புதன், 12 பிப்ரவரி, 2014

தேரோடும் வீதியிலே....


காத்திருக்கும் தேர்...... 
 
இன்றைக்கு திருவரங்கம் நகரில் தைத் தேரோட்டம். காலை 06.00 மணிக்கே தேர் தெற்கு வாசல் ரங்கா ரங்கா கோபுரம் அருகிலிருந்து புறப்படும் என அறிவித்திருந்ததால் காலையிலேயே கவசகுண்டலத்தோடு [வேறென்ன, புகைப்படக்கருவி – அது தானே எனது கவச குண்டலம்!] வீட்டிலிருந்து புறப்பட்டேன். தேர் புறப்பாடு ஆவதற்கு முன்னரே அங்கு சென்றுவிட்டேன்.  தெற்கு உத்திர வீதியில் தேரோட்டம் பார்க்க எண்ணிலடங்கா பக்தர்கள் நின்று கொண்டிருக்க, தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
 
 தேரில் செதுக்கி வைத்திருக்கும் சில சிற்பங்கள்...

காவல்துறையைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் மக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கைதுறையிலிருந்து பலரும் வந்திருந்து புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுக்க ஏதுவாய் நின்று கொண்டிருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து பல பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையில் காத்திருக்க, இந்தியர்களில் பலர் ஆங்கிலேயர்களின் உடையில் இருந்தார்கள்.


 சாலையில் தேர்க்கோலம்!

உத்திர வீதி முழுவதும் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் தங்களது வீட்டு வாசலில் பெரிய பெரிய கோலங்களை போட்டு தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.  பலர் வீடுகளில் தேர் கோலம் போடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. முதலில் பாராயணக் கோஷ்டியும், அவர்கள் பின்னே கோவில் யானை ஆண்டாளும், அதையடுத்து கோவில் குதிரையும் வர அதன் பிற்கு தான் தேர் வரும்.

 திரளான மக்கள் கூட்டம் - தைத் தேர் பின்புலத்தில் திருவரங்கம் ராஜகோபுரம்....

தேர் அசைந்து அசைந்து வீதியில் வருவதைப் பார்ப்பதில் ஒரு குதூகலம்.  தேர் வடம் பிடித்து அதனை தேரோட்டமாக ஓட்டுவதில் மக்களுக்கும் அலாதியான பக்தியும், மகிழ்ச்சியும்.  தேரை இழுக்கும் மக்கள் மகிழ்ச்சி ததும்ப “கோவிந்தா, கோபாலாகோஷங்களை எழுப்பியபடி இருக்க, ஒவ்வொரு முறை நின்றதும் கரகோஷங்களை எழுப்பி “ஊர் கூடி தேர் இழுத்ததில்இருந்த மகிழ்ச்சியை பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


 தேரோட்டம் - மற்றொரு காட்சி.....

பொதுவாக தேரோட்டம் என்றால் தண்ணீர்பந்தல்களும், இலவச உணவு விநியோகம் செய்வதும் இருக்கும். ஆனால் இம்முறை ஏனோ இவை அனைத்தும் காணமுடியவில்லை. இதுவும் ஒரு விதத்தில் நல்லது என்று தான் தோன்றியது.  பலர் தேவையோ இல்லையோ உணவுப் பொட்டலங்களை வாங்கி ஒரு வாய் சாப்பிட்டு மீதியை அப்படியே சாலையில் கொட்டிவிட்டுச் செல்வதைப் பார்த்ததுண்டு.


 பக்தர்கள் ஏற்றிய மாவிளக்கும், கற்பூரமும்....

பக்தர்கள் பலரும் தேரில் வரும் ரங்கநாதருக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட, சிலர் மாவிளக்கு ஏற்றி பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தார்கள்.  தேரோடும் வீதியில் ஒரு மூதாட்டி தேர் வருவதற்கு சில நொடிகள் இருக்கும்போது பெரிய கட்டி கற்பூரத்தினை சாலையில் ஏற்றிவைக்க, காவல்துறையைச் சேர்ந்த இருவர் “ஏம்மா, இப்படி கிட்ட வரும்போது கற்பூரம் ஏத்தறியே, தேர் இழுக்கறவங்க கால்ல பட்டு புண் ஆகிடுமே, சீக்கிரம் அணச்சுடும்மாஎன்று சொல்ல, அதெல்லாம் ஆகாது...  என்று சொல்லி ஏற்றிய கற்பூரம் எரியும் வரை காத்திருந்தார்.  அதற்கு காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், “யார் காலிலாவது பட்டால், சூடு தாங்காது. காலில் புண்ணானால் அந்த பாவம் உனக்குத்தான் போ!என்று சொல்லிப் போனார்.

 கோவில் யானை ஆண்டாள் புதுப் பாகனுடன்....

வேறொருவர் கோவில் யானை ஆண்டாள் புதுப் பாகனுடன் வரும்போது அதன் முன்னே இதே மாதிரி கற்பூரத்தினை ஏற்றி வைக்க, தனது தும்பிக்கையால் எரியும் கற்பூரத்தினை ஊதி அணைக்க முற்பட்டது. ஆண்டாளிடம் பாகன் அதைச் செய்யாதே எனத் தடுக்க, அந்த கற்பூரத்தினைத் தாண்ட மறுத்து திரும்பவும் திரும்பவும் எரியும் கற்பூரத்தினை அணைக்கப் பார்த்தது :) யானைப் பாகன் மலையாளத்தில் மீண்டும் மீண்டும் யானையிடம் கற்பூரத்தினை அணைக்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டு இருந்தார்!

 சுறுசுறுப்பான உழைப்பாளிகள்..... 

காலையிலேயே சில வியாபாரிகளையும் காண முடிந்தது. பலூன் விற்பவரும், புல்லாங்குழல் விற்பவரும் புதிய மாதிரியான கிடுக்கி விற்பவரையும் பார்த்தேன். கிடுக்கி விற்பவர் ஒரு பாத்திரத்தினையும் கையோடு கொண்டு வந்து நான்கைந்து கிடுக்கிளை அதில் மாட்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்க, கொஞ்சம் புன்னகைத்து “வேண்டாமே...” என வெட்கப்பட்டார்.

 வடக்கு வாசல் கோபுரம் அருகே தைத்தேர்.....

தேரில் இருக்கும் பெருமாளை தரிசிக்க முடியாதபடி தேரின் மேல் சிலர் நின்று கொண்டிருக்க மேலும் தேரைச் சுற்றி தொங்க விட்டிருந்த தோரணங்களும் காரணமாக இருந்தன. தேரில் முன்னே பெரிய திருவடியாம் கருடன் சிலையும் இருக்க, முன்னர் இரண்டு குதிரைகள் முன்னங்கால்களை தூக்கிக் கொண்டு பாய்வது போல் இருந்தது. தேரோட்டம் முழுவதும் பார்க்க ஆசையிருந்தாலும் பார்க்க முடியவில்லை.


 அலங்காரத்துடன் காத்திருக்கும் குதிரை....

புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஈடுபாடு இருந்தாலும், அவ்வப்போது ராஜா காது பகுதிக்கு ஏற்ற சில விஷயங்களும் காதில் ஒலித்தபடி இருந்தது! சில விஷயங்களை அடுத்தடுத்த ஃப்ரூட் சாலட் பகுதிகளில் வெளியிடுகிறேன். வடக்கு வாசல் கோபுரம் அருகில் திருவரங்கம் ஸ்ரீஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளும் திருமதி விசாகா ஹரி அவர்களும் தேரில் வரும் அரங்கனை தரிசிக்க காத்திருந்ததைக் காண முடிந்தது.

 வடக்கு வாசல் கோபுரம்

ஒவ்வொரு மூலையிலும் தேர் திரும்புவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது.  பெரும்திரளான மக்கள் தேர்வடம் பிடித்தாலும், சாலை மூலையில் திரும்புவதற்கு அதிகம் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. தேர் வடத்தினை தெரு மூலைகளில் மேலே தூக்கியபடி சென்றது, ஒரு பெரிய அனகோண்டா தன் உடலை அசைப்பது போலத் தோன்றியது.


 தேர்வடம் தாங்கிய பக்தர்களின் கூட்டம்....

தெற்கு வாசல் ரங்கா ரங்கா கோபுரத்திலிருந்து வடக்கு வாசல் கோபுரம் வரை தேரோட்டத்தில் கலந்து கொண்ட நான் அதன் பிறகு வயிறு பசிக்க ஆரம்பிக்க வீட்டிற்குத் திரும்பினேன். நான் கண்ட காட்சிகளை இப்பகிர்வு மூலம் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.  உங்களுக்கும் மகிழ்ச்சி தானே!

வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....


64 கருத்துகள்:

  1. //வெளிநாட்டிலிருந்து பல பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையில் காத்திருக்க, இந்தியர்களில் பலர் ஆங்கிலேயர்களின் உடையில் இருந்தார்கள்.//

    நம்ம ஆளுங்க கொளுத்தற வெயில்லே கூட ஜீன்ஸும், டீஷர்ட்டும் அதே துணியில் போடறவங்களாச்சே. இப்போ விடுவோமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  2. நேர்முக வர்ணனைக்கு நன்றி. இந்த வருஷமும் தேர் பார்க்க வரமுடியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா.... சரி..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  3. இப்போத் தான் லோகல் சானல்லே தேர் காட்டினாங்க. பார்த்தோம். :) கூட்டம் ஜாஸ்தி இல்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... தொலைக்காட்சியில் பார்த்துட்டீங்களா.....

      கூட்டம் தேர் அருகில் மட்டுமே இருந்தது.... ஒவ்வொரு இடங்களில் காத்திருந்த பக்தர்கள் கூட்டமும் சேர்த்தால் நிறையதான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. கற்பூரம் ஏற்றுவோர் = திருந்தாத மக்கள்.

    ஆண்டாளுடன் புது பாகன் பழகி விட்டாரா? ஸ்ரீதரனை மறந்து விட்டாளா ஆண்டாள்?

    படங்கள் கண்ணைக் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீதரனை மறந்து விட்டாளா என்பது தெரியவில்லை. புதுப்பாகன் ஆண்டாளுடன் நிறைய பேச வேண்டியிருக்கிறது.... நடந்து வரும்போது பேசியபடியேயும், நிறைய கட்டளைகள் கொடுத்தபடியே வந்தார்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. உங்களுடன் சேர்ந்து நாங்களும் தைத்தேரோட்டத்தை கண்டு களித்தோம்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  6. மிக நுட்பமாக எடுக்கப்பட்ட தங்களின் புகைப்பட அணிவகுப்பில் இருந்து
    இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவத்தைப் பெற்றோம் .அருமையான
    படப் பிடிப்பு ! வாழ்த்துக்கள் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  7. வர்ணனை அருமை! இது போன்ற திருவிழாக்களின் சிறப்பைப்பற்றி நினைக்கும் போது, இராமகிருஷ்ண பரமஹம்சரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும். அதாவது, திருவிழாக்கள், அருகிலிருக்கும் கிராம மக்களுக்கு, திருவிழாக்களில் கடைகள் போடும் ஏழை வியாபாரிகளுக்கு -சseasonal vendors - வருடம் முழுவதும் குடும்பம் நடத்த வருமானம் கிடக்க வழி வகுக்கிறது! கிராம மக்களுக்கு, ஏழைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது நடக்காத விஷயம் என்பதால் இது தான் அவர்களுக்கு ஆன்மீகமும், சிற்றத்தாருடன் சேர்ந்து மகிழும் ஒரு சுற்றுலாவாகும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      உண்மைதான். பலருக்கு இந்த திருவிழாக்கள் ஒரு மினி சுற்றுலா.....

      நீக்கு
  8. ஆஹா! ஆஹா! காணக் கண்கோடி வேண்டும்.

    என்ன ஓய்! யானைக்கு நாமமும், பாகனுக்கு பட்டையும் சைவ வைணவம் ஒன்றுடம் ஒன்று பின்னி பிணைந்தது என்று சொல்லாமல் சொல்கிறதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரியும் சிவனும் ஒண்ணு..... அறியாதவன் வாயில் மண்ணு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்..

      நீக்கு
  10. "//வெளிநாட்டிலிருந்து பல பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையில் காத்திருக்க, இந்தியர்களில் பலர் ஆங்கிலேயர்களின் உடையில் இருந்தார்கள்.//" - இந்தியர்கள் நாம் தான் நம்முடைய பாரம்பரியத்தை மறந்து கொண்டிருக்கிறோம் என்று காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  11. வர்ணனையை அழகான படங்களுடன் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  12. நாங்கள் நேரில் வந்திருந்தாலும் இம்புட்டு நுட்பமாய் ரசித்திருப்போமான்னு தெரியல. அழகாய் தேரை வடம் பிடித்து இழுக்க வைத்ததற்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. பெண் காவலர் சொன்னது சரி தான்...

    படங்கள் அனைத்தும் அருமை... நாங்களும் கலந்து கொண்டோம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. திருவரங்கம் நகரில் தைத் தேரோட்டம்
    அருமையான படங்களுடன் சிறப்பாகப்பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு

  15. ‘தேரோடும் வீதியிலே’ நாங்களே நின்று தேரோட்டத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அருமையான பதிவு. படங்களும் தான். அதுவும் அந்த தேர் சிற்பங்கள் கல்லில் செதுக்கியது போன்று இருந்தது. அத்தனை நேர்த்தி.

    //வெளிநாட்டிலிருந்து பல பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையில் காத்திருக்க, இந்தியர்களில் பலர் ஆங்கிலேயர்களின் உடையில் இருந்தார்கள்.//

    என்று தணியும் இந்த ஆங்கில மோகம்?

    //தேர் வடத்தினை தெரு மூலைகளில் மேலே தூக்கியபடி சென்றது, ஒரு பெரிய அனகோண்டா தன் உடலை அசைப்பது போலத் தோன்றியது.//

    அருமையான கற்பனை.

    //பொதுவாக தேரோட்டம் என்றால் தண்ணீர்பந்தல்களும், இலவச உணவு விநியோகம் செய்வதும் இருக்கும். ஆனால் இம்முறை ஏனோ இவை அனைத்தும் காணமுடியவில்லை//
    அன்னதானம் செய்ய அரசு கட்டுபாடு விதித்திருப்பதை திரு தமிழ் இளங்கோ அவர்கள் அவரது பதிவில் ‘அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் 08-02-2014 அன்று பதிவிட்டிருக்கிறார். பார்க்க http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_8.html ஐ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் இளங்கோ அவர்களின் பதிவினை, நான் இப்பதிவு எழுதிய பிறகு தான் பார்த்தேன். தகவலுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  16. படங்கள் அருமை! தேரோட்டத்தை கண்டு களித்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  17. சிறப்பான படங்களுடன் சிறந்தப் பதிவுக்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  18. நேர்முகம் நன்றாக இருக்கிறது. படங்கள் அருமை. விசாகா ஹரியின் படமும் போட்டிருக்கலாமே! அற்புதமான உபன்யாசகர் அவர். மிகச் சிறந்த பாடகி. ஆழ்ந்த கல்வியாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களை படம் எடுக்கவில்லை ஐயா......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா அவர்களே.

      நீக்கு
  19. வணக்கம்
    ஐயா.

    நாங்கள் கோயிலுக்கு வர வில்லை என்றாலும் தங்களின் பதிவை படித்த போது நிகழ்வில் கலந்த கொண்ட நினைவுதான் மனசில் ஓடுகிறது... படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு.... வாழ்த்துக்கள் ஐயா.த.ம 10வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  20. நான் என் மக்களுக்குத் தேர் காட்ட எங்கள் கிராமம் கோவிந்த ராஜபுரம் போயிருந்தேன். அதை ஒரு பதிவாக வேரைக் காட்ட ஊரைக் காட்ட தேரைக் காட என்று எழுதி இருந்தேன்( சில படங்களோடு) கல்பாத்தி தேர் பெயர் பெற்றது. அங்கே யானையை கொண்டு தேரைத் திருப்பவும் செலுத்தவும் செய்கிறார்கள் சிறு வயதில் கண்டதை என் மனைவி மக்களுடன் ரசித்தது உங்கள் பதிவு கண்டதும் நினைவுக்கு வந்தது. படங்களுடன் பதிவு பேஷ் பேஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்பாத்தி தேர் பற்றி நானும் கேள்விப்பட்டதுண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  21. beautiful photos..

    //வெளிநாட்டிலிருந்து பல பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய உடையில் காத்திருக்க, இந்தியர்களில் பலர் ஆங்கிலேயர்களின் உடையில் இருந்தார்கள்.

    naanum rasiththen.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  22. படங்கள் அருமை! தேரோட்டத்தை கண்டு களித்தோம்!

    nandri.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  23. மிக அருமையான மடல்! படங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பசுபதி ஐயா.

      நீக்கு
  24. தேர்வலத்தை துல்லியமாக படம் பிடித்து விவரித்து விட்டீர்கள்.PROFESSIONAL TOUCH EXCELLANT

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  25. நானே நேரில் கண்டது போல தங்கள் பதிவு அமைந்துள்ளது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  26. நாங்களும் தேர்ப்பார்க்க வந்தது போல் இருந்தது கட்டுரை படித்தபோது...
    அருமை அண்ணா...
    படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  27. ரங்கனின் தேரோட்டம் நேரில் கண்டு களித்த ஆனந்தம்.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  28. திருவரங்கத் தேரை உங்கள் பதிவின் மூலம் பார்த்துவிட்ட‌ திருப்தி. கோபுர தரிசனமும் கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சிதாங்க‌.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  29. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  30. தேரோட்ட தகவல்கள் சிறப்பு! படங்கள் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  31. அருமையான படங்கள்! திருவரங்கத் தேரோட்டத்தை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  32. படங்கள் யாவும் பிரமாதம். நல்ல கோணங்களும். குறிப்பாக தேர், கோபுரம், ஆண்டாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....