செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

முகநூல் இற்றைகள் - மீசையை முறுக்கு - ஃபடாஃபட் டெலிவரி

 

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட குடும்பமரம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமருவதில்லை; ஏன் என்றால் பறவை நம்புவது அந்தக் கிளையை அல்ல - அதன் சிறகுகளை!

 

******


மீசையை முறுக்கு - 30 ஜனவரி 2022:



படம்: இணையத்திலிருந்து...

 

தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்கையில் ஒரு இளைஞர் முகக் கவசம் அணியாமல், நெய் போட்டு வளர்க்கும் தனது முறுக்கு மூசையை இன்னும் முறுக்கிவிட்டபடியே தன்னுடைய நண்பருடன் பேசிக்கொண்டு வந்தார். மீசையை முறுக்கிவிடுவதை/தடவிக் கொள்வதை ஹிந்தியில் "மூச்சோன்கோ தாவ் (dh)தேனா" என்று சொல்வது வழக்கம். தங்களது மீசை மீது பல ஆண்களுக்கு அதீத ப்ரியம் உண்டு! அதனை தடவிக்கொண்டே, முறுக்கிக் கொண்டே தனது பிரதாபங்களை அள்ளிவிடுவதில் கவனம் செலுத்தும் பல வட இந்தியர்களை எனது தில்லி வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். முதல் வரியில் சொன்னது போல நெய் தடவி மீசை வளர்க்கும் சிலரை கண்டதுண்டு..... 

 

என்னதான் மீசை மீதும் அதைத் தடவுவதிலும் அதீத ஆசையிருந்தாலும், தீணுண்மியின் மூன்றாம் அலை அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பொது இடங்களில் இப்படி முகக் கவசம் இல்லாமல் இருப்பது அந்த வீரனுக்கு அழகல்லவே என்று எனக்குத் தோன்றியது. தலைநகரில் பெரும்பாலும் முகக் கவசம் அணிந்தே செல்கிறார்கள். தமிழகம் போல தாடைக்குப் போட்டுக் கொள்வதில்லை. மூக்கையும் வாயையும் மூடாமல் தாடைக்குக் கீழே அணிந்து கொள்வதற்கு அணியாமலேயே இருக்கலாம். தில்லியில் பொது இடங்களில் இப்படி இருப்பவர்களிடம் அபராதம் வசூலிப்பதும் உண்டு....

 

சரியாக, அவர் மீசையை முறுக்கிக் கொண்டு இருக்கும்போது மெட்ரோ பணியாளர்கள் இருவரும், CISF காவலர்கள் இருவருமாக வந்தார்கள். அவர்கள் மெட்ரோ இரயிலில் வரும் பறக்கும் படையினர்! மெட்ரோ ஊழியர்களில் ஒருவர் தனது அலைபேசியில் படம் எடுத்து (நிரூபணம்) மீசையை முறுக்கியவரிடம் காண்பித்து முகக் கசவசம் அணியாமல் பயணித்ததற்காக 200/- ரூபாய் அபராதம் என்றார். மீசைக்காரர் இன்னமும் மீசையைத் தடவியபடி அவர்களிடம் விவாதம் செய்ய CISF காவலர்கள் அபராதம் செலுத்த முடியாதெனில் வாருங்கள், அடுத்த நிலையத்தில் இறங்கி ஒரு நாள் முழுக்க சமூகப் பணி செய்யலாம் என்று சொல்ல, மீசை தடவி விழித்தார்! 

 

பெட்டியில் இருந்த அனைத்து கண்களும் அவரை நோக்க, வேறு வழியின்றி 200/- அபராதம் கட்டினார். மெட்ரோ பெண் அலுவலர் POS Machine மூலம் ரசீது தந்து நகர, மீசை தடவி இன்னமும் தடவிக் கொண்டே இருந்தார் - அவர் தடவிக் கொண்டிருந்தது மீசையை அல்ல! தனது முகக் கவசத்தினை - மூக்குக்கு மேல் இருக்கிறதா என தொடர்ந்து மூக்கைத் தடவி உறுதி செய்தவரைப் பார்க்கும்போது கொஞ்சம் பாவமாகவே இருந்தது.... 

 

*****

 

ஃபடாஃபட் டெலிவரி.... - 31 ஜனவரி 2022:



படம்: இணையத்திலிருந்து...

நெய்வேலியில் இருந்தவரை அம்மா, வருடம் ஆரம்பிக்கும்போதே அருகில் இருந்த பண்ருட்டி நகருக்குச் சென்று, அந்த வருடத்திற்கு தேவையான பருப்பு மிளகாய், மல்லி, மிளகு என பல பொருட்களை வாங்கிக்கொண்டு, தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருவார். தவிர வீட்டு வாசலிலும் சைக்கிளில் மூட்டையாக கொண்டுவரும் வியாபாரிகளிடமும் பேரம் பேசி வருடத்திற்கு தேவையான அளவுக்கு வாங்கி வைப்பார். வாங்கி வைத்து விட்டால் மட்டும் போதாது... வாங்கியதை சுத்தம் செய்வது, வெயிலில் உலர்த்துவது, பூச்சி வராமல் பாதுகாத்து வைப்பது என தொடர்ந்து ஏதேதோ வேலைகள் அவருக்கு இருந்து கொண்டே இருக்கும். புளி மட்டும் வெளியே வாங்கியதில்லை. வீட்டிலேயே மரம் இருந்தது. 

 

பழுத்த புளியை, நான் மரத்தில் ஏறி உலுக்கி விட, அதனை காய வைப்பது, ஓடு எடுப்பது, மீண்டும் காயவைப்பது, அருவாமனையில் கோது, கொட்டை எடுப்பது, மீண்டும் காயவைப்பது, அவற்றையெல்லாம் பீங்கான் ஜாடிகளில் சேர்த்து வைப்பது, அவ்வப்போது எடுத்து மீண்டும் காயவைப்பது என நிறைய வேலைகள் இருக்கும். வருடம் முழுவதற்கும் வாங்கி வைத்து விடுவதால் அவ்வப்போது வாங்கவேண்டிய அவசியம் இருந்ததில்லை. அரிசி கூட மூட்டைகளாக தான் வாங்கி வைப்பார்கள். இப்படியெல்லாம் இருந்த நாட்கள் போய், இப்போது மாதாந்திர கடை சாமான் வாங்கும் அளவிற்கு பலரும் மாறிவிட்டார்கள். இன்னமும் சிலர் நினைத்தபோது இணையவழி வாங்கிக் கொள்வது வழக்கமாகி விட்டது. 

 

அதுவும் சமீப நாட்களில் பெரிய நகரங்களில் Blinkit, Zepto போன்ற செயலிகள் மூலம் தேவையானவற்றை நினைத்த மாத்திரத்தில் சேர்த்து பத்தே நிமிடங்களில் வீட்டு வாசலில் கொண்டு வந்து தந்து விடுகிறார்கள். இப்படியான வசதிகள் அதிகரித்துக்கொண்டே வருவதால் இதனை பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகிறார்கள். ஒருவிதத்தில் சோம்பேறித்தனமாகவே இது தெரிந்தாலும் நிச்சயம் பயனுள்ள வசதி தான். அடுப்பில் பாத்திரத்தை வைத்து சமைக்க ஆரம்பிக்கும் போது, "அடடா உப்பு தீர்ந்து விட்டதே" என்றால் "எடு அலைபேசியை போடு ஆர்டரை!" என தேவையானவற்றை வாங்கி விடுகிறார்கள். 

 

இதிலும் சிலர் தேவையோ இல்லையோ கிடைப்பவற்றை வாங்கி விடுவது உண்டு. அதிலும் லாக் டவுன் சமயங்களில் இந்த செயலிகள் மூலம் வாங்கிக் குவித்த நண்பர்கள் சிலரை நான் அறிவேன். இந்த வசதி இருப்பது நல்லது என்றாலும் அருகில் இருக்கும் சிறு கடைகள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும் நிலை வரலாம். ஏற்கனவே பல சிறுகடைகள் மூடப்பட்டுவிட்டன என்பதும் அதனால் வேறு தொழிலை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதும் மனதில் நினைவுகொள்ள வேண்டிய விஷயம். விலையில் அதிக வித்தியாசம் இல்லாத பொருட்களை முடிந்தவரை அருகாமையில் உள்ள கடையில் வாங்கலாம். அதிக வித்தியாசம் இருந்தால் எங்கே குறைவாக கிடைக்கிறதோ அங்கே வாங்குவதும் சரிதான். இன்று கூட நானும் Blinkit பயன்படுத்தி சில பொருட்களை வாங்கினேன் - அம்மா பட்ட கஷ்டங்களை நினைத்தபடியே.....

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

28 கருத்துகள்:

  1. இதுவும் சில நாட்களுக்கு முன் முகநூலில் வந்ததுதான் என்று தெரியும்.  இப்போதைய நிலை என்னவோ?  என்கின்றாள் தமிழகத்தில் சில நாட்களுக்குமுன் இதேபோல முகக்கவசம் போடாதவர்களை டிஹெபோல விரட்டி விரட்டிப் பிடித்துக் கொண்டிருந்தனர்.  இப்போது தேர்தல் ரிலாக்சேஷனோ என்னவோ, எங்கும் கண்டுகொள்வதாய்த் தெரியவில்லை.  மத்திய அரசு அலுவலகங்கள் இனி முழுவீச்சில் திறக்கபப்டுவதாய் செய்தி பார்த்தேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த திங்கள் கிழமையில் இருந்து மத்திய அரசு அலுவலகங்கள் முழுவீச்சில் திறக்கப்பட்டு விட்டன. ஒரு மாதத்திற்கு 50 சதவிகித ஊழியர்கள் வரலாம் என்று இருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அலுவலகம் சென்றால் போதுமாக இருந்தது. இனி தினமும் செல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அன்பின் வெங்கட்,
    என்றும் நலமுடன் இருங்கள்.

    மிக அருமையான வாசகம். நம்பிக்கைதானே வாழ்க்கை. அதுவும் தன்னம்பிக்கை
    இனிது.

    நன்றி.
    மீசையை முறுக்காதே அது ஆபத்துக்கு அறிகுறி!!!!
    இது எந்தப் படம் என்று நினைவில்லை.
    பழைய படம் தான்:)

    மீசைக்காரர் முகம் பார்த்தால் சிரிப்பு வருகிறது.
    தில்லியின் உஷார் போலீஸ் ...பாராட்டுகளும் வாழ்த்துகளும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      மீசையை முறுக்கினால் ஆபத்து.... :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. நானும் ஆன்லைன் ஆர்டர் செய்வதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்புவேன். குறிப்பாக காய் பழங்கள். நாமே பார்த்து வாங்குவது சந்தோஷம்.

    ஆனால் ஆன்லைனில் உதாரணமா 500கிராம் வெண்ணெய் 187-199 வரை மாறுபடும். கொஞ்சம் நடந்து ந்ந்தினி கடைக்குச் சென்றால் 225 ரூ. இந்த மாறுதலும் சுலபமுமே ஆன்லைன் ஆர்டரைத் தூண்டுது. பொருள் பிடிக்கலையா.. உடனே ரிட்டர்ன் சுலபம். கடைகளில் வாங்கிக்க மாட்டாங்க.. இல்லைனா மதியம் 1 மணிக்கு மேல் வாங்க என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பொருட்களை நேரடியாக வாங்குவதே நல்லது. இணையவழி வாங்குவதில் சில தொல்லைகளும் உண்டு நன்மைகளும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. இரண்டு பக்கமும் ஒரு ஒரு அடிக்குமேல் வைத்திருந்தவர், பத்து திர்ஹாம் கொடுத்து போட்டோ எடுத்துக்க அனுமதித்தது நினைவுக்கு வருது. நான் zoom பண்ணி ஓசியில் எடுத்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீசையை படமெடுக்க பத்து திர்ஹாம் கொஞ்சம் அதிகம்தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  5. உங்கள் அம்மாவை நினைத்தால்
    மிகுந்த யோசனையாக இருக்கிறது.
    80 வரை என் வாழ்க்கையும் இது போலத்தான் இருந்தது.

    ஆனால் உதவியாளர்கள் இருந்தததால்
    வாழ்க்கை ஒரு மாதிரி சீராக இருந்தது.
    ஆனால் வேலை நெட்டித்தள்ளும்.

    இப்போது வீட்டில் அவ்வளவு இடமும் இல்லை.
    பரணும் இல்லை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நினைத்துப்பார்த்தால் கடினமாகவே இருந்திருக்கும் என்பது புரிகிறது வல்லிம்மா. அந்த அளவு வேலை செய்ய இப்போது யாராலும் முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பண்ருட்டி போய் வாங்கி வருவாரா!! பஸ்ஸில்
    கொண்டு வந்தாலும் நிலையத்திலிருந்து வீடு வரை தூக்கி
    வரவேண்டுமே.
    பாவம் ப்பா.
    புளியைப் பிரித்து ஜாடியில் அடைப்பது
    மிகச் சங்கடமான வேலை.
    எல்லாவற்றுக்கும் அந்த வயதும், உடல் வலிமையும்
    அப்போது இருந்தது.
    மற்ற மளிகை பொருட்கள்,பருப்பு வகை
    ,அவற்றைச் சுத்தம் செய்வது எல்லாவற்றையும் செய்து

    வீட்டு மனிதர்களுக்கு சமையலும் செய்ய வேண்டும்.
    உங்கள் அம்மாவுக்கு என் மனம் நிறைந்த
    பாராட்டுகள். அதை அழகாக நினைவில் வைத்திருக்கும்
    உங்களுக்கும் வாழ்த்துகள்.
    இப்போது இங்கேயும் காலை சொன்னால் மதியம்
    பனியோ மழையோ வந்துவிடுகிறது.
    அவைகளைப் பிரித்து துடைத்து சேமிப்பது இன்னோரு
    வேலை. நல்ல பதிவு மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேருந்தில் வந்து சேரும் சமயத்தை முன்கூட்டியே சொல்லிவிடுவார் அம்மா. அந்த நேரத்தில் நாங்கள் சைக்கிளோடு சென்று பொருட்களை எடுத்து வருவோம். பலமுறை இப்படி செய்ததுண்டு. சில வருடங்கள் சொல்லிவிட்டு வந்தால் அவர்களே பேருந்தில் போட்டு அனுப்பி விடுவார்கள். நாம் பேருந்து நிலையத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். இப்படி நிறைய வேலைகள் அம்மாவுக்கு. அவரும் அலுக்காமல் சலிக்காமல் செய்துகொண்டிருந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. ஆமாம் ஜி அதே தான்....நானும் கிராமத்தில் இருந்தவரை வீட்டில் பாட்டி அம்மா எல்லாரும் வருடத்திற்குத்தேவையானவை வாங்கி பாதுகாத்து, அப்பளம் வற்றல் ஊறுகாய் என்று அனைத்தும் அதுவும் எங்களுக்கும் பல பொறுப்புகள் வழங்கப்படும். லீவு நாட்கள் என்றால் இதுதான் நாகர்கோவில் சென்று சாமான் வாங்கிவர வேண்டும். வீட்டிற்கு வந்து கல், மண், தோல் எல்லாம் பொறுக்கி, சுத்தம் செய்வது என்று பல வேலைகள் இருக்கும். மெஷின் சென்று திரிக்க வேண்டியது...ஆனால் இப்போது நினைக்கும் போது அதுவே ரொம்ப மகிழ்ச்சியான காலமாக இருந்தது போலத்தான் இருக்கிறது.

    இப்போதும் நான் பெரும்பாலும் அருகில் உள்ள கடைகளில் (பலசரக்கு கடைகளில்) வாங்குவதுண்டு. நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணம்தான். பலர் பாவம் கடை மூடி வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் கஷ்டப்படுவதையும் பார்க்க முடிகிறது. அங்கு கிடைக்காத பொருட்கள், விலை குறைவாகக் கிடைக்கும் ஆஃபர் போன்றவை மட்டுமே சூப்பர் மார்க்கெட்டுகளில்.

    ஆன்லைனில் பொதுவாக வாங்குவதில்லை. பிரண்டை இங்கு கிடைப்பதில்லை என்பதால் ஆயுஷ் விற்கும் பிரண்டைப் பொடி (நன்றாகவே இருக்கிறது) ஆன்லைனில் வாங்கியதுண்டு. தீநுண்மி அதிகமாக லாக்டவுன் சமயத்தில் வாட்சப் மூலம் பொருட்கள் லிஸ்ட் அருகில் உள்ள மளிகைக் கடைக்கு அனுப்பிவிட்டால் வீட்டிற்கு சாமான் கொண்டுவந்து போட்டுவிடுவார்கள் கூகுள் பே மூலம் காசுகொடுக்கப்பட்டுவிடும்.

    காய் பழங்கள் மட்டும் கடையில்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரையும் தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. மீசை - ஹாஹாஹாஹா

    இங்கும் மெட்ரோ ரயிலில் மாஸ்க் கீழே தழைத்து விட்டாலும் பிடித்து விடுகிறார்கள் என்று அறிந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகக் கவசம் அணிவது அவர்களுடைய நலனுக்கு என்பது பலருக்கும் புரிவதே இல்லை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. //நெய் தடவி மீசை//

    ஹா.. ஹா.. ஏதோ நெய் தோசை என்பது போலிருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய் தோசை..... ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. //அபராதம் செலுத்த முடியாதெனில் வாருங்கள், அடுத்த நிலையத்தில் இறங்கி ஒரு நாள் முழுக்க சமூகப் பணி செய்யலாம் என்று சொல்ல, மீசை தடவி விழித்தார்! //

    இது நல்ல தண்டனையாக இருக்கே!

    வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் 1 மாதத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொள்கிறேன்.

    //சிலர் தேவையோ இல்லையோ கிடைப்பவற்றை வாங்கி விடுவது உண்டு. அதிலும் லாக் டவுன் சமயங்களில் இந்த செயலிகள் மூலம் வாங்கிக் குவித்த நண்பர்கள் சிலரை நான் அறிவேன்.//

    இதனால் மற்றவர்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. மீசை மனிதனின் நடத்தை முதலில் சிரிப்பும் அடுத்து எரிச்சலும் வந்தது. லாக் டவுன் நேரங்களில் இந்த செயலிகள் வசதியாக இருந்தது வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாக்டவுன் நேரங்களில் இந்த மாதிரி செயலிகள் வசதியானவை ராமசாமி ஜி. அதுவே பலருக்கும் பழகியும் விட்டது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. மீசைக்காரரைப் பார்த்ததும் கில்லர்ஜி நினைவுக்கு வருகிறார்.

    இங்கு இன்னும் நாங்கள் இணையவழி பொருட்கள் வாங்குவதில்லை. 2 கிமீ தூரத்தில் இருக்கும் எடக்கரா டவுன் சென்று வாங்கி வருகிறோம்.

    நாங்கள் இருக்கும் பகுதி மிகச் சிறிய பகுதி என்பதால் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நகரங்களில் இருக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகில் மீசைக்காரர் என்றாலே கில்லர்ஜி மட்டுமே நினைவுக்கு வருவார் :) பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துகள். நானும் முன்பு வீட்டு புளி எடுத்து செய்த நாட்கள் உண்டு பின்பு மரமும் இல்லை .:(

    நாங்கள் இப்பொழுதும் கடையில்தான் வாங்கி கொள்கிறோம். சந்தையில் மரக்கறிகள் பழங்கள்.
    மகள் அவர்கள் பெரும்பாலும் ஆன் லைன் சொப்பிங்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....