எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 31, 2015

குஜராத்தி உணவும் கிராமிய மணமும்


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 27

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26


சாப்பிட வாங்க:  ஒருவருக்கான உணவு!

அஹமதாபாத் நகரில் இருக்கும் பாலாஜி கோவிலில் தரிசனம் செய்த பிறகு இரவு உணவு எங்காவது வெளியே சாப்பிடலாம் என அஹமதாபாத் நண்பர் சொல்ல, ஏதாவது குஜராத்தி உணவகத்திற்குச் செல்லலாம் என நினைத்தோம். அதற்கு நண்பர், எங்களை அஹமதாபாத் நகரில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்று அற்புதமானதோர் அனுபவத்தினை வழங்குவதாகச் சொல்லி, வாகனத்தினை அங்கே செலுத்தினார்.  அங்கு சென்று எங்களுக்கு உண்மையாகவே அற்புதமான அனுபவம் தான் கிடைத்தது.

வாஸ்னா சாலை, வாஸ்னா, அஹமதாபாத் எனும் விலாசத்தில் அமைந்திருக்கும் விஷாலாஎனும் உணவகத்திற்குத் தான் எங்களை அழைத்துச் சென்றார். பெயருக்கு ஏற்றவாறு விசாலமான இடத்தில் தான் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. பொதுவான உணவகங்கள் போன்று கதவுகளோ, நான்கு சுவர்களுக்கு நடுவேயோ அமைந்திருக்காமல், திறந்த வெளியில் சிறிய சிறிய குடிசைகள் அமைந்திருக்க, அங்கே நன்கு மெழுகப்பட்ட மண் தரையில் பாய் விரித்து, எதிரே நீண்ட மரக்கட்டைகள் இருக்க, அதிலே பெரிய தையல் இலைகள் போட்டு உணவு பரிமாறுகிறார்கள்.இயற்கையான சூழலில், மின்சார விளக்குகளுக்குப் பதிலாக லாந்தர்களின் ஒளியில், மிதமான இயற்கைக் காற்று வீச, அங்கே அமர்ந்து உணவு உண்பது, நாம் ஏதோ கிராமத்தில் இருப்பது போல உணர்வினை நமக்கு தருகிறது. நாம் அமர்ந்து சாப்பிட இருக்கைகள் இல்லாத சமயத்தில், நம்மை மகிழ்விக்க கிராமிய இசைக் கலைஞர்கள் இசைக்கிறார்கள். சில இடங்களில் பொம்மலாட்டம் போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அவற்றை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம். இடையே இடம் காலியான உடன், நம்மை விஷாலா சிப்பந்திகள் அழைத்து நமக்கான இடத்திற்குச் சென்று அமர்த்துகிறார்கள்.

பொதுவாக உணவகங்கள் எனில் கை கழுவும் இடம் என இருக்கும். இங்கேயும் உண்டு. ஆனால் சற்றே வித்தியாசமாக, ஒரு மண் பானை வைத்திருக்க, ஒருவர் பித்தளை குடுவைகளிலிருந்து நீரை சாய்க்க, நாம் பொறுமையாக கையைச் சுத்தம் செய்து கொள்ளலாம். பிறகு நாம் அமர்ந்து கொள்ள, ஒவ்வொரு சிப்பந்தியாக வரிசையாக வந்து அவர்கள் பரிமாறப் போகும் உணவின் பெயரைச் சொல்லி வைத்துக் கொண்டே போகிறார்கள். வரிசை வரிசையாக பலவித உணவுகள் வந்தபடியே இருக்கின்றன.

ஒவ்வொன்றின் பெயரைக் கேட்கும்போதே அது என்ன, எப்படி இருக்கும் என்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் வரும்! சில உணவுகளின் பெயர்களை உங்களுக்குச் சொல்லட்டா – ஹஜ்மாஹஜம், பாஜ்ரி ந ரோட்லா, மகாய் ந ரோட்லா, பாக்டி[ரி], மேத்தி ந தேப்லா, கிச்சடி, கடி, மக்கன், படாடா நு ஷாக், லீலு ஷாக், கதோல், ஃபார்சன், லீலீ சட்னி, லசன் சட்னி, தலியா நி சட்னி, பாப்பட், கூட், காக்டி, பீட், சுக்டி.....  இதைத் தவிர சலாட், ஊறுகாய் போன்றவையும் உண்டு.  கூடவே  நீர் மோர் வந்து கொண்டே இருக்கிறது. எல்லா உணவுமே அளவுச் சாப்பாடு போல அல்ல – எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  ஒவ்வொரு நாளும் கொடுக்கும் காய்கறிகளும் மாறிக் கொண்டே இருக்கும்.  இத்தனை வகை உணவினையும் ருசித்த பிறகு முடிவில் ஐஸ்க்ரீம் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பும் உண்டு!நாங்கள் தரையில் அமர்ந்து எதிரே இருக்கும் இலையில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவினையும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்து அடுத்த உணவின் ருசியை உணரக் காத்திருக்க, ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக எல்லா உணவின் ருசியும் பார்த்தோம்.  முதல் முறை வைத்த அனைத்தையும் உண்டாலே வயிறு நிரம்பிவிடும் எனத் தோன்றியது. ஒவ்வொன்றாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு, நடுநடுவே நீர் மோரையும் தண்ணீருக்கு பதிலாக குடித்துக் கொண்டிருந்தோம். நீர் மோர் டம்ளரை கீழே வைத்தவுடன் ஒரு சிப்பந்தி வந்து அதை நிரப்பி விடுகிறார்! சுக்டி எனும் இனிப்பை சுடச் சுட சாப்பிட்டு நாக்கு பொசுங்க வைத்துக் கொண்ட கதையை முன்னரே “சாப்பிட வாங்கபகுதியில் எழுதி இருக்கிறேன்.

ஒவ்வொரு உணவு வகையாக ருசித்துச் சாப்பிட்டு மிகவும் பிடித்த சிலவற்றை மட்டும் இரண்டாம் முறை கேட்டு உண்டு எழுந்திருக்க நினைத்தபோது தரையில் கையை ஊன்றி தான் எழுந்திருக்க முடிந்தது – அவ்வளவு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறோம்! கைகளில் வெண்ணையும், நெய்யும் இருக்க, சுத்தம் செய்து கொள்ள வெதுவெதுப்பான நீரை ஒரு சிப்பந்தி ஊற்ற, கைகளைச் சுத்தம் செய்து கொண்டோம்.  அதன் பிறகு ஐஸ்கீர்ம் அல்லது சூடான குலாப்ஜாமூன் – இரண்டில் எது வேண்டும் எனக் கேட்க, குலாப்ஜாமூனுக்கே எங்கள் ஓட்டு!  அதையும் சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் நடந்தோம். சில பொருட்கள் விற்பனைக்கும் அங்கே இருந்தன. அக்கடைகளை பார்வையிட்டபடியே கொஞ்சம் நடந்தோம்.  கயிற்றுக் கட்டில்கள் ஆங்காங்கே இருக்க, அவற்றில் கொஞ்சம் உட்கார்ந்து கதை பேசினோம்.


இங்கே இன்னுமொரு விஷயமும் உண்டு – அது ஒரு அருங்காட்சியகம் – பலவிதமான பாத்திரங்கள், குடுவைகள் போன்றவற்றைச் சேகரித்து இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மிக அருமையாக வைத்திருக்கும் அவற்றைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.  கட்டணம் இல்லாமலே உங்களுக்குக் காண்பிக்க, இணையத்திலிருந்து ஒரு காணொளியை உங்கள் வசதிக்காக இணைத்திருக்கிறேன்! எஞ்சாய் மாடி!என்ன நண்பர்களே, காணொளியைக் கண்டு ரசித்தீர்களா?  அதெல்லாம் சரி, உணவுக்கான கட்டணம் எவ்வளவு என்பதைச் சொல்லவே இல்லையே என நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்! இன்றைய நிலவரப்படி கட்டண விவரம் கீழே!

Adult - 683/- (All Tax included) per person
Child – 395/- (3-11years) (All Tax included) per child

கொஞ்சம் அதிகம் தான் என நினைத்தாலும், நல்ல ஒரு அனுபவம் கிடைத்தது! இரவு 07.30 மணியிலிருந்து 11.00 மணி வரை இரவு உணவு கிடைக்கும்.  மதிய உணவு காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கிடைக்கும். மதிய உணவு சற்றே குறைவு – பெரியவர்களுக்கு 521/- குழந்தைகளுக்கு 305/-.

அஹமதாபாத் நகருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் இங்கே சென்று வாருங்கள். சற்றே அதிக விலை என்றாலும் நிச்சயம் ரசிக்க முடியும்!

வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

டிஸ்கி:  கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு எனது பக்கத்தில் ஒரு பதிவு! இடைவிடாத பணிச் சுமை காரணமாக பதிவுகள் எழுதுவதும், நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதும் தடைபட்டிருக்கிறது! இனிமேல் தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடியும் என நினைக்கிறேன். பார்க்கலாம்! காலம் என்ன பதில் சொல்கிறது என!

46 comments:

 1. ஒரு ஆளுக்கான உணவை முழுவதும் சாப்பிட்டு முடித்தால் இரண்டு ஆளாகி விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு ஆளாகி விடலாம்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. என்னால் எல்லாம் சாப்பிட முடியாது. கொடுக்கிற காசு வீணாகத் தான் போகும். :) நானும் ரொம்ப நாட்கள் கழிச்சு உங்கள் பதிவுக்கு வந்திருக்கேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 3. வருசக் கடைசியின் நிறைவுப் பதிவு ,நிறைவாக சாப்பிட்ட திருப்தியைத் தந்தது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. ஆஹா! அருமையான சாப்பாடு வெங்கட்ஜி! போக வாய்ப்புக் கிடைத்தால் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான். அவ்வளவாக வட இந்திய உணவுகள் சுவைத்தது இல்லை.

  கீதா: நாக்கில் நீர்! இப்படித்தான் புனேவிலும் ஒரு பஞ்சாபி தாபாவில் கட்டில் சாப்பாடு என்று இதே முறையில்தான் ஆனால் அவர்கள் ஊர் சாப்பாடு சாப்பிட்டதுண்டு. இது நடந்து ஒரு 8, 9 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது ஒருவருக்கு 350 ரூபாய்.

  இதில் நீங்கள் சொல்லியிருக்கும் பலதும் தெரிந்த பெயர்கள்...கதோல், பீட் இந்த இரண்டும்தான் பிடிபடவில்லை....மற்றவை எல்லாம் ஷாக் வகைகள் உட்பட (ஷாக் என்றதும் முதன் முதலில் கேட்டப்போ ஷாக் ஆகி ஹஹஹ்) ஒன்று நெட்டில் ரிசிப்பிகள் ஒவ்வொரு மாநிலத்தின் வகைகள்...அப்புறம் மஹாராஷ்டிரா குஜராத் பார்டரில் உள்ள (குஜராத்தான்...) சாப்புத்தாரா ஹில் ஸ்டேஷன் சென்றிருந்த போது இப்படியான குஜராத் சாப்பாடு...ஃபர்சான் இல்லாமல் சாப்பாடு இல்லை அங்கு..

  நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் விதமே ரொமப்வே ஈர்க்கின்றது ஜி. சரி அந்த கதோல், பீட் மட்டும் என்ன என்று சொல்ல முடியுமா ஜி

  சுவையான, சுவைத்த பதிவு!!!

  ReplyDelete
  Replies
  1. கதோல் - Pulses :) பீட் - பீட்ரூட்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. இம்புட்டா?! ஐயோ நான் ஏற்கனவே ஃபேமிலி பேக்ல இருக்கேன். இதை சாப்பிட்டா அவ்வளவுதான்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 6. கட்டணம் சற்றே அதிகம்தான். ஆனால் நல்ல வித்தியாசமான சுவை கிடைத்திருக்கும். எல்லாவற்றையும் சாப்பிட முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   எல்லாவற்றையும் சாப்பிட்டேன் - உணவினை வீணாக்குவது பிடிக்காது என்பதால்.....

   Delete
 7. நல்லா இருக்கு உங்கள் அனுபவம். நிறைய உணவுப் பெயர்கள் எனக்கு அ'ந்'நியமாகத் தெரிகின்றது. எல்லாவற்றையும் நீங்கள் விளக்க நினைத்தால் பதிவு 'சாண்டில்யன் பத்தி போல் நீண்டுவிடும். 'நீங்கள் குறிப்பிட்டதைப்போல், பான் சவுத் என்று கோரமங்களா, பெங்களூரில் ஒரு உணவகம் இருக்கிறது. 700 ரூபாய் என்று ஞாபகம். அதுவும் ஏகப்பட்ட உணவு நல்ல உயர் தர உணவுச்சூழலில். அந்தக்காலத்தில் எம்.டி.ஆர், பெங்களூரிலும் சாப்பிடச் சாப்பிட வகைகள் வந்துகொண்டே இருக்கும் (175-200 ரூபாய்க்கு). இப்போ அப்படியில்லை. கட்டுப்படியாகவில்லை என்று நினைக்கிறேன். உணவுப் பதிவுகள் உண்மையாகவே மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன.

  ReplyDelete
  Replies
  1. சாண்டில்யன் பத்தி போல! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. சாப்பிட முடியுமா?

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 9. அருமை. இது நம்ம விஸிட் விஷாலாவில்:-)

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/02/29.html

  இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினையும் படிக்கிறேன்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 10. நல்ல பகிர்வு. உணவுக் குடிலும், மேசைகளும், சூழலும் அருமை.

  காணொளியும் காட்சிப் படுத்தப்பட்டிருந்த பொருட்கள் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 11. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்......

   Delete
 12. ருசித்தேன் ஜி பதிவோடு அருமை காணொளி ஸூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. வணக்கம்
  ஐயா

  அறியாத தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி த.ம 6
  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 14. முதல் புகைப்படத்தை பார்த்தவுடன்,ஆஹா இத்தனை உணவு வகைகளா என்று எண்ணத் தோன்றியது.
  இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. படத்தைப் பார்க்கும்போதே வயிறு நிறைந்துவிட்டாற்போல ஒரு உணர்வு.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் ஆதி, ரோஷ்ணிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 16. அப்பா! நமக்கு தாங்காது!ருசி பார்கலாம்! அவ்வளவு தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. பத்தூ சாரு சே! ( அனைத்தும் அருமையென்று குஜராத்தியில் சொன்னேன்!)

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேட்டையண்ணா.....

   Delete
 19. //அது ஒரு அருங்காட்சியகம் – பலவிதமான பாத்திரங்கள், குடுவைகள் போன்றவற்றைச் சேகரித்து இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மிக அருமையாக வைத்திருக்கும் அவற்றைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு. //

  கட்டணம் ஏதும் இல்லாமலே எங்களுக்குக் காண்பித்துள்ள உங்களுக்கு நன்றிகள், ஜி :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 20. இம்மாம் உணவா..அம்மாடி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 21. பயணக் கட்டுரையை ஆரம்பத்திலிருந்து தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. விலை அதிகமென்றாலும் நல்லதொரு விருந்தாகத் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. விலை சற்றே அதிகம் என்றாலும் நல்ல விருந்து தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....