – காரணம்
பாதி புரியாது! எதைச் சொல்கிறார் என்று புரிந்த பிறகு சிரிப்பு தான்! ஒரு நாள் அப்படித்தான்
வீட்டிற்கு வந்தவர், “இன்னிக்கு டொக்கு போட்டேன்! ரொம்ப நல்லா வந்தது” என்றார். என்னது
டொக்கு போட்டாரா, அப்படின்னா என்ன என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது அவரது
அடுத்த வாக்கியத்தில் எங்களுக்கான பதில் இருந்தது. “நீங்க கொடுத்த மாங்கால தான் டொக்கு போட்டேன்… ரொம்ப
நல்லா இருந்தது. இன்னும் இரண்டு மாங்கா இருந்தா கொடுங்களேன்!” என்றார்…. அட மாங்காயில்
தொக்கு எனப்படும் ஊறுகாய் செய்ததைத் தான் இப்படி “டொக்கு” போட்டேன் என்று சொல்கிறார்
என்று புரிந்ததும், சிரித்தோம். சில காலம் வரை அவர் வரும்போது அம்மாவுக்கு மட்டும்
கேட்கும் குரலில் “அம்மா, டொக்கு மாமி வந்துருக்காங்க!” என்று சொன்னதும் நினைவில்!
கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும், கதைகளால் விழிப்படைந்த பகல்களும்….
”கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான
தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன? சிலருக்குப் பாட்டி, சிலருக்கு அத்தை, சிலருக்கு
அப்பா…. எனக் கதை சொல்லும் உறவுமுறை வேண்டுமானால் சமயங்களில் மாறுபடலாம். ஆனால் கதை
கேட்டுக் கேட்டுத் தூங்கிய ஆழ்மனசில் கதையின் மேலான ஈர்ப்பு நிரந்தரமாகிவிடுகிறது.
ஆக நம்மில் பலருக்கு சிறுபிராயத்தில் அருகில் படுத்து, முதுகைத் தட்டி, தலையைக் கோதி,
கால்களை வருடி, தூக்கத் துணையாகும் உறவொன்று நீங்காமல் நிலைத்திருக்கும் மனசின் ஆழத்தில்,
வாழ்தலில் நிறைந்துள்ள நல்லது கெட்டதுகளை தான் சொல்லும் கதையும் பொதிந்து கூறித் தூங்கச்
செய்த அவ்வுறவின் உயிர்ப்பு நாம் வாழும் வரை வரும் இரவுகளில் வருடிச் செல்லும் நம்மை……”
சமீபத்தில்
பொறுப்பேற்ற உத்திரப் பிரதேச அரசு, தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்த பல விஷயங்களில்
ஒன்றான Anti Romeo Squad அமைப்பதை உடனடியாக செய்திருக்கிறது. Anti Romeo Squad என்பது
என்ன, எதற்காக என்பதைக் கீழே தந்திருக்கிறேன்.
சில
நாட்கள் முன்னர் தட்டச்சுப் பயிற்சி பற்றிய பதிவு படித்தது என்னுடைய நினைவுகளையும்
மீட்டெடுக்க உதவியது. +2 முடித்த கல்லூரியில் சேர்ந்தபிறகு தான் தட்டச்சுப் பயிற்சி
ரொம்பவே முக்கியம் – ”நாளைக்கு வேலை கிடைக்கணும்னா அதுல சேர்ந்து, தட்டச்சு ஹையர்
பாஸ் பண்ணிட்டா, அதுவும் ஒரு Extra Qualification – English, Tamil என ரெண்டுமே முடிச்சுட்டா
ரொம்பவே நல்லது” என்று சொல்லி என்னையும் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள ஒரு
Typewriting Institute-ல் சேர்த்துவிட்டார் அப்பா. Shorthand-ம் படிச்சா ரொம்ப நல்லதுன்னு
சொன்னாலும், ஏனோ படிக்கவில்லை!
பெரிதாய்
அதில் ஈடுபாடு இல்லை என்றாலும், கையில் ஒரு பேப்பரை சுருட்டி எடுத்துக்கொண்டு சைக்கிளில்
வீட்டிலிருந்து மெயின் பஜார் Institute வரை சென்று வருவேன். புதுசாகப் பழகுபவர்களுக்கென்றே
ஒரு பாடாவதி ஓட்டை மெஷின் வைத்திருப்பார் அந்த Institute owner! ஒவ்வொரு Key மீதும்
ஏறி உட்கார்ந்தால் தான் அதன் அச்சு பேப்பரில் விழும்! அப்படி பல முறை ஏறி உட்கார்ந்து
ஒரு வழியாக பத்து நாட்கள் ஆனபின்னர் தான் வேறு ஒரு மெஷின்! அப்படியே Lower, Higher
என ஆங்கில தட்டச்சு மட்டுமே பயின்றேன். தமிழ் தட்டச்சில் அத்தனை ஆர்வம் வரவில்லை! ஒன்றிரண்டு
முறை முயன்று, கைவிட்டேன். Typewriter-இல் பல முறை Shift Key அழுத்த வேண்டியிருப்பது, தமிழ் தட்டச்சின் சாபக் கேடு!
அந்த
Institute owner எப்போதாவது தான் வருவார். தட்டச்சு சொல்லித்தர ஒரு அக்கா தான் இருப்பார்கள்!
அவருக்கு நம்மள பார்த்தாலே ஏதோ பயம் – இத்தனைக்கும் ஊதினா பறந்து போற மாதிரி தான் இருப்பேன்
நான்! மொத்தமே முப்பது, முப்பத்தி ஐந்து கிலோ தான்! பெரும்பாலான நாட்கள் தட்டச்சு செய்து
முடித்தபிறகு பேப்பரைக் காண்பித்தால், “டைப் அடிச்சாச்சு இல்ல, போய்ட்டே இரு… காத்து
வரட்டும், வழிவிடுன்னு”ன்ற மாதிரி அனுப்பிடுவாங்க! எப்படியோ, ஆறே மாதத்தில் லோயர்,
அடுத்த ஆறாவது மாதத்தில் ஹையர் என இரண்டும் முடித்தேன்.
Institute
வரும் பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அப்போதைய நெய்வேலி ஒரு
Close Knit Community! இப்போது எப்படி என்பது தெரியாது! பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகவே
இருப்பார்கள். இன்ஸ்டிடியூட் போனமா வந்தமான்னு இருக்கணும். விதி படத்துல வர மாதிரி சைட் அடிக்க மட்டும் அங்கே
நான் போனதில்ல! L, O, V, E எழுத்துகள் தேய்ந்து போனதும் இல்லை! ஆனா, நான் கத்துக்கிட்ட
மெஷின்ல a எழுத்து மட்டும் மேல் பகுதி பாதி தான் வரும்! அந்த Key-ஐ மட்டுமாவது மாத்துங்கன்னு
அந்த அக்காட்ட சொன்னா, “அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு!, எதை மாத்தணும், எப்ப மாத்தணும்னு
எங்களுக்குத் தெரியும், போயிட்டே இரு”ன்னு சொல்லிடுவாங்க!
வெறும்
டைப்ரைட்டிங் மட்டும்தான் கத்துக்கிட்டேன்! ஸ்டென்சில் எப்படி கட் பண்ணனும் தெரிஞ்சுக்கல,
சொல்லித்தரவும் இல்லை! கல்லூரி முடிக்கிறதுக்குள்ளேயே, வேலைக்கான தேர்வு எழுதி, அதிலே
பாஸ் பண்ண, டைப்ரைட்டிங் டெஸ்ட் – பாண்டிச்சேரியில்! நெய்வேலிலருந்து மெஷின் தூக்கிட்டுப்
போகணும்! பஸ்லயும், கையிலும் தூக்கிக்கொண்டு போய், டைப் டெஸ்ட் எழுதி, மெஷின பத்திரமா
கொண்டுவந்து திருப்பிக் கொடுக்கணும்! மெஷின தூக்கிட்டுப் போறது பெரிய தொல்லை! எப்படியோ
பாஸ் பண்ணி, தில்லி வந்தாச்சு! டைப் ரைட்டிங் என்னைத் துரத்தியது!
வேலைக்குச்
சேர்ந்தபிறகு எனக்கு கொடுக்கப்பட்ட பிரிவு அதிக ஆட்களைக் கொண்டது. அதுவும்
Statistics சம்பந்தப்பட்டது. சாதாரண கடிதங்களைத் தவிர பட்டியல்கள், Tables தான் நிறைய
டைப் பண்ண வேண்டியிருக்கும்! அதுவும் வருஷத்துக்கு 300, 400 பக்கம் கொண்ட இரண்டு புத்தகங்கள்
வெளியிடுவார்கள் – அதில் முக்கால்வாசி Tables! நிறைய Copies என்பதால் சாதாரண பேப்பர்
டைப்பிங் கிடையாது! Stencil Cut பண்ணனும்! ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு Stencil!
அழுத்தி அடிச்சா, ஸ்டென்சில் கிழிந்து விடும், லேசா அடிச்சா, கட் ஆகாது! பெரிய தொல்லை!
தப்பா அடிச்சா, சிவப்பு கலர்ல ஒரு Solution தடவி, அது காய்ந்த பிறகு அதே இடத்தில் சரியான
வார்த்தையை அடிக்கணும்! கம்ப்யூட்டர் வர வரைக்கும் இப்படி மூணு நாலு வருஷம் Stencil
கட் பண்ணி கட் பண்ணியே வாழ்க்கை வெறுத்தது! விரல் நுனிகள் எரியும்!, கைவிரல்கள் முழுவதும்
கெஞ்சும்….
இதுல
நான் வேற ரொம்ப திறமைசாலின்னு நிறைய வேலை செய்து காட்ட, எல்லோருடைய வேலையும் என் தலையில்!
ஹிந்தி வேற தெரியாது – யார் வேலை குடுத்தாலும் மாங்கு மாங்குன்னு செய்வேன்! செய்ய முடியாதுன்னு
சொல்லத் தெரியாது! பெரும்பாலான அதிகாரிகள் மருத்துவர்கள்! அவர்கள் Dictation கொடுக்கற
மாதிரி சொல்ல, நான் நேரடியாக Typewriter-ல டைப் பண்ணுவேன்! நம்ம வேகம் அவ்வளவுன்னு
புகழ்ந்தே வேலை வாங்கிடுவாங்க! ஒரு டாக்டர் – காஷ்மீரி – நடிகர் அனுபம் கேர்-க்கு சொந்தக்காரங்க!
அவங்க டிக்டேஷன் கொடுக்கும்போது திண்டாடுவேன்! வார்த்தை உச்சரிப்பு அந்த மாதிரி!
பேயன்,
அக்கேயன் என்றெல்லாம் வார்த்தைகள் சொல்லுவார்கள்! பேயன் – இது என்ன நம்ம ஊர் வாழைப்பழமா,
இல்லை, யாரையாவது பேயன்னு திட்டறாங்களா, இதை ஆங்கிலத்தில் peyan அப்படின்னு டைப் பண்ணனுமான்னு
தெரியாது! அதுக்கப்புறம் அவங்க கிட்டயே ஸ்பெல்லிங்க் கேட்க, ”அட பேயன், பேயன்,
இது தெரியாதா உனக்கு?” என்று கேட்டு, P A S S I O N அப்படின்னு சொல்லுவாங்க! அக்கேயன்
– O C C A S I O N….. நம்ம பேஷன், அக்கேஷன்-னு சொல்றதுதானே வழக்கம்! இப்படி
நிறைய வார்த்தைகள்!
ஒரு
வழியா கணினி வந்து, டைப்ரைட்டிங் மெஷின்களுக்கு ஓய்வு கொடுக்க, பல விஷயங்கள் சுலபமாச்சு!
இப்பல்லாம் ஸ்டென்சில் கட்டிங் வழக்கொழிந்து போனது! ஆனா இந்த ஸ்டென்ஸில் வேற ஒரு விஷயத்துக்குப்
பயன்படுது - அந்த பழைய ஸ்டென்ஸில் இல்லை – வார்த்தை மட்டும் இருக்கு! புதுசா தலைமுடிக்கு
டிசைன் பண்ண ஸ்டென்சில் பயன்படுத்தறாங்க! பாருங்களேன்!
அலுவலகம்
வழியாக, ஹிந்தி கற்றுக்கொண்டு தேர்வுகள் எழுதி அதிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, ஹிந்தி
டைப்ரைட்டிங் கத்துக்கலாமே என ஒருவர் கேட்க, அலறி அடித்து பதில் சொன்னேன் – No! தமிழ்
தட்டச்சே கத்துக்கல, நான் ஹிந்தி தட்டச்சு நிச்சயம் கத்துக்க மாட்டேன்னு கண்டியனா
[அதாங்க கண்டிஷனா] சொல்லிட்டேன்!
இரண்டு
நாட்களுக்கு முன்னர் ”நிலாச்சோறும் புதுவருடக் கொண்டாட்டமும்” என்ற
பதிவில் என் அம்மாவின் அத்தை எங்களுக்கெல்லாம் சாதம் பிசைந்து கைகளில் போடுவார்கள்
என எழுதி இருந்தேன். ருக்கு அத்தை – அம்மாவின்
அத்தை என்றாலும், எங்கள் வீட்டில் மட்டுமல்ல, எங்கள் வீட்டுக்கு வரும் பலருக்கும் அவர்
அத்தை தான். அற்புதமான மனுஷி. வாழ்க்கையில் பலவித இன்னல்களை அடைந்திருந்தாலும் அயராது
உழைத்து, அதுவும் அடுத்தவர்களுக்காகவே உழைத்து ஓடாய் தேய்ந்தவர்….. அவரது வாழ்க்கையில் பார்க்காத சோகம் இல்லை என்றாலும்
எல்லோரிடமும் அன்பும் பாசமும் காட்டுபவர்…..
அவரது வாழ்க்கை ஒரு பெரிய கதை.
பிறந்தது
ஒரு பெரிய குடும்பத்தில் – வசதிகள் நிறையவே இருந்தாலும் கண்டிப்புடனும், கட்டுப்பாடுடனும்
வளர்ந்தவர். ஒன்பது வயதில் திருமணம், பதிமூன்று
வயதில் இரண்டு குழந்தைகள் – ஒரு மகள், ஒரு மகன்.
பதினாறு வயதில் கட்டிய கணவர் இறக்க, அந்த வயதிலேயே கைம்பெண் கோலம் – தலையை மொட்டையடித்து
நார்மடி புடவை உடுத்த வேண்டிய கட்டாயம். கணவனின் இறப்பிற்குப் பிறகு சொந்த வீட்டிற்கு
குழந்தைகளுடன் வந்து விட்டார் – நிலபுலன்களை ஆண்கள் பார்த்துக் கொள்ள, வீட்டில் சமையல்
வேலை, குழந்தைகளை பராமரிப்பது என அனைத்திற்கும் ருக்கு அத்தை தான்….
என்ன
தான் தாய் வீடென்றாலும், சும்மா சாப்பிடக்கூடாது, வேலை செய்து தான் சாப்பிட வேண்டும்
என்ற வைராக்கியம். சமையல் என்றால் இன்றைய நாட்களைப்
போல மூன்று நான்கு பேருக்குக் கிடையாது. ஒவ்வொரு
வேளையும் 20-25 பேருக்காவது சமையல் செய்ய வேண்டியிருக்கும் – அதுவும் கோட்டை அடுப்பில்!
இந்த காலம் போலவா கேஸ் அடுப்பு! அத்தனை பேருக்கும் சமையல், துணி துவைப்பது, வீடு சுத்தம்
செய்வது என அத்தனையும் இவர் தலைமையில் தான். வீட்டில் சமையல் தவிர, இத்தனை பேருக்கும்
தேவையான அப்பளம் இடுவது, நொறுக்குத் தீனிகள் செய்வது என ஓயாத வேலை. இதைத் தவிர நிலத்திலிருந்து விளைந்து வந்த விளைச்சலை
சுத்தம் செய்வது போன்ற வேலைகளும் உண்டு.
இப்படி
இருந்தவர் தனது மகள் மற்றும் மகனையும் வளர்த்து ஆளாக்கினார். மகளுக்குத் திருமண வயது
வந்ததும், அவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணம் ஆன சில வருடங்களுக்குள் அவரது
மகள் தரைக்கிணறு ஒன்றில் தவறி விழுந்து உயிர் போனது. மகனுக்கு அவ்வளவாக படிப்பு ஏறவில்லை. அவரது தம்பி [எனது அம்மாவின் அப்பா] பார்த்து வைத்த
வேலைகளிலும் நிலைக்கவில்லை. பிறகு சமையல் வேலை பார்த்து வந்தார். அவருக்கும் திருமணம்
ஆனது – என்றாலும் அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை – கருத்தரித்து, கருத்தரித்து
சில மாதங்களிலேயே பிரசவம் ஆவதற்கு முன்னரே கலைந்து போகும். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல
பலமுறை ஆனபிறகு குழந்தையே இல்லை.
இப்படி
தொடர்ந்து வேலை செய்து வர, கொஞ்சம் கொஞ்சமாக எனது அம்மா மற்றும் பெரியம்மாவிற்கு திருமணம்
நடந்தது. அவரது தம்பியும் [எனது அம்மாவின்
அப்பா] இறந்த பிறகு எங்கள் வீட்டிலும் பெரியம்மா வீட்டிலும் தான் ருக்கு அத்தை இருந்தார்கள். மகன் வீட்டில் அத்தனை வசதி இல்லை என்பதால் அவருக்கு
பாரமாக இருக்காமல் எங்கள் இருவரின் வீட்டில் தான் இருப்பார். அதுவும் சும்மா இருக்க மாட்டார். எந்த வீட்டில் அவர் இருந்தாலும், சமையல் கட்டு முழுவதும்
அவர் வசம் தான். எங்கள் வீட்டில் அம்மாவுக்கு பிரசவ சமயத்தில் முழுவேலையும் அவர் தான்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து, பள்ளிக்குப் போகும் எங்களுக்கும், அலுவலகத்திற்குச்
செல்லும் அப்பாவிற்கும் மதிய உணவு கட்டிக் கொடுத்து என மொத்த வேலையும் அவரிடம் தான்.
அவர்
வீட்டில் இருந்தால் அவரைத் தவிர வேறு யாரையும் வேலை செய்ய விடமாட்டார். வீடு பெருக்குவதிலிருந்து,
சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது என எல்லாம் அவர் தான். அடுத்தவர்கள்
செய்தாலும் மீண்டும் ஒரு முறை செய்வார்! அவ்வளவு வேலை செய்தாலும், ஒரு வேளை தான் முழு
உணவு – அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உணவு! கைம்பெண்கள் அப்படித் தான் இருக்க
வேண்டும் என்று கட்டுப்பாடு அவருக்கு. வயதாக வயதாக கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தி,
இரவில் உப்புமா, பொங்கல், என ஏதாவது சாப்பிட வைத்தோம்.
சமையல்
அத்தனை ருசியாக இருக்கும். குமுட்டி அடுப்பில்
செய்யும் அரிசி உப்புமா, தவலை அடை, வற்றல்குழம்பு என அனைத்துமே பார்த்துப் பார்த்து
செய்வார். செய்வது மட்டுமல்ல, பாசத்தோடு பரிமாறுவதும் அவரே. அவர் பரிமாறி சாப்பிட்டால்
நிச்சயம் இரண்டு கை அதிகமாகத் தான் சாப்பிடுவோம்.
யாரையும் வயிறு காலியாக அனுப்பவே மாட்டார். வீட்டுக்கு யார் வந்தாலும் உணவளிக்காது அனுப்பவே
மாட்டார். எங்கள் வீட்டினர் மட்டுமல்ல, யார் வந்தாலும் உணவளிப்பது அவருக்குப் பிடித்தமான
விஷயம்.
சுத்தம்
அதிகம் பார்ப்பவர் என்றாலும், எங்களை எல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார். நாங்கள் விளையாடிவிட்டு
நேரே சமையலறை சென்று தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டால் எங்களை செல்லமாகத் திட்டி,
அத்தனை தண்ணீரையும் கொட்டிவிட்டு மீண்டும் பிடித்து வைப்பார்! அவர் எங்களுக்காக செய்து
தரும் தின்பண்டங்கள் எத்தனை எத்தனை…. பொரிமாவு
[அரிசி வறுத்து இடிப்பது], அப்பளம் செய்யும் போது அப்பள மாவு என எனக்கு தனியாக சாப்பிட
கொடுப்பது அவர் வழக்கம்! பொரிமாவிலும் விதம் விதமாகச் சாப்பிடத் தருவார் – சில சமயம்
வெல்லம் சேர்த்து, சில சமயம் மோர் சேர்த்து என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை.
தனக்கென்று
பெரிதாக ஆசை இல்லாதவர் – இரண்டே இரண்டு நார்மடி புடவை மட்டும் தான் வைத்திருப்பார்.
நெய்வேலியில் கிடைக்காது என்பதால் அம்மாவோ, அப்பாவோ விருத்தாஜலம் சென்று வாங்கி வருவார்கள்
– அது கூட புதிதாய் இரண்டு வாங்கிக் கொண்டு வந்தாலும் முதல் புடவை முழுவதும் கட்ட முடியாத
அளவு ஆனபிறகு தான் புதியது எடுத்து உடுத்துவார். ஒரு சிறிய இன்ஜெக்ஷன் பெட்டி [அப்போது
எவர்சில்வரில் வரும்!] வைத்திருப்பார் – அதில் தான் யாராவது கொடுக்கும் பணத்தினைச்
சுருட்டி சுருட்டி வைத்திருப்பார். அதிலும்
எங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துவிடுவார்! அவரிடம் எனக்குத் தெரிந்து இருந்த ஒரே
சொத்து ஒரு இரட்டை வட தங்கச் சங்கிலி.
மகன்,
மருமகள் என அனைவரும் இறந்து விட, இவர் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார்… ஒரு நாள் கூட உடம்பு சரியில்லை என படுத்தது இல்லை,
மருத்துவமனைக்குச் சென்றதில்லை, மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டதில்லை! பயங்கர
தைரியசாலி. ஒரு முறை அறுவாமணையில் காய் நறுக்கும்போது விரல் வெட்டிக்கொள்ள, கொஞ்சம்
சுண்ணாம்பு [வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு] வைத்து துணியினால் கட்டி சரியாயிடும்
என தொடர்ந்து வேலை செய்தவர்! டேபிள் ஃபேன் இறக்கையில் ஒரு முறை கை மாட்டிக் கொண்டபோதும்
அதே வைத்தியம் தான்…..
88
வயதில் இறக்கும் வரை எங்களுக்கு அவர் தான் எல்லாம். அவரைப் போல பாசம் காட்ட யாராலும்
இயலாது. கொஞ்சம் கோபம் உண்டென்றாலும், எங்கள்
நல்லதற்காகத் தான் கோபப்படுவார். இறப்பதற்குச் சில நாட்கள் வரை எல்லா வேலையும் அவரே
தான் செய்து கொண்டார். தன்னிடம் இருந்த இரட்டை வட சங்கிலியை விற்று, அவரது ஈமக்கடன்களைச்
செய்ய வேண்டும் – அதற்குக் கூட நான் யாரிடமும் கடன்படக்கூடாது என்று சொன்னவர் ருக்கு
அத்தை! அவரது வாழ்க்கை முழுவதுமே பிரச்சனைகளும் போராட்டங்களும் நிறைந்தது என்றாலும்
அனைவரிடமும் அன்பு காட்டுவதில் அவருக்கு இணை அவர் தான்….
அவர் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடல் “ஏரிக்கரையின் மேலே போறவளே”! அவரது தோல் சுருக்கங்களைப் பிடித்து விளையாடுவது எங்களுக்குப் பிடித்த விஷயம், இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் அவரைப் பற்றி எழுதலாம்….
அந்த அற்புத மனுஷி இறந்து விட்டாலும்
எங்கள் அனைவரின் மனதை விட்டு நீங்காதவர்…..
அந்த அற்புத மனுஷி போல வேறு யாரையும் இதுவரை பார்க்கவில்லை…. இனிமேலும் பார்க்க
முடியுமா என்பது சந்தேகம் தான்…..