பட உதவி: கூகிள்
கடந்த
வெள்ளி அன்று இரவு திருவரங்கம் ரயில் நிலையத்திற்கு நாங்கள் சென்று சேர்ந்த போது
இரவு 10.15 மணி. முதலாம் நடைமேடை பலவித மனிதர்களால் நிரம்பி இருந்தது. மனிதர்களை
விட அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் அதிகமாக இருந்தது. மனிதர்களின் உடைகளிலும் வித்தியாசங்கள் பல - சிலர் இரவு உடையோடு வர,
வேறு சிலர் பட்டுப்புடவை சரசரக்க, காது, கழுத்து, கை, மூக்கு என எல்லா இடங்களிலும்
நகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு தங்க மங்கைகளாக உலா வந்தனர். ஒரு வேளை அவர்கள்
கனவில் ஏதேனும் கல்யாணத்திற்குச் செல்வார்களோ?
திருவரங்கத்தில்
இருக்கும் இதமான குளிருக்கு பயந்து காதுகளில் பத்து ரூபாய்க்கு இரண்டு என விற்கும்
அடைப்பான்களையோ அல்லது குரங்கு குல்லாய்களையோ போட்டுக்கொண்டு மேலுக்கு கம்பளி
உடைகளை அணிந்து கொண்டு வந்த பலரைப் பார்க்கும்போதே, தில்லியின் குளிருக்குப் பழகிய
எனக்கு வேர்த்தது! சிலர் காதுகளில் ஒரு கிலோ பஞ்சினை அடைத்துக்கொண்டு வந்ததைப்
பார்த்தபோது, காது வலியோ எனத் தோன்றியது.
அந்த
இரவு வேளையிலும் இட்லி வடை பொட்டலங்கள் வெகு விரைவாக விற்பனை நடந்து
கொண்டிருந்தது. கூடவே ‘மல்லி, மல்லி – பாக்கெட் பத்து ரூபாய்’ குரல்களையும், அவர்களிடம் ”என்னம்மா நாலே நாலு பூதான் இருக்கும், இதுக்குப் பத்து ரூபாயா?” என்று பேரம்
பேசும் மகளிரையும் காண முடிந்தது! சிலர் அந்த இரவிலேயே தலையில் சூடிக் கொள்ள,
சிலர் தங்களது கைப்பைக்குள் வைத்துக் கொண்டனர். வீடில்லாத சிலர் தங்களது மொத்த
உடமைகளையும் பொதியாகக் கட்டி பக்கத்தில் வைத்து, அதைப் பிடித்தபடியே ஆங்காங்கே
படுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படி
மனிதர்களையும் நிகழ்வுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர்
“சௌந்திரா, சௌந்திரா” என்று பதற்றத்தோடு அழைத்தபடியே ஒரு புறத்திலிருந்து மறு புறத்தினை
நோக்கி கைப்பெட்டியோடு ஓடிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரைப் பார்க்க, அவரும்
அங்கே குழுமியிருந்த மக்களில் அவரது சௌந்திராவைத் தேடிக் கொண்டிருந்தார்.
நடைமேடையின் ஒரு எல்லைக்குச் சென்று மீண்டும் திரும்பினார். அப்போதும் சௌந்திரா
கிடைக்கவில்லை போல. பதற்றத்தோடு
தேடிக்கொண்டிருந்தார்.
சௌந்திராவை தேடித்தேடி அலைந்து ஓய்ந்துவிட்டாரா இல்லை அவர் கிடைத்து
விட்டாரா என்பதை அறியமுடியாதபடி ரயில் நிலையத்திற்கு மங்களூர் விரைவு வண்டி
வந்துவிட அதில் பாதி மக்கள் கூட்டம் ஏறிவிட்டது. ஆவலுடன் எதிர்பார்த்த எனக்கும்
மற்ற மக்களுக்கும் மனதில் கேள்வி – “கிடைத்தாரா சௌந்திரா?”. பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி வாய்விட்டு
கேட்கவே கேட்டுவிட்டார்!
நாங்கள் சென்னைக்குச் செல்ல வேண்டிய மலைக்கோட்டை விரைவு வண்டி
வந்துவிட, நாங்களும் எங்களுக்கு கொடுத்திருந்த இடத்தினை அடைந்து படுத்துத்
தூங்கினோம்! அதிகாலை 04.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் எங்களை வரவேற்க
காத்திருந்தது. கொண்டு வந்திருந்த
உடைமைகளுடன் கீழே இறங்கி நிற்க, அங்கே ஒரு பெரியவர் பெட்டி படுக்கையுடன் நின்று
கொண்டிருந்தார். அப்போது தான் மலைக்கோட்டை
விரைவு வண்டியிலிருந்து இறங்கி இருப்பார் போல!
அவர் மட்டும் இறங்கிவிட, அவர் மனைவி இறங்கவில்லை! உடனே வண்டி
அங்கிருந்து புறப்பட்டுவிடும் என்பதால் அவர் அலற ஆரம்பித்தார் – “ஈஸ்வரி, ஈஸ்வரி!
எங்க போயிட்டா இவ! சீக்கிரம் இறங்கு!” தன் உடைமைகளை அங்கே வைத்துவிட்டு ரயிலுக்குள் செல்லவும் தயங்கி,
ரயில் பெட்டிக்கு அருகே சென்று மீண்டும் அழைக்கிறார் – ”ஈஸ்வரி, ஈஸ்வரி.....” ஈஸ்வரியைத் தான் காணவில்லை! பதற்றத்தோடு ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும்
அலற ஆரம்பித்து விட்டார். இரண்டு நிமிடம்
மட்டுமே அங்கே நிற்கும் என்பதால் அவர் அலறுவதில் அர்த்தம் இருந்தது!
சம்பந்தமில்லாது என் மனதில் “ஈஸ்வரி.... உன்னைக் கல்யாணம் பண்ண ஆசைப்படறேன்...” பாட்டு
ஒலித்தது!
ஒருவழியாக ஈஸ்வரி இறங்கி வந்தார். ’ஏன் கத்தறீங்க! செருப்பு காணமேன்னு
தேடிட்டு இருந்தேன். பார்த்தா, என்னோட ஒரு செருப்பும் உங்களோட ஒரு செருப்பும்
இருக்கு! என்ன அவசரமோ, ஜோடிகளைப் பிரித்து மற்றதை தான் இவர் காலில் மாட்டிக்கொண்டு
விட்டாரே! இன்னும் இரண்டு திட்டுகளை வாங்கிக் கொண்டு அவரவர் செருப்புகளை
மாட்டிக்கொண்டு ஈஸ்வரியுடன் ஈஸ்வரன் நடந்தார்!
இப்போது இருப்பது போல இந்த இரண்டு ஜோடிகளிடமும் அலைபேசி இல்லை.
அலைபேசி இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் அலைபேசி மூலம் அழைத்து பதற்றத்தினைத்
தவிர்த்து இருக்கலாம் எனத் தோன்றியது. அதை நிரூபிக்கும் விதமாக பக்கத்தில் ஒரு
இளம்பெண் அலைபேசியில் அவர் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் – “ஏங்க S5 கோச் கிட்ட நில்லுங்கன்னு சொன்னேன்.... எங்கே இருக்கீங்க? சொன்னா சொன்ன இடத்தில் இருப்பதில்லையா?
என்று அதிகாலை வேளையிலேயே தனது அர்ச்சனையைத் தொடங்கி இருந்தார். நிச்சயம் எதிர் முனையில் என்ன பதில்
வந்திருக்கும் என்பதை யோசிக்க முடிந்தது! :)
என்ன நண்பர்களே, பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில்
சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....
டிஸ்கி: கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியான
பயணத்தில் இருப்பதால் பலருடைய பதிவுகளை படிக்க முடியவில்லை. தில்லி திரும்பியதும்
எல்லோருடைய பதிவுகளையும் படித்துவிடுகிறேன்.
ஈஸ்வரன் போல பலரின் அவஸ்தை ஈஸ்வரிகளுக்கு புரிவதில்லை...! ம்ம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஹைய்யோ!!!! சௌந்திரா கிடைச்சாங்களான்னு தெரியலையே:(
பதிலளிநீக்குமனைவி குதிக்கிறாங்கன்னா அது சும்மாவா? சொன்ன பேச்சை ஒருமுறையாவது (ஜஸ்ட் ஃபார் அ சேஞ்ச்), கேக்கப்டாதா?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குஒரு எழுத்தாளன் என்பவன் தன்னை சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் அப்போதுதான் அவனது எழுத்தில் சுவாரஸ்யம் இருக்கும் என்பார்கள். தங்களது எழுத்தில் அதைக் காண்கிறேன். நீங்கள் அவசியம் சிறுகதைகள் எழுதவேண்டும்.
பதிலளிநீக்குவலைப்பூ ஆரம்பித்த புதிதில் சில சிறுகதைகள் எழுதி வெளியிட்டேன். அதன் பிறகு எழுதவில்லை......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
பதிவு விறுவிறுப்பாக இருந்தது. 'ஈஸ்வரி' கிடைத்ததுபோல் 'சௌந்திரா'வும் கிடைத்திருக்க வேண்டுமென மனம் நினைக்கிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குபாத்து.. காதுகள் வளர்ந்து கொண்டே போகின்றன உங்களுக்கு.. அது சரி.. சௌந்திரா கிடைத்தாரா?
பதிலளிநீக்குஆஹா.... உங்க ஊர்ல தெரியற அளவு என் காது வளந்துடுச்சா! :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!
கைத் தொலை பேசியின் அவசியத்தை இங்கே உணர முடிகிறது .
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....
நீக்கு//பாத்து.. காதுகள் வளர்ந்து கொண்டே போகின்றன உங்களுக்கு..//
பதிலளிநீக்குவளர்ந்தா என்ன! தங்கத்திலே ஒரு பாம்படம் பண்ணிப் போட்டுருவோம். இதுபோல் இன்னும் பல சுவாரசியமான அலம்பல்கள் தந்தால் சரிதான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குசவ்ந்தரியா என்ன ஆனார்?
பதிலளிநீக்குதங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.....
நீக்குசௌந்திரா என்ன ஆனார் என்று தெரியவில்லை என எழுதியிருந்தேனே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது யாஸிர்.
மனைவிகள் வேண்டுமென்றே மறைந்து கணவனின் பதட்டதை ரசிக்கிறார்களோ..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஈஸ்வரி கிடைத்து விட்டார், ஆனால்சௌந்திரா கிடைத்து விட்டாரா தெரியவில்லையே!
பதிலளிநீக்குவேறு ரயிலில் ஏறி அவர் கணவரை தேடுகிறாரா?
இந்தக் காலத்திலும் அலைபேசி இல்லாமல் இருப்பது ஆச்சிரியமே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஇங்கே போயிருக்கிறீர்களா & என்று சாவி முன்னே ஒரு தொடர் எழுதினார். அதுபோல ரயில்வே ஸ்டேஷனின் ஒரு உரைச்சித்திரம் வெகு அழகாக உயிர் பெற்றிருக்கிறது உங்கள் எழுத்தில். தலைப்பைப் படித்ததும் எங்கே ஆதி சிஸ்டரைத் தான் நீங்கள் தொலைத்துவிட்டுத் தேடிய அனுபவமோ என்று நினைத்தவாறே படிக்க ஆரம்பித்தேன். சௌந்திராவும், ஈஸ்வரியும் பட்ட பாட்டை கவனித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.
நீக்குசெளந்திரா என்ன ஆனார்னு தெரியலையே?? கவலையா இருக்கு! :))))
பதிலளிநீக்குஎனக்கும் அதே கவலை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
ஆனால் நாங்களும் பிடிவாதமா அலைபேசி வைச்சுக்காமல் தான் இருந்தோம். அப்புறமா ஒரு அலைபேசி மட்டும் வைச்சிருந்தோம். மூன்று வருடங்கள் முன்னர் அபி அப்பாவை மாயவரத்தில் பார்த்துட்டுத் திரும்பிக் கும்பகோணம் வரணும். கும்பகோணம் பேருந்துகள் எல்லாம் வழிந்து கொண்டிருந்தன. எதிலும் ஏற முடியலை. இரண்டு பேரும் சுத்திச் சுத்தி வந்தோம். ஆட்டோ அல்லது டாக்ஸியில் நாலைந்து பேராகச் சேர்ந்து வந்துடலாம்னு பார்த்தால் அவங்க அப்போப் பார்த்துக் கேட்ட தொகை கட்டுபடி ஆகாது.
பதிலளிநீக்குசற்று நேரத்தில் ஒரு பேருந்து கும்பகோணம் வழியே வேறெங்கோ செல்லும் பேருந்து வரவே அது யாரோட அதிர்ஷ்டமோ சரியா நான் நிக்கிற இடத்துக்கு நேரே பஸ்ஸில் நுழைவு வாயில் இருக்கவே நான் சட்டுனு முதல் ஆளா ஏறிட்டேன். இது அங்கே நின்னுட்டு இருந்த நம்ம ரங்க்ஸ் கவனிக்கலை. பேருந்து வரவே இதிலே போகலாம்னு என்னைத் தேடி ஓடி ஒவ்வொரு இடமாப் பார்க்க, நான் பேருந்துக்குள்ளே இருந்து அவரைக் கூப்பிட, நான் கூப்பிடுவது அவருக்குக் கேட்கலை. அலைபேசி இருந்தாலும் ஒண்ணு தான். அதுவும் என்னிடம் இருந்தது. சரி, பஸ்ஸில் நடத்துநர் ஏறுகையில் அவர் கிட்டேச் சொல்லிக் கூப்பிடச் சொல்லலாம்னு பேருந்தில் இருந்துகொண்டே ரங்க்ஸின் அசைவுகளையே பார்த்துட்டு இருந்தேன். அதனால் தானோ என்னமோ அவர் திடீர்னு இந்தப் பேருந்துப் பக்கம் வந்து நான் இருந்ததுக்கு எதிர்ப்பக்கம் பார்த்துட்டு வர, நான் மீண்டும் இங்கிருந்து கத்த, அப்ப்ப்ப்ப்பாடா, ஒருவழியா என்னைப் பார்த்துட்டார். உடனே பேருந்தில் ஏறிவிட்டார். :)))))
அதுக்கப்புறமாச் சென்னை போனதும் முதல் காரியமா இன்னொரு அலைபேசி வாங்கி அவர் தனியா, நான் தனியா எங்கே போனாலும் வைச்சுக்கறோம். இதில் நன்மையும் இருக்கு; தீமைகளும் இருக்கு. அளவாப் பயன்படுத்தணும்.
இது போன்ற சமயங்களில் அலைபேசி நிச்சயம் பயன்படும். அதை அளவாகப் பயன்படுத்துவதில் தான் பலருக்கு பிரச்சனையே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
அப்பாடா, பின்னூட்டம் கொடுத்தால் எரர் செய்தியே வந்துட்டு இருந்தது. போயிருக்குனு இப்போத் தான் சொல்லுது. :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்கு.ரசித்தேன். சௌந்திரா கிடைத்தாரா இல்லையா என்ற கவலை வேறு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குமொபைலின் அவசியம் இந்த மாதிரி தருணங்களில்தான் புரிகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குபரபரப்பான நிகழ்வுகளை சுவையாக பகிர்ந்து கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
நீக்குஈஸ்வரி கிடைச்சுட்டார், சௌந்திரா கிடைத்தாரா இல்லையா ?
பதிலளிநீக்குதெரியலையே.... :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
“கிடைத்தாரா சௌந்திரா?”.எல்லோரைப் போல என்னுள் எழும் கேல்வியும் இதுதான்! விடை கிடைத்தால் சொல்லுங்கள்! அருமையான பதிவு! நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குஅட நீங்க வேற.
பதிலளிநீக்குஒரு நிமிஷம் ஆதி மேடம் தான் நினைவுக்கு வந்தாங்க ,
சரி சௌந்தரா கிடச்சங்களா? இல்லையா ?
இப்டி திருச்சில ரயில் ஏற்றி, சென்னை ல இறக்கிவிட்டிருகீங்களே
நான் என்வீட்டுகாரருக்கு போன் பண்றேன்.
அடாடா.... நீங்களும் ரயில் ஏறிட்டீங்களா?.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.
ஸௌந்திராவைக் காணோம் என்று சொன்னீர்களே ! கிடைத்தாரா இல்லையா?
பதிலளிநீக்குகாலையில் ஒருவர் ஈச்வரியை தேடிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பார்கள்? மனைவியை இப்படியா தேடுவது? பெண்களின் சார்பாக ஆண்கள் மேல் கண்டனக் குரல் எழுப்பலாமா அல்லது தர்ணா செய்யலாமா?
கண்டனக் குரல் எழுப்பினாலும் சரி தர்ணா செய்தாலும் சரி, போவதற்கு முன் வீட்டுக்காரரிடம் சொல்லிட்டுப் போங்க! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
//என் மனதில் “ஈஸ்வரி.... உன்னைக் கல்யாணம் பண்ண ஆசைப்படறேன்...” பாட்டு ஒலித்தது!//
பதிலளிநீக்குஉம் சிந்தனையில் என்னைக் காண்கிறேன்...!!
காக்டெயில் அனுபவம் வெங்கட்ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்....
நீக்குSaunthiraa Saunthiraa where ever you are please come back and reply. cannot afford to worry:(
பதிலளிநீக்குatleast Easwari got down and saved our peace. Thank you Venkat.. Please take time to enjoy with the family. posts will wait.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குபடிக்கச் சுவையாய் இருந்தது...ஆனால் சம்பந்தப்பட்டவர் தொலைந்த தொலைத்த அந்த நிமிடங்களின் பதைபதைப்பு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குthodargiren...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குSowndhara vin nilai yenna ? KIDAITHTHARA , ILLAYA ?
பதிலளிநீக்குவிடை தெரியாத கேள்வி! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
ஒரு நிமிஷம் தலைப்பப் பார்த்தவுடனே ஆடிப்போவிட்டேன்.
பதிலளிநீக்குஉண்மையை சொல்லுங்க. உங்க வீட்டுல நடந்ததை தானே, வேற யாருக்கோ நடந்ததை மாதிரி எழுதியிருக்கிங்க?
அட.... தலைப்பு உங்களை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது! :)
நீக்குநான் பார்வையாளன் மட்டுமே! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.