செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தலைநகர் தில்லி - ஜெய் ஆஞ்சநேயா

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீ உறங்கும்போதும் பணம் சம்பாதிக்கும் வழியை நீ கண்டறியாவிட்டால், நீ சாகும் வரை உழைத்து கொண்டுதான் இருக்கவேண்டும் - வாரன் பஃபெட்.

 

******




 

தலைநகர் தில்லியின் கரோல் பாக் மெட்ரோ நிலையத்திலிருந்து blue line மெட்ரோவில் பயணிக்கும்போது அடுத்த நிலையமான ஜண்டேவாலன் வரும்வரை கவனமாக கண்ணாடி வழி வேடிக்கை பார்த்தால்  செந்தூர வண்ணத்தில் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலை ஒன்றினை பார்க்க முடியும். தன் கைகளால் தன்னுடைய நெஞ்சைப் பிளந்து உள்ளே ராமரை காண்பிக்கும் காட்சியை பிரமாண்ட சிலையாக வடித்து இருப்பார்கள். கால் பகுதியில் மிகப்பெரிய வாய் திறந்திருக்க, அதையே நுழைவாயில் ஆகக் கொண்டு உள்ளே ஒரு கோவிலும்.  உள்ளேயும் செந்தூரம் பூசிக்கொண்டு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 

 

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் பலரும் வருவது வழக்கம். பக்கத்திலேயே சில வருடங்கள் முன்னர் சனிபகவானுக்கும் கோவில் வந்துவிட்டது. சற்றேறக்குறைய முப்பத்தி ஒரு வருடங்கள் தில்லி வாழ்க்கையில், இந்தக் கோவில் வழி பலமுறை பேருந்திலும் வாகனத்திலும் மெட்ரோவிலும் பயணித்திருக்கிறேன் என்றாலும் ஒருமுறை கூட கீழே இறங்கி அந்தக் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கியதில்லை. போகிற போக்கில் மனதுக்குள் ஜெய் ஆஞ்சநேயா என்று சொல்வதோ அல்லது ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனும பிரசோதயாத் என அனுமனின் காயத்ரி மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தவாறு சொன்னபடி சென்றது உண்டே தவிர கோவிலுக்குச் சென்றதில்லை. 

 

சென்ற வாரம் சனிக்கிழமை மாலை, காலையில் இருந்தே வீட்டில் அடைந்து கிடந்த நான் ஒரு நீண்ட நடை நடந்து இந்தக் கோவிலுக்குச் சென்றேன். கோவிலுக்குள் செல்ல தற்போது யாருக்கும் அனுமதி இல்லை - தீநுண்மி தந்த பரிசு.  வெளியில் நின்றபடி மனதுக்குள் அனுமனை நினைத்து அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என வேண்டிக்கொண்டு அங்கேயே சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டு - செல்ஃபி அல்ல! - அங்கிருந்து நகர்ந்தேன். 

 

அனுமன் சிலையின் உயரம் 108 அடி. கோவில் முன்னரே அங்கே இருந்திருந்தாலும், இந்த பிரம்மாண்ட சிலை 1994-ஆம் வருடம் நிர்மாணிக்க ஆரம்பித்து மூன்று வருடங்களில் முடிக்கப்பட்டது. தில்லியின் அடையாளங்களில் முக்கியமான ஒரு இடத்தினை இந்த அனுமன் சிலையும் பிடித்திருப்பது உண்மை. சில ஹிந்தி சினிமாக்களும் தில்லியை காட்சிப்படுத்தும் போது இந்த அனுமனை காண்பித்தது உண்டு - பஜ்ரங்கி பாய்ஜான், பா போன்ற படங்களில் இந்த அனுமன் சிலையை பார்க்க முடியும்.

 

அனுமன் சிலைக்கு முன்னர் மெட்ரோ இரயில் சிறியதாய் தோன்றுகிறது.. மேலதிக தகவலாக ஒரு விஷயம் - கோவில் காரணமாக போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுகிறது எனச்சொல்லி சிலையை அப்படியே அகற்றி வேறு எங்காவது கொண்டு செல்ல முடியுமா என ஒரு முறை கோர்ட் கேள்வி எழுப்பியது. அனுமன் சிலைக்கு அஸ்திவாரம் 40 அடி. மொத்தம் 148 அடி என்பதால் அகற்றுவது கடினம் என அப்போது சொல்லப்பட்டது. நல்லவேளையாக இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

 

தில்லி வரும் வாய்ப்பு இருந்தால் நீங்களும் இந்த அனுமனின் பிரமாண்ட சிலையை பார்த்து ரசிக்கலாம்……

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

24 கருத்துகள்:

  1. பிரம்மாண்ட ஆஞ்சனேயர் அருமையாக காட்சி அளிக்கிறார்.  பாலத்துக்கு அண்டுவேனிற்பது போல தோற்றம்.  நெஞ்சம் திறந்து அதன் வழியே வாகனங்கள் செல்லுமோ (அப்படி இல்லை எனினும்) எனும் ஐயுறும் வண்ணம் காட்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள், பகிர்ந்த படங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. காலடித் தலையின் வர்ணங்களும் சிறப்பாக இருக்கிறது ஜி.

    சிலையும் பிரமாண்டமே...
    ஜெய் ஹனுமான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. ஆஞ்சனேய தரிசனம் மிக நன்றாக
    இருக்கிறது.

    முதன் முதலில் நாமக்கல்லிலும் , அதற்கு முன் சுசீந்தரத்திலும்
    தான் இருந்தது.
    பிறகு நங்க நல்லூர் பிரம்மாண்ட ஆஞ்சனேயர் வந்தார்.
    மிக அழகான மூர்த்தி.
    இந்த ஹனுமாரழகாக இருக்கிறார்.
    காலடியில் சிம்ஹிகா வாயைப் பிளந்து கொண்டிருக்கிறாள்
    என்று நினைக்கிறேன்.
    அவள் வாய்வழியே புகுந்து காது வழியே வந்தார் அல்லவா.

    உங்களுக்கு அனுமன் தரிசனம் கிடைத்தது
    சிறப்பு. எல்லா நன்மைகளையும் அவர் அருள்வார்.

    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  5. அப்பா... மிகப் பெரிய ஆஞ்சநேயர்... 5 மார்ச் காணக் கிடைக்குமா? தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து மார்ச் தலைநகர் வருகிறீர்களா? முடிந்தால் சந்திக்கலாம்! வரும்போது தகவல் சொல்லுங்கள் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பிரம்மாண்ட ஆஞ்சுவை தில்லி வந்த போது போகிற போக்கில் பார்த்து உங்களைப் போலவே மனதிற்குள் சொல்லிக் கொண்டதோடு சரி. நான் ஆஞ்சு ஃபேன்!! கூட!! (அவர் வாயுபுத்ரன்!!) எனக்குப் போக ஆசை இருந்தது அப்போது கோவிட் னு எந்தப் பிரச்சனையும் இல்லையே ஆனால் சான்ஸ் கிடைக்கவில்லை.

    வாசலில் இருந்தேனும் பார்க்க முடிந்ததே!.....நீங்கள் எடுத்த ஆங்கிள் சூப்பர்...பாலத்தின் நடுவே இருப்பது போல! இருக்கிறது.

    கால்களின் இடையே வாயில்! அங்கு நடுவில் இருப்பவள் சுரசை என்று நினைக்கிறேன்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்புத்ரன் பலருக்கும் பிடித்தவர் - ஆனைமுகன் போலவே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. இதுவரை பார்க்கவில்லை..அடுத்தமுறை வருகையில் பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. மெட்ரோவில் பயணித்த சமயங்களில் பார்திருக்கின்றேன் வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தில்லிவாசி ஆயிற்றே... பார்த்திருப்பதில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. பிரம்மாண்டம்! பிரமிப்பு. பாதத்தின் இடையில் கோயில் நுழைவு வாயில் மிக மிக வித்தியாசமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கோவில் தான் துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பிரமாண்ட சிலை குறித்த தங்கள் தகவல் சிறப்பு வெங்கட்.

    நம்ம ஊர் போல வடை மாலை போடுகிறார்களா அங்கேயும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே வடை மாலை எல்லாம் கிடையாது கோயில் பிள்ளை. பூ மாலைகள் போன்றவை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. பிரமாண்டமான ஆஞ்சநேயர். கால்களுக்கு இடையே கோவில் வாசல் வித்தியாசம். எங்கள் யாழ் பகுதியில் மருதனாமடம் என்ற இடத்தில் 72' ஆஞ்சநேயர் சிலை கோவில் வெளியே அமைக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் யாழ் பகுதி கோவில் ஆஞ்சநேயர் பற்றிய தகவல் மகிழ்ச்சி அளித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  12. மிகப் பிரமாண்டமான சிலைதான். காலடியில் கோயில் கர்ப்பக்கிரகம் போல அமைத்திருப்பதும் வித்தியாசமாக உள்ளது.

    பெங்களூர் மகாலக்ஷ்மி லேஅவுட்டில் உள்ள அகாரா கிராமத்திலும் இதே போல 102 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் அருள்பாலித்து நிற்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....