பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 30
சென்ற பகுதியை முடிக்கும் போது கோம்தி குளம்
எப்படி உருவானது என்பதற்கும் ஒரு கதை உண்டு என்று சொல்லி இருந்தேன். அந்தக் கதை என்ன என்பதைப் பார்க்குமுன்னர் ஒரு
விஷயம்.... நாங்கள் சென்ற அன்று பௌர்ணமி
எனச் சொல்லி இருந்தேன். அதனால் அங்கே சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும்
வருவார்கள் என்பதால் கோவிலைச் சுற்றி நிறைய தரைக் கடைகள்.... அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள்
காய்கறி, பழங்கள் முதல், துணி, பாத்திரங்கள், கத்தி, முறம் என வீட்டுக்குத்
தேவையான அனைத்துமே கிடைக்கும்....! இப்படி கிராமத்து கடைவீதிகளில் என்னவெல்லாம்
விற்கிறார்கள்! கூட்டம் அதிகமாக இருந்த
காரணத்தினால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை....
சரி கதைக்கு வருவோம்......
கிருஷ்ணரும் பீமனும் சேர்ந்து, அபிமன்யுவின்
மகனும், அர்ஜுனனின் பேரனுமான பரிக்ஷீத்-ன் உபநயனத்திற்குச் சென்று
கொண்டிருந்தார்கள். அப்படிச் செல்லும்
வழியே பீமனுக்கு பயங்கர தாகம். தண்ணீர் வேண்டுமே என நினைக்கும்போது, அவர்கள் இடும்ப
வனத்தில் அமைந்திருக்கும் டங்க் மகரிஷியின் ஆஸ்ரமத்தின் அருகே
இருக்கிறார்கள். அங்கே ஒரு ஆற்றின்
வடிநிலத்தில் கொஞ்சம் தண்ணீர் இருக்க, அதனை அருந்தி தனது தாகத்தினைத் தீர்த்துக்
கொள்கிறான் பீமன்.
படம்: இணையத்திலிருந்து....
சற்றே ஓய்வெடுத்துக் கொண்டு
அங்கிருந்து புறப்பட முடிவு செய்கிறார்கள். ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது
பீமனுக்கு ஒரு யோசனை – இந்த இடத்தில் ஒரு குளமிருந்தால், பறவைகளும், காட்டு
விலங்குகளும், காட்டு வழி பயணிக்கும் மக்களும் தாகம் தீர்த்துக் கொள்ள
முடியுமே.... உடனே தன்னுடைய ஆயுதமான [g]கதை கொண்டு ஓங்கி ஒரு அடி.... சிங்கம் சூர்யா போல அல்லாமல் இவர் ஓங்கி
அடித்தால் ஒன்றரை கோடி டன் வெயிட்! ஆற்று
வடிநிலம் மிகப் பெரிய குளமாக உருவானது!
பிற்காலங்களில் கரைகளில் படிக்கட்டுகளும், தண்ணீர் வெளியேற வழிகளும்
உருவானது என்பது கதை!
விற்பனைக்கு......
கதை கேட்டாச்சா! அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
கடை வீதியில் பல பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள் என்று சொன்னேன்.
கிருஷ்ணரை அலங்கரிக்கும் பொருட்களும் இங்கே உண்டு! வெண்ணைத் தாழி ஒன்று மிக அழகாய்
இருந்தது. அழகிய முறங்கள், வயல்வெளியில் அறுப்புக்குப் பயன்படும் கத்திகள் என
எத்தனை எத்தனை பொருட்கள் அங்கே இருந்தன.
அப்படி கத்திகள் விற்பனை செய்யும் இரண்டு ராஜஸ்தானி பெண்களை அவர்களது
பாரம்பரிய உடையில் பார்க்க முடிந்தது.
அவர்களைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று
தோன்றினாலும் அவர்களைக் கேட்காது புகைப்படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை! விற்பனை
செய்து கொண்டிருந்தது கத்தியாயிற்றே! என்னுடன் வந்த நண்பரின் மனைவியிடம் சொல்லி,
அவர்களைப் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்க, அவர்கள் சந்தோஷமாக எடுத்துக் கொள்ளச்
சொல்ல, அதன் பிறகு அவர்களை புகைப்படம் எடுத்தேன். பக்கத்திலேயே இன்னுமொரு
பெண்மணியும் இருக்க, அவர் என்னிடம் கேட்ட கேள்வி – “ஃபோட்டோ புடிச்சு என்ன பண்ணப்
போற!” என்பது தான்!
முன் ஜாக்கிரதை முத்தண்ணி! பயப்படாதம்மா.... என்று சொல்ல, தன்னையும் புகைப்படம் எடுக்கச்
சொன்னார்! அவரையும் புகைப்படம் எடுத்து, மூவரிடமும் காமிராவில் காண்பிக்க, அவர்கள்
முகத்தில் அத்தனை மகிழ்ச்சி......
இப்படியாக, டாகோர் கிருஷ்ணர் கோவில், அதன்
சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் ரசித்து வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு
வந்தோம். வசந்த் [b]பாய் ஓய்வெடுத்து தயாராக இருந்தார். அஹமதாபாத்
நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. சீரான
வேகத்தில் பயணித்து, மூன்று மணிக்கு நண்பரின் வீட்டினை அடைந்தோம். மாலை தில்லி
திரும்ப வேண்டும்..... உடைமைகளை சரி
பார்த்து முதுகுச் சுமையில் அடைத்துக் கொண்டு மாலை அஹமதாபாத் விமான நிலையத்திற்கு
வந்து சேர்ந்தோம்.
விமான நிலையத்தில் ஏதோ ஒரு பள்ளியில் பயிலும்
குழந்தைகள் தங்களது சுற்றுலாவினை துவக்கி இருந்தார்கள். பயணம் செல்வது என்பது
எத்தனை உற்சாகமானது என்பது அவர்களைப் பார்க்கும்போது தோன்றியது! ஏகப்பட்ட
செல்ஃபிகள், புகைப்படங்கள் என விமானநிலையத்தினை ரகளைபுரமாக மாற்றி
இருந்தார்கள். காத்திருந்தபோது எதிர்
இருக்கையில் இருந்த ஒரு இளைஞர் தனது முகத்தினை அஷ்ட கோணலாக்கி செல்ஃபி புள்ளையாக மாறினார் – அது பற்றி முன்னரே எழுதி
இருக்கிறேன்!
விமானத்திற்குள் வருமாறு அழைப்பு வர சோதனைகளை
முடித்துக் கொண்டு விமானத்திற்குள் சென்று அமர்ந்தோம். பயணத்தில் சந்தித்த விதம்விதமான மனிதர்கள்,
கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள் என அனைத்தையும் மனதில் ஒரு முறை Playback செய்து பார்த்துக் கொண்டே கண்களை மூட, விமானம்
புறப்பட்டு மேலே மேலே சென்று கொண்டிருந்தது! அஹமதாபாத்-திலிருந்து தில்லி வந்து
சேர அத்தனை அதிக நேரமாகாது என்றாலும், விமான நிலையத்திலிருந்து உடைமைகளை எடுத்துக்
கொண்டு Pre-paid Taxi அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர அதை விட அதிக
நேரம் ஆனது! தில்லியின் போக்குவரத்து அப்படி!
இந்தப் பயணத்தில் நான் சந்தித்த பல மனிதர்கள்,
பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என அனைத்தையும் 30 பகுதிகளாக உங்களுடன்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன். முடிந்த வரை அனைத்து விஷயங்களையும் விடாது
குறிப்பிட்டு இருக்கிறேன். பஞ்ச் துவாரகா பயணம் செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு
நிச்சயம் இத்தொடர் உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம். சில நாட்களுக்குப் பிறகு இத் தொடரினை
மின்புத்தகமாகவும் வெளியிடவும் வேண்டும்.....
இத் தொடரினை தொடர்ந்து வாசித்து கருத்துரைத்து,
எனக்கு ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. பயணங்கள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும்
ஒரு வழி. ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம். முடிந்த வரை புதிய இடங்களைப் பார்த்து
பலவித அனுபவங்களைப் பெறுவோம். இப்பயணத்
தொடர் முடிந்தாலும், சில தினங்களுக்குப் பிறகு வேறு ஒரு பயணத் தொடரும் இங்கே
எழுதும் எண்ணம் உண்டு.......
நிச்சயம் அது ஒரு வித்தியாசமான பயணமாக
இருக்கும் என்பதை உங்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன். சற்றே நீண்ட பயணம் என்பதால், பதிவுகளும்
அதிகமாகவே வரும் வாய்ப்புண்டு!
தொடர்ந்து ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கு
மீண்டும் நன்றி.....
என்றென்றும்
அன்புடன்
வெங்கட்
புது
தில்லி.





















