திங்கள், 21 பிப்ரவரி, 2022

மீண்டும் மேகாலயா - பயணத் தொடர் - பகுதி ஆறு - நிர்மலா ரங்கராஜன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மீண்டும் மேகாலயா - பகுதி ஐந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

YOU LEARN NOTHING FROM LIFE IF YOU THINK YOU ARE RIGHT ALL THE TIME.

 

******

 


மீண்டும் மேகாலயா தொடரின் ஆறாம் பகுதி இந்த நாளின் வெளியீடாக…  வாருங்கள் திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் வார்த்தைகளில் அவர்களது அனுபவங்களை படித்து ரசிக்கலாம்  - வெங்கட் நாகராஜ், புது தில்லி. 

 

******

 

மீண்டும் மேகாலயா - பகுதி ஆறு - நிர்மலா ரங்கராஜன் 


 

Dawki செல்லும் வழி முழுவதும்  வரிசையாக நிறைய செம்பருத்தி செடிகள்.  பூக்கள் நல்ல சிகப்பு நிறம். கண்களை இமைக்கவும் மனம் வராமல் ரசித்து கொண்டே சென்றோம். பங்களாதேஷ் எல்லை வந்தாச்சு. இரண்டு பக்கமும் எல்லையில் கொடி இறக்கும் சம்பிரதாயங்கள் நடந்த தருணத்தில் அங்கே சென்று சேர்ந்தோம். அதை பார்த்து விட்டு அங்கிருந்து நடக்கும் தொலைவிலேயே தங்குமிடம் இருந்தது. அங்கே சென்று அவரவர் இடத்தில் பொருட்களை வைத்து விட்டு சற்று இளைப்பாறினோம். அறைக்கே தேனீர் கொண்டு வந்து கொடுத்தனர். அதை பருகிய பின் இரவு சாப்பிட என்னென்ன வேண்டும் என்று கூறி விட்டு, வெளியில் நாற்காலிகள் போட்டு அனைவரும் அங்கே அமர்ந்து விட்டோம். மற்ற இடங்களில் இருந்தது போல் அங்கே இல்லை. சற்று புழுக்கமாக இருந்தது அறைக்குள். மேலும் ஒருவித பூச்சி தொல்லையும் இருந்தது. வெளியில் உட்கார்ந்து இருப்பது மிகவும் நன்றாக இருந்தது. 

 

எனவே அங்கே உட்கார்ந்து இதுவரை பார்த்த இடங்கள் பற்றியும், சம்பவங்கள் பற்றியும் சிலாகித்துக் கொண்டிருந்தோம். இரவு சாப்பாடு தயாராகி விட்டதாக கூறவும் அந்த முக்கிய வேலையை கவனிக்க சென்றோம்.  Dawki ல் தங்கியிருந்த இடம் ORCHID RESTAURANT. அதன் மற்றொரு புறம் எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் மற்றும் குடியிருப்பு.  எங்கள் மூன்று குடும்பத்திற்கு நான்கு அறைகள் ஒதுக்கி இருந்தனர். அந்த வரிசையில் எங்களை தவிர வேறு எவரும் இல்லை. எனவே நாங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தோம். (சொந்த வீட்டில் இருப்பது போல் ஒரு உணர்வு இருந்தது.)



 

நான்காம் நாள் காலையில் சிலர் எல்லைக்கு சென்று கொடியேற்றும் நிகழ்வை கண்டு வந்தனர். பிறகு காலை சிற்றுண்டி முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். 

 

அன்று Shillong திரும்ப வேண்டும். திரும்பும் வழியில் பார்த்த இடம் KRANG SHURI WATER FALLS. இந்த இடத்தில் நீச்சல் விளையாட்டுகள் இருந்தது. ஆளுக்கொரு Life Jacket வாடகைக்கு எடுத்து கொண்டு நீச்சல் அடித்தனர். எனது கணவர் திரு ரெங்கராஜன் அவர்கள் மிக நன்றாக நீச்சல் பழகியவர். டெல்லி வருமுன் சென்னையில் நீச்சல் வீரராக இருந்தவர். நண்பரின் மகன் கார்த்திக்கும் நீச்சல் தெரியும். எனவே இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக நீந்தினர். பிள்ளைகளில் இருவருக்கு நீச்சல் தெரியாது. அங்கே தான் நீந்த கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட பிறகு ஆர்வம் அதிகமாகி விட்டது. வெகு நேரம் நீச்சல் பழகி விளையாடிக் கொண்டு இருந்தனர். மேலே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த எங்களுக்கும் ஆர்வம் அதிகமாகவே நாங்களும் இறங்கி நீந்த ஆரம்பித்தோம். (என்னங்க நம்பிக்கை இல்லையா? நீச்சல் தெரியும்👍). கொஞ்சம் நேரம் தான். நேரமாகி விட்டதால் போகலாம் என்று கூறினர். ஏமாற்றம் தான் 😞

 

வேறு வழியின்றி கிளம்பியாச்சு. அங்கேயே உடைகள் மாற்ற இடம் உள்ளது. கீழிருந்து சமதளம் வந்ததும் மதிய உணவு தேடல். எங்கு கேட்டாலும் Noodles அல்லது fried rice தான் இருந்தது. கிடைத்ததை சாப்பிடுவோம் என்று பசியாறி விட்டு புறப்பட்டோம் Shillong நோக்கி. மாலை Shillong வந்து சேர்ந்தோம். அங்கே இருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயத்தை பார்க்க சென்றோம். நல்ல மழை. Cherrapunjee விட்டு Shillong வந்த பிறகு மழை🤪  வெளியில் இருந்த படியே தேவாலயத்தை பார்த்து விட்டு BONNIE GUEST HOUSE சென்று சேர்ந்தோம்.

 

இரவு அங்கேயே உணவு. விதம் விதமான Fried Rice.  நன்கு ருசித்து சாப்பிட்டு முடித்தோம்.  மறுநாள் அதிகாலையில் புறப்பட வேண்டும் என்பதால் காலை சிற்றுண்டி கையில் கொடுத்து விட சொல்லி கேட்டுக் கொண்டோம். காலையில் எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும் என்பது பற்றி முடிவு செய்து கொண்டு பிறகு Mr. CLARA வின் கணக்குகளை சரிசெய்து விட்டு உறங்க சென்றோம். நிம்மதியான உறக்கம்.

 

ஐந்தாம் நாள் திட்டமிட்ட படி அனைவரும் தயாராகி வாகனத்திற்காக காத்திருந்தோம். அந்த நேரத்தில் சின்ன சின்ன க்ளிக்குகள்.  பிறகு Gகோபி வந்து அழைக்கவே அன்றைய பயணம் ஆரம்பமானது. காமாக்கியா தேவி தரிசனம் அன்று. மிகவும் உற்சாகமாக அதே சமயம் மேகாலயாவை விட்டு போக மனமின்றி புறப்பட்டோம்.  இனிதே சென்று கொண்டிருந்த பயணம் இடையே காலை உணவுக்காக ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி, கையில் கொண்டு வந்திருந்த (முதல் நாள் இரவு எங்களின் வேண்டுதலின் படி காலை சிற்றுண்டியை கையில் கொடுத்து விட்டனர்) ஆலு பராத்தாவை ஊறுகாயுடன் சாப்பிட்டு முடித்து , பயணத்தை தொடர்ந்தோம். கௌஹாத்தி வந்தாயிற்று. கோவிலின் ஒரு கிலோமீட்டர் தொலைவில் எங்கள் வாகனம் சென்று கொண்டிருந்த நேரம் வாகன நெரிசலில் நகரவும் இடமின்றி ஸ்தம்பித்து நின்றது. சாலை முழுவதும் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிற்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒரே இடத்திலேயே நின்று கொண்டு இருந்தோம். பிறகு ஒரு வழியாக வாகனங்கள் நகர ஆரம்பித்தன. அந்த தேவிக்கு நன்றி சொல்லி அவளின் தரிசனத்திற்காக சென்றோம். 

 

கோவிலின் உள்ளே சென்றபிறகு நமக்குள் இருக்கும் பக்தியின் சக்தியே மறைந்து போகும் அளவுக்கு எல்லாம் வியாபாரத்தனம். பிழைக்க இதுவும் ஒரு வழி. எப்படியோ நமக்கு தேவி தரிசனம் வேண்டும். தரிசனத்திற்காக வரிசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் போது சுவற்றை ஒட்டியபடி ஒரு கன்றின் தலை. நான் ஏதோ அது செயற்கையாக செய்து வைக்க பட்டுள்ளது என்று நினைத்து "எவ்வளவு தத்ரூபமாக செய்து வைத்துள்ளனர்! " என்றேன். உடன் வந்த தோழி தத்ரூபமா? அது நிஜம் என்றார். எனக்கு தலை சுற்றியது. அதன் பின் அந்த பக்கம் திரும்பவே இல்லை. வெளியில் வந்த பிறகு சொன்னார்கள் அங்கே தேவிக்கு பலி உண்டு என்று.  அதை நினைத்தால் ஏனோ இப்போது வரையிலும் கூட மனம் ஆறுதல் அடையவில்லை. கோவிலில் ஓரிடத்தில் அமர்ந்து ஸ்லோகங்கள் படித்து விட்டு, அங்கிருக்கும் கடைகளில் சில பொருட்கள் வாங்கி கொண்டு விமான நிலையம் நோக்கி பயணித்தோம். வழியில் ஓர் இடத்தில் (விமான நிலையம் அருகிலேயே ) மதிய உணவு சாப்பிட்டோம். அங்கிருந்து நேரே விமான நிலையம். இரவு டெல்லி வந்து சேர்ந்தோம். இனிதே மேகாலயா பயணம் நிறைவடைந்ததுஏப்ரலில் சென்றது. எட்டு மாதங்களுக்கு பிறகு எழுதுவதால் திரும்பவும் ஒரு முறை அங்கே சென்று வந்தது போல் ஓர் உணர்வு. திரும்பவும் சென்றாலும் அலுத்துப் போகாது. பார்த்து அனுபவிக்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று 👍 பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வந்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி 🙏

 

நட்புடன்

 

நிர்மலா ரங்கராஜன்

புது தில்லி.

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

16 கருத்துகள்:

  1. இன்னும் சற்று அதிக புகைப்படங்கள் பகிர்ந்திருக்கலாம்.  சுவாரஸ்யமான பயணம் இனிமையாக நிறைவுற்றது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் குறைவாகவே எடுத்திருந்தார்கள் ஸ்ரீராம். முடிந்தவரை பகிர்ந்து இருக்கிறேன்.

      சகோதரி நிர்மலா ரங்கராஜன் அவர்களின் இந்தப் பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பக்தி வியாபாரம் ஆகி 2000 வருடம் ஆகி விட்டது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  4. சுவாரஸ்யமாக சொல்லி முடித்து விட்டீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் வழி பகிர்ந்த விஷயங்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருவி சூப்பர்!!

    நம் நாடு மற்றும் பங்களாதேஷ் பார்டர்....இனம் புரியாத ஓர் உணர்வு மனதில் தோன்றியது புல்லரிப்பு. கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நாட்டின் எல்லை நாடுகளின் எல்லாவற்றின் எல்லையில் நின்று பார்க்க ஆசை!!!!! அந்த உணர்வு தனி என்று தோன்றியது.

    படங்கள் கொஞ்சமாகிவிட்டதே..

    காமாக்யா கோயில் பற்றி வெங்கட்ஜி சொல்லியிருந்த போதே கோயில் பார்க்க அழகாக இருந்தாலும் ஏனோ வருத்தம் எனவே ஈர்க்கவில்லை //சுவற்றை ஒட்டியபடி ஒரு கன்றின் தலை.//

    இன்றைய வாசகம் அருமை.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது இந்தப் பகுதிகளுக்குச் சென்று வாருங்கள் கீதா ஜி.

      படங்கள் குறைவாகவே எடுத்திருந்தார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அழகாக இருக்கின்றன. பங்களாதேஷ் பார்டர் அந்தக் கம்பித் தடுப்பு பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.

    இனிய பயணம் இனிதாத நிறைவுற்றது. நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டோம். பகிர்விற்கு உங்களுக்கும் வெங்கட்ஜிக்கும் மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும், பதிவு வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நிர்மலா ஜி இனிய பயணம் சட்டென்று முடிந்த ஃபீலிங்க்!!! பயணம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்குமா....இடங்கள் பற்றி அறியும் ஆர்வமும், படங்கள் பார்க்கும் ஆர்வமும் நிறைய!!! போகமுடியாவிட்டாலும் இப்படித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்!! ஹாஹாஹா

    மற்றபடி ரொம்ப ரசித்து வாசித்தேன். வேறு ஏதாவது இடம் சென்றிருந்தீர்கள் என்றால் எழுதுங்கள் நிர்மலாஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி நிர்மலா அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனது ஆசையும். பார்க்கலாம் கீதா ஜி. முடிந்த போது எழுதுவார்கள் என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சுவாரசியமான அணுபவம் மேடம்.
    விரைவில் சென்று வர வேண்டும் என்னும் ஆர்வத்தை என்னுள்ளே விதைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது நீங்களும் சென்று வாருங்கள் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....