சனி, 12 பிப்ரவரி, 2022

காஃபி வித் கிட்டு - 141 - தேரோடும் வீதியிலே - விலாசம் கவிதை - Gகாஜர் ஹல்வா - ஓவியம் - முகநூல் பக்கம் - வலைப்பூ - நிலைத்தகவல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

COMPANY OF GOOD PEOPLE IS LIKE WALKING INTO A SHOP OF PERFUME. WHETHER YOU BUY THE PERFUME OR NOT, YOU ARE BOUND TO RECEIVE THE FRAGRANCE.

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: தேரோடும் வீதியிலே




 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தேரோடும் வீதியிலே....

 

திருவரங்கத்தில் தேரோட்டம் குறித்த பதிவு ஒன்று வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 

 

இன்றைக்கு திருவரங்கம் நகரில் தைத் தேரோட்டம். காலை 06.00 மணிக்கே தேர் தெற்கு வாசல் ரங்கா ரங்கா கோபுரம் அருகிலிருந்து புறப்படும் என அறிவித்திருந்ததால் காலையிலேயே கவசகுண்டலத்தோடு [வேறென்ன, புகைப்படக்கருவி அது தானே எனது கவச குண்டலம்!] வீட்டிலிருந்து புறப்பட்டேன். தேர் புறப்பாடு ஆவதற்கு முன்னரே அங்கு சென்றுவிட்டேன்.  தெற்கு உத்திர வீதியில் தேரோட்டம் பார்க்க எண்ணிலடங்கா பக்தர்கள் நின்று கொண்டிருக்க, தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

 

காவல்துறையைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் மக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கைதுறையிலிருந்து பலரும் வந்திருந்து புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுக்க ஏதுவாய் நின்று கொண்டிருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து பல பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையில் காத்திருக்க, இந்தியர்களில் பலர் ஆங்கிலேயர்களின் உடையில் இருந்தார்கள்.

 

உத்திர வீதி முழுவதும் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் தங்களது வீட்டு வாசலில் பெரிய பெரிய கோலங்களை போட்டு தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.  பலர் வீடுகளில் தேர் கோலம் போடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. முதலில் பாராயணக் கோஷ்டியும், அவர்கள் பின்னே கோவில் யானை ஆண்டாளும், அதையடுத்து கோவில் குதிரையும் வர அதன் பிற்கு தான் தேர் வரும்.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை - என் விலாசம்:



 

சொல்வனம் பக்கத்தில் படித்து ரசித்த கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கும் ரசனைக்கும்!

 

இன்று,

என் வீட்டின் மேலிருந்து

இலக்கத்தை அகற்றிவிட்டேன்

தெருவின் பெயரையும் சுத்தமாய் அழித்து விட்டேன்

உன்னை என்னிடம் அழைத்து வரக்கூடிய

பெயர்பலகைகளையும் வழிகாட்டிகளையும் நீக்கிவிட்டேன்.

இருந்தாலும், என்னை நீ கண்டுபிடித்தே தீரவேண்டுமெனில்

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள

ஒவ்வொரு கதவையும் தட்டு

ஒவ்வொரு நாட்டிலும்.

ஒரு சுதந்திரமான ஆன்மாவை எங்கு கண்டாலும்

என்னக் கண்டுவிட்டாயென அறிந்துகொள்.

இது ஒரு சாபம்

இது ஒரு வரமும் கூட.

 

-           அம்ருதா ப்ரீதம்

******

 

இந்த வாரத்தின் இனிப்பு - Gகாஜர் ஹல்வா:




 

குளிர்காலம் என்றாலே வடக்கில் இனிப்பான Gகாஜர் (கேரட்) கிடைக்க ஆரம்பித்து விடும் - அதுவும் விலை குறைவாக! இரண்டு ரூபாய்க்குக் கூட வாங்கி இருக்கிறேன். தற்போது 30 ரூபாயில் கிடைக்கிறது!  அதைப் போலவே CHசிக்குந்தர் (பீட்ரூட் ) கூட சுவையாகக் கிடைக்கும்.  இந்த இரண்டையும் ஹல்வா செய்து சுவைப்பது வழக்கம்.  ஒவ்வொரு வருடமும் குளிர்நாட்களில் இந்த ஹல்வா சாப்பிடாமல் இருந்ததில்லை.  இந்த வருடம் குளிர் நாட்கள் முடியப் போகிறது என்றாலும் சுவைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.  ஒரு ஞாயிறில் பக்கத்தில் இருக்கும் பங்க்ளா ஸ்வீட்ஸ் கடை வழி சென்ற போது, அப்படியே ஒரு தொன்னை Gகாஜர் ஹல்வா சுவைத்தேன்.  நெய் சொட்டச் சொட்ட நிறைய உலர் பழங்கள் சேர்த்து Gகாஜர் ஹல்வா! நான் சுவைத்த ஹல்வாவின் படம் உங்களுக்காக!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் - Caricature :







 

தில்லியில் இருக்கும் ஒரு அலுவலக நண்பர் திறமைசாலி.  சமீப நாட்களில் அவர் தனது மற(றை)ந்திருந்த திறமையான ஓவியம் வரைவதை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.  அவ்வப்போது அவர் வரையும் பென்சில் ஓவியங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.  அவரது அம்மா, அப்பா, மாமனார் என பலரையும் வரைந்ததோடு எனக்கும் அனுப்பி வைப்பார்.  பென்சில் கொண்டு வரைந்த Caricature படங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் வரைந்து அனுப்பிய சில ஓவியங்கள் மேலே! நண்பர் எனது WhatsApp DP பார்த்து என்னையும் வரைந்து அனுப்பி வைத்தார்!  அந்தப் படமும் இங்கே இருக்கிறது.   

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - விமலன் :



 

முகநூலில் நண்பர் விமலன் அவர்கள் வித்தியாசமான படங்கள் சேர்த்து அவரது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்.  அவர் பகிர்ந்து கொள்ளும் அனைத்து படங்களுமே வித்தியாசமாக இருப்பதோடு அவரது எண்ணங்களும் கவிதை வடிவில், கதை வடிவில் என மிகவும் சிறப்பாக இருக்கும்.  அப்படிச் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு நகரும் படம் (GIF) பார்ர்கும் போதே வித்தியாசமாகவும் இருந்தது.  நான் ரசித்த அந்த படம் இங்கே! 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த வலைப்பூ - சோனமுத்தன் :

 

சமீபத்தில் தான் இந்த வலைப்பூ பற்றி தெரிய வந்தது.  அவரது பதிவுகள் சிலவற்றை படித்துப் பார்த்தேன்.  நிறைய எழுதுகிறார் என்றாலும் யாருடைய கருத்துரையும் பார்க்கவில்லை.  அவரது பதிவுகளில் ஒன்றுக்கான சுட்டி கீழே!  முடிந்தால் படித்துப் பாருங்களேன்.

 

"கோலமாவு கோகிலா". (sonamuthan.blogspot.com)

 

*****

 

இந்த வாரத்தின் ரசித்த WhatsApp நிலைத்தகவல் - ஏழ்மை



 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் ஒன்று உங்கள் பார்வைக்கு! இங்கே திறமை கொட்டிக் கிடக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 


30 கருத்துகள்:

  1. தேரோட்டம் காட்சிகள் மகிழ்ச்சியைத் தருன்றன.  கொரோனா பயம் இல்லாதிருந்த காலம்!

    கவிதை நன்று.

    இனிப்பு அழைக்கிறது!

    நண்பரின் ஓவியத் திறமை வியக்க வைக்கிறது.  பாராட்டுகள்.

    விமலன் கதைகள் எழுதும் வழக்கமுடையவர்தானே?  அவர் வலைப்பக்கத்தில் நிறைய கதைகள் இருக்கும்.  விருதுநகர் முக்கிய இடமாக இருக்கும்.

    மண்ணில் கேரம்போர்ட்..   அற்புதம்.  வில்லேஜ் விஞ்ஞானிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா பயம் இல்லாத காலத்தில் நடந்த தேரோட்டம் நிகழ்ச்சி.... பயமே இல்லாமல் சுற்றிய நாட்கள் நெஞ்சுக்குள்..... என்று தொற்றின் தொல்லை தீருமோ?

      பதிவின் மற்ற பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. விமலன் அவர்கள் வலைப்பூவிலும் எழுதிக்கொண்டு இருந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. தேரோட்டம் படம் அழகாக இருக்கிறது ஜி.
    கவிதை அருமை.
    உங்களது பென்சில் படம் ஓரளவு சரியாக வந்து இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேரோட்டம் படம் மற்றும் கவிதை உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி. ஓவியம் குறித்த கருத்துரைக்கும் நன்றி.

      தங்களது தொடர் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. காலையில் அல்வா படம்.... இப்போ தில்லியில் இருந்தால ... என எண்ண வைக்கிறது.

    வீடு.. என்ன என்னவோ எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. இதுவரையில் எத்தனையோ வீடுகளில் வாழ்ந்துவிட்டோம். நம் இல்லம், நம் ஊர் என்பது எது? கடைசி ஸ்டேஷன் எந்த ஊர் என்றெல்லாம் நினைக்க வைக்கிறது.

    ஓவியங்கள் அழகு. நல்ல திறமை

    கேரம்போர்ட்... நான் வைத்திருந்த பலவற்றை பஹ்ரைனில் விட்டுவிட்டு வந்தேன். இந்த ஊராக இருந்திருந்தால் எத்தனையோபேருக்கு உபயோகமாக இருந்திருக்கலாம் ;தேவைப்படுபவர்களுக்கு)

    நல்ல வலைத்தளங்களை யாரேனும் அறிமுகப்படுத்தினால் தேவலை. இந்த வலைத்தளம் சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி. புதிய வலைத்தளங்கள் அறிமுகம் செய்யலாம். அடுத்த வாரமும் ஒரு புதிய வலை தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. // வெளிநாட்டிலிருந்து பல பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையில் காத்திருக்க, இந்தியர்களில் பலர் ஆங்கிலேயர்களின் உடையில் இருந்தார்கள்.. //

    இந்தியர்களில் - என்பதை தமிழர்களில் என்று திருத்திக் கொளுங்கள்..

    நேற்று தினமலரில் படித்தேன்.. கோயில்களுக்கு பாரம்பரிய உடை வேட்டி அணிந்து வர வேண்டும்.. என்று நீதி மன்றத்தில் முறையிட்டு நின்றால் - நீதி மன்றம் கேட்டிருக்கின்றதாம்...

    ஆகமத்தில் இது பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கின்றது - என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மடசீர்பு நாடு. அப்படித்தான் இருக்கும்.

      நீக்கு
    2. சில விஷயங்கள் இப்படித்தான். தலை நகர் தில்லியில் கூட கோவில்களில் பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என பதாகைகள் வைத்திருக்கிறார்கள். தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
    3. எதையும் செய்யலாம் எனும் உரிமைகள் இங்கே நேரம் நிறைய உண்டு. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. லெக்கின்ஸ்/ மேலே தொள தொளா சட்டையுடன் கோயில்களுக்கு வருகின்றார்கள்..

    என்ன என்று சொல்வது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிங்கள் மத்தவங்க டிரெஸை நோக்கக்கூடாதல்லோ.. நிங்களுக்கு பகவான் சிந்தனை மாத்திரம் இருக்கணும் அல்லோ...

      என்ற கேள்விகள் வரும்.

      நீக்கு
    2. ஒன்றும் செய்வதற்கில்லை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
    3. பக்கத்தில் நடப்பது எதுவும் கவனத்தில் வராமல் இறைவன்மீது சிந்தனையைச் செலுத்தி அவனை வணங்கி வருவது தான் நல்லது. ஆனால் இது சாத்தியப்படுவதில்லை என்பது நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. ஓவியங்கள் அருமை...

    வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வரைந்த ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. மண்ணில் கேரம் போர்ட் அசத்துகிறார்கள்.

    வாலைப்பூ அறிமுகம் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்ணில் கேரம் போர்டு சிறப்பான சிந்தனை தான். பதிவு பற்றி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. காரட் ஹல்வா படம் போட்டு நாவில் நீர் சுரக்க வைச்சிட்டீங்களே ஜி. இங்கும் ஊட்டி /தில்லி காரட் கிடைக்கும் இந்த சீசனில் வீட்டில் செய்வதுண்டு. இந்த வருடம் தான் செய்யவில்லை. பார்த்ததும் செய்யும் ஆவல்.

    தேரோட்டம் ஆஹா கொரோனா இல்லையே அப்போது...

    மண்ணில் கேரம்போர்ட் இப்படி எனக்கு முன்பு வாட்சப்பில் வந்த நினைவு. நானும் படத்தைச் சேமித்து வைத்திருந்தேன்...பல பழுதுகளில் பல காணாமல் போய்விட்டன.

    கவிதை நன்று. குறிப்பாக அந்த வீடு எனக்குப் பல நினைவுகளை எழுப்புகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த தங்களது மேலான எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. உங்கள் நண்பரின் ஓவியத்திறமை பென்சில் ஸ்கெட்ச் திறமை அபாரம். உங்களையும் வரைந்திருப்பது படங்களைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. விளக்கம் பார்க்கும் முன். வாட்சப் டிபி...

    நண்பர் விமலன் அவர்களின் படங்கள் ரொம்ப ரொம்ப வித்தியாசமாக இருக்கும். கூடவே அவரது சொற்சித்திரம் சாதாரண மனிதர்களைப் பற்றியதாக வாழ்வியல் நடப்புகளாக இருக்கும். ஆழமாக எழுதுவார்.

    சோனமுத்தன் சென்றிருக்கிறேன் ஓரிரு முறை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வரைந்த ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. நண்பர் விமலன் அவர்களின் எழுத்து எனக்கும் பிடித்தது. இங்கே அறிமுகம் செய்த வலைப்பூவில் உங்களது கருத்துரைகள் கண்டேன். மகிழ்ச்சியும் நன்றியும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. சோனாமுத்தன் அறிமுக பளாகர் நானும் சமீபத்தில்தான் அறிந்தேன் ஜி. நான் ஒரு கிராமத்துக் காவல் தெய்வம் பற்றி தேடிய போது அறிந்த தளம். ஆனால் கருத்துஇடவில்லை. இன்று கருத்தும் இட்டு நீங்கள் அறிமுகப்படுத்தியதும் சொல்லியிருக்கிறேன் அங்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே அறிமுகப்படுத்திய வலைப்பூவில் உங்களது கருத்துரைகள் கண்டேன் கீதா ஜி. பயனுள்ளதாக இருந்தால் நல்லது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. ரொம்பவும் அழகான ஆரம்ப வாசகம்!
    உங்கள் நண்பரின் பென்சில் ஓவியங்கள் அசத்துகின்றன! மிக நுணுக்கமாக, அருமையான shades உடன் மிக அழகாய் வரைந்திருக்கிறார். இனிய பாராட்டுக்கள்!
    விமலன் அவர்களின் நிழற்படமும் அத்தனை அழகு! இவர் முன்பு வலைத்தளம் வைத்திருந்தாரென்று நினைக்கிறேன்.
    வலைப்பூ அறிமுகம் மிக சிறப்பான பகுதி. இந்த அறிமுகங்கள் தொடரும் என்று நினைக்கிறேன்.
    ஏழ்மை என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் புகைப்படமும் அதன் கீழுள்ள வாசகமும் பிரமிக்க வைக்கிறது. ரசிக்கவென்றே இத்தனை சிறப்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவு வழி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு பிடித்ததாக அமைந்திருப்பது அறிந்து எனக்கும் பூரண மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மனோம்மா.

      நீக்கு
  12. நண்பரின் பென்சில் ஓவியங்கள் அருமை.WhatsApp நிலைத்தகவல் புகைபடம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வரைந்த ஓவியங்களும் பகிர்ந்த நிலை தகவலும் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி ராமசாமி ஜி.

      நீக்கு
  13. நண்பரின் ஓவியங்கள், தேரோட்டப் புகைப்படம், வாசகம் எல்லாமே அருமை. ரசித்தேன். புதிய வலைத்தளம் அறிந்துகொண்டேன். (கீதாவும் சொன்னார் நான் இன்னும் அத்தளம் வாசிக்கவில்லை)

    விமலன் அவர்கள் மிகவும் வித்தியாசமான படங்கள் தன் தளத்தில் போடுவார். இங்கு நீங்கள் பகிர்ந்திருபதும் அழகாக இருக்கிறது.

    அனைத்தும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டேன். மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....